Wednesday, June 13, 2012

ஜம்பிங்க்,பம்பிங்க்,பெட்ரோல் பங்க்!




மீண்டும் ஒரு முறை வீடு திரும்பல் மோகன் தாண்டிய பாதிக்கிணறை நான் தாண்டி முடிக்க வேண்டியதாயிடுச்சு. பெட்ரோல் பங்க் கொள்ளைகள் என்ற அவரது பதிவில் ,பெட்ரோல் நிரப்பும் போது செய்யப்படும் திரிசமன்களை சொல்லியிருந்தார், அதில் ஜம்பிங் ஆகிறது எப்படி என தெரியவில்லை என வருத்தமுற்றிருந்தார், அவரது வருத்தத்தை போக்கவும் வாட்டத்தை நீக்கவும், பெட்ரோல் போடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில நுகர்வோர் குறிப்புகளையும் இப்பதிவில் காணலாம்.

இப்படி அவர் பாதியில விட்டதை எல்லாம் எடுத்து போட்டு முழுசா முடிக்கும் எனது சேவையைப்பாராட்டி ஏதேனும் சன்மானம் அளிப்பாரா? :-))

பெட்ரோல் பம்ப் வரலாறு:

பெட்ரோல் நிரப்ப மீட்டருடன் கூடிய பம்பினை முதன் முதலில் 1905 இல் வடிவமைத்தவர், Sylvanus Bowser என்ற அமெரிக்கர். இது கையால் இயங்க கூடியது.

பின்னர் 1933 இல் the Wayne Oil Tank & Pump Company, என்ற அமெரிக்க எண்ணை நிறுவனம் மோட்டாரில் இயங்கும் ,லிட்டர்,விலை காட்டும் மீட்டருன் கூடிய மெக்கானிக்கல் பம்பினை வடிவைமைத்து காப்புரிமையும் பெற்றார்கள். அண்மையில் டிஜிட்டல் வரும் வரை ஓடியது இம்மெஷின் தான். இந்தியாவில் இன்றும் பல இடங்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கு.

பெட்ரோல் பம்பில் ஏற்படும் ஜம்பிங் இரண்டு வகையில் ஏற்படும்,

#இயல்பானது

#தில்லு முல்லு ஜம்பிங்!

இயல்பான ஜம்பிங்:

பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடியது, எனவே சாதாரண அறை வெப்ப நிலையிலேயே ஆவியாகும், மேலும் வெப்பம் அதிகமான நிலையில் இன்னும் ஆவியாகும். பெட்ரோல் பங்கில் நிலத்தடி டேங்கில் பெட்ரோல் இருக்கும், வெப்பத்தினால் அதில் பெட்ரோல் ஆவியாகி இருக்கும்.

டேங்கில் வாயு நிலை பெட்ரோலை பிடித்து வைக்க ரிடெய்னர் மெக்கானிசம் உண்டு. டேங்கில் ஆவி மேலும் ,திரவம் கீழும் இருக்கும், ஆனால் அதிக ஆவியாதல் நடக்கும் போது திரவத்தில் கரைந்தும் இருக்கும். கார்பனேட்டட் சோடா போல.மேலும் டேங்கில் இருந்து டெலிவரி ஆகும் பம்ப் வரையில் இருக்கும் குழாயிலும் பெட்ரோலிய ஆவி இருக்கும்.


மீட்டர் பம்ப் மெசினில் இருக்கும் , பெட்ரோல் போட நாசில் உள்ள பம்ப் கன் இல் லீவரை அழுத்தியதும் மீட்டர் வழியாக முதலில் வருவது சிறிது பெட்ரோலிய ஆவியே.சோடா பாட்டிலை திறந்ததும் புஸ்ஸென வேகமாக வாயு வெளியேறுவது போலவே பம்பிலும் வேகமாக வரும், இதனால் மீட்டரில் ரீடிங் படக்கென ஓடும் , இதுவே ஜம்பிங்.இப்படிவரும் வாயு காற்றில் போனாலும் நாம அதுக்கும் சேர்த்து தான் காசு கொடுக்கணும்.

இயல்பான ஜம்பிங் எனில் மீட்டர் ஓடத்துவங்கும் ஆரம்பத்தில் மட்டும் வரும், தில்லு முல்லு ஜம்பிங் எனில் ஒவ்வொரு லிட்டருக்கும் ஒரு முறை ஜம்ப் ஆகும்.

இது வாயு தொல்லையால் வரும் ஜம்பிங் , இன்னொரு ஜம்பிங்கும் இயல்பா வரக்வாய்ப்புண்டு,காரணம் பம்ப் மெஷினில் மீட்டர் இருக்கும் அங்கு தான் அளக்கப்படுகிறது,ஆனால் மெஷின் டு நாசில் வரையில் இருக்கும் குழாயிலும் எப்போதும் பெட்ரோல் இருக்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் மீட்டர் வழியாக வரும் போது குழாயில் இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோலையே முதலில் நமது வாகனத்துக்கு அனுப்பும்.இப்படியே தொடர்ந்து பெட்ரோல் வரும்.

இப்போது டெலிவரி குழாயை பார்த்தீர்களானால் பல சுருள்களாக வளைந்து ,நெலிந்து கிடக்கும், இதனால் அதில் முழுவதும் பெட்ரோல் நிரம்பி இருக்காது உள்ளே கொஞ்சம் வெற்றிடம் இருக்கும். இது குழாயை நகர்த்தும் போது "flexing of tube" மூலம் வெற்றிடம் உருவாகும்.எனவே மீட்டர் வழியாக வரும் பெட்ரோல் அதையும் நிரப்ப வேண்டும்,அதனாலும் மீட்டரில் ஓட்டம் இருக்கும் ஆனால் அப்போது நமக்கு பெட்ரோல் வராது.இப்படி வாயுவும், வெற்றிடமும் சேர்ந்து மீட்டர் ஓடத்துவங்கும் போது ஜம்பிங் ஆக்கும், ஆனால் இது முன் சொன்னது போல தொடர்ந்து பெட்ரோல் போடும் போதும் நிகழாது. பெட்ரோல் பம்ப் ஸ்டார்ட் ஆகும் போது மட்டும் நிகழணும். இது இயல்பானது வெளிநாட்டில் உள்ள பெட்ரோல் பங்கிலும் நிகழும்,என்ன தான் நவீன மெஷின் போட்டாலும் கட்டுப்படுத்த முடியாது.

இதில் வெகு குறைவாகவே பெட்ரோல் விரயம் ஆகும் நமக்கு. பெட்ரோல் நிறுவனங்களே இதை எல்லாம் கணக்கில் கொண்டு "+ or- "1% (-.5 எனவும் சொல்கிறார்கள்)அளவில் தான் பெட்ரோல் அளவு இருக்கும் என அதிகாரப்பூர்வமாவே சொல்லியுள்ளார்கள்.

