Thursday, February 07, 2013

கற்றது தமிழ்-5

(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்)

தமிழென நினைத்து  பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,பிறமொழிச் சொற்களைப் நாம் பயன்படுத்தி வருகின்றோம்,அவற்றில் பல தமிழாகவே மாறிவிட்ட சூழலில் அச்சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது மிகவும் கடினமாகும்,அதே வேளையில் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களும் உள்ளன,அவற்றை  அடையாளங்காணும் சிறு முயற்சியே இத்தொடர்.

இப்பதிவில் நாம் அதிகம் பயன்ப்படுத்தும் மேலும் சில வடமொழி ,பிறமொழி சொற்களையும்,அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் காணலாம்.

#அகதி:

ஒரு சொல்லின் முன் "அ" சேர்ப்பதால் எதிர் மறை பொருளை உருவாக்கலாம், இம்முறை வடமொழி,தமிழ் என இரண்டிலும் நடைமுறையில் உள்ளது.

கதி(gati) என்ற வடமொழிச் சொல்லுக்கு ,

நிலை,
இடம்,
இலக்கு,
நுழைவு,
சரணடைதல்,
புகலிடம்,
நேரம்,
வேகம்,
இயக்கம்,
நகர்தல்.

என்றெல்லாம் பொருள் உண்டு.

சொல்லுக்கு முன் "அ"  சேர்த்தால் இவற்றிற்கு எதிரான பொருள் கொண்ட சொற்களை உருவாக்கலாம்.

அகதி என்ற சொல்லினை கொண்டு ,
யாருமற்றவன்,வறியவன்,நாடோடி,பற்றில்லாமல்,புகலிடம் இல்லாமல் இருப்பவர்களையும் குறிக்கலாம்.

மேலும் அகதி என்பதற்கு  திரும்புதல் என்று ஒரு பொருளும் இருப்பதால்,புலம் திரும்பியவர் என்றும் சொல்லலாம்.

அகதி என்பதற்கு தமிழ் இணைச்சொற்கள்: நாடோடி ,நாடற்றவர் ,புலம் திரும்பியோர் என்பதை கொள்ளலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் என்பது பொதுவாக 'migrated" என்பதையே குறிக்கும்.

#அகாலம்- 

காலம் என்ற வடமொழிச்சொல்லுக்கு நேரம் என்று பொருள், எதிர்மறையாக "அகாலம்" என்கிறார்கள்  இதற்கு இணையான தமிழ்ச்சொல் "நேரமற்ற நேரம்",வேளையற்ற வேளையில் எனலாம்.

அகாலநேரம் என்பது ,நடு சென்டர் என்பது போல இருமுறை நேரத்தினை சொல்வது.

#அங்குலம் : 

வட மொழிச்சொல், அங்குஷ்டம் என்றால் வட மொழியில் கட்டைவிரல் , ,எனவே ஒரு கட்டைவிரல் தடிமன் உள்ள அளவை அங்குலம் என்பார்கள்.
இணையான தமிழ்ச்சொல்: விரற்கடை அளவு.

#அஜாக்கிரதை

ஜாக்கிரதை என்ற வட மொழிச்சொல்லின் எதிர்ச்சொல்,

இணையான தமிழ்ச்சொல் : கவனமின்மை,விழிப்பின்மை.

# அசுத்தம்-

சுத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்,

இணையான தமிழ்ச்சொல்: அழுக்கு,தூய்மையின்மை.

#அநியாயம்:

நியாயம் என்ற வடச்சொல்லின் எதிர்ப்பதம்.

இணையான தமிழ்ச்சொல்:முறையின்மை,நடுவின்மை.

#அபத்தம்:

பத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்.

பத்தம் என்றால் நேர்மை, உண்மை, எனப்பொருள். சுத்தபத்தமாக கடவுளை வணங்க வேண்டும் என்றால் ,தூய்மையாக ,நேர்மையாக ஒன்றி வணங்குதலை குறிக்கும்.

