Thursday, May 31, 2012

பரோட்டா ரகசியம்!
ஒரு நாளுக்கு சிலப்பதிவர்கள், மற்றும் சிலப்பதிவுகள் என தெரிவு செய்துப்படிக்கும் என் புரோட்டோக்காலின் படி ஒரு பரோட்டாப்பதிவை இன்று
வீடு திரும்பல் மோகனின் பதிவில் படித்தேன். பரோட்டாவின் சூடும் ,சுவையும் எழுத்திலும் இருந்தது. சூடா சாப்பிட்டா தான் அது பரோட்டா ஆறிட்டா MRF Steel radial tyre விட வலுவா இருக்கும் :-))

பல்லு இருக்கவங்க பரோட்டா சாப்பிடுறாங்க! இல்லாதவங்களுக்கு இட்லி!

பதிவில் பரோட்டாவில் விஷத்தன்மை இருக்காமே கேரளாவில் தடை செய்துவிட்டார்களாம் என போகிறப்போக்கில் நாஞ்சில் மனோ திரிய கிள்ளிப்போட்டுப்போனார், இது ரொம்ப நாளுக்கு முன்னரே கேள்விப்பட்ட செய்தி என்றாலும், எதில் தான் விஷ தன்மை இல்லை கோலா பானத்தில் பூச்சி மருந்து இருக்குனு சொன்னப்பிறகும் புட்டி புட்டியாக குடிக்கலையா அது போல தான் என இப்பவும் நான் பரோட்டா சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்கேன்.அதுவும் விதம் விதமா கொத்து, வீச்சு, முட்டை லாப்பா, கைமா ,சில்லி பரோட்டா என பதம் பார்ப்பேன் :-))

அது மட்டும் இல்லாமல் டாஸ்மாக் மருந்து சாப்பிட்ட பிறகு எந்த ஒரு விஷத்தையும் தாங்கும் வலிமை நம்ம உடலுக்கு உருவாகிடுச்சு,ஆனால் எல்லாரும் நம்மை போல பாதுகாப்பு வளையத்தில இருப்பதில்லை என்பதால் ,பூஞ்சையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத அப்பிராணிகளை காப்பாற்ற பரோட்டாவின் ரகசியத்தை வெளியிடலாம்னு இப்பதிவு!

மைதா:

பரோட்டா தயாரிக்கப்பயன்ப்படும் மாவுக்கு பெயர் மைதா ஆகும். இந்தப்பெயர் அரபியிலிருந்து வந்திருக்க வேண்டும், ஏன் எனில் பரோட்டா என்ற உணவே அரபு தேச உணவாகும் , முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்த போது ஒட்டகம்,குதிரை இத்தியாதிகளோடு ,கையோடு பரோட்டாவும் எடுத்து வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

குரானிலும் அல் மைதாஹ் என ஒரு சுரா இருக்கிறது அதன் பொருள் "The Table" or "The Table Spread with Food" எனவே உணவாக பயன்ப்படும் பொருள் என மைதா மாவுக்கும் பெயர் வைத்திருக்கலாம்.

கிரேக்க மொழியில் மைதா என்றால் உயர்ந்த கோபுரம் என்று பெயர்.

மேலும் கனடா-அமெரிக்கா இடையே எல்லையில் நுழைவு வாயிலாக இருக்கும் ஊருக்கு பெயரும் மைதா தானாம்!

பெயர்க்காரணம் பார்த்தாச்சு அடுத்து மைதா எப்படி தயாரிக்கிறார்கள் எனப்பார்ப்போம்.

கோதுமையில் இருந்தே மைதா பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இது சுத்திகரிக்கப்பட்ட ஸ்டார்ச் அவ்வளவே எனவே எந்த மூலத்திலிருந்தும் மைதா தயாரிக்கலாம். மாற்று மூலமாக ஆரோ ரூட் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு பயன்ப்படுகிறது. இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில் மரவள்ளிக்கிழங்கிலிருந்தே பெரும்பாலும் மைதா தயாரிக்கப்படுகிறது.சேலம் பகுதிகளில் நிறைய sago ஆலைகள் உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைத்துப்பயன்பாடு மாவு என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இந்தியாவில் அரிசி பஞ்ச காலத்தில் அரிசிக்கு மாற்றாக மைதாவினை அரசே ஊக்கப்படுத்தியதன் விளைவே ஊருக்கு ஊரு பரோட்டாக்கடைகள் பரவ ஒரு காரணம்.

சிலர் கோதுமை மைதா, மரவள்ளிக்கிழங்கு மைதா என கலந்து தயாரித்தும் விற்கிறார்கள், தயாரிப்பாளரை பொறுத்து அவை.

இப்போது கோதுமையிலிருந்து மைதா தயாரிப்பதை காணலாம்,

கோதுமையில் வெள்ளையாக மென்மையாக உள்ள டியுரம்(durum) வகை கோதுமையே மைதா தயாரிக்க ஏற்றது. மேல் தோல்(husk) ,பின்னர் உள் உள்ள தோல் (bran) இரண்டும் எந்திரம் மூலம் நீக்கப்படும், பின்னர் அதனை ரப்பர் உருளைகள் மூலம் நசுக்கி எண்டோ ஸ்பெர்ம்(endosperm) எனப்படும் ஸ்டார்ச் பகுதியை மட்டும் பிரிப்பார்கள், எம்பிரியோ எனப்படும் கருவினை தனியாக பிரித்துவிடுவார்கள், அதில் தான் புரோட்டின், கொழுப்பு, இன்னும் சில ஊட்டச்சத்துக்கள் இருக்கும்.

