Tuesday, May 22, 2012

தீப்பிடிக்க ...தீப்பிடிக்க நானோ காருடா ...!




வந்த புதிதில் ஒரு லட்சம் ரூபாய் கார் என்ற பட்டத்துடன் இந்திய கார் சந்தையில் புகுந்து நடுத்தர மக்களின் மனதில் தீப்பிடிக்க வைத்த நானோ கார் இப்போதெல்லாம் அதுவே தீப்பிடித்து செய்தியாகிக்கொண்டிருக்கிறது.

ஒரு உண்மை சம்பவம்:

நானோ எரிவதுப்பற்றி சில செய்திகள் படித்திருந்தாலும் ஒரு பதிவு போடலாமா வேண்டாமா என தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது, சமீபத்தில் கேபிள் சங்கரின் பதிவில் ,வெங்கி என்கிற இம்சை என அறியப்படும் மூத்தப்பதிவரின் நானோ எரிந்து விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பதையும்,வெங்கி மயிரிழையில் தப்பியதையும் பகிர்ந்துக்கொண்டார், அதனைப்பார்த்த பின்னரே பதிவு போட்டால் தப்பில்லை,நாலு பேருக்கு விழிப்புணர்வு ஏற்படும் எனப்போட்டாச்சு.

மேலும் விபத்திற்காக இழப்பீடு கேட்டு டாடா மோட்டாரிடம் விண்ணப்பித்தும் கிடப்பில் இருக்கிறது ,என்றும் "கேட்டால் கிடைக்கும்" என்ற அவர்களின் அமைப்பின் மூலம் அனைவரும் டாடா மோட்டார் முகநூலில் கேட்கவும் சொல்லி இருக்கிறார்.

செய்தியுடன் கூடியப்புகைப்படம்:


வெங்கியின் முகநூல் பக்கம்:


கேட்டால் கிடைக்கும் விவரங்களுக்கு:

நானோ கார் தீப்பிடிக்க என்ன காரணம் , கட்டமைப்பில் உள்ள கோளாறு, அதன் குறை நிறைகளையும் ,கொடுக்கும் காசுக்கேற்ற தரமான காரா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

நிறைகள்:

*விலை மலிவானது என சொல்லப்படுகிறது ஆனால் அப்படியல்ல கொஞ்சம் வசதிகளுடன் வாங்க வேண்டும் என்றால் 2.60 லட்சம் ஆகிவிடும்.

*குறைவான முன் தொகை, மாதத்தவணை என அப்படியும் நடுத்தட்டு மக்களின் காராகவே கருதப்படுகிறது ஒரு கூடுதல் தகுதியே.

*திருப்பும் ஆரம் சுமார் 4 மீட்டர் எனவே குறுகலான,ஜனசந்தடி மிக்கப்பகுதிகளில் பயன்படும்.

* மைலேஜ் நன்றாக உள்ளது.

* டாடா என்ற நம்பகமான பிராண்ட்(இப்போ அந்த நம்பகத்துக்கு வேட்டு வைப்பதும் நானோவே)

என்னால் இந்த அளவுக்கு தான் நானோவின் பலமாக சொல்லமுடியும், அவர்கள் இன்னும் பல பலன்கள் சொல்லக்கூடும் அதெல்லாம் உண்மையில் காகித வாக்குறுதிகளே.

இப்போது குறைகளை காணலாம்.,

வடிவமைப்பு குறை-1

* அதிக இடவசதி எனச்சொல்லிக்கொள்வது ஒரு சுய தம்பட்டமே ,காரின் ,நீளம்,அகலம் மிக குறைவே பின்னர் எப்படி அதிக இடவசதி, உயரத்தினை அதிகரித்து , கன அளவை அதிகரித்து உள்ளே இட வசதி என்கிறார்கள்.

உயரமானவர்களுக்கு தலை இடிக்காது என்கிறார்கள் ஆனால் உட்காரும் போது கால் நீளுமே அதற்கு இடம் எங்கே? கொஞ்சம் பருமனானவர்கள் என்றாலும் கஷ்டமே.

மேலும் நீளம்,அகலம் விகிதத்திற்கு ஏற்ப காரின் உயரம் இருக்க வேண்டும், இல்லை எனில் வளைவுகளில் உருளும் அபாயம் உண்டு, ஏன் எனில் உயரம் கூடும் போது மைய ஈர்ப்பு புள்ளி (cg-Centre of gravity)உயரத்தில் அமையும், திடமாக தரையில் இருக்க மைய ஈர்ப்பு விசை புள்ளி உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

இரட்டை அடுக்கு பேருந்துகளில் இந்நிலை ஏற்படும். இதனை தவிர்க்க கீழ் தளத்தில் அதிக எடையும், மேல் தளத்தில் குறைவாகவும் இருக்குமாறு செய்வார்கள்.

படம்-1 புவியீர்ப்பு மையம் தாழ்வாக உள்ளப்போது,நிலைப்பு தன்மை அதிகம் எனக்காட்டுகிறது.


படம்-2 , புவியீர்ப்பு மையம் உயரத்தில் இருக்கும் போது நிலைப்பு தன்மை இழப்பதைக்காட்டுகிறது.


வழக்கமான கார்களிலும் வளைவில் திரும்பும் போது சாய்வது போன்ற பிரமை ஏற்படும், நாமும் வளைவின் வெளிப்பக்கம் நோக்கி தள்ளப்படுவோம். ஆனால் கார் சாய்ந்து விடாது நிலையாகவே இருக்கும்.