இணையான தமிழ்ச்சொல்: பொய்,தவறு.

#இலவசம்:

labhasa என்ற வட மொழி சொல்லுக்கு , பிச்சையாக, தானமாக கேட்டுப்பெறுதல் என்ற பொருள் ஆகும்.  தமிழில் அனைத்து மெய்யெழுத்துக்களையும் சொல்லின் முதல் எழுத்தாக பயன்ப்படுத்தக்கூடாது என்பதால், உயிர் எழுத்து "இ" சேர்த்து இலவசம் என முழுமையாக தமிழில் எழுதப்படுகிறது.

உ.ம்: லட்சுமணன் = இலட்சுமணன், ராமன் = இராமன்.

தமிழில் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ,பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களும் வரலாம், அதுவல்லாமல், மெய் எழுத்துக்களில் ,க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங ஆகிய பத்து மெய்யெழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரலாம்.

இலவசம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்:விலையின்மை,விலையில்லா என்பதாகும்.

ஹி...ஹி முந்தைய முத்தமிழ் வித்தவர் ஆட்சியில் கொடுத்த இலவசப்பொருட்களை இப்பொழுது விலையில்லா பொருட்கள் என சொல்கிறார்கள். சரியாத்தான் மாற்று சொல் கண்டுப்பிடித்து இருக்காங்க :-))

# கோயில் அல்லது கோவில்:

பலரும் ஆலயத்தினை கோயில் அல்லது கோவில் என எழுதி,பேசி வருவதுண்டு, இரண்டில் எது சரியான தமிழ்ச்சொல் என குழப்பம் வருவது இயல்பே.

தமிழ் இலக்கண புணர்ச்சி விதிகளின் படி, நிலை மொழி இறுதியிலும்,வரு மொழி முதலிலும் உயிர் எழுத்து இருக்குமானால் , இரு சொற்கள் இணையும் போது ஒற்றெழுத்து மிகும், என்கிறது, இதனை உடம்படுமெய் - உடன் படுத்தும் - இணைக்கும் மெய் எழுத்து என்கிறார்கள்.

மேலும் நன்னூல் இலக்கணப்படி,

இ,ஈ,ஐ ஆகிய உயிர் எழுத்துக்கள் இருப்பின் யகர ஒற்று "ய்"மிகும்.

ஏனைய உயிர் எழுத்துக்கள் இருப்பின் "வகர" மெய் "வ்" மிகும்

ஏ எனும் உயிர் எழுத்து இருப்பின் இவ்விரு மெய்யும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

கோவில் = கோ +வ்+இல்

கோ என்ற சொல்லில் "ஓ"எனும் உயிர் எழுத்து ஒலிக்கிறது அதற்கு வகர மெய்"வ்" உடம்படுமெய் ஆக மிகலாம்.

எனவே கோவில் என்பதே சரியானது.

கோயில் =கோ+ய்+இல்

எனப்பிரித்தால் யகர ஒற்று "ய்" மிகுவதை காணலாம், இது உடம்படுமெய் என்ற விதிப்படி சரி,ஆனால் நன்னூல் விதிப்படி தவறு என்கிறார்கள்.

அதே சமயத்தில் இலக்கியங்களில் கோயில் என்ற சொல்லும் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது,எனவே நடைமுறையில் கோயில் என்று சொல்வதும் பிழையில்லை.


மேலும் சில ஒலி ஓசையில் ஒத்து குழப்பும் சொற்கள்.

முருக்கு- முறுக்கு:

முருக்கு என்றால் அழித்தல்.

முறுக்கு என்றால் திரித்தல் , வீட்டில் சுடுவது முறுக்கு,  ஒரு வேளை வீட்டில் சுட்ட முறுக்கு உங்கள் பல்லை அழிக்குமானால் அதனை "முருக்கு" எனலாம் :-))

ஆனால் முருங்கை மரம் என்பதற்கு "ரு" தான் பயன்ப்படுத்த வேண்டும்.

