Wednesday, July 11, 2012

மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION.

மாட்டு சாணியிலிருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து பெட்ரோல் தயாரிப்பது எப்படினு ஒரு பதிவு போடலாம்னு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது, அந்த நேரம் பார்த்து "மாடு ஏப்பம்" விடும் போதும், காற்றை ஃப்ரியா விடும் போதும் மீத்தேன் வருது என "மாமிச உணவுக்காக மிருகங்கள் வளர்ப்பதால் புவி வெப்பமாகிறது என சகோ.சார்வாகன் ,
சுட்டி பதிவு போட்டுவிட்டார், இனிமேலும் சும்மா இருந்தால் மாட்டு வாயிலும், பின்னாலும் டியூப் சொறுகி மீத்தேன் தயாரிப்பது எப்படினு பதிவு போட வேண்டியதாயிருக்கும் என்பதால் சாண எரிவாயு தயாரிப்பதை பதிவா போட்டுறலாம்னு களம் இறங்கியாச்சு, அடுத்த பாகத்தில் சாண எரிவாயுவை பெட்ரோல் ஆக்கிடலாம் :-))

சாண எரிவாயுவை பொதுவாக கோபர் கேஸ் என்பார்கள், கோபார்(Gobar) என்றால் இந்தியில் மாட்டுசாணம், மாட்டு உரம்(cow manure), எனப்பொருள், நேபாளியிலும் மாட்டுச்சாணம் என்றே பொருள்.

உலகிலேயே அதிக கால்நடைகள் கொண்ட நாடு இந்தியா, 529 million cattles, and 648.8 millions of poultry உள்ளது. ஒரு மாடு தினசரி சராசரியாக 10 -12 கிலோ சாணியிடும்,இது மாட்டின் அளவு, இனம், உண்ணும் உணவுக்கு ஏற்ப மாறுபடலாம்(சிலப்பேர் எங்க வீட்டு மாடு 100 கிலோ சாணிப்போடும் என முட்ட வரலாம்!)

இந்தியாவில் உற்பத்தியாகும் சாணி முழுவதும் மீத்தேன் ஆக்க முடிந்தால் சுமார் 30% எரி பொருள் தேவையை குறைக்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது.மற்ற பயன்ப்பாடுகளை செய்ய கூடுதல் செலவிட வேண்டும், ஆனால் கோபர் கேசினை அப்படியே வழக்கமான கேஸ் ஸ்டவ் மூலம் எரித்து சமையல் செய்ய பயன்ப்படுத்தலாம்,இந்தியாவில் பெரும்பாலும் சமையல் செய்யவே கோபார் கேஸ் பயன்ப்படுகிறது.மேலும் வளி மண்டலத்தில் கலக்கும் மீத்தேனின் அளவும் குறைந்து சுற்று சூழலும் பாதுகாக்கப்படும்.

சாணத்தின் பண்புகள்:

மாட்டு சாணத்தில்,80% நீரும் 20% மட்டுமே திடப்பொருளும் சராசரியாக இருக்கும்,


20% திட சாணத்தில் உள்ள மூலங்களின் அளவு.

நைட்ரஜன்=1.8-2.4 %
பாஸ்பரஸ்=1-1.2%
பொட்டாசியம்=0.6-0.8%

கரிமக்கழிவு=50-75%,

எனவே ஒரு டன் ஈர சாணம் காய்ந்தால் 200 கிலோ எடை மட்டுமே இருக்கும்.

இச்சாணம் காற்றில்லா நொதித்தல் வினைக்கு உட்படும் போது ஒரு வாயுக்கலவை உருவாகும் அதற்கு பெயரே கோபர் கேஸ், இதில் மீத்தேன் பெரும்பான்மையாக இருக்கு.

மீத்தேன்.-68%

கரியமிலவாயு=31%

நைட்ரஜன்ன் வாயு= 1%

பாஸ்பரஸ் சல்பைடு=1%

மீத்தேன் வாயுவின் எரிதிறன்=678 பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்.

