சமீப நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக வரலாறுக்காணாத அளவில் வெகுவாக குறைந்து வருகிறது ,தற்போதைய நிலவரப்படி ஒரு டாலரின் மதிப்பு 54.47 ரூ ஆகும்.
ரூபாயின் மதிப்பு குறைய காரணங்களாக சொல்லப்படுவன,
அமெரிக்க பொருளாதாரமே சரிவில் இருந்தாலும் அதன் நாணய மதிப்பு உயர்ந்த்து வருவது எப்படி என சந்தேகம் எழலாம், உண்மையில் வேறு எந்த ஒரு நாடாக இருந்தாலும் நாணய மதிப்பு குறைந்து இருக்கும்,ஆனால் அமெரிக்க டாலர் என்பது சர்வதேச அளவிள் பல நாடுகளுக்கு தேவையான ஒரு அன்னிய செலவாணியாக இருப்பதே இதற்கு காரணம்,
சர்வதேச அன்னிய செலவாணி தகுதி எப்படி டாலருக்கு கைக்கொடுக்கிறது எனில், தற்போது யூரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை,சரிவு ஆகியவற்றாலே,அதுவும் கிரீஸில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் யுரோவின் நாணய மதிப்பு சரிவடைகிறது,எனவே பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் வசம் இருக்கும் யூரோவிற்கு பதிலாக டாலரை கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பி அதிக அளவில் வாங்குகின்றன.
மேலும் நிதி நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்களும் டாலரை அதிகம் கையிருப்பு வைத்திருக்க வாங்குகின்றன.அதோடு அல்லாமல் இந்திய ஏற்றுமதியாளர்கள்,மற்றும் வங்கிகளுக்கு யூரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளே சுமார் 40% சதவீத டாலர் பரிவர்த்தனை செய்து வந்தன, அவற்றை பெருமளவு குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.
டாலரின் மதிப்பு உயர்ந்தால் இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும் இதனால் என்ன கஷ்டம்,நஷ்டம் ,யாருக்கு லாபம் எனப்பார்க்கலாம்.
இந்தியா ஆரம்ப காலம் தொட்டே ஒரு இறக்குமதி நாடு அதாவது நாம் ஏற்றுமதி செய்வதன் மொத்த மதிப்பை விட இறக்குமதி செய்வதன் மொத்த மதிப்பு அதிகம், இதனை ஒரு நாட்டின் நிகழ்கால நிதிக்கணக்கில் (current account of nation)பற்றாக்குறை பட்டுவாடா நிலை (Balance of payment -deificit) என்பார்கள்.
உதாரணமாக இப்படி சொல்லலாம், நாம் 1000 டாலருக்கு உற்பத்தி பொருளை/சேவையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம் எனில் 1500 டாலர் மதிப்பிலான பொருட்களை/சேவைகளை வெளிநாட்டில் இருந்து இறக்கு மதி செய்து விடுகிறோம்.இதனால் என்ன ஆகிறது எனில் ஏற்றுமதி செய்வதால் கிடைத்த 1000 டாலர் தான் இறக்குமதிக்கு செலவிட அல்லது கொடுக்க இருக்கும், மீதி 500 டாலர் கைவசம் இருக்காது பற்றாக்குறையாக போகிறது.
ஒரு பாடல் பாமா விஜயத்தில் வருமே அதான் வரவு எட்டணா,, செலவு பத்தண்ணா அதிகம் இரண்டனா துந்தனா ..துந்தனா தான் எப்போதும் இந்தியாவுக்கு.
பொதுவாக ஆரோக்கியமான நிதி நிலைமை உள்ள நாட்டில்,
இறக்குமதி=< ஏற்றுமதி
என இருக்கும், அப்படிப்பட்ட நாட்டுக்கு மற்ற நாடுகளில் இருந்து அன்னிய செலவாணி வந்து குவியும் அந்நாட்டை உபரி நாடு என்பார்கள்.