#ஒரு-ஒறு:

ஒரு என்பது எண்ணிக்கை ஒன்றை குறிக்கும்.

ஒரு ரூபாய், ஒருவன்,ஒருவள்.

ஒறு என்பது தண்டனையை குறிக்கும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

என்ற குறளில் வரும் ஒறுத்தல் "தண்டிப்பதையே" குறிப்பதை காணலாம்.

#முன்னாள்-முன்னால்-முந்நாள்

இன்றைய நாள் - இன்னாள், அதற்கு முன்னர் வந்த நாள் முன்னாள்,அல்லது முந்தைய காலம்.

ex.minister என சொல்ல முன்னாள் ,முன்னால் என எதனை பயன்ப்படுத்துவது எனக் குழப்பம் வரும்.

முன்னால் அமைச்சர்  என்றால் இந்த ஆட்சிக்காலத்துக்கு முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அல்லது இப்போதைய அமைச்சருக்கு முன்னர் அமைச்சராக இருந்தவரை மட்டுமே குறிக்கும்.
முன்னால் என்றால் in front of, previous என்ற பதம் இங்கு நாள் கணக்கில் வராது.ஒரு வரிசைக்கிரமத்தில் சொல்வதாகும்.

உ.ம்.
#முன்னால் நிற்கும் பேருந்தில் ஏறவும்.

#முன்னால் நிற்கிறேன்.

அதையே முன்னாள் நிற்கிறேன் என்றால் முதல் நாள் நிக்கிறேன் ஒரு வேளை முதல் நாளில் இருந்து நின்றால் அப்படி சொல்லலாமோ :-))

ஆனால் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்து இப்போ பதவியில் இல்லை என்றால் என்ன செய்வது, எனவே முன்னாள் அமைச்சர் என எழுதுவதே சரியானது.

முந்நாள் என சொல்வது மூன்று +நாள் என சொல்வதாகும்,

மூன்று நாள் =முந்நாள்.

# அல்லு-அள்ளு:

அல் - துன்பம்,தீமை,இரவு,இருள்.

அல்ல- இல்லை

அல்லல் ,அல்லவை,

சிலர் அல்லும் பகலும் வெறும்* தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை என்பார்.

இங்கு அல் என்பது இரவை குறிக்கிறது.

*வெரும்- வெருப்பு- அச்சம்,பயம்,மிரட்சி.கோவம்,சினம் எனவும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம்.

வெறும் - வெற்று-வெற்றிடம்- ஒன்றுமில்லாமல்.

வெறுப்பு- dislike -hate,பகைமை, விருப்பமின்மை.

அள்ளு- அள்ளுதல், ஒன்றை அப்படியே வாரி எடுப்பது. மண் அள்ளுதல், தானியம் அள்ளுதல்.

ஹி...ஹி தெலுகுல அல்லுனா மாப்பிள்ளை என்கிறார்கள்(தெலுகு தெரிந்தவர்கள் சரியானு சொல்லுங்க), "அல்லுடு மஜாக்கானு"சிரஞ்சீவி ஒரு படம் கூட நடித்துள்ளார், ஒரு வேளை மாப்பிள்ளைகள் மாமனாரை வரதட்சணை,சீர் எனக்கேட்டு துன்புறுத்துவதால் மாப்பிள்ளையை "அல்லு"னு சொல்லுறாங்களா?

உதித்நாரயணன் போன்று மூக்கால் பாடுபவர்களுக்கு  எல்லாமே அல்லு அல்லு ...தல்லு ...தல்லு தான் :-))

#ஆனி-ஆணி:

ஆனி என்பது தமிழ்நாட்காட்டியில் உள்ள தமிழ் மாதமாகும்.

