Friday, June 01, 2012

துவைப்பான் வாங்க துப்புக்கொடுக்கும் வவ்வால்



மீண்டும் வீடு திரும்பல் மோகனே (சுட்டிக்கான கொக்கி அவரு பேருல இருக்கு எனவே அவரை போட்டு அமுக்கவும் )ஒரு நுனிய எடுத்துக்கொடுத்திருக்கார், துவைப்பான் வாங்க குறிப்புகள்னு சொல்லிப்பதிவு போட்டு, ஆனால் நான் எதிர்ப்பார்த்த குறிப்புகள் அதில் இல்லாததால் என் வழி தனி வழினு நானே தேவையான குறிப்ப என்னோட அனுபவத்தில இருந்து உருவாக்கி பதிவாக்கிட்டேன்.

ஹி...ஹி நான் அனுமார் போல... குரங்கு இல்லைய்யா..எனக்கு என்ன தெரியும்னு எனக்கே தெரியாது சொல்ல வந்தேன், இப்படி எங்கேயாவது துப்பு கிடைச்சா அதை வச்சு துலக்கிடுவேன் :-))

நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லை அப்படினு இருக்கும் போது இந்தப்பதிவையும் படிச்சா தப்பில்லை மக்கா படிங்க... புடிச்சிருந்தா நாலுபேருக்கிட்ட சொல்லுங்க ஹி...ஹி பிடிக்கலைனா என்கிட்டே மட்டும் சொல்லுங்க அது போதும்.


துவைப்பான்:

இரண்டு வகையில் கிடைக்குது ,

முன்புற திறப்பு துவைப்பான்,

மேல்புற திறப்பு துவைப்பான்.

இவை இரண்டிலும் முழு தானியங்கி ,பகுதி தானியங்கி என்ற வசதியுடன் உள்ளது.

கூடுதல் இணைப்பாக உலர்த்துவானும் கிடைக்கிறது,இது மட்டுமே ஒரு துவைப்பான் விலை வரும். எனவே அதனை வாங்குவது பண விரயமே. ஏன் எனில் துவைப்பனே 90% நீரினை பிழிந்து எடுத்து விடும். மேலும் சுட்டெரிக்கும் சூரிய பூமியான நம்ம ஊரில் அதுக்கு அவசியமே இல்லை, சுமார் 2 மணியில் காய வைத்துவிடலாம் மொட்டை மாடியில்.



மேல்புற திறப்பான் துவைப்பான்:

ஒற்றை தொட்டி ,இரட்டை தொட்டி என இரண்டு விதம் இருக்கு. ஒன்றில் ஊற வைக்கலாம், அல்லது துவைத்த துணிகளை எடுத்து வைக்கலாம் என சொன்னார்கள், பெரிதாக அனுகூலம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

மேலும் சூடான துவைப்பு ,குளிர் துவைப்பு என்றும் இருக்கு. சூடான துவைப்பானில் சுடுநீரில் அலசும் வகையில் உள்ளமைந்த வெப்பசுருள் இருக்கும். இதன் அனுகூலம் கடின அழுக்கையும் நீக்கும்.

அனைத்து துவைப்பானும் பல்சேட்டர் சுழற்சி முறையில் துணி துவைக்கும். டிரம் செங்குத்து அச்சில் சுழலும் இதனால் மேல் திறப்பானில் உள்ள குறைபடு என்னவெனில் அழுக்கு சரியாக போகாது, ஏன் எனில் துணிகள் ஒன்றன் மீது ஒன்றாக கிடக்கும் இடைப்பட்ட இடங்களீல் தண்ணீரோ , சலவைத்தூளோ சரியாக செல்லாது,எனவே எங்கெல்லாம் இரண்டு துணிகள் ஒட்டிக்கொண்டுள்ளதோ,அல்லது ஒரே துணியே மடிந்திருக்கிறதோஅங்கெல்லாம் அழுக்கு போகாது.

விளம்பரங்களில் சட்டைக்காலர் அழுக்கு கூட நீக்கும் என ஏதேனும் நடிகை வாகுறுதிக்கொடுப்பதெல்லாம் டகால்டி ஆகும்.

