Thursday, October 25, 2007

உங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவதேன்?






நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, இதனால் சுற்று சூழல் பாதிப்பு, அதிக சத்தம் எல்லாம் வருகிறது. யோசித்து பாருங்கள் அத்தனை வாகனத்திலும் புகைப்போக்கி ,ஒலிக்குறைப்பான்(exhaust silencer) இல்லாமல் இருந்தால் என்ன ஆகும்.எல்லார் காதும் கேட்க்காது ஆகிடும்.விமானங்களில் புரொப்பெல்லர் வகை சிறிய விமானங்களுக்கு மட்டும் புகைப்போக்கி ஒலிக்க்குறைப்பான் உண்டு.கப்பல்களிலும் உண்டு.

நம்ம வாகனம் சத்தம் போடாமல் ஓட உதவும் புகைப்போக்கி ஒலிக்குறைப்பான் எப்படி செயல் படுகிறதுனு பார்ப்போம்.நம் வாகனத்திலே இருக்கும் பாகங்களில் நமது கவனத்தினை குறைவாக பெருவது இது தான் , ஆனாலும் நிறைவான வேலையை செய்வது.

ஒரு வாகன எஞ்சினில் அதிக அழுத்தத்தில் காற்றுடன் எரிப்பொருள் கலக்கப்பட்டு பற்ற வைக்கப்படுகிறது, அதன் மூலம் கிடைக்கும் விசையே வாகனம் ஓடப்பயன்படுகிறது.

எரிப்பொருள் காற்றுக்கலவை பற்றவைக்கும் போது அது கிட்டத்தட்ட ஒரு வெடிக்குண்டு போல சத்தம் எழுப்பும், எரிந்ததும் வரும் புகையை வெளியேற்றினால் தான் அடுத்த சுற்றுக்கு எஞ்சின் தயாராகும். அந்த புகை கிட்ட தட்ட 1200 C வெப்ப நிலையில் இருக்கும். அதிக அழுத்தத்துடன் வெளிவரும் புகை விரிவடைவதால் பலத்த சத்தத்துடன் புகை வெளிவரும். இந்த ஓசையுடன் வாகனத்தை ஓட்ட முடியாது என குறைக்கப்பயன் படுவது தான் புகைப்போக்கி ஒலி குறைப்பான். இதனை சைலன்சர் என்று சொன்னாலும் "muffler" என்று சொல்வது தான் சரியான சொல்லாகும்.

இனி ஒலிக்குறைப்பான் என்றே சுருக்கமாக சொல்வோம், அது செயல் படும் விதத்தினை பார்ப்போம்.

ஒலிக்குறைப்பான்கள் செயல்படும்விதம்.

1) ஒலி உறிஞ்சுதல்
2)ஒலி எதிரொலித்தல்,
3)ஒலி தடுத்தல்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ , அல்லதும் மூன்றும் இணைந்தோ ஒரு ஒலிக்குறைப்பான் செய்யப்படும். அது வாகனத்தின் தன்மை, செலவிடும் தொகைக்கு ஏற்ப மாறும்.

ஒரு சிலிண்டர் , பல சிலிண்டர்கள் உள்ள எஞ்சின்கள் உள்ளது, அவற்றை ஒரு குழாய் மூலம் ஒன்றாக இணைத்து(exhaust port and manifold) ஒலிக்குறைப்பான் பகுதிக்கு கொண்டு வந்து விடுவார்கள்.இனி ஒலிக்குறைப்பான் உள்ளே செல்வோம்.

ஒலிக்குறைப்பான் உள்ளே ஒரு குழாயில் சிறு துளைகள் இட்டு அதன் மீது கண்ணாடி இழைகள்( glasswool)கொண்டு சுற்றி அதன் மூலம் புகையை வர வைப்பார்கள். ஒலியை கண்ணாடி இழை உறிஞ்சி குறைக்கும், மேலும் புகையின் அழுத்தம் குறைவிக்கப்படும். அதன் பின்னர் புகை வெளியேற்றப்படும் . இதில் நேரானப்பாதை , எதிர்ப்பாதை வெளியேற்றம் என்ற இரண்டு முறை இருக்கிறது.
நேர்ப்பாதை புகைப்போக்கி

ஓரே குழல் மூலம் புகை உள்ளே வந்து வெளியேருவது நேரானாது. ஒரு குழல் மூலம் வந்த புகை, அதனுடன் தொடர்பில்லாத மற்றொரு குழல் மூலம் வெளியேற்றப்படுவது,இதில் புகை சுற்றுப்பதையில் செல்வதால் ஒலியின் வலிமை அதிகம் குறையும். எதிர்ப்பாதை புகைப்போக்கி

மேற் சொன்ன முறையில் ஒலி உறிஞ்சுதல், தடுத்தல் என்ற இரண்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கும்.