கோபார் கேஸ் பிளாண்ட்:

இடம் தேர்வு செய்தல்:

# சமதளமான , தண்ணீர் தேங்காத மேடான இடம்.

#நெகிழ்வான மண் இல்லாமல்,கடினமான மண் கொண்ட தரையாக இருக்க வேண்டும்.
காரணம்: டைஜெஸ்டரில் வாயு உற்பத்தியாகும் போது ஏற்படும் அழுத்தத்தினால் கட்டுமானம் விரிவடையாமல் தடுக்க சுற்றுப்புற மண் அழுத்தமாக உறுதியாக இருக்க வேண்டும்.

# மாட்டு தொழுவத்திற்கும், சமயலைறைக்கும் பொதுவாக அருகாமையான இடமாக இருக்க வேண்டும்.

#நிலத்தடி நீர் அதிகம் ஊறாத இடமாக இருக்க வேண்டும்.

# கிணறு போன்ற நீர் நிலைகளூக்கு அருகமையில் அமைக்க கூடாது.

# நல்ல திறந்த வெளியாக காற்றோட்டம், சூரிய ஒளி படக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.

#அருகில் மரங்கள் இருக்க கூடாது,காலப்போக்கில் மரத்தின் வேர் கட்டுமானத்தில் விரிசல் விட வைக்கும்.

# வேறு கட்டுமான அமைப்பு,சுவர்கள் ஆகியவற்றில் இருந்து போதுமான இடைவெளி விட வேண்டும், குறைந்தது 1.5 மீ இடை வெளி இருக்கலாம்.

சுமார் 10 மாடுகள் கொண்ட குடும்பத்திற்கு தேவையான சாண எரிவாயு உற்பத்தி செய்யும் கலன் அமைப்பதைக்காணலாம்.

பெரும்பாலும் கோபார் கேஸ் சமையலுக்கு பயன்ப்படுத்தப்படுவதால், பிளாண்ட் அமைக்கும் போது சமையலறைக்கு பக்கமாக இடம் தேர்வு செய்தல் நல்லது.

சாணஎரிவாயு கலன் இரு வகையில் அமைக்கப்படும் ,

தரை மட்டத்திற்கு கீழ் மற்றும் மேல் என, இதில் நிலையான வாயுக்கலன், மிதக்கும் வாயுக்கலன் என இரண்டு வகை இருக்கு.

சாண எரிவாயு கலனின் பாகங்கள்:

1)உள்ளீடு தொட்டி(inlet chamber)

2)வெளியேற்றும் தொட்டி(out let chamber)

3) நொதிக்கும் அறை(digester)

4) வாயு சேகரிக்கும் கலன்(gas holding dome)

ஆகியவை இருக்கும்.

பொதுவாக அனைத்தின் செயல் முறையும் ஒன்று போலவே, எனவே இப்போது தரைக்கீழ் , நிலையான வாயுகலன் சாண எரிவாயு அமைப்பினை பார்க்கலாம்.

சாண எரிவாயு கலன் திட்ட வரைப்படம்:10 மாடுகளின் சாணியில் இருந்து சாண எரிவாயு தயாரிக்க சுமார் 100 கன அடிக்கொள்ளவு கொண்ட வாயு சேகரிப்பு கலன் உடைய அமைப்பு தேவைப்படும்.

எனவே சுமார் 5.5 அடி விட்டத்தில் சுமார் 10 அடி ஆழம் உள்ள பள்ளம் வெட்ட வேண்டும்.

அடித்தளம் அமைக்க ஒரு 1 அடி தடிமனில் கான்கிரிட் தளம் அமைக்க வேண்டும், அதில் வட்ட வடிவில் முறுக்கு கம்பிகளை அமைத்து , இணையாக வரிசையாக கம்பி வளையங்களுடன் 10 அடி உயரத்திற்கு ரீ-இன்போர்ஸ்டு கான்கிரிட் சுவர் உருளை வடிவில் அமைக்க வேண்டும்.


செலவினை குறைக்க பொதுவாக செங்கல் கொண்டும் அமைப்பார்கள், மேலே வரும் வாயு சேமிக்கும் டோம் மட்டும் கான்கிரிட்டில் அமைத்துக்கொள்வார்கள்.