மைதா தயாரிக்க ஸ்டார்ச் மட்டும் போதும்,அப்போது தான் மென்மையான மாவு கிடைக்கும்.

கோதுமை மாவுக்கும், மைதாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் கோதுமையை முழுவதுமாக அரைத்து பின்னர் தவிடு நீக்கப்படும், இதனால் புரோட்டின், கொழுப்பு, அமினோ அமிலம், விட்டமின் என அனைத்தும் மாவில் இருக்கும், மேலும் பிரானில் உள்ள நார்ச்சத்தும் கிடைக்கும்.

ஆனால் மைதாவில் 100% சதம் ஸ்டார்ச் மட்டுமே பயன்ப்படுத்துவதால் சர்க்கரை சத்து மட்டும் இருக்கும், நார்ச்சத்து, விட்டமின் ,புரோட்டின் போன்ற எதுவும் இருக்காது. முழுவதும் ஸ்டார்ச் என்பதால் டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் நூல்களுக்கு முறுக்கேற்ற sizing agent ஆகவும் மைதா மாவு பயன்ப்படுகிறது.

பிரித்தெடுக்கப்பட்ட எண்டோஸ்பெர்ம் வழக்கம் போல அரவை எந்திரத்தில் மாவாக அரைக்கப்பட்டு ,சலித்து எடுக்கப்படும். இப்படி கிடைக்கும் மாவு மழுப்பு நிறமாக இருக்கும், நல்ல தும்பைப்பூ போல வெண்மையாக ஆக்கவே பல ரசயானங்கள் பயன்படுகின்றன.

அவற்றில் முக்கியமானது பென்சைல் பெராக்சைடு ஆகும், அடுத்தது பிளீச்சிங்க் பவுடர், இதில் இருந்து வரும் பிறவி நிலை குளோரின் மாவை வெளுப்பாக்கும்.இப்படி ஏன் வெளுப்பாக்கி சாப்பிட வேண்டும் ,அப்படியே பழுப்பு நிற மாவில் பரோட்டா சுடலாமே, பரோட்டா சுட்டப்பிறகு பழுப்பா தானே ஆகும்? எனக்கேள்விக்கேட்டால் வெள்ளையா இருந்தால் தான் நல்ல மாவுன்னு மக்கள் வாங்குறாங்கனு பதில் வரும் :-))

மல்லிகைப்பூ, பச்சை பட்டாணியை எல்லாம் பச்சை சாயத்தில் நனைத்துக்கொடுத்தால் தானே மக்கள்"பிரஷ்"னு வாங்குது!

நாம எப்பவுமே கலருக்கு தானே மரியாதை கொடுப்போம், சேப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்புறவங்களாச்சே :-))

வெளுப்பாக்க பயன்படும் வேதிப்பொருள்களான பென்சைல் பெராக்சைடு, குளோரின் ஆகியவற்றின் சிறிதளவு எச்சங்களும் மாவில் தங்கிவிடும், எனவே தொடர்ந்து மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருளை உண்டு வந்தால் சில பக்க விளைவுகள் வர வாய்ப்புண்டு.

இவ்வேதிப்பொருள்களின் பக்க விளைவுகள் என சொல்லப்படுவது,

#பான்கிரியாஸ் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும், இதனால் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நீரிழிவு நோய் வரலாம்.

# சிறுநீரக கல், மாரடைப்பு வரலாம்,

#குளோரினால் வயிற்றில் அல்சர் வரும் வாய்ப்புண்டு.ஆனால் நம்ம அரசாங்கமே குளோரின் கலந்து தான் தண்ணீரை சுத்திக்கரிப்பு செய்து கொடுக்கிறது, அதுவும் தீங்கானதே.

அக்குவா கார்ட் போன்ற நீர் சுத்திகரிப்பு கருவியில் குளோரின் நீக்கும் என்று சொல்லி விற்கிறார்கள்.

#நார் சத்து குறைவாக உள்ளதால் செரிமான கோளாறுகள் வரலாம்.

இதோடு அல்லாமல் இன்னொரு ரசாயனமும் இதில் இருக்கு.

வீட்டில் கோதுமை மாவு, ரவா என டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்திருந்தாலும் சில நாட்களில் கருப்பாக ஒரு சிறிய வண்டு போல பூச்சி பிடித்துவிடுவதைப்பார்த்திருப்பீர்கள், இதனை சேமிப்பில் வரும் பூச்சி(storage pest) தாக்குதல் என்பார்கள்.

மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருக்கும் மைதா மாவில் பூச்சி பிடிக்காமல் இருக்க மெதில் புரோமைடு என்ற ரசாயன புகை மூட்டத்தினை(fumigation) கிடங்கில் போட்டு ,பின்னரே மைதா மாவினை சேமிப்பார்கள்,மாவில் ஊடுருவி இந்த ரசாயனம் இருப்பதால் பூச்சிப்பிடிக்காமல் இருக்கும். அதனை தான் நாம் பரோட்டா தயாரிக்கப்பயன்ப்படுத்துகிறோம். இதனாலும் பாதிப்புகள் உண்டு.

