Tuesday, April 24, 2012

ஓகே.ஓகே சர்ச்சை மற்றும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிச்சலுகை தேவையா?





தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரிச்சலுகை, என்பது பின்னர் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் படங்களுக்கு என்றெல்லாம் மாறி வரிச்சலுகை தொடர்கிறது.

இத்தகைய வரிச்சலுகை திரைப்படங்களுக்கு தேவையா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்,திரையுலகில் புழங்கும் பணம் பெரும்பாலும் கருப்பு பணமே, மேலும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யாரும் உண்மையான வருமானத்துக்கு ஏற்ப வருமான வரியும் செலுத்துவதில்லை, அப்படி இருக்கையில் கேளிக்கை வரியும் கட்டாமல் முழுக்க அனுபவிக்க திரையுலகம் துடிப்பதும், அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செவி சாய்ப்பதும் ஜனநாயக கேளிக்கூத்தே.

சில திரைப்படங்களில் இது போல காட்சி வரும் ,ஹீரோ ஏதோ கோல்மால் செய்து பெரிய வியாபாரக்காந்தம் ஆகிடுவார் , போட்டியாளர் அல்லது வில்லன் குருப் வருமான வரித்துறைக்கு போட்டுக்கொடுத்துவிடும், அவர்களும் வந்து சோதனை செய்து விட்டு உங்க கணக்கு எல்லாம் சரியா இருக்கு ஆனால் தொழில் தொடங்க மூல தனம் எப்படி வந்தது, யார்க்கொடுத்தா , அதுக்கு வரிக்கட்டி இருக்கீங்களா என கிடுக்கி போடும். ஆனால் நிஜத்தில் அப்படிலாம் கிடுக்கிப்போடுவதேயில்லை , அப்படிப்போட்டா இந்த ஓ.கே.ஓகே தயாரிப்பாளர் என்ன சொல்லுவாராம் எல்லாம் எங்க நைனாக்கொடுத்த துட்டு என்றா :-))(ஏன்பா வருமான வரித்துறை ஆப்பீசர்ஸ் இதெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?)

திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி போன்றவற்றிற்கான ஒரு வரி வருவாய்.அற்ப தொகையாக இருந்தாலும் நிர்வாக செலவுகளுக்கு பயன்ப்படும் , அது மக்களுக்கு பயன்ப்படும் அதனைப்பறித்து செல்வந்தர்களான சினிமாக்காரர்களுக்கு கொடுக்க எதற்கு ஒரு மக்களாட்சி அமைப்பு?

 மக்களுக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ள சிறப்பான கருத்தாக்கம் கொண்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கலாம், அப்படி அளிக்கப்படும் விலக்குக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்பட்டே முன்னர் எல்லாம் டிக்கெட் விற்கப்படும் ,ஆனால் இப்போது அளிக்கப்படும் வரிசலுகைக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதேயில்லை அப்படி இருக்கும் போது எதற்கு வரிச்சலுகை?டிராபிக் ராமசாமிகள் எது எதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்க, வரிச்சலுகைக்கு ஏற்ப அரங்க கட்டணம் குறைக்கப்படனும்னு ஒரு பொது நல வழக்குப்போட்டால் என்ன?

எனக்கு தெரிந்து வரிச்சலுகைக்கு ஏற்ப கட்டணம் குறைத்து வசூலிக்கப்பட்ட கடைசி தமிழ் திரைப்படம் பாரதி தான், அப்படத்திற்கு பள்ளிகள் எல்லாம் தாங்களே மாணவர்களை அழைத்து வந்த்துக்காட்டின.