மேல் புற திறப்பு துவைப்பானில் பொதுவாக துவைப்பு திறன் குறைவாகவே இருக்கும்,ஆனால் முன்புற துவைப்பானை விட விலை மலிவானது.

இப்போ முன்புற திறப்பு துவைப்பானைப்பார்ப்போம்,

மேல்புற துவைப்பானை விட முன்புற திறப்பு துவைப்பானே சிறப்பாக துவைக்கும்.

இதிலும் முழு தானியங்கி, பகுதி தானியங்கி உண்டு.

குளிர் நீர், சுடுநீர் (steam wash also available)துவைப்பான் உண்டு.

முன்புற திறப்பு துவைப்பானின் சிறப்பு:

#முன் புற திறப்பு துவைப்பானிலும் பல்சேட்டர் அமைப்பில் தான் துவைக்கப்படுகிறது.ஆனால் துவைக்கும் கலன் கிடை மட்டமாக இருக்கும், எனவே சுழலும் போது துணிகள் மேலும் கீழுமாக சுழலும் இதனால் எப்போதும் ஒன்றன் மீது ஒன்றாக துணிகள் படிந்தோ,மடிந்தோ இருக்காது, ஒவ்வொரு சுழற்சியிலும் துணிகள் கலைப்படும் எனவே எளிதாக நீர்+சலவைத்தூள் கலவை அனைத்துப்பகுதிக்கும் சென்று அழுக்கை நீக்கும்.

#கதவு முழுக்க ஒளிஊடுவருவும் ஃபைபரில் இருப்பதால் எளிதாக துவைப்பதை கவனிக்கலாம்.

#மேலும் குறைவான நீரினையே உபயோகிக்கும்.

வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

#முன் புறகதவு 180 டிகிரியில் பக்கவாட்டில் முழுதும் திறக்கிற வகையில் உள்ளதாக வாங்க வேண்டும்.

#மின் தடை ஏற்பட்டால் எவ்வளவு நேரம் கழித்து கதவினை திறக்க முடியும் என்பதனைக்கேட்க வேண்டும். ஏன் எனில் மேல் புற திறப்பான் போல் இல்லாமல் முன் புற திறப்பானில் லாக் ஆகிவிடும். துவைக்கும் போது நடுவில் திறக்க முடியாது.

இயங்கும் விதத்தின் அடிப்படையில் இரண்டு வகை உண்டு:

1)டைரக்ட் டிரைவ்,

2)பெல்ட் டிரைவ்


டைரக்ட் டிரைவில் டிரம் ,மோட்டார் எல்லாம் ஒரே அசெம்பிளியாக இருக்கும். எனவே சத்தம், அதிர்வு குறைவாக இருக்கும்.

இதன் குறைபாடு என்னவெனில்,

டிரம்முடன் மோட்டார் இணைந்து இருப்பதால் மோட்டார் பழுதானாலும் டிரம்மையும் சேர்த்து கழட்டுவார்கள், டிரம் பழுதானாலும் மோட்டாரும் சேர்ந்தே கழட்டப்படும்.மேலும் 4 ஆண்டுகள் போல் ஆகி மோட்டார் பழுதானால் டிரம் நன்றாக இருந்தாலும் மாற்ற நேரிடலாம்.ஏன் எனில் ஒன்றாக இணைந்திருக்கும் அமைப்பு என்பதால் பழைய டிரம் புது மோட்டாருக்கு ஏற்ப ஒத்துழைக்காது என்பார்கள்.

உ.ம் சைக்கிளில் புது டயர் போட்டால் புது ட்யூப் போட சொல்வார்கள். பைக்கிலும் அப்படியே.

மேலும் டைரக்ட் டிரைவில் டிரம்முடன் ஒரு கியர் அமைப்பும் இருக்கும் அதுவும் தேய்ந்துவிடும், இதனால் ஒரு தள்ளாட்டம் சுழற்சியில் வரலாம்.

இப்படி இயங்கும் முன் திறப்பு துவைப்பான் ,எல்ஜி டைரக்ட் டிரைவ் துவைப்பான்.

