Tuesday, May 08, 2012

கேட்கிறவன் கேணையா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கே.எஸ்.ரவி குமாரா?






கி.பி 1889 ஆண்டில் ஒரு வழக்கமான ஞாயிறாகத்தான் அமெரிக்கவின் லுடிங்டன் நகருக்கும் விடிந்ததிருக்க வேண்டும் ,ஆனால் அன்று அந்நகரம் உணரவில்லை ஒரு நூற்றாண்டு கழித்து இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தலைநகராம் வங்கக்கடல் தரங்கம்பாடும் சிங்கார சென்னையில் இருந்து வவ்வால் எனும் நாமகரணம் கொண்ட ஒருவன் இணையத்தில் லூடிங்க்டனை தேட வைக்கும் சரித்திர புகழ்பெற்ற ஞாயிறு ஆக அமைய போகிறதென்பதை அந்நகர் அறிந்திருக்கவில்லை .ஏன் அவன் தேடினான் ... தேடலின் வரலாறு ,புவியியல் என்ன?


...கேட்கிறவன் கேணையனா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கேரம் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவியா என
" மக்கள் மகிழ்விப்பான்" சந்தானம் யாரையோ பார்த்து வெள்ளித்திரையில் கேட்டாலும் என்னைப்பார்த்து கேட்டாப்போலவே இருக்கவே தான் இந்த தேடல் துவங்கியது மிஸ்டர் கூகிள் வழிக்காட்டலுடன், அப்படி என்ன தான் தேடிக்கிடைத்தது ... வாருங்கள் காண்போம்!


லூடிங்க்டன் நகருக்கு வழக்கமான ஒரு ஞாயிறாக விடிந்தாலும் பின்னாளில் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வரலாற்றின் பக்கங்களில் அழியாச்சுவட்டினை அந்நாள் பதித்தது என்றால் மிகையில்லை. விடுமுறை தினமான அந்த ஞாயிறும் வார இறுதிப்பள்ளி ஆசிரியரான ஹென்றி ஹேஸ்கலுக்கு வழக்கமாகவே போய் இருக்கும் ஆனால் அப்பள்ளியின் விளையாட்டுக்கூடத்தில் இருந்து பெரும் உற்சாக கூச்சலும் ,கும்மாளவும் வரவே மாணவர்கள் ஏன் இப்படி சத்தமிடுகிறார்கள் எனப்பார்க்க போனது ஒரு புதிய கண்டுப்பிடிப்பை உருவாக்கியது. ஹென்றி அங்கு கண்டது இது தான், ஒரு பில்லியர்ட்ஸ் டேபிளை மாணவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு உற்சாகமாக விளையாடிக்கொண்டு ஒருவரை இடிப்பது தள்ளுவதுமாக ,கூக்குரல் எழுப்பிகொண்டும் இருந்தார்கள்.

நம்ம ஊரு உபாத்தியாராக இருந்தால் ஏய் இங்கே என்ன சத்தம் ...வகுப்புக்கு போகாம இங்கே என்ன பண்றிங்க ..ஓடுங்க என தொறத்திவிட்டு கடமையை செய்து இருப்பார். ஆனால் அமெரிக்க உபாத்தியார் ஆச்சே ஹென்றி அப்படி எல்லாம் கட்டுப்பெட்டியாக இல்லாமல் கொஞ்ச நேரம் மாணவர்களை கூர்ந்து கவனித்தார் மாணவர்கள் முறை வைத்து வரிசையாக அடங்கா ஆர்வத்துடன் குதுகளமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். எத்தனையோ கேம்கள் இருக்க பில்லியர்ட்ஸ் மீது ஏன் இத்தனை ஆர்வம் என யோசிக்கலானார்.



காரணம் அறிந்தார்... என்னவெனில் பில்லியர்ட்ஸ் டேபிள் விலை அதிகமானது அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்து விளையாட முடியாது,மேலும் அதிக இடமும் அடைக்கும் , எனவே பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் இருக்கும் டேபிளை பெரிதும் விரும்பி பயன்ப்படுத்திக்கொண்டார்கள்,மேலும் அதிகம் ஓடி ஆடாமல் உள்ளரங்கிலேயே ஆடினாலும் விறு விறுப்பாக ஆடக்கூடிய குழு விளையாட்டாகவும் இருந்தது.


