(மரத்தடிப்பள்ளி)
தற்போது பொறியியல் படிப்பிற்கான இடங்களை நிரப்புவதற்கான ஒற்றை சாளர முறை கலந்தாய்வு அண்ணாப்பல்கலை,சென்னையில் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்.இதில் அரசுப்பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், அண்ணாப்பல்கலையுடன் இணைப்பு பெற்ற சுமார் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 50% சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைப்பெறும்.
இதனையொட்டி தனியார்ப்பொறியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ஒதுக்கப்ப்படும் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு பொறியியல்ப்படிப்புகளுக்கான புதிய கல்விக்கட்டணத்தினை ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் உயர்த்தி அண்ணாப்பல்கலை அறிவித்துள்ளது,
கட்டண உயர்வு விவரம்
கவுன்சிலிங் இடங்கள்:
பழைய கட்டணம்: ரூ.32,500
புதிய கட்டணம்: ரூ.40,000
அதிகரித்த கட்டணம்: ரூ.7,500
நிர்வாக ஒதுக்கீடு இடங்கள்:
பழைய கட்டணம்: ரூ.62,500
புதிய கட்டணம்: ரூ.70,000
உயர்வு: ரூ.7,500
இவற்றில், தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவருக்கு, ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாயாக இருந்த கட்டணம், 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் சேரும் மாணவருக்கு, 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டண அறிவிப்பில் கவனிக்க வேண்டியது என்னவெனில் ,அண்ணாப்பல்கலை அறிவித்துள்ள இக்கட்டணம் ஓர் ஆண்டு முழுவதற்குமான கட்டணம், ஆனால் கல்லூரிகளோ இக்கட்டணத்தினை ஒரு செமஸ்டருக்கு என வசூலித்து வருகின்றதாக தெரிய வருகிறது. இது இப்போது மட்டுமல்ல ,முன்னர் இருந்தே ஆண்டுக்கட்டணத்தினை செமஸ்டர் கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்கள்.ஆனால் அப்போது சில கல்லூரிகளே அப்படி செய்து வந்துள்ளன. , தற்சமயம் அனைத்துக்கல்லூரிகளும் இந்நடவடிக்கையில் ஈடுபடுகின்றனவாம்.
தேசியத்தரக்கட்டுப்பாட்டு சான்று பெற்றக்கல்லூரிகளில் 45,000,மற்றவை 40,000 என ஓர் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினை ஒரு செமஸ்டருக்கு வசுலிப்பதன் மூலம் ஆண்டுக்கு இரு மடங்கு கட்டணமாக முறையே 90,000, மற்றும் 80,000 ஆயிரம் என மாணவர்களிடம் வசூலித்து கொள்ளையடிக்கின்றன தனியார் பொறியியல் கல்லூரிகள். இது மட்டும் அல்லாமல் விடுதி, பேருந்து , புத்தகம்,நோட், லேப் என பல கட்டணங்கள் உண்டு.
பல்கலை கழக வட்டாரத்தில் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்ததில் இது ஆண்டுக்கட்டணம் என்றே சொல்கிறார்கள், ஆனால் மாணவர்கள் வட்டத்தில் செமஸ்டருக்கு என்று சொல்கிறார்கள்.அரசு அறிவித்த கட்டணம் மட்டும் வசூலிப்பதாக சொல்லிக்கொள்ளும் கல்லூரிகளும் இப்படியாக இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது , மாணவர்களின் பெற்றோருக்கும் தெரியவில்லையா, இல்லை அரசுக்கும் தெரியவில்லையா , இது பற்றி வெளியில் அதிகம் தெரியாமலே பெரும் கல்வி கட்டணக்கொள்ளை நடப்பதாக தெரிகிறது.
இது குறித்து முறையான அரசு அறிவிப்பின் நகல் கிடைக்குமா என தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைத்தால் சரியான விளக்கம் கிடைக்கும்.