#இவர்கள் விசித்திரமாக மோட்டாருக்கு ஆயுள்கால வாரண்டி, டிரம்முக்கு 4 ஆண்டுகள் என சொல்லி இருக்கிறார்கள்.

இதில் தான் ஒரு கிடுக்கி இருக்கிறது வாரண்டியில் மோட்டார் மாற்றினால் டிரம்மும் சேர்ந்த்து மாற்றி காசு வாங்கிவிடுவார்கள் . எனவே இலவசமாக மாற்றியதாக சொல்லவே முடியாது.

# IFB முன்புற துவைப்பான் பெல்ட் டிரைவ் ஆகும், டிரம் ஒரு அச்சில் இருக்கும் , மோட்டார் தனியாக இருக்கும், இதில் கியர் தேய்மானம் இல்லை, மோட்டார் ,டிரம் என தனியாக கழட்டி சர்வீஸ் செய்யலாம். இதில் நாளானால் தேய்மானத்தினால் தள்ளாட்டம் வராது அப்படி வந்தால் பெல்ட் மட்டும் மாற்றினால் போதும்.பெல்ட் டிரைவ் துவைப்பானில் வேகமாக டிரம் சுழலும் போது அதிர்வும்,சத்தமும் கேட்கும் ஆனால் அது ஒரு பெரிய பிரச்சினையல்ல, நீண்ட நாள் உழைப்பதே முக்கியம்.

இப்போது IFB யிலும் டைரக்ட் டிரைவ் துவைப்பான் உள்ளது.

அனைத்து துவைப்பான்களிலும் வாங்கும் போதும் பயன்ப்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை,

தானியங்கி அமைப்பில் எலக்ட்ரோமெக்கானிக்கல் கட்டுப்பாடு ,டிஜிட்டல் கட்டுப்பாடு என இரண்டு வகை இருக்கு. டிஜிட்டல் விலை கூடுதலாக சொல்வார்கள். தேவை ,வசதிக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

நேரம் குறித்து வைத்து துவைக்கும் வசதி போன்றவை எல்லா வகையிலும் இருக்காது தேவை எனில் அவ்வகையினை தேர்வு செய்யலாம்.

#சுடுநீர்/குளிர் நீர் துவைப்பான் தேவைக்கு ஏற்ப வாங்கலாம், அழுக்கு நன்கு போக சுடுநீர் துவைப்பானே சிறந்தது.வெள்ளாவியில் வச்சு வெளுத்தாப்போல இருக்கும், கூடுதலாக வெளுக்க நீராவி துவைப்பானும் உண்டு.

#சலவைத்தூள் ஆக துவைப்பான் சலவை தூள் என எந்த பிராண்ட் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், ஹென்கோ மேட்டிக்,ரின் மேடிக், சர்ஃப் மேட்டிக் என இருக்கு. இது போன்ற வகையில் நுறை குறைவாக வரும், சாதாரண தூள்களில் நுரை அதிகம் வரும் ,எனவே அதனைப்பயன்ப்படுத்தினால் துவைப்பான் அதிக நீர் எடுக்கும்.

#துவைப்பானுக்கு நீர் கொடுக்கும் குழாய் துவைப்பான் உயரத்திலோ அதற்கு மேலோ இருக்க வேண்டும்.

#நீர் வெளியேரும் குழாய் துவைப்பான் அடிமட்டத்தில் இருக்கும், அதனை தாழ்வாக உள்ள வகையில் வைக்க வேண்டும்.உயரம் அதிகமான வகையில் நீர் வெளியேற இணைப்பு கொடுத்துவிட்டால் முழுவதுமாக நீர் வெளியேறாமல் உள்ளே கொஞ்சம் நின்று பின்னர் துர்வாசர் ஆகிவிடும் உங்கள் வாஷர் :-))

#தேவைக்கு ஏற்ப உயரம் கூட்ட ஸ்டேண்ட் பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.பெரும்பாலும் வீட்டில் கிச்சன் சிங்க்,வாஷ் பேசின் அடியில் தண்ணீர் போக உள்ள குழாயுடன் இணைப்பார்கள் எனவே உயரம் பார்த்து இணைத்து கொள்ளவும் அல்லது உயரத்திற்கேற்ப ஸ்டேண்ட் வாங்கிக்கொள்ளவும்.

