(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி)
இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோடி அனந்த நமஷ்காரங்கள், இப்பதிவை படிக்க புகுமுன் அடியேனின் சுய விளக்கத்தினையும் மனதில் இருத்திக்கொண்டு படிக்குமாறு தாழ்மையுடன் தெண்டனிட்டு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறேன், வவ்வாலாகிய நான் பலப்பல லோகாதாய விவகாரங்களையும் எனக்கே உரித்தான தனித்துவமான முறையில் அலசி ஆய்ந்து மீஉயர் நடையில் கட்டுரைகளை வடித்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு சேவையாற்றி வருவதை அனைவரும் அறிவீர்கள் என்பதை தன்னடக்கத்துடன் சொல்ல விழைகிறேன், ஆனால் இதுகாறும் இசைக்குறித்து பெரிதாக பிரஸ்தாபித்து எதுவும் எழுதியதில்லை காரணம் அடியேன் இசையில் ஒரு ஞானசூனியம் என்பதை அறிந்திருப்பதாலேயாகும், ஆனாலும் கேள்வி ஞானம் சற்றுண்டு, நாக்க மூக்கா போன்ற ஸினிமா ஸங்கீத கீர்த்தனைகளை லயித்துக்கேட்கும் பழக்கமுண்டு,மேலும் சில பல ஸங்கீதக்காரர்களுடன் லேசான பரிச்சயமும் உண்டு என்பதால் அவ்வப்போது ஸங்கீத சம்பாஷணைகளில் கலந்துக்கொண்டு ஆமாமாம் நீங்க ஸொல்றது சரிதான், அது ஹரிப்பிரியா ராகமே தான் என சொல்லி ,அடேய் ஸங்கீத ஞானசூன்யமே அது கரகரப்பிரியா என பாராட்டுப்பத்திரங்கள் வாங்கிய அனுபவமுண்டு, அப்படியாப்பட்ட ஸங்கீத பின் புலமுள்ள நீ எப்படி ராசாவின் இசை ஆளுமை பற்றி எழுதக்கிளம்பினாய் என ஏகத்துக்கும் எகிறிக்குதிக்க வேண்டாம், இதற்கெல்லாம் காரணம் , ராசாவின் ரஸிக கண்மணிகளின் அளவுக்கதிமான விதந்தோம்பலேயாகும்.
இளையராஸா ஒரு அதிஅற்புதமான ஸினிமா ஸங்கீதக்காரர் என்பதில் எள்முனையளவேனும் அடியேனுக்கு சந்தேகமில்லை ,ஆனால் அவரன்றி இசையில்லை, இசையின் பிதாமகர் அவரே, இசை மேதை,ஞானி ,அவர் தும்மினாலே ஸப்தஸ்வரங்களும் ஒலிக்கும் என்பது போன்ற மிகையான விதந்தோம்பல்களை சில ரஸிக ஸிகாமணிகள் செய்வதோடு ,அதற்கு ஆதாரம் இதோ என ஆட்டுத்தாடி வைத்த சிலரின் கட்டுரைகளை வேறு சான்றாவணமாக காட்டிக்கொள்கிறார்கள்,அப்படியான ஒரு கட்டுரையை மிக ஸமீபத்தில் இணையத்தில் வாஸிக்க நேரிட்டது, மேற்கத்திய இசையென்றால் மேற்கு திசையை நோக்கி வாஸிப்பது என்ற அளவில் ஞானமுள்ள எனக்கே அக்கட்டுரை தம்புராவில் தவில் வாசித்தார் என்பது போல மிகசெயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்று என உடுப்பி ஓட்டல் உளுத்தம் வடை ஓட்டை போல தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
எனவே இசை ஞானமில்லை என இனியும் வாளாவிருந்தால் நாளைய தமிழ்கூறும் நல்லுலகம் இது போன்ற மொள்ளமாரித்தனங்கள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஸமூகபிரக்ஞையுள்ள வவ்வால் எப்படி சும்மா இருந்தார் என நாக்குமேல பல்லுப்போட்டு நாராசமாக கேட்கும் என்பதால் , கூச்சத்தினை கூறையில் ஏற்றிவிட்டு வெட்கமில்லாமல் கேள்வி ஞானத்தினை வைத்தே ஒரு இசைக்கட்டுடைத்தல் கட்டுரை படைத்துள்ளேன், இதில் உள்ளதெல்லாம் கூகிளாண்டவர் துப்பிய எச்சில்களே ஏதேனும் பிழையிருந்தால் அடியேன் பொறுப்பல்ல,இப்பாலகனை உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக பாவித்து அடியேனின் சண்டப்பிரசண்டங்களை மன்னித்து அருள்வீராக!
இனி மேற்கொண்டு இசைக்கட்டுடைத்தல் சாகித்தியத்தினுள் செல்லலாம்,
மூலப்பதிவு: இளையராஜா
//ஒரு முறை எனது இசை வகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் [ chord ] பற்றிய பாடத்தில் 'C' மேஜர் ஸ்கேல் பற்றிய பாடத்தை நடத்தினார்.
அப்போது 'C' மேஜர் ஸ்கேலின்... முதல் கார்டு 'C' மேஜர்.
இரண்டாவது கார்டு... 'D' மைனர் [ 'D' minor ].
ஒரு பாடலின் 'ஏற்பாட்டில்' [ arrangements ] இந்த இரண்டு 'கார்டு'களையும் அடுத்தடுத்து இசைப்பது தவறானது என்று சொன்னார்.//
chord or scale or key என எப்படி சொன்னாலும் பொருள் ஒன்றே, எனவே 'C' மேஜர் ஸ்கேலில் முதல் கார்டு "சி" மேஜர் எனவும் அடுத்து வருவது டி மைனர் ஸ்கேல் அதனை வாசிக்க மாட்டர்கள் என்பதே தவறு.