நொதிக்கும் தொட்டி/டைஜெஸ்டரின் அளவு வாயு சேகரிக்கும் கலனைப்போல சுமார் 2.75 அளவுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு கன மீட்டர் சாண எரிவாயு சேகரிக்கும் கலனுக்கு 2.75 கனமீட்டர் அளவுள்ள டைஜெஸ்டர் அமைக்க வேண்டும்.எனவே நாம் எவ்வளவு சாணியை தினசரி பயன்ப்படுத்தப்போகிறோம் என்பதை பொறுத்து , சாண எரிவாயு கலனை வடிவமைக்க வேண்டும்..

பெரிய சாண எரிவாயு கலன் அமைத்துவிட்டு , குறிப்பிட்ட அளவை விட குறைவான சாணத்தினை பயன்ப்படுத்தினால் உற்பத்தியாகும் வாயு ,கலனில் குறிப்பிட்ட அழுத்தத்தினை உருவாக்காது, எனவே குழாய் வழியே பயன்ப்பாட்டுக்கு வெளியில் வராமல் கலனிலேயே இருக்கும்.

இத்தொட்டி போன்ற அமைப்பின் மையத்தில் ஒரு பிரிப்பு சுவரும் அமைக்கப்படும், இதன் மூலம் உள்ளீடு தொட்டி ,வெளியேற்றும் தொட்டி என இரண்டு பாகமாக தொட்டியமைந்து விடும்.இத்தடுப்பு சுவர் டைஜெஸ்டர் விட்டம் 1.6 மீட்டருக்கு அதிகமான அமைப்பில் மட்டும் தேவைப்படும், சிறிய அமைப்புக்கு தேவை இல்லை.

இப்படி அமைக்கும் போதே , ஒரு பக்கம் சாணம் இட ,மற்றும் பயன்ப்படுத்தி முடித்த சாணக்கரைசல் வெளியேற குழாய்கள் /கட்டுமான அமைப்பு என பொறுத்திவிடவேண்டும்.இக்குழாய்கள் சாய்வாக,தொட்டியின் அடிப்பாகத்தில் ,ஒவ்வொரு அறையின் மையமாக இருக்குமாறு , தாங்கும் அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.


அரை கோள வடிவிலான கம்பிவலையமைப்பு ,உருவாக்கி கான்கிரிட் டோம் அமைத்தல்.இந்த டோம் போன்ற அமைப்பே சாண எரிவாயு சேகரிக்கும் கலனாக செயல்ப்டுகிறது.இந்த டோம்மில் சாண எரிவாயு வெளியேற வால்வுடன் கூடிய வெளியேறும் குழாய் ,மையத்தில் அமைக்கப்படும்.

video:


காணொளி பார்த்தால் ஓரளவு எப்படி சாண எரிவாயு கலன் கட்டப்படுகிறது என்பது புரிந்துவிடும்.இக்காணொளி உகாண்டாவில் கோபார் கேஸ் பிளாண்ட் அமைக்கப்படுவதை விளக்குவது,அவர்கள் டோம் உட்பட அனைத்தையும் "இண்டர் லாக்கிங்" செங்கல் கொண்டு கட்டி முடித்து விடுகிறார்கள்.

முழுவதும் கட்டி முடித்ததும் சாண எரிவாயு கலனை சுற்றியுள்ள வெற்றிடத்தில் மண்ணிட்டு நன்கு அழுத்தி கடினப்படுத்த வேண்டும்,அப்போது தான் வாயு உற்பத்தியாகும் போது கலன் விரிவடையாமல் தடுக்கப்படும்.

சாண எரிவாயு கலனை இயக்குதல்:

முதல் முறை சாண எரிவாயு உற்பத்தி செய்ய சுமார் 500 கிலோ சாணத்தினை ,திடப்பொருட்கள்,கல் போன்றவற்றை நீக்கிவிட்டு 500 லிட்டர் நீரில் கரைத்து கரைசலாக உள்ளே இட வேண்டும், இந்த அளவு எப்போதும் உள்ளே இருக்கும், இது ஸ்டார்ட்டர் கரைசல் எனப்படும்.

சுமார் ஒரு வாரம் சென்ற பின் ,முதலில் உற்பத்தியாகும் வாயு பெரும்பாலும் கரியமில வாயுவே எனவே அவற்றை திறந்து வெளியில் விட்டு விட வேண்டும், பின்னர் வரும் வாயுவினை சேகரித்துப்பயன்ப்படுத்தலாம்.

