வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீதமும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீதமும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இதற்கு பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அல்லாது திமுக, திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகள் என அனைத்தும் எதிர்ப்பு காட்டியுள்ளது.
அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்பது சரியா, தவறா? இதில் என்ன லாப ,நட்டங்கள் இருக்கு என்பதை தெளிவாக யாரும் சொல்லவில்லை. ஏதோ "அன்னிய" என்ற சொல்லினை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்புக்காட்டுவதாகவே தெரிகிறது.
இதனை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்திய சில்லரை வர்த்தகத்தினை ஒரு பார்வை பார்க்கலாம்.
இந்திய சில்லரை வர்த்தகத்தின் தோராய மதிப்பு 496 பில்லியன் டாலர்கள் ஆக 2012 இல் இருக்கும் என ஒரு மதிப்பீடு இருக்கு.இது ஒரு மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் இந்த அளவு பணம் புழங்கும் சில்லரை வர்த்தகம் பெரும்பாலும் முறை சாரா வணிகமாகவே இருப்பது தான் இந்தியாவின் பெரிய பலவீனமே.
முறைப்படுத்தப்பட்ட இந்திய சில்லரை வர்த்தகம் சுமார் 3 % மட்டுமே, 97 % முறை சாரா வணிகமாகவே நடக்கிறது.சில்லரை வர்த்தகம் என்பது உற்பத்தியாளர்/பெரும் வினியோஸ்தரிடம் இருந்துஒரு வணீகர் வாங்கி நுகர்வோரின் இறுதி நுகர்வுக்கு விற்பனை செய்வது. அது பதப்படுத்துதல்,அல்லது மறு விற்பனைக்கு அல்ல.
முறை சார் சில்லரை வணிகம் என்பது ரிலையன்ஸ் பிரெஷ், மோர், ஸ்பென்சர்ஸ் புட் ஓர்ல்ட், நீல் கிரீஸ் வகை சங்கிலித்தொடர் அல்லது தனி பல்ப்பொருள் அங்காடிகள் ஆகும்.இவர்களுக்கு வணீக எண், விற்பனை வரி,வருமான வரி, தணிக்கை எல்லாம் உண்டு.
முறை சாரா சில்லரை வணிகம்:
இது தெருவுக்கு தெரு இருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ் ,சண்முகம் செட்டியார் பொது வணிகம் வகை கடைகள் ,இவர்கள் பெரும்பாலும் டின் எண், விற்பனை வரி,வருமான வரி , தணீக்கை போன்ற சடங்குகளுக்கு ஆட்படுவதில்லை.
உணவுப்பொருள் சில்லரை வர்த்தகத்தில் உதாரணமாக தக்காளி கடைசியாக ஒரு நுகர்வோரை எவ்வாறு வந்தடைகிறது என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் காய்,கனி உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது, அங்கே ஒட்டன் சத்திரம் முக்கியமான உற்பத்தி மையம் ஆகும், அங்கு தக்காளி சாகுபடி செய்யும் விவசாயீ கூடைகளில் தக்காளி எடுத்துக்கொண்டு நேராக கமிஷன் மண்டிக்கு செல்வார், அங்குள்ள கமிஷன் ஏஜண்ட் விலை நிர்ணயம் செய்வார், எடை எல்லாம் இல்லை ஒரு கூடை இன்ன விலை என சென்னைக்கு என்ன விலைக்கு அனுப்பலாம் என்பதைக்கணக்கிட்டு நிர்ணயிப்பார். ஒரு கூடையில் சுமார் 8-10 கிலோ தக்காளி இருக்கும்.
சென்னையில் தக்காளி உட்சபட்ச விலையில் இருக்கும் போது கூட திண்டுக்கல்லில் விவசாயிக்கு கிலோவுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பது குதிரைக்கொம்பு.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து 10 டன் தான் அனுப்ப கமிஷன் மண்டிக்காரர்களுக்கு தேவை இருக்கும் போது 20 டன் தக்காளி வந்து விட்டால் கிலோ 50 பைசாவுக்கு கூட போகும், சமயத்தில் அதுக்கு கூட விலைப்போகாது. விற்க முடியாமல் விவசாயி ரோட்டில் கொட்டி செல்வதுண்டு.ஏன் எனில் திரும்ப கொண்டு சென்று மீண்டும் வர ஆகும் செலவுக்கு கூட காசு தேறாது , மேலும் அடிப்படுவது, அழுகுவது என தக்காளி வீண் ஆகும்.