ஆணி என்பது வடிவேலு சொல்லும் "ஆணியே புடுங்க வேண்டாம்' இரும்பு ஆணி :-))

ஆணி என்ற சொல்லுக்கு இரும்பு ஆணி, வலிமை, இன்றியமையாத(முக்கியமான) என்ற பொருள்கள் உண்டு.

மரத்தின் ஆணி வேர்.

ஆணித்தரமாக கருத்தினை *கூறுதல்.

ஆணி என்பதற்கு இங்கு அழுத்தமாக ,வலிமையாக கருத்தினை சொன்னதாக பொருள்.

கூரு- கூர்- sharpness,கூரு கெட்டவன் என்றால் மொக்கையான மூளைத்திறன் உள்ளவர்னு சொல்றாங்க போல.

*கூறு,கூறல் - சொல்,சொல்லுதல்.

 ஒலிக்குறிப்பில் குழப்பும் மற்ற சொற்களை பிறகு பார்க்கலாம்.



மேலும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.

#அதிகம், வடமொழி , தமிழ் -மிகுதி,கூடுதல்.

#அதிசயம், வடமொழி, தமிழ் -புதுமை,வியப்பு.

#அஸ்திபாரம்:கடைக்கால்

#அலுவா- கோதுமை தேம்பாகு.

#அவகாசம்-ஒழிவு,ஓய்வு.

#அவசரம்-விரைவு, பரபரப்பு,பதைப்பு.

#அவசியம்- முதன்மை,கட்டாயம்,இன்றியமையாத

#ஆதிக்கம்-உரிமை,முதன்மை,மேன்மை,தலைமை.

#இதம்,ஹிதம்- இனிமை,நன்மை,அன்பு,அறம்.

#இருதயம்,ஹிருதயம்-நெஞ்சம்,அன்பு,உள்ளம்.

#கட்சி-பக்கம்,சார்பு.

#எதார்த்தம்-உண்மை,உறுதி

# கஷ்டம்- வருத்தம்,துன்பம்

#நிசி -இரவு

#தாமசம்,தாமதம்-தாழ்த்துதல்,அட்டி,மயல்.

#துரிதம்-விரைவு

#நிர்ப்பந்தம்-தொல்லை,நெருக்கடி,வலுக்கட்டாயம்,இடர்.

#நிரூபித்தல்- மெய்ப்பித்தல்,நிலைப்பெறுத்தல்.

# வாந்தி பேதி,- கக்கல்,கழிசல்
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,தமிழ் ஆட்சி சொல்லகராதி, தமிழ் அகரமுதலி,http://spokensanskrit.de/,கூகிள்,விக்கி, இணைய தளங்கள்,நன்றி!


30 comments:

Sowmya said...

ழ...ள...ல வேற்றுமையே தெரியாமல் பேசுவதும் எழுதுவதும் தான் இப்போதைய பேஷன்...!

தமிழ் அல்ல ...டாமில்...


கல்லாவிட்டால் தான் தமிழ் என்றாகிவிட்டது !

நல்ல பதிவு ...

Anonymous said...

நல்ல பதிவு...தொடரட்டும் உங்கள் பணி....

நாய் நக்ஸ் said...

இந்த பதிவுக்கு நம்ம ராஜ நடராஜர் என்ன சொல்லபோறார்????

வாரும் நடராசர்....காத்திருக்கோம்.....

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....கோத்துவிடுவோம்ல.........

Anonymous said...

அகதிக்கு 'அதிதி' என்ற சொல் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறேன். அது தமிழா? (அதிதி என்ற வடமொழிச் சொல்லுக்கு விருந்தாளி என்ற பொருள் இருப்பது தெரியும்.)

சரவணன்

Anonymous said...

வவ்வால், ரூபாய் நோட்டுகள் விற்கப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இங்கு நான் சொல்வது ஃபேன்ஸி எண் கொண்டவையோ, அந்தக்காலத்து அபூர்வ வகையோ அல்ல.

