Tuesday, March 18, 2008

ville noire -அடிமை சின்னம்!

பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியின் வரலாற்றினை தற்செயலாகப் மீண்டும் படிக்க நேரிட்டது அதில் இருந்து சில ஆர்வம் தூண்டும் செய்திகளும் நெருடலான சில உண்மைகளும் எனக்கு புலப்பட்டது.

இதிகாச காலத்தில் அகத்தியர் தான் புதுவையை உருவாக்கியவராம் , இங்கே ரோமானியர்கள் எல்லாம் வந்து யாவாரம் செய்துள்ளார்கள். பின்னர் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு , விஜயநகர மன்னர்கள் வசம் வந்து , அதன் பின்னர் ஆர்காட் நவாப் வசம் வந்து சிறிது காலம் இருந்துள்ளது.

நாடு பிடிக்கும் ஆசையில் பல அய்ரோப்பிய நாடுகளும் மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிய காலத்தில் இந்திய கரையோரம் ஒதுங்கி பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியினரை புதுவை பகுதியை வளைத்துப்போட்டார்கள் 1673 இல், 1693 இல் டச் காரர்கள் சண்டைப்போட்டு புதுவையை பிடித்தார்கள் பின்னர் ரிஸ்விக் ஒப்பந்தம்மூலம் மீண்டும் 1699 இல் பிரஞ்ச் வசம் வந்தது.

அதன் பின்னர் நடந்த ஆங்கில - பிரஞ்ச் சண்டைகளின் போது அடிக்கடி கை மாறி இருக்கு. கடைசியாக பிரஞ்ச் கம்பெனி வசமே வந்து சேர்ந்தது.பிரஞ்ச் ஆண்ட போது புதுவையில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிக்கு வச்ச பேரு தான் "ville noire" அப்படினா கருப்பு நகரமாம், பிரஞ்ச் காரங்க வசித்த பகுதிக்கு"ville blanche" வெள்ளை நகரமாம்.

இந்திய சுதந்திரப்போர் நடைப்பெற்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப்போன பிறகும் புதுவை பிரன்ச் காலனியாகவே இருந்தது. அப்போதைய இந்திய தலைவர்களும் புதுவை சரியாக்கண்டுக்கலை போல.

அதன் பிறகு தனியா ஒரு புதுவை சுதந்திர போராட்டம் நடத்தி பிரஞ்ச் காரங்களும் புதுவையை சுதந்திர இந்தியாவுடன் சேர்த்து வைத்துவிட்டு கிளம்ப 1954 இல் தான் தயாரானார்கள் . அப்போ சுதந்திரம் அடைந்தாலும் 1963 வரைக்கும் முழுமையா சுதந்திரம் அடையாம இழுத்துக்கிட்டே போய் இருக்கு.

1963 இல் தான் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது, அதுவரைக்கும் பிரஞ்ச் அரசிடம் வேலைப்பார்த்த இந்தியர்களுக்கு என்ன தான் கருப்பர்கள், அடிமைகள்னு பிரஞ்ச் எஜமான்கள் சொன்னாலும் அவங்களை நாட்டை விட்டு போக சொல்ல மனசே வரலை. நீங்க போனா நாங்களும் உங்க கூடவே வந்திடுறோம்னு ரொம்ப ராஜ விசுவாசம் காட்டி இருக்காங்க, அப்படிக்காட்டினவங்க எண்ணிக்கை ஒரு 10,000 சொச்சம் இருக்கும். ஒரு பக்கம் பல ஆயிரம் பேர் உயிரைக்கொடுத்து பிரஞ்ச் அரசை துறத்த போராடினால் இப்படியும் ஒரு கூட்டம் அங்கே இருந்து இருக்கு.

ஏகாதிபத்திய சக்தியா இருந்தாலும் , தன்னோட அடிமைகள் மேல அக்கரைக்கொண்ட அரசா பிரஞ்ச் அரசாங்கம், எங்கக்கிட்டே சேவகம் பார்த்தவர்கள் யார் யார் எல்லாம் பிரஞ்ச் குடியுரிமை வேணுமோ அவங்களை எல்லாம் எங்க நாட்டுக்காரங்களா அங்கிகரிக்கணும்னு இந்திய அரசாங்கத்தோட ஒரு கேவலமான ஒப்பந்தம் போட்டார்கள், அதன் படி ஒரு 10,000 பேரு பிரஞ்ச் நாட்டுக்குடியுரிமை வாங்கிட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார்கள், அதிலும் சில மானஸ்தர்கள் இருந்து இருக்காங்க எங்களுக்கு பிரஞ்ச் குடியுரிமை வேண்டாம்னு சொல்லி இருக்காங்க, அது சில 100 பேர்கள் தான்.