ஒரு லிட்டர் வாங்கி அளந்துப்பார்த்தால் 990 மி.லி மட்டும் இருந்தால் வழக்கு கூட போட முடியாது.1% என்பது அங்கீகரிக்கப்பட்ட முகத்தல் அளவை நிர்ணய பிழை ஆகும்.

தில்லு முல்லு ஜம்பிங்:

பெட்ரோல் பம்பில் இரண்டு வகையான மீட்டர் ஓடும், முதலில் எத்தனை லிட்டர் எனக்காட்டும் அடுத்து அதற்கு தொடர்பாக விலையைக்காட்டும்.

பழைய பம்பில் எல்லாமே மெக்கானிக்கல் முறை , டெலிவரிக்கு போகும் குழாயில் மீட்ட்ர் கருவி இருக்கும், அதனுடன் தொடர்புடையாதாக ஒரு கியர் அமைப்பு இருக்கும் அது ஒரு லிட்டருக்கு இத்தனை எண்ணிக்கை என சிறிய யூனிட்களாக பிரிக்கப்பட்டிருக்கும், பொதுவாக அளவுக்காட்டும் கியர் 10 யூனிட்களாக இருக்கும் , அது 0-9 ஆகும், கியரில் ஒரு பற்சக்கரம்ம் நகர்ந்தால் அளவுக்காட்டும் மீட்டரில் ஒரு யூனிட் நகர்ந்து காட்டும். அதற்கு ஏற்ப விலைக்காட்டும் பற்சக்கரம் காலிபரேஷன் செய்யப்பட்டு இருக்கும்.

ஒரு லிட்டர் பெட்ரோல் 74 ரூ எனில் ஒரு லிட்டரில் உள்ள 10 யூனிட்களுக்கு ஏற்ப சமமாக பிரிக்கப்பட்டிருக்கும் 74 ரூபாய்.

அதாவது ஒரு யூனிட் பெட்ரோல் ஓடினால் ரூ 7.4 என விலையில் காட்டும் வகையில் காலிபரேஷன் செய்வார்கள்.

இப்போது பெட்ரோல் விலை ஏறுகிறது எனில் மீட்டரில் பழைய விலையேவா காட்டும், அளத்தல் மீட்டரில் ஒரு லிட்டர் 10 யூனிட் என்பது அதே தான் ஆனால் விலையை மாற்ற வேண்டும் அல்லவா, எனவே விலையை மாற்றி ரீ-காலிபரேஷன் செய்யும் வசதியுண்டு.விலையேறியதற்கு ஏற்ப ரூபாயைக்காட்டும் கியரில் மாற்றம் செய்வார்கள்.
இப்படி மீட்டர் ரீடிங்கில் மாற்றம் செய்ய இருக்கும் வசதியைக்கொண்டு தான் தில்லுமுல்லு செய்து ஜம்பிங் செய்ய வைப்பார்கள். பொதுவாக இந்த மீட்டர் அமைப்பு சீல் செய்து இருக்கும், பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் தான் கை வைக்க முடியும்.ஆனால் திருடனும்னு முடிவு செய்துட்டா பயப்படுவாங்களா என்ன?

ஆட்டோ மீட்டர்ல சூடு வைப்பது என்று சொல்வார்களே அதுவும் இப்படித்தான் கிலோமீட்டர் ஓடாமலே தொகை ஓடிக்காட்டும் :-))

சூடுவைப்பது என்று சொல்லக்காரணம் ,சால்டரிங் அயர்னால் மீட்டரில் உள்ள ஒரு சில கியர் பற்களை உருக்கி அழித்துவிடுவார்கள்,எனவே அந்த பல்லுக்கான யூனிட் வேகமாக ஓடி தொகைக்காட்டும்.

பெட்ரோல் பம்பில் உள்ளே திருத்தி அமைக்க வசதியும் இருப்பதால் சீலை உடைத்து மாற்றியமைத்துவிட்டு மீண்டும் சீல் செய்துவிடுவார்கள்.அதிரடியாக ரெய்டு செய்து பல சமயங்களில் பெட்ரோலிய அதிகாரிகள் கண்டுப்பிடித்தும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் எச்சரிக்கை,அபராதம் என முடிந்துவிடும், எப்போதாவது லைசென்ஸ் கேன்சல் என போவதுண்டு.

பெட்ரோல் பம்ப் மெக்கானிசம்

இது மெக்கானிக்கல் பம்ப்பில் ,டிஜிட்டல் பம்ப்பிலுமா செய்வார்கள் எனக்கேட்கலாம், ஆனால் எந்தப்பம்பும் முழு டிஜிட்டல் கிடையாது, எலெக்ட்ரோ மெக்கானிக்கல் மீட்டர் ரீடிங்க் தான்.

கியர் அமைப்பில் பங்க் காரார்கள் கை வைக்கவில்லை என்றாலும் நாட்போக்கில் தேய்மானம் ஏற்பட்டு ஜம்பிங்க் ஆக வாய்ப்புண்டு,எனவே அதற்கு மாற்றாக உருவானது தான் எலக்ட்ரோ மெக்கானிக்கல் மீட்டர். இதில் கியர் இல்லாமல் ஒரு சக்கரத்தினை மட்டும் வைத்து அதில் சில வண்ணக்குறியீடு,அல்லது ஸ்கேனர் படிக்கும் வகையில் குறியீடு செய்து இருப்பார்கள்.

ஒரு சக்கரம் முழு சுழற்சி 360 டிகிரி எனவே ஒரு சுழற்சியை 10 யூனிட் என சம டிகிரி அளவில் பிரித்து அதில் எலக்ட்ரானிக் ஸ்கேனார் படிக்கும் வகையில் குறியீடு செய்துவிடுவார்கள்.

ஒரு லிட்டர் ,10 யூனிட்=360 டிகிரி எனில்

ஒரு யூனிட் =360/10=36 டிகிரி

அதாவது மீட்டரில் உள்ள சக்கரம் 36 டிகிரி சுழன்றால் ஒரு யூனிட் எனக்கணக்கெடுக்கும். பின்னர் அதற்கேற்ப லிட்டர், விலை எனக்காட்டும் வகையில் டிஜிட்டல் டிஸ்ப்ளே மட்டுமே. இந்த இடத்தில் பயன்ப்படுவது "re programmable " கால்குலேட்டர் வகை சிப் தான் இருக்கும்.

பெட்ரோல் விலை ஏறும் போதெல்லாம் ,அதற்கு ஏற்ப எளிதாக ரி.கேலிபரேஷன் செய்ய முடியும். எனவே டிஜிட்டல் எனப்படும் எலக்ட்ரோ மெக்கானிக்கல் பம்ப் மீட்டரில் எளிதாக திருத்தி அமைத்து விட முடியும், ரெய்டு வருகிறார்கள் என தெரிந்தால் மீண்டும் எளிதாக மாற்றியமைத்து விட்டு நல்லப்பிள்ளையாக உட்கார்ந்துக்கொள்ளலாம் :-))

இதற்கு எல்லாம் தீர்வே இல்லையா எனலாம் ,இருக்கு அது என்னவெனில் இணையவழி நெட் ஒர்க்கிங் செய்வது தான் எப்படி எனப்பார்க்கலாம்.