இது நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்வது , எந்தளவு சரியாக இருக்கும் என தெரியாததால் கொஞ்ச நாளாக தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் ஆண்டுக்கட்டணம் என உறுதியாக சொல்லிவிட்டார்கள், கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டண நிலையை உறுதி சொல்ல முடியாத நிலை காரணம் ,பல கல்லூரிகளில் பலப்பெயரில் வசூலிக்கிறார்கள், பலரையும் கேட்டுவிட்டேன் அனைவரும் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் தான் சொல்கிறார்கள்.சென்னையில் ஒரு பெயர்ப்பெற்ற கல்லூரியில் ஆண்டுக்கு 1,70,000 வாங்குகிறார்களாம். இதெல்லாம் எந்தக்கணக்கில் என்றே புரியவில்லை :-))
வங்கியில் கல்விக்கடன்:
பெரும்பாலும் வங்கியில் கல்விக்கடன் கொடுக்கவில்லை மாணவர்களை அலையவைக்கிறார்கள் ,மாணவர்கள் பாவம் என்பது போலவே செய்திகள் அதிகம் வருகின்றது. ஆனால் வங்கிக்கல்விக்கடனின் மறுபக்கத்தினை பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது.
இது வரையில் கல்விக்கடன் பெற்றவர்களில் 50% சதவீதம் பேர் கடனை திருப்பி செலுத்தவே இல்லையாம். மேலும் கல்விக்கடன் கொடுக்கும் வங்கிகள் எல்லாம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே , தனியார் வங்கிகள் கல்விக்கடன் கொடுப்பதில்லை. கடன் வசூலாகவில்லை எனில் அதனை வாராக்கடன் என அறிவித்து , செயல்ப்படாத சொத்து (Non performing assets)என தேசிய வங்கிகள் அறிவித்து விடும்.புள்ளி விவரத்தில் பார்த்தால் அவை வங்கியின் சொத்து மதிப்பாக தெரியும் ஆனால் வங்கியின் உண்மையான சொத்து மதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் ஆண்டு தணிக்கை அறிக்கையில் வங்கியின் நிகர லாபம் குறைவாகவே இருக்கும்.
வங்கி நட்டம் அடையும் எனில் அதனை சரிக்கட்ட அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும், அது மக்கள் பணம் தானே, எனவே வங்கியில் கடன் வாங்கிப்படித்துவிட்டு கட்டாமல் போகும் மாணவர்கள் எல்லாம் மக்கள் பணத்தில் படித்தவர்களே. அவர்கள் மக்கள் பணத்தினை எடுத்து தனியார் கல்வி வியாபாரிகளுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறார்கள்.
(சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளி)
வங்கியில் கல்விக்கடன் கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் எல்லாம் உண்மையான ஏழை மாணவர்களே, ஓரளவு நடுத்தர வர்க்க மாணவர்கள் யாரையாவது சிபாரிசு பிடித்து ,வங்கி நிர்வாகியை சரிக்கட்டி கடன் வாங்கிவிடுகிறார்கள்,அவர்களே கடைசியில் கடனைக்கட்டாமல் போவது.
மேலும் பொருளாதர் ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் கீழ் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டிக்கு அரசு மாநியம் அளிக்கிறது.ஆனால் இம்மாநியமும் நடுத்தரவர்க்க மாணவர்களுக்கே போய் சேர்கிறது.ஆனால் அரசின் பார்வையில் எல்லாம் ஏழை மாணவர்களுக்கு போய் சேர்வதாக கணக்கில் வந்து விடுகிறது. நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏழை மாணவர்களின் மாநியத்தினை அனுபவிக்க வங்கி கடன் கொடுக்க வேண்டுமா?
வங்கிகள் கல்விக்கடன் கொடுப்பதிலும் பாரபட்சமாக நடந்துக்கொள்வதால் உண்மையான ஏழை மாணவனின் கல்விக்கனவு நிறைவேறாமல் இன்றும் கஷ்டப்படுகிறான், ஆனால் ஊடகங்களோ வங்கிகளை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு , மாநியத்தினை முறைகேடாக அனுபவிக்கும் மாணவர்களை கண்டுக்கொள்வதில்லை.
கல்விக்கட்டணம் எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை , அதனை வங்கிக்கடனாக கொடுக்க வேண்டும், திருப்பிக்கட்டுவதும் கட்டாததும் எங்கள் இஷ்டம் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் போலும். வங்கிக்கடன் கொடுக்கவில்லை என்று குறை சொல்லும் முன்னர் , கடன் வாங்கிப்படிக்க வைக்கும் அளவுக்கு கல்விக்கட்டணம் அதிகமாக இருப்பதை ஏன் என கேள்விக்கேட்க ஒருவரும் முன்வருவதில்லை.
வங்கியின் பணமோ, மக்களின் பணமோ ,எப்படியாவது வசூலித்து கல்வி வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதையே இன்றைய கல்வி வியாபாரிகள் கொள்கையாக வைத்துள்ளார்கள்.