மேற்சொன்னது எல்லாம் நடக்க காரணம் மைய ஈர்ப்பு விசை சரியான புள்ளியில் இருக்குமாறு கார் வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணம் ஆகும்.

மேலும் கூடுதல் பாதுகாப்பிற்கு "ஆண்டி ரோல் பார்" (Anti roll bar)என்ற ஒரு இருப்பு கம்பி அமைப்பு காரின் முன் ,பின் அச்சுகளில் பொறுத்தப்பட்டிருக்கும், தரமான கார்களில் இரண்டு அச்சிலும், கொஞ்சம் விலைக்குறைவான கார்களில் முன் அச்சில் மட்டும் பொறுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் டாடா நானோ காரில் முன்,பின் என இரண்டு அச்சிலும் ஆண்டி ரோல் பார் இல்லை.இதனை நாம் விரும்பினால் பொறுத்திக்கொள்ள முடியும்,ஆனால் அதற்கான அமைப்பு காரில் கொடுக்கப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை.

எனவே நானோ வேகமாக செல்லும் போது வளைவில் உருண்டு விடும் அபாயம் உள்ளது.

ஆண்டி ரோல் பார் செயல்படும் விதம்:

காரினை இடப்பக்கமாக திருப்புகிறோம் எனில் ,இடப்பக்க சக்கரம் கீழ் அழுந்தும், அதே சம்யம் வலப்பக்க சக்கரத்தின் மீது அழுத்தம் குறைந்து மேலே தூக்கும் , அப்படி தூக்கும் போது 30 டிகிரிக்கு மேல் வாகனம் சாயுமெனில் உருண்டு விடும். இந்த கணக்கு வாகன வடிவமைப்பு, அதில் உள்ள நிறைப்பொறுத்து மாறும், 30 டிகிரி என்பது பொதுவான அளவு.

ஆண்டி ரோல் பார் பொறுத்தப்பட்ட கார் எனில் வலப்பக்க சக்கரம் மேலே தூக்காமல் கீழே அழுத்தி சாலையில் பிடிப்பை ஏற்ப்படுத்தும். ஒருப்பக்கம் கீழே சென்றால் அதற்கு ஏற்ப அடுத்தப்பக்கதில் கவுண்டர் பேலன்ஸ் செய்யும் வகையில் ஆண்டி ரோல்ப்பார் வடிவமைக்கப்பட்டு வாகன அச்சில் பொறுத்தப்பட்டு ,,இடம்,வலம் என இரண்டு சக்கரங்களையும் இணைத்து இருக்கும்.

anti roll bar image:


உதாரணமாக, மாநகரப்பேருந்தின் படிக்கட்டுப்பகுதியில் நிறையப்பேர் தொங்கிக்கொண்டு இருப்பார்கள் இதனால் பேருந்து சாய்ந்து விடுமோ எனப்பயப்படும் அளவில் ஒருப்பக்கமாக சாய்ந்துக்கொண்டு போவதைப்பார்த்திருப்பீர்கள், வாகனத்தின் கூடு தான் சாய்வாக இருக்கும் ஆனால் இரண்டு அச்சின் சக்கரங்கள் இடம்,வலம் என இரண்டுப்பக்கமும் சமமாக சாலையில் இருக்கும். இதற்கு ஒரு காரணம் ஆண்டி ரோல் பார் ,மற்றது வாகனத்தின் மைய ஈர்ப்பு விசைப்புள்ளி குறைவான உயரத்தில் இருப்பது.

டாடா நானோவில் ஆண்டி ரோல் பாரும் இல்லை, மைய ஈர்ப்பு விசையும் உயரமாக வருவது போல வடிவமைப்பு, என எதிர்மறையாக உள்ளது.

வடிவமைப்பு குறை-2

இந்தியாவில் உபயோகத்தில் உள்ள கார்களிலேயே பின் புற எஞ்சின்(rear engine and rear wheel drive)கொண்ட கார் நானோ மட்டுமே(like auto,share auto) வெளிநாடுகளில் போர்ஷ், வோல்க்ஸ் வாகன் பீட்டில் போன்றவை பின் எஞ்சின் வாகனங்களே ஆனால் அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ,பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை எனவே அவற்றுடன் எல்லாம் நானோவை ஒப்பிட இயலாது.

பின் புறம் எஞ்சின் உள்ளதால் வாகன நிறை சரியான விகிதத்தில் முன்,பின் அச்சுகளிடையே சமமாக நிறவப்பட வேண்டும், (weight balance or mass centralization)ஆனால் நானோவில் அப்படியில்லாமல் பின் அச்சின் மீது 60% எடையும், முன் அச்சில் 40% வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின் அச்சில் எடைக்கூடினால் என்ன ஆகும்?

