Thursday, June 14, 2012

பசுமை மாடி- வீட்டுத்தோட்டம்!


பதிவர் கவுசல்யா "மொட்டை மாடியில் வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி" என அவசியமான ஒரு பதிவிட்டிருக்கிறார், அதில் மாடியில் தோட்டம் அமைக்க பல பிளாஸ்டிக்/நைலான் வகை சாக்குகளை பரப்பி மண் இட்டு வளர்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

இது எளிமையான ஒரு வழிமுறை என்றாலும் நீண்டகால அடிப்படையில் மேல் தளத்தினை பாதிக்கும் ,எனவே பாதுகாப்பான முறையினையும் இன்னும் கொஞ்சம் செயல்முறைகளையும் சொல்லலாம் என இப்பதிவு .

இந்த வாரம் பதிவர்களின் பதிவுக்கு துணைப்பதிவு போடும் வா...ரம் போல :-))

ஆமாம் இவரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் எல்லாத்துக்கும் கரெக்‌ஷன் சொல்லுறார்னு சில பாசமுள்ள பங்காளிகள் நினைக்கலாம், அப்படியல்ல ஒரு நல்ல கருத்தாக்கம் கொண்ட பதிவில் சில தேவையான கருத்துகள் விடுபடும் போது , எனக்கென்ன என கடந்து போக முடிவதில்லை, பெரும்பாலும் பின்னூட்டத்தில் சொல்லிவிடுவேன், பெரிதாக போகும் என நினைக்கையிலே தனிப்பதிவு. விடுபட்ட தகவல்களையும் அளித்து முழுமையாக்குவதால், அவ்வழிமுறைகளை பின்ப்பற்றுவோருக்கு கூடுதல் பலன் தானே கிடைக்கப்போகிறது.

சரி சொல்ல வந்த கதைக்கு போவோம் இல்லை எனில் சொல்ல மறந்த கதையாகிவிடும் :-))

நீர்க்கசிவினால் மேல் தளம் பாதித்தல்:

துண்டு துண்டாக சாக்குகளை பரப்பி மண் இடும் போது என்ன நிகழும் எனில் செடிகளுக்கு தெளிக்கும் நீர் மண்ணில் இறங்கி பின் சாக்குகளின் இடை வெளி வழியே தளத்தினை அடையும் , பின்னர் கொஞ்சம் ,கொஞ்சமாக கசிந்து தளத்தில் இறங்கும், குறைவான நீர் தானே தெளிக்கிறோம் என்றாலும் நாளடைவில் தளத்தில் இறங்கும், மேலும் மழைக்காலங்களில் அதிக நீர் மண்ணில் தேங்கி மேல் தளத்தில் இறங்க வழி வகுக்கும்.

நீர்க்கசிவினால் இரும்பு கம்பி துருப்பிடித்தல்.


இதனால் என்ன ஆகும் எனில் கான்கிரிட்டில் உள்ளே உள்ள இரும்புகம்பிகள் துருப்பிடிக்க துவங்கும், அப்படி துருப்பிடிப்பிடிக்கும் போது கம்பிகளின் தடிமன் அதிகரிக்கும் இது கன்கிரிட்டில் விரிசலை உருவாக்கும் , வீட்டின் உள்புறம் கூறையில் இருக்கும் சிமெண்ட் பூச்சுகள் படலமாக பெயர்ந்து விழவும் வழி செய்யும். இதற்கு spalling என்று பெயர். இவ்வாறு தளம் பெயர்வது உடனே நிகழாது ,சிலகாலம் ஆகும் என்பதால் நாம் உடனே உணர்வதில்லை.இது போன்று கூறையின் பூச்சுகள் பெயர்ந்து விழுவதை பழைய கட்டிடங்களில் நிறைய பார்க்கலாம்.

(படம் வடுவூர் குமார் வலைப்பதிவு,நன்றி!)


தளம் பெயர்ந்து விழுந்த வீட்டினை சரி செய்தவரின் அனுபவத்தினை இங்கு காணலாம்.


இவ்வாறு தளத்தின் வழி நீர் இறங்காமல் இருக்கவே மேல் தளத்தில் தட்டு ஓடு, வாட்டர் புரூஃப் பூச்சு எல்லாம் செய்கிறார்கள். இம்முறையெல்லாம் தண்ணீர் மேலே நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் போது கைக்கொடுக்கும், மண்ணை பரப்பி நீர் பிடிக்க செய்யும் தோட்டம் இருக்கும் போது நாளைடைவில் நீர் உள்புக செய்து விடும்.

அப்படியானால் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க கூடாதா? அமைக்கலாம் அதற்கு ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது. இப்போது சுமார் ஒரு அடிக்கும் குறையாத அளவில் மண்ணை இதில் பரப்பி விட்டுக்கொள்ள வேண்டும்.

மண்கலவை:

நேரடியாக செம்மண்ணோ, தோட்ட மண்ணோ மட்டும் பயன்படுத்தினால் தாவரங்களின் வேர் நன்கு பரவாது எனவே,

ஒரு பங்கு மணல்

ஒரு பங்கு தொழு உரம்

தொழு உரம் கிடைக்காதவர்கள் கடைகளில் விற்கும் காயர் பித் கம்போஸ்ட்(coir pith compost) சர்க்கரை ஆலைகள் தயாரித்து விற்கும் பகசி கம்போஸ்ட் (bagasse compost)என ஒரு வாங்கிக்கொள்ளலாம், 10 கி.கி அளவிலான பைகளில் உரக்கடைகள், நர்சரிகளில் கிடைக்க வாய்ப்புண்டு.