சி மேஜர் ஸ்கேலின் இசைக்குறிப்பு படம்.
இதில் C,D,E என வருவதெல்லாம் கார்டு அல்ல , பிட்ச்,அல்லது நோட் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு டோன் ஆகும். இது போல பல டோன்கள் உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஷார்ப்,ஃப்ளாட், மீடியம் என மாறுபட்ட டோன்கள் உண்டு.
கர்நாடக ஸாஸ்திரிய ஸங்கீதத்தில் வரும் ஸ,ரி,க,ம,ப,த,நி ஸ்வரங்கள் போன்றவை மேற்கத்திய ஸாஸ்திரிய ஸங்கீத "A,B,C,D,E,F,G " எனப்படும் நோட்கள். இராகங்கள் போன்றவை கார்டு/ஸ்கேல்/கீ ஆகியவை.
கார்டு,ஸ்கேல் எல்லாம் ஒன்று என புரியாமல் ,அதில் வரும் நோட்களை கார்டுகளாக பாவித்து "C"மேஜர் கார்டுக்கு அடுத்து "D" மைனர் கார்டு ,"C" மேஜர் ஸ்கேலில் வராது என்கிறார்.
படத்தில் பார்த்தால் ,"C" மேஜர் ஸ்கேலின் நோட்டில் "C"க்கு அடுத்து "D" வருவதை காணலாம் ஆனால் இவை எல்லாம் "நோட்" அல்லது பிட்ச் ஆகும் , கார்டு அல்ல, இயல்பாகவே "C" மேஜர் ஸ்கேலில் "D" மைனர் கார்டு இல்லை ,அங்கு வருவது நோட் ஆகும், ஆனால் என்னமோ "C" மேஜர் ஸ்கேலின் உள்ளே இருக்கும் பகுதி நோட்கள் "சி மேஜர்"&"டி" மைனர் என்பது போல விதிப்படி வராது என சொல்லி இருக்கிறார் :-))
ஆனால் கார்டு புராகிரஷன் என்பது வேறு ,அதனைக்கொண்டு வந்து ஒரு கார்டு/ஸ்கேலில் அடுத்து வாசிக்கும் நோட்களுடன் குழப்பி , அங்கே "D" மைனர் கார்டு "C" மேஜர் ஸ்கேலில் ,"C" மேஜருக்கு அடுத்து வராது என மெனக்கெட்டு சொல்லியுள்ளார்.
மேஜரோ மைனரோ ஒரு கார்டுக்குள் இருப்பதெல்லாம் நோட்கள், கார்டு அல்ல, கார்டும்,ஸ்கேலும் ஒன்றே.
இப்பொழுது "சி" மேஜர் கார்டு, டி மைனர் கார்டு பற்றியும் ,கார்டு புராகிரஷன் பற்றியும் என்ன சொல்கிறது இசை விதி எனப்பார்ப்போம்.
மேற்கத்திய இசையில் A,B,C,D,E,F,G எனத்தனியே நோட்/டோன்/பிட்ச் உண்டு , இவற்றின் கலவையில் இதே போல வரிசையாக A,B,C,D,E,F,G என கார்டு/ஸ்கேல்/கீ உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் மேஜர் கார்டு,மைனர் கார்டு என இரு வகை உண்டு.இந்தக்கார்டுகளை அடுத்தடுத்து "ஹார்மோனியாக" வாசிப்பதே மெலடி எனப்படும் இசை ஆகும்.
மேற்கத்திய இசையில் ஆதாரமாக ,ஸ்திரமான பிட்ச்சில் இருப்பது "C" கார்டு என்பதால் எல்லா வாத்தியத்திலும் "C" கார்டு எளிதாக தெளிவாக வாசிக்க முடியும் எனவே "C" கார்டினை மையமாக வைத்தே இசை விதிகள் இருக்கும்.
இசை விதிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் இசையமைப்பதை எளிதாக்கவே. விதியை பின்ப்பற்றுவது கடினமாக இருப்பதால் தானே இசைக்கற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது பின்னர் எப்படி விதி எளிதாக்கும்னு நினைக்கலாம்.
உதாரணமாக கிரிக்கெட்டின் "ஃபீல்டிங் பொசிஷண்களை" பார்க்கலாம். பாயிண்ட், சில்லி பாயிண்ட், கல்லி, பைன் லெக்,டீப் பைன் லெக், லாங் ஆன்,லாங்க் ஆப்,மிட் ஆன்,மிட் ஆஃப் என பெயர் வைத்து அங்கெல்லாம் ஏன் ஆட்களை நிறுத்த வேண்டும் ,நிறைய இடம் இருக்கே இஷ்டத்துக்கு நிக்க வச்சா என்ன? காரணம் என்னவெனில் ஒரு பேட்ஸ்மேன் பந்தினை அடித்தால் இயல்பாக இப்படி பெயர் சூட்டப்பட்ட புள்ளிகளின் வழியே அல்லது அருகே தான் செல்லும், பல ஆண்டுகளாக ஆடி, பந்து பயணிக்கும் பாதைகளை கவனித்து பின்னரே "ஃபீல்டிங் பொசிஷன்கள்" தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்போ இன்னார் எப்படி அடிப்பாங்கனு தெரியாம எங்கே நிறுத்துவது என யோசிக்காமல் போனதும் "ஸ்டேண்டர்ட் பீல்டிங்" பொசிஷணில் ஆட்களை நிறுத்துவது நேரம் சேமிக்க உதவும், ஆட்டத்தினையும் எளிதாக்குகிறது அல்லவா?
அதே போல எந்த நோட், கார்டு எப்போ வாசிச்சா இனிமையாக இருக்கும்னு பல ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் இசை விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேஜர் கார்டு, மைனர் கார்டு இடையே உள்ள ஒத்திசைவை வைத்து தொடர்பினை உருவாக்கியுள்ளார்கள். இத்தொடர்பின் அடிப்படையில் கார்டு புராகிரஷனை உருவாக்குவார்கள்.