இந்தியாவில்,
இறக்குமதி >ஏற்றுமதி
இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகம் இருப்பதால் நமது பணம் நாட்டில் இருந்து வெளியில் செல்லும் நிலை,எனவே அன்னிய செலவாணி பற்றாக்குறையாக இருக்கும்.
அல்லது ,
ஏற்றுமதி= இறக்குமதி
என சம நிலையில் இருந்தாலும் ஆரோக்கியமான பொருளாதாரம் எனலாம்.
இந்தியா ஒரு பற்றாக்குறை நாடு , நமது இறக்குமதியின் மதிப்பு 75 பில்லியன்ன் டாலர்கள், ஏற்றுமதியை விட 15 பில்லியன்ன் டாலர்கள் அதிகம. எனவே பற்றாக்குறை(Balance of payment) 15 பில்லியன் டாலர்கள்.
அந்நிய செலவாணிப்பற்றாக்குறையை எப்படி அரசு சமாளிக்கும் எனில், அந்நிய நாடுகளிடம் கடன் வாங்கியோ, அல்லது கடன் பத்திரம் கொடுத்து அல்லது பங்கு சந்தையில் வாங்கி என.
இப்போது ஒரு அணைக்கட்ட ஒரு பில்லியன் டாலர் உலக வங்கியிடம் கடன் வாங்குகிறோம், எனில் அதனை எப்படி இந்தியாவில் செலவு செய்யும் அரசு, வேலை செய்பவர்களுக்கு டாலராக கொடுக்குமா என்ன இல்லை,அதே மதிப்புக்கு இந்திய ரூபாய் அச்சடித்துக்கொள்ளும், அந்த டாலர்களை ரிசர்வ் வங்கியில் அன்னிய செலவாணி இருப்பாக வைத்துவிடும்.
இந்த அன்னிய செலவாணிகள் எதற்குப்பயன்ப்படுகின்றன என்றால் இறக்குமதிக்கு அதில் பெருமளவு பெட்ரோலிய பொருட்களுக்கும்,அடுத்து தங்கம் இறக்குமதிக்குமே செலவாகிறது.
இப்படி பெட்ரோல்,தங்கம் என இறக்குமதி செய்து மீண்டும் டாலர் வெளியில் போய்விடும், அதை குறைக்க ஒரு வழியாகத்தான் அரசு பெட்ரோலிய,தங்க நுகர்வை குறைக்க அவற்றின் மீதி அதிக வரி, விலையேற்றம் எல்லாம் செய்கிறது.இதனால் நுகர்வு குறைய வேண்டும்,ஆனால் நம்ம ஆட்களோ போட்டிப்போட்டுக்கொண்டு அட்சய திருதியை ,அம்மாவாசைனு சொல்லிக்கிட்டு தங்கம் வாங்குவதை குறைப்பதேயில்லை.
பைக்கில் பெண் நண்பியை அழைத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உல்லாச சவாரிப்போவதையும் குறைப்பதில்லை.நாம் தான் காசுக்கொடுத்து விடுகிறோமே அப்புறம் என்ன எனலாம் ,அது ரூபாய் ,பெட்ரோல் இறக்குமதி செய்ய டாலர் அல்லவா வேண்டும்!
அரசுக்கு எப்படி ஏற்றுமதியாலர்களிடம் இருந்து டாலர் கிடைக்கிறது எனப்பார்க்கலாம், மேலும் ரூபாய் மதிப்பு குறைந்தால் மகிழ்ச்சி அடைபவர்கள் யார் எனவும் பார்க்கலாம்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி செய்பவர் அமெரிக்காவிற்கு 1 லட்சம் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்ய ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார், சரக்கு டெலிவரி ஆகும் அன்று அமெரிக்கர் ஒரு லட்சம் டாலர் கொடுப்பார் என ஆர்டர் எடுக்கும் போது ஒப்பந்தம் ஆகிறது எனில் அன்று டாலர் மதிப்பு 45 ரூ என இருக்கு எனில் இந்திய மதிப்பில் 45 லட்சம் ஆகும்.
சரக்கு அமெரிக்காவில் 1 மாதம் பின்னரே டெலிவரி ஆகிறது,அன்று டாலர் திருப்பூர் ஏற்ருமதியாளருக்கு கையில் வரும் அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 50 ரூ ஆகிவிட்டது எனில் அவர் 1 லட்சம் டாலரை வங்கியில் கொடுத்தால் 50 லட்சம் கிடைக்கும்.எதிர்ப்பார்த்தது , 45 லட்சம் ஆனால் 5 லட்சம் கூடுதலாக கிடைத்துவிட்டது.
இந்த காரணங்களுக்காகவே அடிமாட்டு விலைக்கு கூட ஏற்றுமதி செய்ய திருப்பூரில் பலரும் முன்வருகிறார்கள். உற்பத்தி செய்த பொருளை அடக்க விலைக்கு விற்றாலும் அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தின் மூலம் லாபம் கிடைக்கும் என கணக்குப்போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.பலரும் ஏற்றுமதி ஆர்டர் எடுத்துவிட்டு டெலிவரி நாளுக்குள் டாலர் மதிப்பு உயர வேண்டும் என டென்ஷனுடன் இருப்பார்கள் ;-))
இதிலும் அபாயம் உண்டு , டாலர் மதிப்பு குறைந்து விட்டால் கையை சுட்டு விடும்,காரணம் மிக குறைவான விலைக்கு ,அதிலும் உள்நாட்டு விலையை விட குறைவான விலைக்கு விற்க ஒப்பந்தம் போட்டு இருப்பவர்கள் அதிகம்.
உதாரணமாக ஒப்பந்தம் அன்று ஒரு டாலர் 45 எனப்பார்த்தோம், டெலிவரி அன்று 40 ரூபாயாக டாலர் குறைந்து விட்டால் ,திருப்பூராருக்கு ஒரு லட்சம் டாலருக்கு 40 லட்சம் தான் கிடைக்கும், ஏற்கனவே அடிமாட்டுக்கு விலைக்கு பேசி இருப்பதால் 5 லட்சம் குறைந்தால் பெரும் நட்டம் ஆகிவிடும்.
இந்திய அரசுக்கோ டாலர் மதிப்பு குறையணும், திருப்பூர் ஏற்றுமதியாளருக்கோ உயரணும், நாட்டை விட அவர் வியாபாரம் முக்கியம் இல்லையா?
இந்த அபாயத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர் தவிர்க்க முடியாதா எனக்கேட்கலாம் முடியும் ,
விலைப்பேசும் போதே குறிப்பிட்ட லாபவிகிதம் வைத்து வழக்கமான வியாபாரம் போல ஒப்பந்தம் போடலாம், ஆனால் அப்படி செய்யாமல் போட்டியில் தனக்கே ஆர்டர் கிடைக்க வேண்டும் என போட்டிப்போட்டுக்கொண்டு விலையை குறைத்து பேசுவார்கள்,பின்னர் அன்னிய செலவாணி மூலம் சரிக்கட்டிக்கலாம் என்று. இது தேவையற்ற அபாயகரமான ஒரு வியாபார அணுகுமுறை ஆகும். இதனாலே இப்பொழுது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளார்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இப்போது நிலவும் டாலர் மதிப்பைப்பார்த்து ஆனந்தத்தில் மிதப்பார்கள் என நினைக்கிறேன்.