ஆரம்பத்தில் வாங்கிக்கொள்ளலாம் ,பின்னர் வீட்டிலேயே சமையல் கழிவில் தொழு உரம் தயாரிக்க வழி சொல்கிறேன்.

அடுத்து 3 பங்கு செம்மண் அல்லது தோட்ட மண்

எடுத்துக்கொண்டு நன்றாக கலந்து கொண்டு நாம் உருவாக்கிய தொட்டிப்போன்ற அமைப்பில் பரப்பிக்கொள்ளவும்.

பின்னர் அதில் ஒரு அடி வரப்பு ஒரு அடி வாய்க்கால் போல ரிட்ஜஸ் அன்ட் பர்ரோவ்ஸ் (ridges and furrows)என உருவாக்கி கொள்ள வேண்டும்.இதுக்கு பேரு தான் தோட்டத்தில பாத்திக்கட்டுறது, சிலப்பேரு சோத்துலவே பாத்திக்கட்டுவாங்க :-))

மேல் மாடியில் உருவாக்கும் சின்ன தோட்டத்திற்கு இது தேவை இல்லை " raised bed "சம பரப்பில் செடிகளை நடலாம் தான் ஆனால் இப்படி பாத்திக்கட்டி அதில் நடுவதன் மூலம் சில நன்மைகள் கிடைக்கும் அவை என்னவெனில்,

பெரும்பாலான தாவரங்களின் வேர்களும் ,தண்டுகளிம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் அழுகிவிடும். ஏன் எனில் வேர்கள், மற்றும் தண்டுகள் மூலமும் தாவரங்கள் சுவாசிக்கும்.எனவே இது மழைக்காலங்களில் உதவும்.

மேலும் ஒரு வாரம் ,10 நாள் என ஊருக்கு செல்ல நேரிட்டால் யார் தண்ணீர் ஊற்றுவார்கள், நாம் ஆள் வைத்து விட்டு சென்றால் தான் உண்டு, இல்லை எனில் செடிகள் வாடிவிடுமே, அப்படிப்பட்ட சூழலில் இவ்வமைப்பு ஓரளவு கைக்கொடுக்கும், எப்படி எனில்,

வாய்க்கால் போன்ற அமைப்பு நிறைய மண்ணின் நீர்ப்பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் ,பின்னர் அவற்றின் மீது மட்டும் ஏதேனும் பிளாஸ்டிக் ஷீட், அல்லது சாக்கு கொண்டு மூடிவிட வேண்டும் , இது ஆவியாதல் இழப்பை தடுக்கவே. வழக்கமாக வைக்கோல் கொண்டு இப்படி செய்வார்கள், நகரத்தில் வைக்கோலுக்கு எங்கு போக. இம்முறைக்கு மல்ச்சிங் (mulching)என்று பெயர்.

சாதாரணமாக ஒரு முறை நீர் பாய்ச்சினால் ஒரு வாரத்திற்கு செடிகள் தாக்குப்பிடிக்கும். ஆனால் வழக்கமாக ஓரிரு நாளிலேயே வாடியது போல தெரிகிறதே எனலாம் அது முழு செழிப்பான நிலைக்கு, இது போன்ற தண்ணீர் தட்டுப்பாடு வரும் போது தாவரங்கள் கிடைக்கும் நீரை வைத்து முடிந்த வரை சமாளிக்கவே செய்யும்.நாம் ஊருக்கு போகும் போது செய்வது லைஃப் இரிகேஷன்.

மேலும் மல்ச்சிங்க் செய்த இடத்தில் ஈரப்பதம் நன்கு நிற்கும் ,எனவே அதுவும் கைக்கொடுக்கும் ஆகையால் ஒரு வாரம் 10 நாள் ஆனாலும் உயிர்ப்பிழைத்து விடும்.

அப்படியும் மனசு நிம்மதியடைவில்லை இன்னும் எதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா, அதற்கும் வழி இருக்கு.

பழைய அல்லது புதிய பானை எடுத்துக்கொள்ளவும் அடியில் மிக சிறிதாக ஒரு துளையிட்டு கொண்டு அதனை வாய்க்கால் போன்ற பகுதியில் , துளையிட்ட பகுதி அழுந்தி இருக்கும்படி பதித்து வைக்கவும். பின்னர் பானை நிறைய நீர் ஊற்றி மறக்காமல் பானையின் வாயை ஒரு தட்டு போட்டு மூடிவிடவும். ஊர் வாயைத்தான் மூட முடியாது பானை வாயையா மூட முடியாது :-))

ஏற்கனவே மண்ணில் ஈரப்பதம் முழு அளவில் இருப்பதாலும், பானையின் துளை சிறியதாக இருப்பதாலும் அவ்வளவாக நீர் வெளியேறாது.

