Thursday, February 21, 2008

sensex- ஒரு பார்வை!

பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது என்னைப்போல சும்மா வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை sensex அப்படி என்றால் என்ன? , sensitive index என்பதன் சுருக்கமே sensex, இதனை வைத்து எப்படி பங்குவணிகத்தினை கணிக்கிறார்கள், இந்த முறை எப்போது இருந்து நடைமுறைக்கு வந்தது என்பதைப்பார்ப்போம்.

கி.பி 1875 ஆம் ஆண்டு மும்பையில் 318 வியாபாரிகள் ஆளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே முதலீட்டு பங்காக போட்டு ஒரு வியாபார அமைப்பாக நிறுவியது தான் இன்றைய மும்பை பங்குவர்த்தக மையம்.அபோதேல்லாம் எந்தவித குறியீடுகளும் இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில் பங்கு வணிகம் நடந்தது. 1986 இல் தான் முதன் முதலில் sensex என்ற பங்குவணிக குறியீட்டினை செயல்படுத்தி , சந்தையின் ஏற்ற இறக்கங்களை தெளிவாக உணர செய்தார்கள். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் sensex புதிதாக வெளியிடப்படும்.

இந்த sensex எதன் அடிப்படையில் செயல்படுகிறது?

முதலில் முழு சந்தைமதிப்பு முதலீடு (
"Full Market Capitalization")என்ற அடிப்படையிலும் , பின்னர் 2003 இல் இருந்து கட்டற்ற மாறும் சந்தை மதிப்பு முதலீடு ("Free-float Market Capitalization" )என்ற அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.

முழு சந்தைமதிப்பு முதலீடு:

உதாரணமாக ஒரு நிறுவனம் 1000 சமவிகித பங்குகளை தலா 100 ரூபாய் மதிப்பில் வைத்து துவக்கப்படுகிறது என்றால் , அதன் மொத்த மதிப்பு 100x1000= 1,00,000 ஆகும், இந்த மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட்டால் அது முழு சந்தை மதிப்பு முதலீடு ஆகும்.

இதில் உள்ள குறைப்பாடு என்னவெனில், அந்நிறுவனத்தின் உண்மை சந்தை மதிப்பு என்ன என்பதை சரியாக கணக்கிட முடியாது, ஏன் என்பதை அடுத்த உதாரணம் பார்க்கும் போது தெரியும்.

கட்டற்ற மாறும் சந்தை முதலீடு:

அதே நிறுவனத்தின் 1000 பங்குகளில் 250 பங்குகளை அதன் முதலாளி தனக்காக வைத்துக்கொண்டு 750 பங்குகளை மட்டுமே மக்கள் வாங்க சந்தையில் விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், மக்களுக்கு கிடைக்கும் பங்குகளின் மதிப்பு என்ன 750x100= 75,000 தான். இப்போது மக்கள் பங்கு பெறும் பங்கு சந்தையில் அந்நிறுவன பங்குகளின் அடிப்படையில் மதிப்பு கணக்கிடும் போது விற்பனைக்கு வராத 250 பங்குகளையும் சேர்த்து மதிப்பிட்டு சொல்வதால் என்ன ஆகும், தேவை இல்லாமல் மதிப்பைக்கூட்டிக்காட்டும், ஆனால் புழக்கத்தில் உள்ள பங்கு மதிப்பு குறைவு, அதன் விற்பனை செயல்ப்பாடுகளே நேரடியாக supply & demand அடிப்படையில் சந்தையின் மதிப்பை வெளிப்படுத்தும்.

எனவே தான் தற்போது எல்லாம் உலக அளவில் அனைத்து பங்கு சந்தைகளும் கட்டற்ற மாறும் சந்தை முதலீடு அடிப்படையில் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது நம் பங்கு சந்தை குறியீட்டு எண் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

இக்குறியீட்டினை ஏதோ ஒரு ஆண்டினை அடிப்படை ஆண்டாக (base year)வைத்து துவக்க வேண்டும், நமக்கு 1979 தான் பங்கு சந்தை குறியீட்டு அடிப்படை ஆண்டு.

அந்த ஆண்டில் தோராயமாக 10 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்தது என்று வைத்துக்கொள்வோம், இதுவே அடிப்படை பங்குகள் எனப்படும், அதன் மொத்த மதிப்பு 1000 ரூபாய் , என்றால் அதனை வைத்து குறியீடு ஏற்படுத்தி முழு மதிப்பாக வைத்து குறியீட்டு எண் 100 என்று நிர்ணயித்துக்கொண்டார்கள்.