தினசரி வாயு உற்பத்திக்கு கலனின் திறனுக்கு ஏற்ப சாணக்கரைசல் இட வேண்டும், 10 கிலோ சாணி எனில் 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்,அதாவது 1:1 என்ற விகிதத்தில் கரைசல் தயாரிக்க வேண்டும். கரைசலை உள்ளீடு தொட்டி வழியாக இட்டு மூடிவிட்டால் சுமார் 4 மணி நேரத்தில் முழு அளவில் சாண எரிவாயு உற்பத்தியாகிவிடும், அதனை குழாய்வழியாக கொண்டு சென்று தேவைக்கு ஏற்ப பயன்ப்படுத்தலாம்.

நொதித்தல் வினைக்கு பின் பயன்ப்படுத்தப்பட்ட சாணி( Humus) ,வெளியேற்றும் தொட்டி மூலம் தானாக வந்துவிடும் அதனை சேகரித்து ,உரமாக பயன்ப்படுத்தலாம்.

கோபார் கேஸ் பிளாண்ட் அமைக்க அரசு "MNRE" மூலம் 25-75% மாநியம் அளிக்கிறது, மேலும் தேசிய வங்கிகள் மூலம் கடனுதவியும் பெறலாம்.ஒரு நடுத்தர கோபர் கேஸ் பிளாண்ட் அமைக்க சுமார் ஒரு லட்சம் வரை ஆகலாம், நமது தேவை மற்றும் கட்டுமானத்தின் தரத்தினைப்பொறுத்து செலவு மாறுபடும்.
தற்போது சின்டெக்ஸ் டேங்க் தயாரிப்பாளர்கள், முழுக்க பிளாஸ்டிக்கால் ஆன சாண எரிவாயு அமைப்பினை தயாரித்து விற்கிறார்கள், அப்படியே வாங்கி ,பள்ளம் வெட்டி புதைத்துவிட்டு பயன்ப்படுத்த வேண்டியது தான்.

இந்த சாண எரிவாயு கலனில் மாட்டு சாணம் மட்டும் அல்லாமல் ,ஆடு,கோழி,பன்றி,குதிரை, என அனைத்து வகையான மிருகக்கழிவுகளும் பயன்ப்படுத்தலாம், ஏன் மனித கழிவுகளும் பயன்ப்படுத்தலாம், நாம் தான் பயன்ப்படுத்த யோசிப்போம்,சீனர்கள் மனிதக்கழிவு மற்றும் கால்நடை கழிவு என இரண்டையும் பயன்ப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாண எரிவாயு கலன் வடிவமைத்துப்பயன்ப்படுத்துகிறார்கள்.

திட்ட வரைப்படம்:


சாண எரிவாயு உற்பத்தி திறன்:

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம்.

ஒரு கன அடி= சுமார் 28 லிட்டர்,

ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,
=10*10= 100 கிலோ
100*28=2800 லிட்டர் சாண எரிவாயு கிடைக்கும்.

ஒரு கன மீட்டர் சாண எரிவாயு ஒரு கிலோ வாட் பவருக்கு சமம் ஆகும், எனவே,

2800 லிட்டர் =2.8 கிலோ வாட்/மணி.

ஒரு குடும்பம் சமைக்க தேவையான எரிவாயு உற்பத்தி செய்ய சுமார் 4-5 மாடுகள் இருந்தாலே போதும்.

10 மாடுகள் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யும் போது உபரியாக வாயு கிடைக்கும் அதனைக்கொண்டு , எரிவாயு விளக்கு எரிக்கலாம், அல்லது மின்சாரம் உற்பத்தி செய்யலாம். சின்டெக்ஸ் நிறுவனமே ஒரு போர்ட்டபிள் சாண எரிவாயு ஜெனெரேட்டரும் விற்கிறார்கள்.மேலும் சாண எரிவாயு உற்பத்திக்கு பின் கிடைக்கும் , சாணம் மிகுந்த ஊட்டச்சத்து மிக்க தொழு உரம் ஆகும். மேலும் பல வகையிலும் சாண எரிவாயுவினை பயன்ப்படுத்த முடியும் ,அதனை விளக்கும் படம்.


சாண எரிவாயுவில் மிகுதியாக மீத்தேனும் , குறைந்த அளவில் பிற வாயுக்களும் உள்ளது. பிற வாயுக்களை நீக்கிவிட்டு அழுத்திய மீத்தேனை வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்தலாம்.
225 கன அடி சாண எரிவாயு ஒரு கேலன் பெட்ரோலுக்கு சமம் என்கிறார்கள், ஒரு மாடு மூலம் ஒரு ஆண்டுக்கு 50 கேலன் பெட்ரோலுக்கு இணையான சாண எரிவாயு உற்பத்தி செய்ய முடியும். எனவே ஒரு வாங்கினால் நமக்கு பால் மட்டும் கொடுக்காமல் 50 கேலன் பெட்ரோலும் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம் :-))

சாண எரிவாயுவை சுத்திகரித்து வாகனத்திற்குப்பயன்ப்படுத்துதல்:

சாண எரிவாயு சுத்திகரித்தல்:

# லைம் வாட்டர் வழியாக சாண எரிவாயுவை செலுத்தி கரியமில வாயு நீக்கப்படும்.

#இரும்புதுகள் வடிக்கட்டி வழியாக செலுத்தி ஹைட்ரஜன் சல்பைடு நீக்கப்படும்.

#கால்சியம் குளோரைடு பில்டர் மூலம் நீராவி/நீர் திவளை நீக்கப்படும்.

சுத்திகரிக்கப்பட்ட சாண எரிவாயுவினை மூன்றடுக்கு முறையில் அழுத்தம் செய்ய வேண்டும்,

முதல் கம்பிரஷரில் 10 கி/ச.செமி என அழுத்தப்படும்,

பின்னர் இரண்டாவது நிலையில் 60கி/ச.செமீ என அழுத்தப்படும்,

மூன்றாவது நிலையில் 250 கி/ச.செமி என அழுத்தி கலனில் சேகரித்து வைக்கப்படும்.


இதனை CNG-Compressed Natural Gas இல் இயங்கும் அனைத்து வாகனத்திலும் செலுத்தி இயக்கலாம். ஏனெனில் பெட்ரோலிய எரிவாயுவில் 80% மீததேனும் இதர பெட்ரோலிய வாயுக்களே உள்ளன.

அடுத்தப்பதிவில் சாண எரிவாயுவில் இருந்து பிரித்தெடுத்த மீத்தேனை பெட்ரோலாக மாற்றுவதைக்காணலாம்.


கூடுதல் தகவல்:

வம்சம் திரைப்படத்தில் கதாநாயகி வளர்க்கும் மாட்டுக்கு "அசின்" என பெயரிட்டு புரட்சி செய்திருப்பார் இயக்குநர் "பாண்டி ராஜ்" அந்த பசு மாட்டு படம் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை,

ஹி..ஹி எனவே இந்த படம் :-))
--------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள், கூகிள், நபார்டு இணையதளங்கள் நன்றி!

*****

13 comments:

Anonymous said...

எங்கயோ நாத்தம் ஜாஸ்தின்னு பார்த்தா...உங்க வீட்டில தானா..

//இந்தியாவில் உற்பத்தியாகும் சாணி முழுவதும் மீத்தேன் ஆக்க முடிந்தால் சுமார் 30% எரி பொருள் தேவையை குறைக்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது//

இடையில் எதோ மானியம்னு கேள்விப்பட்டேன்...
பாப்போம் என்ன பண்றாங்கன்னு...

குரங்குபெடல் said...

அருமையான

உபயோகமான பதிவு . . .

ஆனாலும் அசின் படத்தை

கடைசியல போட்டு உன் வேலைய காட்டிட்டியே அண்ணே

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பதிவு! சாண எரிவாயுக் கலன் இரும்பு தகடுகளை வளைத்துக்கூட அமைக்கலாம்! எங்கள் பக்கத்தில் இப்படி அமைத்துள்ளார்கள்!

ILA (a) இளா said...