மைதாவில் உள்ள ஆப்புகள் போதாது என்று பரோட்டா தயாரிக்கும் போது பரோட்டா மாஸ்டர்களும் அவங்க பங்குக்கு ஆப்பு சேர்க்கிறாங்க, மென்மையாக வர சமையல் சோடா, மலிவாக சுட பருத்தி எண்ணை(lin seed oil) எனப்பயன்ப்படுத்தி நம்மை பயப்படுத்துறாங்க!

இதுக்குல்லாம் பயப்படுறவனா தமிழன் ,எப்பவும் போல பரோட்டா சாப்பிடுவாங்க, ஹி..ஹி நானும் சாப்பிடுவேன் ...ஏன்னா நான் தமிழன்டா !

சில எச்சிலூறும் குறிப்புகள்:

#கடலூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் லாரன்ஸ் ரோட்டில் பல்லவா என ஒரு பரோட்டாக்கடை இருக்கு, பரோட்டாவுக்கு புகழ் பெற்றது. அங்கே நெய் பரோட்டானு முழுசா பரோட்டாவ முறுகலா பொறிச்சு கொடுப்பாங்க, ஆனால் நெய் இல்லை டால்டா தான் சுவை அபாரமா இருக்கும்.நாம எல்லாம் ஒரு டசனுக்கு கம்மியா சாப்பிட்டதில்லை, ஒரு பரோட்டா 6 ரூபா தான் கொஞ்சம் பெருசா தட்டின வடை சைசில் தான் இருக்கும். (ஒரு டசன் பார்சல் தனி)

# அதே போன்ற நெய் பரோட்டா ஆனால் எண்ணைப்பரோட்டா என்றப்பெயரில் சென்னையில் ஜி.என் செட்டி சாலையில் உள்ள விருதுநகர் பரோட்டாக்கடையில் கிடைக்கிறது.

ஹி..ஹி பல ஊரு ,பல சுவைனு பல உணவுகளை பதம்பார்த்தாச்சு ஆனால் அதை எல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்ள என் தன்னடக்கம் தடுப்பதால் சொல்வதில்லை!


பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள், விக்கி, தளங்கள்,நன்றி!

*****

22 comments:

CS. Mohan Kumar said...

நம்ம பதிவுக்கு எதிர் பதிவா? நல்லா கீதே

கடைசியில் சொன்ன கடைகளை மைண்டில் வச்சிக்குறேன்

CS. Mohan Kumar said...

வவ்வால் அண்ணே பதிவர் பேரை சொன்னா அவரது ப்ளாக் லிங்க் தரனும். இது தான் பதிவுலக சட்டம். வீடு திரும்பல் லிங்க் தராம நீங்க பதிவுலக சட்டத்தை மீறிட்டீங்க :))

ராஜ நடராஜன் said...

எல்லோருக்கும் பவர் கட்டாகுதேன்னு வருத்தம் வந்தா எனக்கு எப்ப பவர் கட்டாகும்ன்னே காத்துகிட்டிருந்தேன்.பவர் கட்டாயிடுச்சு அய்!இப்ப ஜாலிதான்:)

அய்யகோ!என் செய்வேன் ஜாலி வந்த வழியே திரும்பி ஓடிடுச்சே.கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழிச்சு நேற்றுத்தான் கொத்துப்பரோட்டோ சாப்பிட்டேன்.நல்ல முறுகலாயிருந்திச்சேன்னு வீட்டுக்கும் ஒரு பார்சல் கட்டிகிட்டு வந்தேன்/அதுக்குள்ள பரோட்டா சோதனையா?மனுசன் வித்தியாசமா சாப்பிட்டால் பிடிக்காதே!

இங்கே சேட்டன்களின் பரோட்டாவால்தான் பாதி பிரம்மச்சாரிகளின் வாழ்க்கையே ஓடுது.நிங்க சொல்ற வில்லங்கங்கள் இருந்தால் முனிசிபாலிட்டிக்காரன் மைதாவை விற்க கூட விடமாட்டானே!

உங்களுக்கு யார் சொன்னது பரோட்டா மாவையும் அரேபியர்கள் கையிலேயே கொண்டு வந்துட்டாங்கன்னு?இந்தியாவில் கோதுமை வளருவதைப் பார்த்து ஒரு வேளை கொண்டு போய் காஞ்ச ரொட்டி சுட்டு சாப்பிட்டிருக்கலாம் அரேபியர்கள்.இன்றும் அதன் பாரம்பரியமாக மைதா,அரிசி மாவு கலந்த குப்புஸ் தான் அரேபியர்களின் தேசிய உணவு.பெரும்படைகளுக்கு உணவு தயாரிப்பதின் சிக்கல் கொண்டு அரிசி,ஆட்டுக்கறி,வெங்காயம்,தக்காளி,உப்பையெல்லாம் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டதால் இந்திய வாசனைப் பொருட்களான லவங்கம்,மிளகு,பட்டை இன்னபிறவற்றையும் சேர்த்து பிரியாணி உருவாகியிருக்கலாம்.இதில் ஹைதராபாத் பிரியாணியெல்லாம் சகோ.சார்வாகனின் பரிணாமம் பெற்ற பிரியாணி.எப்படின்னா கீழே அடுப்பின் சூட்டுக்கு கால் பகுதி வெந்த அரிசியும்,இடைப்பகுதியில் பாதியும் மேல்பகுதியில் முக்கால் பாகம் என அரிசி,கறி,இன்னபிற உப திரவிய அடுக்குகள் கொண்ட மேல்தட்டில் நெருப்பை போட்டு வேகவைக்கும் பிரியாணி.இந்த பிரியாணி வேகவைக்க கூட ஆவி வெளியே போகாதவாறு மைதா பசை தேவைப்படும்.இதை விட முக்கியமாக சரக்கு காய்ச்ச பானைகளை மூட மைதா தேவைப்படும்:)