அதோடு அல்லாமல் வங்கி மூலம் முன் வியாபார ஒப்பந்தம்(Forward contract) போட்டாலும் நட்டம் வராமல் தடுக்கலாம். எப்படி எனில் இன்று டாலர் 45 ரூ எனில் ஒரு மாதம் கழித்து டெலிவரி ஆகும் போதும் அதே விகிதத்தில் பணம் தரும் வங்கி.அதாவது டாலர் மதிப்பு குறைந்தால் வரும் நட்டத்தினை வங்கி ஏற்றுக்கொள்கிறது. இதனால் எதிர்காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற பயம் ஏற்றுமதியாளருக்கு இல்லை.
சரி வங்கி ஏன் தானாக முன்வந்து இதை செய்ய வேண்டும், ஏன் எனில் அரசுக்கு டாலர் தேவை பெட்ரோல் வாங்க ,எனவே வங்கிகள் மூலம் இப்படி திரட்ட ஏற்பாடு. மேலும் ஒரு காரணம் இருக்கு , இப்போ டாலரின் மதிப்பு ஒரு மாதம் கழித்து 50 ரூ ஆனால் அப்போதும் ஏற்றுமதியாளருக்கு 50 லட்சம் கொடுக்காது, முன் வியாபார ஒப்பந்தம் போட்டப்போது 45 ஒரு டாலர் என்ற விகிதத்தில் 45 லட்சம் மட்டுமே கொடுக்கும், மீதி 5 லட்சம் வங்கிக்கு லாபம்..ஹி..ஹி இப்போ தெரியுமே வங்கி ஏன் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறாப்போலனு முன் வந்தது என :-))
இதனாலே திருப்பூர்காரர்கள் என்று இல்லை பெரும்பாலான இந்திய ஏற்றுமதியாளர்கள் முன்வியாபார ஒப்பந்த்தினை வங்கி மூலம் போடாமல் ,அவர்களே ரிஸ்க் என்ற ரஸ்க் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்,சில நேரம் ரிஸ்க்,பல நேரம் ரஸ்க் கிடைக்கும், இப்போ ஏற்றுமதியாளர்கள் ரஸ்க் சாப்பிடும் நேரம் :-))
ரூபாய் சரிவால் அரசுக்கு கூடுதலாக செலவு செய்து டாலர்கள் வாங்க வேண்டியதாகிறது.அப்படி கூடுதலாக செலவு செய்து டாலர் வாங்கி ,அதில் பெட்ரோல் வாங்கி, பழைய விலையில் விற்றால் நட்டம் என சொல்லித்தான் பெட்ரோல் விலையை ஏற்றுகிறது அரசு. அரசும் கையை சுட்டுக்க விரும்பாது தானே.பெட்ரோல் விலையில் பாதி அரசின் வரி என முன்னரே ஒரு பதிவில் பார்த்துள்ளோம், வரியை குறைத்தாலே போதும் ஆனால் செய்ய மாட்டார்கள், ஒரு வியாபாரிப்போல ஏற்றியதைக்குறைக்காமல் மீண்டும் ஏற்றவே பார்ப்பார்கள்.