நம் மக்களும் சரியான வேலைக்கிடைக்காவிட்டால் இக்கடனை எப்படி அடைப்பது என்று யோசிப்பதில்லை, வேலை கிடைக்கவில்லை என்றால் கடனை கட்ட தேவையில்லை, யார் வந்து கேட்கப்போகிறார்கள் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டதாக தெரிகிறது.
இன்றைய நிலையில் ஒரு பொறியல் கல்லூரி மாணவனுக்கு வேலை உத்தரவாதமோ இல்லையோ நான்கு லட்சத்துக்கு குறையாமல் கடன்காரன் ஆகிடுவது நிச்சயம்.இப்படியான கல்வி சூழல் நிலவும் ஒரு நாடு வளமான,வலிமையான நாடாக எப்படி மாறும்.
வசதியில்லாத எத்தனையோ மாணவர்கள் வங்கிக்கடன் வாங்கும் சூத்திரம் தெரியாமல் கலைக்கல்லூரியில் தான் படித்துக்கொண்டிருக்கிறார்கள், வசதிப்படைத்த ,வங்கியில் கடன் வாங்கும் சூத்திரம் தெரிந்தவர்களே பொறியியலில் சேர முடிகிறது. அந்த சூத்திரம் என்பது வேறொன்றும் இல்லை எல்லா வங்கியிலும் கமிஷன் வாங்கிக்கொண்டு கடன் பெற்று தர ஏஜெண்டுகள் உள்ளார்கள். அவர்களுக்கு உரிய கட்டிங்க் கொடுத்து விட்டால் , கேள்வியே இல்லாமல் கடன் கொடுக்கப்பட்டுவிடும்.கமிஷன் கொடுக்க தேவைப்படும் குறைந்த பட்ச பணமும் கையில் இல்லாத ஏழைமாணவர்களுக்கு வங்கிக்கடன் எட்டாக்கனியே.
இதன் மூலம் கல்வி வியாபாரிகளுக்கு வியாபாரமும் நன்றாக நடக்கிறது. ஊடகங்களும் கடன் கொடுக்காத வங்கியினை மட்டுமே வெளிச்சம் போட்டுக்காட்டும், ஆனால் கடன் வாங்கியவர்கள், மற்றும் கட்டாதவர்கள், போலியாக வறுமைக்கோட்டுக்கு கீழ் என சொல்லி வட்டியில் மானியம் பெற்று பலன் அடைந்த வசதியானவர்களையோ அல்லது கட்டணக்கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களையோ கண்டுக்கொள்வதே இல்லை.
நம் நாட்டில் கடனோ ,கல்வியோ ஏழைகளுக்கு என்றும் எட்டாக்கனி தான் ,ஏழைகளின் பெயரால் யாருக்கோ பலன் போய் சேர்ந்துவிடும்.
----------
பின் குறிப்பு:
படம் உதவி, கூகிள், இந்து நாளேடு,நன்றி!
*****
17 comments:
நம் நாட்டில் கடனோ ,கல்வியோ ஏழைகளுக்கு என்றும் எட்டாக்கனி தான் ,ஏழைகளின் பெயரால் யாருக்கோ பலன் போய் சேர்ந்துவிடும்.//
உண்மை தான்..நிறைய முறை கண்கூடாக கண்டது உண்டு...
ஆனால் கடன் என்று வரும் போது எதன் பேரில் என்ற கேள்வி கொடுக்கும் இடத்தில இருந்து பார்த்தால் மட்டுமே புரியும் நண்பரே...
Noone in the world has a solution for educational loans...that is one of the biggest problems even all the developed countries face...
தொடர்ந்து கலக்குங்கள்...
இந்த முறை படம் தேடி வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்...அட்லீஸ்ட் ஒரு நமீதா படத்தை கையிலே புத்தகத்தோட போட்டிருக்கலாமே...-:)
ரெவரி,
வாங்க,நன்றி!
கடன் கொடுக்கப்படவில்லை என சொல்லவில்லை, நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு கடன் கிடைத்து விடுகிறது, ஆனால் கிராமப்புற ஏழை மாணவர்களே வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதனை சொல்லி இருக்கேன், மேலும் 50% கல்வி கடன் வாராக்கடன்ன் ஆகிறது, ஏழைமாணவர்களுக்கான மாநியமும் வசதியானவர்களால் அனுபவிக்கப்படுகிறது, என கல்விக்கடனின் னைத்து அம்சங்களையும் சொல்லி இருக்கேன்.