பிரஞ்ச் குடியுரிமை பெற்றவர்களுக்கு அப்போவே ஒரு வசதி செய்து தரப்பட்டிருந்தது , விருப்பப்படும் வரைக்கும் இந்தியாவில் இருந்துக்கொள்ளலாம் தேவைப்படும் போது பிரான்ஸுக்கு போய்க்கொள்ளலாம்.இங்கே இருக்கும் முன்னாள் காலனி இந்தியாவை சேர்ந்த பிரஞ்ச் சேவகம் செய்தவர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் பிரஞ்ச் அரசு வழங்கும்.அந்தஓய்வூதியத்தை வாங்கிட்டு இங்கேவே சொகுசா அவர்கள் வாழ்ந்தார்கள். இங்கேயே கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டு படிப்பெல்லாம் முடித்துக்கொண்டு பிறகு நேரா பிரான்ஸுக்கு போய் அங்கே வேலை கேட்டு வாங்கிக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஏன் அப்படி செய்றாங்கனா பிரான்ஸில் ஒரு சட்டம் இருக்கு அனைவருக்கும் அரசு கண்டிப்பா வேலை தரணும் , அதனால் பெரும்பாலும் கட்டாய ராணுவ சேவைனு சில ஆண்டுகள் வேலை தந்துடுவாங்க, பிறகு நல்ல வேலைக்கு அரசே ஏற்பாடு செய்யும். வேலைக்கிடைக்கவில்லை எனில் அது வரைக்கும் உதவி தொகை தரும்.

இதை எல்லாம் படித்த போது எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது. இந்தியா விடுதலை அடைந்தபோது இப்படி ஏன் ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை தரவில்லை. இல்லை மக்கள் கேட்கலையா ?

மேலும் நாட்டை விட்டுப்போ என்று போராடி தொறத்திட்டி எப்படி எனக்கு குடியுரிமை குடுனு புதுவை ஆட்கள் வெட்கம் இல்லாமல் கேட்டாங்க?

எனக்கு என்ன தோன்றுகிறதுனா , ஆங்கிலேயர்கள் போனபிறகு சில ஆண்டுகள் கழித்து தான் பிரஞ்ச் விடுதலை கிடைத்தது. அப்போ சுதந்திர இந்தியாவில் முன்னாள் ஆங்கில அரசு ஊழியர்களுக்கு கிடைத்த சம்பளத்தை பார்த்து இருப்பாங்க , புதுவையில் வாங்குவதை விட ரொம்ப கம்மியா இருந்து இருக்கும், ஆஹா இந்த வேலையை விட்டா காசு தேறாதுனு , நீங்க போனாலும் நாங்க உங்க குடிமக்களா இருக்கப்பிரியப்படுறோம்னு சொல்லி காரியம் சாதித்துக்கொண்டார்கள் போலும்.

இந்தியர்கள்னு சொல்லிக்கிறதை விட காசு பெருசா போய் இருக்கு அந்த சில மக்களுக்கு மட்டும், அப்படி பணத்திற்காக நாட்டை மாற்றிக்கொண்டவர்கள் வழி வந்த வாரிசுகள் இப்போவும் பிரான்சில் நாம் இன்னும் காலனி ஆதிக்க சின்னத்தை துறக்காமல் சுமந்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் தமிழனோ , தமிழச்சியோ தங்கள் இழிவு நீங்க காலனி ஆதிக்க அடிமை சின்னத்தை துறக்க வேண்டாமா?

21 comments:

TBCD said...

அட, இந்திய அரசாங்கம் செயல்பாடுகளைப் பார்த்துட்டு அப்படிக் கேட்டாங்களோ..

கருப்பு நகரம் என்பது இழிவா..

கருப்பர்கள் தானே நாம்..

பு.த.செ.வி (வவ்வால் பழுப்பு நிறம் என்று ஓட்ட வேண்டாம்.. :P )

உண்மைத்தமிழன் said...

வவ்ஸ்..

யார் வந்து நீ என் அடிமைன்னு சொல்லி காசு கொடுத்தா வேலை செய்ற அளவுக்குத்தான் அப்போ நம்ம மக்களுக்கு ஆக்கம் இருந்திருக்கு..

ஆள்வதற்கான அறிவும், திறனும், திறமையும் இல்லாததால்தான் நம் மக்கள் பலருக்கும் அடிமையாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

ம்.. இப்ப நினைச்சு என்ன புண்ணியம்..?

அறிவின் மகத்துவம் அதன் பின்தானே நமக்குத் தெரிந்தது..

இன்னமும் விரிவாக புதுவையின் வரலாறு பற்றி எழுதியிருக்கலாம்..

நான் புத்தகத்தில் நிறைய படித்திருக்கிறேன்.. உங்களுடைய கதைச் சுருக்கம் எனக்குப் பிடிக்கவில்லை.