வாகனம் வளைவில் சீராக திரும்ப டிபரன்ஷியல் கியர் (differential gear)என்ற அமைப்பு பயன்ப்படுகிறது. அதுப்பற்றி முன்னரே ஒரு பதிவிட்டுளேன். அவற்றை இங்கு காணவும்



வாகனத்தின் எடை சமச்சீராக உள்ள கார்களுக்கே டிபரன்ஷியல் கியர் மட்டுமே சீரான திரும்புதலுக்கு உயர் வேகத்தில் உதவாது என்பதால் "ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம்"(ABS_ Anti brake lock system) எலக்ட்ரானிக் பேலன்ஸ் கண்ட்ரோல்" (EBC-electronic balance control) and EPS -eletronic assited power steering ஆகியவை பயன்ப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவில் விற்கப்படும் நானோக்களில் பொறுத்தப்படவில்லை,சாதாரணமாக காணப்படும் பவர் ஸ்டியரிங்க்கூட இல்லை..மேலும் பின் புற எஞ்சினால் எடையும் சமச்சீராக இல்லை, இந்நிலையில் வளைவில் திருப்பும் போது என்ன ஆகும் எனில்

"குறைவான திருப்புதல் விளைவு "(Under steering effect)ஏற்படும். அப்படியெனில் என்ன,


ஒரு கார் நேர்க்கோட்டில் பயணிக்கிறது எனில் அதன் மீது நேர்க்கோட்டு உந்தம் ஏற்படும் இது தொடர்ந்து நேராக செல்லும் நிலையில் இருக்கும், அப்படி இருப்பது நிலைமம் (inertia)என்பார்கள்.நியூட்டனின் விதியை நினைவில் கொள்க.

இப்போது வலப்புறமாக வாகனத்தினை திருப்ப முயன்றால் என்ன ஆகும் எனில் முன் சக்கரம் மட்டுமே திரும்பும் ஆனால் வாகனத்தின் உடல் மீது செயல்படும் ,உந்தம் ,நிலைமம் காரணமாக நேராக செல்ல எத்தனிக்கும், இதனால் வாகனத்தின் மீது ஒரு திருப்பு விசை செயல்ப்படும், இப்போது இரண்டு அச்சுகளில் பின் அச்சில் எடை அதிகம் இருந்தால் அதற்கு அதிக உந்தம் கிடைத்து பக்கவாட்டில் முன்னால் வரப்பார்க்கும் ,கிட்டத்தட்ட சுழலப்பார்க்கும்(spin), பின்பகுதியானது சாலையைவிட்டு சறுக்கிக்கொண்டு போவது போல போகும், இதனை டிரிப்ட் (drift)என்பார்கள்.

பந்தய மைதானங்களில் கார்கள் இப்படி டிரிப்ட் ஆகிக்கொண்டு செல்வதைப்பார்த்து இருக்கலாம்.டிரிப்ட் ரேஸ் என தனியாகவும் ஒரு பந்தயம் உண்டு. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கார்கள் தான் டிரிப்ட் ஆனாலும் புரளாமல் இருக்கும், நானோ போன்றவை பக்கவாட்டில் பல்டி தான் அடிக்கும்.

இதே விளைவு சாலையின் இடப்பக்கமாக செல்லும் போது இடப்பக்கம் திருப்ப கடினமாக இருக்கும் ,அப்போது அழுத்தம் கொடுத்தால் அதிகம் திரும்பி விடும் இதை அதிக திருப்புதல் விளைவு (over steering effect)என்பார்கள். இது போன்று நிகழ்ந்தால் பக்கத்தில் வரும் வாகனத்தின் மீதோ அல்லது எதிர் திசையில் வரும் வாகனத்தின் மீதோ உரசிவிடும்/மோதிவிடும் அபாயமும் உள்ளது.


எனவே மற்றக்கார்களை போல வளைவில் வேகமாக நானோவை ஓட்டக்கூடாது.

நானோவில் குறை/அதிக திருப்புதல் விளைவை தடுக்க ஒரு முயற்சி செய்துள்ளார்கள் ஆனால் அதுவே ஒரு பயன்பாட்டுக்குறைப்பாடு ஆகிவிட்டது எனலாம், அது என்னவெனில்,

நானோவில் பின் சக்கரங்கள் முன் சக்கரங்களை விட பெரியவை, 155 மி.மி ஆரம் கொண்டவை முன் சக்கரங்கள் 135 மி.மி ஆரம் கொண்டவை சிறியவை. இப்படி பின் சக்கரங்களை பெரிதாக்குவதன் மூலம் பின் அச்சுக்கு அதிக சாலைப்பிடிப்பு (road grip)ஏற்படும் இதனால் குறை திருப்பல், மிகை திருப்பல் விளைவு சிற்றிது கட்டுப்படுத்தப்பட்டு "டிரிப்ட்" ஆவது ஓரளவுக்கு குறையும், ஆனால் இம்முறை ஓரளவுக்கு மட்டுமே கைக்கொடுக்கும்.

இப்படி இரண்டு அச்சுக்கும் வேறு அளவில் டயர்கள் இருப்பதால் ,ஒரே ஸ்டெப்னி டயரைப்பயன்ப்படுத்த முடியாது. நானோ வாங்கும் போது கொடுக்கும் ஸ்டெப்னி டயர் முன் சக்கரத்துக்கானது,எனவே முன் சக்கரம் பங்சர் ஆனால் மட்டுமே உதவும்,பின்னால் பங்சர் ஆனால் கழட்டி எடுத்து சரி செய்து மாட்டிக்கொள்ள வேண்டும். ட்யூப்லெஸ் டயர் என்பதால் பங்சர் ஆனாலும் சுமார் 50 கி.மீ ஓட்டி செல்ல முடியும் என்பதை வைத்தே சமாளிக்கவேண்டும்.

நானோவில் பின் புற ஹேட்ஜ் டோரையும் திறக்க முடியாது.பாதியில் ரேடியேட்டர் அணுக மட்டுமே ஒரு திறப்பு உண்டு. பொருட்களை எல்லாம் உட்புறமாக மட்டுமே வைக்க ,எடுக்க முடியும் என்பதும் ஒரு வடிவமைப்பு குறையாகும்.