முதலில் கல்விக்கட்டணம் இவ்வளவு அதிகம் இருப்பதே பெரிய தவறு ,அதுவே அனைவரையும் கடன் வாங்க வைக்கிறது.
பதிவை முழுசாப்படிக்கலையோ?
---------
ஹி...ஹி அப்போ ஒரு படம் போடலாம்னு சொல்லுறிங்க :-))
முக்கியமான விஷயத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள். கல்வி கடன் கிடைக்க மாட்டேன் என்கிறது என்பது தான் எல்லோரும் பேசும் விஷயம். கிடைத்தவர்கள் திருப்பி கட்டுவதில்லை, கிடைப்பதற்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது, கல்விக்கான கட்டணத்தில் கிட்டதட்ட வெளிப்படையாகவே எல்லோரும் கொள்ளை அடிப்பது போன்ற பல விஷயங்களை தெளிவாக்கி இருக்கிறீர்கள்.
கல்வி கட்டணம் மிக அதிகம், கடன் சுமை பிள்ளைகள் தலையில் நாற்பது வயது வரை தொடரும் என்பது போன்ற பிரச்சனைகள் அமெரிக்காவில். ஆனால், நம் ஊரில் பிரச்சனைகள் வேறு என்பது உங்கள் பதிவில் இருந்து தெரிகிறது!
படிச்சா பொறியியல் இல்லாட்டி மருத்துவம்...எல்லாரும் இதையே நினைச்சா விளங்குமா?
அட்லீஸ்ட் அதுக்குள்ளே போகணும்னா நல்லா படிக்கணும்...
இப்படி மூக்கால அழுறதுல பாதி பேர் படிப்பு சராசரி ரகம்...+ பொருளாதர ரீதியாக நலிவுற்ற ரகம்...
ஒரு முறை நான் பார்த்தது...ரொம்ப கஷ்டப்பட்ட பொண்ணு பொறியியல் படிப்பு படிக்கணும்னு லோனுக்கு வந்திருந்தது...பாவம்னு முதல்ல நினைச்சேன்..
ஆனா சேரப்போறது உருப்படாத தனியார் பொறியியல் கல்லூரி...வாங்கின மார்க் 63 சதவீதம்..
அந்தப்பொண்ணு ஏதோ அரசு சட்டம்லாம் பேசிச்சு...
அதை ஒழுங்கா படிக்கிறதில காமிச்சிருக்கலாம்னு சொல்லலாம்னு தோணிச்சு...வேடிக்கை பாக்கிறதோட நிறுத்தியாச்சு...
வீட்டுக்காரம்மாட்ட இதுங்கல்லாம் படிக்காம இப்படி வந்து சட்டம் பேசுதுன்னு சொன்னா உங்கள மாதிரியே நமக்கு திமிருன்னு சொல்றாங்க..
இது தான் நிதர்சனம்...
இப்படிக்கு,
எந்த லோனும் வாங்காம சொந்த மூளையில படிச்சு...ஓரளவுக்கு முன்னுக்கு வந்த ஒரு ஜீவன்...
முதலில் கல்விக்கட்டணம் இவ்வளவு அதிகம் இருப்பதே பெரிய தவறு ,அதுவே அனைவரையும் கடன் வாங்க வைக்கிறது.
//
If one can't afford a branded Full suit...he needs to buy a regular one...
If one can't afford a regular shirt...he needs to buy a cheaper shirt at a cheaper place...
That is how it goes...I am not being rude here..just being practical...noone is entitled to anything here...Nothing is free..and everything has a cost attached to it...
Comon...don't make India a welfare society...
FOR THE RECORD...I am a son of a banker...and I read the whole writeup...-:)
வண்க்கம் சகோ
நல்ல பதிவு.என்னைக் கேட்டால் பெரும்பாலான கல்லூரிகள் தரமாக் இல்லை,வெளிவரும் மாணவர்களும் வேலை வாய்ய்பு பெறுவது கடினம்.
ஆகவே எதற்கு நான்கு வருடங்களில் மார் 5 இலட்சம் வரை செலவு செய்து கஷ்டப் பட்டு பொறியியல் படிக்க வேண்டும்.