வவ்வால் said...

திபிசிடி,
//அட, இந்திய அரசாங்கம் செயல்பாடுகளைப் பார்த்துட்டு அப்படிக் கேட்டாங்களோ..
//

இந்தியாவின் செயல்பாட்டை பார்த்துட்டு இல்லை சம்பள விகிதத்தைப்பார்த்துட்டு தான் அப்படி நாடு மாறிக்கிட்டாங்க.

//கருப்பு நகரம் என்பது இழிவா..

கருப்பர்கள் தானே நாம்..//

ஆமாம் கருப்பு என்று நிறத்தை வைத்து சொல்வது "racial abuse" கருப்பர்கள் வாழும் இடம் என்று நகரத்தை பிரித்து வைத்திருந்தது இழிவு படுத்தும் செயலே.

அப்படி அடிமைப்படுத்தி வைத்திருந்தவனை போராடி நாட்டை விட்டு தொறத்தும் போது ஏன் காசுக்காக மீண்டும் அவன் நாட்டுக்குடியுரிமை கேட்கணும் அதுக்கு போராடாமல் இருந்து இருக்கலாமே.

----------------------------

உண்மைத்தமிழர்,

இது முழு புதுவை வரலாறு அல்ல , சுதந்திரம் வாங்கும் போது புதுவையில் ஏற்படுத்தப்பட்ட ஒம்பந்தத்தை மட்டும் அலசும் பதிவு.

//ஆள்வதற்கான அறிவும், திறனும், திறமையும் இல்லாததால்தான் நம் மக்கள் பலருக்கும் அடிமையாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.//

இது சரியா? அடிமையா இருக்கிறோம் என்று உணர்ந்து விடுதலைக்காக போராடியாச்சு , அவனும் நாட்டை விட்டு போகிறேன் என்று கிளம்பிட்டான், பிறகு ஒரு கூட்டம் மட்டும் நாங்கள் அடிமையாக இருந்தாலும் பரவாயில்லை, உங்கள் குடியுரிமை கொடுங்கள் போதும் என்கிறதே ஏன்?

பிரெஞ்ச்காரனை வெளில போடானு கழுத்தையும் பிடித்து தள்ளிட்டு அப்புறம் என்ன அவன் மீது விசுவாசம் , காசு அதிகம் கிடைக்கும் என்பதை தவிர!

TBCD said...

ஊகம் தானே..இது...

///
வவ்வால் said...
இந்தியாவின் செயல்பாட்டை பார்த்துட்டு இல்லை சம்பள விகிதத்தைப்பார்த்துட்டு தான் அப்படி நாடு மாறிக்கிட்டாங்க.///


அவனையும் வெள்ளை கிராமம் என்று தான் வைச்சிக்கிட்டான், மனிதர்கள் வாழும் ஊர் என்று வைக்கவில்லையே..

கருப்பு என்றுப் பிரித்தால், அது இழிவு செய்தல் இல்லை. காலனித்துவம் இருந்த நாடுகளில் எல்லாமே, வேற்றூ இன மக்களை பிரித்தே வைத்திருக்கிறார்கள்.அது ஆளுகை செலுத்த, வசதியாக இருக்கும் என்று.

கருப்பு என்றால் இழிவு என்று நீங்களும் சொல்வது போல் இருக்கு..

///
ஆமாம் கருப்பு என்று நிறத்தை வைத்து சொல்வது "racial abuse" கருப்பர்கள் வாழும் இடம் என்று நகரத்தை பிரித்து வைத்திருந்தது இழிவு படுத்தும் செயலே.

///

வவ்வால் said...

திபிசிடி,

யூகம் என்றாலும், பின்னர் வேறு என்ன காரணத்திற்காக போராடி தொறத்திய நாட்டின் குடியுரிமையை கேட்டார்கள், அதிலும் பிரஞ்ச் காலனிக்கால அரசு ஊழியர்களில்ல் சிலர் அந்த உரிமை வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

//கருப்பு என்றுப் பிரித்தால், அது இழிவு செய்தல் இல்லை. காலனித்துவம் இருந்த நாடுகளில் எல்லாமே, வேற்றூ இன மக்களை பிரித்தே வைத்திருக்கிறார்கள்.அது ஆளுகை செலுத்த, வசதியாக இருக்கும் என்று.//

அப்போ இழிவு செய்தல் இல்லைனு சொல்றிங்களா? தென் ஆப்பிரிக்காவில் முதல் வகுப்பில் காந்தி பயணம் செய்த போது என்ன காரணத்திற்காக இறக்கி விடப்பட்டார்(தூக்கி எறியப்பட்டார்) அதன் விளைவே மகாத்மா என்னும் சுதந்திர போராட்ட வீரர் உருவாக காரணம்.