#சிறிய துணிகள், மென்மையான ,மற்றும் சரிகை, எம்பிராய்டரி துணிகள் துவைக்க ,என தனியே வலைப்போல துவைக்கும் பை என இருக்கு அதில் போட்டு , மூடி பின்னர் துவைப்பானில் போட வேண்டும்.

#குறிப்பாக முன்புற திற துவைப்பானில் கைக்குட்டை போன்றவை போட்டால் ,டிரம் ,கதவு அருகே இருக்கும் இடுக்கில் போய் மாட்டிக்கொள்ளும்.

முக்கியமான குறிப்பு:

மேல்புற திற துவைப்பானை யார் வேண்டுமானாலும் பார்சல் பிரித்து இணைப்பு கொடுத்து இயங்க வைக்கலாம்.

ஆனால் முன் புற திறப்பானை அப்படி செய்ய முடியாது,கூடாது ஏன் எனில்,

கிடைமட்ட டிரம் போக்குவரத்தின் போதும் கையாளும் போது ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும் என ஒரு லாக் அமைப்பாக இரண்டு 6 அங்குல நட் அன்ட் போல்ட் போட்டு முடுக்கி இருப்பார்கள். மேலும் டிரம் சுழலும் போது கவுண்டர் பேலன்ஸ் செய்ய பெரிய சிமெண்ட் பிளாக் ஒன்று டிரம் மீது வைப்பார்கள், அதனை நட் அண்ட் போல்ட் போட்டு இயக்கும் போது தான் முடுக்குவார்கள் அது வரை அது டிரம் மீது தேமே என கிடக்கும்.

எனவே முன்புற திற துவைப்பானை வாங்கி வீட்டுக்கு வந்ததும் ஆர்வக்கோளரில் மின் இணைப்பு கொடுத்து ஓடுதா எனப்பார்க்க முயல வேண்டாம் பின்னர் ஒரே அடியாக ஓடாமல் போய்விடும்:-))


எனவே நிறுவனத்தின் சேவைப்பொறியாளர் வைத்தே இணைப்பு கொடுத்து இயக்க வேண்டும்.

வீடு மாற்றும் போதும் டிரம் சுழலாமல் தடுக்க அந்த போல்ட் போட்டு லாக் செய்துவிட்டே செய்ய வேண்டும், எனவே , துவைப்பானை இயக்கியதும் நட் அண்ட் போல்ட் தேவை இல்லை என தூக்கிப்போடாமல் வைத்திருக்கவும்(சொந்த அனுபவத்தில கத்துக்கிட்ட பாடம் இது)

நாட்டாமையின் நல்லுரை:

மேல்புற திற துவைப்பானை விட துணிகளை அழுக்கு தீர வெளுப்பதில் முன் புற திற துவைப்பானே சிறப்பானது, எனவே அவ்வகையில் சுடு நீர், பெல்ட் டிரைவ் என வாங்குவது நல்லது. அது எந்த கம்பெனியாக வேண்டுமானலும் இருக்கலாம். டிஜிட்டல்,எலெக்ட்ரோ மெக்கானிக்கலில் பெரிதாக வித்தியாசம் இல்லை. டிஜிட்டலில் தான் முன்பதிவு செய்து துவைக்கலாம் ஆனால் அதில் ஒன்றும் பெரிய அனுகூலமில்லை, எப்படியும் துவைத்த துணியை எடுக்க நாம் போய் தானே ஆக வேண்டும்.எனவே கூடுதல் விலை பெரிதில்லை எனில் டிஜிட்டல் போகலாம், இல்லை எனில் எலெட்ரோ மெக்கானிக்கலே போதும்.

தீர்ப்பு : சிறந்த துவைப்பான் தானியியங்கிமுன்புற திற துவைப்பான்.

*****

தமிழில் எழுதினால் அதையே ஆங்கிலத்தில் சொல்லி அது என்னனு கேட்கிறாங்க, எனவே தமிழுக்கு ஆங்கில அகராதியா விளக்கம் கொடுத்து தமிழைக்காப்பாத்திடலாம்னு இந்த ஏற்பாடு.