ஒன்றுக்கொன்று இடையேயுள்ள தொடர்பின் அடிப்படையில் ரிலேட்டிவ் CHORD என்பார்கள். இதனை கணித்து உருவாக்கப்பட்ட விதியை "circle of fifth" என்பார்கள்.
படம்.
வெளிவட்டத்தில் வருவது மேஜர் கார்டு, உள்வட்டத்தில் இருப்பது மைனர் கார்டு.
12 மணி நிலையில் துவக்கமாக அமைவது "c"மேஜர் கார்டு அதில் இருந்து கடிகாரச்சுற்றில் ஒவ்வொரு ரிலேட்டிவ் கீயும் செல்கிறது. மிக அருகில் இருப்பதே முன்மையான ரிலேட்டிவ் கீ ஆகும்.
இந்த விதிப்படி "C" மேஜருக்கு முதன்மையான ரிலேட்டிவ் கீ 'A" மைனர் ஆகும்.
C மேஜரின் நேரடி மைனர் கீ ஆன "C" மைனர் பேரலல் மைனர் எனப்படும்.
இந்த இரண்டு கீ களும் "C" மேஜருடன் நல்ல ஒத்திசைவு கொடுக்கும் என்பதால் அடுத்தடுத்து வாசிக்கவும் எளிதாக இருக்கும்,இனிமையாகவும் இருக்கும் என்பதால் , C மேஜர் ஐ, A மைனர் அல்லது "C" மைனர் காம்பினேஷனில் இசையமைப்பது இனிமையான மெலடிக்கு உத்திரவாதம் என எளிமைப்படுத்துவதே இசை விதி.
இது போல ஒவ்வொரு மேஜர் கீக்கும் ரிலேட்டிவ் கீ, பேரலல் கீ "circle of fifth "விதிப்படி கண்டுப்பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விதி எப்படி செயல்படுகிறது எனில் ,
ஒரு மேஜர் கார்டின் நோட்களை வரிசையாக எழுதினால் , ஒன்றாவது ரூட் நோட்டில் இருந்து ஆறாவதாக உள்ள நோட்டே ரிலேடிவ் மைனர் கீ ஆகும்.
அதே போல ஒரு மைனர் கீ ரீயின் ரிலேட்டிவ் மேஜர் என்னவெனில் மூன்றாவதாக வரும் நோட் ஆகும்.
"சீ" மேஜரின் நோட்கள்,
C, D, E, F, G, A, B, C
http://en.wikipedia.org/wiki/C_major
இதில் ஆறாவதாக வருவது "A" நோட் ஆகும் இதுவே , C மேஜரின் ரிலேட்டிவ் மைனர் ஆகும்.
ஒரு மேஜர் கீயின் பகுதி நோட்கள் அப்படியே அதன் ரிலேட்டிவ் மைனர் கீ இல் இருக்கும், எனவே அடுத்தடுத்து வாசிக்க எளிதாக இருக்கும், இதனடிப்படையிலேயே "ரிலேட்டிவ்" கீ என்கிறார்கள்.
A மைனரின் பகுதி நோட்கள்.
A, B, C, D, E, F, G, A
சீ மேஜரின் பகுதி நோட்கள் அப்படியே கொஞ்சம் வரீசை மாறி வருவதை காணலாம். மேலும் மூன்றவதாக "C" நோட் உள்ளது.
இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோடி இசை அறிஞர்கள் வாசித்து பார்த்து அதன் ஒத்திசைவு தொடர்புகளை அனுபவ ரீதியாக அலசி உருவாக்கப்பட்டது.
கடிகாரச்சுற்றில் நெருக்கமாக உள்ள மேஜர், மைனர்கள் ஹார்மனியை உருவாக்கும் என்பதால் அதையே பின்ப்பற்றுவது வழமை.
அதற்காக தொலைவாக உள்ள ஒரு மேஜர்,மைனர் கீ காம்பினேஷனில் இசை அமைக்க கூடாது என்றெல்லாம் கட்டாயம் எல்லாம் இல்லை. அமைக்கலாம். அதற்கும் ஒரு பேர் வைத்துள்ளார்கள் "ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ்"(RELATIVE KEY PARADOX).
கடிகாரச்சுற்றின் அடிப்படையில் , C மேஜருக்கு மிக தொலைவாக உள்ள மைனர் கீ "D" மைனர் ஆகும். எனவே காம்பினேஷனில் வாசிக்க விரும்புவதில்லை, ஆனால் வாசிக்கவே மாட்டார்கள்,கூடாது என இல்லை, அப்படி தொலைவான மைனர்களையும் சேர்த்து வாசிப்பதை சில தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள்.
மேலை சாஸ்திரிய சங்கீதத்தில் அதிகம் முரணாக வாசிக்க மாட்டார்கள் ஆனால் ஜாஸ், பாப் எனப்படும் இசைகளில் இப்படி உட்டாலக்கடியா சேர்த்து இசையமைப்பார்கள் ஏனெனில் அவை பாரம்பரிய இசையல்ல, வழமைக்கு மாறான முறையில் இசைக்கோர்வை செய்வது இயல்பு.
ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் தேவையான மூட் மற்றும் மெலடி உருவாக்கவே. பாப் ,ராக்,ஜாஸ்,ராக் அன்ட் ரோல் கண்ரி இசைகளில் பாரம்பரிய விதிகளை விட இனிமை,எளிமைக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள்.