உங்களுக்கு மட்டும் எப்படி அது நிர்வாக செயல்பாடுனு தோணுது :-))

Anonymous said...

The topic you have touched is a sensitive one, as (1) there is truth in it and (2) it is applicable to almost everyone who go abroad for earning and settle there.

So, many may not react to this.

Anonymous said...

சரியான கேள்வி வவ்வால்.ப்ரான்சு போன தமிழர்கள் தமிழ் அடையாளத்தையோ கலாச்சாரத்தையோ கடைப்பிடிப்பதில்லை. பிரான்சு குடிமகன் மாதிரியே வாழ முயற்சிசெய்கிறார்கள். உண்மையில் இது ஒரு கேடுகெட்டதனம்.

நம்ம தமிழச்சிய எடுத்துகொள்ளுங்கள். எதாச்சும் சொல்லிட்டா எனக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்லுது.

அவர்களுக்கு அதில் ஒரு பெருமை.வயத்தெரிச்சலாத்தான் இருக்கு.

அடுத்த கொடுமை இதை சொந்த பெயரில் சொல்ல முடியாதது. சொல்லிட்டு ஒரு இழவும் புரியாமல் அது திட்டுவதை வாங்கிக்க முடியாது.

ஆனா வவ்வாலுக்கு தில்லுதான்
//அவர்கள் தமிழனோ , தமிழச்சியோ தங்கள் இழிவு நீங்க காலனி ஆதிக்க அடிமை சின்னத்தை துறக்க வேண்டாமா?//

இங்க ஒரு குத்து குத்திட்டாரு.

Anonymous said...

"யாருடா அடிமை சின்னம்" ன்னு தமிழச்சிகிட்ட இருந்து ஒரு பதிவ எதிர்பார்க்கிறேன்

வவ்வால் said...

நிறைய அனானி அப்ரண்டிஸ்கள் வந்து இருக்காங்களே , அப்புறமா அனானி பேருல வந்த பின்னூட்டத்தை வெளியிட்டு அல்ப சுகம் தேடிய வவ்வால்னு என்னை தானே கும்மும் ஒரு கூட்டம் :-))

ஆங்கில அனானி,
உண்மை இருக்குனு சொன்னதுகு ஒரு நன்றி!

இதை வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்று பின்னர் அங்கே தங்குவதுடன் ஒப்பிட முடியாது.

ஏன் எனில் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றப்போது அப்படி குடியுரிமை வாங்கிக்கொள்ளவில்லை. பின்னர் வேண்டாம் என்று வெளியே போக சொல்லும் அன்றே எங்களுக்கு குடியுரிமை தந்துடுங்க எசமான் என்று புதுவையில் மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டார்கள்.அப்படி எனில் போராடியதற்கு என்ன அர்த்தம்.

இங்கே கேள்வியே சுதந்திரம் வாங்கும் போது ஏற்பட்ட செயலுக்கு தான்! அதுவும் அடிமைத்தளையின் சின்னம் மாற வேண்டாம் என்று நினைக்கும் வகையில் இருப்பது.

புதுவையில் இருக்கும் பிரெஞ்ச் மக்கள் இங்கே இருந்துக்கிட்டே பிரெஞ்ச் தேர்தலில் வாக்கு போடும், ஆனால் இங்கே நடக்கும் தேர்தலுக்கு போட முடியாது, ஆனால் இந்திய அரசியலை என்ன அரசியல்னு பேசுவார்கள் , இந்தியா முன்னேறாதுனு பேசுவார்கள்!

------------------------

அனானி2,
//அடுத்த கொடுமை இதை சொந்த பெயரில் சொல்ல முடியாதது. சொல்லிட்டு ஒரு இழவும் புரியாமல் அது திட்டுவதை வாங்கிக்க முடியாது.//

ரொம்ப பயந்து போய் இருக்காப்போல தெரியுதே!

தமிழர்கள் உயர்வு பெற,இழிவு நீங்க அது பிரான்ஸ் வாழ் புது(மை)வை தமிழர்களா இருந்தாலும் நாமளும் வழி சொல்லணும்ல அதான் சொல்லிட்டேன்!
-------------------------------
அனானி3,
//"யாருடா அடிமை சின்னம்" ன்னு தமிழச்சிகிட்ட இருந்து ஒரு பதிவ எதிர்பார்க்கிறேன்//

இவ்வளோ டீசண்டா எல்லாம் தலைப்பு வருமா என்ன :-))

கோவி.கண்ணன் said...

வவ்ஸ்,

பிரெஞ்ச் குடியுருமை பற்றி இவ்வளவு தகவல் இருக்கிறதா ?

இன்று உங்கள் இடுகையைப் படித்து தான் இது பற்றி சிறிதாவது அறிந்து கொண்டேன்.

