Thursday, August 16, 2012

மசாலா மர்மங்கள்.(food adulteration)


இந்தியா பரந்து விரிந்த, பல கலாச்சாரங்களை கொண்ட ஒரு ஒருங்கிணைந்த நாடு, மக்களின் மொழி ,இனம் என வேறுப்பட்டிருப்பதை போல அவர்களின் உணவுப்பழக்க வழக்கங்களும், உணவும் வேறுப்பட்டே இருக்கிறது, உணவின் பெயர், செய்முறை என பல வேறுப்பட்டாலும் அனைத்து உணவுக்கும் மூலப்பொருட்களும், அதில் சேர்க்கப்படும் வாசனை ,மற்றும் சுவையூட்டி, நிறமி ,மசாலாக்கள் ஆகியவை ஒன்றாகவே இருக்கும்.

உணவு தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள், மசாலா,நிறமி,சுவையூட்டிகள் பொதுவாக விலை அதிகம் என்பதால் மலிவான மற்றும் தரக்குறைவான , தீங்கு விளைவிக்கும் பொருட்களை கலநது விடுகிறார்கள்.மேலும் கலப்படங்களை எளிதாக அடையாளம் காணவும் ,சிலவற்றை தவிர்த்தலும் நமது உடல் நலனுக்கு உகந்தது.

உணவுக்கலப்படங்களை வெளிச்சம் போட்டும் காட்டுவதோடு அவற்றினை அடையாளங்காணவும், தவிர்க்கவும் சில வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

பால்:



அனைவரும் அருந்தும் ஒரு இயற்கையான உணவு. இதிலும் கலப்படம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் தண்ணீர் கலந்து விடுவார்கள். அது கூட பரவாயில்லை உறைகளில் அடைக்கப்பட்ட பாலே அதிகம் இப்போது பயன்ப்படுத்தப்படுகிறது, அவற்றில் நன்கு திக் ஆக இருக்க தாவர "ஸ்டார்ச்" கரைசலை கலக்கிறார்கள். மைதா மாவு போன்றவையே ஸ்டார்ச்.சில சமயங்களில் சோயா பாலையும் கலப்பதுண்டு.

மேலும் செயற்கை பாலும் கலக்கப்படுகிறது, இது சலவைத்தூள், யூரியா கொண்ட கலவையால் செய்யப்படுகிறது இதனை ஆய்வகத்தில் தான் கண்டறிய முடியும் என்பதால் எளிதில் கண்டறிய முடியாது.

மேலும் மெலாமைன் எனப்படும் பிளாஸ்டிக் வேதிப்பொருளையும் கலக்கிறார்கள், இது யூரியாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இதனை கொண்டு உடையாத பிளாஸ்டிக் தட்டு, கிண்ணங்கள் தயாரிக்கிறார்கள். இதில் மிக அதிக புரோட்டின் மூலக்கூறும், நைட்ரஜனும் இருப்பதால் வெண்ணை எடுக்கப்பட்ட நீர்த்த பாலை கெட்டியாக காட்ட சேர்க்கிறார்கள்.

உடல் எடைக்க்கூட்டப்பயன்ப்படும் ஊட்டச்சத்து மாவு, பால் பவுடரில் மெலமைன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குழந்தைகள் உணவு, பால்ப்பொருட்களில் மிக அதிக மெலமைன் கண்டறியப்பட்டுள்ளது.

2008 இல் சீனாவிலேயே இப்படிக்கலப்பட பால் பொருட்களை தயாரித்தற்காக மரணத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மெலாமைன், யூரியா கலப்பட பால் தொடர்ந்து அருந்தி வந்தால் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது,மேலும் சீரணக்கோளாரு இன்ன பிற உபாதைகளும் வரும்.

சோதனை:

நீர் கலந்த பாலை லேக்டோ மீட்டர் மூலம் கண்டறியலாம். அனைவரிடமும் அக்கருவி இருக்க சாத்தியமில்லை. இதனை மாற்று வழியில் கண்டுப்பிடிக்கலாம், பாலின் அடர்த்தி எண் 1.026 ஆகும் அதாவது நீரை விட அடர்த்தியானது. ஒரு லிட்டர் நீர் ஒரு கிலோ.கிராம் இருக்கும். ஆனால் ஒரு லிட்டர் பால் 1கிலோ 26 கிராம் இருக்க வேண்டும், ஹி..ஹி எடைப்போட்டு கண்டுப்பிடிங்க :-))

#ஸ்டார்ச் கலந்த பாலை அயோடின் சோதனை மூலம் கண்டுப்பிடிக்கலாம், கொஞ்சம் பாலைக்கொதிக்க வைத்து ஆறிய பின் சில துளிகள் அயோடின் சேர்த்தால் பால் நீல நிறமாக மாறினால் ஸ்டார்ச் உள்ளது என்பதை அறியலாம்.

ஐஸ்கிரீம்:

இதில் நன்கு நுரைப்புடன் மென்மையாக வர வேண்டும் என சலவைத்தூள் சேர்க்கிறார்கள், இதனைக்கண்டறிய சிறிது எலுமிச்சம் சாறு விட்டால் நுரையுடன் பொங்கினால் சலவைத்தூள் கலப்படம் ஆனப்பொருள் ஆகும்.

கடுகு:


கடுகில் ஆர்க்கிமோன் விதைகளை கலந்து விடுவார்கள். இவ்விதை பக்கவாதம் உண்டாக்க கூடியது.

சோதனை:

ஆர்க்கி மோன் விதைகள் மேல் மெல்லிய சுருக்கம் இருக்கும். மேலும் நசுக்கினால் உட்புறம் வெள்ளையாக இருக்கும், கடுகின் உட்புறம் இளம்மஞ்சளாக இருக்கும்.

சீரகம், கருஞ்சீரகம், நற்சீரகம்:

காட்டுப்புல்லின் விதைகளை கலந்துவிடுவார்கள், மேலும் கருஞ்சீரகத்தில் காட்டுப்புல்லின் விதையில் கருப்பு சாயம் தோய்த்து கலப்பார்கள்.

சோதனை:

தண்ணீரில் சிறிதளவு சீரகம் போட்டால் சாயம் போகும்,கையால் அழுத்தி தேய்த்தாலும் சாயம் ஒட்டும். மேலும் புல்லின் விதைகள் மேலே மிதக்கும்.