இப்போது வரிச்சலுகை அளிக்கப்படும் படங்களுக்கு மாணவர்கள்,சிறார்களை அழைத்து செல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது அந்த அளவுக்கு ஆபாசம் காட்சியிலும் வசனத்திலும்.சந்திரனின் மேடுப்பள்ளங்களை உயர்சக்தி தொலை நோக்கியில் தெளிவாக காட்டுவது போல கதாநாயகியின் மேடு,பள்ளங்களை சூம் வைத்து அட்சரசுத்தமாக குளோஸ் அப்பில் காட்டுவதே கேமிரா மேன்களின் தலையாயப்பணியாக இன்றைய  திரைப்படங்களில் உள்ளது.அதுவும் நாபிக்கமலத்தின் மீது தீராக்காதல் கொண்டு கேமிரா அங்கேயே சுற்றி சுற்றி வரும் :-))
அதுக்கும்  கீழ காட்ட தணிக்கை அனுமதிப்பதில்லை, அனுமதித்தால் எல்லாமே வெட்ட வெளிச்சமா 70 எம் எம் ,சினிமாஸ்கோப்பில் காட்ட கலைவியாபாரிகள் தயாரே :-))

லிட்டர் கணக்கில் ரத்தம் தெரிக்க கொலை வெறியுடன் சண்டைக்காட்சிகளில் வன்முறை கொடிக்கட்டிப்பறக்கிறது.ஒரே அடியில் ஒன்பது பேர் பறந்து போவார்கள், யாரு அடிச்சா பூமி அதிர்ந்து , தலை சுத்துதோ அவன் தான் ஹீரோ என பஞ்சர் டயலாக் வேறு :-))

சரி ஓ.கே ஓகே சமாச்சாரத்துக்கு வருவோம், கொலை வெறிப்படத்துக்கு எல்லாம் வரி விலக்கு அளித்துவிட்டு எங்க படத்துக்கு தரவில்லை , விதி என்றால் எல்லாருக்கும் பொருந்தும், எங்களை புறக்கணித்தது அரசியல் பழி வாங்கல் என பேட்டி எல்லாம்  கொடுக்கிறார் ஜூனியர் தளபதி நடிகர்.

கேட்கும் போது அட பாவமே என தோன்றத்தான் செய்கிறது, கடந்த ஆட்சிக்காலத்தில் சிவாஜி எல்லாம் பெயர்ச்சொல் எனவே மொழியில்லை என்றும், தசாவதாரம் எல்லாம் தமிழ்ச்சொல் என்றும் கண்டுப்பிடித்து வரிச்சலுகை கொடுத்தார்கள் :-))

ஆனால் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட ஒச்சாயி என்றப்படத்திற்கு வரிச்சலுகை தராமல் அலையவிட்டார்கள் ,வழக்கு கூட தொடுத்தார்கள் என நினைவு , பல வகையிலும் போராடி ,பின்னர் திருமாவளவன், தா.பாண்டியன் சிபாரிசு எல்லாம் வாங்கி பின்னர் ஒரு வழியாக வரிச்சலுகையும்  பெற்றார்கள் ஆனால் அதற்குள் படமும் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது.

அப்போது வந்த செய்திக்கான சுட்டி:

ஒச்சாயி

புதுமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைக்கொண்டு சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் ஊடகங்களும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை, இப்போது ஓ.கே.ஓகே படத்திற்காக ஆராய்ச்சி மணியை அடிக்கும் பிராபல்ய பதிவர்களும் ,அப்போது ஒச்சாயியை கண்டுக்கொண்டாற்போல் தெரியவில்லை.சின்ன பட்ஜெட் படங்களை கண்டாலே வெறுப்பவர்களுக்கு அதெல்லாம் எப்படி தோன்றும்.

இப்போதைய சூழலில் படங்களின் தரம் மற்றும் இன்றும் வரிச்சலுகை இருக்கும் போது அரசியல்ப்பார்க்காமல் ஓ.கே.ஒ.கே விற்கு வரிச்சலுகை கொடுத்திருக்கலாம். பின்னர் எதுக்கு இதெல்லாம் சொன்னேனா, நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கனு சீன் போடுகிறார்களே அப்போ ஆட்சியில் இருக்கும் போது இவர்களும் வரிச்சலுகையில் அரசியல் செய்து விளையாடினார்கள் என்பதை நினைவுப்படுத்த தான் :-))

ஹி..ஹி ஒச்சாயியோட சாபம் தான் ஓ.கே.ஓகேவுக்கு வரிச்சலுகை கிடைக்க விடாம செய்துவிட்டது என நினைக்கிறேன் :-))

11 comments:

CS. Mohan Kumar said...