திரையிசை எனப்படுவது ஸாஸ்திரிய ஸங்கீதமே அல்ல ,அது விதிகளற்ற கலவையான இசை வடிவம் ஆகும்," fusion of amalgamated contemporary music" எனலாம். அப்படி இருக்கும் போது அதில் விதிக்கு மாறாக இசைகோர்வை செய்வது தான் இயல்பே ஆனால் அப்படி செய்து விட்டதாய் சொல்லி இசை மேதை என ஒருவரை மெச்சுவது உலகமகா காமெடி.
இதில் இன்னொரு காமெடி அப்படி மாற்றி செய்வதையும் ஸாஸ்திரிய இசை ஒரு உபவிதியாக அனுமதிக்கிறது. எனவே புதுமை படைத்தார் ,இசை விதியை திருத்தினார் என்றேல்லாம் கூத்தாடுவதே அபத்தம்.
தொலைவான ரிலேட்டிவ் மைனர் கீகளை ஏன் பயன்ப்படுத்துகிறார்கள் எனப்பார்ப்போம்.
மேலை இசையில் ஒவ்வொரு மேஜர் கார்டு/ஸ்கேல்/கீயும் மகிழ்வான உணர்ச்சியை இசையில் அளிக்க வல்லவை. கடிகாரச்சுற்றில் செல்ல செல்ல மகிழ்ச்சி உணர்வு கூடும் எனலாம்.
அதே போல ஒவ்வொரு மைனர் கீகளும் சோக உணர்வை அளிக்க வல்லவை. கடிகார சுற்றில் செல்ல செல்ல சோகம் கூடும் எனலாம்.
இப்போ C மேஜர், D மைனர் நிலை என்னவென பார்ப்போம்.
C மேஜர் மகிழ்வான கீ, அதற்கு வெகு தொலைவில் அமைந்திருப்பதே "D" மைனர் எனவே மிக சோக உணர்வை தரும்.
C மேஜர் -D மைனர் என அடுத்தடுத்து வாசித்தால் அந்த இசை மகிழ்வா, சோகமா என இனம் காண முடியாது என்பதால் ஸாஸ்திரிய இசையில் பெரும்பாலும் பயன்ப்படுத்துவதில்லை.
ஆனால் பாப் இசை போன்றவற்றில் இப்படி அடிக்கடி தொலைவான ரிலேட்டிவ் மைனர்களை பயன்ப்படுத்தி இசை உணர்வில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்குவார்கள்.
இசை உளவியலில் கூட இதனை பயன்ப்படுத்தி ஆய்வுகள் செய்துள்ளார்கள். தொலைவான ரிலேட்டிவ் மைனர் காம்பினேஷனான C மேஜர்- D மைனர் இல் அமைக்கப்பட்ட இசைக்குறிப்புகளை வாசிக்க சொல்லி கேட்க வைத்து பயனாளர்கள் என்ன உணர்ந்தார்கள் எனக்கேட்டப்பொழுது சிலர் மகிழ்ச்சியான இசை என்றும் சிலர் சோகமான இசை என்றும் சொல்லியுள்ளார்கள்.
மேலும் கேட்பவரின் மூடைப்பொறுத்து ஆரோகணமாகவும்( ஏறுவரிசை),அவரோகணமாகவும்(இறங்கு வரிசை) இசை ஒலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இசைக்குறிப்பின் பிட்ச் மாறாமல் நிலையாகவே இருந்துள்ளது. எனவே தான் இவ்வாறு இசைகோர்வை உருவாக்குவதை "ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ்" என்கிறார்கள்.
ஒரே இசைக்கோர்வை ஏறுவரிசையாகவும் ,இறங்குவரிசையாக உணர செய்யும் இவ்விசையமைப்பை ஆய்வு செய்து வரிசைப்படுத்தியவர் " Roger Shepard," (1964)என்ற ஆய்வாளர் எனவே ஷெப்பர்ட் ஸ்கேல் என்றே அழைக்கப்படுகிறது.
எந்த ஒரு சிந்தசைசரும் இல்லாமல் டாப்ளர் விளைவை உருவாக்குகிறது இம்முறை எனவே ஹாலிவுட் திரைப்படங்களில் பின்னணி இசையில் சிறப்பு ஒலியை உருவாக்க ஷெப்பர்ட் ஸ்கேல் அடிப்படையில் இசைகோர்வை அமைப்பதுண்டு. பேட்மன் படங்களில் பேட்மென் ஓட்டும் பைக் வேகம்மெடுத்து செல்வதை ஒலியியல் ரீதியாக காட்ட ஷெப்பர்ட் ஸ்கேல் முறையில் இசையமைக்கபடுகிறது.
ஷெப்பர்ட் 1964 இல் வகைப்படுத்தினாலும், இவ்வாறு தொலைவான ரிலேட்டிவ் மைனர் காம்பினேஷனில் இசைக்கோர்வை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் ஜெர்மானிய இசை மேதை "பாக்"(Johann Sebastian Bach,1685-1750) ஆவார். சொல்லப்போனால் பியானோவுக்கு என இசைக்குறிப்பு எழுதிய முதல் இசையமைப்பாளரே அவர் தான், அவரது காலத்தில் தான் பியானோ கண்டுப்பிடிக்கப்பட்டது, ஜெர்மானிய மன்னர் முதல் பியானோவை வாங்கி அதற்கு இசைக்குறிப்பு எழுத சொன்னார், பின்னர் ஒரு சவாலும் விடவே ரிலேட்டிவ் கீ பேராடாக்ஸ் என்ற விதி உருவாகாத காலத்திலேயே தொலைவான மேஜர்-மைனர் கீ காம்பினேஷனில் இசையமைத்து கேட்பவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஏறுவரிசை அல்லது இறங்குவரிசை பிட்சில் ஒலிப்பது போல செய்துக்காட்டினார்.