அதாவது 1979 இல் sensex மதிப்பு 100 என்று துவக்கமதிப்பாக நிர்ணயித்துக்கொண்டார்கள்.

இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் , புதிதாக எத்தனை நிறுவனங்கள் பங்கு வெளியிட்டாலும் அதனை முதலில் அந்த அடிப்படை பங்குகளின் செயல் பாட்டுடன் ஒப்பிட்டே மொத்த சந்தையினை மதிப்பிடுவர்கள். பங்குகளின் மொத்த மதிப்பினை, துவக்க பங்கு மதிப்புக்கும் , துவக்க பங்கு குறியீட்டுக்கும் உள்ள விகிதத்தால் பெருக்கி கிடைக்கும் எண்ணுக்கு தான் sensex என்று பெயர்.

1979 இல் ஒரு உதாரணமாக 10 நிறுவனங்களை எடுத்துக்கொண்டார்கள் என்று சொன்னேன், ஆனால் உண்மையில் 30 நிறுவனப்பங்குகள் எடுத்துக்கொண்டார்கள், அதன் மொத்தமதிப்பாக 60,000 ரூபாய் என்றும், அதன் ஆரம்ப குறியீடாக 100 என்றும் வைத்துக்கொண்டார்கள்.

இப்பொழுது sensex கணக்கிட அந்த 30 பங்குகளின் சந்தை மதிப்பை, சந்தையில் கிடைக்கும் விற்பனைக்கு கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை வைத்து கணக்கிடுவார்கள், அப்படி கிடைக்கும் மதிப்பினை 100/60,000 என்ற எண்ணால் பெருக்குவார்கள் , (இந்த விகிதத்திற்கு index divisor என்று பெயர்) அப்படி பெருக்கி கிடைக்கும் எண்ணே அப்போதைய sensex.

30 அடிப்படை நிறுவனங்களை பெரிய , நடுத்தர , மிக நீண்டக்காலமாக இருக்கிற , நம்பிக்கையான , அதிகம் வியாபாரம் ஆகும் பங்குகள் என்று பல அளவுகோள்களின் அடிப்படையில் அவ்வப்போது தேர்வு செய்வார்கள்.

தற்போதைய பங்கு சந்தை sensex அடிப்படை 30 பங்கு நிறுவனங்கள் இவை தான்,

ACC, Ambuja Cements, Bajaj Auto , BHEL, Bharti Airtel , Cipla, DLF, Grasim Industries , HDFC , HDFC Bank, Hindalco Industries , Hindustan Lever , ICICI Bank , Infosys , ITC, Larsen & Toubro, Mahindra & Mahindra, Maruti Udyog , NTPC, ONGC , Ranbaxy Laboratories , Reliance Communications , Reliance Energy , Reliance Industries , Satyam Computer Services , State Bank of India , Tata Consultancy Services , Tata Motors , Tata Steel , and Wipro .

இந்த 30 நிறுவனங்களின் செயல்ப்பாடு, வர்த்தகம் , அதன் மதிப்பே sensex ஐ நிர்ணயிப்பது.

பின்னர் எப்படி திடீர் , திடீர் என பங்கு சந்தையில் சரிவு ஏற்படுகிறது, இந்த 30 நிறுவனங்களும் எப்போதும் லாபத்தில் இருக்குமே எனலாம், அதுக்குலாம் மேலும் பல காரணங்கள் இருக்கு , பின்னர் பார்க்கலாம்,அல்லது பின்னூட்டங்களில் யாரேனும் சொல்லக்கூடும்!






Monday, February 11, 2008

மோஹன் தாசுக்கு ஆப்படிக்கும் இந்திய கிரிக்கெட் அணி!


மோஹன் தாசுக்கு ஆஸ்திரேலிய அணி தான் கனவு அணி, ஆனால் இனிமே அது பழங்கனவு , பகல் கனவு! இந்திய பசங்க சும்மா பட்டைய கிளப்புறாங்க , சிங்கத்தை அதன் குகையில் போய் பிடறியை பிடித்து உலுக்குவதுனா அது இதான், நேத்து என்னமா ஆடுனாங்க பசங்க. அட டா சொல்ல வார்த்தைகள் இல்லை, ஆனால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

அதுவும் ஒரு புதுப்பையன் இஷாந்த் சர்மாவாம் பேரு , ஆளு என்னமோ ஊதினா பறந்துப்போறாப்போல ஈர்க்குச்சி போல இருந்தாலும் , சும்மா சொல்லக்கூடாது குத்தி ஏத்துறான் பந்தை ஆஸி பேட்ஸ்மென் விலாவுல, பந்து எல்லாம் சும்மா இறக்கை இல்லாமலே பறக்குது, ஆஸிப்பேட்ஸ்மேன் எல்லாம் பரத நாட்டியம் , குச்சிப்புடினு இஷாந்த் போடும் தாளத்துக்கு ஆடுறாங்க.