மேலும் பரோட்டா ஈரானியர்கள் மூலமாகவோ அல்லது கடல்வணிகம் செய்த கேரளப்பகுதிகள் மூலமாக பரவியிருக்கும்.பசித்தாலும் புலி புல்லைத் தின்னாதுங்கிற மாதிரி பஞ்சம் வந்தும் தமிழகத்தில் பரோட்டா கலாச்சாரம் வரவேயில்லையென்றே நினைக்கின்றேன்.பரோட்டாவுக்கு பதிலாகவும் அரிசிக்கு மாற்றாகவும் சோளம்,கம்பு,கேழ்வரகு போன்றவையே தமிழகத்தை ஆக்கிரமித்துக்கொண்டன.நமக்கே அரிசி சிங்கியடிக்கும் போது கேரளவுக்கு கடத்தலாவது!எனவே மீனுக்கும் சாராயத்துக்கும் தோதாக மரவள்ளிக்கிழங்கு பயிரிடத்துவங்கினார்கள் சேட்டன்கள் என நினைக்கிறேன்.பரோட்டா கலாச்சாரம் பாய் கடை பாயாவில் துவங்கி மெல்ல ஆட்டுக்கறி ருசிக்கும்,கொத்துக்கறிக்கும் கொத்துபரோட்டாவுக்கு ஜோடி சேர்ந்துகிச்சு.இதுல டாஸ்மாக்கும் கூட சேர்ந்துகிட்டு நம்மாளுக எதைக் கலந்தாலும் சாப்பிடுவாங்கன்னு நினைச்சு நீங்க சொல்லும் வில்லங்கங்களும் சேர்ந்துகிச்சு.வாகன ஓட்டுனர்களின் உணவாக சாலையோரக்கடைகள் என பரோட்டோ பதவி உயர்வு பெற்றுக்கொண்டிருக்கலாம்.

அல்சராவது!பல்சராவது! பரோட்டா சாப்பிட்டாலும்,குஸ்கா சாப்பிட்டாலும்,வயிற்றுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிச்சாலும் கூட உடற்பயிற்சிகள் மூலமாக நோய்களுக்கு என்கிட்ட மோதாதே சொல்லலாம்.தெருவோர குப்பைகளின் மத்தியிலும் தள்ளுவண்டிக்கடை,முக்கி முக்கியெடுக்கும் தண்ணீர்ப்பானை,ஈ,கொசு,சிக்கன்குனியான்னு இத்தனைக்கும் மத்தியில் நோயை எதிர்க்கும் சக்திகொண்ட திசுக்கள் உயிர்வாழ்ந்தே தீரும்.

சிக்கன் குனியா பம்பாயை தாக்கியபோது இந்தி நடிகை பிரித்தி ஜிந்தா அழகாய் சொன்னாள்.சாவு என்பது ஒருமுறைதான்.சிக்கனை சாப்பிட்டு விட்டே சாவோம்:)

ராஜ நடராஜன் said...

இந்த கடைல அது கிடைக்குது!அந்தக் கடைல இத்தனை ருசியாக்கும்ன்னு சொல்லும் கேபிள் பதிவுகளைக் கண்டாலே நான் மெர்சலாயிடுவேன்.பல்லு இருக்குது பரோட்டா சாப்பிடறாரே என்று எரிச்சலில் நான் அந்தப் பக்கமே போக மாட்டேன்.இப்ப நீங்க வேறயா!நீங்களாவது பரவாயில்லை.அதோ எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்துகிட்டிருக்கிறாரே வீடு திரும்பல்! கடைப்பெயரையும் படம் போட்டு விளக்கினா எனக்கு எப்படியிருக்கும்?பல் நற நற்...

வவ்வால் said...

மோகன்,

வாங்க,வணக்கம் நன்றி!

எதிர்ப்பதிவெல்லாம் இல்லை, எடுத்துக்கொடுத்த பதிவு... ஹி...ஹி உங்க பதிவில இருந்து ஒரு புள்ளியை வச்சு போட்ட கோலம் ...அலங்கோலமா இல்லையே :-))

கனம் கோர்ட்டார் அவர்களே ,
ஸர்க்கார் தரப்பின் குற்றாசாட்டினை ஆட்சேபிக்கிறேன்! மஹா பிரபு அவர்களே!
உங்க பேரு போட்டு இருக்கேன்ல அதுல தான் உங்க வீட்டுக்கும் கொக்கி போட்டு விட்டு இருக்கேன் கொக்கி சரியா வேலை செய்யலையா?

எதுக்கும் சரியா இருக்கான்னு நானே பார்த்திடுறேன். ஒரு வேளை இங்கே அழுத்தவும்னு பயனர் குறிப்பு கொடுக்காமல் போனதால் வந்த குழப்பமோ?

---------

ராஜ் ,

வாங்க வணக்கம், நன்றி!

கொத்து பரோட்டா முறுகலா இருந்துச்சா? அப்போ அது பேரு கொத்துப்பரோட்டாவா அவ்வ்!

எந்த ஊரு முனிசிபாலிட்டிய சொல்றிங்க?