அதற்கு ஆங்கிலம் படிக்க்லாம்.உலகெங்கும் ஆங்கில ஆசிரியர்களுக்கு அதிக தேவை உண்டு. ஆங்கிலம் ,இலக்கியம் இதனுடன் தமிழ் மொழி பெயர்ப்பு +கணிணி பயிற்சி என் புது படிப்பு உருவாக்கினால் மதிப்பு அதிகம்.
தமிழில் மொழி பெயர்ப்பில் பல வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கினால் ,த்மிழர்கள் பல ஆய்வுகளை தமிழில் படிபார்கள்.
ஏதேனும் செல்விலாமல் படித்து 5 இலட்சம் வைத்து சுய தொழில் தொடங்கலாம்.எல்லாரும் கணிணி படித்து அமெரிக்கா போய் வாழ வேண்டும் எனில் நடக்காது.
இன்னும் நிறைய சொல்லாம் என்றாலும் யோசித்து
தனியார் மருத்துவக் கல்லூரிகளை பற்றியும் எழுதுங்களேன்.. பொறியியல் கல்லூரிகளில் தரம் குறைந்தால் அதில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் ஆபத்து.. ஆனால் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி தரம் குறைந்தால்...
தனியார் மருத்துவக் கல்லூரிகளை பற்றியும் எழுதுங்களேன்.. பொறியியல் கல்லூரிகளில் தரம் குறைந்தால் அதில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் ஆபத்து.. ஆனால் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி தரம் குறைந்தால்...
கல்வி கட்டணம் அதிகம் தான்.. ஒரு சில கல்லூரிகள் வகுப்பறைகளை குளிர் பதன வசதி செய்திருக்கிறார்கள்.. சில கல்லூரி பேருந்துகளே குளிர் பதன வசதியுடன் தான் செல்கின்றன.. கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அனுமதி வாங்க எழுபத்தைந்து லட்சம் குடுத்ததாக பள்ளி விழா ஒன்றில் கூறினார்கள்.. [1992-1993ல் நான் அங்கு மாணவனாக இருந்த போது நானே கேட்டேன்].. அப்புறம் எப்படி கட்டணம் குறையும் :(... போட்டதை எடுக்க வேண்டாமா...
சார்வாகன் சொல்வது போல்.. பொறியியல் மோகம் இருக்கும் வரை இந்த கட்டணம் குறைய போவதில்லை.. demand and supply thaan.. மக்களின் இந்த மோகம் குறைந்தால் கட்டணமும் தானே குறைய வாய்ப்பு இருக்கிறது..
//பொறியியல் கல்லூரிகளில் தரம் குறைந்தால் அதில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் ஆபத்து..//
நிச்சயமாய் இல்லை.. மக்களுக்கும் உண்டு, பொறியியல் வல்லுனர்கள் கட்டிய பாலங்கள் / கட்டிடங்கள் விழுந்தால் என்னவாகும்??
சிறப்பாக அலசி ஆராயப்பட்ட பதிவு! கல்வி வியாபார பொருளாகி பல வருடங்கள் ஆகிவிட்டது வேத்னையான விசயம்!
நல்ல பதிவு வவ்வால்
///ஊடகங்களோ வங்கிகளை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு , மாநியத்தினை முறைகேடாக அனுபவிக்கும் மாணவர்களை கண்டுக்கொள்வதில்லை. ///
இதுதான் நிஜம். அரசு மக்களுக்கு செய்ய நினைக்கும் உதவிகள் இப்படித்தான் அபத்தமாய் போய் முடிகின்றன. இங்கே அரசின் நோக்கம் சரி என்றாலும், சில திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு அதில் உள்ள குறைகளை கண்டுபிடித்து விரைவாக அதை சரி செய்யவேண்டும். அதுதான் இங்கே நடப்பதில்லை.
பந்து,
வாங்க,நன்றி!
வங்கிக்கடன் என்பதை மட்டும் இல்லாமல் பலப்பிரச்சினைகளை சொல்லி இருக்கேன் என்பதை சரியாப்புரிஞ்சுக்கிட்டிங்க.
இந்தியாவில் எல்லாம் இருக்கு ஆனால் அதனை "அடையும் வழி" ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது.