ஒச்சாயி தகவல் எனக்கு புதிது

ஓகே ஓகே வுக்கு வரி சலுகை மறுக்கப்பட்டது அரசியல் காரணத்துக்காக தான் அதில் சந்தேகம் இல்லை

ஆனால் இத்தகைய வெற்றி படத்திலிருந்து வரி கட்ட வேண்டியது அவசியம் என்று தான் நினைக்கிறேன்

வரி சலுகை concept வந்த காரணம் தமிழ் திரை உலகம் பிழைக்குமா இல்லையா என்ற நிலையில் இருந்ததால் என சொல்லப்பட்டது.அப்படி சலுகை தந்தும் 90 % படங்கள் ஓட வில்லை !

சினிமா பார்ப்பது குறைய வில்லை. தியேட்டர் செல்வது குறைந்து விட்டது. இணையம் மற்றும் மூலம் பலர் படம் பார்க்கின்றனர்

CS. Mohan Kumar said...

Pl. read last sentence as below:

//இணையம் மற்றும் DVD மூலம் பலர் படம் பார்க்கின்றனர்//

Manimaran said...

ஒச்சாயிக்கு வரி விலக்கு கிடைக்காதது வருத்தம்தான்.என்னைக் கேட்டால் ,நிறைய முரண்பாடுள்ள இந்த வரி விலக்கையே மொத்தமாக தூக்கிவிடலாம்.கடந்த ஆட்சியில் ஒரே ஒரு விதிமுறை மட்டும்தான்.தற்போது நிறைய விதிமுறைகளுக்கு கட்டுப் படவேண்டியுள்ளது.தவிர,எந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது என்ற தகவலும் சரியாகத் தெரியமுடியவில்லை.பேசாமல் இவ்வளவு குளறுபடியுள்ள வரிவிலக்கையே ரத்து செய்து விடலாம்.

ILA (a) இளா said...

//ஒச்சாயியோட சாபம் தான்//
குசும்புதான். இல்லாட்டா மட்டும் வரிச்சலுகை குடுத்துருவாங்களா? அம்மாகிட்ட appraisal pointக்காக இதைச் செஞ்சியிருப்பாங்க

வவ்வால் said...

மோகன் குமார்,

வணக்கம்,நன்றி!

சினிமா சமாச்சாரம் போட்டா தான்பா பெரியவங்க எல்லாம் எட்டிப்பார்க்கிறாங்க :-))

கண்டிப்பாக அரசியல் தான், இதில புள்ளி என்னனா ஆட்சியில் இருக்கும் போது எல்லோரும் "அரசியல்" செய்துவிட்டு அதிகாரம் போனதும் மனுநீதி சோழன் போல நீதி,நியாயம்னு பேசுவதை தான்.

சினிமாவை பிழைக்க வைக்க இந்த வரிச்சலுகையால் முடியுமா, மிகையான நடிக,நடிகையரை ஊதியம், ஆடம்பர செலவு தான் அழிக்குது, ஒவ்வொரு முறையும் சம்பளத்தினை குறைக்க வேண்டும் என கூட்டம் போட்டு பேசும் தயாரிப்பாளர்கள் உறுதியாக எதாவது செய்திருக்கிறார்களா?

சினிமா தொழிளாலர்கள் ஊதிய உயர்வுக்கேட்டால் படம் த்யாரிக்க மாட்டோம் என ஸ்டிரைக் செய்யும் தயாரிப்பாளர்கள், நடிக,நடிகையர் ஊதியம் இவ்வளவு தான் என நிர்ணயமாக பேசி அதற்கு மேல் கேட்டால் படம் தயாரிக்க மாட்டோம்னு சொல்ல வேண்டியது தானே அதை செய்ய மாட்டார்கள்.