இது போல இன்னும் சில பல வடிவமைப்பு குறைகள் இருக்கு மிகவும் ஆபத்தான சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுளேன், இப்போது ஏன் தீப்பிடிக்கிறது என்பதைப்பார்க்கலாம்.

நானோ தீப்பிடிக்கவும் பின் புற எஞ்சின் வடிவமைப்பே காரணமாக இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு, ஏன் எனில் டாடாவே சில தீப்பிடிப்பு சம்பவங்களை ஆராய்ந்து சொல்லியுள்ளது என்னவெனில் ,பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் வெடித்தது(rupture in fuel tube), அல்லது சைலண்சரில் ஏதோ ஒரு பொருள் சிக்கி அடைப்பு ஏற்பட்டது ஆகியவையே காரணம் என சொல்லியுள்ளது.

இதன் காரணமாக பல நானோக்களில் பெட்ரோல் செல்லும் குழாய்களை மாற்றியும் கொடுத்துள்ளது.

பெட்ரோல் குழாய்கள் வெடிப்பதற்கும்,பின் புற எஞ்சினுக்கும் என்ன தொடர்பு?

டாடா நானோவில் பெட்ரோல் டேங்க் முன்புற டிரைவர் சீட்டுக்கு அடியில் உள்ளது, பேட்டரி அதற்கு பக்கத்து சீட்டுக்கு அடியில் உள்ளது. பெட்ரோல் டேங்க் உள்ளே இருப்பதும் அல்லாமல் மின்கலத்துக்கும் அருகில் இருப்பதால் மின்சுற்றுக்கோளாறால் தீப்பிடித்தால் ஓட்டுநரே முதல் பலியாவார் என்பது மிகவும் ஆபத்தான வடிவமைப்பு குறையாகும்.

எஞ்சின் பின்புற இருக்கைக்கு பின்னர் அடியில் உள்ளது. அதன் மீது மூடிப்போட்டு மூடி லக்கேஜ் வைக்கும் பகுதியாக்கிவிட்டார்கள்,பின்பக்க பம்பர் அருகில் ரேடியேட்டர் மையமாக உள்ளது.



இப்படிப்பட்ட வடிவமைப்பில் எஞ்சினுக்கு இயற்கையான காற்றோட்டம்,மற்றும் குளிர்ச்சி கிடைக்காது, ரேடியேட்டர் மட்டுமே குளிரூட்டும் அமைப்பு.வழக்கமாக எல்லாக்கார்களிலும் முன்பக்கம் ரேடியேட்டர் இருக்கும் அப்போது தான் அதிக காற்று உள்வாங்கி நன்றாக குளிர்விக்கும்,ஆனால் நானோவிலே பின்னால் இருக்கிறது எனவே இயற்கையாக காற்று கிடைக்காது ,பேன் மூலம் வரும் காற்றே, அது சிறப்பாக குளிர்விக்க போதுமானதாக இருக்காது.

எனவே எஞ்சின் இருக்கும் பகுதியில் அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளது.ரேடியேட்டர்களின் அமைவிடம் ஏன் முக்கியம் எனில், ஃபார்முலா ஒன் பந்தயக்கார்களிலும் எஞ்சின் பின் பக்கமே இருக்கிறது,அதிலும் அதிவேகத்தில் ஓட்டப்படுவதால் எஞ்சின் பயங்கரமாக சூடாகிவிடும் ஆனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பொறுத்தப்பட்ட ரேடியேட்டர்கள் நன்றாக எஞ்சினை குளிர்விப்பதால் பிரச்சினை ஆவதில்லை.

ஃபார்முலா-1 கார்களின் இரண்டுபக்கமும் ஒரு சாய்வான கோணத்தில் ரேடியேட்டர்கள் பொறுத்தப்பட்டு ,நேரடியாக காற்றுப்படும் படியே வடிவமைத்திருப்பார்கள்.அப்போது தான் விரைவாக எஞ்சினை குளிரிவிக்க முடியும்.இந்த பந்தயக்காரின் படத்தினைப்பார்த்தால் எளிதில் புரியும்.



டாடா நானோவில் முன் புறம் உள்ள பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் ,பின் புறம் உள்ள எஞ்சினுக்கு செல்கிறது, நானோவில் மல்டி பாயிண்ட் பியுல் இஞ்செக்‌ஷன் (MPFI-multi point fuel injection)அமைப்பு உள்ளது. இது எஞ்சினுக்கு மேல உள்ளதும் ,எஞ்சின் மீதாக பெட்ரோல் குழாய் செல்வதையும் இப்படத்தில் காணலாம்.




சரியாக குளிரிவிக்கப்படாத எஞ்சின் அதிக வெப்பமாகிவிடுவதால் , பெட்ரோல் எஞ்சின் சிலிண்டர் உள்ளே சென்றதுமே ,ஸ்பார்க் பிளக் செயல்ப்படும் முன்னரே பற்றிக்கொண்டு வெடிக்கும் இதனை நாக்கிங் (Knocking or detonation or pingking)என்பார்கள், இது போல பல நடக்கும் போது எஞ்சின் பிஸ்டன்(piston)cylinder head, கேஸ்கெட்(gasket) எல்லாம் சிதைந்து வெளியிலும் தீப்பிழம்பு வரலாம்.