உங்களிடமுள்ள நோட்டுகளில், குறிப்பாக 10 ரூபாய், 100 ரூபாயில் பாருங்களேன், தேதி போன்ற அமைப்பில் (எ.கா. இன்றைய தேதி = 070213) வரக்கூடிய நோட்டுகளே இருக்காது! அதாவது, ஒவ்வொரு சீரிஸிலும் இம்மாதிரி வரக்கூடிய நோட்டுகளை மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தயவுடன் தடுத்தாட்கொண்டு விடுகிறார்களாம். உங்கள் பிறந்த தேதி (அல்லது அசினோடது!) எதுவாக இருந்தாலும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே உள்ள ஒரு கிஃப்ட் ஷாப்பில் தெரிவித்தால், ஒரு வாரத்துக்குள் அந்த நோட்டை உங்கள் கையில் தருகிறார்கள்! விலை 10 ரூ = 175 ரூ. 100 ரூ நோட்டு அதற்கேற்ப அதிகமாகும். ஃபிரேம் (ஆப்ஷனல்) விலை தனி! லோக்கல் டாக்ஸஸ் உண்டா தெரியவில்லை :-)

சட்டப்படி நிச்சயம் இது சரியாக இருக்க முடியாது :-)

உங்கள் ரியாக்ஷனை எதிர்பார்க்கிறேன்!

சரவணன்

வவ்வால் said...

பெபி,
வாங்க,நன்றி!

முதல் மொய்யே உங்கக்கிட்டே இருந்து,அப்போ இந்த பதிவு அமோகமா பின்னப்போவுது :-))

//கல்லாவிட்டால் தான் தமிழ் என்றாகிவிட்டது !//

அந்த அவ்வையாரே வந்து அருள்வாக்கு சொன்னாப்போல இருக்கு :-))
--------------
அனானி,

நன்றி!
------------------
நக்ஸ் அண்ணாத்த,

வாங்க,நன்றி!

ராச நட ரொம்ம்ப்ப்ப நல்ல்லவர்ர்ர் .நான் எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குவார், அதுக்குன்னு நீங்களும் கலாய்க்க கிளம்புவதா ? அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :-))

என்னமோ புதுசா கோத்துவிடுறாப்போல சொல்லிக்கிட்டு, அவரு எல்லாம் ஏற்கனவே சிக்கிக்கிடக்கும் அப்ரண்டீஸு தான் :-))
--------------------
சரவணன்,

வாங்க,நன்றி!

அதிதி என்பவர் தான் அனைத்து தேவ சக்திகளின் தாய், சூரியனுக்கு அம்மா.

அதிதி =அ+திதி

அ = இல்லை

திதி= கட்டு,எல்லை

கட்டுக்களற்ற,எல்லையற்றவள் எனப்பொருள்.

அதிதியின் மகன் என்ற பொருளில் சூரியனுக்கு ஆதித்ய என்றப்பெயர் உள்ளது.

அதிதி என அகதிக்கு பதில , நாடு என்ற இல்லை, கட்டுப்பாடு இல்லை என்ற பொருளில் சொல்லக்கூடும். ஆனால் அப்படி வழக்கில் இல்லை, மேலும் வடமொழி ஆச்சே,எனவே பயன்ப்படுத்தும் அவசியமும் இல்லை.

அதிதி என விருந்தினரை சொல்வதில்லை, யாசகம் கேட்டு வருவோரை, அல்லது திடீர் என சாப்பிட வருபவர்களை சொல்லக்குறிப்பிடுவது. அக்காலத்தில் சாமியார்கள் தான் சொல்லாமல் ஒரு வீட்டுக்கு உணவருந்த சென்று சாப்பாடுக்கேட்பது வழக்கம்.

திதி = நேரம், என இன்னொரு பொருளில் இருக்கு அதனடிப்படையில் ,அதிதி என்பவர் நேரம் குறிப்பிடாமல்,அல்லது சொல்லாமலே ஒருவர் வீட்டுக்கு செல்பவர்.

பிச்சை எடுக்க போறவங்க நேரம் சொல்லிட்டாப்போவாங்க, எப்போ வேண்டுமானாலும் போய் "பகவதி பிக்‌ஷாம் தேஹி"னு சட்டியை நீட்டுவாங்க :-))

நாயன்மார்களின் வரலாற்றில் இது போல திடீர் /அழையா விருந்தினராக சிவன் போய் திருவிளையாடல் நிறைய செய்வார்.

நாமும் ஒருவர் வீட்டுக்கு சொல்லாம கொள்ளாம போனால் அதிதி தான் :-))
-----------

ரூபாய்,நாணயம் விற்கும் கடைகளை பார்த்துள்ளேன், சிறப்பு என கருதுவதை விற்பது சட்ட விரோதம் இல்லை, ஆனால் ரிசர்வ் வங்கியே இதில் மறைமுகமாக செயல்படுவதை தான் நம்ப முடியவில்லை.

ஆனால் வங்கி அளவில் உள்வேலை நடக்கலாம்.

நாணயம் சேகரிப்பதை நுமிஸ்மாடிக் என்கிறார்கள்,தினமலர் ஆசிரியரே ஒரு புக்கு போட்டு,அதுக்கு தினலரிலேயே புத்தகவிமர்சனம் போட்டிருந்தாங்க, வேண்டும்னா வாங்கி படிச்சுப்பாருங்க. இதுக்குனே ஆட்கள் இருக்கிறார்கள், கையில நிறைய காசு இருக்கும் செய்றாங்க,நமக்கு எல்லா ரூபாயும் ஒன்னு தான் கடையில கொடுத்தா சரக்கு கொடுத்தாப்போதும் :-))

Anonymous said...

/// அதிதி என விருந்தினரை சொல்வதில்லை, யாசகம் கேட்டு வருவோரை, அல்லது திடீர் என சாப்பிட வருபவர்களை சொல்லக்குறிப்பிடுவது. அக்காலத்தில் சாமியார்கள் தான் சொல்லாமல் ஒரு வீட்டுக்கு உணவருந்த சென்று சாப்பாடுக்கேட்பது வழக்கம். ///

நன்றி! 'அதிதி தேவோ பவ' என்பதைக் கேட்டுத் தவறாக நினைத்துக் கொண்டேன். இந்திய சுற்றுலா துறை வேறு இந்த வாசகத்தைத் தனது விளம்பரங்களில் பயன்படுத்தியதாக ஞாபகம்!

சரவணன்

வவ்வால் said...

சரவணன்,

நன்றி!

அதிதியை விருந்தினராக போற்றி உபசரிக்க வேண்டும் என இந்திய கலாச்சாரம் சொல்கிறது, எனவே அதிதியும் விருந்தினரே,ஆனால் விருந்தினர் எல்லாம் அதிதி அல்ல :-))

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

நம்ம நாட்டு மரபுப்படி வந்தார்க்கு எல்லாம் விருந்தினராய் கருதி உணவளிக்க வேண்டும்(இப்போ தண்ணிக்கேட்டாக்கூட கிடைக்காது)

அதிதி தேவோ பவனு சொல்லி வைக்க காரணம் என்னனா, அக்காலத்தில் பார்ப்பணர்களே (சந்நியாசி, சிவனடியார்னும் சொல்வாங்க) இப்படி உணவுக்கேட்டு போவது வழக்கம்,எனவே அப்படி பிச்சைக்கேட்டு வருபவர்களே தெய்வம்னு உயர்வா சொல்லி வச்சுக்கிட்டாங்க.அப்போத்தானே போய் கேட்டா கிடைக்கும் :-))

அதை இந்திய சுற்றுலாத்துறையும் எடுத்துப்போட்டுக்கிச்சு, முன்னறிவிப்பு , ரிசர்வ் என எதுவும் இல்லாம வாங்க,நல்லா கவனிப்போம்னு சொல்லுறாங்க போல, ