Tuesday, April 10, 2012

மின்வெட்டு எல்லாம் ரொம்ப சகஜமப்பா!





நம்ம நாட்டில் தான் மின் வெட்டு ,புழுக்கம், எரிச்சல் எல்லாம் வெளிநாட்டில் எல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் தடையே இல்லாமல் பாயும் என்று பொதுவாக நினைத்து நாம் ஏக்கப்பெரும்முச்சு விடுவதுண்டு, ஆனால் அங்கும் உண்டு , நம்மை ஆண்டுவிட்டு போன வெள்ளைக்கார துரைமார்களின் தேசமான இங்கிலாந்தில் கடுமையான மின் வெட்டு அதுவும் நான்காண்டுகளுக்கு தொடர்ந்து இருந்தது என்றால் நம்ப முடியாதில்லையா? ஆனால் அது உண்மையே ஆனால் இப்போ இல்லை அது 1970  களில் , ஹி..ஹி அதை எதுக்கு இப்போ சொல்றேன்னு  பார்க்கறிங்களா, எல்லாம் மின்வெட்டில் வெந்து நொந்த மக்கள் மனசை தேற்ற தான் :-))

மூன்று நாள் வாரம்:
(three day week)

கி.பி 1970 இல் இங்கிலாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சங்கம் ஊதிய உயர்வு , பணிப்பாதுகாப்பு இன்ன பிற கோரிக்கைகளை வைத்து போராட்டத்தினை அறிவித்தது, வேலை நிறுத்தம் செய்யாமல் விதிப்படி வேலை என்று அறிவித்து போராடினார்கள்.

அது என்ன விதிப்படி வேலை போராட்டம்,  
(work by rule)

# எட்டு மணி நேர வேலை என்றால் எட்டு மணி நேரம் மட்டுமே, கூடுதல் பணம் கொடுத்தாலும் கூடுதல் நேரம் வேலை செய்ய மாட்டார்கள்.

# ஒருவருக்கு என்ன வேலையோ அவ்வேலையை மட்டும் செய்வார்கள்.அதாவது ,வாகன ஒட்டுநர் வாகனம் மட்டுமே ஓட்டுவார் டயர் பஞ்சர் ஆகிவிட்டால் மாற்ற மாட்டார்.அது அவர் வேலை இல்லை. இதான் விதிப்படி வேலை செய்வது.

#எட்டு  மணி நேரம் வேலை செய்வார் ஆனால் எவ்வளவு செய்வார் என்றெல்லாம் கேட்க முடியாது. உ.ம்: ஒரு அடிப்பள்ளத்தையே அளந்து அளந்து எட்டு மணி நேரமும் வெட்டிக்கொண்டு இருக்கலாம் :-))

நம்ம அரசு அலுவலகத்தில இப்பவும் இதான் செய்கிறார்கள் :-)) காலையில் இருந்து மாலைவரை ஒரே கோப்பை புரட்டிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பிவிடுவார்கள்!

சுரங்க தொழிலாளர்கள் விதிப்படி வேலை செய்ததால் நிலக்கரி உற்பத்திக்குறைந்து  ,மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கிடைக்கும் நிலக்கரி கொண்டு மூன்று நாட்களுக்கு தான் மின் உற்பத்தி முழுசாக செய்ய முடியும் என்பதால். வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மின் விடுமுறை அறிவித்து விட்டது ஆங்கில அரசு. மருத்துவமனை, சூப்பர் மார்க்கெட், பத்திரிக்கை அலுவலகங்கள் போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு.இதனை மூன்று நாள் வாரம் என்று சொன்னார்கள்.

மின்சாரம் கிடைக்கும் மூன்று நாட்களிலும் பல கட்டுப்பாடுகள், தொழிற்சாலைகள் முழுதும் இயங்க கூடாது, தொலைக்காட்சி ஒளிபரப்பு  இரவு 10.30 மணிக்கு நிறுத்தப்படும் என்பது போல பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலை 1970 முதல் 1975  வரை நீடித்தது, மின்வெட்டைக்காரணம் காட்டி , மெழுகு வர்த்தியை போஸ்டர் ஒட்டி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் நடந்தது. ஆட்சியும் மாறியது. பின்னரே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நின்று முழு அளவில் மின்சாரம் கிடைத்தது.