இதுல வேற சமூக பொறுப்புணர்வோட பதிவு போட சொல்லுவீங்க :-))
நாட்டுக்கு நாடு ஒரு தரக்கட்டுப்பாடு இருக்கும், நீங்க குந்தி இருக்க நாட்டுல சரக்கு இல்லைனா இங்கேயும் இல்லைனு சொல்லுவிங்க போல.

பிபிசி ல வரும் போது இந்த வரலாறு எல்லாம் நீங்களே தெரிஞ்சுப்பீங்க :-))

சொல் அரபி என்பதால் அரபியர்கள்னும், இந்தியாவுக்கு படை எடுத்து வந்த முகலாயர்கள்னும் சொன்னா இல்லை இரானியர்களா இருக்கும்னு சொல்றிங்க ,இரானியர்கள் எல்லாம் ஜொராஷ்டிரம் போல!, கஜினி முகம்மது,கோரி முகம்மது, பாபர்னு எல்லாம் கிருத்துவர்களாக இருக்க வேண்டும்.இனிமே என்னத்த சொல்ல ஏலியன்ஸ் தூக்கி வந்துபோட்டாங்கன்னு சொல்லிடுவோம் :-))

தொ.கா மட்டும் பார்க்காமல் கொஞ்சம் வாசிக்கவும் செய்யவும், தொகாவில் வந்தால் மட்டும் தான் செய்தினு இருந்தால் இப்படி தான்.

ப.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய உணவு என்ற தொடரில் கூட வந்திருக்கு. அவரே முகலாயர் உணவு பற்றிய ஒரு புத்தகத்தினை காபி அடிச்சு தான் எழுதினார், ஏன் எனில் ஆங்கில மூலமும் முன்னரே படித்து இருந்தேன்.

இப்போ எனக்கு ஒரு சந்தேகம் என்னனா எழுதியது ப.ரா வா இல்லை எஸ்.ரா வானு :-))

கேரளாவில் கப்பக்கிழங்கு என சொல்லுவார் ஏன் எனில் கப்பலில் இருந்து இறக்குமதியானது என்பதால். அப்புறம் எப்படி அவங்க பயிர் செய்து இருப்பாங்க.

இப்போ யாரு கேரளாவுக்கு கடத்துறாங்கன்னு சொன்னானு இந்த் கதை?

வேற எங்கோ சொல்ல வேண்டியத இங்கே கக்கிட்டாரா?

-----

முதல் தடவை போய் சாப்பிட்டுடு ஆஹா ஓஹோனு சொல்லி எழுத நமக்கு வராது என்பதால் இதை எல்லாம் எழுதுவதில்லை. மேலும் நம்ம ஊர் ஓட்டல்களில் ஒரு நாள் சுவையா இருந்தா அடுத்த நாள் அதே சுவை இருக்கும்னு சொல்ல முடியாது. இதனைப்பல ஓட்டல்களில் அனுபவ பூர்வமாக கண்டிருக்கிறேன். சரவண பவனின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியமும் இதில் தான் இருக்கு எல்லா நாளும் ஒரே அளவில் சுவை இருக்கும்.

சென்னையில் உள்ள ஒவ்வொரு பின் கோடு ஏரியாவிலும் சாப்பிட்டு பார்த்து இருக்கேன் :-))

அதே போல தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட உணவுகளையும் சாப்பிட்டு பார்த்தாச்சு.மும்பைல பஞ்சாபி லஸ்ஸி ஸ்பூனால சாப்பிடும் அளவு கெட்டியா இருக்கும்னு சுவைச்சும் பார்த்தாச்சு.

நீங்க சொன்னது போல யாரோட நற நறவும் எனக்கு வேண்டாம்.

ராஜ நடராஜன் said...

வவ்!ஆதாரமில்லாமல் எதையும் சொல்லக்கூடாது என்பது சகோ.சார்வாகனின் பரிணாமக் கொள்கைகளில் ஒன்று என்பதாலேயே பிபிசி சுட்டி கொடுத்தேன்.உடனே என்னை வளைகுடா பிபிசி நிருபராக்கி சிரிக்கிறீங்களே:) கார்ட் டாக் டிம் செபாஸ்டின் கேட்டார்ன்னு அவ்வளவுதான்.

தமிழ் மீது எவ்வளவுதான் காதல் இருந்தாலும் சில உச்சரிப்புக்களை அப்படியே தமிழில் கொண்டு வந்து விடமுடிவதில்லை என்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.ஹார்ட் டாக்ன்னு போட்டா இதயப் பேச்சு மாதிரி வந்து விடுகிறது.சூடான பேச்சுன்னா பொருள் சரியாக இருந்தாலும் உச்சரிப்பை தமிழில் கொண்டு வருவதில்லை.நான் சொல்லி நீங்க போட்ட டாட் டோட் கூட அந்த வகைதான்.