இங்கே இன்னோன்றையும் கவனிக்க வேண்டும், டாலர் மதிப்பு உயர்கிறது என்றால் அது உலக அளவிலும் உயர்ந்து தானே இருக்கும், எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும், இதனால் முன்னர் ஒரு பேரல் 100 டாலர் எனில் ,மதிப்பு உயர்வுக்கு ஏற்ப குறைந்து விடும் அதாவது ஒரு பேரல் 90 டாலருக்கே கிடைக்கும்,கிடைக்க வேண்டும், எனவே சரிந்த ரூபாயால் ஏற்பட்ட இழப்பு ஒரு அளவுக்கு சமன் ஆகி நாம் கொடுக்க வேண்டிய டாலர் அளவு குறைந்துவிடும், எனவே அரசுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் பெருமளவு நட்டம் வர வழியில்லை, ஆனால் அரசோ தட்டையாக டாலர் விலை ஏறிவிட்டது எனவே பெட்ரோல் விலை ஏற்றப்போகிறோம் என சொல்லி மக்கள் தலையில் விலையை கட்டிவிடும் :-((
ரூபாய் சரிந்தால் ஏற்றுமதியாளருக்கு கொண்டாட்டம், அரசும் நட்டம் எனப்புலம்பினாலும் உண்மையில் பெரிய நட்டம் இருக்காது ஆனால் அஷ்டகோணாலாக முகத்தினை வைத்துக்கொண்டு நிதியமைச்சர் என்னமோ வேண்டா வெறுப்பாக செய்வது போல பெட்ரோல் விலையை ஏற்றிவிடுவார், உண்மையில் இதில் உதைவாங்குவது பொது ஜனமாகிய நாம் தான் :-))
# ரூபாய் மதிப்பு சரிவை சரிக்கட்ட அரசு என்ன செய்யும் எனில்,
1)ரிசர்வ் வங்கியில் உள்ல கையிருப்பு டாலர்களை பயன்படுத்தும்,நீண்ட நாட்கள் சரிவு நீடித்தால் கஷ்டம் தான்
2)தங்கம் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கும்,அல்லது வரி உயர்த்தி இறக்குமதியாளர்களை விரட்டும்.
3)வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,இந்திய வங்கியில் வைப்பு நிதியாக வைத்தால் அதிக வட்டி தரும் என அறிவிக்கும். இதனால் டாலர் வரத்து அதிகரிக்கும்.
4)இந்தியாவில் உள்ளப்பெரிய ஏற்றுமதியாளர்கள் கைவசம் எப்போதும் பெரிய அளவில் டாலர்கள் இருக்கும்,அதில் 50% கண்டிப்பாக வைப்பு நிதியாக வைக்க சொல்லும் மேலும் கூடுதல் வட்டியும் தருவதாக சொல்லும்.
5)கடன் பத்திரங்கள், வெளிநாட்டு வங்கிகள், நாடுகளிடம் கடன் வாங்கும், சில நாடுகளுடன் அன்னிய செலவாணி ஒப்பந்தங்கள் உள்ளது அதன் மூலம் சமாளிக்கும்.
உ.ம்: ஜப்பானுடன் ஒரு அன்னிய செலவாணி உதவி ஒப்பந்தம் இருக்கிறது, இது போல சரிவு வரும் போது ஜப்பான் 15 பில்லியன் அமெரிக்க டாலர் க்டன் கொடுத்து உதவ வேண்டும், அதே போல இந்தியாவும் கொடுத்து உதவ வேண்டும்.
இன்னும் பல நடவடிக்கைகள் இருக்கு. முடிந்தவரைக்குறிப்பிட்டுள்ளேன்.
பின் குறிப்பு:
#ரூபாய் சரிவால் இன்னும் பல விளைவுகள் இருக்கு, முக்கியமாக பங்கு சந்தை தள்ளாடும், வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க முன்வருபவர்கள் குறைவார்கள், உற்பத்தி பாதிக்கும் எனலாம் பிரச்சினை இருக்கு,இங்கு ஒரு சில பிரச்சினைகளை மட்டும் அலசி இருக்கேன், மற்றவற்றை நேரம் இருப்பின் தொடர்கிறேன்.
பொருளாதார விளைவுகளை முழுமையாக ஒரே பதிவில் பேசிவிட முடியாது ,இது ஒரு எளிய முயற்சியே. மேலும் பல விவரங்களை எளிமையாக சொல்ல வேண்டும் என லேசாக சொல்லி இருக்கேன், முழுமையாக சொல்லவில்லை என மேதைகள் மல்லுக்கட்டக்கூடும் என்பதால் இந்த முன் ஜாமின் :-))
# தகவல்,படங்கள், கூகிள், ரெடிப், எகனாமிக் டைம்ஸ் இணைய தளங்கள்,நன்றி!
*****
8 comments:
ada namma vovs, great shot buddy! keep rocking :)
வாங்க தெ.கா,
என்ன நடமாட்டமே காணோம்?
அது சரி என்னமோ எதிர்பாராம பார்த்தா போல அட நம்ம வவ்ஸ்னு ஒரு ஆச்சர்யம்?
என் வூட்டுல நான் குட்டிக்கரணம் போடாம வேற யார் போடுவா?
பாராட்டுக்கு நன்றி,தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்போம் :-))
வவ்வாலுக்கு அ வா அல்லது ஓ வா!புக் மார்க் போடறதுக்கு கேட்டேன்.
தெகா!நலமா?
அய்யா அமீர்கான்...சே!அமர்த்தியா சென் முக்கியமான விவாதத்தை தொட்டு விட்டு எங்கே பெட்ரோலை விட்டுடுவீங்களோன்னு படிச்சிகிட்டே வந்தா பைக்கில் பெண் நண்பியை அழைத்துக் கொண்டு செல்லும் நண்பர் வந்து காப்பாத்தி விட்டார்.அமெரிக்க டாலரையே நம்பி உலக வியாபாரம் செய்வதற்கு டாலர் மீதான வளைகுடா பெட்ரோல் பொருளாதாரமும் ஒரு காரணம்.இதனை மாற்றி அமைத்து ஈரோவில் தான் விற்பேன் என்று சதாம் அடம்பிடிச்ச காரணத்துனாலதான் ஈராக்கின் தலைவிதியே மாறிப்போனது.
திருப்பூர் ஆடை வியாபார அலசல் அபாரமென்றாலும் கூட நீங்கள் சொல்லும் காரணங்கள் திருப்பூர் வியாபாரம் உறங்கிப் போனதுக்கு காரணங்களில் ஒன்றாக இருந்த போதிலும் திருப்பூர் அன்னிய செலவாணி குறைந்து போனதற்கும் வியாபார சீர்கேட்டுக்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.
எனக்கு இந்தியா மற்றும் சீனா ஆடைகள் கிடைக்கின்றன.ஆனால் இந்திய ஆடைகளை தேடிப்பிடித்தாகனும்,சீனா ஆடைகள் தடுக்கி விழுந்தா ஒவ்வொரு கடையிலும் கிடைக்கும்.காரணமென்னவென்று பார்த்தால் விலை நிர்ணயம்.ஒரு தரமான இந்திய ஆடையை 300 ரூபாய் கொடுத்து வாங்குவதை விட 300 ரூபாய்க்கு 150வீதமாக இரண்டு சீனா ஆடையை வாங்கி விடலாம்.
ஆடைத்துறை நண்பர் ஒருவருக்கு மார்க்கெட் பிடிக்கலாமென்று மார்க்கெட்டா அலைந்தேன்.விலையின் காரணமாக தேறல.
நான் round neck விஜய் ஸ்டைல் MRG என்ற நிறுவனத்தின் உள் பனியன்களையே அணிகிறேன்.திருப்பூர்ல தேடிப்பிடிச்சாலும் கூட வெளிமார்க்கெட்டில் கிடைக்கவில்லை.அத்தனையும் ஏற்றுமதியோ தெரியவில்லை.இப்ப அந்த பனியனையும் காணோம்.பனியன் விற்ற சேட்டனையும் காணோம்.
நிர்வாக சீர்கேடுகள் குறித்த விரிவான ஆய்வுகளை பதிவர் ஜோதியின் பதிவுகளில் காணலாம்.
நான் முன்பே எங்கோ திருப்பூர் ஆடை உற்பத்தியை சென்னைப் பக்கம் நகர்த்தி விட்டு திருப்பூரை விவசாய நிலங்களாக உருவாக்கலாமென்று கருத்து சொல்லியிருந்தேன்.
அன்னிய செலவாணி பற்றி இன்னுமொன்று சொல்ல மறந்து விட்டேன்.1990ம் வருட கால கட்டத்தில் கடனாளியாக இருந்த இந்தியா இருக்குற தங்கத்தையெல்லாம் விற்று திவாலாகாமல் பார்த்துக்கொண்டதுடன் வெளிநாடுகளில் பணிபுரிவோர்களுக்கான அன்னிய செலவாணி பெறுவதில் முனைப்புடன் செயல்பட்டன அத்தனை இந்திய வங்கிகளும்.200ம் வருட காலகட்டத்துல பார்த்தா அன்னிய செலவாணி அதிகமாயிட்டதாம்.அதனால் வரும் காசை என்ன செய்யறதுன்னு தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த போது 2008,2009ம் வருட காலத்தில் நீ காசு தராவிட்டால் நான் சீனாக்காரன் கூட சேர்வேனாக்கும்ன்னு சொல்லி இலங்கை மிரட்டும் நிலையில் இப்ப 2 பில்லியன் கடனை இலங்கைக்கு write off செய்கிறதாம் இந்தியா.
நகை அதிகமாக புழங்குற நாடு இந்தியா என்பதும்கூட நகை விலை உயர்ந்தாலும் லபோ திபோன்னு நகைக்கடைக்கு ஓடுவதும் கூட டாலர் ஏறு இறங்குமுகங்களின் காரணங்களில் ஒன்று.
இன்னும் தேடுறேன்.
வவ்!Outsourced ன்னு ஒரு படம் பார்த்தேன்.முடிஞ்சா பார்த்துட்டு என்ன விதமான உணர்வுகளை படத்தின் துவக்கம் உங்களுக்கு உருவாக்குகிறது என்பதை சொல்லுங்கள்.முடிந்தால் பதிவு போடுகிறேன்.
வாங்க ராஜ்,
நன்றி!,
வவ்வாலுக்கு "வ" தானே?
நீங்க குறிப்பிட்டது பலவும் பதிவிலும் சொல்லப்பட்டுள்ளது, உங்கள் கருத்தும் ஒத்துபோவதால் அடுத்து போவோம்.
அன்னிய செலவாணி தட்டுப்பாடான நிலையில் இறக்குமதி அளவை குறைப்பதன் மூலம் சமாளிக்க முடியும், ஆனால் பெட்ரோல்,தங்கத்தின் இறக்குமதியை குறைத்தால் மக்களுக்கு தட்டுப்பாடு வரும் அதை விமர்சிப்பார்கள், அதற்குப்பதில் வெளிநாட்டில் விலை ஏறிவிட்டது என சொல்லி விலையை ஏற்றினால் மக்களே தேவையை குறைப்பார்கள் என அரசின் திட்டம் ,ஆனால் இந்தியாவை பொருத்தவரை பெட்ரோல்,தங்கத்தின் டிமாண்ட் இன் எலாஸ்டிக் (நெகிழ்வு அற்றது) , விலை ஏறினாலும் நுகர்வு குறையவில்லை.மார்ஷல்-லென்னர் தியரிக்கே சவால் விடுகிறார்கள் மக்கள்(தியரியை சொன்னால் விளக்கணும் என்பதால் பதிவில் சொல்லாமல் விட்டேன்).
----
அவுட் சோர்ஸ்டு ஆஹ் ரொம்ப பழைய படம் ஆச்சே, டோட்(டாட்) என்ற அமெரிக்கன் மும்பை அருகே கால்சென்டருக்கு வரும் கதை தானே.
முடிவில் சீனாவுக்கு கால் சென்டர் போகும், இந்த படத்தை ரொம்ப நாட்களுக்கு முன்னர் உதாரணமாக சொல்லியிருக்கிறேன்.
என்னது!அவுட்சோர்சுடு ஏற்கனவே பார்த்து உதாரண்மும் கொடுத்திட்டீங்களா?
டாடை டாட்ன்னா இந்திய உச்சரிப்பில் பொருள் மாற்றம் வந்துவிடுமென்பதன் முன்னெச்சிருக்கையே டோட்:)
Post a Comment