மண்ணில் உள்ள நீர் ,தாவரங்களுக்கு பரப்பு இழுவிசை மற்றும் நுண் புழை (surface tension and capillary motion)ஏற்றம் மூலமே செல்லும், மண்ணும் அப்படித்தான் நீரை கிரகிக்கும் எனவே மண்ணின் ஈரப்பதம் குறைய குறைய பானை நீர் மெல்ல மண்ணில் கிரகித்து செடிகளுக்கும் போய் சேரும். எனவே எல்லா செடிக்கும் தனி தனி பானை வைக்க தேவை இல்லை. வீட்டு தோட்டத்தின் பரப்பு மற்றும் செடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பானையே போதும்.

இம்முறைகளை பின்ப்பற்றினால் தாராளமாக 15-20 நாட்களுக்கு நீர்ப்பாய்ச்சாமலே தாவரங்கள் பிழைத்துக்கொள்ளும்.

ஒரு கூடுதல் தகவல் , தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சொட்டு நீர் (drip irrigation)பாசனம் செய்ய பண வசதி இல்லாத நிலையில் தென்னம் தோப்புகளில் கூட மரத்துக்கு ஒரு பானை என புதைத்து வைத்து நீர் பாய்ச்சுகிறார்கள். ஒரு பானை நீர் தென்னை மரத்துக்கே ஒரு வாரம் தாங்குகிறது.

நம்முடை நீர்ப்பாசனம் மண்ணுக்கு நீர்ப்பாய்ச்சுவதில் கவனம் செலுத்துகிறது ஆனால் வேருக்கு நீர்ப்பாய்ச்சினால் போதும் என்பது தற்கால நீர் மேலாண்மை. ஏன் எனில் நாம் பாய்ச்சும் நீரில் 90% சதம் ஆவியாதல் மூலமே விரயமாகிவிடுகிறதாம்.

இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் நெல்லுக்கே நீர் சிக்கனமாக பயன்ப்படுத்த மடகாஸ்கர் முறையில் "thin film water irrigtion" பயன்ப்படுத்த சொல்லியிருக்கிறார்.நெல் வயலில் நீர் எப்போதும் நிற்க தேவை இல்லை இம்முறையில்.வயல் ஈரப்பதமாக இருந்தாலே போதும்.

வீட்டில் பயன்ப்பாட்டிற்கு பின்னர் வெளியேறும் நீரை சுத்திகரித்து மீண்டும் நம் வீட்டு தோட்டத்திற்கு பாசனம் செய்யப் பயன்ப்படுத்தலாம் அதற்கு எளிய வழி இருக்கிறது.

வீட்டுக்கழிவு நீர் சுத்திகரிப்பு:

ஒரு பிளாஸ்டிக் கேன் அல்லது ஏதேனும் டிரம் போன்ற ஒன்று எடுத்துக்கொண்டு, அதன் அடியில் நீர் வெளியேற ஒட்டை இட்டுக்கொள்ளவும் ,பின் அதில் முறையே சம அளவில் மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் ஜல்லி என நிரப்பி நிரப்பிக்கொள்ளவும் பின் அதனனுடன் விறகு எரித்த மரக்கரி துண்டுகளையும் சுமார் ஒரு கிலோ அளவுக்கு சேர்த்துக்கொள்ளவும்.

இந்த கலவை அனைத்தும் முக்கால் அல்லது பாதியளவே நிரப்ப வேண்டும்,அப்போது தான் நீரீனை பிடித்து வடிக்கட்ட டிரம்முக்கு நேரம் கிடைக்கும் :-))

இதில் ஏன் மரக்கரி சேர்க்கப்படுகிறது என்றால் அது ஆக்டிவேட்டட் கார்பன் (activated carbon)போன்று இயல்பாகவே செயல்படும். நாம் குடிக்க பயன்ப்படுத்தும் நீர் சுத்திகரிப்பு எந்திரங்களிலும் ஒரு ஆக்டிவேட்டட் கார்பன் பில்டர் இருக்கும்.

இது நீரில் உள்ள வேதிப்பொருள்களை கிரகித்துக்கொள்ளும் தன்மை உடையது.நாம் ஆக்டிவேட்டட் கார்பன் என்றெல்லாம் செலவழிக்காமல் நேரடியாக இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருளான மரக்கரியைப்பயன்ப்படுத்திக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

வீட்டு உபயோக கழிவு நீரில் வழக்கமாக இருக்கும் சோப், ஷாம்பு, பாத்திரம் துலக்கும் சோப்பு, எண்ணை ,உணவு துணுக்கு என அனைத்தும் இந்த சுத்திகரிப்பு முறையில் 90% நீக்கப்பட்டு ஓரளவு இயல்பான நீர்க்கிடைக்கும்.

வீட்டில் தொழு உரம் தயாரிக்கும் முறை:

வீட்டை சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால் அதில் குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்ற அளவிலாவது குழி வெட்டி ,தாவர, உணவு கழிவுகளை சேமித்து உரமாக்கலாம்.

மண் தரை தான் தொழு உரம் தயாரிக்க ஏற்றது ஏன் எனில் மண்ணில் உள்ள நுண்ணியிரிகள் மட்க வைக்க உதவும், மேலும் துர்நாற்றம் , உணவுகள் ,தாவரக்கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினையும் உரிஞ்சிவிடும்.