ஒன்றிரண்டு நோ பால் போட்டாலும், காரியக்காரன், விக்கெட்டை பக்கெட்ல அள்ளுறான். போதாததுக்கு நம்ம கதக்களி சிரிசாந்து வேற சந்துல சிந்து பாடி ஆப்படிக்கிறான். சமீப காலத்துல 200 ரன்னுக்கு கீழ ஆஸிய சுருட்டின அணி இந்தியா தான். லிட்டில் மாஸ்டர் சச்சின் பார்ம் என்பது நிரந்தரமல்ல கிளாஸ் தான்னு ஒவ்வொரு போட்டியிலும் காட்டுறார் அதுவும் ஒரே ஓவர்ல பிரட் லீயை புரட்டி எடுத்தார் , 3 ஃபோர் அடிச்சு.ரோஹிட் சர்மா அப்படி இப்படினு ஆடினாலும் தண்ணிக்காட்டிட்டான். மொத்தத்துல இளமையும், அனுபவமும் கலந்த ஒரு கலவையா இருக்கு நம்ம அணி. அப்புறம் என்ன ஜெயம் தானே!

ஆஸில எல்லாம் கிழட்டு பயலுகளாகிட்டாங்க ஒரு சிலரை தவிர எல்லாருக்கும் வயசு 30க்கு மேல , ஏதோ இருக்கிற கொஞ்ச நஞ்ச சக்திய லேகியம் சாப்பிட்டு தக்க வச்சுக்கிட்டு ஆடுறாப்போல இருக்கு.

ரிக்கி பாண்டிங்க் வாய்ப்பேசுர அளவுக்கு பேட் பேச மாட்டேங்குது. டெஸ்ட்ல சொதப்பினது இன்னும் தொடருது, இதுவே இந்தியாவா இருந்தா ஓய்வு பெறனும்னு நாளு பேர் வக்கணையாக எழுதுவாங்க, அங்கேலாம் யாரும் கண்டுக்கலை. டீம் ஆடுறத வச்சு இவர் தப்பிச்சுட்டு இருக்கார். அது எத்தனை நாளைக்கோ.

கில்லி ஓய்வு பெறப்போறார், ஹைடனுக்கு இடுப்பு வலி மூட்டு வலி, வருங்காலத்தில் வங்க தேசம் கூட ஆஸியை புரட்டி எடுக்கும்னு நினைக்கிறேன். அப்போவும் go ..aussie ..go னு நம்ம மோஹன் சொல்லுவராக்கும் :-))

chak de india...



Friday, February 08, 2008

வள்ளல் பாரி வேள் வரலாறு!

யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு.

யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது,தாமதத்திற்கு மன்னிக்கவும், பலப்புத்தகங்களிலும் ஒரே தகவலை மீண்டும் மீண்டும் போட்டுள்ளார்கள்,இப்பொழுது ஓரளவு சுருக்கமாக சொல்லும் அளவுக்கு தான் தகவல்கள் கிடைத்துள்ளது.

அவற்றை மட்டும் இப்போது சொல்கிறேன், மேலதிக தகவல்கள் கிடைத்ததும் பின்னர் சொல்கிறேன். மற்றவர்களுக்கும் பாரிப்பற்றி மேலதிக தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கவும் பதிவில் சேர்த்துவிடலாம்.

பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.

இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.

பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.

பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

பாரியின் பால்யகால நண்பர் தமிழ் புலவரான கபிலர் ஆவார்.இவர் குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார்.நறுமுகையே ...நறுமுகையே எனத்துவங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான்.

பாரி நகர்வலம் சென்றபோது பற்றிப்படர கொழுக்கொம்பு இன்றி தரையில் கிடந்த முல்லைக்கொடிக்காக தேரை தந்து வந்தது அனைவரும் அறிந்த புகழ்ப்பெற்ற சம்பவம் ஆகும்.

பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக்கிடைக்கவில்லை அவர்களுக்கு.

முற்றுகை இட்டக்காலத்தில் உணவுத்தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற்கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு.

அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.

மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க்களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும்.

அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே
அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக்கேட்டார்கள்.