அருஞ்சொற்பொருள் விளக்கம்:

துவைப்பான் - சலவை எந்திரம், washing machine

முழு தானியங்கி-fully automatic

பகுதி தானியங்கி- semi-automatic

முன் புற திறப்பு- front loading

மேல் புற திறப்பு: toploading

சலவைத்தூள்-washing powder

சுடுநீர் துவைப்பு- hot wash

குளிர் நீர் துவைப்பு- cold wash

செங்குத்து டிரம்- vertical drum

கிடைமட்ட டிரம் -horizontal drum

துவைப்பு பை -wash bag
--------

பின்குறிப்பு:

படங்கள் கூகிள் படங்கள்.நன்றி!


7 comments:

CS. Mohan Kumar said...

நாளைக்கு நம்ம பதிவை ஒட்டி என்ன பதிவு நீங்க போடுறீங்கன்னு பாக்குறேன் :))

நிறைய தகவல் சொல்லிருக்கீங்க

ஒன்னு சொன்னா கோச்சுக்காதீங்க. ஆங்கில வார்த்தை கலப்பு தப்புன்னு எனக்கு தோணலை. நீங்க புது புது தமிழ் வார்த்தை கண்டு பிடிச்சு எழுதும் போது, அதை வாசிக்கும் நேரம் சிரிப்பு தான் செமையா வருது.

பின்பகுதியில் ஆங்கில வார்த்தை கலந்து எழுதும் போது எளிதா புரியுது. முழுதும் அதே நடையில் எழுதினா நல்லா புரியும். இது என் கருத்து மட்டுமே

CS. Mohan Kumar said...

//அவரை போட்டு அமுக்கவும் //

மீ தி பாவம்

ராஜ நடராஜன் said...

அவரை அமுக்க சொன்னதால் அமுக்கிட்டுத்தான் இங்கே வந்தேன்.இரண்டு பேரும் பேசி வச்சிக்கிட்ட்துமில்லாமல் ஆண் குலத்துக்கு தப்பு தப்பா ஐடியா வேறயா!அதுல வேற மோகன் வாரத்துக்கு ஒரு 2 தடவையோ மூன்று தடவையோன்னு ஆடோமெடிக்குக்கு ஐடியா தருகிறார்.அதுவும் சரிதான்.தண்ணீர்க்கு யர்ரு கேரளாக்காரங்கிட்டயும்,கர்நாடக,ஆந்திராகாரங்கிட்டயும் கையேந்தறது.

துவைப்பான் என்றதுமே துவக்கத்துல கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது.அப்புறமா சுதாரிச்சுகிட்டேன்.மோகன் சொல்றாருன்னு நீங்க பாணியை மாற்றிட வேண்டாம்.துவைப்பானே இருக்கட்டும்.

தானியங்கி இய்நதிரத்தில என்ன நன்மைன்னா துணியை உள்ளே அமுக்கி விட்டு தண்ணீரை திறந்து விட்டுட்டா அது கொடுக்குற ஹம்மிங்கில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு விடலாமென்று தானியங்கியை வாங்கிக் கொடுத்தா மெஷின் தானே வேலை செய்யுதுன்னு இருக்குற ஜட்டி பிரா முதற்கொண்டு அடுப்பாங்கரை துணி வரைக்கும் தானியங்கி தொண்டுதான்.

தானியங்கி என்னமோ சத்தமில்லாமல் தொந்தரவு இல்லாமல் நல்லாத்தான் ஓடுது.காசு கணக்கு வித்தியாசமிருக்குதே.அக்கறையா காசு போட்டு இணைப்பெல்லாம் செய்து கொடுத்தா தினமும் துணி துவைச்ச களைப்பில் இரண்டு மூணு வருடத்துக்குள்ளேயே துவைப்பான் மூச்சு விட்டுடுச்சு.மறுபடியும் துவைப்பான் மருத்துவரையெல்லாம் கூப்பிட்டு மூச்சுக்கொடுத்தும் மறுபடியும் அகால மரணமடைஞ்சுருச்சு.இந்த தானியங்கியெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு ஊட்டுக்காரம்மா அவங்களே தொசிபா ஜப்பான்னு வீட்டு மேல் கூரைய பார்க்குற இயந்திரத்தைப் பார்த்து வாங்கி அது அரைக்க இவங்க துணியை நீரில் முக்கியெடுக்க ஆஹா!இப்ப எனக்கு ரொம்ப ஜாலி:)

வவ்வால் said...