கடினமான காஸ்ட் அயர்ன் எஞ்சின் பிளாக் (cast iron block)எனில் ஓரளவு தாங்கும், ஆனால் இப்பொழுதெல்லாம் அலுமினியம்-மெக்னீசியம் கலவையிலான எடைக்குறைவான எஞ்சின் பிளாக்குகளே பயன்ப்படுகின்றன. அதிலும் நானோ எஞ்சின் மிக இலகுவான வடிவமைப்பு அதிக வெப்பம் தாங்குவது கடினமே.அதிக வெப்பத்தில் இரும்பை விட அலுமினியம் 3 மடங்கு அதிகம் விரிவடையும் என்பது கவனிக்க தக்கது.அதிக மைலேஜ் கிடைக்கவே அலுமினியம் அல்லாய் எஞ்ஜின்கள் பயன்ப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற எஞ்சின் சிலிண்டரில் ஏற்படும் நாக்கிங் மட்டும் இல்லாமல் இன்னொரு வகையிலும் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

எஞ்சின் பிளாக் வெகு அருகில் பெட்ரோல் கொண்டு வரும் குழாய் உள்ளது, அப்பகுதியில் வெப்பம் அதிகமாக இருப்பதால், குழாயில் உள்ள பெட்ரோல் எளிதில் ஆவியாகி விடக்கூடும் இதனால் ஏற்படும் அழுத்தம் தாங்காமல் குழாய் வெடித்தால் ,சூடான எஞ்சின் உள்ள நிலையில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

nano fire video:



இதனை டாடா நிறுவனம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாமல் புதிதாக நன்கு இன்சுலேட் செய்யப்பட்ட அதிக அழுத்தம் தாங்கும் பெட்ரோல் குழாய்களை மாற்றி பொருத்தியதிலிருந்தே ,தீப்பிடித்தலுக்கு வடிவமைப்பு ரீதியாகவே ஒரு காரணம் இருப்பது தெளிவாகிறது.

டாடா நிறுவனமே சைலண்சரில் அடைப்பு ஏற்பட்டதால் தீப்பிடித்தது என்றும் சொல்லி இருக்கிறது. அது எப்படி எனப்பார்ப்போம்.

சைலண்சர் எப்படி வேலை செய்கிறது என்பதை எனது பழையப்பதிவான
உங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவது எப்படியில் காணலாம்.

எஞ்சினில் இருந்து வரும் புகையானது அதிக வெப்பமாக இருக்கும், சைலைண்சரில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் சரியாக புகை வெளியேறாது, இதனால் ஒரு பின்னோக்கிய அழுத்தம் (back pressure)ஏற்பட்டு மீண்டும் சூடான புகை எஞ்சினுக்குள் சென்று விடும் ,இதனால் எஞ்சின் குளிராமல் அதிக வெப்பமாகும் முன்னர் சொன்னப்படியே "நாக்கிங்" விளைவால் எஞ்சின் சிதைந்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

இது வரைப்பார்த்ததில் இருந்து நானோவில் பிரச்சினைகள் ஏற்படக்காரணம் ,பின்னால் உள்ள எஞ்சினும், சரியாக எஞ்சின் குளிர்விக்கப்படாததும் என்பது புரிந்திருக்கும்.

இது ஒரு வடிவமைப்பு குறைப்பாடு இதனை சரி செய்து நல்ல தரமான ,பாதுகாப்பான காரினை டாடா வெளியிடலாம், ஆனால் விலை ஏறிவிடும்.வெளிநாட்டில் எல்லாம் இப்படி குறைபாடு இருப்பது தெரிந்தால் உற்பத்தியை உடனே நிறுத்திவிடுவார்கள், ஆனால் இங்கோ நிலைமையே வேறு.

முன்னர் டேவூ மோட்டார்ஸ் என்ற கொரிய கம்பெனியின் சியல்லோ வகை கார்களில் இது போல தீப்பிடிக்கும் பிரச்சினை வந்து ,விற்பனைப்பாதிக்கப்பட்டு , பின்னர் வேறு சிலக்காரணங்களால் நஷ்டமும் ஏற்படவே நிறுவனமே மூடப்பட்டுவிட்டது.

தற்போதைய நிலையில் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டால் நானோ வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது எனலாம் :-))

பின் குறிப்பு:

தகவல்கள்,படங்கள் உதவி,
google, team bhp,shell, youtube ,இணைய தளங்கள்,நன்றி!

14 comments:

Anonymous said...

வெங்கி@ இம்சை ஞாபகம் இருக்கா வவ்வால்?

வவ்வால் said...

இம்சை@வெங்கி,

வாங்க,வணக்கம்,நன்றி!

ஓஹ் உங்க அனுபவம் தானா அந்த நானோ சம்பவம், அடப்பாவமே, இப்போ நலமா, நீண்ட நாட்களாக நான் பதிவுப்பக்கம் வரவில்லை,இப்போ சில மாதங்களாக உலாவுகிறேன் மீண்டும்.அதனால் என்ன நிகழ்வுகள் என்றும் தெரியவில்லை, மன்னிக்கவும்.

எனக்கு நினைவு இருக்கு இட்லிக்கு மாவு அரைப்பது எப்படிலாம் கேட்டு பதிவு போட்டு இருக்கிங்க, பசங்க பேருலவும்(பவன்) பதிவு போடுவிங்க தானே.(வேற யாரையாவது சொல்லுறனோ)

நானோ கார் உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று, அதை நான் சொன்னா எவன் கேட்பான் ;-))

ராஜ நடராஜன் said...