அப்படி இல்லாத நிலையில் ஏதேனும் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து தொழு உரமாக்கலாம். முன் சொன்னது போல கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினால் துர்நாற்றம் வரும் இதனைக்குறைக்க அவ்வப்போது கொஞ்சம் மணல் அல்லது மண் கொண்டு மேலே மூடிக்கொண்டே வரவேண்டும், நீரினையும் கிரகித்துவிடும், துர்நாற்றமும் குறையும்.மேலும் எளிதில் மட்கவும் செய்யும்.முழுதும் மட்கி மண் போல ஆக குறைந்தது ஆறு மாதம் ஆகலாம். பின்னர் எடுத்து தோட்டத்துக்கு உரமாக இடலாம்.

ஏன் இப்படி மட்க செய்யவேண்டும் நேரடியாக தோட்டத்தில் தாவரத்திற்கு போட்டு விடலாமே என நினைக்கலாம். அதனால் பயனேதும் இல்லை.

தாவரங்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பொட்டாசியம் ,பாஸ்பரஸ் ஆகியவற்றை நீரில் கரைந்துள்ள(water solluble nutrients) நிலையிலேயே கிரகிக்க முடியும்.மட்காத கழிவில் ஊட்டச்சத்துகள் இருந்தாலும் நீரில் கரையாத தன்மை கொண்டவை எனவே தாவரங்களால் பயன்ப்படுத்திக்கொள்ள முடியாது.

மட்கிய நிலையில் நீரில் கரையும் தன்மை வந்துவிடும். மாட்டு சாணத்துக்கும் இது பொருந்தும் ,ஈரமாகாவோ, காய்ந்தோ அப்படியே இட்டால் பலன் இருக்காது.மட்க வைத்தே இட வேண்டும்.மட்கிய நிலையில் கரிமப்பொருட்களில் இருப்பவை அனைத்தும் எளிய மூலகங்களாக உடைப்பட்டு எளிதில் கறையும் தன்மை அடையும்.

தொழு உரம் என்பது மெதுவாக ஊட்டச்சத்தினை வெளியிடும் (slow releasing fertilizr)தன்மை கொண்டது , இந்த பருவத்தில் இட்ட உரத்தின் பலன் அடுத்த பருவத்திலேயே தெரியும்.எனவே தொழு உரம் எல்லாம் இட்டும் வீட்டு தோட்டம் பச்சை பசேல் என செழிப்பாக வளரவில்லை என முதன் முதலில் தோட்டம் போட்டதும் எதிர்ப்பார்க்காதீர்கள். சுமாரான வளர்ச்சி தான் முதல் பருவத்தில் இருக்கும். அடுத்த பருவத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

உரம் போட்டதும் பயிரில் பசுமையை காட்டுவது இரசாயன உரங்களே அதனால் விவசாயிகள் அதனைப்பார்த்து நல்ல பலன் என செயற்கை உரங்களுக்கு போய்விட்டார்கள். நீண்ட கால நோக்கில் பின் விளைவுகள் எதிர்மறையாகப்போகும். எனவே வீட்டு தோட்டத்தில் உடனடி பலன் எதிர்ப்பார்த்து இரசாயன உரம் போட வேண்டாம்.இரசாயன உரங்கள் ,பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் நமக்கு குறைந்த செலவிலும், உழைப்பிலும் வீட்டுத்தோட்டங்கள் மூலம் கிடைக்கும்.

வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை:

# மொட்டை மாடியில் அமைக்கும் போது நீர் போகும் வழிகளை அடைக்காமல் அமைக்கவும்.

#கைப்பிடி சுவரோடு ஒட்டி அமைத்து விடாமல் நான்கு புறமும் சென்று வர வழியோடு அமைக்கவும்.

#குறைந்த இடத்தில் அமைக்கிறோம் ,நிறைய பயிரிட வேண்டும் என அதிகம் செடிகளை நடாமல் போதுமான இடைவெளி விடவும்.அடர்த்தி அதிகம் ஆனால் செடிகளிடையே ஊட்டச்சத்துக்கு போட்டி ஏற்பட்டு எதுவுமே சரியாக வளராது.

#நீர் தேங்காமலும், பானைகள் நீருடன் திறந்து கிடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் ,இல்லை எனில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி டெங்கு முதல் அனைத்தும் வரும்.

#மேலும் சில பூச்சிகள்,வண்டுகள் உங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகவும் வரலாம் :-))

கட்டுப்படுத்த வேப்பம் எண்ணையை நீரில் கலந்து(10%) கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

#வீட்டு தோட்டத்தில் எறும்புகள் அதிகம் படை எடுக்கும் அதுவும் விதைப்பின் போது ,அதைப்பார்த்துவிட்டு துகளாக கிடைக்கும் எறும்பு மருந்தினை வாங்கி தூவக்கூடாது .ஏன் எனில் lindane 2-4-D என்ற ரசாயனமே எறும்பு மருந்து என விற்கப்படுகிறது. இது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

எறும்பினை கட்டுப்படுத்த கொஞ்சம் மேசை உப்பினை சுற்றிலும் கோடுபோல தூவிட்டாலே போதும்.லச்சுமணன் ரேகை போல எறும்பு கோடு தாண்டாது :-))

# தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால் அப்புற படுத்த வேண்டாம் அவை பயிர்களின் நண்பனே இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துபவை.

மேலும் மற்ற விவரங்கள் எல்லாம் கவுசல்யா அவர்களின் பதிவிலே நன்றாக விளக்கியுள்ளார்கள், அங்கு பார்க்கவும்.விடுபட்டவைகளை மட்டுமே நான் கூறியுள்ளேன் , இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ சந்தேகம் என்றாலோ பின்னூட்டத்தில் சொல்லலாம்.

--------------

பின் குறிப்பு:

தகவல், படங்கள் உதவி,

கூகிள் தளம்,நன்றி!

*****

30 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அருமையான் தகவல்கள்.
நன்றி

Anonymous said...

பதிவுக்கு துணைப்பதிவு உஙகள் உப தொழில்???

கோவை நேரம் said...

கலக்கறீங்க....தலை..உங்களுக்கு தெரியாத விசயமே இல்லை போல் இருக்கே..வாழ்த்துக்கள்.உங்களுடைய ரொம்ப நாள் வாசகன்..

Thomas Ruban said...

எதை பற்றி பதிவு எழுதினாலும் எழுமையாக ,சிறப்பாக விரிவாக புரியும்படி எழுதுகிறீர்கள் நன்றி.

//தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால் அப்புற படுத்த வேண்டும் //
இது அவர்ர கண்ணில் படுவதற்கு முன்பு மாற்றுங்கள்.

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

-----

ரெவரி,

வாங்க வணக்கம்,நன்றி!

விட்டால் துணைப்பதிவு போடுவதே உப தொழிலா ஆக்கிடுவிங்க போல இருக்கே :-))

இப்போ தான் உங்க பயங்கர டேட்டாப்படிச்சேன், பின்னர் பின்னூட்டம் போட்டுக்கலாம்னு வந்துட்டேன்.ஏன்னா நிறைய யோசிக்க வச்சிட்டிங்க!

----------
கோவை நேரம்,

வாங்க,வணக்கம்,நன்றி!

குழுமம் எல்லாம் ஜோரா நடத்துறிங்க,நல்ல முயற்சி அப்படியே விட்டுறாம தொடருங்க.வேட்டி சட்டைல சும்மா ஜம்ம்முனு இருக்கிங்க பாஸ்!

ரொம்ப எல்லாம் தெரியாதுங்க,விவசாய குடும்பம் என்பதால் ஓரளவு தெரியும், கொஞ்ச காலம் முன்னர் வரை வயலும் வாழ்வும்னு திரிஞ்ச ஆளு தான் நாம, இப்போ ஏரோட்டம் நின்னுப்போச்சு.கேட்டது,பார்த்தது ,படிச்சது வச்சு ஒப்பேத்துறது தான் மற்றதெல்லாம்.

நீங்க அடிக்கடி என்னை ஊக்கப்படுத்துவது தெரியும், நீண்ட நாளாக படிப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி,நன்றி!

நீங்க படிக்கும் நீங்க வாசகன்,நான் படிச்சா நான் வாசகன் , நாம எல்லாமே வாசகர்கள் தான் நண்பா!

----------

ரூபன்,

வாங்க,வணக்கம், நன்றி!

வெளிப்படையான பாராட்டுக்கு மிக்க நன்றி!

ஆஹா வேண்டாம் என்பது வேண்டும்னு ஆயிடுச்சா, நல்லவேளை சொன்னீங்க,எழுதும் போது இப்படி யோசிச்சுக்கிட்டே எழுதினேன், "அப்புறப்படுத்தக்கூடாது அவையும் வேண்டும்னு " ஆனால் கை அதுப்பாட்டுக்கு இப்படி தட்டிடுச்சு :-))

இப்போ திருத்திட்டேன், ஹி.ஹி கொஞ்சம் சோம்பேறித்தனம் அதான் பிழை திருத்தம் பார்ப்பதே இல்லை, சுட்டியதற்கு நன்றி,திருத்திவிட்டேன்!

அமுதா கிருஷ்ணா said...

மிக அருமையான பதிவு..வாழ்த்துக்கள்

அமுதா கிருஷ்ணா said...

Tarpaulin sheet use seiyalama???

வவ்வால் said...

அமுத கிருஷ்ணா,

முதல் வருகை என நினைக்கிறேன், வணக்கம்,பாராட்டுக்கு மிக்க நன்றி!

தார்ப்பாய் விலை அதிகம் ஆச்சே.வீட்டில சும்மா இருந்தா பயன்படுத்தலாம்.

தார்பாய் என்பது கடின துணி மீது வாட்டர் ரெசிஸ்டன்ட் கோட்டிங்க் செய்யப்பட்டது, சமயத்தில் மண்ணில் மட்கலாம்.

மட்காத பிளாஸ்டிக் என குறைப்பட்டுக்கொண்டாலும் ,அதுவே மாடித்தோட்டத்துக்கும் உதவுது.விலையும் கம்மி தான்,பல் நடைப்பாதைக்கடைகளின் கூறையே பிளாஸ்டிக் ஷீட் தான்.

தி.தமிழ் இளங்கோ said...

மாடி வீட்டு ஏழை போல, மாடி வீட்டுத் தோட்டம் போட்டால், வீட்டு மேல் தளத்தில் ஏற்படும் நீர்க் கசிவினால் இரும்பு கம்பி துருப்பிடித்தல். பற்றி சரியான எச்சரிக்கை செய்துள்ளீர்கள்.

சதுக்க பூதம் said...