நம் ஊரில் பெட்ரோல்,பம்ப்,பெட்ரோல் பங்க் என எல்லாமே ஸ்டேண்ட் அலோன் வகை ,மேலும் பெட்ரோல் நிறுவனங்களுக்கும் இணைப்பில்லை.பெட்ரோல் விலை ஏறுகிறது என்று சொன்னால் முதல் நாள் இரவு ஒவ்வொரு பெட்ரோல் பம்ப் ஆக விலையை ஆட்களே மாற்றியமைக்கணும், அதான் இங்குள்ள நடைமுறை.

ஆனால் உலக அளவில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் எப்படி எனில்,பெட்ரோல் பம்ப் , கம்பியில்லா இணையவழி மூலம் அதன் பெட்ரோல் பங்கில் உள்ள கணினியுடனஇணைக்கப்பட்டிருக்கும்.அந்தக்கணினி அவர்களுக்கு பெட்ரோல் சப்ளை செய்யும் எண்ணை நிறுவன சர்வருடன் இணைந்து இருக்கும்.

எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாலும் பங்க் கணினி, எண்ணை நிறுவன சர்வர் என அனைத்திலும் பதிவாகிவிடும்.விலை ஏற்றம் செய்யும் போது விலையை சர்வரில் திருத்தி அமைத்தால் நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து பெட்ரோல் பம்பிலும் உடனே அப்டேட் ஆகிவிடும்.

இப்படி நெட் ஒர்க் பெட்ரோல் பம்ப் ஆக இருப்பதால் இடையில் யாரும் திரிசமன் செய்ய முடியாது.செய்ய வேண்டும் எனில் பெரிய கம்பியூட்டர் ஹேக்கராக இருந்தால் உண்டு.

இப்படி இணைய வழி தொடர்பில் இருப்பதால் இன்னும் பல நன்மைகள் உண்டு. வெளிநாடுகளில் எல்லாம் பெரும்பாலும் பெட்ரோல் போடுவது சுய சேவை தான் , அப்படி எனில் பெட்ரோல் போட்டுவிட்டு காசுக்கொடுக்காமல் போய்விட்டால் என்னாவது என நினைக்கலாம் அங்கே தான் கணினி கண்ணை தொறக்குது.

டெபிட் கார்ட், கிரடிட் கார்டு என எதையாவது உள்ளே செருகினால் தான் மெஷின் ஆன் ஆகும், பின்னர் பெட்ரோல் போட்டுவிட்டு பெட்ரோல் கன்னை அதற்கான இடத்தில் வைத்தால் காசு எடுத்துக்கொண்டு ,கார்டை துப்பிவிடும் பெட்ரோல் பம்ப் :-))

கார்டு மட்டும் இல்லாமல் காசு போட்டும் இயக்கும் வகையிலும் இருக்கும்.எவ்ளோ காசு போடுறிங்களோ அவ்ளோ பெட்ரோல் கொடுக்கும் வெண்டிங் மெஷின் வகை.

இன்னும் சில எண்ணை நிறுவனங்கள் பிரத்யோகமான ரேடியோ சிக்னல் ஐ.டி தருவார்கள்,அது வாங்கி கார் கீ செயினில் அல்லது கார் டேஷ் போர்டில் வைத்துக்கொண்டால்,அவர்களால் இயக்கப்படும் பெட்ரோல் பங்கில் காசோ/கார்டோ இல்லாமல் பெட்ரோல் போட்டுக்கொள்ள முடியும், உங்கள் வங்கிக்கணக்கில் காசு எடுத்துக்கொள்ளப்படும்.இதனை நிறைய ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள் ஆளே இல்லாத பெட்ரோல் பங்கில் வந்து பெட்ரோல் போட்டுக்கொண்டு அப்படியே கிளம்பிவிடுவார்கள், என்னக்காசு கொடுக்காமல் போறாங்களே என நினைத்திருக்கலாம்,ஆனால் இவ்வகையான முழுவதும் ஆட்டொமேடிக் பங்குகள் அவை.

காரை சரியான இடத்தில் நிறுத்தினால் தானாக டேங்க் மூடி திறந்து பெட்ரோல் நிரப்பும் ரோபாட்டிக் பெட்ரோல் பங்குகள் கூட இருக்காம்.

ஒரு வாகனம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றால் அது என்ன வாகனம், எத்தனைக்கிலோமீட்டர் ஓடியது, எத்தனை லிட்டர் பெட்ரோல் போட்டது என சகலமும் பதிவாகிவிடுமளவுக்கு பல நாடுகளில் இணைய தொழில்நுட்பத்தினைப் பயன்ப்படுத்துகிறார்கள்.

நம்ம ஊரில் கணினியில் அச்சடித்து டிக்கெட் தரும் அளவுக்கு திரையரங்குகள் எல்லாம் முன்னேறிய பிறகும் ,அனைத்து திரையரங்குகளையும் இணைத்து சென்ரலைஸ்டு பாக்ஸ் ஆபிஸ் உருவாக்கவில்லை. அப்படி இருக்கும் போது எங்கே பெட்ரோல் பங்குகளை ஒன்றிணைக்க போறாங்க :-))

பெட்ரோல் போடும் போது மேலும் கவனிக்க வேண்டியவை.

# காலை அல்லது இரவில் பெட்ரோல் போடுவது நல்லது ஏன் எனில்,

ஏற்கனவே சொன்னது போன்ற வாயு தொல்லை அப்போது குறைவாக இருக்கும்.

இரண்டாவது வெப்ப விளைவு,

வெப்பத்தினால் பெட்ரோல் விரிவடையும், அப்போது அதன் அடர்த்தி குறையும். அடர்த்தி குறைவான பெட்ரோல் குறைவாக மைலேஜ் தரும் ,மேலும் அளவு வால்யும் அடிப்படையில் ஒரு லிட்டர் இருந்தாலும் குளிரும் போது வால்யும் குறைந்து விடும்.

அறை வெப்ப நிலையில் ஒரு லிட்டர் =1000 மி.லி இருக்கும் பெட்ரோல் 40 டிகிரியில் சுமார் 1045 மி.லி ஆகிவிடும். எனவே மத்தியான உச்சி வெயிலில் பெட்ரோல் போட்டால் ஒரு லிட்டருக்கு பதில் 955 மிலி பெட்ரோல் விரிவடைந்து ஒரு லிட்டராக கிடைக்கவே வாய்ப்புள்ளது.

வெப்பத்தினால் நீரினைப்போல 4.5 மடங்கு பெட்ரோல் விரிவடையும்,இதனை"co efficient of thermal expansion" என்பார்கள்.