இந்த வரிச்சலுகை என்பது அரசியல்வாதிகளின் சுயநல விளம்பரமே. இல்லாமல் இருந்தாலும் திரைப்பட தொழில் நடந்துக்கொண்டு தான் இருக்கும்.

மக்கள் திரையரங்குகளை புறக்கணிக்க காரணமே அதிக கட்டணம், பார்க்கிங் கொள்ளை, இன்ன பிற சுரண்டல்கள் தான். எனவே அவர்களால் என்ன முடியுமோ அதனை செய்கிறார்கள்.என்னைப்பொருத்து டிவிடியில் படம் பார்ப்பது தவறே இல்லை, அம்புட்டு அட்டகாச செய்கிறார்கள் திரையரங்கினர்.

******
மணிமாறன்,

வணக்கம், நன்றி!

ஒச்சாயிப்போன்ற சிறிய முதலீட்டு படங்கள் திரையில் ஓடும் நாட்களே அதிக பட்சம் ஒரு வாரம்ம் தான் அதற்கே அரசியல் செய்தவர்கள் இப்போது புலம்பலாமா?

பெரிய பட்ஜெட்,பெரிய தயாரிப்பாளர் வரிச்சலுகைய வச்சு தான் வாழனும் என்ற நிலையிலா இருக்கார் பேராண்டி 100 படம் ஊத்திக்கிட்டாலும் தாங்க கூடிய பணவலிமை இருக்கு.

நானும் அதே தான் சொல்லி இருக்கேன் வரிச்சலுகையே வேண்டாம்னு, சரி வேண்டாத ஒன்றாயிருந்தாலும் இருக்கும் போது அரசியல் செய்ய வேண்டாம்,ஆனால் எல்லாரும் அதானே செய்யுறாங்க.
*****

இளா,

வணக்கம்,நன்றி!
குசும்பு எல்லாம் இல்லீங்க ...ஃபேக்ட்டு ..ஃபேக்ட்டு....ஃபேக்ட்டு...
எல்லாம் அரசியலில் சகஜமப்பானு கவுண்டர் சொன்ன பொன்மொழி தான். ஆனால் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உணர்த்தும், சம்பவமிது என்பதை சுட்டிக்காட்டவே ஒச்சாயி கதைய சொன்னேன்.

மிக சொற்ப தொகையில் தயாரித்து பெரும்பாலும் நட்டம் அடைய கூடிய வாய்ப்பே இருக்கும் படத்திற்கு எல்லாம் அரசியல் செய்தவர்களுக்கு உங்களுக்கும் ஒரு நாள் வரும்னு காட்டியிருக்கு.

ஹி..ஹி ராணுவத்தில அழிஞ்சவனை விட ஆணவத்தில அழிஞ்சவங்க தான் அதிகம் என்பது வரலாறு அதனை எல்லாரும் சுலபமாக மறந்து விடுகிறார்கள் :-))

ராஜ நடராஜன் said...

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் ஷகிலா ரசிகனுக்கு அசின்,அனுஷ்காவெல்லாம் சப்பை பிகராக தெரியும்ன்னு நீங்க சொன்னதுக்கு சிரித்தது மட்டுமல்லாமல் ஷகிலா பெயரே வலையுலக உஸ்தாதுக்கள் சொல்லிக்கொடுத்ததுன்னு சொல்லியிருந்தேன்.இப்ப இங்கே பார்த்தால் ஒச்சாயி,ஒகே!ஓகே கூட எனக்கு புதுப்பரிச்சயம்தான்.ஒரு கண்ணாடிக்கு நல்ல விமர்சனம் கிடைக்குற மாதிரி தெரியுது.தாத்தா மேல் உள்ள கடுப்புல திருட்டு சி.டியும் கூட வேண்டாமுன்னுட்டேன்.