நல்ல, எளிய , விரிவான பதிவு. ஒவ்வொரு டாப்பிக் பற்றியும் இவ்வளவு விளக்கமாக படித்து பதிவிட எப்படி நேரம் கிடைக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
அமெரிக்காவில் தலிகீழாக வளர்க்கும் தக்காளி,மிளகாய் மிக வேகமாக பரவி வருகிறது. அவற்றை கூட வீட்டு தோட்டத்திற்கு பயன் படுத்தலாம். அது பற்றி சில ஆண்டுகளுக்கு முன் படத்துடன் பதிவிட்டிருந்தேன்.
http://marutam.blogspot.com/2010/08/blog-post.html

அந்த பதிவில் உள்ளது போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிய வெள்ளை சாக்கு கொண்டு, அதை தொங்க விட்டு கூட இலவசமாக தயாரிக்களாம். நான் முயற்சி செய்த போது நன்றாகவே வந்தது.அதே போல் தற்போது Square foot garden கூட பிரபலமாகி வருகிறது
http://www.youtube.com/watch?v=N5Lu-7FIj_g

அதாவது நீங்கள் கூறிய "நாம் உருவாக்கிய தொட்டிப்போன்ற அமைப்பில் பரப்பிக்கொள்ளவும்."-போன்றது

Paleo God said...

கலக்கறீங்க பாஸ் :))

சதுக்கபூதம் அவர்கள் சொன்னமுறையில் இந்தமுறை தக்காளி வளர்க்க இருக்கிறேன் :))

CS. Mohan Kumar said...

Useful post.

Neenga oru All in all azhagu raajaa (Serious !!)

suvanappiriyan said...

அருமையான பதிவு..வாழ்த்துக்கள்

வவ்வால் said...

தி.த.இளங்கோ,

வாங்க,நன்றி!

மாடியில் தோட்டம் அமைக்காத நிலையிலே கூட நீர்க்கசிவால் தளம் பாதிக்கப்படுவதுண்டு. அப்படி இருக்கும் போது இயற்கைக்கு மாறாக மாடியில் வளர்க்கும் போது சில முன் ஏற்பாடுகள் செய்வது அவசியம் தானே.

இப்பதிவு ஒரு பதிவர் நீர் கசிவால் ஒன்றும் ஆகாது வீட்டுக்கு குளிர்ச்சி என பதிவு இட்டிருந்தார் பின்னூட்டத்திலும் சொன்னேன். சரியாக புரியலையோ என ஒரு பதிவிட்டுள்ளேன்.ஏன் எனில் சிலர் ஆர்வ மிகுதியால் ஏதோ செய்யணும்னு செய்துவிட்டு பின்னாளில் விரிசல் விழுந்தால் வருத்தப்படுவார்கள், எனவே தான் பாதுகாப்பான முறையை சொன்னேன்.

------

பூதம்,

வாங்க ,நன்றி!

என்ன இப்படி சொல்லுறிங்க,நானே தொடர்ச்சியாக பதிவு போட முடியாம விட்டு விட்டு போட்டுக்கிட்டு இருக்கேன்,2006 இல் இருந்து பதிவு போடுறேன் இன்னும் 200 பதிவு கூட தொடவில்லை,என்னோட ஆர்கைவ்ஸ் பார்த்தாலே தெரியும்.

அவனவன் ஒரே ஆண்டில 1000 பதிவு கண்ட அபூர்வ சிகாமணினு போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்கான்ங்க :-))

எனக்கு நல்லா தெரிந்த ,புரிந்ததை ,இணையத்தில் சரிப்பார்த்துவிட்டு பதிவிடுவேன். ரொம்ப எல்லாம் மூளையை பிழிவதில்லை(மூளை இருக்கான்னு கேட்கப்படாது)

விவசாயம் சார்ந்தப்பதிவுகள் வழக்கமாக நான் போடுவது உங்களுக்கு தெரியுமே, இந்தப்பதிவில் படம்ம் மட்டும் தேடியது மற்றது எல்லாம் முன்னரே தெரிந்த ஒன்று என்பதால் சிரமம் இல்லாமல் போச்சு.

உங்க பதிவும் பார்த்தேன் நன்றாக இருக்கு,விவசாயத்துக்குனே பதிவு போடுறிங்க போல, நான் முன்னரே பார்த்தது போலவும் இருக்கு ,கண்வலி கட்டுரை எல்லாம் படித்த நினைவில் இருக்கு. பின்னூட்டம் போட மறந்துவிட்டேன் என நினைக்கிறேன்.

தலைக்கீழ் தொட்டி என்பது ஒரு ஃபேன்சி க்கு மற்றபடி அப்படியான ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கும் என்பது சரியல்ல என்றே நினைக்கிறேன். ஏன் என்னில் தண்டு மீண்டும் வளைந்து மேல் நோக்கியே செல்கிறது ,இதனால் சைலம்,புளோயம் ஆகியவையில் சரியாக நீரோட்டம் ,ஊட்ட சத்து ஓட்டம் இருக்காது என நினைக்கிறேன்.வீட்டில் செடி வளர்க்க நல்ல ஒரு சாதனம் என எடுத்துக்கொள்ளலாம்.

சாக்குப்பை முறை எளிய நல்ல முறை, சாக்கு, தொட்டி என வளர்க்கலாம்.

-----

ஷங்கர்,

வாங்க,நன்றி!