வாகனத்திற்கு போடும் போதே இழப்பு வெப்பமாதல்,ஆவியாதல் மூலம் ஏற்படுகிறதே ,அதே போல பெட்ரோல் பங்கிற்கும் ஆகாதா எனலாம்,ஆகும் எனவே தான் எண்ணை நிறுவனங்கள் "evaporation and coefficient of thermal loss compensation" என 2% கூடுதல் எண்ணை கொடுத்துவிடுவார்கள்.ஏன் எனில் டேங்கரில் இருந்து பெட்ரோல் இறக்கும் போது வாயு நிலை பெட்ரோலியம் டேங்கரில் தங்கிவிடும் மேலும் பெட்ரோல் பங்கில் உள்ள நிலத்தடி டேங்க்கில் இருந்தும் பெட்ரோலிய ஆவி டேங்கர் லாரிக்கு வரும், அவற்றை எல்லாம் எண்ணை நிறுவனங்கள் மீண்டும் "கண்டென்சேஷன்"செய்து பெட்ரோல் ஆக்கிக்கொள்வார்கள்.

#பெட்ரோல் போடும் போது கடைசியில் அளவை நெருங்கும் போது விட்டு விட்டு லீவரை அழுத்தி பாயிண்டுக்கு கொண்டு வருவார்கள் அப்போது பெரும்பாலும் பெட்ரோல் நமது டேங்கிற்கே வராது ,மீட்டரில் மட்டுமே நகரும், இதனை பாயிண்ட் அடிக்கிறது என்பார்கள்.காரணம் குழாயில் உள்ள வளைவுகள், மற்றும் பெட்ரோல் கன் மேல இருக்கும், ட்யூப் கீழக்கிடக்கும் எனவே மெதுவாக விட்டு விட்டு பம்ப் மோட்டார் இயக்கும் போது பெட்ரோல் டேங்கிற்கு போக விசை கிடைக்காமல் குழாயில் இருக்கும் வெற்றிடத்திலயே அடங்கிவிடும். அதிகப்பட்சம் சில துளிகள் தான் அப்போது நம் வண்டிக்கு வரும்.எனவே ஒரே சீராக லீவரை பிடித்து பெட்ரோல் போட வேண்டும். அப்படி செய்ய மாட்டார்கள்.

பிற்சேர்க்கை:

கடைசியில் பாயிண்ட் பிடித்து போடுவதில் இழப்பு வருவதை தடுக்கவே பிரி செட் டெலிவரி அமைப்பு உள்ள பெட்ரோல் பம்புகள் கொண்டுவரப்பட்டது. 10 லிட்டர் என உள்ளீடு செய்து விட்டு பெட்ரோல் கன்னை அழுத்திக்கொண்டு இருந்தால் போதும் 10 லிட்டர் வந்ததும் தானாக பம்ப் இயக்கம் நின்றுவிடும்.இத்தகைய பெட்ரோல் பம்ப்களை சென்னையில் பல இடங்களில் காணலாம்.

ஆனால் நம்ம ஊரு பங்கர்கள் ஒவ்வொரு முறையும் அழுத்தி உள்ளீடு செய்ய சோம்பல் பட்டுக்கொண்டு அந்த பம்பிலும் வழக்கமான முறையில் பாயிண்ட் பிடித்து போடுகிறார்கள்.

# பெட்ரோல் பங்கில் அப்போது தான் டேங்கரில் இருந்து பெட்ரோல் இறக்கி நிரப்பியிருந்தார்கள் என்றாலும் பெட்ரோல் போடுவதை தவிர்க்க வேண்டும், ஏன் எனில் நிலத்தடியில் பலகாலமாக பெட்ரோல் சேமிக்கப்படுவதால் நிறைய தூசு,வண்டல் என இருக்கும் அவை அனைத்தும் பெட்ரோல் நிரப்பும் போது கலங்கிவிடும்,எனவே அதனை வண்டியில் நிரப்பி ஓட்டினால் அதிக புகை வரும்,பில்டர் அடைத்துக்கொள்ளும், ஸ்பார்க் பிளக்கில் கரி அதிகம் படியும்.

சில பெட்ரோல் பங்குகள் சரியான பராமரிப்பு இல்லாமல் எப்போதுமே தூசுடன் பெட்ரோல் விற்கிறார்கள்,அது போன்ற இடங்களை தவிர்க்கவும்.


# முழு டேங்க் பில் செய்வதாக இருப்பின் பெட்ரோல் கன் முனையை பெட்ரோல் தொடும் முன் நிறுத்திவிட வேண்டும். ஏன் எனில் பெட்ரோல் கன்னில் ஓவர் புளோ தடுக்க ஒரு அமைப்பு உள்ளது, முனை பெட்ரோலில் மூழ்கினால் ஓவர் புளோவ் எனக்கருதி மீண்டும் பெட்ரோலை திரும்ப உறிஞ்சிவிடும் ஆனால் மீட்டரில் ஓடிய அளவு குறையாது. அப்படி எடுத்த பெட்ரோல் வேறு குழாய் வழியாக நிலத்தடி டேங்கிற்கு சென்று விடும்.
இந்த மெக்கானிசம் நம் நாட்டில் உள்ளதா என்பது சந்தேகமே.

#கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு முழு டேங்க் பில் செய்வதாயின் மெதுவாக பெட்ரோல் பிடிக்க சொல்ல வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு பெட்ரோல் பம்புக்கும் வேக அளவு உண்டு.அதாவது ஒரு நிமிடத்திற்கு இத்தனை லிட்டர் என. அதற்கான ஆக்சிலரேட்டர் இருப்பது பெட்ரோல் கன்னில் உள்ள லீவரில், முழுக்க அழுத்தினால் முழுத்திறனில் வேகமாக மோட்டார் இயங்கி பெட்ரோல் நிரப்பும். அப்படி செய்யும் போது மீட்டர் வேகமாக ஓடும், ஜம்பிங் திருத்தம் செய்து இருந்தால் கண்டுப்பிடிக்க முடியாது.

பெட்ரோல் பம்ப் வேகமாக ஓடுவதால் நுரைத்துக்கொண்டு வரும் காரணம் நிறைய ஆவியுடன் வருவதால் எனவே வழக்கத்தினை விட அளவு குறையும், மேலும் நிறைய காற்றும் கலந்துவிடுவதால் சமயங்களில் ஏர் லாக் ஆகும் வாகனம்.


#அப்புறம் வழக்கமான ஸீரோ செய்து போடுவது,கலப்படம் எல்லாம் பார்த்து கவனமாக நடந்துக்கொள்ள வேண்டியது தான்.

#நல்ல பெட்ரோல் பங்கினை கண்டறிய எளிய வழி, டிராவல்ஸ் நடத்துபவர்கள்,ஆட்டோ,டாக்சி என பெட்ரோல் போடும் பங்குகளாக பார்த்து தேர்வு செய்வது தான். அவர்கள் எப்போதும் மைலேஜில் கண்ணாக இருப்பார்கள்.இத்தனை லிட்டருக்கு இத்தனை கிலோ மீட்டர் இந்த கார் போகும் என கணக்கு போட்டு தான் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.அவங்க போட்ட லிட்டருக்கு ஏற்ப மைலேஜ் வரலைனா உடனே கண்டுப்பிடிச்சு, பெட்ரோல் தான் காரணம் எனில் இடத்தை மாற்றிவிடுவார்கள்.

-------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

விக்கி,கூகுள்,தளங்கள்,நன்றி!

******

21 comments:

கோவி said...

அப்பப்பா.. பெட்ரோல் போடுறதுல இவ்வளவு விசயம் இருக்கா? எங்க தலைவா இவ்வளவு மேட்டர புடிச்சீங்க? அசந்துட்டேன்.. நம்ப ஊர்லயும் ஆட்டோமாடிக் பங் வந்துட்டா சௌகரியமா போகும்.. இனிமேல் அர்த்த ராத்திரியில்தான் பெட்ரோல் போடணும். உடனடியா பக்கத்துல இருக்குற ஆட்டோகாரற போய் பார்க்குறேன்.

ராஜ நடராஜன் said...

என்னதான் வேணுமின்னு கேட்டதும் எண்ணதான் வேணுமின்னு இங்கே ஓடி வந்துட்டீங்களாக்கும்!என்னதான் எண்ண எண்ணத்த சொல்றீங்கன்னு பார்த்துட்டு மியூஜிக் ஸ்டார்ட்...

முத்தரசு said...

அடேங்கப்பா அடேங்கப்பா..

அலசல்.... ம்

CS. Mohan Kumar said...

படிக்க படிக்க டென்ஷன் தான் வருது. நானும் பல முறை கடைசி நேரம் பெட்ரோல் பைப்பை தூக்கி நிஜமா பெட்ரோல் கொட்டுதா என பார்க்க நினைத்திருக்கேன். தைரியம் வரலை.

உமக்கு ஐடியா தருவதற்கு பிரதி பலனாக, என்னோட எல்லா பதிவுக்கும் வந்து (திட்டாம) கமன்ட் போடணும். அது தான் நீர் தர கூடிய டிரீட்; என்னிடம் டிரீட் கேட்க கூடாது !

அப்புறம் நிஜமாவே இவ்ளோ அறிவுள்ள உங்களை நண்பராக்கி கொள்ள ஆசை. சென்னை அருகில் தானே இருக்கீங்க. ஒரு முறை பார்த்தால் என்ன? பயப்படாதீங்க ; உங்களை மற்றவர்களுக்கு காட்டி குடுக்க மாட்டேன்

முடிந்தால் என் மெயில் ஐ. டி க்கு ஒரு வரி எழுதுங்க

வவ்வால் said...

கோவி,

வாங்க நண்பா,நன்றி!

பாதி சிலப்பேரிடம் பேசி தெரிந்துக்கொண்டது,மீதி இணையத்தில் தெரிந்துக்கொண்டது. என்ன ஒன்னு நாம கொஞ்சம் சோம்பேறி... வாழைப்பழம் குடுத்தா ஏன் தோளோட குடுக்கிறாங்கனு வருத்தப்படுவேன் :-))

அதான் அவ்வளவா ஆர்வமாக எழுதுவதில்லை,என்னை யாராவது உசுப்பி விட்டா தான் ...இப்படி எழுதி வைக்கிறது :-))

ஹி..ஹி அப்போ நம்ம பதிவு வெற்றியடைந்துவிட்டது முதல் நபரே பின்ப்பற்ற களத்தில் குதித்துவிட்டாரே :-))

-----
ராஜ்,

வாங்க,நன்றி!
மெட்ரோவில சுத்துவிங்கன்னு பார்த்தா இங்கேவா,

என்னது ஸ்டார்ட் மியுஜிக்கா ,ஒரு வேளை மோளம், பீப்பின்னு எடுத்து வந்து வாசிப்பாரோ?

--------

மனசாட்சி,

வாங்க,நன்றி!

என்ன இதுக்கே அடேங்கப்பா சொல்லிட்டிங்க, உங்களை போல ஒரு நாளு பேரு வந்தாப்போதும் ,கச்சேரிய நான் நல்லா நடத்துவேன் :-))

CS. Mohan Kumar said...

////கூடுதல் தகவல்,

எங்க ஏரியாவில 3 ரூக்கு இட்லி, 6 ரூ கட்ட தோசை, நைஸ் 10 ரூ, முட்டதோசை 15க்கு கிடைக்குது.//

கூடுவாஞ்சேரி வந்தால் கம்மி விலையில் டிரீட் தருவீரா? நீர் அங்கு எங்கே சுத்தி கொண்டிருப்பீர் என எப்படி கண்டுபிடிப்பது?

ராஜ நடராஜன் said...

பதிவுல நமக்கு ஏதாவது பின்னூட்டம் தேறுமான்னு பார்த்துகிட்டே வந்தேன்.மீட்டரை சுடுவது எப்படி,ஏன் குதிச்சுகிட்டு ஓடுதுன்னு விளக்கமாகவே இருந்துச்சு.பரவாயில்லை... வெளிநாட்டுல துவங்கியதும் சால்மன் மீன் தூண்டில் மாட்டிகிச்சு.

வெளிநாட்டுல எல்லோருமே அவரவர் என்பது அனைத்து நாட்டுக்குமான்னு தெரியல.அரபிகள் வண்டியை விட்டு இறங்குவதேயில்லை.ஆனால் நான் உட்கார்வதில்லை.நானே போய் சாவி போட்டு மூடியைத் திறந்து நானே பைப்பை எடுத்து நானே பெட்ரோலையும் போட்டு நானே காசும் கொடுப்பேனாக்கும்.பெட்ரோல் பணியாளர் உதவிக்கு வந்தாலும் மறுத்து விட்டு அவருக்கு டிப்ஸ் கொடுத்து விட்டு வருவதும் தொடர் பழக்கம்.ஓட்டலில் டிப்ஸ் கொடுத்தா அது உபசரிப்புக்கான பிரதிபலிப்பாக சொல்லலாம்.ஆனால் பெட்ரோல் பங்கில் செய்யாத உதவிக்கும் செய்யும் உதவியாக செய்வது மனுசன் வெயிலிலும்,குளிருலும் காய்கிறாரே என்ற அக்கறையினால்.

லௌகீக வாழ்க்கையின் பிறழ்களுக்காக மாற்றாக ஆன்மீகத்தை தேடிப்போனால் அங்கேயும் நித்யானந்தா,காஞ்சிகள் காஞ்சு போய் கிடக்கிறார்கள்.பெட்ரோல் ஒரு ஜம்புக்கு இத்தனை அங்கலாய்ப்பா:)

இதுல கொடுமை என்னன்னா சாரு முதல் அமெரிக்க என்.ஆர்.ஐ வரை பெட்ரோல் டாங்கி நிரப்புற நேரத்துல இருக்கும் குழப்ப மனநிலைக்கான காரணம் என்ன என்பதை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கணினி இணைப்பு மட்டும் வந்து விட்டால் மக்கள் திருந்திடுவாங்களாக்கும்!அதுலேயும் சூடு வைக்க சாத்தியமிருக்குதான்னு மூளை வேளை செய்யாதுங்கிறது என்ன நிச்சயம்?