பில்லியர்ட்ஸ் போன்ற ஒரு விளையாட்டு ஆனால் கையடக்கமாக, மலிவாக அனைவருக்கும் வாங்கும் விலையில் வேறு விளையாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார், இல்லை என்றால் என்ன நாம் உருவாக்குவோம் என யோசித்து பில்லியர்ட்சையே கொஞ்சம் மாற்றம் செய்து சிறிய வடிவில் ஒரு விளையாட்டு பலகையை உருவாக்கினார் அதற்கு கேரம் எனவும் பெயரிட்டார் , ஆம் கேரம் போர்டை கண்டுப்பிடித்தவர் ஹென்றி ஹேஸ்கல்(Henry Haskell)என்ற பள்ளி ஆசிரியரே.

பல நாடுகளிலும் கேரம் போர்ட்டு போன்ற விளையாட்டுக்கள் இருந்திருக்கலாம் ஆனால் கேரம் போர்ட் எனப்பெயர் வைத்து அமெரிக்காவில் முதன் முதலில் காப்புரிமை பெற்றவர் இவர் ஒருவரே ,எனவே அதிகாரப்பூர்வமாக அதன் கண்டுப்பிடிப்பாளர் என அறியப்படுவது ஹென்றி ஹேஸ்கல் ஆகும்.

கேரம் போர்ட் உற்பத்தி செய்ய அவரது நண்பருடன் சேர்ந்து லூடிங்க்டன் நாவல்டி ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலையை கிபி 1890 இல் அமைத்தார்.பின்னர் 1900 இல் அர்ச்சரேனா என்ற நிறுவனத்துடன் இணைந்து கேரம் அர்ச்சரேனா கம்பெனி என மாற்றியமைத்தார்.

பின்னர் பல கூட்டணிகள், மாற்றங்கள் என கண்டு கி.பி 1939 இல் கேரம் இண்டஸ்ட்ரிஸ் என பெயரும் மாறியது. 1940 இல் நிறுவனரான ஹென்றி ஹேஸ்கல் காலமானார். அதன் பின்னர் சொப்பன சுந்தரியின் கார் போல பல கைகள் மாறி கி.பி 1980 இல் லைட்னிங் குருப் எனும் கம்பெனியின் வசம் சேர்ந்தது அது 1996 வரைக்கும் நடத்தியது,பின்னர் கம்பெனி நலிவடைந்ததால் செயல்ப்பாட்டினை நிறுத்திக்கொண்டது. இன்று வரையில் "Carrom" என்ற பெயரின் காப்புரிமை அவர்களிடமே உள்ளது மற்றவர்கள் அப்பெயரினை பயன்ப்படுத்த முடியாது. ஹி..ஹி ஆனால் நான் கேரம் போர்டை பயன்ப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது :-))

பிட்டுகள்:

# கேரம் என்ற சொல் கேனான்(பீரங்கி) இல் இருந்து உருவானது ,அதன் பொருள் ஷாட் -அடி என்பதாகும். ஸ்ட்ரைக்கர் வைத்து அடித்து தானே விளையாடுகிறோம்.

# கேரம் போன்ற விளையாட்டு உலகின் பல நாடுகளிலும் ,பல பெயர்களிலும் விளையாடப்பட்டே வருகிறது. பல நாடுகளில் கை விரல்களுக்கு பதில் கியுஸ் எனப்படும் ஒரு சிறு குச்சியினை பில்லியர்ட்ஸ் போலவே பயன்ப்படுத்துவதுண்டு.

சில நாடுகளில் புழங்கும் பெயர்கள்:

டென்மார்க்-கெரொமா

சீனா -கேரம்

ஃபிஜி- வின்டி வின்டி

கனடா -குரோக்கியோல்

இஸ்ரேல்- ஷே-ஷே

மெக்சிகோ- காயின்களுக்கு பதில் சோடா மூடியுடன் ஆடப்படுகிறது.

# 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அபிசினியாவில் (இன்றைய எத்தியோப்பியா)இதே போன்ற விளையாட்டு இருந்ததாக ஒரு கல்லரை ஓவியம் காட்டுகிறது.

#அக்காலத்தில் போர்த்து கீசியர்கள் கேரம் என்றே கேரளாவை அழைத்துள்ளார்கள்.எனவே இந்தியாவில் கேரளவில் இருந்து கூட தோன்றி இருக்கலாம்.பெரும்பாலோர் சொல்வது,இந்திய,இரான் பகுதிகளில் தோன்றி இருக்கக்கூடும் என்பதே.

#கேரம் விளையாட்டில் இந்தியா தான் முன்னணியில் உள்ளது பல உலக சாம்பியன்களை உருவாக்கியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல சேம்பியன்கள் உருவாகியுள்ளார்கள்.ஒலிம்பிக் போன்ற விளையாட்டு அமைப்புகளால் கேரம் இன்னும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு பொழுபோக்கு விளையாட்டு என்ற அளவிலே சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் விளையாடப்பட்டு வருகிறது.




#தமிழகத்தினை சேர்ந்த மரிய இருதயம் இரு முறை ஒற்றையர் உலக சேம்பியனாகவும் ,இரு முறை இரட்டையர் சேம்பியனாகவும் சாதனைப்புரிந்துள்ளார், ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அர்ஜுனா விருதுப்பெற்ற ஒரே கேரம் வீரர் ஆவார்.

#பி.ஆரோக்கிய ராஜ் ,தமிழ் நாடு , மரிய இருதயத்துடன் சேர்ந்து இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது போன்று ஆர்.நட்ராஜ்,ராதாகிருஷ்ணன் என பல கேரம் சாம்பியன்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

#பெண்களில் ஜீ.ரேவதி,பி.நிர்மலா போன்ற குறிப்பிட தகுந்த கேரம் வீராங்கனைகள் தமிழகத்தில் உள்ளனர்.

# மற்ற நாட்டில் கேரம் போல விளையாட்டு இருந்தாலும் அமெரிக்காகாரன் தான் பேரு வச்சு அதுக்கு காப்புரிமை வாங்கி வைப்பாங்க ,மஞ்சள், வேம்பு, பாஸ்மதி அரிசிக்கு எல்லாம் காப்புரிமை வாங்கியது போல,சும்மா சொல்லக்கூடாது மூளைக்காரன்ங்கய்யா :-))

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

http://www.bestqualitytoys.com

http://www.international-carrom-fed-media-commission.org/

மற்றும் கூகிள், விக்கி நன்றி!

17 comments:

கோவை நேரம் said...

அரிய தகவல்

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! பலருக்கும் பழக்கமான கேரம் போர்டைக் கண்டுபிடித்தவர் ஹென்றி ஹேஸ்கல் என்ற தகவல் மற்றும் கேரம் விளையாட்டைப் பற்றிய செய்திகள் தந்தமைக்கு நன்றி!

சார்வாகன் said...

அருமை சகோ
கேரம் போர்டை கண்டு பிடித்த‌வரை கண்டுபிடித்த சகோ வவாலுக்கு வாழ்த்துகள்.

நம்ம கோலிக்குண்டு விளையாட்டை கண்டு பிடித்த‌வர் யார்?

பேந்தா,சாண் கட்டு உல்ளிட்ட பல்வேறு வகைகளும் அடங்கிய விடயம் அது.இந்த வரலாற்று அரிய ,கலாச்சார தகவல்கள் ஆவணப் படுட்த்தப்பட வேண்டும்.அதனை ஒலிம்பிக்கில் சேர்க்கும் முயற்சியில் உங்களின் தேடல் பயன்படும்.

இந்த பில்லியர்ட்ஸ்,கோல்ஃப் போன்றவையெல்லாம் இந்த கோலிக்குண்டில் இருந்தே தோன்றின என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

அடி மேலே அடி கீழே

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி

HOTLINKSIN.COM திரட்டி said...

அப்போ கே.எஸ்.ரவிகுமார் கண்டுபிடிக்கலையா...?

உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்

ILA (a) இளா said...

உண்மையைச் சொன்னா இந்த விளம்பரம் வந்தபின்னாடிதான் தேடி அதோட வரலாற்றைப் படிச்சேன் :) மரியம் இருதயராஜ் வாழ்ற நாட்ல பொறந்துட்டு :(( சே

முரட்டுக்காளை said...