வவ்!நீங்க தொடுப்பு கொடுத்ததால் யாருக்கும் பின்னூட்டம் கூட சொல்லாமல் கூட இங்கே ஓடி வந்து விட்டேன்.நான் முன்னாடியெல்லாம் வந்தா கடை பழைய பதிவையே காண்பிக்கும்.சரி நீங்க என்னை மாதிரியே கடை கடையா சுத்திறீங்க போல இருக்குதுன்னு தலையைக் காட்டவே மாட்டேன்.என்னோட களமே தமிழ்மணம்தான்.அங்கே நீங்க இணைக்காத காரணமே மொத்த பிரச்சினைக்கும் காரணம்.

நான் நானோ சைசில் கூட கார் ஓட்டி ஆக்சிடெண்ட் செய்திருக்கேன்.அதுவும் வயதான பெரியவர் ஒருவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு.அதனால் நீங்க சொல்லும் நானோவின் முழுத்தன்மையையும் என்னால் இந்த கணத்தில் கூட உணரமுடிகிறது.

நீங்கதானே முன்னாடி அமெரிக்கன் கார்கள் பெட்ரோல் நிறைய குடிக்கும் பெரிய சைஸ் ராட்சசன்ங்கிற மாதிரி சொன்னீர்கள்.ஜப்பானின் டயோட்டோ,மிட்சுபிசி,சுசுகி,ஜெர்மன் ஆடி என்று பல கார்களை மாற்றி இப்ப நிலைத்திருப்பது கிராண்ட் செரோக்கி ஜீப் என்ற பழைய சிறுக்கி.எஞ்சின் வேகம் 5.2. எட்டு சிலிண்டர்.இந்த ஊர் காசுக்கு 5 தினாருக்கும் மேல் கொள்ளளவு.ஒரு லிட்டர் 65 பில்ஸ்.வண்டி ரெட் சிக்னல்ல நின்னா எல்லோ வண்டிகளையும் முந்திக்கொண்டு ஓடும் 200 மைல் வேகம்.ஆனாலும் நான் 140,160 ஐ தாண்டியதில்லை.

நாலு வழி ஒற்றைப் பாதையில் சறுக்கிக்கொண்டு ஓடும் ரோட்டிலேயே கரணம் தப்பினால் ஆக்சிடெண்ட்தான் என்கிற மாதிரியான சூழலில் இந்திய ரோடுகளில்,டாஸ்மாக்கின் நெடியில் வாகன ஓட்டுதலில் நானோ கார் எந்தளவுக்கு பாதுகாப்பானது என்று தெரியவில்லை.ஆனால் பைக் கூட சறுக்கவே செய்யும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டும் சூழலில் நானோ மாற்றாக இருக்க கூடும் என்பதும் என்னோட எண்ணம்.

சரி கார் சல்லிசா தயாரிக்கிறோம்.இதோ அஞ்சு நிமிடம் நடந்து போய்விடலாம் என்பதற்கும் கூட வாகன சொகுசு தேவைப்படும் மனநிலை வந்து விடும்.இருக்குற ஹார்போ ஹைட்ரேட் அரிசி உணவில் இன்னும் உடற்பயிற்சி இல்லாத நிலை,பெட்ரோலின் பயன்பாடு அதிகரிப்பு,பொலியூசன் என்று இந்தியா ஒரு பக்கம் முன்னேற முன்னேற இன்னொரு பக்கம் பாதிப்புகளையும் சந்திக்க வேண்டி வரும்.

ஆமா!எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.மருத்துவம்,பொருளாதாரம்,அரசியல்,வாகனம்ன்னு இவ்வளவு விசயங்களை தொடுகிறீர்களே எப்படி?அதுவும் யூடியுப் இன்ன பிற பக்கவாத்தியங்கள் வேறு.எப்படி இது உங்களுக்கு சாத்தியமாகிறது!உங்கள் களம்தான் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

ராஜ நடராஜன் said...

நானே மாங்கா!மாங்கா கையில மாங்கா இருந்தா எப்படி தட்டறது?கடிச்சு குதறிகிட்டே படங்களை பார்த்ததில் வந்த பின்னூட்டமிது:)

நானோ மாதிரி சுசுகி காரை ஆக்ஸிடெண்ட் பண்ணினது போலவே இன்னுமொரு நானோ சைஸ் காரை பே பார்க்கில் நிறுத்தின போது எங்கோ பேட்டரிக்கும்,வயருக்கும் காதல் சூடாகி முன்பக்கமே வண்டி எரிஞ்சு போச்சு.அப்புறம் பாகிஸ்தானி ஒருத்தருக்கு இலவசமா கொடுத்து என்னோட பேரை காப்பாத்திகிட்டேன்.

பின்புறத்தில் எஞ்சினை கட்டிகிட்டு சுத்துற கார் ஜெர்மனியின் வோல்க்ஸ் வேகன் மற்றும் ஹங்கேரியின் பேருந்து.நானோ ஜெர்மனி நுட்பத்தின் டாடா நிறுவன தத்துப்பிள்ளையா?

அப்புறமா ஒற்றை விபத்தை வைத்துக்கொண்டு மட்டும் மொத்த தயாரிப்பையும் எடை போட்டு விடவும் முடியாதல்ல்வா?காரின் Durability என்ன என்று பார்ப்பதும் அவசியமல்லவா?