இப்படி ஒரு கமிஷன் ஏஜண்டால் திண்டுகல்லில் கொள்முதல் செய்யப்பட்டு , சென்னை வரும் தக்காளி ,மீண்டும் சென்னையில் இன்னொரு கமிஷண் ஏஜண்ட் கை மாறும் அவர் மொத்த வியாபாரிக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து கை மாற்றி விடுவார், அந்த மொத்த வியாபாரி சில்லரை வியாபாரிக்கு கை மாற்றி விடுவார், இப்படியாக கடைசியில் நுகர்வோர் ஆகிய நம் கைக்கு வந்து வாய்க்கு போகும்.
இதற்கு இடையில் அனைவரின் லாபம், ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பயண செலவு எல்லாம் சேர்ந்து 5 ரூபாய் தக்காளி 50 ரூபாய் ஆக மதிப்பு கூடி இருக்கும்.
இந்த விலை நிர்ணயத்தில் மேலும் போக்குவரத்தின் போது ஏற்பட்ட அழுகல், நசுங்கல், முந்தைய நாள் விற்காமல் தேங்கிய தக்காளியால் ஏற்பட்ட நட்டம் என அனைத்தையும் சேர்த்தே வைப்பார்கள் வியாபாரிகள்.
அதாவது நாம் வாங்கும் ஒரு கிலோ தக்காளியில் கண்ணுக்கு தெரியாமல் உற்பத்தி,கையாளுதல் ஆகியவற்றின் போது விரயம் ஆன தக்காளியின் விலையும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில் ஒரு பொருள் உற்பத்தியானால் மட்டும் போதாது, அது குறைவான விரயத்தில் இறுதி நுகர்வோரை அடைந்தால் மட்டுமே விலைக்குறைவாக சந்தையில் கிடைக்கும் என்பதை நினைவுறுத்தவே.முறை சார் சங்கிலித்தொடர் சில்லறை வர்த்தகர்கள் இவ்வாறு ஆகும் சேதாரத்தைக்கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.
தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் என போட்டே விற்பார்கள், கய்,கனி வியாபாரத்தில் மறைந்து இருக்கும்.
சந்தைப்படுத்துதலில் உற்பதியை சிறப்பாக கையாண்டு, சேதாரம் குறைவாக , நுகர்வோருக்கு கொண்டு சேர்க்க வேண்டும், மேலும் உபரி உற்பத்தியை சேமித்து சீராக தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.அப்போது தான் சப்ளை அன்ட் டிமாண்ட் சீராக இருக்கும், திடீர் விலை ஏற்றம் இருக்காது.நுகர்வோரையும் பாதிக்காது.
மேற் சொன்ன முறையான வழுமை எதுவும் இந்திய சில்லரை வர்த்தகத்தில் பெரும்பாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை. இங்கே சந்தை ஒரு முறைப்படுத்த படாமல் " laizze fair market" ஆக எந்த ஒரு வகைக்கும் அடங்காமல் தன்னிச்சையாக இருக்கிறது. இதனாலேயே திடீர் என வெங்காயம் விலை கண்ணீரை வர வைக்கிறது.
இது போன்று இல்லாமல் நுகர்வோர் நலனுக்கு ஏற்ப சில்லரை வர்த்தகம் இருக்க வேண்டும் எனில் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தக சங்கிலித்தொடர் வியாபார நிறுவனங்கள் அவசியம் ஆகிறது.ஆனால் அவர்கள் வந்தால் பாரம்பரியமாக நாட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பார்கள்.
மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வணிகம் வந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று வேறு சொல்கிறார்கள், இது பெரிய நகைச்சுவை, இப்போது மட்டும் விவசாயிகள் நன்றாக வாழுகிறார்களா?, தக்காளி உதாரணத்திலேயே விவசாயிகளின் நிலை பரிதாபமானது என்பது புரிந்து இருக்கும், இப்போதைய முறைசாரா வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜண்ட்கள் கூட்டணியில் விவசாயிகள் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள். நுகர்வோருக்கும் சிரமம்.
ஆரம்ப்பத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயி கடைசி வரை கடன் காரனாகவே இருக்கான், ஆனால் கடன் வாங்கி சில்லரை வர்த்தகம் செய்பவர் சில காலத்தில் பெரிய அளவில் முதலாளி ஆகி விடுகிறாரே அது எப்படி?
எனவே முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்தால் விவசாயிக்கு ஆபத்து என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை தான்.