ஆஹா, அடுத்தது கேரம் யாவாரமா? கேரம் வாங்கலையோ கேரம் அப்படின்னு சேத்துப்பட்டு பாலம் மேல அலைய போறீரா! கத்திரி வெய்யில்ல தேவையா இது உமக்கு?

உம்மை போல மொக்கை போடுறத மொதல்ல ஆரம்பிச்சது எந்த மாமேதை ன்னு கண்டு பிடியும்... ஹிஹிஹி

Thomas Ruban said...

கேரம் பற்றி பல சுவையான தகவல்களை பாகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள்.

தருமி said...

//நம்ம ஊரு உபாத்தியாராக இருந்தால் ஏய் இங்கே என்ன சத்தம் ...வகுப்புக்கு போகாம இங்கே என்ன பண்றிங்க ..ஓடுங்க என தொறத்திவிட்டு கடமையை செய்து இருப்பார். //

அதான ..!

வவ்வால் said...

கோவை நேரம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! வணக்கம்!
-----------
தி.த.இளங்கோ,

வாங்க சாரே ...வணக்கம்,நன்றி! கேரம்ம் போர்டு விளையாடும் போது எல்லாம் ஹென்றிய நினைச்சுக்கோங்க,கூடவே என்னையும் :-))
-----
சகோ.சார்வாகன்,
வாங்க, வணக்கம் நன்றி!

ஹி...ஹி புதுசா எதாச்சும் கண்டுப்பிடிக்கலாம்னு பார்த்தா எல்லாவற்றையும் முன்னமே கண்டுப்பிடிச்சுட்டாங்க, சரினு தான் இப்படி :-))

யார் கண்டுப்பிடிச்சாங்க என்பது முக்கியம் இல்லை யாரு காப்புரிமை வாங்குறாங்க என்பதே மேட்டர் ,மார்க்கோனி, ஜே.சி.போஸ் கதை தெரியும் தானே.

எனவே கோலிக்குண்டுக்கு காப்புரிமை வாங்க்கி வச்சிடுங்க , அது நியுட்டனின் விதிப்படி செயல்ப்படுகிறது, மொமென்டம்,எனர்ஷியா அப்படினு எல்லாம் ஒரு ஒரு தியரி உருவாக்கிடுங்க்க அடைப்புக்குறீக்குள் விளக்கம் எல்லாம் போட்டுக்க வேண்டும் :-))

பிரென்ச் காரங்க கூட கோலி குண்டு ஆடுறாங்க அதுக்கு பேரு பூல்ஸ் குண்டு ("boules kundu") ஆனா கொஞ்சம் பெரிய சைஸ் இரும்பு குண்டு வச்சு, புதுவை போனால் பார்க்கலாம் அதை.

ஹி.ஹி சார்வாகன் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பதிவு போட்டேன் அதில கோலி குண்டை ஒலிம்பிக்கில் சேர்த்தால் கண்டிப்பாக நான் ஒரு தங்கம் வாஙி தருவேன் நாட்டுக்கு சொல்லி இருப்பேன், கோலி ,பேந்தா , கிட்டிப்புல், பம்பரம், காத்தாடில எல்லாம் கில்லாடி நாம... சிகரட் அட்டை எல்லாம் பந்தயம் வச்சு ஜோரா ஆடுவோம் :-))
------

சூடான இணைப்பு,

நன்றி,வணக்கம், கே.எஸ்.ரவிக்குமார ஒழுங்கா படம்ம் எடுக்க விடுவோம்.

என்ன ஒரு பேருப்பா ... சூடான இட்லி போல இருக்கு :-))
-------

வவ்வால் said...

இளா,

வாங்க,வணக்கம், நன்றி!

நீங்களாவது காமெடினு விட்டுறாம தேடி இருக்கீங்களே , எல்லாம்ம் சிரிச்சுட்டு மறந்திருப்பாங்க.

மரிய இருதயம் காலத்துக்கு பின்னர் தான் கேரம் போர்ட்டுக்கு இந்தியாவில் அங்கீகாரம் உருவாச்சு எனலாம், அவர் உலக சேம்பியன் ஆனப்பிறகும் வேலை கிடைக்கவில்லை , இதனை ஒரு விளையாட்டாக அரசு பார்க்கவில்லைனு பேட்டிக்கொடுத்ததை படித்த நினைவு இன்னும் இருக்கு. இப்போ பரவாயில்லை ரயில்வே, வங்கி எல்லாம் வேலை கொடுக்கிறது.