ஆயிரம் வார்த்தைகளை ஒரு புகைப்படம் சொல்லும்ங்கிற மாதிரி அல்லது ஐந்து பழங்களின் ருசியை ஒரு பாட்டில் பழரசம் நிரப்பும்ன்னும் கூட வச்சிக்கலாம்.அந்த மாதிரி சிலசமயம் காணொளியும் கூட.சமீப உதாரணமாக எடுத்துக்கொண்டால் பவரைப்பற்றிய ஒரு புத்தகம் சொல்லும் விசயத்தை ஒரு நீயா நானா விளக்கவில்லையா:)அப்புறம் ஏன் புத்தகத்தையும் படிங்கன்னு போடுறீங்க.முதலில் இடையில் புகுந்து கொண்ட தொல்லைக்காட்சி,வீட்டு தியேட்டர்,சோனி கேம்ஸ்,டிவிடி இன்னபிறவற்றை நிறுத்தச் சொல்லுங்கள்.நான் படிக்கிறேன்:)

கப்பலில் இருந்து இறங்கியதால் அது கப்பையா?சாப்பிட்டதும் கப்ன்னு ஏறிக்க்கும்ங்கிறதால அது ஏன் கப்பையா இருக்க கூடாது:)

தமிழக பின்கோடெல்லாம் சுத்திட்டு கேரளா பின்...கோடுகளை சுத்தலைன்னு நினைக்கிறேன்.அதுனால்தான் சேட்டன்கள் கப்பை வளர்த்த கதைகள் உங்களுக்கு தெரியலை போல இருக்குது.இல்லையே அதுக்கும் சான்ஸ் இருக்குற மாதிரி தெரியலையே!மட்டாஞ்சேரி பற்றியெல்லாம் சொன்ன போது சிரியன்கிறுஸ்துவர்கள் பற்றியெல்லாம் அவுத்துவிட்டீங்களே!

பரோட்டா அரபிகள் கொண்டு வந்தாங்கன்னு நீங்க ரீல் விட்டதனால்தானே நான் சேட்டன்கள் போடும் பரோட்டாவைப் பற்றி சொல்லப்போய் கப்பையெல்லாம் வந்துச்சு.

ப.ரான்னா நம்ம பன்னிக்குட்டி ராமசாமின்னு தெரியும்.அது யார் எஸ்.ரா:) இவன் அவன்ல இரண்டாம் காந்தி ராஜபக்சேன்னு ஊசியில் வாழைப்பழத்தைக் குத்தினாரே அவரா:)

நீங்க இதை தெளிவு...படுத்திட்டு வாங்க.நாளைக்கு எனக்கு ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கிழமை.ஒரு ரவுண்டு யார் என்ன கதைக்கிறாங்கன்னு பார்த்துட்டு வாரேன்.

வவ்வால் said...

ராஜ்,

உங்களை புத்தகம் படிக்கணும்னு சொன்னது தவறு தான் ,ஆனால் தொ.காவில் காணொளியாக வந்தால் தான் நம்புவேன் என்றால் சொல்வதற்கு எதுவுமில்லை.

ஏன் நீங்கள் உங்கள் கருத்தை எல்லாம் காணொளியாக போடாமல் இன்னும் தட்டச்சிக்கொண்டு இருக்கீங்கன்னு தான் புரியலை :-))

இதுக்குன்னே விபிலாக்னு ஒன்று கூட இருக்கு, முயற்சி செய்து பார்க்கவும்.

//பரோட்டா அரபிகள் கொண்டு வந்தாங்கன்னு நீங்க ரீல் விட்டதனால்தானே நான் சேட்டன்கள் போடும் பரோட்டாவைப் பற்றி சொல்லப்போய் கப்பையெல்லாம் வந்துச்சு.
//

டீக்கடை எல்லாம் சேட்டன்கள் தான் சென்னையில் எனவே தேயிலையும் அவங்க கண்டுப்பிடிப்பாகவே இருக்கும். :-))

கூகிளில் பரோட்டா யாரு கொண்டு வந்தாங்கன்னு கேட்டா சொல்லப்போகுது,அதை செய்ய கூட சோம்பல் படும் ஒரு நபர் , சமூக விழிப்புணர்வு பதிவ பத்தி எனக்கு சொல்லும் கொடுமை எல்லாம் , பதிவுல தான் நடக்கும். :-))

ராஜ நடராஜன் said...

அய்யோ!அய்யோ!கூகிள் தேடலை எதுக்கெல்லாம் உபயோகிக்கனும்ன்னு ஒரு வரைமுறையே இல்லாமல் போச்சே!பரோட்டாவை யார் கண்டுபிடிச்சாங்கன்னு தேடுறதுக்கு கூட கூகிளா:)

ஒரு செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லிவிட முடியும்.அதுவே காணொளின்னா அது அதிகம் பொய் சொல்லாது.அதுக்குத்தான் காணொளி மீதான நம்பிக்கை.

ஏன் என் கடை ஒழுங்கா இருக்குறது புடிக்கலையாக்கும்.ஊரல இருக்குற விளம்பரம்,காணொளின்னு போட்டு நொண்டச் சொல்றீங்க இல்ல.

அடோபில நிறைய பேர் போட்டோஷாப்ன்னு மட்டும் நின்னுடறாங்க.அதோடு ஆப்டர் எபக்ட்,பிரிட்ஜ்,பிரிமியர் புரோ,என்கோர்,சவுண்டுபூத்ன்னு நிறைய விசயங்கள் இருக்குது.இதையெல்லாம் பரிட்சித்துப் பார்த்துட்டு தலையை சொட்டையாக்கி கொள்ளாமல் நாலு கடைக்குப் போனமா அந்த கணத்துல மனசுல என்ன தோணுதோ அதை சொன்னோமான்னா நான் சுதந்திர பறவையாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையாக்கும்.இத்தனை வருடங்களாய் போட்ட பின்னூட்டங்களையெல்லாம் சேர்த்தாலே இரண்டு புத்தகம் தேத்தி விடலாம்.அவ்வளவு மொக்கை அமுதசுரபியா வந்துகிட்டேயிருக்குது.இதெல்லாம் காணொளி தயாரிக்கிறதுல முடியுமாங்கிற நினைப்புலதான் காணொளி தயாரிக்காம தட்டச்சிகிட்டேயிருக்கிறேன்.