வவ்வால் said...

மோகன்,

வாங்க ,நன்றி!

கடுதாசி போட்டா தான் வருவீங்க போடலாம்னு இருந்தேன் ,வந்துட்டிங்களே,

கடைசிக்கட்டத்தில உங்களுக்கும் அப்படி சந்தேகம் வந்திருக்கு பாருங்க.ஆனால் அப்படி பிடிக்கிற பெட்ரோலால ,வேலை செய்றவங்களுக்கு காசுப்போகாது,அங்கே ஆல் இன் ஆல் ஆக ஒரு ஆள் எல்லா பங்கிலும் இருப்பாங்க அவர் தான் சுடுவார் எக்ஸ்ட்ரா வருமானத்தை.

என்னது ஐடியாவ இதுக்கு பேரு, பதிவில நான் சன்மானம் கேட்டதை பார்க்கலையோ? உங்க வேலைல பெரும்பகுதிய நான் இழுத்துப்போட்டு செஞ்சிருக்கேனாக்கும், :-))

ஆஹா எனக்கும் அறிவு இருக்குன்னு ஒருத்தர் ஒத்துக்கிட்டாரே ..நன்றி!
என்னைப்பார்த்து நீங்கப்பயப்படாமல் இருந்தால் போதாதா...சந்தர்ப்பம் வரும் போது சந்திக்கலாம். என்னைப்போல கிராமத்தானையும் நண்பராக ஏற்றுக்கொள்ள விரும்பியதற்கு நன்றி!
---
சாப்பாட்டுக்கடையை இங்கே தூக்கிட்டு வந்திட்டீரே, கண்டிப்பாக சந்தர்ப்பம் வாய்த்தால் செய்திடலாம் நண்பரே.
------------------
ராஜ்,

நீங்களே தூண்டில மாட்டிக்கிட்டு இதுல சால்மன் மாட்டிக்கிச்சாம் :-))

நான் சொன்னது வளர்ந்த நாடுகளை அதாவது தொழிற்நுட்பத்தில். சரி அங்கே எல்லாம் இன்னும் காசு கொடுக்கிற முறை தானா.ஆனால் சுய சேவையும் இருக்கு.இங்கே அது என்னமோ அணு உலைப்போல நம்மளை கிட்டக்கவே விட மாட்டாங்க.

நித்தி, காஞ்சி எல்லாம் ஏகத்துக்கும் இன்பம்ம் அனுபவித்துவிட்டு இப்போ பின்விளைவுகளுக்கு ஆளாகி இருக்காங்க, இங்கே என்னத்த அனுபவிச்சு களைத்தோம் ஆனந்தமா இருக்க :-))

மிடில் கிளாஸுக்கு தினம் பெட்ரோல் போட பயமாவே இருக்கும்.ஆனால் சாரு பெட்ரோல் போடும் போது மட்டும் குழப்பித்தில் இருப்பது போல சொல்வது சரியல்ல ,அவர் எப்பவும் இருப்பதே குழப்பத்தில் தான் :-))

விளங்கிடும், குழந்தையே பிறக்கவில்லை ,பொறந்தா மட்டும் உருப்படுமான்னு கேட்க வந்துடுங்க :-))

Anonymous said...

Excellent post Vavval.. hats off..

Just to add to this..(though irrelevant) :)

டெபிட் கார்ட், கிரடிட் கார்டு என எதையாவது உள்ளே செருகினால் தான் மெஷின் ஆன் ஆகும், பின்னர் பெட்ரோல் போட்டுவிட்டு பெட்ரோல் கன்னை அதற்கான இடத்தில் வைத்தால் காசு எடுத்துக்கொண்டு ,கார்டை துப்பிவிடும் பெட்ரோல் பம்ப் :-))

Just to make sure that there is enough money at the end of filling fuel, a small amount ($50 - $100) will be blocked before fueling begins. It will be released a few hours later or the next day. Till then that money cannot be withdrawn. :(

SA

CS. Mohan Kumar said...

உங்கள் ப்ளாகை தொடர்வதால் பதிவை நான் பார்க்கவே செய்வேன். அடிக்கடி கமன்ட் போடுவதில்லை. (அவ்வப்போது உங்கள் பதிவுகள் Dashboard-ல் தெரிவதில்லை. இப்போ கூட முதலில் தெரிந்தது. இப்போ காணும் )

தமிழ் மணம் தான் பிடிச்ச திரட்டி என்பீர்கள். அதில் இணைக்கலையா? இன்னும் நிறைய பேரிடம் போகுமே?

// என்னது ஐடியாவ இதுக்கு பேரு, பதிவில நான் சன்மானம் கேட்டதை பார்க்கலையோ? //

பாத்துட்டு தான் அப்படி எழுதினேன்

//சந்தர்ப்பம் வரும் போது சந்திக்கலாம். என்னைப்போல கிராமத்தானையும் நண்பராக ஏற்றுக்கொள்ள விரும்பியதற்கு நன்றி!//

பல ஊர்கள் சுற்றிய நீங்களா கிராமத்தான்? ஆக நீங்க நினைக்கும் போது தானா சந்திப்பீங்க போல.. பாத்து சீக்கிரம் சந்திக்க ஆவன செய்யுங்க !

Thomas Ruban said...

அருமை. (மோகன் குமார்க்கும் நன்றி)

சூடுவைப்பது, சூடுவைப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அந்த தொழில் நுட்ப ரகசியத்தை உங்கள் பதிவு மூலம் அறிந்துக் கொண்டேன் நன்றி.

//நல்ல பெட்ரோல் பங்கினை கண்டறிய எளிய வழி, டிராவல்ஸ் நடத்துபவர்கள்,ஆட்டோ,டாக்சி என பெட்ரோல் போடும் பங்குகளாக பார்த்து தேர்வு செய்வது தான்//
நல்ல யோசனை. நல்ல ஓட்டல்கள் பற்றி அறிந்துக் கொள்ளவும் இதே வழி முறையை பின்பற்றலாம்.

ராஜ நடராஜன் said...

தூங்கிகிட்டிருந்த சால்மன் கூட இப்ப வேகமாக் ஓடுற மாதிரி தெரிகிறதே!

குறும்பன் said...

//டெபிட் கார்ட், கிரடிட் கார்டு என எதையாவது உள்ளே செருகினால் தான் மெஷின் ஆன் ஆகும், பின்னர் பெட்ரோல் போட்டுவிட்டு பெட்ரோல் கன்னை அதற்கான இடத்தில் வைத்தால் காசு எடுத்துக்கொண்டு ,கார்டை துப்பிவிடும் பெட்ரோல் பம்ப் :-))// - அட்டையை செருவி டெபிட் அல்ல கிரடிட் என்பதை தேர்ந்தெடுக்கனும் டெபிட் என்றால் அதற்கான ஐ அழுத்த வேண்டும், ரசீது வேணுமா என்று கேட்கும் வேண்டும் என்றால் பெட்ரோல் போட்ட பின்பு ரசீது கிடைக்கும். அட்டையை எடுத்து கொண்டு பெட்ரோல் போடவேண்டியது தான். இந்த முறையும் பல ஆண்டுகளுக்கு மேலாக பயனில் உள்ளது.