ஆட்டோவும்,சுமோவுக்குமான இடத்தை நானோ பிடித்துக்கொள்ளூம் சாத்தியம் கூட இருக்குமா?வேணுமின்னே எரித்து விட்டு நானோ மேல் கூட பழியைப் போடும் சாத்தியங்கள் கூட உருவாகுமா?

நகரத்தை விட்டு கிராமபுற்த்துக்கு போனால் ஆட்டோ குலுங்கலில் பிரசவம் ஆவதன் தாக்கம் நானோவால் குறைக்கப் படும்தானே?

ஜோதிஜி said...

தொடக்கத்தில் இது வாகனங்கள் மேல் ஒரு விதமான காதல் இருந்தது. இன்றைய சூழ்நிலையில் போக்குவரத்து நெரிசலில் நடைவண்டி போலவே ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டி இருப்பதால் நடைபயணமே சரியானதோ என்பதாக நினைக்க வேண்டி உள்ளது. நாம் பயந்து பயந்து ஓட்டினால் ஓட்டிக் கொண்டு பயம் காட்ட வருபவர்களை என்னசெய்வது?

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி,வணக்கம்,

//என்னோட களமே தமிழ்மணம்தான்.அங்கே நீங்க இணைக்காத காரணமே மொத்த பிரச்சினைக்கும் காரணம்.//

:-))

என்னது சிறுக்கிய வச்சு இருக்கீங்களா :-))

பெருசுக்கும் ,சிறுசுக்கும் நடுவே மீடியம் சைஸ்னு ஒன்று இருக்கு, வச்சா குடுமி,அடிச்சா மொட்டைனு சொன்னா எப்படி.

நானோவிட பதுகாப்பான மிட் சைஸ் செடான் /காம்பேக்ட் செடான் வகைக்கார்களே சிறந்தது.

நானோவின் டுயுரபிலிட்டியும் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை, பாதி பிளாஸ்டிக்,மேலும் தடிமன்(கேஜ்) குறைவான தகடுகள் கொண்டு கார் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரம் ஓடி முடித்ததும் யூஸ் & துரோ போல தூக்கிப்போட வேண்டியது தான்.

ஆட்டோ எஞ்சின் ஒற்றை சிலிண்டர் இது இரட்டை சிலிண்டர், 625 சிசி, என்ன பெரிய ஆயுட்காலம் இருக்க போகுது.

அமெரிக்கா காரன் போல சொல்லுங்க, வீட்டுக்கு ரெண்டுக்கார் வச்சுக்கிட்டு ஒரு கேலனுக்கே 20 கி.மி போற வண்டி ஓட்டுறாங்க,ஆனால் பொல்லுசன் பத்திலாம் இந்தியாவில கார் வாங்கினா அதிகமாயிடும்னு கவலைப்படணும் :-))

பைக் போன்றவற்றைத்தான் அடிக்கடி எடுப்பாங்க,கார் என்றால் அவ்வளவு சீக்கீரம் எடுக்க மாட்டாங்க, ஸ்டேட்டஸ் பார்க்கிறவங்க தான் காரிலயே வலம் வருவாங்க!

//அப்புறமா ஒற்றை விபத்தை வைத்துக்கொண்டு மட்டும் மொத்த தயாரிப்பையும் எடை போட்டு விடவும் முடியாதல்ல்வா?காரின் Durability என்ன என்று பார்ப்பதும் அவசியமல்லவா?

ஆட்டோவும்,சுமோவுக்குமான இடத்தை நானோ பிடித்துக்கொள்ளூம் சாத்தியம் கூட இருக்குமா?வேணுமின்னே எரித்து விட்டு நானோ மேல் கூட பழியைப் போடும் சாத்தியங்கள் கூட உருவாகுமா//

இது போன்று நினைத்து தான் முதலிலேயே பதிவு போடாமல் இருந்தேன். முதல் பின்னூட்டமாக லின்க் போட்டு இருக்காரே வெங்கி@இம்சை அவர் மூத்த பதிவர் ,இப்போ முகநூல்,துவித்தர் போயிட்டார் போல,அவருக்கும் நானோ விபத்தாகி எரிந்து விட்டது. அவர் போட்ட சுட்டியில் போய் பாருங்க.
இதனை கேபிள் சங்கர் பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டேன் , சரினு இருக்கிற சரக்கை முழுமையாக்கி போட்டது. அவர் பதிவில் வெங்கினு போட்டிருந்தார் அதனால் யாருனு தெரியலை, இப்போ நான் தான் இம்சைனு சொன்னப்பிறகே தெரியுது.

--------------

ஜோதிஜி,

வாங்க,வணக்கம், நன்றி!

ஒரு கார்,வீடு இதெல்லாம் அனைவருக்குமே வாழ்கையில் அடைய வேண்டிய லட்சியமாக இருக்கும், பழகிட்டா புளிச்சிறும்.

நாம பயந்தாலும் அவங்களும் பயப்படுவாங்கன்னு நினைக்கலாமா :-))

என்ன இப்படி டீஸ் செய்தவன தொறத்திக்கிட்டு போய் கேட்டா வண்டி ஓட்ட தெரியாம நீ எல்லாம் எதுக்கு ரோட்டில வர்ரன்னு கேட்கிறான்.என்னத்த சொல்ல :-))

வவ்வால் said...

இம்சை@வெங்கி,

உங்கள் முகநூல்ப்பக்கத்துக்கும்,கேபிள் சங்கர் பதிவுக்கும் இணைப்புக்கொடுத்து ,உங்கள் முகநூல் செய்தியை,புகைப்படத்தையும் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவில் போட்டுவிட்டேன்.நன்றி!