கண்ணாடி இழையை விட அதிக பயன் உள்ள ஒலிக்குறைப்பான், ரெசனோட்டர்(resonator) வகை ஒலி எதிரொலித்தல் ஒலிக்க்குறைப்பான் ஆகும்.

இதில் புகை சிறு துளைகள் உள்ள குழாய் மூலம் ரெசனோட்டர் அறை என்ற ஒன்றின் உள் செலுத்தப்படும், அந்த அறையில் சில பள்ளங்கள்/புடைப்புகள் இருக்கும் அதில் பட்டு எதிரொலிக்கும் ஒலி சரியாக உள்ளே வரும் ஒலியின் கட்டத்திற்கு(phase) எதிரான கட்டத்தில் உள்ள ஒலியாக(opposite phase) இருக்கும். இரண்டு ஒலி அலைகளும் ஒன்றின் மீது ஒன்று மோதி வலுவிழந்து விடும். பின்னர் புகை அடுத்த அறைக்கு எடுத்து செல்லப்பட்டு நேர் குழல் அல்லது எதிர்ப்பாதை குழல் வழியாக வெளியில் எடுத்து செல்லப்படும்.

எல்லா வகை ஒலிக்குறைப்பானிலும் குறுகிய குழாயில் வரும் புகை அகன்ற ஒலிக்குறைப்பானுக்கு வரும் போது மெதுவாக விரிவடைய வைப்பதன் மூலம் அழுத்தம் வெப்பம் குறையும், மேலும் ஒலியை வலுவிழக்க செய்ய சுற்றுப்பாதை , ஒலி உறிஞ்சும் பொருள், எதிர்க்கட்ட ஒலியை கொண்டு ஒலியை குறைத்தல் ஆகியவற்ற்றின் அடிப்படையில் தான் எல்லாவகை ஒலிக்குறைப்பான்களும் செயல் படுகிறது.

எஞ்சினின் திறனுக்கு ஏற்ப ஒலிக்குறைப்பானின் குழல் நீளம், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள்,வடிவம் மாறும் , இல்லை எனில் ஒரு எதிர் அழுத்தம் (back pressure)ஏற்பட்டு புகை மீண்டும் எஞ்சினுள் செல்லும், அது எஞ்சினைப்பாதிக்கும்.அப்படி எதிர் அழுத்தம் ஏற்படாமல் இருக்க எஞ்சினின் சக்தியைக்கொண்டு ஒரு விசையை ஒலிக்குறைப்பானுக்கு தருவதை டர்போ சார்ஜிங் என்பார்கள்.

சிறிய வாகனங்களில் ரெசனோட்டர் அறை,எல்லாம் ஒரே குழல் உள்ளேயே வைத்து இருக்கும். கார் போன்ற வாகனங்களுக்கு தனியே அடுத்தடுத்து புகைப்போக்கியின் பாதையில் இருக்கும்.வெளிநாட்டுக்கார்கள் சத்தம் குறைவாக இயங்க காரணம் அவர்கள் பொருத்தும் ரெசனோட்டரின் தரம் தான் காரணம்.

தற்போது ரெசனோட்டரில் எதிரொலி மூலம் ஒலியை மட்டுப்படுத்துவதற்கு பதில் ஒரு மின்னணு கருவி மூலம் ஒரு எதிர்க்கட்ட ஒலியை உருவாக்கி புகை,ஒலி வரும் திசைக்கு எதிரில் அனுப்பி ஒலியை வலுவிழக்க செய்து குறைக்கலாம் எனக்கண்டுப்பிடித்துள்ளார்கள். இம்முறை இன்னும் வாகனங்களில் நடைமுறைக்கு வரவில்லை.
காரின் புகைப்போக்கி அமைப்பு

கார்களுக்கு கூடுதலாக கேட்டலிடிக் கன்வெர்டெர் என்ற அமைப்பும் இருக்கும்.இதில் பல்லாடியம், பிளாட்டினம், ரோடியம் கலவையின் பூச்சு கொண்ட சிறு துளைகள் கொண்டபீங்கான் தகடுகள் இருக்கும் .இதனை ஒரு துருப்பிடிக்காத கலத்தினுள் வைத்திருப்பார்கள். இதன் வழியே புகை செல்லும் போது , சரியாக எரியாத எரிப்பொருளையும், நைட்ரஜன் ஆக்சைடு , கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றை மீண்டும் ஆக்சிஜன் ஏற்றம் செய்து காற்று மாசுபடுதலைக்குறைக்கும். தற்போது இரு சக்கர வாகனத்தின் புகைப்போக்கியிலும் கேட்டலிடிக் கன்வர்டர் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இதனை மாற்ற வேண்டும்.
கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள் அமைப்பு

13 comments:

வடுவூர் குமார் said...