வவ்வால் தகவல்கள் என்றைக்குமே அசத்தால் தான்.
பின்னே குறை எதும் சொன்னால் பின்னிடமாட்டிங்களா பின்னி ?
:))

வவ்வால் said...

கோவி,
நன்றி!
//வவ்வால் தகவல்கள் என்றைக்குமே அசத்தால் தான்.
பின்னே குறை எதும் சொன்னால் பின்னிடமாட்டிங்களா பின்னி ?
:))//

நான் என்ன பின்னி மில் உரிமையாளரா "பின்னி"ட :-))
(உங்க தலைல இருக்க முடிக்கு சடைக்கூட பின்ன முடியாதே)

Anonymous said...

வவ்வால், சில கருத்துக்கள்

1. ஆங்கிலேயருக்கு எதிராக போராடியது போல் 20ஆம் நூற்றாண்டில் பிரஞ்சுக்காரார்களை எதிர்த்து நாம் போராட வில்லை. பாரதியாரும் அரோபிந்தரும் பாண்டிச்சேரியில் தங்கியதற்கு ஒரு காரணம் என்னவென்றால் அங்கு நடப்பது ஆங்கிலேயரின் அரசு இல்லை என்பதால்

அது (பாண்டிச்சேரி) ஒரு safe haven ஆக இருந்தது

என்வே ஆங்கிலேயர் மேல் இருந்த வெறுப்பு கட்டாயம் பிரஞ்சுக்காரார்கள் மேல் 1950களில் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் 20ஆம் நூற்றாண்டில் இல்லை

2. இரண்டாவதாக பிரஞ்சுக்காரர்களை “போ” என்று 1950களில் சொன்னதும், போர்த்துகீஸியர்களை “போ” என்று 1960களில் சொன்னதும் அந்த புதுச்சேரி மக்களோ, கோவா மக்களோ கிடையாது :) :) :) எனவே பெரும்பாலான மக்களுக்கு (20ஆம் நூற்றாண்டில்) பாசம் தான் இருந்ததோ இல்லையோ கண்டிப்பாக வெறுப்பும் துவேஷமும் இல்லை என்று நினைக்கிறேன்

(போர்த்துகீஸியர்களுடனும் பிரஞ்சுக்காரர்களுடனும் சண்டை எல்லாம் 18ஆம் நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது என்று நினைக்கிறேன்.)

வெற்றி said...

வவ்வால்,
நல்ல சுவாரசியமான பதிவு. பாண்டிச்சேரி பற்றி பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நல்ல சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

நான் சில வருடங்களுக்கு முன்னர் பிரான்சுக்குச் [பாரீஸ்] சென்ற போது நேரடியாகக் கண்டுகொண்ட விடயம் என்னவெண்டால், பாண்டிச்சேரியருக்கு பிரான்சு அரசு குடியுரிமை கொடுத்தது போல அதன் குடியாட்சிக்கு உட்பட்டிருந்த பல ஆபிரிக்க, அல்ஜீரிய மக்களுக்கும் இதே சலுகைகளைக் கொடுத்திருக்கிறது.

/* ஒரு பக்கம் பல ஆயிரம் பேர் உயிரைக்கொடுத்து பிரஞ்ச் அரசை துறத்த போராடினால் இப்படியும் ஒரு கூட்டம் அங்கே இருந்து இருக்கு.*/

அதுதானே தமிழனின் பண்பு :-)) அதனால்தானே ஒரு காலத்தில் தன்னாட்சியுடன் இருந்த தமிழருக்கு இன்று ஒரு நாடே இல்லாமல் இருக்கு. :-))

நீங்கள் மேலே சொன்னது இன்று ஈழத்திலும் நடந்து கொண்டிருப்பதை நான் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறேன்.

வவ்வால் said...

புருனோ,
//இரண்டாவதாக பிரஞ்சுக்காரர்களை “போ” என்று 1950களில் சொன்னதும், போர்த்துகீஸியர்களை “போ” என்று 1960களில் சொன்னதும் அந்த புதுச்சேரி மக்களோ, கோவா மக்களோ கிடையாது :) :)//

நீங்கள் எப்படி அப்படி சொல்கிறீர்கள், புதுவை விடுதலைப்போராட்ட வரலார்றை ஒரு முறை படிக்கவும், உங்களுக்காக சுருக்கமாக கீழே கொடுத்துள்ளேன், ஆங்கிலத்தில் இருக்கிறது தமிழில் மொழிப்பெயர்த்திருப்பேன், அதில் நான் ஏதோ மாற்றிவிட்டேன் என நினைப்பீர்கள் எனவே அப்படியே ஆங்கிலத்தில்.