பிரபல பாப்,ராக் இசைக்குழுவினர்கள் பாடல்களில் இம்முறை அதிகம் இருக்கும், பாப் மார்லே, பாப் டைலான், பீட்டில்ஸ் பாடல்களில் இத்தகைய ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ் இசையமைப்பு அதிகம் காணக்கிடைக்கும். ரிலேட்டிவ் கீ பேரடாக்சில் இசையமைக்க எளிய கட்டை விரல் விதி , எதிர்க்கடிகார சுற்றில் மைனர் கீ காம்பினேஷன் தேர்வு செய்வதாகும், C மேஜருக்கு , D மைனர் எதிர்க்கடிகார சுற்றில் மிக அன்மை மைனர் ஆகும் எனவே மகிழ்வு ,சோகம் என ஒரே இசைக்கோர்வையில் கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு ஒலிச்சித்திரத்தினை உருவாக்கும்.
இப்போ நீங்களே சொல்லுங்கப்பா, C மேஜர்- D மைனர் காம்பினேஷனில் அழகிய கண்ணே பாடலை இசையமைத்தது மாபெரும் இசைப்புரட்சியா என?
உதிரிப்பூக்கள் படத்தில் ஒரு தாய் தன் குழந்தைகளுடன் மகிழ்வாக இருப்பதாக காட்ட வேண்டிய சூழலில் தேவையே இல்லாமல் மகிழ்வா சோகமா என இனம்பிரிக்க முடியாமல் இசையமைத்துள்ளார் எனலாம் ஆனால் பொதுவாக அப்பாடல் சோக உணர்வை தூண்டும் வகையில் ஒலிக்கும், ஒரு வேலை சோகத்தினை மனதில் வைத்திருக்கும் நாயகி குழந்தைகளுக்காக மகிழ்வாக இருப்பதாக காட்ட வேண்டும் என இயக்குனர் சூழலை விவரித்து அவ்வாறு பாடல் அமைத்திருக்கலாம், எனவே சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இனிமையான பாடல் எனலாம் ,ஆனால் இசைப்புரட்சி என்பதெல்லாம் மிகையான ஒன்று.
# மேலும் அந்த ஸங்கீத ஆய்வாளர் கர்நாடக ஸங்கீதத்தினையும் கொத்துக்கறி போட்டுள்ளார்,
//கர்நாடக சங்கீதத்திலும் 'ஸட்ஜமம்' என்கிற முதல் ஸ்வரத்திற்கு,
அதற்கு அடுத்து வருகிற இரண்டாவது ஸ்வரமான 'ரிஷபம்' பகை ஸ்வரம்.//
இது எப்படினு என் மரமண்டைக்கு புரியவில்லை, நம்ம கேள்வி ஞானத்தினை துருவியதில் எனக்கு கிடைத்த விளக்கத்தினைப்பார்ப்போம் ,,
கர்நாடக இசையில் ஏழு ஸ்வரங்கள் உள்ளன,
ஸ,ரி,க,ம,ப,த,நி
இவற்றினை ஸப்தஸ்வரங்கள் என்பார்கள் இவற்றின் கூட்டுக்கலவையில் தான் ராகங்கள் உருவாகின்றன.
இதில் "ஸ" (ஸட்ஷமம்) ,"ப"(பஞ்சமம்) ஆகியவை மாறாத (அச்சல) ஸ்ருதி கொண்டவை. மற்றவை மாறக்கூடிய ஸ்ருதி கொண்டவை அவற்றிற்கு கோமல்(ஃப்ளாட்) ,தீவிரம், மத்திமம் என மூன்று ஸ்ருதிகள் உண்டு , இவற்றை எல்லாம் கூட்டினால் 16 ஸ்ருதி நிலைகள் வரும் ,இதன் அடிப்படையில் தான் 16 கர்நாடக ராகங்கள் உருவாகின, இராகங்கள் பதினாறு உருவான வரலாறு இதுவே.
பின்னர் இந்த 16 ஸ்ருதி நிலைகள் அடிப்படையில் 72 இராகங்கள் உருவாகின அவற்றை 72 மேல கர்த்தா இராகம் என்பார்கள். இதான் கர்நாடக ஸங்கீதத்தின் அடிப்படை இராகங்கள். இம்முறையை உருவாக்கியவர் வேங்கடமஹி எனும் இசை அறிஞர் ஆவார். மேல கர்த்தா ராகங்களில் இருந்து உருவாகும் ராகங்கள் ஜன்ய ராகம் எனப்ப்படும். பல இராகங்கள் இவ்வாறு உருவாகியுள்ளன, ஆதியில் மில்லியன் கணக்கில் இராகங்கள் இருந்துள்ளன இப்பொழுது சுமார் 300 இராகங்களே நிலைத்துள்ளன.
மேலகர்த்தா இராகங்கள் 72 இலும் ஏழு ஸ்வரங்களும் வரும் என்பதால் "சம்பூர்ண இராகங்கள்" என்பார்கள். எல்லா மேலகர்த்தா இராகங்களும் சம்பூர்ண இராகங்கள் ஆனால் எல்லா சம்பூர்ண இராகங்களும் மேலகர்த்தா இராகம் அல்ல.அதாவது குமரிகள் எல்லாம் கிழவிகள் ஆகலாம்,ஆனால் கிழவிகள் எக்காலத்திலும் குமரிகள் ஆக மாட்டார்கள் :-))
இப்போ எதுக்கு இந்த அடிப்படை கர்நாடக ஸங்கீத போதனைகள் என கேட்கிறீர்களா , மேட்டர் இருக்குதுள்ள, கர்நாடக ஸங்கீதம் பயில ஆரம்பிக்கும் போது பால பாடமாக ஆரம்பிப்பது "மாய மாளவ கெளளை" என்ற இராகத்தில் இருந்து தான் , இது ஒரு மேலகர்த்தா இராகம் இதன் சிறப்பு என்னவெனில் இதன் பகுதி ஸ்வரங்கள் அப்படியே ஸ,ரி,க,ம,ப,த,நி" என வருவதே ஆகும்.