ஆனானப்பட்ட சூரிய அஸ்தமனமில்லா ஆங்கில தேசத்திலும் மின்வெட்டு இருந்திருக்கு, மக்கள் போராடி ஆட்சியை மாற்றி இருக்காங்க, ம்ம் இங்கேயும் தான் ஆட்சியை மாற்றிப்பார்த்தோம் மின்வெட்டு குறையாம கூடிப்போச்சு :-))

கூடுதலாக ஒரு தகவல் , இப்போ இங்கிலாந்தில் நிலக்கரி உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது, பல சுரங்கங்களிலும் கரி இல்லாமல் மூடப்பட்டுவிட்டது.இப்போதைய சுரங்களில் இருக்கும் நிலக்கரி கையிருப்பும் 2020 வரைக்கும் தான் வரும், அதன் பிறகு அங்கு ஒரு கிலோ நிலக்கரிக்கூட இருக்காது இறக்குமதி செய்தால் தான் உண்டு. அப்படி செய்தால் விலை அதிகம் ஆகிவிடும் என மரபு சார ஆற்றலைப்பயன்ப்படுத்த முடிவு செய்து அதற்காக பல திட்டங்கள் தீட்டிவருகிறார்கள்.

மிக அதிக அளவில் காற்றாலையிலும் , கடலலை மின்சாரத்திலும் முதலீடு செய்ய திட்டமிட்டு செயல்படுத்தியும் வருகிறார்கள்.

உலக அளவில் இன்னும் 144 ஆண்டுகளுக்கு தான் நிலக்கரி படிமம் பயன்ப்படுத்த கிடைக்கும் என கணக்கிட்டுள்ளார்கள்.சிலர் 114 ஆண்டுகள் என்கிறார்கள், ஆனால் ஆண்டுக்கு ஆண்டு பயன்ப்படுத்தும் வேகம் அதிகரிப்பதை பார்த்தால் அதற்கு முன்னரே  நிலக்கரி படிமங்கள் தீர்ந்துவிடலாம் என்றும் கணிக்கிறார்கள்.

சரி இந்தியாவின் நிலை என்ன , நம் நாட்டில் இன்னும் 140 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி படிமம் இருப்பதாக இந்திய நிலக்கரி கழக ஆய்வு சொல்கிறது. ஆனால் அது மிகைப்படுத்தப்பட்ட மற்றும் துல்லியம் இல்லாத ஒரு ஆய்வு , இன்னும் 40 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என பிசினஸ் ஸ்டேண்டர் பத்திரிக்கை ஒரு கணக்கை காட்டுகிறது.

நம் நாட்டில் மரபு சாரா எரிசக்தி ஆய்வுகளும், பயன்பாடும் ஆமை வேகத்தில் போகிறது. வருங்காலம் ஒளி வீசுமா ,இருண்டு போகுமா என்பது ஆட்சியாளார்களின் கொள்கை முடிவெடுப்பதிலும், விரைந்து செயல்ப்படுத்துவதிலும் தான் இருக்கிறது. நாளை  என்ன நடக்கும் யார் அறிவார்?

இங்கிலாந்தில் மின் தட்டுப்பாடு காலத்தில் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டது போல இப்போது  சில சிக்கன நடவடிக்கைகள் எடுக்கலாம் என நினைக்கிறேன்.

# திரையரங்குகளில் தினசரி இரண்டுக்காட்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கலாம்.தமிழ் நாட்டில் சுமார் 1500 அரங்குகள் இருக்கலாம் எனவே நிறைய மின்சாரம் மிச்சம் ஆகும் , மக்களுக்கும் பணம் மிச்சம் ஆகும்.

# தொலைக்காட்சி ஒளிப்பரப்பை இரவு 10 மணியோடு நிறுத்த செய்யலாம்.

# ஐ.பி.எல் போன்ற பகலிரவு விளையாட்டுப்போட்டிகளுக்கு  தடை விதிக்கலாம்.

#வணிக வளாங்களில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு கொண்டுவரலாம்.துணிக்கடை ,நகைக்கடைகளில்  பகலிலும்  அதிக விளக்குகள் எரிவதை காணலாம்.அப்போது தான் அவர்கள் பொருள் பள பளக்குமாம்.