மிளகு:

மிளகில் ,பப்பாளி விதைகளை கலப்பார்கள், மேலும் மினரல் ஆயிலால் பாலிஷ் செய்து விற்பார்கள்.

சோதனை:

நீரில் சிறிது மிளகைப்போட்டால் பப்பாளி விதைகள் மிதக்கும்.

மஞ்சள்:

இப்பொழுதெல்லாம் மஞ்சள் தூளாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது, இவற்றில் மஞ்சள் தூளோடு பிற மலிவான தானியங்களின் மாவு கலக்கப்ப்படும், குறிப்பாக ராகி, கம்பு மாவு கலந்துவிடுவார்கள், நிறத்தினை அதிகரிக்க "லெட் குரோமேட் "என்ற நிறமியை சேர்ப்பார்கள்.

மஞ்சள் கிழங்கிலும் லெட் குரோமேட் கொண்டு வேகவைக்கும் போதே நிறம் சேர்க்கிறார்கள்.

சோதனை:

நீரில் கலப்பட மஞ்சள் தூளைக்கரைத்தால் நல்ல நிறம் கொடுக்கும், மேலும் மாவு போன்றவை வெண்மையாக அடியில் தங்கும்.

மேலும் உறுதி செய்ய கொஞ்சம் எலுமிச்சம் சாறு சேர்த்தால் நீலம்/ ஊதா நிறமாக கரைசல் மாறும்.

கொத்தமல்லி தூள்:

இதில் மரத்தூள், தவிடு, மற்றும் உலர்ந்த மாட்டு சாணி கலக்கப்படுகிறது.

சோதனை:

நீரில் கரைத்தால் மரத்தூள்,தவிடு மேலே மிதக்கும், மேலும் சாணிக்கரைந்து துர்நாற்றம் வரும்.

மிளகுத்தூள்;

இதில் கொத்தமல்லி தூள், பிறத்தானிய மாவு சேர்க்கப்படுகிறது.

சோதனை:

சுவை மற்றும் வாசனை மூலம் மட்டுமே அறிய முடியும் அல்லது நுண்ணோக்கி மூலம் காண வேண்டும்.

பச்சைப்பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் காய்கள்:



பசுமையாக இருப்பதாக காட்ட மாலச்சைட் கிரீன்(Malachite Green ) எனப்படும் பச்சை நிறமியில் தோய்த்து விற்கிறார்கள்.

சோதனை:

வெள்ளைநிற ஈரத்துணியால் துடைத்தால் சாயம் ஒட்டும்,தண்ணீரில் அலசினாலே நிறம் போவதனைக்காணலாம், இதுவும் கேன்சர் உண்டாக்கும் நிறமியாகும்.

தற்போது மல்லிகைப்பூக்களுக்கும் பச்சை சாயம் பூசப்படுகிறது :-))

கிராம்பு ,ஏலக்காய்:

இவற்றில் இருந்து எண்ணையை எடுத்துவிட்டு வெறும் சக்கையை மட்டும் விற்கிறார்கள், எண்ணை எடுக்கப்பட்ட கிராம்பு,ஏலக்காய் உடன் கொஞ்சம் நல்லவற்றையும் கலந்து விற்கிறார்கள்.

வாசனை, சுவை மூலம் மட்டுமே இதனைக்கண்டுப்பிடிக்க முடியும்.

மிளகாய்த்தூள்:


இதில் செங்கல் தூள், சோப்பு கல் எனப்படும் சுண்ணாம்புக்கல் தூள், மேலும் மரத்தூள் , தவிடு என நன்கு அரைத்து கலந்துவிட்டு "சூடான் டை" எனப்படும் சிவப்பு நிறமியை சேர்த்து ரத்த சிவப்பில் மிளகாய்த்தூள் விற்கிறார்கள்.

சோதனை:

தண்ணீரில் கரைத்தால் நிறம் போகும், மேலும் கலப்படங்கள் வெள்ளையாக அடியில் தங்கும்.

கடந்தாண்டு பல பிரபல நிறுவனங்களின் மிளகாய்த்தூள் அமெரிக்காவில் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது.

(அரசின் நோட்டீஸ்)

மேலும் கேரளாவில் ஈஸ்டர்ன் மசாலா தயாரிக்கும் மிளகாய்த்தூளில் சூடான் டை கலப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு அவர்கள் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வைத்திருந்த மொத்த சரக்கும் அழிக்கப்பட்டது. சூடான் டை எனப்படுவது துணிகளுக்கு சாயமேற்றப்பயன்ப்படுவது, உணவில் கலந்தால் கேன்சர் வரும் என தடை செய்யப்பட்டது.

ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்தில் ரெய்டு நடத்தி மிளகாய்த்தூளை அழிக்கும் காட்சி:


ஆனால் பின்னர் ஈஸ்டர்ன் மசாலா நிறுவனம் அப்படி எதுவும் நடக்கவில்லை ,என அதிகாரிகளை சரிக்கட்டிவிட்டு மறுப்பு செய்தி அறிவிப்பு வெளியிட்டார்கள் எனவும் தகவல்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

சுவீட் எடு கொண்டாடு:


கேசரி, லட்டு ஆகியவற்றில் சிவப்பு நிறத்திற்காக கேசரிப்பவுடர் எனப்படும், மெட்டானில் எல்லோ நிறமியே பயன்ப்படுகிறது. இதுவும் ஒரு கேன்சர் உருவாக்கும் ஒரு இரசாயன நிறமி ஆகும்.

உண்மையான கேசரிப்பவுடர் என்பது குங்குமப்பூவின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவது, பூவின் மகரந்த இழைகளே குங்குமப்பூ என பயன்ப்படுவது, எனவே மற்றப்பாகங்களை பொடியாக அரைத்து செய்யப்படுவது கேசரிப்பவுடர் ஆகும் , இதனை தண்ணீரில் பவுடரை போட்டதும் நிறம் மாறாது , கொதிக்க வைத்தால் மட்டுமே நிறம் கொடுக்கும். இது விலை அதிகம் என்பதால் சிவப்பு நிறமியை பயன்ப்படுத்துகிறார்கள்.



அனைத்து இனிப்பகத்திலும் தெரிந்தே கலந்து தயாரிக்கிறார்கள், நாமும் தெரிந்தே லட்டு ,கேசரி என சாப்பிடுகிறோம்.