எனவே மாய மாலவ கெளளை பயின்றால் ஏழு ஸ்வரங்களும் பழக்கமாகிவிடும் , பின்னர் படிப்படியா மற்ற இராகங்கள் பயில்வது எளிது. இந்த இராகத்தில் "ஸட்ஜமம்" அடுத்து "ரிஷபம்" வருகிறதே பின்னர் எப்படி பகை ஸ்வரமாச்சு?
மாய மாளவ கெளளை மட்டுமில்லை பல மேலக்கர்த்தா இராங்களிலும், அவற்றின் இருந்து உருவான ஜன்ய இராகங்களிலும் "சட்ஜமம், அடுத்து 'ரிஷபம்" வருவகிறது, ஆனால் நம்ம ஆய்வாளார் பகை ஸ்வரம் அடுத்தடுத்து வராது, இராசா தான் பகை ஸ்வரம் எல்லாம் வச்சு இசைப்போடுவார்னு பெருமை பாடுகிறார்.
இதை வேற ஒரு பதிப்பகம் புத்தகமாக போட்டிருக்கு, அதை எடுத்து பதிவா போட்டு ராசானா ராசா தான்னு ஒருத்தர் எசப்பாட்டு பாடுறார், ஜால்ரா அடிக்கிறது தான் அடிக்குறிங்க ஏன் எதுக்குனு ஒரு வெளக்கம் கொடுத்துட்டு அடிங்கப்பா, நீங்கப்பாட்டுக்கு மனசுக்கு தோணினாப்போல ஜால்ரா வாசிச்சிடுறிங்க, இது எப்படினு புரியலையேனு என்ன போல ஞானசூனியங்களுக்கு விளங்காம போயிடுறதால கூகிளை தோண்டி உண்மையை கண்டுப்பிடிச்சு தொலைய வேண்டியிருக்கு அவ்வ்!
# அடுத்த உலகமாக இசை சாதனையாக கீழ்கண்டதை திருவாய் மலர்ந்தருளியுள்ளார்(எழுத்து வடிவில் தான்)
//இதைப்போல 'ஹார்மனி' [ harmony ] பற்றிய பாடத்தில் ஒரு இசையை இயற்றும்போது
ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்கு நகருகையில் ஒரு ஒழுங்கான இயக்கம் [ Movement ] இருக்க வேண்டும்.
முதல் ஸ்வரத்திலிருந்து, ஏழாவது ஸ்வரத்திற்கு தாவுதல் போன்ற
'கிரேட் ஜம்ப்' [ great jump ] செய்யக்கூடாது.
அது இனிமையாக இருக்காது என்பது இசைக்கோட்பாடு.
இசை விதியும் கூட.
‘செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே’ என்ற ‘16 வயதினிலே’ படப்பாடலை கேட்கும் போதும்,
‘என்னுள்ளே எங்கோ...ஏங்கும் கீதம்’ என்ற ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படப்பாடலின் 'ஹம்மிங்' கேட்கும் போதும்,
இந்த விதி இவரால் எவ்வளவு அழகாக மீறப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது.//
ஆனாப்பாருங்க இதப்போல லாங்க் ஜம்ப்,ஷார்ட் ஜம்ப்பெல்லாம் அடிக்கலாம்னு மேலை உலக ஸாஸ்திரிய ஸங்கீதமே அனுமதித்து அதுக்கு பெயரெல்லாம் வச்சு இருக்கு :-))
கார்டு புராகிரஷனில் ஹார்மொனியா ஒன்றுக்கு அடுத்து இன்னொன்று என நோட்களை வாசிப்பதை "arpeggio" என்கிறார்கள், அதே சமயம் ஒரு பிட்சுக்கு இன்னொரு பிட்ச் சம்பந்தமில்லாமல் வாசிப்பதை " Non-harmonic arpeggio" என்கிறார்கள். இவ்வாறு இசையமைப்பதை "modal frame" இசைக்கோர்வை என்கிறார்கள்.
கார்டுகளின் அடிப்படையில் தொடர்பெல்லாம் பார்க்காமல் கேட்க இனிமையாக இருக்கிறதா அப்போ சரி தான் என நோட்களை பயன்ப்படுத்தி அமைக்கும் இசை வகை இது.
ஆப்ரிக்கன், கியுபன்,அமெரிக்கன் ஜாஸ்,ரிதம் அன்ட் ப்ளூஸ் ,பாப் இசை எல்லாம் இப்படியானவை, இன்னும் லத்தின்,சைனீசிஸ்,ஸ்பானிசில் எல்லாம் இவை உண்டு.
பீட்டில்ஸ் இசையமைத்த பலப்பாடல்கள் இப்படியான "modal frame" வகை இசைகளே, ஒரு கார்டில் இருந்து தொலைவான கார்டுக்கு ஜம்படிப்பார்கள், கேட்கும் போதே உணர முடியும்.
ஒரு டோனுடன்( இந்திய இணை ஸ்வரம்) ஒத்துப்போகாமல் இருப்பதை "atonic" என்பார்கள் பொதுவாக இப்படியான இசைக்கோர்வைகளை "melodic triad" வகை இசை என்பார்கள்.
அதாவது வரிசையாக ஒருக்கார்டில் இருந்து இன்னொரு கார்டுக்கு செல்வதை "ஸ்டெப்" என்பார்கள் இதனை conjunct motion எனக்குறிப்பிடுகிறார்கள்.
அப்படி இல்லாமல் ஒரு கார்டில் இருந்து தொடர்சியில்லாத தொலைவான இன்னொரு உயர்ந்த /தாழ்ந்த ஸ்கேல் உள்ள கார்டுக்கு ஜம்படிப்பதை "ஸ்கிப்" என்பார்கள், இதனை " disjunct motion" எனக்குறிப்பிடுவார்கள்.