#இரவு 9 மணிக்கு மேல் கடைகள் ,வர்த்தக நிறுவனங்களை மூட செய்யலாம்.

# தமிழ் நாடு முழுக்க தெரு விளக்குகளாக பயன்ப்படுத்தப்படும் அதிகம் மின்சாரம் குடிக்கும் சோடியம் வேப்பர் விளக்குகளுக்கு தடை விதிக்கலாம். வழக்கமான குழல் விளக்குகளை தெருவிளக்குகளாக பயன்ப்படுத்த வேண்டும்.மக்களை மட்டும் குண்டு பல்ப் பயன்ப்படுத்த வேண்டாம்னு சொல்லிட்டு அரசாங்கம் செய்யுற வேலைய பாருங்க :-))

#அரசியல் கட்சி கூட்டம், மாநாடு எல்லாம் பகலில் மட்டும் நடத்த வேண்டும், சீரியல் லைட் , கிலோ மீட்டர் கணக்கில் விளக்கு புடிப்பதை எல்லாம் தடை செய்யலாம்.

இன்னும் நிறைய சிக்கன நடவடிக்கை  எடுக்கலாம், உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.

அடுத்தப்பதிவில் விரிவாக நிலக்கரி ,அனல் மின்சார உற்பத்தி , மற்றும் மரபு சாரா மின் உற்பத்தி சாத்தியங்களை முடிந்தவரை விளக்கலாம் என இருக்கிறேன்.

------
பின்குறிப்பு:

தகவல்கள், படம் ,கூகிள்,விக்கி,நன்றி!

2 comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே

அருமையான பதிவு!

நலல‌ விடயம் எல்லாம் சொல்ரீங்க!

திரையரங்குகள் பல் மூடப்பட்டன என்றாலும் ஒரேயடியாக் மூட திரைப்பட பைரேசியாளர்கள் இணையத்தில் அரும்பாடு படுகிறார்கள்.அனைத்து திரைப்படங்களும் அன்றே சுடசுட இணையத்தில் வருகின்றன.சில படங்கள் இலவசம் என்றாலும் ப்ர்ர்க்க முடியவில்லை!!!!!!!

ஆகவே இது மட்டும் சீக்கிரம் நிச்சய்ம் நடக்கும்.

மற்ரபடி 10 மணியோடு தொ.கா நிகழ்ச்சிகளை ,கட்சி மாநாடு தடை செய்ய அய்யா ,அம்மா இரு கட்சியினரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்

ஐ பி எல் பார்க்க சாயந்திரம் மேல்தான் கூட்டம் வரும் ,பண்ம் விடயம் என்பதால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

வணிக வளாகங்கள் போன்றவற்றை சீக்கிரம் மூடுதல் நல்ல ஆலோசனை!
சொன்னா கேட்பார்களா!!!!!

டிஸ்கி

இப்படி அடிக்கடி மின்வெட்டு ஆவதால் மக்கள் தொகை அதிகரிப்பதாக் நம் ஆய்வுகள் சொல்கின்றன.

ஆகவே நன்றி!!!!!!!!!!!!!!!

Manimaran said...

இலவச மின்சாரத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.மின்சாரத்தை ஒரு குறிப்பிட்ட யூனிட்டுக்கு மேல் பயன் படுத்தினால் அதிக தொகை வசூலிக்கலாம்.ஏனா ஏழை மக்களுக்கு வெளிச்சத்துக்கே மின்சாரம் இல்லை.ஆனால் பணக்காரங்க எல்லாம் ஏசி,மைக்ரோஓவன் னு மின்சாரத்தை விரயம் பண்றாங்க.
என்னைக்கேட்டா..இன்வர்டரே ஒரு மின்சார திருட்டுன்னு தான் சொல்லணும்.வசதி படிச்சவங்க டேங்குல தண்ணிய நிரப்பி வச்சுகிற மாதிரி இன்வர்டருல மின்சாரத்த தேக்கி வச்சுகிறாங்க.அப்பா ஏழை பாழைங்க என்ன பண்ணுவாங்க?