முன்னாடியெல்லாம் பார்த்தால் அத்தி பூத்த மாதிரிதான் தமிழ்ப்படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.அதுவும் தரமான படங்களாக இருந்தபோதும் மெதுவாக கதை சொல்லும் பாணி,ஆர்ட் பிலிம் என்ற முத்திரைகளினால் படம் ஊத்திக்கும்.கலைப்படங்கள் என்று ஒரு வரிசை அதிகம் இல்லாமல் போனதற்கு மக்கள் ரசனை ஊக்குவிப்பு இல்லாமல் போனதும் கூட ஒரு காரணம்.எனவே புதுமுயற்சி செய்து கையைக் கடிச்சுக்க வேணாமென்று திரைப்பட தயாரிப்பாளர்,இயக்குநர்கள் நிறையப்பேர் கமர்சியல் நோக்கி சென்று விட்டார்கள்.

சமூகம் சார்ந்து எடுத்த மலையாளப்படங்கள் கூட இப்பொழுது மலையாள திரைப்படங்களில் குறைவு.தமிழிலும்,மலையாளத்திலும் தனி மனித ஹீரோ வொர்ஷிப்கள் இடம் பெற்றதும் கூட இதற்கு காரணமாக இருக்க கூடும்.

ராஜ நடராஜன் said...

ஜனரஞ்சகமான பதிவுகளைப் போட்டும் கலைப்படங்களுக்கு தேறும் கூட்டம் மாதிரி சில பின்னூட்டங்கள் வருவதன் காரணமென்ன:)

பின்னுட்டத்தில் மோகன்குமார் அவர்கள் திரையரங்கு செல்வது குறைந்து விட்டது என்று சொல்லியிருந்தார்.அது உள்ளூர்வாசியான உங்க ஆதங்கம்.வெளியூர்ல இருக்குற ஆட்களுக்கு சினிமாவே காட்டமாட்டேங்குறாங்களேன்னு ஆதங்கம்தான்.குறிப்பாக வளைகுடா நாடுகளில் தமிழ்,மலையாளப்படங்களைப் பார்ப்பதற்கு ஓரளவு அல்ல திரையரங்கு நிறைந்த கூட்டம் தேறும்.ஆனால் விளம்பரம்,திரையரங்கில் படம் வெளியிடுதல் போன்றவற்றில் பின் தங்கிய நிலையே.இதன் காரணம் மட்டுமல்லாமல் குறைந்த படங்கள்,நிறைய டிக்கட் விலை கொண்டு எளிதாக தியேட்டர் செல்லாமல் திருட்டு சி.டிக்கள் முந்திக்கொள்கின்றன.ஹோம் தியேட்டர்கள் சல்லிசான விலையில் அமைத்து விட முடிவதும் கூட ஒரு காரணம்.

அமெரிக்காவின் Netflix போன்றவை குறைந்த சந்தா,தடங்களில்லா Streaming போன்ற தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.இந்தியாவில் திரைப்படத்துறை ஒரு முக்கிய தொழில் என்பதால் இதுபோன்ற சட்டரீதியான வியாபார நுணுக்கங்களை ஆராயலாம்.

முன்ணணி கதாநாயகர்கள்,நாயகிகளின் உச்ச வருமானத்தை தளர்த்துவது மிகவும் அவசியம்.

பரவாயில்லை சினிமாவுக்குன்னா கொஞ்சம் கூட்டம் தேறத்தான் செய்யுது:)

ராஜ நடராஜன் said...

//ஹி..ஹி ராணுவத்தில அழிஞ்சவனை விட ஆணவத்தில அழிஞ்சவங்க தான் அதிகம் என்பது வரலாறு //

இது எந்த தளபதியோட பஞ்ச் டயலாக்கு:)

வவ்வால் said...

ராஜ்,

வாங்க ,நன்றி!