----

புல்ஸ்,

வாரும், வணக்கம்,நன்றி!

அப்படியே வித்தாலும் நீர் வாங்க போறாப்போல...

ஒரு மொக்கையாளரே இந்த கேள்வியக்கேட்டா நான் என்னாத்த சொல்ல ...நீர் போட்ட மொக்கைக்கு சாட்சிலாம் இருக்கு ஓய் :-))
-------

ரூபன்,

வணக்கம், நன்றி!

கோடையில ஒரு கேரம் போர்ட்டை வாங்கி ரெண்டு தட்டு தட்டுங்க !

------
தருமிய்யா ,

வாங்க, வணக்கம், நன்றி!

என்ன ஒரு தொழில் பக்தி,உபாத்தியார் பத்தி சொன்னதும் சரியா ஆஜர் ஆகிட்டிங்க...

நீங்க மட்டும் அமெரிக்காவில இருந்திருந்தா எவ்வளவோ கண்டுப்பிடிச்சு இருப்பீங்க ...நம்ம ஊரில இருந்துக்கிட்டு பசங்க பரிட்சைப்பேப்பர்ல விடை எங்கே இருக்குனு கண்டுப்பிடிக்கிறதுலவே ஆயுசு போயிடும் :-))

//அதான ..!//

உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு :-))

ராஜ நடராஜன் said...

இன்றைக்கு சிரிச்சு சிரிச்சு இந்தப் பக்கம் ஒடியாந்துட்டேன்:)

பரவாயில்லையே!தமிழ் மண இணைப்பு இல்லாமலே பின்னூட்டத்துக்கு கூட்டம் சேருதே!

இப்ப பதிவுக்கு.

ராஜ நடராஜன் said...

வவ்!நானே இது நாள் வரைக்கும் கேரத்துக்கு தம்பி பில்லியர்ட்ஸுன்னு நினைச்சிகிட்டிருக்கேன்.நீங்க பேருக்கு தகுந்த மாதிரியே சொல்றீங்க.

தமிழகத்தில் கேரம் பிரபலம் என்பதை காக்கா ராதாகிருஷ்ணன் கேரம் விளையாண்டுதான் நிறைய பேருக்கு தெரியும்.ஆனால் கேரத்தில் கில்லிகள்(மெட்ராஸை)சென்னையைச் சார்ந்த கேரம் கிளப் விளையாட்டுக்காரர்களே.முதல் காய்னை பாக்கெட் செய்வதிலிருந்து தொடர்ந்து ஆட்டத்தை முடிக்கும் வல்லவர்கள் சென்னையில் உண்டு.அதே போல் சீட்டுக்கட்டு.புறான்னு மன்னாதி மன்னர்கள்.

கிளப் பக்கம் போகுற பழைய ஞாபகத்துல பதிவு போடலையே:)

வவ்வால் said...

ராஜ்,

வாங்க, வந்தா ஒட்டுக்கா வாறிங்க, அதுவும் சிரிப்பு வருதாம்ல...என்ன பார்த்தா சிரிப்பு பதிவர் மாதிரியா இருக்கு....நானெல்லாம் டெர்ரரர் பதிவர் ஆங் சொல்லிட்டிட்டேன் ... எத்தன பேரு வயத்துல(வயிரா இல்ல தொட்டியா அது) புளி,பருத்திக்கொட்டை ,புண்ணாக்கு எல்லாம் கரைச்சு இருக்கேன் என்னப்பார்த்து இப்படி சொல்லிட்டிங்களே அவ்வ்!

நாலு பேரு வர்ரதே உங்களுக்கு கூட்டமா தெரியுதா முன்ன எல்லாம் 40 பேருக்கு மேல வருவாங்க அதை எல்லாம் பார்த்தா பெருங்க்கூட்டம்னு சொல்வீங்களோ?