முறைப்படுத்தப்பட்ட வணிகம் பெரிய அளவில் நடந்தால் அவர்கள் பல கிளைகளுக்கும் தேவையானதை குளிர்பதன கிடங்குகள் அமைத்து சேமித்து வைத்து சீராக விநியோகம் செய்வார்கள், மேலும் விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் விளைவித்து நேரடியாக கொள்முதல் செய்யவும் வாய்ப்புள்ளது.விரயம் தவிர்க்கப்படும் எனவே விலை குறைவாகவே இருக்கும்.
முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் நுகர்வோர் கொடுக்கும் பணத்தில் 2/3 பங்கு விவசாயிக்கு சேர்கிறதாம், ஆனால் முறை சாரா சில்லரை வர்த்தகத்தில் அந்த அளவு சென்று சேர்வதில்லை சுமாராக 1/5 அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.
இந்த ஒப்பந்த விவசாயம் சிக்கல் இல்லாதது என சொல்ல மாட்டேன் அதிலும் வணிகர்களுக்கே சாதகமான நிபந்தனைகள் தான் இருக்கும், ஆனால் தற்போது விளைவித்தால் விற்பனை ஆகுமா காசு கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிறதே அது இருக்காது, எப்படியோ கடைசியிலொரு குறைந்த பட்ச விலைக்காவது விற்று விட வாய்ப்பு இருக்கு, வீணாக ரோட்டில் கொட்ட வேண்டியது இருக்காது.
இந்த ஒப்பந்த முறை விவசாயம் ஓரளவு சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது உதாரணமாக கரும்பு விவசாயத்தினை சொல்லலாம்.சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை இல்லாத போதும் விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்யக்காரணம் எப்படியும் விற்பனை ஆகிவிடும் என்பதால் தானே!
முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் நுகர்வோர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என கூறுகிறார்கள். இப்போது மட்டும் நுகர்வோருக்கு முழு சுதந்திரம் இருக்கா, கடையில் அவர்கள் என்ன வைத்துள்ளார்களோ அது தானே நம் மீது திணிக்கிறார்கள். உதாரணமாக இராவணன் மசாலா என்பது கிழக்கு தாம்பரம் பகுதியில் தயாரிக்கப்படுகிறது ஆனால் அது எங்கள் அருகில் உள்ள கடையில் இல்லை, ஆச்சி மசாலா, சக்தி மசாலா தான் வைத்துள்ளார்கள்.பெரிய உற்பத்தியாளர் சில சலுகைகள் தருகிறார்கள் என்பதால் கடைக்காரர்கள் அதனையே வாங்கி விற்கிறார்கள், நுகர்வோர் தேவையை ,விருப்பத்தை கணக்கில் எடுப்பதே இல்லை.
நுகர்வோருக்கு வாங்கும் அனுபவம் நல்லதாக,இனிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முறை சாரா சில்லரை வர்த்தகர்களிடையே இல்லையே, அவர்கள் வசதிக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். தெரிந்தவர்களை முதலில் கவனிப்பார்கள், அதிகம் வாங்குபவர்கள் மீது அன்பு காட்டுவார்கள்! மற்றவர்கள் ஏதோ ரேஷன் கடையில் நிற்பது போன்று நிற்க வேண்டும்.இதற்கு நாம் விருப்பபடி தேர்வு செய்து பில் போட்டுக்கொள்ளும் பல்பொருள் அங்காடி அமைப்பு மேலானதாக இருக்கே.
மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்துவிட்டால் , முறைசாரா வணிகர்கள் ,அவர்களிடம் பணிபுரிபவர்கள் வேலை இழப்பார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.இது நடக்க வாய்ப்புள்ளதா? அப்படி ஆனால் அந்த பெரிய கடைகளுக்கு வேலைக்கு ஆட்களே தேவை இல்லையா, அங்கே வேலை கிடைக்காதா? கிடைக்கும் ஆனால் எல்லாருக்கும் கிடைக்கும் இப்போது உள்ளது போல ஒரு சில குறீப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் என்ற சிறப்பு போய்விடும்.
இப்போது உள்ள முறை சாரா சில்லரை வர்த்தக கடைகளை நடத்துபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரே, அவர்கள் கடையில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் வேலை செய்வார்கள், மேலும் ஆட்கள் தேவை எனில் அவர்கள் ஊரை சேர்ந்த சொந்தம் அல்லது, அவர்கள் சார்ந்த வகுப்பினரை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.வேறு யாரும் வேலைக்கு சேர்ந்து வியாபார நுணுக்கம் கற்றுக்கொள்ள முடியாது.
பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எல்லாருக்கும் வேலை தருவார்களே!
இப்போது உள்ள முறை சாரா சில்லரைக்கடைகளில் வேலை செய்பவர்களூக்கு என்று பணி நிர்ணயம், சம்பள நிர்ணயம் என எதுவும் இல்லை.கொத்தடிமை வாழ்க்கை தான் இன்னும் சொல்லப்போனால் சம்பளம் என்பதே இல்லை, தீபாவளி,பொங்கல் என்றால் புது துணி ஊருக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் பணம் தருவார்கள் மற்றப்படி தினம் மூன்று வேளை சோறு , அவ்வளவு தான். கேட்டால் தொழில் படிக்கிறான் இல்ல அது போதும் என்பார்கள். அந்த அப்ரண்டீசும் சில வருடங்களில் தனியாக கடைப்போட்டு பிழைத்துக்கொள்வார்.ஆனால் இது எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கிடையே மட்டுமே. மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை.
ரங்கநாதன் தெருவில் இயங்கும் பெரிய அளவிலான சில்லரை வர்த்தக நிறுவனங்களில் கூட இதே நடை முறை தானே என்ன சம்பளம் என்ற ஒன்று உண்டு மற்றப்படி ஒரு குறிப்பிட்ட வகுப்பு பணியாளர்கள், கொத்தடிமை போன்ற நிலை தான்.
முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான சில்லரை வர்த்தகம் வரும் போது அனைவரும் வணிக வேலை செய்யலாம், பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.
அப்படியானால் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்து விட்டு அரசு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்றால் அதுவும் கூடாது அதிலும் கவனிக்க வேண்டியவை இருக்கு.
அன்னிய நுழைவுக்கு முன்னரே இந்திய அளவிளான முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தில் நன்கு வளர்ந்து இருக்க வேண்டும், துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் பெரிதாக வளரவில்லை. இப்போதைக்கு 3 % சந்தையே முறைப்படுத்தப்பட்ட வணிகமாக இருக்கிறது.மேலும் எனக்கு தெரிந்து இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவும், குளீருட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கவோ, கிராம பொருளாதாரத்துக்கு உதவியாக ஒப்பந்த விவசாயம், நேரடிக்கொள்முதல் என எதுவும் பெரிய அளவில் செய்ய தயாரில்லை.அவர்களும் பெரும்பாலும் தங்கள் தேவைக்கு கமிஷண் மண்டிகளையே நாடுகிறார்கள். சிறிய அளவில் நேரடிக்கொள்முதல் நடைப்பெறவும் செய்கிறது.
இது போன்ற பெரிய சில்லரை வணிகர்கள் கிராமப்புறக்கட்டமைப்புக்கும் உதவ வேண்டும் அல்லது அங்கே குளிரூட்டப்பட்ட கிடங்குகள், விவசாய தொழில்நுட்ப ஆலோசனை மையங்கள், இன்ன பிற வசதிகளை செய்ய அரசு நிர்பந்திக்க வேண்டும்.சும்மா அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்க கூடாது.
உதாரணமாக காட்பரி என்ற தனியார் சாக்கலேட் உற்பத்தியாளர்கள் கோக்கோ பயிரிட ஆலோசனை, வழிக்காட்டுதல், உற்பத்திக்கு பின் கொள்முதல் என தாங்களே முன் வந்து செய்கிறார்கள்.இதன் மூலம் தங்களுக்கான மூலப்பொருளை சீராக பெருகிறார்கள்.விவசாயிக்கும் சந்தைப்படுத்தலில் உள்ள சிரமம் களையப்படுகிறது.
மேலும் அன்னிய சில்லரை வர்த்தகர்கள் பொருட்களை இங்கேயே கொள்முதல் செய்ய வேண்டும் இறக்குமதி சரக்குகளை இங்கே விற்று தள்ளக்கூடாது என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்களை அவர்கள் உள்நாடாக இருந்தாலும் சரி வால் மார்ட் போல வெளிநாடாக இருந்தாலும் சரி இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட கண்காணிப்புடன் அனுமதித்தால் , தொழிலாளர்கள்,நுகர்வோர்கள் ,விவசாயிகள் பயன் அடைவார்கள்.மேலும் விற்பனை வரி ,வருமான வரி வருவாய் முறையாக அரசுக்கும் வந்து சேரும்.