கோவை நேரம் said...

பரோட்டா ல இவ்ளோ விஷயம் இருக்கா...

CS. Mohan Kumar said...

ஏற்கனவே கொக்கி இருந்ததா? நான் தான் சரியா கவனிக்கலை போல. சாரி

Jayadev Das said...

\\சில எச்சிலூறும் குறிப்புகள்:

#கடலூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் லாரன்ஸ் ரோட்டில் பல்லவா என ஒரு பரோட்டாக்கடை இருக்கு, பரோட்டாவுக்கு புகழ் பெற்றது. அங்கே நெய் பரோட்டானு முழுசா பரோட்டாவ முறுகலா பொறிச்சு கொடுப்பாங்க, ஆனால் நெய் இல்லை டால்டா தான் சுவை அபாரமா இருக்கும்.நாம எல்லாம் ஒரு டசனுக்கு கம்மியா சாப்பிட்டதில்லை, ஒரு பரோட்டா 6 ரூபா தான் கொஞ்சம் பெருசா தட்டின வடை சைசில் தான் இருக்கும். (ஒரு டசன் பார்சல் தனி)

# அதே போன்ற நெய் பரோட்டா ஆனால் எண்ணைப்பரோட்டா என்றப்பெயரில் சென்னையில் ஜி.என் செட்டி சாலையில் உள்ள விருதுநகர் பரோட்டாக்கடையில் கிடைக்கிறது.

ஹி..ஹி பல ஊரு ,பல சுவைனு பல உணவுகளை பதம்பார்த்தாச்சு ஆனால் அதை எல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்ள என் தன்னடக்கம் தடுப்பதால் சொல்வதில்லை!\\ நான் நாசமாப் போனாலும் பரவாயில்லை, நீங்க நல்லாயிருங்கன்னு இந்தப் பதிவைப் போட்ட உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே, மைதாவை பற்றி மேலும் சில விஷயங்கள்:
மைதாவுல அல்லாக்சேன் (alloxan) அப்படிங்கற விசத்தன்மை வாய்ந்த கெமிக்கல் இருக்கறதா சொல்றாங்க. இந்த கெமிக்கல் பான்கிரியாசில் உள்ள பீட்டா செல்களை கொல்லும் தன்மை வாய்ந்தது (இந்த பீட்டா செல்களே இன்சுலின் சுரப்பவை). அல்லாக்சேனை எலிகளில் டயபடீஸ் நோயை உருவாக்க பயன்படுத்துகிறார்கள். (அதுவும் இப்போது அதிகமில்லை, வேறு நல்ல முறைகள் வந்துவிட்டன).

அல்லாக்சேன் எப்படி மைதாவில் கலந்திருக்கிறது என்பது புதிராகவே உள்ளது. மைதாவை மென்மையாக்க அல்லாக்சேனை உபயோகிக்கிறார்கள் என்கிறார்கள். மைதாவை ப்ளீச்சிங் செய்ய பயன்படுத்தும் கெமிக்கல்களில் இருந்து அல்லோக்சேன் உருவாகி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

அல்லாக்சேன் இல்லாவிட்டாலும் மைதா உடல்நலத்திற்கு உகந்தது இல்லை என்றே தெரிகிறது. அதில் இருக்கும் அதிகப்படியான ஸ்டார்ச், எதிர்-சத்துகள் (anti-nutrients) நிச்சயம் உடலுக்கு நல்லதல்ல. தவிர மைதா பயன்பாட்டிற்கும், சர்க்கரை நோய்,இதயநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

அவ்ளோதான்..........

வவ்வால் said...

ராஜ்,

அப்புறமெதுக்கு தான் கூகிள் இருக்கு?சில பேரு ஓடிப்போன பொண்டாட்டி,அப்பா,அம்மா எல்லாம் எங்கே இருக்காங்கன்னு கூகிளில் தேடுறாங்க:-))

//அதுவே காணொளின்னா அது அதிகம் பொய் சொல்லாது.அதுக்குத்தான் காணொளி மீதான நம்பிக்கை.//

ராஜ பக்சே தமிழர்கள் நலமாக இருக்காங்கன்னு காணொளி தயாரிச்சுவிட்டாலும் பொய் சொல்லாது என நம்புவீங்க :-))

நீங்க காணொளி தவிர எதுவும் புரியாதுன்னு சொன்னீங்க,அப்புறம் இப்படி சொன்னா எப்பூடி?

---------
கோவை நேரம்,

நன்றி,வணக்கம். குடிக்கிற தண்னீர்,காற்றுன்னு எல்லாம் நாசமா போய்க்கிட்டு இருக்கு,பணத்துக்காக தான் எல்லாமே.

----
மோகன்,

அதனால் என்ன கொக்கி எங்கேனு தெளிவா நான் சொல்லவில்லை,அதான் துவைப்பான் பதிவில அமுக்க சொல்லியாச்சுல்லே :-))

------
ஜெயதேவன்,

ஹி..ஹி.. நாம மெழுகுவர்த்தி போல ...ஊருக்கே வாழும் உத்தமன் ஆனா அதை நானே சொல்லிக்கக்கூடாதுன்னு சொல்லிக்கமாட்டேன்,ஏன்னா எனக்கு ரொம்ப தன்னடக்கம் இருக்குன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க :-))

நீங்களும் யாருக்கிட்டேவும் சொல்லிடாதிங்க ,படித்ததும் கிழித்துவிடவும்/அழித்து விடவும் :-))

----
ப.ரா,

நன்றி,வணக்கம்,

நீங்க சொல்லியிருப்பது எல்லாமே சரிதான் ,ஆனால் அதெல்லாம் பதிவிலும் சொல்லப்பட்டிருக்கு :-))

அலாக்சான் = குளோரினில் இருந்து வரும் உபபொருள், மேலும் சோடா உப்பினாலும் வரும். குளோரின் டை ஆக்சைடு தான் அல்லாக்சான். குளோரினை சொல்லியாச்சுன்னு உப பொருளின் பேரை சொல்லவில்லை.