வவ்வால் said...

எஸ்.ஏ,

வாங்க,நன்றி!

நிறையப்பேரு அனானினே வருவதால் யார்னே தெரிவதில்லை,நல்லவேளை நீங்க எஸ்.ஏ னூ ஒரு அடையாளம் கொடுகிறிங்க. இல்லனா கஷ்டம் தான்.

நீங்க சொன்ன பணம் பிடித்து வைக்கும் யுக்தி புதிய செய்தி. ஆனாலும் உங்களைப்போன்ற நேரடி அனுபவஸ்தர்கள் ஏன் இதை எல்லாம் வைத்து பதிவில் பேசுவதில்லைனு எனக்கு புரியவில்லை. அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு சினிமா ,அரசியல் தாண்டி வரவே மாட்டேன்கிறார்கள்.

ஆனால் நானோ தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு உலக நாட்டை எல்லாம் இணையத்தில் தோண்ட வேண்டியதாக இருக்கு :-))

எனக்கு சில விஷயங்கள் தெரிந்தாலும் நான் பதிவிடுவதில்லை ஏன் எனில் நேரடியாகவோ அல்லது அத்துறையில் அறிவு இல்லாமல் சும்மா இணையத்தில் வாசித்து எப்படி பதிவாக போடுவது என அடக்கிவாசிப்பேன்,வாசித்ததே அதிகம் ஆனால் வேண்டுமானால் பதிவாக இடுவேன்.ஆனால் சரியான தகவல்கள் இல்லாமல் பதிவுகள் வரும் போது அட நமக்கு இதை விட கொஞ்சம் கூடவே தெரியுமே என துணிச்சல் வந்து இப்படி பதிவு போட்டு விடுவேன்.

இதை எல்லாம் ஏன் உங்ககிட்டே சொல்றேன்னு நினைக்கலாம் நீங்கப்பாட்டுக்கு எனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுக்க கூடாதுல்ல அதுக்கு தான் :-))

-----------

மோகன்,

நன்றி!

தொடர்ந்து வாசிப்பதாக சொன்னது மகிழ்வாக உள்ளது.பின்னூட்டங்களை குறித்து கவலைப்படுவதில்லை, பல பேர் படிக்கிறார்கள் என்பதை பிளாக்கில் உள்ள ஸ்டாட் மூலம் அறிவேன். ஆனால் தனியாக ஸ்டாட்ஸ் விட்கெட் எல்லாம் சேர்ப்பதில்லை அவ்வளவே.

எனக்கும் பிலாக்கருக்கும் ஏதோ பூர்வ ஜென்ம கொடுக்கல் வாங்கல் இருக்கணும் ,உங்களுக்கு டேஷ் போர்டில் தான் தெரியவில்லை,எனக்கே பல சமயம் போஸ்ட் பப்ளிஷ் ஆவது இல்லை, ஆனாலும் அலைன்மெண்ட் மாறிவிடும், படங்கள் அப்லோட் ஆகாது, அப்படியே ஆனாலும் வேறு இடத்தில் இருக்கும், போய் இழுத்து வருவேன் ,என்ன செய்ய நான் :-))

தமிழ் மணம் தான் பிடித்த திரட்டினு சொல்லும் போது கூட அதில் நான் இணைக்கவில்லை, முன்னர் இணைத்தேன் பின்னர் அனைவரையும் விமர்சிக்கும் போது தமிழ்மணத்தையும் சேர்த்தே விமர்சித்து வந்தேன், அப்புறம் எதற்கு இணைக்க வேண்டும் என இணைக்கவில்லை ,கருவிப்பட்டையும் எடுத்துவிட்டேன், பின்னர் இணைந்த சிலப்பதிவுகளும் தானாக இணைந்தவையே.

இப்போது சங்கமம் திரட்டியில் தானாக இணைந்துவிடும் , இன்டெலி இல் இணைப்பேன் அதுவும் நானாக விரும்பினால் மட்டுமே .இன்டி பிலாக்கரிலும் சிலப்பதிவுகளை இணைப்பேன். நான் திரட்டியை வைத்து கூட்டம் சேர்க்க விரும்பவில்லை.

பார்த்துட்டு தான் அப்படி சொன்னீங்களா ,ரொம்பத்தான் :-))

நீங்க மிஸ் ஃபீல்ட் செய்ததை கவர் செய்த எனக்கு தான் சன்மானம் தரணும் ஓய் :-))

கிராமத்தான் என்றால் ஊர் சுத்த மாட்டானா என்ன கொடுமை சார் இது! அந்த காலத்துலவே கட்டு சோறுக்கட்டிக்கிட்டு ராமேஷ்வரம் போன பரம்பரை ,அதான் நானும் ஊரு சுத்துறேன் :-))

கண்டிப்பாக காலம் கைக்கூடினால் காரியம் சித்தியாகும், சந்தர்ப்பம் அமைந்தால் பார்க்கலாம் சாரே!

--------

ரூபன்,

வாங்க, நன்றி!

மோகன் குமாருக்கு சொன்ன நன்றிய சத்தமாக சொல்லுங்க, அவர் என்கிட்டே கப்பம் வசூலிக்க பார்க்கிறார் :-))

நானெல்லாம் சின்னவயசிலவே கட்ட பொம்மன் படம் பார்த்தவுங்க அவ்வளவு சீக்கிரம் வரி,திரை ,கிஸ்தி கொடுத்துடுவோமா :-))

ஆட்டோவுக்கு சூடு வைக்கிற மேட்டரே இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டிங்களா,ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல.

ஆமாம் டிரைவருங்க நல்ல ஹோட்டலா பார்த்துப்போவாங்க, விலை கம்மியா இருக்கும், ஆனால் எல்லாம் நான் வெஜ் ஆ இருக்கும், பீப்,குடல் கறி ஹோட்டல்லா இருக்கும் :-))

----------
ராஜ்,

வேகமா ஓடுறாப்போலவா தெரியுது ?

ஒரு நாளைக்கு நாலைஞ்சு பதிவு போடுறவன் கூட சந்தோஷமா இருக்கான் ,ஆனால் நான் ஒரே ஒரு பதிவ போட்டுட்டு உங்க கிட்ட படுறப்பாடு இருக்கே அய்யய்யோ முடியலை சாமி அவ்வ்வ்!

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க,நன்றி!

எனக்கு அதெல்லாம் அனுபவம் இல்லைனு முன்னரே ஒரு பின்னூட்டத்தில் சொல்லிட்டேன்.