நாங்களும் பலக்காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக்கோட்டைக்குள் இருந்துக்கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், , மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக்கேட்டார்கள்,

கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக்கொண்டே உணவுத்தேவையை சமாளித்துக்கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக்கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.

அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக்கேட்டதர்கு, போரில் அவரை வெல்லமுடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தைக்கேட்டாலும் கொடுத்துவிடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப்பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக்கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக்காட்டினார் கபிலர்.மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்துவிட்டார், இப்போது இருப்பது இந்த மலையும் , அரண்மனையும் மட்டுமே என்றார்.

ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப்பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.

மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் , என்னிடம் இருப்பது எதைக்கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும் , உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக்கேட்டாலும் எப்படி உயிரைக்கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக்கூடாது என்று வாளை எடுத்து வைத்துவிட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.

இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப்பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாட்களை பாரிமீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.

பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக்கேட்டுக்கொண்டார்.

இல்லை எனாது , கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.

தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி , இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கபிலர் நினைத்தாலும், பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார்.

மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன்வரவில்லை.

மூவேந்தர்களைக்கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.

இருவரில் ஒருவரைக் காரிக்கு மணம்முடித்து வைத்துவிட்டு, மற்றப்பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர், அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப்போக்கிக்கொண்டார்.

காரி , பாரி மகளை மணந்துக்கொண்டது அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படை எடுத்து வந்து , போரில் அவரையும் கொன்றுவிட்டார்கள்.காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

மற்றொரு மகளுக்கு என்னவாயிற்று என்பது சரி வர தெரியவில்லை, அவ்வையார் அப்பெண்ணுக்கு ஒரு குறு நில மன்னனுடன் மணம் முடித்தார் என்றும் சொல்கிறார்கள்.

பின்குறிப்பு:

பாரி அரண்மனைக்குள் பாணர்கள் வேடம் போட்டு மூவேந்தர்கள் உட்புகுந்தார்கள், ஆனால் கபிலர் சொன்னப்படி தானம் கேட்டு எல்லாம் உயிரை எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள், ஆனால் அத்தகைய ஒரு சூழ்ச்சி மூலமே பாரியை வென்றார்கள் என்பது மட்டும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.

Thursday, February 07, 2008

ஜோதா அக்பர்

செல்லுலாய்ட் ஜோதா பாய்
ஜோதா அக்பர் என்ற ஒரு இந்தி திரைப்படம் இந்த மாதம் வெளிவர இருக்கிறது வரும் போதே சில சர்ச்சைகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு!இதை இயக்கி இருப்பவர் லகான் புகழ் அஷுதோஷ் கோவ்ரிகர், கதை முன்னால் தொலைக்காட்சி நடிகர் ஹைதர் அலி. இசை , நம்மவூரு ஏ.ஆர்.ரெஹ்மான். இதில் ஜோதா பாய் என்ற ராஜபுதன இளவரசியாக, அக்பரின் மனைவியாக அய்ஷ்வர்யா ராய் பச்சன்* (ராய் போடக்கூடாதுனு சொல்லிட்டாங்களே) அக்பராக ரித்திக் ரோஷன் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்ப்பார்ப்புகளை தூண்டும் படமாக பேசப்படுகிறது.

இந்த சர்ச்சைகள் உண்மையில் கேள்விக்கேட்கும் நோக்கில் எழுப்பப்படுகிறதா இல்லை படத்தை விளம்பரப்படுத்த அடிக்கப்படும் கூத்தா என்றும் எனக்கு சந்தேகம்(வழக்கம் போல)

அப்படி என்ன சர்ச்சை என்றுப்பார்ப்போம்,

ஒரு சாரார் ஜோதா பாய் என்ற பெண்ணே சரித்திரத்தில் இல்லை , அபுல் பசல், பதாயுனி, நிசாமுதின் பக்ஷி ஆகியோரின் அக்பர் வரலாற்றில் இப்படிப்பட்ட பெயரே குறிப்பிட வில்லை என்கிறார்கள்.