வாவ்! அருமை.

Anonymous said...

நீர் அந்தக்காலத்துல ஒழுங்கா அறிவியல் படிக்காம வகுப்பை கட் அடிச்சிட்டு இப்பொ வலைப்பதிவில அடுத்தவங்களுக்கு க்ளாஸ் எடுக்கிறீரா? இதெல்லாம் கொஞ்சம் ஓவராவே தெரியல?

வவ்வால் said...

குமார்,
நன்றி!
--------------
மு.காளை,

எதுக்கு சாமி இந்த கொலை வெறி! இப்படி ரகசியத்த எல்லாம் வெளில பொதுவா சொல்லலாம, எதுவா இருந்துலாம் பேசி "தீர்த்துக்கலாம்"

சிவபாலன் said...

வவ்வால்

கலக்கல்..!

பைக் படம் போட்டிவிட்டு காரைப் பற்றி விளக்க்க்ட்டீங்கன்னு நினைக்கிறேன்.

ஒரு கார் படமும் வலையேற்றுங்களேன்..!

நல்ல பதிவு!

நன்றி!

Anonymous said...

பொண்டாடி அல்லது மாமியாரை ஏத்திக்கிட்டு போனா அவங்க தொண தொணப்பைவிட வண்டிச்சத்தம் எவ்வளவோ மேல் எனத் தோணும்.

புள்ளிராஜா

வவ்வால் said...

நன்றி ,
முரளி கண்ணன்,
---------------
சிவபாலன்,
நன்றி!
கார், பைக் என பொதுவாக சைலன்சர் பற்றி சொன்னது தான் இது. எல்லா சைலன்சரும் செயல் படும் விதம் இது தான். கார் படம் போடனும்னா போட்றலாம்!
--------------
புள்ளி ராஜ ,
நன்றி,
அனுபவஸ்தர் சொல்றிங்க தப்பாவா இருக்க போகுது! :-))

ராஜ நடராஜன் said...

வண்டில உட்கார்ந்தோமா சாவி குடுத்தோமா ரெடி!ஸ்டார்ட் சொன்னோமான்னுதான் பொழப்பே ஓடுது.இனிமேலதான் நேர்நோக்கி,எதிர் நோக்கி விசயமெல்லாம் கண்டுபிடிக்கனும்.

வவ்வால் said...

நட்டு,
நன்றி,
அமைதியான வாழ்கை மட்டும் இல்லை அமைதியான வண்டி ஓட்டமும் வேணும்ல!

வடுவூர் குமார் said...

இந்த மாதிரி வெளியிடும் புகையை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது? என்று தெரிந்துகொள்ள ஆவல்.
இந்தூரில் பல வண்டிகளில் வெண் புகை தான் வருகிறது!!

SurveySan said...

Good one!

appadiye, gear pathiyum onnu podungalen ;)

வவ்வால் said...

குமார்,

புகை வராம வண்டி ஓட்ட முடியாது! ஆனால் அதன் அளவை குறைக்கலாம், அதற்கு தான் கேட்டலிடிக் கன்வெர்டெர்லாம் பயன்படுத்துவது.மேலும் ஏர் பில்டர், சரியான எஞ்சின் ஆயில் எல்லாம் பயன்படுத்த வேண்டும்.பொதுவாக பில்டர், ஆயில், கேட்டலிடிக் கன்வெர்டெர் இவைகளை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்ற வேண்டும், பணம் சேமிக்க அதை செய்வதில்லை நாம்.எஞ்சினில் ஏற்படும் தேய்மானமும் புகை அதிகம் வர வைக்கும்.

மேலும் எஞ்சினில் எரிபொருள் நன்றாக எரிய வேண்டும் ,அதற்கு தான் இப்போது மல்டி பாயிண்ட் இஞ்ஜெக்ஷன், எலெட்ரானிக் டைமின்ங் கண்ட்ரோலர் எல்லாம் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

புகை அளவைக்குறைக்க ஒட்டு மொத்தமா எஞ்சினையே மேம்படுத்த வேண்டும்.

வவ்வால் said...

சர்வேசன்,
நன்றி!

கியர் பற்றி சொல்வது என்றால் எதை சொல்வது என்று சிக்கல் வருமே, வாகனங்களில் இருப்பது, எந்திரங்களில் இருப்பது .. என பல வகை இருக்கு. சைலைன்சர் எப்படி சத்தம் குறைக்கிறது என்பது தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் மக்களுக்கு. கியரில் என்ன இருக்கப்போகிறது என்று நினைப்பார்கள்.தேவைப்பட்டால் ஒரு பதிவை போட்டு விடலாம் , ஒரு பதிவு அளவுக்கு சுருக்கிப்போட வேண்டும்,முயற்சி செய்கிறேன்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.