மேலும் இந்த கேசரிப்பவுடர் பாதாம் பால் என கடைகளில் விற்கப்ப்படும் பாலிலும் கலக்கப்படுகிறது.



மெட்டானில் எல்லோ நிறமி , தந்தூரி சிக்கன்,பஜ்ஜி,பிரியாணி,காரக்குழம்பு, முறுக்கு, என சிவப்பு நிறம் தேவைப்படும் அனைத்து உணவுகளிலும் வியாபாரிகளால் கலப்பட்டு விற்கப்படுகிறது.


வெள்ளித்தாள் இனிப்பு:



பல வட இந்திய இனிப்புகளில் வெள்ளி பூச்சு இருக்கும் , இந்த வெள்ளியிலும் கலப்படம் உண்டு, உண்மையான வெள்ளி விலைக்கூட என்பதால், அலுமினியம், ஈயம், குரோமியம் கலந்து விடுகிறார்கள், மேலும் இதற்கு பயன்ப்படும் வெள்ளி கழிவு சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் வெள்ளியாகும். எனவே 100% தூய்மையான வெள்ளியாக இருக்க வாய்ப்பே இல்லை.

இப்படிப்பட்ட கலப்பட வெள்ளியால் மூளைப்பாதிப்பு,நரம்புக்கோளாறு, வாதநோய்கள் வரலாம்.

இதில் இன்னொரு தீங்கு என்னவெனில், இவ்வெள்ளித்தாள் தயாரிக்கும் முறையாகும்.

மாட்டின் குடலை வெட்டி சிறுத்துண்டுகளாக்கி ஒரு புத்தகம் போல் தயாரித்து ஒவ்வொருப்பக்கத்திலும் சிறு துண்டு வெள்ளியை வைத்து அதன் மீது சுத்தி/ மரசுத்தி வைத்து அடித்து தட்டி தட்டி மிக மெல்லிய வெள்ளித்தாள் ஆக்குவார்கள்.


இப்படி தயாரிக்கும் போது மாட்டுக்குடலின் சிறுப்பகுதிகள் ,இரத்ததுளிகள், வெள்ளித்தாளில் ஒட்டிக்கொண்டுவிடும், எனவே வெள்ளித்தாள் போர்த்திய இனிப்புகள் சைவம் அல்ல என இஸ்கோன் தளத்திலும் போட்டிருக்கிறார்கள்.

To know more about silver foil click the link:
இன்னும் சிலக்கலப்படங்கள் இருக்கிறது, முடிந்தால் பிறகுப்பார்ப்போம்.

---------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி:

கூகிள்,விக்கி,யூடூயூப்,தி இந்து, டெக்கான் கிரானிக்கில், அக்மார்க் இணையத்தளங்கள் நன்றி!

*********

27 comments:

குட்டிபிசாசு said...

Adultration ---
…Adulteration இந்த பின்னூட்டத்தை வெளியிடத்தேவையில்லை.

Anonymous said...

பிரியாணியில் பாஸ்மதிக்கு பதில் நூடுல்ஸ்..

naren said...

வவ்வால்,

உயிரோடிருப்பவர்களில் கவிதை எழுதுவது யாராக இருந்தாலும் எனக்கு புடிக்காது.))) உங்களுக்கு ஒரு விதிவிலக்கு, பாரதியின் மீசையாக இருப்பதால்.

சாப்பாடே சாப்பிட வேண்டாம்ன்கிரீங்களா??

adulterated சாப்பிட்டால், வாலிப வயோதிகர்களுக்கு, ஆண்மைதன்மை போயி "adult"ration, ரேஷண் கடைபோல மட்டதன்மை ஆயிடுமோ??

ராஜ நடராஜன் said...

பதிவு போட்டுட்டு கூடவே தரமான பேதி மருந்து எங்கே கிடைக்குமென்றும் போட்டிருக்கலாம்.சாக்லெட்,மாம்பழம் பழுக்க வைக்கும் நவீன முறைகளையும் சேர்த்திருக்கலாம்.

அக்மார்க்,ஐஎஸ்ஓ போன்ற முத்திரைகள் இது போன்ற சமூக குற்றங்களை தடை செய்யவே நியமிக்கப்பட்டது. இன்னும் இருக்குதா அல்லது ஒப்புக்கு சப்பாணியா?

இவ்வளவு தில்லு முல்லுகள் செய்தும் எதிர்த்துப் போரிடும் மனித உடலின் சாகசம் வியப்புக்குரியதே!

இனி உங்களுக்கு ஒரு எலிப்பொறி.
அமெரிக்காவைப் பாரு,ஐ.நாவைப் பாருங்கிற மாதிரி நீங்க சீனாவைப் பாருன்னு முன்னாடி சொன்னது நினைவு வருகிறது.குழந்தைகள் அருந்தும் பாலில் பீங்கான் தயாரிக்க உதவும் மெலாமைன் கலந்து விற்கிற அளவுக்கு சீனா உசத்திதான் இல்ல.

கோவை நேரம் said...

அப்போ...பிரபல தயாரிப்புகள் ஆன மசாலா பொடிகள் அனைத்துமே சோதனை செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்..
ஆச்சி, சக்தி, இன்னும் பிற நிறுவனங்கள் எல்லாம் இப்படித்தானா கலப்படம் செய்கின்றன..?ரெடி மிக்ஸ் புளியோதரை, எலுமிச்சை சாதபொடி, பிரியாணி மிக்ஸ் இதெல்லாம் கூட இருக்கலாம் தானே..?

குட்டிபிசாசு said...

@வவ்வால்,

…நிறைய விடயங்கள் ஒரே பதிவில்.

…2008ல் சீனாவில் நடந்த பால் சம்பந்தப்பட்ட ஊழலால் சீனாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பலர் பாதிக்கப்பட்டனர். சீனாவின் மெலமின் உபரியாக நின்றதன் விளைவு இது. பல நாடுகள் சீனாவிடம் இருந்து பால் இறக்குமதியை நிறுத்திவிட்டனர். சீனாவும் கண்துடைப்புக்காக இருவருக்கு மரண தன்டனை விதித்தது. தற்போது சீனாவில் இணையத்தில் "பால் ஊழல்" என்று தேடினால் தரவுகள் கிடைக்காதபடி முடக்கியுள்ளது.