புதுவை விடுதலைபோர் குறித்து:

1) "The Communist Party was also ready to launch a campaign of direct action to merge Pondicherry with India. Accordingly, the leaders of the Socialist Party hoisted the Indian national flag atop the Nettapakkam police station on the last day of March in 1954. Subsequently, many villages in Mannadipet and Bahour communes came under the sway of the pro-mergerists. In the Karaikkal region, all the communes and Karaikkal municipality passed a resolution in favour of merger. The National Youth Congress began a Satyagraha. A freedom fighters' procession was lathi charged and the flags carried by the processionists were seized and torn by the French Indian Police."

2) " Conditions became intolerable in Yanam ever since its Mayor and other representatives of Yanam adopted the merger resolution. The mayor, deputy mayor and over 200 people took refuge in the adjacent areas of the Indian Union. Police and hired hoodlums from Yanam assaulted the refugees on the Indian soil. It was then that the refugees marched into Yanam under the leadership of Mayor Satyanandam and took over the administration. After hoisting the Indian National Flag, the liberators adopted a resolution declaring Yanam liberated. Close on the heels, in Mahe, the Mahajana sabha under its president, I.K. Kumaran began a picketing programme. Some days later, hundreds of volunteers marched into Mahe to stage a demonstration in front of the administrator's residence. They were joined by the citizens of the enclave. On July 16, 1954, Kumaran took over the administration from the French administrator marking the end of the French rule of 228 years in Mahe."

3) "In 1954 even before the French decided to leave Pondicherry, E Goubert, Muthupillai and Muthukomarappa Reddiar quit the Representative Assembly, which was formed by the French government, and established a parallel government at Nettapakkam, Reddiar's native village.

They hoisted the Indian flag and ran the Liberation Government for 8 months. During which time they started 25 schools and several primary health centres. Many citizens left government service and joined them in their endeavour" says Mr. Panch. Ramalingam.

Not stopping with the 60 villages around Nettapakkam they also took over Thirubuvanai Commune, which consisted of 22 villages.

The Liberation Government had a separate police force with 2000 men of them 200 were from Tamil Nadu. "

கோவா விடுதலைப்போர் குறித்து,
"Along with five Goan nationalists, he secretly founded the
Goa Congress Committee in 1928 for the liberation of Goa,
Daman and Diu. To have a proper recognition he rushed to
Kolkata where the Indian National Congress session was going
on. He met the Congress leaders and succeeded in getting his
Goa Congress Committee affiliated with the Indian National
Congress on December 30, 1928 under the article III (F) of
the Congress Constitution."


"He was the first civilian to be tried by the military
tribunal and was court-martialed and sentenced to eight years
imprisonment and deported to the Portugal prison of Peniche."

"TB Cunha's last wish -- "the integration of Portuguese
pockets with India" -- was fulfilled three years after his
death."

----------------------------
வெற்றி,
நன்றி,
//நீங்கள் மேலே சொன்னது இன்று ஈழத்திலும் நடந்து கொண்டிருப்பதை நான் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறேன்.//

இப்படி அதிகம் பணம் தருபவரையே தனது எஜமானராக பார்க்கும் மனோபாவத்தால் அடிமையாக இருப்பது கூட சுகமாக இருக்கிறது சிலருக்கு, நீங்கள் சொல்வதும் அப்படி இருக்கிறது.

இதனால் பிரிவினை ஏற்பட்டு , ஒரு விடுதலைப்போர் பலவீனமாக நேரிடுவது வரலாற்றின் மூலம் தெரிகிறது.

நிஜமா நல்லவன் said...

செயல் ஒன்று. ஏன் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கத்தான் செய்கிறது. காரணங்கள் என்னவாகவோ இருந்துவிட்டு போகட்டும். உங்கள் பதிவின் மூலம் சில விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.

RATHNESH said...

வவ்வால்,

இந்தப்பதிவு எப்படி என் கண்களுக்குத் தப்பியது என்றே தெரியவில்லை.

நான் காரைக்காலில் எட்டு வருடங்கள் குடி இருந்தவன். அங்கே என்னுடைய வீட்டு உரிமையாளர் பிரஞ்சு மற்றும் இந்தியக் குடியுரிமைகள் கொண்டிருந்தவர். அவரிடம் இது குறித்து விவாதித்திருக்கிறேன்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளை ஆண்ட முறைக்கும் பிரஞ்சுக்காரர்கள் சொற்பப் பகுதிகளை ஆண்ட முறைக்கும் வித்தியாசம் இருந்திருக்கிறது.

பிரஞ்சுக்காரர்கள் இந்த மக்களை அடிமைகளாக நடத்தியதாகத் தெரியவில்லை. அதாவது பரஸ்பரம் கொழுந்து விட்டெறியும் வெறுப்பு இரண்டு பக்கத்தாரின் மனங்களிலும் இருந்த மாதிரித் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் இன்னும் இந்தியர்களைக் கேவலமாகத் தான் பார்க்கிறார்கள் என்பதை இந்தியன் நேவியில் உயர்பதவியில் இருக்கும் என் உறவினர் கலப்புப் பயிற்சி முகாம்களுக்குச் சென்று வரும் போதெல்லாம் சொல்லுவார்.