இந்தியாவில் இப்படி இல்லைனு சொல்லத்தான் சொல்லி இருக்கேன் மற்றபடி பல ஆண்டுகளாக இல்லைனு நான் சொல்லவில்லை.

நானும் புதுசா இப்போ வந்ததுனு சொல்லவில்லை, இந்தியாவுக்கு ஒரு ஒப்பீடு செய்யத்தான் சொன்னேன்.ஆனால் நீங்க எல்லாம் ஏன் இதை பல ஆண்டுகளாக சொல்லாமல் இருந்தீங்கன்னு தான் தெரியவில்லை,ஒரு வேளை நீங்க சொல்லி நான் பார்க்கலையோ?

ராஜ நடராஜன் said...

வவ்!எஸ்.ஏ வுக்கு நீங்க சொன்னதால எனக்கு இங்கே சுருதி ஏறுது.நானும் ரொம்ப நாட்களாக கவனிக்கும் ஒன்று என்னன்னா அனுபவ பகிர்வுகள் அதிகம் தமிழகத்திலிருந்தே கிடைக்கின்றன.இதில் அமெரிக்காவில் வசிப்பவர்களில் பதிவர் சித்ரா என்பவர் தான் செல்லும் ஒவ்வொரு இடங்கள் பற்றியும் சொல்லியிருந்தார்.நியூஸியில் வசிக்கும் பதிவர் துளசி டீச்சரும் அப்படியே எழுத்திலேயே தன் வாழ்வின் தினங்களை கொண்டு வந்து விடுகிறார்.மீதி அமெரிக்க வாழ் பதிவர்களுக்கு எத்தனையோ இருக்குது சொல்வதற்கு.சொல்ல மனமிருந்தும் சொல்வதற்கான கால அவகாசம் இல்லாமல் இருப்பவர்களாக இருக்க கூடுமென நினைக்கின்றேன்.மிச்சம் மீதி தேறுபவைகளும் ரொம்ப சுத்தம் இல்ல:)

ராஜ நடராஜன் said...

வவ்!உங்க பதிவுக்கு சூடு வைக்கிற ஒரே ஆள் நாந்தான்.முடியலை சாமின்னு இப்படி அலுத்துகிட்டா எப்படி?அவ்வ்வ்!

ராஜ நடராஜன் said...

வவ்!எஸ்.ஏ வுக்கு நீங்க சொன்னதால எனக்கு இங்கே சுருதி ஏறுது.நானும் ரொம்ப நாட்களாக கவனிக்கும் ஒன்று என்னன்னா அனுபவ பகிர்வுகள் அதிகம் தமிழகத்திலிருந்தே கிடைக்கின்றன.இதில் அமெரிக்காவில் வசிப்பவர்களில் பதிவர் சித்ரா என்பவர் தான் செல்லும் ஒவ்வொரு இடங்கள் பற்றியும் சொல்லியிருந்தார்.நியூஸியில் வசிக்கும் பதிவர் துளசி டீச்சரும் அப்படியே எழுத்திலேயே தன் வாழ்வின் தினங்களை கொண்டு வந்து விடுகிறார்.மீதி அமெரிக்க வாழ் பதிவர்களுக்கு எத்தனையோ இருக்குது சொல்வதற்கு.சொல்ல மனமிருந்தும் சொல்வதற்கான கால அவகாசம் இல்லாமல் இருப்பவர்களாக இருக்க கூடுமென நினைக்கின்றேன்.மிச்சம் மீதி தேறுபவைகளும் ரொம்ப சுத்தம் இல்ல:)

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

சும்மாவே சுருதி ஏறுதா :-))

துளசி கோபால், பதிவுகள் முன்னெல்லாம் தொடர்ந்துப்படிப்பதுண்டு ,இப்போது அவ்வப்போது , அனுபவப்பதிவுகள் கொஞ்சம் வாழ்வியல் ரீதியாகவே செல்லும், எனவே புதிய தகவல்கள் என்பது அவ்வப்போது தான் கிட்டும். ஆனாலும் அப்படியான பதிவுகளும் கொஞ்சமே எழுதுபவர்கள் இருக்கிறார்கள்.

பெரும்பான்மை சினிமா, கிரிக்கெட்,அரசியல் என்ற களத்தோடு சரி.

நிறைய பேர் இந்தியாவை ஒப்பிட்டு வெளிநாடுகளில் அப்படி இருக்கு என பெருமைப்பட்டுக்கொள்ளவே பதிவிடுகிறார்கள்,ஆனால் இன்னொரு அயல்நாட்டு வாழ்வின் முகத்தினை சொல்வதேயில்லை.எல்லாமே கட்டணம் தான். அதன் பொருளாதார சுமையையும் மக்கள் தாங்கினால் தான் வசதி ,ஆனால் இங்கோ மலிவு அல்லது இலவச சேவையே.

பிரிட்டனில் வீட்டில் தொ.கா வைத்திருப்பதற்கும், நம் வீட்டில் கார் நிறுத்துவதற்கும் கூட ஆண்டு வரி உண்டு. இது போல பல அங்கு இருக்கு.இந்தியாவில் அது போல எல்லாம் செய்தால் என்ன ஆகும் என யோசித்துப்பாருங்கள்.

---------

சலித்துக்கொள்ளவில்லை ... அவனவன் நாளைக்கு நாலு பதிவு மொக்கையாக போடுறான் ,அவங்களை எல்லாம் விட்டுட்டு என்னை போய் வேகமா பதிவு போடுறேன்னு சொல்றது என்ன நியாயம்.

நமக்குன்னு சிலர் இருக்காங்க வழக்கமா படிப்பாங்க,ஆனால் என்ன பின்னூட்டம் போடாமல் போயிடுவாங்க :-))

நமக்கு ஒரு அட்வான்டேஜ் இருக்கு கூகிளில் தமிழில் "வவ்வால்" னு தட்டச்சினா முதல் பக்கத்திலேயே பதிவு வந்திடும் , அதைப்பார்த்துட்டே நிறைய பேரு வராங்க! சிலப்பதிவுகள் விக்கிப்பீடியாவில் ரெபரண்ஸ் ஆக சுட்டி கொடுத்திருக்காங்க, இது போல பலரும் அங்காங்கே லிங்க் போட்டு இருப்பதால் படிக்க வரும் ஆட்களுக்கு பஞ்சமில்லை.

சிலர் அப்படியே சுட்டும் போடுறாங்க,அவர்களை நினைத்து கவலைப்பட்டால் கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கணும் எனவே "திற மூல வலைப்பதிவுகள்"னு நானே திறந்துவிட்டு தான் வச்சிருக்கேன்.

கலாகுமரன் said...

திறனாய்வு சொல்றாங்க... இது தான் சார் புட்டு புட்டு வெச்சிருக்கீங்க உங்க தீவிர ஆராய்சிக்கு எனது பாராட்டுகள்.

வவ்வால் said...

கலாகுமாரன்,

வணக்கம்,

வருகைக்கும், வெளிப்படையான பாராட்டுக்கும் மிக்க நன்றி!