உங்க கண்ணுக்கு காக்கா தான் தெரிஞ்சு இருக்கு...கேரம் போர்டு ஆடுறதையே வேலையா வச்சுக்கிட்டு தனுஷ் எத்தனைப்படதுல நடிச்சிட்டர் :-))

ஆரம்பிச்சு ஒரே ஸ்டிரைக்ல முழுசா முடிக்கிறத ஸ்லாம்னு சொல்லுவாங்க.நமக்கு கட்டுப்பிரிக்கிறது சுட்டுப்போட்டாலும் வராது...ஓரமா உட்கார்ந்து வேடிக்கைப்பார்ப்பேன் கிளப்புள, அங்கே செஸ்,கேரம் இருக்கும் என்னைப்போல அப்ரண்டிசா பார்த்துகூப்பிட்டு வச்சு ஆடுவேன் அவ்ளோ தான்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வவ்ஸ்,
தலைகீழா தொங்கிட்டு உலகை உத்துப் பாக்கறப்ப இந்தப் பதிவுக்கு ஐடியா வந்துச்சா?
:)

உங்க ப்ஃரொபைல் டிஸ்கிரிப்ஷன் மற்றும் பதிவு ரெண்டும் நல்லா இருக்கு..

நான் கூட பதின்ம வயதுகளில் மதுரை சிட்டி சாம்பியன் கூட எல்லாம் விளையாடி இருக்கேன்.. 5 போர்ட்ஸ்'ற்குள் பாயிண்ட் 2 அல்லது 1 ல வந்து நிக்கும்..

விரல் வலியைப் பொருட்படுத்தா விடில் சிந்தனை ஒரு முகப்பாட்டுக்கு நல்ல விளையாட்டுத்தான்.!

வவ்வால் said...

அறிவன்,

வணக்கம்,நன்றி!

இதே போல தலை கீழா தொங்கி பலப்பதிவுகள் போட்டு இருக்கேன் பார்க்கலையோ?

பாராட்டுக்கு மிக்க நன்றி!

சிட்டி சேம்பியன்களோடு மூட்டி மோதினிங்களோ, அப்போ பெரிய ஆள் தான்.ஒரு முறை மதுரை வந்தப்போது மாப்பிள்ளை வினாயகர் சோடாக்கம்பெனி திண்ணையில் கூட்டமாக செஸ்,கேரம் ஆடுவோரைப்பார்த்துள்ளேன்,இப்பவும் அது போல உண்டா?

கண்டிப்பாக ஒரு முகப்படும் சிந்தனை தேவையான விளையாட்டு தான்.விரல் வலிலாம் ஒரு மேட்டரா... ஒரு கேம் வின் செய்தா காணாமல் போயிடும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||சிட்டி சேம்பியன்களோடு மூட்டி மோதினிங்களோ, அப்போ பெரிய ஆள் தான்||

அதெல்லாம் ஒன்றுமில்லை.அவர் எனது பெரியப்பா மேலாளராக இருந்த நிறுவனத்தில் பணி செய்தார்.

பதின்ம வயதுகளில் இருந்த நாங்கள் அவரை வம்படித்து எங்களுடன் விளையாட வைப்போம். எங்களது ஆர்வம் பார்த்த பின்னர் எங்களுடன் வழக்கமாக விளையாடுவார்.

ஆனால் அவருடன் விளையாடத் துவங்கிய பின் எங்களது ஆட்டம் பல மடங்கு மேம்பட்டது !
||.ஒரு முறை மதுரை வந்தப்போது மாப்பிள்ளை வினாயகர் சோடாக்கம்பெனி திண்ணையில் கூட்டமாக செஸ்,கேரம் ஆடுவோரைப்பார்த்துள்ளேன்,இப்பவும் அது போல உண்டா?||

எனக்குத் தெரிந்து அங்கு மட்டுமல்லாமல் தவிட்டுச் சந்தையின் கடை வீதிகளிலும் பந்தடிப் பகுதிகளில் வீடுகள் இருந்த பகுதிகளிலும் தெருவோரம் நின்று கொண்டு விளையாடிய காட்சி 2004\5 வரை கூட இருந்தது.இப்போது மதுரைக்குள் சென்றால் சனக் கூட்டம் பிதுங்கி வழிவதைத்தான் பார்க்கிறேன்.

Signs of globalization! :(

Mohammed said...

கேரம் பற்றி பல சுவையான தகவல்களை பாகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள்.