இன்னொரு சாரார் ஜோதா பாய் இருந்தார் ஆனால் அவர் அக்பரின் மனைவி அல்ல , அக்பருக்கு மொத்தம் 34 மனைவிகள் என்று வரலாற்றில் தெளிவாக பெயர்களோடு இருக்கு, அதில் ஒருவர் பெயர் கூட ஜோதா பாய் இல்லை. ஆனால் ஜெஹான்கீரின் (சலிம்) மனைவி பெயர் ஜோதா பாய் , எனவே தவறாக அக்பரின் மனைவி என்று சொல்கிறார்கள் படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

மூன்றாவதாக , தற்போதைய ராஜ்புதான ஜோத்பூர் அரச குடும்பம் , ஜோதா பாய் உண்மையான ஒருவரே, அவருக்கும் அக்பருக்கும் திருமணம் நடந்தது என்கிறார்கள்.

ஜோதா பாய் என்ற பெயர் வரக்காரணமே அவர் ஜோத்பூர் இளவரசி என்பதால் தான்.

எது எப்படியோ இலவசமாக படத்திற்கு விளம்பரம் கிடைத்து விட்டது.சரி நாமும் நம்ம பங்குக்கு வரலாற்றை தோண்டிப்பார்ப்போம் என்று பார்த்ததில்,

ஹிமாயுன் , ஷேர்ஷா சூரியிடம் போரில் தோல்வி அடைந்து தலைமறைவாக சுற்றியக்காலத்தில் ஹமீதா பானு என்ற பெண் மீது காதல் கொண்டு மணந்து கொண்டார், நாடோடி வாழ்க்கையின் போது இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவர் இயற்பெயர் ஜலாலுதீன். அக்பர் என்றாலும் கிரேட் என்ற பொருள் தான், ஆனால் அவரை அக்பர் தி கிரேட் என்று சொல்வார்கள்(டபுள் கிரேட் போல).

அக்பரின் முதல் திருமணம் கொஞ்சம் விசித்திரமானது, அக்பர் ஆட்சியைப்பிட்க்க உதவியாக இருந்த பைராம் கான் என்ற அக்பரின் மாமா, இறந்ததும் அவரது மனைவியையே மணந்துக்கொண்டார், ஹிமாயுன் ஆட்சிப்பொறுப்பில் இல்லாதக்காலக்கட்டத்தில் பிறந்த அக்பரை வளர்த்ததே பைராம் கான் , அவர் மனைவி தான், எனவே அவர் வளர்ப்பு தாய் போன்றவராக கருதப்படவேண்டும், அக்பரை விட பல வயது மூத்தவர், அக்பருக்கு அப்போ 16 வயது தான் இருக்கும்.

அதன் பின்னர் பல திருமணங்கள் செய்துக்கொண்டார் அக்பர், , பலவும் போரில் வென்ற ராஜ்யங்களை தன் வசம் நிரந்தரமாக வைத்திருக்க செய்யப்பட்டதே.

ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசியை மணந்து அவருக்கு மரியம் ஸமானி என்று பெயர் வைத்துக்கொண்டார், அவர்களுக்கு பிறந்தவர் தான் ஜெஹான்கீர் என்ற சலிம்.

அக்பர் 34 திருமணங்கள் செய்துக்கொண்டதால் , கொஞ்சம் தளர்ந்து போய்விட்டார் போலும் அதன் பின்னர் போரை தவிர்க்க திருமணம் செய்ய நேரிட்டப்போது 12 வயதான சலிமுக்கு செய்து வைத்துவிட்டார், அப்படியான ஒன்று ஜோத்பூர் ராஜபுதான அரசர் ஆன உதய் சிங்கின் மகள் ஜோதா பாய்யுடன் ஆன திருமணம். அது மட்டுமல்லாமல் ராஜா பஹவான் தாஸ் என்ற ராஜபுதான அரசரின் மகள் மான் பாயுடனும் சலிமுக்கு திருமணம் நடந்தது.

இப்படித்தான் நான் படித்த புத்தகத்திலும் இருக்கு, ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதா? ஆனால் படக்குழுவினர் மொஹல்- இ- அசாமில் கூட அக்பரின் மனைவியாக ஜோதாபாய் கதாபாத்திரம் உள்ளது. இப்படமே மொகல் -இ- ஆசாம் அடிப்படையில் மாற்றி எடுக்கப்படுவது தான் என்று சொல்கிறது.

எது உண்மைனே தெரியவில்லை, ஒரே குப்பாச்சு குழப்பாச்சு செய்றாங்கப்பா!சரி படம் வந்தா அய்ஷ்வர்யா ராய் பச்சன் *எப்படி இருக்குனு பார்க்கிறதுக்காகவாது பார்க்கணும் :-))

பின்குறிப்பு: கல்வெட்டு சொல்லிய திருத்தத்திற்கு ஏற்ப * அய்ஷ்வர்யா "ராய் "பச்சன் என மாற்றப்பட்டுள்ளது!