குரங்குபெடல் said...

மலிவாய் இருந்தால் போதும்

ரிஸ்க் பற்றி கவலைப்பட மாட்டார்கள்

நம் ஆட்கள்

என்ற நம்பி கையே

டாட்டாவின் முதலீடு . . .

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு

நன்றி

naren said...

ஆறு மாசத்திற்கு முன்னால் எழுதியிருக்ககூடாது??. இப்ப என் வயிறுதான் நானோ காரை விட நல்ல எரியுது.

ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால்..

நானோ கார் = ஒரு அபாயகரமான cycle car.

வவ்வால் said...

கு.பெ,

நன்றி,வணக்கம்,

நம்மாட்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறாப்போல திருச்சி- சென்னை பேருந்தில் 200 ரூ, லாரி டாப்பில் 50 ரூ ஏறிடுவாங்கல்ல லாரி டாப்பில் :-))

மிச்சம் பிடிச்ச காசுல குவார்ட்டரும் ,குஸ்காவும் சாப்பிட்டு தான் ஏறுவாங்க :-))

-----

நரேன்,

வாரும், நன்றி,வணக்கம்,

ஆறு மாசம் முன்னவா இப்போ போட்டதுக்கே அதெல்லாம் தொழில் போட்டியாக்கும், இல்லைனா ஒன்னு ரெண்டு எரிஞ்சா மேட்டரானு ராஜ நடை கேட்டதைப்பார்க்கலையா/

அப்போ நீங்களும் ஒரு பெருமை மிகு நானோ ஓனரா :-))

எல்லாக் காரும் எரியாது, பெட்ரோல் டுயுப் மாத்தி தர ஆஃபர் கொடுத்து இருக்கான் மாத்திக்கோங்க, நீண்ட தூரம், வேகமா ஓட்டாமல் இருந்தால் எஞ்சின் சூடாவது குறையும்.

நிறையப்பேரும் இதுவும் கார் தானேனு சென்னை- திருச்சி 100 இல விரட்டினா சமயம் போல இல்லாம பத்திக்க செய்யலாம், காரின் அதிகப்பட்ச வேகமே 105 கி.மி/மணி எனவே 100 கி.மீ யில் எல்லாம் ரெட் லைனில் எஞ்சின் ஓடும்.

நீங்க சொன்ன சைக்கிள் கார் என்பதை விட ஷேர் ஆட்டொ என்பது தான் பொருத்தமா இருக்கும் இதுக்கு.

வேகநரி said...

//இப்ப என் வயிறுதான் நானோ காரை விட நல்ல எரியுது.//
கவலபடவேணாம் நண்பர் நரேன். அனுபவமிக்க பழய கார் நிறுவனங்களின் கார்களே உயிராபத்தான பிழைகளை கொண்டிருப்பதாக தெரிய வந்து recall செய்து திருத்தப்பட்டுள்ளன.

பரிதி முத்துராசன் said...

நண்பரே நல்ல பதிவு

ராஜ நடராஜன் said...

வேகநரி:)அனுபவமிக்க கார் நிறுவனங்களின் கார்களே உயிராபத்தான பிழைகள் கொண்டிருப்பதாக தெரியவந்து...அது என்ன ecall...திரும்ப பெற்று திருத்தப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா?

முந்தைய எஞ்சின் நுட்பமெல்லாம் வண்டி நேராக ஓடுதுன்னு எஞ்சினையும் நேராக படுக்கவச்சுட்டாங்க.பின்பு நேர் எஞ்சின்கள் சிரமங்கள் அதிகம் கொடுக்காமல் ஓடினாலும் பெட்ரோல் குடிக்குது என்பதற்காகவும் வாகனத்தின் அளவைக் குறைக்க வேண்டியும் குறுக்கே உட்கார வச்சிட்டாங்க.

ஓமக்குச்சியை சுமோ சண்டை போடுபவரை தாங்க முடியுமா?ஓமக்குச்சுக்கு எப்படி கால் ஒடியுமோ அப்படித்தான் வாகனத்தின் ஆக்ஸில் பகுதிகள் பிரச்சினை தந்தன.நானே நானோவுக்கும் கூட இந்த பிரச்சினை இருக்குமென உறுதியாக சொல்வேன்.பொருளாதார பின்னடைவால் இரும்புல இருந்த பாகத்தை பிளாஸ்டிக் எளிய எடை கொண்டதாக மாற்றியது,பேட்டரி பிரச்சினைகள் என பல இருந்தும் அவசர அவசரமாக மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்வது என பல காரணங்களால் வாகனங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப் பட்டன.வாகனம் திரும்ப பெற்றுக்கொள்வதற்கு நிறுவனத்தின் நேர்மை பாதி காரணமாகவும் கன்ஸ்யூமர் கோர்ட்கள் மேற்கத்திய நாடுகளில் சிறப்பாக செயல்படுவதும் கூட மீதி காரணம்.

வேகநரி said...

//ராஜ நடராஜன் said... வாகனம் திரும்ப பெற்றுக்கொள்வதற்கு நிறுவனத்தின் நேர்மை பாதி காரணமாகவும் கன்ஸ்யூமர் கோர்ட்கள் மேற்கத்திய நாடுகளில் சிறப்பாக செயல்படுவதும் கூட மீதி காரணம்//
உண்மை தான்.