மேலும் அரசு அறிவித்த கட்டணம் போல இரு மடங்கு வசூலிப்பதை யாரும் கேள்விக்கேட்டதாக தெரியவில்லை, செமஸ்டருக்கு 20000 மட்டும் எனில் கடன் சுமையே இருக்காது அல்லது குறைவாக கடன் வாங்கினால் போதும், ஆனால் செமஸ்டருக்கு 40000 என இரண்டு மடங்கு கட்டணம் என வெளிப்படையாக சட்டத்தினை மீறுகிறார்கள். அதனை கேள்விக்கு உட்படுத்தாமல் வங்கி கடன் கொடுக்கவில்லை என்பதையே ஊடகங்கள் செய்தியாக்குகின்றன.
---------
ரெவரி,
வாங்க ,நன்றி!
நீங்க சொல்வது சரி தான், பெற்றோர்களின் கல்வி ஆசையே காரணம்னு பதிவில் அதனையும் குறிப்பிட்டுள்ளேன்.
அரசு ஆண்டுக்கட்டணம் 40,000 என சொன்னால் அதனை செமஸ்டர் கட்டணம் என வசூலிப்பதை சொல்லி இருக்கேன் ,அதனைக்கவனிக்காமல் ,எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கு என பொதுவாக சொல்கிறீர்கள், ஒரு சினிமா டிக்கெட் 100 எனில் 200க்கு விற்றால் பிளாக் டிக்கெட் என்கிறோம்,ஆனால் இதனை அப்படி சொல்ல கூட யாரும் முன்வரவில்லையே.
63% மதிப்பெண் மாணவிக்கதை சரி தான் ,ஆனால் அதே மாணவி கமிஷன் கொடுத்து ஏஜெண்ட் மூலம் அணுகினால் கடன் கிடைத்து விடும் மாயத்தினை என்ன என சொல்வது. வங்கியில் கடன் கிடைக்க வேண்டுமெனில் "இன்புளுயன்ஸ்" தேவைப்படுகிறதே.
90% மதிப்பெண் இருந்தும் செலவு செய்ய பணம் இல்லை எனில் கிராமப்புற ஏழை மாணவனுக்கு கடன் கிடைக்க பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டும் என்பது தான் நடை முறை யதார்த்தம்.
தமிழ் நாட்டில் 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளது அதில் 21 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து வசதிகளும் இருக்கிறது. எனவே மற்ற கல்லூரிகள் எல்லாம் நீங்கள் சொல்லும் உருப்படாத ரகம் தான், ஆனால் அங்கும் சேரக்கடன் கிடைப்பவர்கள் பாக்கியசாலிகள் தானே. :-))
//Comon...don't make India a welfare society...//
இது என்ன மாதிரியான கூற்று?
அப்படியானால் அரசியல் சட்டத்தில் மக்கள் நல குடியரசு இல்லைனு டிக்ளேர் செய்துவிடணும்.
இப்போ ஜனாதிபதியான பிரணாப் முதல் கொண்டு ஏழைகளை கவனத்தில் கொள்வேன் என பம்மாத்து செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சும்மா எதுவும் செய்யாமல் ஏழைகளுக்கான அரசு ,மக்களை வாழ வைக்கும் அரசுன்னு சொல்லிக்கொண்டே இருப்பது சலிப்பாக இருக்கு.
உங்களைப்போல ஓரளவு சொந்த மூளையைப்பயன்ப்படுத்தி அரசு கல்லூரியிலே படிச்சுட்டு வந்த ஆளு தான் அப்போ 16,500 ரூ தான் ஆண்டுக்கட்டணம் ,அனைத்து செலவுகளும் உட்பட(விடுதி இல்லாமல்) எனவே வங்கிக்கடனே தேவைப்படவில்லை.
அதிகப்படியான கல்விக்கட்டணம் என்பதே அடிப்படைக்காரணம். 50% மாணவர்கள் கல்விக்கடனை திரும்ப செலுத்தவில்லை என்பதன் பொருள் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதாகும்.வேலைவாய்ப்பு குறைந்துக்கொண்டே வருகிறது ஆனால் கல்லூரிகளும், கட்டணமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது சமூகத்திற்கு நல்லதல்ல.
-----------
சகோ.சார்வாகன்,
வணக்கம்,நன்றி!
பெரும்பாலான கல்லூரிகள் தரமில்லை ,ஆனாலும் அடிப்ப்டையாக ஆண்டுக்கு ஒரு லட்சம் வசூலித்து விடுகிறார்கள்.தரமான கல்லூரி எனில் 1,70,000 ரூ ஆகிறது.
நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே ஆனால் பெற்றோரும்,மாணவர்களும் அமெரிக்கா போனவரையோ,இன்போசிஸில் வேலை செய்பவரையோ கணக்க்கில் கொண்டு செயல்படுகிறார்கள், 50% மாணவர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
கல்லூரிகளை விடுங்கள், சென்னையில் ஒரு நல்லப்பள்ளியில் படிக்கவே ஆண்டுக்கு1 லட்சம் செலவிடுகிறார்கள்.
சென்னையில் நேற்று முன் தினம் ஒரு சிறுமி பள்ளிப்பேருந்தில் இருந்த ஓட்டை வழியே விழுந்து இறந்தார், அப்பேருந்துக்கு ஆண்டுக்கு 10,000 கட்டணமாம் :-((
பெற்றோர்களின் கல்வி ஆசையை ,வியாபாரிகள் பயன்ப்படுத்திக்கொள்கிறார்கள், என் கேள்வி அரசு என்ன செய்கிறது என்பதே.
---------------
மாயன்,
வாங்க,நன்றி!
தனியார் மருத்துவக்கல்லூரியில் படிப்பவர்கள் எல்லாம் கண்டிப்பாக கோடிஸ்வரர்களாக மட்டுமே இருக்க முடியும், நன்கொடை 30 லட்சம், ஆண்டுக்கு 5 லட்சம் கட்டணம்,எனவே அவர்களை இதில் சேர்க்க முடியாது.தரமில்லா கல்லூரி ,தரமில்லா மாணவர்கள், அவர்களிடம் போகும் நம்மை வைத்து மருத்துவம் பழகுவார்கள் :-))
---------
அனானி,
நீங்கள் சொல்வது உண்மை தான் அனுமதிக்கு என பணம் கொடுத்தால் மட்டுமே கொடுப்பார்கள்,நான் சொல்ல வருவது 20,000 செமஸ்டருக்கு என வருவதை 40,000 என வெளிப்படையாக வசுலீப்பதை.
இலவசமாக கல்வி வழங்க சொல்லவில்லை, சரியான விலை வைக்க சொல்கிறேன்ன். பின் எதற்கு அரசு ஆண்டுக்கு 40000 ரூ என அறிவிக்க வேண்டும். ரயில்வே அட்டவணையில் நேரம் போட்டு இருப்பார்கள்,ஆனால் அந்த நேரத்துக்கு டிரெயின் வராது ,எவ்வளவு தாமதமாக வருகிறது என தெரிந்துக்கொள்ளவே அட்டவணை ,அது போல அரசின் கட்டண அறிவிப்பும் இருக்கு :-))
சப்ளை டிமாண்ட் தியரி கூட வேலை செய்யவில்லை, கடந்த ஆண்டு 70,000 பொறியியல் இடங்கள் யாரும் சேராமல் கிடந்தது. இந்த ஆண்டு எத்தனையோ?
யாரும் வரவில்லை என்றாலும் செமஸ்டருக்கு 40,000 தான் கட்டணம்,ஆனால் அரசு சொல்வது அது ஆண்டுக்கட்டணம் என்று, ஏன் அதனை தனியார் பின்ப்பற்றவில்லை, ஊடகங்களும் செமஸ்டருக்கு 40,000 வாங்குவதை அரசு கட்டணம் என்பது போல கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றன.
---------
சுரேஷ்,
வாங்க,நன்றி,
கல்வி வியாபாரம் ஆகி ரொம்ப நாளாச்சு என்பது உண்மை தான் ஆனால் வியாபாரத்திலும் ஒரு நேர்மை வேண்டாமா?
ஒரு கிலோ அரிசி 50 ரூ எனில் 100 ரூ வாங்கிவிட்டு இதான் நியாய விலை, மற்றவர்கள் என்றால் 200 ரூ சொல்வார்கள் என்று சொன்னால் நாம் சும்மா வருவோமா?
---------
சிவானந்தம்,
வாங்க,நன்றி!
ஆமாம் ,அதை விட அரசு அறிவித்த கட்டணம் போல இரண்டு மடங்கு வசூலிக்க ,வங்கி கடன் கொடுக்க வேண்டும், அதையும் எப்ப்டி வாங்குவது என்ற நேக்கு போக்கு தெரிந்தவர்களே வாங்க முடியும்.
அப்பாவிகளுக்கு கட்டணமும் கட்டுப்படியாகவில்லை,வங்கியும் கைக்கெட்டவில்லை.சக்தியுள்ளவர்களுக்கே எல்லாம் சாத்தியமாகும் உலகு இது.