மோகன்,

வாங்க,நன்றி,வணக்கம்,

ஆஹா இதுக்குன்னே நாளைக்கு வம்படியா எதவாது எழுதி வைக்க போறிங்கலா?

படிச்சதும் அதுவா தானா தோன்றுது. ஏற்கனவே தெரிஞ்ச விஷயமா இருக்கவே பதிவப்போட்டுவிட்டேன்.

தரவுகளுக்கு தேடக்கூட இல்லை, எழுதிட்டு படத்துக்கு தான் இணையம் போனேன், தேடிப்பார்த்து போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் விவரங்கள் சேர்த்து இருக்கலாம்.

நம்மக்கிட்டே ஒருத்தன் ஒரு பொருளை விக்கணும்னு நினைச்சான்னா அன்று அவனுக்கு எமகண்டம்னே சொல்லிடலாம் :-))

வாஷிங் மெசின் வாங்கின் கதைய சொன்னா செம காமெடியா இருக்கும். யாருக்கு கமெடியா இருக்கும்னு கேட்கக்கூடாது:-))

நானா தமிழில் மட்டும் எழுதணும் ஆங்கில கலப்புக்கூடாதுன்னு எல்லாம் நினைப்பதில்லை ஒரு ஓட்டத்தில வருது,அப்படியே மீண்டும் ஆங்கில வேதாளம் வந்துடுது :-))

உங்களுக்கு பின்னாடி ஒருத்தர் சொல்லுறார் பாருங்க , தமிழிலேயே போட்டு தாக்க சொல்லி :-))
----
வீட்டுக்கு வழி சொல்லவில்லைனு சொன்னிங்களேனு அமுக்கமா வழி சொன்னா இப்படி சொல்றிங்க :--))

----------
ராஜ்,

வணக்கம்,நன்றி!

நீங்க அமுக்கினதில் தான் மி பாவம்னு பொலம்புராங்க போல :-))

கொஞ்ச நஞ்ச வேலையா கொடுத்து இருக்கிங்க துவைப்பானுக்கு , வாய் இருந்தா அழுதிருக்கும். அதான் மண்டைய போட்டுவிட்டது.

முன்புற திறப்பு துவைப்பானா, பெல்ட் டிரைவ் ஆஹ் இருந்தா பழுது பார்த்து நீண்ட நாட்களுக்கு ஓட்டலாம்.3ஆண்டு ஆகப்போகுது இன்னும் ஓடுது எங்க வீட்டுல.

தானியங்கி கொடுத்தா , துவைப்பானில் போட்டுவிட்டு வந்து உங்களுக்கு வேலைக்கொடுப்பாங்கன்னு , மனித இயங்கி துவைப்பான் வாங்கி கொடுத்து வேலை வாங்குறிங்களா :-))

என்ன ஒரு வில்லத்தனம்ம் :-))

தி.தமிழ் இளங்கோ said...

தங்கள் பதிவில் ”வாஷிங் மெஷின்” பற்றி பல உபயோகமான தகவல்கள். வழக்கம் போல நகைச்சுவை உணர்வுடன்.

வவ்வால் said...

தி.த.இளங்கோ,

வாங்க,வணக்கம்,நன்றி!

நகைச்சுவை உணர்வு இருந்தா தான் ,அடுத்தவங்க நகைச்சுவை புரியும், அப்போ உங்களுக்கும் நிறைய நகைச்சுவை உணர்வு இருக்கணுமே, நிறைய பேரு என்னை சீரியஸ் சிங்காரம்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது சிரிப்பு சிங்காரம்னு சொன்னதுக்கு நன்றி!

இதை பார்க்க ராஜ நட வை காணோம்,,மனுஷன் வேக்காடுல வெந்துடுவார் :-))

Unknown said...

மகிழ்ச்சி