கண்டிப்பாக வளர்த்துப்பாருங்கள் ஒரு பொழுது போக்காகவும் இருக்கும். ஊரில் இருக்கும் எங்க வீட்டை சுற்றி காடாக கிடக்கும் அளவுக்கு செடி ,கொடி ,மரங்கள் உண்டு, இப்போது தான் கொஞ்சம் கழித்து விட்டு சரி செய்தோம்.

பச்ச மிளகாய், பாகற்காய், முருங்கை,கொய்யா, எலுமிச்சை, நார்த்தங்காய்,கருவேப்பிலை எல்லாம் நாங்கள் வாங்குவதே இல்லை. வீட்டை சுற்றியே எல்லாம் இருக்கு, தெரிந்தவர்களுக்கும் சப்ளை ஆகும் :-)) இது போக ஆயிரத்துக்கும் மேல் முருங்கை காய்,நார்த்தங்காய் விற்றுள்ளோம்,வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போறாங்க.எல்லாவற்றிலும் ஒரு ஒரு மரம் மட்டுமே உள்ளது.

எல்லாவற்றிலும் ஊரில் இருந்து அவ்வபோது எனக்கு பார்சல் வரும் :-))

பத்மா said...

all in all sari !
azhgu rajava neenga vovval? :))


as usual kalakkals

வடுவூர் குமார் said...

இந்த HDPE சென்னையில் எங்கு கிடைக்கிறது,தேடி தேடி அலுத்துவிட்டேன்.செடி வளர்பவர்/விற்பனையாளர்களிடம் கேட்டாலும் தெரியவில்லை.
மாடி ஹோ வென்று கிடக்கிறது, ஏதாவது செய்யனும்.

வவ்வால் said...

மோகன்,

வாங்க, நன்றி!

பயனுள்ளனு சொல்லிட்டிங்க ,அப்போ அய்யாச்சாமியின் வீட்டு தோட்டம் னு விரைவில் படங்களுடன் ஒரு பதிவு வரும்னு நினைக்கிறேன் :-))

பாருங்க சாரே சும்மா ஒரு பேச்சுக்கு அழகு ராசானு சொன்னீங்க ,அது பொறுக்கவில்லை ஒருத்தங்களுக்கு பின்னாடியே வந்து காலை வார்றாங்க :-))

-------------
வாங்க திரு.சு.பி,

வணக்கம், வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

------------
உஷ்,

வாங்கோ,வாங்கோ, நலமா ,கண்டு கனகாலம் ஆச்சு, நலமா?

உங்க ஓடத்துக்கு வந்தால் ,கண்டுக்கவே மாட்டேன்கிறிங்க,ரொம்ப பிசியா ஆகிட்டிங்க போல.

குத்து (ஆலம்)வேற உங்களைக்கேட்டுக்கிட்டே இருந்தார், அவர் நலம் விசாரித்தார் என தகவலையும் சொல்லியாச்சு.

ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட அழக்கு ராசான்னு ஒத்துக்க மாட்டேன்கிறிங்களே :-))

----------

குமார் ,

வாங்க,வணக்கம், நன்றி!

உங்க படம் தான் கைக்கொடுத்துச்சு,நன்றி!

இந்த HDPE சென்னையில் ,டூல்ஸ் விக்குற ஹார்டுவேர் கடை, ரெக்சின் , ஆட்டோ மொபைல் கடைகளில் கிடைக்கும். பாரிஸ் ,பிராட்வேயில் என்.எஸ்.சி போஸ் ரோட் என நினைக்கிறேன், ஹைகோர்ட் சிக்னலில் இருந்து நேராக மண்ணடி போகும் சாலையில் அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும்,அதுவும் மொத்த விலையில்.

மற்ற இடங்களிலும் கிடைக்கலாம்,ஆனால் அங்கு எல்லா கடைகளும் ஒரே ஏரியாவில் இருக்கு. பர்னிச்சர் முதல் தோட்ட உபகரணம் வரை அனைத்தும் கிடைக்கும்.

விரைவில் பசுமை மாடிக்கு சொந்தக்காரர் ஆக வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

குமார்,

அந்த சாலைக்கு பெயர் என்.எஸ்.சி போஸ் சாலையா,பிரகாசம் சாலையா என சிறிய குழப்பம்,பிராட் வே சாலை என சொன்னாலும் அனைவருக்கும் தெரியும்.நேராக ராயபுரம்,ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் செல்லும் வழி.

ராஜ நடராஜன் said...

தோட்டம் போட்டுகிட்டு உட்கார்ந்துகிட்டா இங்கே வந்து பின்னூட்டம் போடறது யாரு?

ராஜ நடராஜன் said...

தோட்டம் போட்டுகிட்டு உட்கார்ந்துகிட்டா இங்கே வந்து பின்னூட்டம் போடறது யாரு?

ராஜ நடராஜன் said...

அய்யய்யோ!பதிவர் கௌசல்யாக்கான பதிவா?பின்னூட்டம்தான் வந்து விழுகுது பாருங்க!

ராஜ நடராஜன் said...

ஓய்!வவ்வாலாரே!நான் பதிவர் கௌசல்யாவுக்கு பின்னூட்டம் போட்டு விட்டு அப்புறம் நான் என்னமோ குழப்பமா பின்னூட்டம் போடுறேன்னு சொல்லியும் கூட நான் அந்தப் பக்கம் போகவேயில்லை.இந்த பதிவுக்குத்தான் போய் பார்த்தேன்.

பின்னூட்ட சண்டை போடறது நீங்க!கோர்த்து விடறது என்னையா?நல்லாயிருக்குதே!

ராஜ நடராஜன் said...

அங்கே வடுவூரார் மேற்கூரை துருப்புடிச்சி இருக்குது.அதுக்கு ஒரு அச்சச்சொ சொல்ல உங்களைத் தவிர ஒரு ஆளைக் காணோம்!

இங்கே பின்னூட்டம் போட்டவங்க ஒருத்தர் வீட்டிலேயும் கம்பி துருப்பிடிக்கவேயில்லையா!ஆச்சரியம்தான்:)

ராஜ நடராஜன் said...

//இந்த HDPE சென்னையில் எங்கு கிடைக்கிறது,தேடி தேடி அலுத்துவிட்டேன்.செடி வளர்பவர்/விற்பனையாளர்களிடம் கேட்டாலும் தெரியவில்லை.
மாடி ஹோ வென்று கிடக்கிறது, ஏதாவது செய்யனும்.//

வடுவூராரே!இப்பத்தானே உங்களுக்கு சிபாரிசு செய்து பேசிகிட்டிருக்கேன்.துருப்புடிச்ச கூரையை இன்னும் எப்படி பாதுகாப்பதுன்னு யோசிக்காமல் மொட்டை மாடில பூச்செடி நடறேங்கிறீங்களே:)

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

//தோட்டம் போட்டுகிட்டு உட்கார்ந்துகிட்டா இங்கே வந்து பின்னூட்டம் போடறது யாரு?//

நல்ல கேள்வி!

//அய்யய்யோ!பதிவர் கௌசல்யாக்கான பதிவா?பின்னூட்டம்தான் வந்து விழுகுது பாருங்க!//

வேற என்ன வந்து விழும்னு எதிர்ப்பார்த்தீங்க?

//பின்னூட்ட சண்டை போடறது நீங்க!கோர்த்து விடறது என்னையா?நல்லாயிருக்குதே!//

அதுக்கு பேரு சண்டையா? எனக்கு முன்னாடியே நீங்க பின்னூட்டம் போட்டுடு என்னமோ நான் கோர்த்து விட்டேன்னு, செய்றத எல்லாம் செஞ்சிட்டு அடுத்தவங்க பக்கம் கையை காட்டுவது தமிழ் கலாச்சாரம் என்பது சரியாத்தான் இருக்கு :-))
-----

வடுவூரார் பழைய பதிவு அது பிப்ரவரில போட்டது, பெரும்பாலும் நான் வாசித்து பின்னூட்டம் போடுவேன் ,அவருக்கு.

நீங்க எல்லாம் த.ம வில இல்லாத பதிவ கண்டுக்கமாட்டிங்க.இதுல கேள்வி வேற :-))

வடுவூர் குமார் said...

வடுவூராரே!இப்பத்தானே உங்களுக்கு சிபாரிசு செய்து பேசிகிட்டிருக்கேன்.துருப்புடிச்ச கூரையை இன்னும் எப்படி பாதுகாப்பதுன்னு யோசிக்காமல் மொட்டை மாடில பூச்செடி நடறேங்கிறீங்களே:)
எல்லாம் வயசு கோளாறு தான். :-)
ரிட்டயர்ட் வயசு நெருங்கிக்கிட்டு இருக்கு என்றும் அர்த்தம் செய்துகொள்ளலாம்.

Unknown said...

பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி

Anonymous said...

சூப்பராக, ஒரு பாய்ண்ட் விடாமல், விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் பதிவுகளில் அதிகமாக , தோட்டங்களின் பெருமை பற்றி தான் இதுவரை நெட்டில் கிடைத்தவை. எத்தறை முறை கேள்விகள் கேட்டாலும் கண்டுக்காம தோட்ட அறிவை பறைசாற்றிக் கொண்டு, பதில் சொல்லாமல் இருந்தவர்களை அறிந்த எனக்கு, உங்கள் விரிவான பதிவு, மகிழ்சியை கொடுத்தது.

தேடி அலுத்து இருந்தேன், முதல் முறையாக, பயனுள்ள விளக்கமான பதிவு படிக்கும் வாய்ப்பு தந்தமைக்கு, நன்றி.

முடிந்தால், என் தேட்டம் பற்றிய பதிவுகளை பார்த்து ,உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு, கோருகிறேன்.

www.gardenerat60.wordpress.com

அருள் said...

வவ்வால் கூறியது...

// //பதிவு போடுறாப்போல போட்டு தூக்கிடுவிங்க :-))// //

நீங்கள் 'நம்பள்கி' குறித்த பதிவு குறித்து கேட்கிறீர்கள். அது கவனக்குறைவால் தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. ப்ளாக்கரில் அதைத் தேடத்தெரியவில்லை.

வேறு இடத்திலிருந்து எடுத்து இன்று மீண்டும் பதிவேற்றியுள்ளேன்.

http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_20.html

yathavan64@gmail.com said...

வணக்கம்!
இன்றைய வலைச்சரம் வலைப் பூவில்
தங்களது பதிவு சிறந்த பதிவாக தேர்வானமைக்கு
குழலின்னிசையின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(உறுப்பினராக தாங்கள் இணைந்து ,"குழலின்னிசையை" தொடர வேண்டுகிறேன்! நன்றி!)