…//அமெரிக்காவைப் பாரு,ஐ.நாவைப் பாருங்கிற மாதிரி நீங்க சீனாவைப் பாருன்னு முன்னாடி சொன்னது நினைவு வருகிறது//

…அது ஒரு ஒப்பீட்டுக்காகத் தான் அவ்வாறு கூறினார். சீனாவுக்கு கொடி பிடிக்க வேறு ஆட்கள் உண்டு.

…மேற்கத்தியநாடுகளில் தவறு ஏற்பட்ட பொருட்களை Recall என அறிவித்து அனைத்து பொருட்களையும் திரும்பப்பெறுகிறார்கள். நம் நாட்டில் அப்படி ஒரு விடயத்தையே மக்கள் கேள்விபட்டிருப்பார்களா? என்பது சந்தேகமே?

…பொருட்கள் கலப்படம் தவிர்த்து... சல்மொனெல்லா, இ.கோலி போன்ற நோய் ஏற்படுத்தும் பாக்டிரியாக்களின் ஆபத்து வேறு இருக்கின்றது.

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

வாங்க,நன்றி!

தலைப்பை திருத்திட்டேன், ஹி...ஹி பதிவை போட்டுவிட்டு பின்னர் கடைசியில் ஆங்கிலத்தினை சொறுகப்போனதன் விளைவு, நம்ம கடையில வடிக்கட்டி இல்லை ,எது போட்டாலும் உடனே வரும்னு தெரியாதா?

ஆமாம் சீனப்பொருட்களால் உலக அளவில் பிரச்சினை ஆச்சு, ஆனால் கண் துடைப்போ என்னவோ தண்டனைக்கொடுத்தாங்களே.

மேலும் அமெரிக்காவிலும் மெலமைன் கலப்பு உண்டு FDA 2.5% வரைக்கும் மெலாமைன் கலக்கலாம்னு விதி வைத்திருப்பதே காரணம், அமெரிக்க பால் தயாரிப்புகளில் சுமார் 10% வரைக்கும் மெலாமைன் கலப்பு இருக்கிறதாம் அதுவும் பேக்கேஜெடு பாலில் தான் அதிகம் என இணையத்தில் தகவல் இருக்கு.

அமெரிக்கா போன்ற கட்டுப்பாடானா நாட்டிலே இதன் நிலை எனில் நம்ம நாட்டில் என்னவெல்லாம் கலப்பார்கள் மாட்டினாலும் பெரிதாக தண்டனை இல்லை. உதாரணம் ஈஸ்டர் மசலாவே சொல்லலாம்.

நீங்களே ராஜ நடராஜருக்கும் பதில் சொல்லிவிட்டிங்க, நன்றி! ஒரு உதாரணம் சிலவற்றுக்கு ஒப்பிட்டு சொன்னால் எல்லாதுக்கும் அதனை எப்படி பொருத்தி பார்க்க முடியுதோ?

-------------
அனானி,

வாங்க,நன்றி!

அப்படிக்கூட செய்யலாம ,நூடுல்ஸ் போட்டால் தெரியாதா?
--------------------
நரேன்,

வாரும்,நன்றி!

நாம என்ன சாப்பிடுகிறோம் அதில் பாதிக்கு மேல் தீங்கான கலப்படமே, நாயர் கடை பஜ்ஜி ,போண்டாவில் யார் கேசரி பவுடர் கலக்க சொல்கிறார்கள், எண்னை வேறு பழைய எண்ணை ,எல்லாம் கண்ணால் பார்த்தாலும் சாப்பிடத்தானே செய்கிறோம்.

பெரும்பாலான ஹோட்டல்களில் தேங்காய் புண்ணாக்கு சட்னி தான்,சரி அதுவாவது ஒரு உணவு, என விடலாம். நம் நாட்டில் வாழணும் என்றால் எதையும் தாங்கும் இதயமும் எதையும் செரிக்கும் வயிறும் வேண்டும் சாமி :-))

ஹி...ஹி "இந்த உடம்புக்கு எந்த விஷமும் ஏறாது" எவ்வளோ பார்த்தாச்சு என நான் சொல்லிவிட்டே சாப்பிடுவேன் :-))
(இவரு பெரிய படையப்பரு)

அடல்ட் ஜோக்கு எதுவும் சொல்லவில்லையே ,கலாச்சாரகாவலர்கள் நாம சொன்னால் மட்டும் அபச்சாரம்னு சொல்ல ஓடி வருவார்கள் :-))

--------------
ராஜ நடராஜன்,

வணக்க்கம், வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி!

குட்டிப்பிசாசு தேவையான விளக்கம் அளித்துவிட்டார்கள் பார்க்கவும்.

--------------
கோவை ஜீவா,

வணக்கம் நண்பா, நன்றி!

அமெரிக்காவில் தடை செய்து அழிக்கப்பட்ட மசாலா தான் ஆச்சியும்,சக்தியும், அவர்களும் சூடான் டை தான் அடிக்கிறாங்க.

இந்தியாவில் எல்லாவற்றிலும் கலப்படமே,அதுவும் பொடியாக விற்கும் மசாலா அனைத்துமே, நல்ல பொருள் வேண்டுமெனில் மிளகாய்,மஞ்சள், மிளகு என எல்லாத்தூளும் நாமே அரைத்துக்கொள்வதே சிறந்தது.

எந்த பிரான்ட் மஞ்சத்தூளாக இருந்தாலும் தண்ணீரில் கரைத்து பாருங்கல் நீர் நல்ல மஞ்சளாக கலர் வரும் , ஒரிஜினல் மஞ்சள் கொதிக்க வைத்தால் தான் நிறம் கொடுக்கும். மேலும் அடியில் நிறைய செடிமெண்ட் வரும் எல்லாம் ஏதோ ஒரு தானிய மாவு அல்லது தவிடு, மரத்தூள் போன்றதே.

காபி, டீக்கும் இதே சோதனை தான் பச்ச தண்ணீரில் கலர் கொடுக்காது, சூடான நீரில் மட்டுமே கலர் கொடுக்கவேண்டும், எனவே பச்சத்தண்ணீரில் காபி,டீ கலர் கொடுத்தால் கலப்படம் என அறியலாம்.

---------
குட்டிப்பிசாசு,

நம் நாட்டில் ரிகால் செய்வதோ தண்டனையோ பெரிதாக இல்லை, மேலும் உயிரியியல் கலப்படம் குறித்து இன்னும் பெரிதாக விழிப்புணர்ச்சியும் இல்லை.பொது மக்கள் கண்டுப்பிடிப்பதும் சிரமம். நமக்கு விற்பனைக்கு வரும் பாக்கெட் பாலில் மிக அதிக பேக்ட்ரியல் கவுண்ட் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இன்னும் நிறைய இருக்கு ஒரே பதிவில் சொல்ல முடியாது என்பதால் சொல்லவில்லை, அடுத்து பிரிதொரு சந்தர்ப்பத்தில் பிறவற்றையும் சொல்கிறேன் ,குறிப்பாக பழங்கள்,காய்கறிகளில் ரசாயனா கலப்பு பற்றியும் சொல்லவிருக்கிறேன்.
----------

வவ்வால் said...

ஜீவா,

சுத்தமான மஞ்சள் குறைவான மஞ்சள் நிறம் நீரில் கொடுக்கும் என பொருள், மேலும் மஞ்சள் தூள் அருகிள் மட்டும் லேசாக நிறம் மாறும் ,மிக மெதுவாக நிறம் பிரிவதையே காணலாம், சூடா நீர் ,கொதிக்க வைத்தலின் போதே நல்ல நிறம் கொடுக்கும் சுத்தமான மஞ்சள் என எடுத்துக்கொள்ளவும்.

இந்த சோதனை காபி,ரீ,குங்குமப்பூ ,மிளகாய்த்தூள் என அனைத்துக்கும் பொருந்தும்.

சார்வாகன் said...

வணக்கம் சகோ வவ்வால்,

அருமையான் பதிவு. இலாப நோக்கில்,மையப்படுத்தப்பட்ட உற்பத்தி,அதிக நாட்களுக்கு பாதுகாத்து தொலைதூரம் அனுப்பி,சிறிது காலம் வரை தாக்கு பிடிக்க வேண்டும்,விள்மப்பர போட்டி என்பதால் தான் இப்படி கலப்படம் நடக்கிறது.

கலப்படத்தை அறியும் சில வழிகள் கூறினீர்கள் நல்ல விடயம்தான் என்றாலும் நம் அறியா பல வழிகள் இருக்கும் என்வே நம்பலாம்.

முன்பெலாம் பால் வேண்டுமெனில் பால்காரர் அன்று கறந்த பாலை (கொஞ்சம் அல்லது அதிகம்) தண்ணீர் மட்டும் ஊற்றி வீட்டுக்கு வந்து அளிப்பார்.மாதம் பணம் கொடுத்தால் போதும்.ஆனால் பால் கூட்டுறவு அமைப்பு என்று சொல்லி நம்க்கும் பாலுக்கும் இடையில் வந்து கலப்படத்திற்கு வாய்ய்பு கொடுக்கிறார்கள் என சொல்லலாம்.

சரி இதற்கு தீர்வு என்ன?

ஆகவே மையப் படுத்தப் பட்ட உற்பத்திமுறை தவிர்க்கப் பட வேன்டும். வாழும் இடத்தில் கிடைக்கும் இயற்கையான் பொருள்கள் கொண்டுவாழப் பழக வேண்டும்.அப்படி சூழல் உள்ள இடங்களுக்கே குடியேற வேண்டும்.

மக்களின் கூட்டுறவு அமைப்பாகஇலாப நோக்கற்று உற்பத்தி முறை ,குறைந்த பரப்பில் வாழும் மக்களை மட்டும் சார்ந்து இயங்கினால் நன்றாக இருக்கும்.உற்பத்தி, பயன்பாட்டின் இடையே காலம் குறைவாக இருக்க வேண்டும் சூழலுக்கேற்ற வாழ்வே செழிக்கும்.!!!

ஆனால் நாம் முட்டாள்கள்,நடக்க இயலாததை பேசுகிறோம்,கலப்படம் செய்பவனுக்கு கடும் தண்டனை கொடுத்தால் சரியாகி விடும் என்றுதானே சொல்வார்கள் சகோ!!!!!

ஹி ஹி இப்படி சொல்வார்கள் என்றுதானே தீர்வு பற்றி சொல்லவில்லை!!!

பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு இதை எல்லாம் பார்த்தால் முடியுமா???

ஆகவே நாம் தீர்(ப்பு??)வு சொல்லி விட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு என் காதில் ஒரே இரைச்சல் கேட்குது!!!

உங்கள்க்கும் காதில் குரல் கேட்கிறதா??[இதில் உள்ளடி வேலை எதுவும் இல்லை]

ஹா ஹா ஹா

நன்றி

nirvana said...

Hi Vavval

Thanks for your article,it was very informative.Here in the UK you can get all Indian spices in Indian stores. They are all illegally brought into the country and are being sold here. It is very simple to identify as you can see the products are priced in Rupees.Almost all Indian stores indulge in these practices. Sometimes they sell goods two years past the expiry date. If they were to import the Indian spices legally the products will be put into all kind of tests. I have since avoided buying from Indian retailers and buy my groceries & foods from UK based supermarkets.

I have a request to you , if you can ,write about Hydrogenated Vegetable fat which is mostly used in bakery products like bread, buiscuits ,cakes etc. to increase their shelf life. This fat is the main reason for heart related problems. I would like to type in tamil but it takes longer and I hope that is not an issue.

Thanks & Regards , Nirvana

குட்டிபிசாசு said...

//Hydrogenated Vegetable fat which is mostly used in bakery products like bread, buiscuits ,cakes etc. to increase their shelf லிfஎ//

நம்ம ஊரு டால்டா. இனிப்புகள் இதனால் செய்துவிட்டு, சுத்தமான நெய்யினால் என்று போட்டுக்கொள்வார்கள்.

Anonymous said...

//அனானி,

வாங்க,நன்றி!

அப்படிக்கூட செய்யலாம ,நூடுல்ஸ் போட்டால் தெரியாதா? //

Thalapakattu biriyani in every nook and corner of chennai is doing this :)

Even if it is known, people are still thronging those shops :(


வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

நீங்கள் சொன்ன மையப்படுத்தப்பட்ட உற்பத்தி விநியோகம்,மற்றும் மிகப்பெரும் நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொள்வதால் சில,பல சாதக,பாதகங்கள் இருக்கிறது.