இசையமைப்பாளரின் கற்பனை வளத்துக்கேற்ப ஸ்டெப் அல்லது ஸ்கிப்பில் இசை அமைக்கலாம், இப்படி செய்வதில் "பீட்டில்ஸ்" குழுவினர் வல்லவர்கள்.
பீட்டில்ஸ் கார்டு புராகிரஷனில் அடிக்கும் ஜம்ப்களை படமாக பாருங்கள்,
படம்-1
படம்-2
படம்-3
ஸாஸ்திரிய ஸங்கீதமும் தேவைப்பட்டால் "ஜம்ப்" அடிக்கலாம் என்கிறது , நவீன இசையான ஜாஸ்,ப்ளூஸ், ராக் அன்ட் ரோல், பாப் என எல்லாவற்றிலும் ஸ்டெப்&ஸ்கிப் பயன்ப்படுத்தப்பட்டும் வருகிறது. இவ்வகை இசைகளில் விதிக்கு முக்கியத்துவமில்லை, கேட்க இனிமையாகவும், ஒரு பரவச மனநிலையையும் உருவாக்க வேண்டும்,அதனால் தான் பீட்டில்ஸ் பாடல்களை கேட்பவர்களை உடனே கவர்ந்து ஆட்டம் போட வைத்தது எனலாம்.
இசையமைப்பதில் கார்டு புரகிரஷனில் ஜம்ப்படித்து புதுமை செய்து உலக இசைக்கே பம்ப்படித்தவர் ராசா மட்டுமே என நம்ம ஊரு ஆய்வாளார் ஆகா ஓஹோ என சொல்வதை கேட்டால் பாப் டைலான், பாப் மார்லே, பீட்டில்ஸ் ரசிகர்கள் எல்லாம் காறித்துப்பிட மாட்டாங்கோ :-))
# // 'கார்டு புரோகிரஸ்ஸனில்' [ Chord progression ]
'டிஸ்கார்டு' [ dischord ] என்று ஒதுக்கப்படுபவைகளைக்கூட,
இவர் இனிமையாக கையாள்கிற விதம் ஆச்சரியமானது.
‘ என் வானிலே...ஒரே வெண்ணிலா’ என்ற ஜானி படப்பாடலின் ஸ்வரங்களின் முரனான தொடர்ச்சியும்,
அதன் போக்குகேற்ப புனையப்படும் ‘கார்டு'களின் தொடர்ச்சியும் அலாதியானது.//
மேற்சொன்னது atonal ,disjunct ,dissonance வகை இசையமைப்பே, நியோ கிளாசிக் இசை என்ற வகையில் இவ்வாறு டிஸ்கார்டு நோட்களை பயன்ப்படுத்துவது வழக்கம், இதற்கான பிள்ளையார் சுழியை போட்டது ஜெர்மானிய இசையமைப்பாளர் Richard Wagner(1813-1883) அவரது opera Tristan und Isolde வில் இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் ,எனவே டிஸ்கார்ட் வகை நோட்கள் கொண்ட கார்டினை Tristan chord எனவும் குறிப்பது உண்டு. ஜாஸ் வகை இசையில் அதிகம் டிஸ்கார்டு புழக்கம் உண்டு.
டிஸ்கார்டு இசையை கிருத்துவ தேவாலயங்கள் தடை செய்துள்ளன ,காரணம் டிஸ்கார்ட் இசை சாத்தானை தூண்டும் என்ற நம்பிக்கை எனவே "devil in the music" என்பார்கள். ஆரம்ப காலத்தில் டிஸ்கார்டு இசை அமைக்க தடை இருந்தது, பின்னர் நவீன இசை உருவான காலத்தில் பலரும் டிஸ்கார்டு வகையில் இசை அமைத்துள்ளார்கள்.
இந்திய கர்நாடக இசையிலும் ஒரு ராகத்திற்கு பொருந்தாத (dissonant ) ஸ்வரத்தினை கூட சேர்த்து வாசிக்கலாம், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ஜன்ய ராகத்தினை ஏழு ஸ்வரங்கள் கொண்ட சம்பூர்ண ராகம் போல இசைக்க முடியும்,ஆனால் அவை சம்பூர்ண ராகமல்ல. இவ்வாறு பொருந்தாத ,இல்லாத ஸ்வரத்தினை சேர்த்து வாசிப்பதை "விவாதி ஸ்வரம்" என்கிறார்கள். கர்நாடக ஸங்கீத டிஸ்கார்டு எனலாம்.
//Vivadi swara is a dissonant note, perceived by many in the musical world, to be an enemy note. That is probably the reason why vivadi melas were called ragas with “dosha” (some harmful element like an enemy perhaps!). According to Prof. Sambamurthy, vivadi melas are those scales which take one of the following notes: shatshruti rishabha (R3). Suddha Gandhara (Ga1), shatshruti dhaivata (Dha 3) and suddha nishada (Ni1). There are 40 such ragas which are supposed to have vivadi dosha.//
http://www.carnaticdarbar.com/views_01.htm
# தளபதி திரைப்படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு பாடலில் "குனித்த புருவமும்" என நடுவே கர்நாடக ஸங்கீதத்தினை பயன்ப்படுத்தி புரட்சி செய்துள்ளார் எனவும் சிலாகிக்கிறார் நம்ம ஆய்வாளர், திரை இசை என்பதே கலவையான இசை எனும் நிலையில் கர்நாடிக் வந்தால் என்ன இந்துஸ்தானி வந்தால் என்ன அதெல்லாம் புரட்சியா?
இதில் என்ன காமெடினா இப்படிலாம் ஃபியுஷன் செய்வது ரொம்ப நாளா உள்ள ஒன்று ,மேற்கத்திய பாப் இசையில் இப்படி செய்வதை "கவுண்டர் கல்ச்சர்" இசை என்கிறார்கள் இதனை "psychadelic pop" இசை எனவும் சொல்கிறார்கள்.