பான்கிரியாஸ்னு சொன்னால் போதும்னு பீட்டா செல் என சொல்லவில்லை.

டயபடீஸ் நோயை என்று சொன்னதை தான் தமிழில் நீரிழிவு நோய்னு சொல்லி இருக்கேன்.(தமிழ்ப்படுத்தினா என்னையே படுத்துதே )

//அதிகப்படியான ஸ்டார்ச், எதிர்-சத்துகள் (anti-nutrients) நிச்சயம் //
இதை தான் விட்டமின், அமினோ அமிலம், புரோட்டின் இல்லாமல் வெறும் ஸ்டார்ச் மட்டும் 100% சதம் மைதாவில் உள்ளது என சொல்லி இருக்கேன்.

ஏன் எனில் எதிர்ச்சத்துகள்னு ஒரு பொருள் இல்லை, சத்துகள் இல்லை என்பதை அப்படி சொல்லி இருக்காங்க.

இதய நோய் என்பதை மாரடைப்புனு(heart attack) குறிப்பிட்டுள்ளேன்,சிறுநீரக கல், நீரிழிவுநோய்வரும்னு பதிவில் சொல்லப்பட்டு இருக்கு.

ஷ்ஷ்ப்பா பதிவ போட்டுட்டு ஒரு விளக்கம் வேற சொல்ல வேண்டியதா இருக்கே :-))

பதிவை ஒரு முறை நிறுத்தி நிதானமாக படிங்கய்யா:-))

நீங்க விக்கிபீடியாவில் மைதாப்பக்கத்தினை மட்டுமே பார்த்துட்டு வரிங்கன்னு நினைக்கிறேன், நான் கூட இன்னும் சில தளங்களும் பார்த்து தான் பதிவிட்டேன். நன்றி விக்கினு பின்குறிப்பு போட்டதை கவனிக்கலையோ!

வவ்வால் said...

முந்தைய பின்னூட்டத்தில் குளோரின்டை ஆக்சைடால் தான் அல்லாக்சன் உருவாகிறது என வர வேண்டும்.மேலும் ஒரு காரணம் சமையல் சோடா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்ணா.... நீங்க அல்லாக்சனை பத்தி நேரடியா எதுவும் சொல்லாததால உணர்ச்சிவசப்பட்டு பொங்கிட்டேனுங்ணா, மன்னிச்சி விட்ருங்ணா.......!

வவ்வால் said...

ப.ரா,

வாங்ணா, பெரிய பின்னூட்டம் மெனக்கெட்டு போட்டு இருக்கீங்க தெளிவாசொல்லணும்தாங்ணா அதை சொன்னேன்

அலாக்சான் நேரடியா சேர்க்கலைனு தான் நானும் நேரடியா சொல்லவில்லை. இப்போ உங்கபின்னூட்டம் வழியா அதுவும் சேர்ந்துடுச்சு நன்றி.

நம்மகடையில பொங்குறது பொங்கல் வைக்கிறது எல்லாம் தராளமா நடக்கும், இதில ஒன்றும் இல்லை.

ஹி..ஹி ஏன்னா நாம போக்கிரி பொங்கல் வைக்கிற பார்ட்டிங்ணா!

அனைவருக்கும் அன்பு  said...

அருமையான சுவையான தகவல்கள் திரட்டியஅதன் பின்னணிகளை விளக்கியதற்கு பாராட்டுக்கள் ...............

வவ்வால் said...

கோவை.மு.சரளா,

வாங்க,வணக்கம்,நன்றி!

முதல் வருகை என நினைக்கிறேன், வெளிப்படையான பாராட்டுக்கு மிக்க நன்றி!

R. Gopi said...

:-))

கலக்குறீங்க. பொதுநன்மை கருதி ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கும்பகோணத்தில் நாகேஸ்வரன், பாதாளகாளியம்மன் கோவில்களுக்கு நடுவே இருக்கும் பரோட்டா கடையில் வீச்சு பரோட்டா சாப்பிடவும். சுவையாக இருக்கும். மாலையில் திறந்து இரவில் கடையை மூடிவிடுவார்கள்.

R. Gopi said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

கோபி.ராமமூர்த்தி,

வாங்க,நன்றி!

உங்க பொது நன்மைக்கு ஒரு வணக்கம்,நல்ல தகவல்.அடுத்த முறை முயற்சி செய்துடுகிறேன். ஒரு ரெண்டு வாரம் முன்னர் தான் கும்பகோணம் வரைக்கும் போயிட்டு வந்தேன், தெரிந்திருந்தா முயற்சி செய்திருப்பேன்.

Anonymous said...

சூப்பர் ... புரோட்டா சாப்பிடுரவுகளுக்கு இவ்வளவு அறிவா !!!!

சூப்பர் அலசல் .. வாழ்த்துக்கள்