மிக முக்கியமான சாதகம் பதப்படுத்துதல், இதனால் உபரி வீணாவதில்லை, ஆனால் இந்திய முதலாளிகள் தொழில்தர்மம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

இரும்பு விற்கும் டாடா உப்பு விற்க ஏன் வரவேன்டும் எல்லாம் சந்தையை கைப்படுத்துதல் மற்றும் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அவர்களிடம் இருக்க வேண்டும்.அயோடின் உப்பு என்பதே ஒரு மாயை, அதை வைத்து உப்புவியாபாரத்தினை மையப்படுத்தி உப்பின் விலையை ஏற்றிவிட்டார்கள், ஒரு கிலோ சாதாரண உப்பு 1 ரூ க்கு வாங்கி பாக்கெட்டில் போட்டு 500 கிராம் 12 ரூக்கு விற்கிறார்கள். இதனை பின்னர் விரிவாக பார்க்கலாம்.

இந்திய பெரும் முதலாளிகள் ,விவசாயிகள்,சிறு உற்பத்தியாளர்களை சுரண்டி அடிமாட்டுக்கு கொள்முதல் செய்து அதிக விலைக்கு நுகர்வோரிடம் விற்கிறார்கள். இப்படி கொள்ளை அடிப்பவன் எல்லாம் இந்தியர்கள் தான் வெள்ளைக்காரன் இல்லை :-))

மேலும் சிறிய அளவில் உற்பத்தி அதனை பாதுக்காப்பாக வைத்திருக்க கோல்ட் ஸ்டோரேஜ், மற்றும் முறைப்படுத்தப்பட்ட விநியோகம் செய்தால் கலப்படம் தவிர்க்கலாம்.

நம் நாட்டின் சாபக்கேடு என்னவெனில் ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கினால் அதில் யாரேனும் ஒருவர் சர்வாதிகாரி ஆகிவிடுகிறார், பின்னர் லஞ்சம், ஊழல்,அவர் சொல்வதே சட்டம் என பஞ்சாயத்து ஆரம்பித்து அமைப்பே நாசமாகிவிடுகிறது.

பாக்கெட் பாலின் அரைலிட்டர் விலைக்கு ஒரு லிட்டர் பால் விவசாயிடம் கொள்முதல் செய்யப்படுகிறது,அப்படி எனில் 100 சதவீத மார்ஜினில் பால் விநியோகம் நம் நாட்டில் நடக்கிறது, ஆனால் ஒரு பால்வியாபாரியிடம் மக்கள் நேரடியாக வாங்க சொன்னால் அவனிடம் விலைக்குறைத்து கேட்பார்கள்.

உதாரணமாக நாங்களே பால் விற்றுள்ளோம், அப்போது மக்கள் எங்களிடம் லிட்டர் 10 ரூக்கு கொடு எனக்கேட்டதெல்லாம் நடந்து இருக்கு. அப்போது பாக்கெட் பால் ஒரு லிட்டர் 22 ரூ இருந்தது.

கடந்த ஆண்டு வரையில் ஊரில் உள்ள எங்க வீட்டில் பசு மாடு வளர்த்தோம், இப்போதும் கிராமத்துக்கு அனுப்பி இருக்கிறோம், காரணம் எங்கள் உபயோகத்திற்கு போக மீதம் ஆகும் பாலை என்ன செய்வது என தெரியாத நிலை, ஒரே மாடு என்பதால் அதிக பாலும் இல்லை ,பால் கொள்முதல் செய்பவர்களிடம் விற்க.

தனிநபர் ஏதேனும் செய்ய முற்பட்டால் நம் மக்களே முதல் ஆளாக கல்லைதூக்கிப்போடுகிறார்கள் :-))

//ஆனால் நாம் முட்டாள்கள்,நடக்க இயலாததை பேசுகிறோம்,கலப்படம் செய்பவனுக்கு கடும் தண்டனை கொடுத்தால் சரியாகி விடும் என்றுதானே சொல்வார்கள் சகோ!!!!!

ஹி ஹி இப்படி சொல்வார்கள் என்றுதானே தீர்வு பற்றி சொல்லவில்லை!!!//

சகோ முடியலை ஹா ...ஹா ..ஹா நன்றாக மெத்தப்படித்த கூட்டத்தைப்பற்றி அவதானித்துள்ளீர்கள்.

எல்லோரும் வாயிலேயே பதிலை வைத்துக்கொண்டு அலைகிறார்கள், என்ன சொன்னாலும் அது எல்லாம் சரியாவராது என சொல்லிவிட்டு சமூகம் தானாக திருந்திவிட வேண்டும் என ஒரு உன்னத ஆலோசனை சொல்வார்கள் :-))


நாம் எதாவது மாற்றுக்கருத்து சொன்னால் முதலில் ரவுண்டுக்கட்டி நம்மை தான் அடிக்கப்பார்ப்பார்கள்

நல்லாவே இரைச்சல் கேட்குது, அதுக்கு எல்லாம் அசறுகின்ற ஆளா நாம், போய்யா வெங்காயம் எனப்போயிட்டே இருப்போம் ..ரை...ரைட்டு ...!

நன்றி!

--------------

நிர்வாணா,

வாங்க,நன்றி!

நீங்க சொல்வது சரிதான், நிறையப்பேரு ஹேண்ட் பேக்கேஜ் வகையில் கையோடு பொருட்களை கொண்டு சென்று விற்கிறார்கள், பெரும்பாலும் இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்தவர்கள், பொருட்களை வாங்க என்றே இந்தியாவுக்கு டூர் போல வருகிறார்கள்.

முறைப்படி ஏற்றுமதி செய்தால் நிறையக்கட்டுப்பாடு உண்டு, அப்படியும் ஆரம்பத்தில் நல்லதாக முறைப்படி அனுப்பிவிட்டு போக போக கலபடம் செய்து மாட்டிக்கொண்டவர்கள் தான் செய்தியானது. ஈஸ்டர்ன் மசலாவும் அப்படித்தான் மாட்டியிருக்கிறது.

நீங்கள் சொல்வது டிரான்ஸ்பேட் எனப்படும் மாமிசக்கொழுப்பினை பதப்படுத்தப்பட்ட உணவில் சேர்ப்பது என நினைக்கிறேன்,வனஸ்பதி அனுமதிக்கப்பட்ட உணவு, ஆனால் குறிப்பிட வேண்டும்.

சிப்ஸ், பிஸ்கெட்டில் டிரான்ஸ்பேட் இல்லை என குறிக்கும் வகையில் பச்சை வட்டக்குறியீடு போட வேண்டும். சிவப்பு வட்டம் இருந்தால் டிரான்ஸ்பேட் உணவு ஆகும்.ஐஸ்கிரிமில் கூட டிரான்ஸ்பேட் உண்டு.

ஜெலட்டின் தாவர வகையாக இருக்க வேண்டும், இந்தியாவில் பெரும்பாலும் மாமிச வகை ஜெலாட்டின் தான்.

இன்னும் சிலது இருக்கு தொடர்வேன் அப்போது சொல்லலாம் என இருந்தேன்.

----------------
குட்டிப்பிசாசு,

வாங்க,,நன்றி!

வனஸ்பதி பயன்ப்படுத்துவது தடையில்லை,ஆனால் வனஸ்பதி என சொல்லிவிட வேண்டும்.

வனஸ்பதி ,நெய் இன்னபிற எல்லாம் பின்னர் சொல்லலாம் என இருந்தேன், இப்போதே பதிவு நீளமாக போனதாக தோன்றியது, மேலும் தட்டச்சு செய்ய சோம்பல் :-))

குட்டிபிசாசு said...

//நீங்கள் சொல்வது டிரான்ஸ்பேட் எனப்படும் மாமிசக்கொழுப்பினை பதப்படுத்தப்பட்ட உணவில் சேர்ப்பது என நினைக்கிறேன்,வனஸ்பதி அனுமதிக்கப்பட்ட உணவு, ஆனால் குறிப்பிட வேண்டும்.//

மெக்டோனல்டில் கூட ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்ய 2000மாவது ஆண்டு வரை மாமிசகொழுப்பு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

…இந்த பதிவே மிகவும் நீளம், மற்றவற்றை அடுத்த பதிவில் பொறுமையாக எழுதுங்கள்.

குறும்பன் said...

நாங்க பக்கத்தில் இருக்கும் சிறிய ஊரின் பால் கூட்டுறவு கடைக்கு போய் பால் வாங்குவோம். அதனால பால் கலப்படத்தில் இருந்து மட்டும் தப்பித்தோம் என சொல்லமுடியும்.:)

Unknown said...

நாமே நம்மை அறியாமல் இது போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றோம்...!நல்ல விழிப்புணர்வு பதிவு..!
நன்றி வவ்வால்ஜி!

உணவு உலகம் said...

பாராட்டப்பட வேண்டிய விழிப்புணர்வு பகிர்வு. அருமையான தொகுப்பு. பலரை சென்றடைய வேண்டும்.

உணவு உலகம் said...

பசுக்களுக்கு ஆக்சிடோசின் எனும் Schedule-H ஊசி போட்டு பால் கறக்கிறார்கள். அதனி அருந்தும் மனிதனின் உடலில் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுத்துகின்றன்.இப்படியும் நடக்குது கலப்படம்.

உணவு உலகம் said...

//ஸ்டார்ச் கலந்த பாலை அயோடின் சோதனை மூலம் கண்டுப்பிடிக்கலாம்//
இதற்கு முதலுதவிப்பெட்டியில் இருக்கும் டிஞ்சர் அயோடினைப் பயன்படுத்தலாம். தகவலுக்காக.

உணவு உலகம் said...

//கொத்தமல்லி தூள்:

இதில் மரத்தூள், தவிடு, மற்றும் உலர்ந்த மாட்டு சாணி கலக்கப்படுகிறது.//
மல்லி நல்ல கரும்பச்சை நிறமாக காட்சியளிக்க ரசாயனக்கலவை சேர்க்கப்படுகிறது.

வவ்வால் said...

அனானி,

வாங்க,நன்றி!

சென்னையில தலைப்பாக்கட்டுண்னு ஆள் ஆளுக்கு ஆரம்பிச்சு இருக்காங்க சிலப்பேரு ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாக்கட்டுண்னு வேற பேர் போட்டுக்கிறாங்க, அந்த உணவகத்தில் தான் நீங்க சொல்வது போல இருக்கா?

நான் ஏதோ ஒரு தலைப்பாக்கட்டுல சாப்பிட்ட்டேன், ஒன்னும் தெரியலை,அதே போல ஒன்னும் விசேஷமாவும் இல்லை, அதுக்கு முன்னர் சென்னையில வித்த பிரியாணி போலவே தான் இருக்கு.

மக்கள் பேரை வச்சு தான் முடிவு செய்றாங்க, மற்றபடி ,தரம் சுவை எல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க :-))

இப்போ பதிவுகளையே எடுத்துக்கிட்டா, வவ்வால்னு பேரு இருந்தால் கெட்டவனா இருப்பான், ஶ்ரீமன்நாராயணன்னு பேரில் எழுதினா நல்லவனா இருப்பான்னு மருவாதிக்கொடுப்பாங்க அதான் மக்கள் :-))

----------------

குட்டிப்பிசஔ,

நன்றி,

மெக்டொனால்ட் போன்ற துரித்அ உணவங்கள், பிஸ்ஸா ,பர்கர் என எல்லாவற்றிலும் டிரான்ஸ்ஃபேட் உண்டு, இப்போ இல்லைனு சொன்னாலும் மறைமுகமாக கலப்பதாக பேச்சு.

இந்தியாவில் மேனகா காந்தி கொஞ்சம் போராடி இதுக்கு தடைப்போட வச்சாங்க, ஆனாலும் திருட்டுத்தனமாக நடக்குது.

அடுத்து ஒரு பதிவில் விடுபட்டதை பார்க்கலாம்.

------------
குறும்பன்,

வாங்க,நன்றி!

அப்போ பால் கலப்படத்தில் தப்பிச்சீங்க,ஆனால் மற்றவையிடம்ம் மாட்டி இருப்பீங்களே, :-))

பால்ல் கூட்டுறவு போல லோக்கலாக செயல்படும் நிறுவனங்கள் நாட்டுக்கு தேவை,ஆனால் அவை பெரும் கார்ப்பரேட்கள் முன்னால் காணாமல் போகின்றன.
---------------
--------------
வீடுஜி,

வாங்க,நன்றி!

ஆமாம் தெரிஞ்சும்,தெரியாமலும் கலப்படத்தில் வாழ்கிறோம், குறைந்த பட்சம் எல்லா உணவிலும் செயற்கை கேசரிப்பவுடர் போடுவதை தவிர்க்கலாம்.நீங்களும் நாளுப்பேரிடம் எடுத்து சொல்லுங்க வீடுஜி.

-------------
ஃபுட் நெல்லை சார்,,

வாங்க, நன்றி!

உங்களுக்கு உணவு பற்றி நிறைய நேரடி அனுபவம் இருக்கும், நான் படித்தது, கேட்டது வைத்து தெரிந்ததை பகிர்கிறேன்,

விடுபட்ட சில விஷயங்கள் நன்கு சொல்லிவிட்டீர்கள், இது போன்ற பதிவின் கருத்திற்கு வலு சேர்க்கும் பின்னூட்டன்ங்களை பெரிதும் வரவேற்கிறேன், நன்றி!

ஆக்சிடாக்சின் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன் மறந்தது விட்டேன், ஆக்சிடாக்சின் கொதிக்க வைப்பதால் செயல் இழந்து விட்டாலும் , சமயங்களில் சிறிய அளவு எச்சம் உடலுக்குள் சென்று விடுகிறது, அவை ஹார்மோன் கோளாறுகளையும் ,ஆண்களுக்கு பெண் தன்மையும் தூண்டுகிறது எனப்படித்தேன். குறிப்பிட்டதற்கு நன்றி!

பிழை இருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள், இவ்விடம் எதற்கும் தடையில்லை.
------------

தி.தமிழ் இளங்கோ said...

கலப்படக்காரர்கள் எல்லோரும் ஒரு சங்கம் வைத்துக் கொள்கிறார்கள். யாரையும் எதுவும் செய்ய முடிவதில்லை.


nirvana said...

Thanks Vavvaaal , Transfat is a silent killer. It is tottally banned in Europe. I am glad you are about to write this in detail.

வவ்வால் said...

தி.த.இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

ஆமாம் ஆ ஊன்னா சங்கம் ,கொடின்னு கிளம்பிடுறாங்க, ஏதோ நியாயத்துக்கு கொடி தூக்குன்னா பரவாயில்லை, அநியாயத்துக்கும் தூக்குறாங்க.

வால்மார்ட் வரக்கூடாதுன்னு கொடி தூக்கின வியாபாரிகள் சங்கம் ஆனால் அனைத்துக்கடையிலும் சீன மலிவு சாக்கலேட்கள், பிஸ்கெட் இன்ன பிற சீன கலப்பட பொருளையும் விக்குது.

அப்புறம் என்னாத்துக்கு சங்கம்?

--------

நிர்வாணா,

வாங்க,நன்றி,

அடுத்த பதிவில் சிலக்குறிப்பிட்ட பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு கொஞ்சம் விரிவா சொல்லிடுறேன், டிரான்ஸ்பேட் இங்கு தடையில்லை,ஆனால் சின்னதா சிவப்பு வட்டம் போட்டு வித்துக்கலாம், மக்கள் அவங்களா கண்டுப்பிடிச்சு தவிர்க்கணும் :-))

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் விளக்கமான விழிப்புணர்வு பதிவு! சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




மாயன் said...

வவ்வால்

எதை சாப்பிடனும்னே தெரியலையே... எல்லாவற்றிலும் கலப்படம் இருக்கு..

.டீ தூள்ல ஆவாரை இலை கலக்கறாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்...

அரிசி மாதிரி தானியம் கேட்டு போகாம இருக்க கிடங்குல மூட்டை மேல பூச்சி மருந்து தெளிப்பாங்க...

இந்த பழங்களை ரசாயனம் போட்டு பழுக்க வெய்க்கறது..

அப்புறம் திராட்சை பூவா இருக்கும் போதிலிருந்தே அதை பூச்சி மருந்துல முக்கி எடுத்து வளர்த்துட்டு வருவாங்க...

நாம பரவாயில்லை.. நம்ம அடுத்த தலைமுறை ரொம்ப கஷ்டப் படும்... :-(

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,நன்றி!
-------------
மாயன்,

ஆமாம்ம் நிறைய கலப்படம்ம் இருக்கு இன்னொருப்பதிவில் பார்க்கலாம்னு சொல்லி இருக்கேன்.

மேலும் கிடங்கில் வைத்திருக்கும் போது பயன்ப்படுத்தும் ரசாயனங்கள் பற்றி என்னோட பரோட்ட ரகசியம்ப்பதிவில் கொஞ்சம் சொல்லி இருப்பேன், மேலும் பழங்கள்,காய்கறிகள் இன்னபிறவற்ரையும் பலரின் பின்னூட்டங்களில் தெரிவித்து இருக்கிறேன்.

இப்போ எனதுப்பதிவில் சொல்கிரேன், மற்றவற்றை அடுத்துக்காணலாம்.

கலப்படம் என்பது உண்மையான ,மதிப்புள்ள பொருளில் மதிப்பு குறைவான ,அல்லது வேறு ஒன்றை கலப்பது, அவை தீங்கு விளைவிக்காதவையாகவும் இருக்கலாம்.

பூச்சி மருந்து அடிப்பது, சேமிக்கும் போது பூச்சி மருந்து பயன்ப்படுத்துவது கலப்படம் என வராது, ஆனால் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்ப்படுத்தக்கூடாது ,மற்றும் இரசாயனம்ப்பயன்ப்படுத்து கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்ப்பற்ற வேண்டும்.

ஹி..ஹி நாம் நாட்டில் பூச்சி மருந்து பயன்ப்படுத்துவதை அரசே ஊக்குவிக்கிறது,எனவே அதனை கலப்படம் என தண்டிக்கவே முடியாது :-))

நம்ம சட்டம் என்ன சொல்லுதுன்னு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கணும், ஆனால் நம்ம பதிவர்களில் பலரே உரம்,பூச்சி மருந்து இல்லை எனில் உணவுப்பஞ்சம் வந்துவிடும் என்பவர்கள் தானே.