பிரஞ்சு சுதந்திரப் போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்டங்களைப் போல் ரத்தக் களறி வாய்ந்தது அல்ல. பிரஞ்சு தேசத்திடம் இருந்து பெற்ற சுதந்திரம் என்பது ஒருவகை ஜெண்டில்மென் அக்ரிமெண்ட் மாதிரி. தனிக்குடித்தனம் போன்ற அமைப்புத் தான். பெரியவர்களின் ஆசீர்வாதமும் அரவணைப்பும் மாதிரிதான் இந்த இரட்டைக் குடியுரிமையும். இதில் இந்திய அரசாங்கத்துக்கே அப்ஜெக்ஷன் இல்லை, புதுவை மக்கள் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

இப்படி நேர்மையான திறந்த மனத்துடன் போலித்தனமின்றி இருப்பதால் தான் புதுவை மக்கள் மத்தியில் சாதி மத அரசியல்கள் தலையெடுக்க முடியவில்லை. (என்னுடைய காரைக்கால் வாழ்க்கை பற்றி - தமிழ்நாடு, குஜராத், அஸ்ஸாம் ஒப்பீட்டில் தொடர் பதிவு எழுத வேண்டி இருக்கும்). அவ்வளவு மதுக்கடைகள் இருந்தும், இதுவரை புதுவை எல்லைக்குள் ஒரு முறையாவது சாதி மதக்கலவரம் கேள்விப்பட்டதுண்டா? தேசத் துரோகச் செயல்கள் நடந்ததாக சான்று உண்டா? கூடியவரை ஹிப்போக்ரஸி இல்லாத மாநிலம் அது.

மனதாரச் சொல்லுங்கள், இங்கிலாந்துக்குக் கிளம்பும் முன் ஆங்கிலேயர்களும் இப்படி ஒரு குடியுரிமை தருகிறோம் என்று சொல்லி இருந்தால் இந்தியர்களில் எத்தனை பேர் வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள்?

வவ்வால் said...

ரத்னேஷ்,

//ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளை ஆண்ட முறைக்கும் பிரஞ்சுக்காரர்கள் சொற்பப் பகுதிகளை ஆண்ட முறைக்கும் வித்தியாசம் இருந்திருக்கிறது.//

ஆம் வித்தியாசம் உண்டு, ஆனால் பிரெஞ்ச் ஆட்சியிலும் இந்தியர்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை, இந்திய பெண் ஒருவர் மேற்கத்திய உடை அணிந்து தேவாலயம் வருவதையே தடை செய்தவர்கள் தான், பிரபஞ்சன் இது குறித்து முன்னர் எழுதியுள்ளார். அப்பெண் விடப்பிடியாக பிரான்ஸ் உயர் நீதி மன்றம் வரைக்கும் போய் வென்றதும் சரித்திரம்.

//பிரஞ்சு சுதந்திரப் போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்டங்களைப் போல் ரத்தக் களறி வாய்ந்தது அல்ல. //

ரத்தக்களரி இல்லை என்றாலும் போராடினார்கள் தானே, மேலும் இந்தியா விடுதலை அடைந்திருந்தது அதற்கும் மேலும் பிரான்ஸ் சண்டைப்போட முடியாதே.

//இதில் இந்திய அரசாங்கத்துக்கே அப்ஜெக்ஷன் இல்லை, புதுவை மக்கள் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? //

அரசாங்கம் நேரிடையாக சொல்லமுடியுமா? ஆனால் தார்மீக ரீதியாகப்பார்த்தால் சரியாக வருமா?

புதுவையிலும் அன்னிய பொருட்கள் பகிஷ்கரிப்பு போராட்டம் எல்லாம் நடந்துள்ளது.

ஒருவரை வெளியே போ என்று சொன்னக்கையோடு எனக்கு உங்க நாட்டுக்குடியுரிமை வேண்டும் என்று கேட்டால் அவர்கள் எந்த அர்த்தத்தில் வெளியே போ என்று சொன்னதாக எடுத்துக்கொள்வது.

ஒருவர் மகன் அவர் விருப்பத்திற்கு மாறாக காதல் மணம் புரிகிறான் தந்தை கோபத்துடன் அவனை வீட்டை விட்டு வெளியே போ என்று தொறத்தி விடுகிறார், ஆனால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிட்டு , மாதா மாதம் உன் சம்பளத்தில் எனக்கு 10000 தரனும்னு கேட்டால் எப்படி இருக்கும்!