சாணி அடுப்புன்னு சொல்லுவாங்க எங்க ஊர்ப் பக்கம். நன் 5-8 படிக்கிற காலத்துல இது ரொம்ப பெரிய அளவுல வீட்டுக்கு வீடு வெச்சாங்க. இப்ப அதெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல. காரணம், மாடுகள் வளர்ப்பது வீட்டுக்கு வீடு கம்மியாகிடுச்சு. குளிர்காலத்துல வாயு வராம இருந்தது, சாணி கரைக்கிறதை ரொம்ப நாத்தம் புடிச்ச வேலைன்னு நினைச்சது, LPGன் வரவு எல்லாம் சேர்ந்து இப்போ இதை இல்லாமலே செய்திருச்சு

வவ்வால் said...

ரெவரி,

வாங்க,நன்றி!

டர்ட்டி ஜாப் னு சொல்வாங்களே அது போல தான்,அதை யாரும் செய்யலைனா மொத்தமா நாறிடும், அதே போல பதிவிலும் சிலதை எழுத ஆள் இல்லை, விவசாயினா கொஞ்சம் நாற்றம் இருக்கத்தான் செய்யும் :-))

மாநியம் பத்தி சொல்லி இருக்கேனே, 25-75% வரைனு, வருமான நிலை மற்றும் பழங்குடியினர் ,பட்டியல் இனத்தவர் போன்ற அளவுகோளின் அடிப்படையில் மாநியம் மாறும். அனைவருக்கும் குறைந்த பட்சம்ம் 25% மாநியம் உண்டு.

-------
கு.பெ,

வாரும்,நன்றி!

என்னையா செய்ய சினிமாவிலும் மசாலா கேட்கிறாங்க, பதிவிலும் கேட்கிறாங்க, ஆனாலும் பொறுத்தமா தகவல் சேர்த்து போட்டு இருக்கோம்ல :-))

---------
சுரேஷ்,

வாங்க,நன்றி!

இரும்பு தகடு வைத்து ,மிதக்கும் வாயு சேம கலன் வகை செய்வாங்க, இப்போ தகடுக்கு பதில பிளாஸ்டிக் டேங்க் பயன்ப்படுத்துறாங்க, சாணியில் பயன்படுத்தும் போது உலோக தகடு துருப்பிடித்து ஓட்டை விழும். ஆனால் மலிவான ஒன்று, எனவே சிக்கனமாக சிறிய அளவில் செய்யும் போது இரும்பு தகடு பயன்ப்படுத்துவதுண்டு.

-----
இளா,

வாங்க,நன்றி!

அதே தான் .இப்பவும் நிறைய இடங்களில் இருக்கு.மாட்டுப்பண்ணைகளில் நிறைய வைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் மாட்டுப்பண்ணைகளில் இது கட்டாயம் என கேள்வி.

குளிர் காலங்களில் வெப்ப நிலை குறைவதால் நொதித்தல் தடைப்படும், அதற்கு தான் சூரிய ஒளி படும் இடத்தில் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்.70 டிகிரி வெப்பம் வேண்டுமாம்.மேலும் வாயு சில சமயங்களில் வராமல் போக சரியான அளவு சாணி இடாமல் இருப்பதாலும், உள்ளே இருக்கும் சாணி கட்டி தட்டிபோனாலும் வாயு வராது.

மாநிய விலையில் அமைக்கும் போது ,சில என்.ஜி.ஓ மூலம் தான் அமைக்க சொல்வார்கள்,தரம் குறைவாக அமைப்பார்கள்,அதனாலும் வாயு உற்பத்தி சரிவர நடக்காது.

கிராமத்தில எப்படியும் சாணியல்ல தானே போகிறார்கள், வரட்டி எல்லாம் தட்டுவார்களே, கரைக்க மட்டும் நாறுதா?

எல்பிஜி எல்லாம் இருக்கு தான் ,ஆனால் அதனை இறக்குமதி செய்யணுமே, அதற்கு வீணாகும் சாணியைப்பயன்ப்படுத்தலாம், மேலும் மீத்தேன் வெளியேற்றம் குறையும்.

ராஜ நடராஜன் said...

நீங்களும் என்னை அரபிக்காரன்கிட்டயேருந்து துரத்திவிட ரொம்பத்தான் முயற்சி செய்றீங்க!