பீட்டில்ஸ் இசையமைத்த Rubber Soul.(1969) ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள "Norwegian Wood (This Bird Has Flown)" என்ற பாடலில் நடுவே இந்திய சிதார் இசையை பயன்படுத்தியுள்ளார்கள்.
எனவே விதிகளே இல்லாத திரையிசையில் கர்நாடிக் இசையை நடுவே பயன்ப்படுத்தியது எல்லாம் இனிமையான விதி மீறல் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதில் பொருளே இல்லை :-))
-----------------------------------
இங்கே சில இசைக்கோர்வைகளை கொடுக்கிறேன் இதெல்லாம் எங்கேயோ கேட்டாப்போலவே இருக்கும் எங்கே கேட்டிங்கனு கொஞ்சம் கண்டுப்பிடிச்சு பாருங்க :-))
# George Bizet's 1897,'Carillon' (Allegro moderato).
-------------
# Kites by Simon Dupree(1967)
--------------
Lady in Black - Uriah Heep(1970)
------------------------
'Cancione et Danza: 2. Danza'- Antonio Ruiz-Pipo'
---------------
பூகி ஓகி ராக் அன் ரோல்.
---------
இசையை ரொம்ப தோண்டியாச்சு இந்த நடனங்களைப்பார்த்து கொஞ்சம் குதுகலம் அடையுங்கள்,இதெல்லாம் சின்ன சாம்பிள்கள் தான் ,நம்ம ஊரு நடனப்புயல்கள் எல்லாம் எங்கே இருந்து சுடுறாங்கன்னு புரிஞ்சுக்கலாம்.
செம டான்ஸ்.
---------------
டொனல்ட் கானார்ஸ் பலூன் டான்ஸ்.
-------------------
பின் குறிப்பு:-1
கி.பி 1976 இல் அன்னக்கிளி படத்தில் தொடங்கி, 90 களின் ஆரம்பம் வரையில் தமிழ் திரையுலகில் இசை ராஜ்யம் நடத்தியவர் தான் இளையராசா என்பதில் எந்த மாற்று கருத்தேயில்லை,ஆனால் அவர் இசையமைத்து தான் இசைக்கே ஒரு முகவரி கிடைத்தது என்பது போல சிலர் இணையங்களில் விதந்தோம்பி கடை பரப்பி வருவது உண்மையில் ஒரு நல்ல திரையிசை கலைஞருக்கு பெருமை சேர்க்க போவதில்லை, ஏன் எனில் திரையிசை என்பது கலவையான ,விதிகளற்ற இசை அமைப்பு,அங்கே விதிகளே இல்லாத போது இது போல சாஸ்திரிய இசையின் விதியை மீறி இருக்கிறார், புதுமை படைத்திருக்கிறார் என சொல்வது இசையே தெரியாமல் சொல்வதாகும்.
இப்படி நான் பதிவெழுதக்காரணம் எனக்கும் ராசாவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு என நினைத்துக்கொள்ள வேண்டாம், அடியேன் ராசாவின் கோல்டன் ஹிட்ஸ் எனப்படும் 80 களின் திரையிசைப்பாடல்களின் தீவிர ரசிகன், எனது வாகனம், கைப்பேசி என அனைத்திலும் சுமார் 200 அருமையான ராசாவின் பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.
ராசாவின் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு சிலர் தாங்களாகவே மிகைப்படுத்தி பேசிக்கொண்டு அவருக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து சிறுமை சேர்க்கிறார்கள், அவர்களுக்கும் தங்களது அபிமான நடிகரின் படம் வெளியானதும் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் பாமர ரசிகனுக்கும் பெரிதும் வேறுபாடில்லை, இத்தகைய விசிலடிச்சான் குஞ்சு ரசிக மனப்பான்மையை "sycophancy" எனப்படும் தீவிர ரசிக அடிமை மனப்பான்மை எனலாம், இவ்வாறான ரசிகர்கள் தங்கள் ஆதர்ஷம் எது செய்தாலும் உன்னதம் என கொண்டாடி , அவர்களின் ஆதர்ஷத்தின் புகழை கூட்டுவதற்கு பதில் குறைக்கவே செய்கிறார்கள் , இணையத்தில் ராசாவிற்கு இம்மாதிரியான ரசிக சிகாமணிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது இருக்கும் ஒரு சிலர் மீண்டும் மீண்டும் வெற்று புகழ் மாலை பாடிக்கொண்டிருக்கிறார்கள், அவற்றை எல்லாம் சற்றே நிறுத்திக்கொண்டால் சேதாரம் தவிர்க்கப்படும் இல்லை எனில் என்னைப்போல் பலர் எதிர் வினையாற்றக்கிளம்பினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா தான்.
----------------
பின் குறிப்பு:-2
தகவல் மற்றும் படங்கள் உதவி,
http://worldcinemafan.blogspot.in/2013/05/5.html
http://www.seechord.co.uk/song-writing/secrets-of-the-beatles/
http://en.wikipedia.org/wiki/Rubber_Soul
http://en.wikipedia.org/wiki/R%26B
http://en.wikipedia.org/wiki/Clave_(rhythm)
http://en.wikipedia.org/wiki/Guajeo
http://en.wikipedia.org/wiki/Non-harmonic_arpeggio#Melodic_triad
http://en.wikipedia.org/wiki/Melodic_motion
http://en.wikipedia.org/wiki/Disjunct_(music)
http://en.wikipedia.org/wiki/Coltrane_changes
http://en.wikipedia.org/wiki/Tritone_substitution
http://en.wikipedia.org/wiki/Tristan_chord
http://www.greenwych.ca/example.htm
http://www.newworldencyclopedia.org/entry/Atonality
கூகிள் படங்கள்,நன்றி!
--------------------------------------