கல்வி தந்தை வவ்வால், சரியாக சொன்னீர்கள்.
கல்வி கடை அண்ணாச்சிகள், முதலில் கடைக்கு ”ஆடு”கள் கிடைக்கவில்லை என்றவுடன், பொறியியல் படிப்பிற்கு சேர 60% யிலிருந்து பாஸானாலே போதும் என்று மாற்றினார்கள். அதற்கு நீதிமன்றம் துணைநின்றது.
கல்வி கட்டணம் அதிகமாக இருக்குதே என்றவுடன், அண்ணாச்சிகள், வங்கிகள் அளிக்கும் கல்விகடன் மீது கண் வைத்து, அதை அனைவருக்கும் அளிக்கும் வகையில் வரவழைத்து, கல்லா கட்டினார்கள். அதற்கு நீதிமன்றமும் துணை போனது.
சரி, கடையும் அதிகமாக விட்டது, ”ஆடு”களும் குறைவாக உள்ளது, அப்படியிருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது, பாஸ் மார்க்கை 35 ஆக்கிவிடலாம் என்று திட்டம் தீட்டி, ரகஸியமாக அரசு உதவி பெற்று நடைமுறைபடுத்த முயன்ற போது, பாவம், இந்த முறை நீதிமன்றத்தில் நீதிபதி கே.சந்துருவிடம் வழக்கு வந்துவிட்டது. அவரிடம் ரிவிட் வாங்கி, மேல்முறையீடு செல்கிறார்கள் என நினைக்கிறேன். எப்படியும் செட் செய்து விடுவார்கள்.
நண்பர் சார்வாகன் சொல்வது சரிதான். பொறியியலைதவிர்த்து வேறு துறைகளில் நன்றாக வாய்ப்புகள் உள்ளன. கலைகல்லூரிகளை தரம் உயர்த்தினாலே போதும்.
Indian Bankers are byproducts of the Welfare Society before the liberalization era and now continue to be the same to some major extent. In fact Banks are considered as a "State". So persons who helped themselves through such Welfare society, must have no qualms when others try to get the same benefits.
நன்றி.
நரேன் ,
வாரும்,நன்றி!
என்னது கல்வி தந்தையா நாசமா போச்சு ...நான் ஒரு மழலையர் பள்ளிக்கூட வைக்க முடியாது, அப்படி ஒன்று ஆரம்பிச்சா பென்ஸ், ஆடினு கார் வாங்கி செட்டில் ஆகிட மாட்டேன் :-))
நகரில் இருக்க ஒரு கல்வி தந்தை வாக்கிங் போகும் போது அவர் பின்னாடியே அவர் நடை வேகத்திற்கு ஒரு பென்ஸ் கார் ஐ டிரைவர் ஓட்டி செல்வார், பாவம் இப்போ சர்க்கரை வியாதி முத்திப்போய், இரண்டுக்கால் பாதமும் அகற்றப்பட்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை கால்கள் அணிந்து இருக்கிறார்.ஹி..ஹி இது ஒரு பரம ரகசியம்...படித்ததும் மறந்து விடவும் :-))
மதிப்பெண் சமாச்சாரம் எல்லாம் வேற ரூட்டில சமாளிச்சுடுறாங்க, அதுக்கு தான் நிகர் நிலைப்பல்கலை ஆக்குவது,அவங்க இஷ்டம், மேலும் கண்டிப்பாக அனைவரும் ஆல் பாஸ் ஆகலாம், என்ன அதுக்கு ஒரு தனிக்கட்டணம் :-))
ஒரு மாணவன் 20 அரியரை இறுதியாண்டில் கிளியர் செய்தானாம் , சில லட்சம் கொடுத்து. அந்த நிகரில்லா பல்கலை புதிய தலைமுறையினர் மீது மிகவும் அக்கறையான ஒன்று :-))
நீங்க சொன்னாப்போல தான் வங்கிகல் இருக்கு,ஆனால் அதன் பலன் ஏழைகளுக்கு கிடையாது... ஒன்றும் வேண்டாம் ஒரு கறவை மாடு வாங்க கடன் கேட்டுப்போய்ப்பாருங்க "நம்மிடமே கறந்து விடுவார்கள்"
அண்ணாமலை படத்தில அரசியல்வாதி ரெக்கமண்ட் செய்து தான் சூப்பர் ஸ்டாருக்கே மாட்டு லோன் கிடைக்கும் :-))
Post a Comment