நீங்க இதுவரை சொல்லி வந்த மாற்று எரிபொருள் திட்டங்கள் பாதியளவு செயல் வடிவத்துக்கு வந்தாலும் கூட ஓரளவுக்கு பெட்ரோலியத்துக்கு மாற்று எரிபொருள் சுயபூர்த்தி வந்து விடும்.

naren said...

வவ்வால்..ம்மாஆஆஆஆஆ..நன்றி.

கிராமங்களில் ஒரளவு பிரபலமடைந்த பிரபலமாகி கொண்டிருக்கும் திட்டம் என நினைக்கிறேன். அங்கே நெறைய இந்த மாதிரி தொழிற்சாலைகளை)) பார்க்க முடிகிறது.

சாணியில் இவ்வளவு விஷயங்களா.
தொல்லைக்காட்சி வரும் முன்னர், வானொலியில் இதை பற்றி நெறைய நிகழ்ச்சிகள் வரும். அது மாதிரியே பதிவு இருக்கு.

கிராமத்தில் இருக்கும் மக்கள் எல்லாம் நகரத்தை நோக்கி ஓடுஓடோடி அலை அலையாய் வந்துக்கொண்டிருக்கும்போது, கிராமத்தில் செட்டிலாகும் போது இத்திட்டம் கைகொடுக்கும்,

நம்ம சென்னை மாநகராட்சி நிலத்தடி கழிவுநீர் குழாய்களில் Gobbar Gas தயாரித்து அப்படி வீட்டுக்கு திருப்பி விடும் திட்டம் ஏதாவது கண்டுபிடித்தால், அந்நபருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்க சிபாரிசு செய்யலாம் என இருக்கிறேன்.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

எங்கே கொஞ்ச நாளா காணோம், ஒட்டகம் பிரச்சினை செய்யுதோ?

உங்களை நம்பி தான் அரபு உலகமே இருக்கு, நீங்களா போறேன்னு சொன்னாலும் விட மாட்டாங்க,கவலைப்படாதிங்க, எனக்கு மட்டும் மலிவு விலையில பெட்ரோல் கொடுக்க சொல்லுங்க போதும் :-))

சீனாக்காரன் நம்மளை எல்லாத்திலும் முந்திக்கிட்டு போறான்னு நபார்டு இணையத்தளத்திலயே போட்டு இருக்கான், இந்தியாவில 27 லட்சம் கோபார் கேஸ் பிளாண்ட் இருக்காம், சீனாவில் 67 லட்சம் இருக்காம். அவங்க நோக்கமே வீட்டு உபயோகத்திற்கான எரிப்பொருள் தேவையை மாற்று எரிப்பொருள் மூலமாக பூர்த்தி செய்துவிட்டு ,பெட்ரோல்.நிலக்கரியை தொழில் உற்பத்திக்கு பயன்ப்படுத்து தானாம்.

உலகத்திலேயே அதிக பன்றி வளர்ப்பது சீனாவில், எனவே அவர்கள் பன்றி கழிவை வைத்து ,மீத்தேன், மின்சாரம் எடுக்கிறார்கள், கூடவே மனிதக்கழிவையும் சேர்த்து செய்யுறாங்க :-))

நம்ம நாட்டில் நாங்களும் முயற்சிக்கிறோம் என சொல்லிக்கொள்ள செய்கிறார்கள் போல.

-----
நரேன்,

வாரும், நன்றி! என்ன உணர்ச்சி வசப்பட்டிங்க போல :-))

அரசு ஊடகமான வானொலி, தூர்தர்ஷனில் இப்போவும் இது போல ,நிகழ்ச்சிகள் ஓடுது.மற்ற சேனல்களில் எப்போதும் சீரியல்களும், இடைவெளிகளில் நாபிக்கமல பாடல்களுமே :-))

சாக்கடையில் இருந்தும் மீத்தேன் உற்பத்தி செய்கிறார்கள், அமெரிக்க பாதாள சாக்கடை திட்டங்கள் பெரும்பாலும் அப்படி ஏதோ ஒன்று செய்கிறார்கள். நகரக்கழிவுக்கு நைட் சாயில்(night soil) என்று பெயர்.பெங்களூரில் நைட் சாயில் இருந்து methene & உரம் தயாரிக்க ஒரு திட்டம் போட்டு கொஞ்ச நாளில் மூடிவிட்டார்கள் எனக்கேள்வி.