//இதுவரை புதுவை எல்லைக்குள் ஒரு முறையாவது சாதி மதக்கலவரம் கேள்விப்பட்டதுண்டா? தேசத் துரோகச் செயல்கள் நடந்ததாக சான்று உண்டா? //

அதற்கு காரணம் சிறிய மக்கள் தொகை, எந்த சாதி , மதத்தினரும் பெரும்பாண்மைனே சொல்ல முடியாது, எல்லாரும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கைனு சொல்லலாம்.

புதுச்சேரியில் கிராமம் பக்கம் போய் இருக்கிங்களா, அங்கே எல்லாம் தமிழ் நாடுபோலதான் அதே சாதியக்கட்டுப்பாடுகள் இருக்கு, பெரிசா சண்டை மட்டும் தான் கிடையாது.

எப்போதுமே வேலைக்கோ, உணவுக்கோ கடும் போட்டி வரும் போது தான் , சாதி,மத உணர்வுகள் அதிகம் தூண்டப்படும், புதுச்சேரில அந்த அளவுக்கு பெரும் போட்டி இன்னும் வரலை.

ஆனால் நீங்க இன்னும் மாகே பக்கம் போய் பார்க்கலைனு நினைக்கிறேன், அங்கே எல்லாம் பிஜேபி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இடையே மத ரீதியாக கடும் சண்டை நடக்குது, தொண்டர்கள் வெட்டிக்கொள்வது ,கொலை எல்லாம் அடிக்கடி நடக்குது.

//இங்கிலாந்துக்குக் கிளம்பும் முன் ஆங்கிலேயர்களும் இப்படி ஒரு குடியுரிமை தருகிறோம் என்று சொல்லி இருந்தால் இந்தியர்களில் எத்தனை பேர் வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள்?//

கொடுத்திருந்தா வாங்கி இருக்கலாம், அல்லது நாம் கேட்டிருந்தாலும் அவர்கள் கொடுத்திருப்பார்கள்.

இந்தியர்கள் கொஞ்ச பேர் சுதந்திரத்தின் போது உகாண்டாவில் இருந்தார்கள், தொடர்ந்து அப்படியே இருந்துவிட்டார்கள், இடி அமீன் காலத்தில் பிரச்சினை வந்த போது , உகாண்டாவில் இருந்த இந்தியர்கள் நாட்டை விட்டு தப்பி செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அங்கிருந்து விமானம் மூலம் தப்பவும் முடியாது, தனி விமானம் அனுப்ப சொல்லிக்கேட்டபோது, இந்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை,பிரிட்டனிடம் உதவி கேட்டதுக்கு அவர்களை பிரிட்டனே தனி விமானம் அனுப்பி அழைத்து பிரிட்டன் குடியுரிமை கொடுத்துவிட்டது.இது சுதந்திரம் எல்லாம் பெற்ற பிறகு நடந்தது. எனவே கேட்டிருந்தால் பிரிட்டன் குடியுரிமை கண்டிப்பாக இந்தியர்களுக்கும் அப்போதே கிடைத்திருக்கும், இந்தியர்கள் அப்போது கேட்கவில்லை.

புதுவை மக்கள் கேட்டுப்பெற்றது தான் அந்த பிரெஞ்ச் குடியுரிமை.

ரவி said...

ஹும்...

அடியேன் புதுவையில் இருந்தபோது ப்ரெஞ்சு குடியுரிமை பெற்ற ஐந்தரை அடி தாஜ்மஹால் ஒன்று சுற்றி சுற்றி வந்தது. அப்போது ஓக்கே சொல்லியிருந்தால் இன்னேரம் ப்ரான்ஸ் நாட்டு ஆப்பிள் தோட்டத்தில் ஆப்பிள் பொறுக்கி பிழைப்பை ஓட்டியிருந்திருக்கலாம்...

Anonymous said...

உபயோகமான தகவல்...எனக்கு புதிதும் கூட...

பகிர்ந்தமிக்கு நன்றி..

Anonymous said...

பிரெஞ்சிடம் விடுதலை பெற்று ஹிந்தி காரனிடம் அடிமையானது தான் இறுதியில் நடந்தது..மற்ற தமிழ் நாட்டு நகரங்களோடு ஒப்பீடு செய்யும் போது புதுவை அழகான நகரம் அல்லவா?

Joe said...

இந்த நாட்டிலே எத்தனை வருஷமானாலும், எந்த சலுகையும் கிடைக்காதுன்னு தெரிஞ்சு சில பேரு புத்திசாலித் தனமா நடந்திருக்காங்க, அதைப் போயி குறை சொல்லிக்கிட்டு? ;-)

நல்ல விரிவான தகவல் கொண்ட இடுகை நண்பரே, வாழ்த்துக்கள்.