ராணுவம்-ஆணவம் சொன்னது காமெடித்தளபதி சந்தானம் ,ஓ.கே.ஒ.கே படத்தில தான்.
----
சினிமாவிலயும் மசாலா தான் ,பதிவுலயும் மசாலா தான் வேண்டும் என கேட்கிறாங்க மக்கள் ,அதான் நாமளும் கொஞ்சம் சினிமா மசாலாவை தூவி விட்டோம் அப்போ கூட கொஞ்சம் கலைப்படமா சொன்னா எவனும் எட்டிப்பார்க்க மாட்டாங்க :-))

சத்திய சோதனை புத்தகத்தை மலிவு விலையில் விளம்பரம் செய்து விற்றாலும் வாங்க கூட்டமே வராது ஆனால் சரோஜாதேவி புத்தகத்தை விளம்பரமே செய்யலைனாலும் தேடிப்போய் வாங்கி படிக்கிற நிலையில் தான் மக்கல் ரசனை இருக்கு :-))

திரைப்பட நசிவுக்கு காரணம் அதில் இருப்பவர்கள் தான் , மாற்றங்களை , நிர்வாக மேம்பாட்டினை விரும்பாதவர்களே.

நீங்க சொன்னது போல இணைய வழி வெளியீடு ,படம் வெளியான 4 வாரங்களில் அதிகாரப்பூர்வ குறுந்தகடு என வியாபார உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டிய காலம் வந்தாச்சு.

ஹாலிவுட்டில் கூட பட விநியோகம் மூலம் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு வருமானம் தேறாதாம் , டிவிடி , தொ.கா உரிமை , இணைய வெளியீடு உரிமை மூலம் வரும் வருமானமே கை கொடுக்குமாம்.

காரணம் ஹாலிவுட்டில் விநியோகஸ்தருக்கான கமிஷன் , மற்ற செலவு எல்லாம் மிக அதிகம். எனவே தான் வார்னர்ஸ்,ஃபாக்ஸ் போன்றவை எல்லாம் சொந்தமாக தயாரிப்பதோடு விநியோகமும் செய்வார்கள்.
----
வரி விலக்கே தேவை இல்லை , அப்படியே கொடுப்பதாக இருந்தாலும் ஒரு கோடி முதலீட்டில் , 50 பிரிண்ட்டுக்குள் போடப்படும் சிறிய படங்களுக்கு தரலாம்.
மலையாளப்படங்கள் முன்னர் போல இல்லை என்றாலும் அவர்கள் பட்ஜெட் எல்லாம் ரொம்ப கம்மி எனவே சரியா ஓடவில்லை என்றாலும் கையைக்கடிக்காது.

தமிழ் படங்களைப்பார்த்து தான் அவர்களும் கெட்டு விட்டார்கள் ,அங்கு வெளியாகும் தமிழ் படங்கள் டப்பிங் செய்யப்படாமல் தமிழிலேயே இருக்கும்,ஆனாலும் ரசிக்கிறார்கள், மெதுவான படங்களை அதிகம் பார்த்து சலித்துப்போனதால் இப்படி ஆகி இருக்கும் என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//தமிழ் படங்களைப்பார்த்து தான் அவர்களும் கெட்டு விட்டார்கள் ,//

இந்த வரிகளுக்கு வேணுமின்னா உங்களுக்கு தேசிய விமர்சன விருதே கொடுக்கலாம்.

கூட பணிபுரியும் சேட்டன் தோழர் ஒருவரே தான் தமிழ் படங்களே அதிகம் பார்ப்பதாக சொன்னார்.இதுல என்ன ஒரு நுணுக்கம்ன்னா தமிழ் சினிமாக்காரங்க கேரளத்திலிருந்தே பிகருகளை கொண்டு வந்து இறக்கிடறாதால விஜயோட படத்துல அசின் குத்துப்பாட்டு ஆடினாலும் அலுக்காமல் பார்த்து விடுகிறார்கள்.

அத்தி பூத்தாற் போல இங்கொன்றும் அங்கொன்றும் சிறந்த மலையாளப்படங்கள் வரவே செய்கின்றன.ஆனாலும் லால் ஏட்டன் லுங்கியை மடிச்சுகிட்டு ஆடுவதும்,மம்முட்டி ஆடாமலே ஆடுறவளை நின்னு பார்க்கும் தமிழ்பட ட்யூன்களே அங்கும் பிரபலமாக இருக்கிறது.

எல்லோருக்கும் இந்தி கத்துக் கொடுத்து விடனும்ன்னு நேருவின் கனவை நிறைவேற்றியது இந்தி சினிமா மாதிரி சேட்டன்களையும்,பாண்டிகளையும் இணைக்கும் ஊடகம் சினிமா மட்டுமே.

இதோ!மாங்கு மாங்குன்னு நீங்க மின்சார பதிவு போட்டா பின்னூட்ட காத்துதான் வருது.சினிமான்னதும் எகிறி குதிக்குது எலி:)

வவ்வால் said...

ராஜ்,

இங்கே அவனவன் வாரத்தில ஏழு நாளுக்கு எழுப்பத்திரண்டு சினிமா பதிவு போட்டுக்கிட்டு இருக்காங்க,நான் ஒத்த வரி எழுதினதுக்கே எனக்கு தேசிய விமர்சகர் விருது கொடுக்கிறேன்னு சொல்றிங்களே பெரிய மனசு தான் ,நீவீர் வாழ்க நின் கொற்றம் வாழ்க :-))

மந்தமான சினிமாக்களைப்பார்த்து அலுத்துப்போன மல்லு ரசிகர்கள் அந்தரத்தில் பறந்து அடிப்பதையும், வில்லனையும் அவனது அடிப்பொடிகளையும் பஞ்ச் பேசியே மிரட்டுவதையும், வேகமான இசைக்கு மலையாளப்பெண்குட்டிகளுடன் ஹீரோ ஜிம்னாஸ்டிக் போல டான்ஸ் ஆடுவதையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது, எனவே தான் உங்க சக மலையாளியும் பார்க்க ஆரம்பித்துவிட்டார் போலும்.

சினிமா என்பது காட்சியூடகம் என்பதால் காட்சிகளில் பிரம்பாண்டமும், வண்ணமயமாகவும் இருப்பது அனைவரையும் சென்றடடைந்து விடுகிறது.எனவே மொழி தடையாக இருப்பதில்லை என நினைக்கிறேன்.

சினிமா என்றால் எலிக்குட்டி மட்டுமா எகிறுது எட்டுப்பட்டியுமே எகிறுது தமிழ் நாட்டில்.இன்னமும் நமக்கான அடுத்த முதல்வர் சினிமாக்கொட்டாயிலிருந்து வருவார் என காத்திருக்கும் ஆட்கள் ஆச்சே நாம் :-))
இன்டி பிலாக்கர் என இந்திய அளவிலான திரட்டியில் முன்னிலையில் இருக்கும் பதிவுகள் எனப்பார்த்தீர்களானால் தொழில்நுட்பப்பதிவுகளே இருக்கும்,ஆனால் தமிழ் திரட்டிகளில் பார்த்தால் அப்படியே உல்டாவாக சினிமாப்பதிவர்களே முன்னணிப்பதிவராக இருப்பார்.

தமிழில் அதிக மதிப்பிடப்பட்ட பதிவராக சினிமா பதிவர்களை இன்டிபிலாக்கர் தேர்ந்தெடுக்கவில்லை, தமிழில் தொழில்நுட்ப பதிவு போடுபவரைத்தான் மதிப்பிட்டுள்ளது.நான் பார்த்த போது வந்தே மாதரம் சசி இருந்தார் 85 புள்ளிகளுடன் தமிழின் முன்னணிப்பதிவராக.சினிமா எல்லாம் தமிழில் தான் செல்லுபடியாகும் :-))