பாதாள சாக்கடை நீரை சுத்திகரிப்பதை விட , மீத்தேன் தயாரிக்க செலவு குறைவாகவே ஆகும், ஆனால் நம்ம ஊரில் கூவத்தில் கலக்க விட்டு கடலுக்கு அனுப்பிவிடுவதால்,சுத்திக்கரிக்க "ஸீரோ பைசா" செலவே :-))

Unknown said...

மிக அருமையான பதிவு நண்பரே!! எங்கள் வீட்டிலும் இதுபோன்ற கலன் அமைத்து கிட்டத்தட்ட 15 வருடங்களாக பயன்படுத்தி வந்தோம். இடையில் எரிவாயு கிடைக்காமல் ஏதோ குளறுபடி ஆக, அதை கவனிக்காமல் விட்டுவிட்டோம்.

இப்போது அதை மீண்டும் சரி செய்து பயன்படுத்த எண்ணம். ஆனால் இந்த எரிவாயுக் கலனை கட்டி கொடுக்கும் நிறுவனம் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அப்படி யாராவது இருந்தால், அவர்களைப் பற்றிய தகவல் கிடைக்குமா??

முடிந்தால் அதை ஒரு பதிவாகவே எழுதலாமே!!!

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!!

வவ்வால் said...

யாவரும் நலம், வெங்கட்,

நன்றி!

உங்க பின்னூட்டமே கவனிக்கவில்லை, பதிவு போட்டு கொஞ்ச நாள் ஆச்சுன்னா திரும்ப பார்ப்பதில்லை ...ஹி...ஹி.

இப்போ சுட்டி கொடுக்கலாம்னு இந்தப்பக்கம் வரும் போது தான் தெரியுது.

எந்த ஊரில் இருக்கிங்களோ, அருகாமையில் உள்ள block development office" (BDO)போனால் மாநியத்துடன் கட்ட விவரம் கிடைக்கும். அல்லது மாநியம் இல்லாமல் கூட கட்டமைக்கும் நிறுவனம் பற்றி விவரம் கேட்கலாம். வழக்கமான கொத்தனாருக்கே அனுபவம் இருந்தா கட்டிடுவார்.

இல்லை எனில் சிண்டெக்ஸ் நிறுவனத்தில் முன்னரே ஆர்டர் கொடுத்தால் கிடைக்கும் எனக்கேள்வி, வாங்கி ,பள்ளம் வெட்டி புதைப்பது மட்டுமே வேலை, ஒரு பிளம்பர் வைத்து இணைத்துவிடலாம்.

மேலும் விவரம் கிடைத்தால் சொல்கிறேன்.

Unknown said...

மிக்க நன்றி வவ்வால்..!!

தி.தமிழ் இளங்கோ said...

தேவை: பயோகேஸ் சிலிண்டர்கள் என்ற எனது பதிவில் உள்ள எனது மறுமொழியைப் பார்த்தீர்களா? http://tthamizhelango.blogspot.com/2013/03/blog-post_4.html

தி.தமிழ் இளங்கோ said...
மறுமொழி > வவ்வால் said...
வவ்வால் அவர்களின் வருகைக்கு நன்றி!

// பயோ கேஸ் என்பதில் இரு வகை இரூகு, மாட்டு சாணத்தில் இருந்து கோபார் கேஸ்/சாண எரிவாயு, தாவரக்கழிவில் இருந்தும் தயாரிக்கலாம். //

இந்த பதிவை எழுதுவதற்கு முன்னர் உங்கள் ஞாபகம்தான் வந்தது. உங்களிடம் சொல்லி பயோ கேஸ் சிலிண்டர்கள் ( அதில் எந்த எரிவாயு இருந்தால் என்ன? சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு நுகர்வோரை அடைய வேண்டும்) பற்றி புள்ளி விவரங்களோடு எழுதச் சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தேன். LPG முறையில் உள்ள MONOPOLY நீங்கினால் நல்லதுதானே!
4 March 2013 17:42


NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Corporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace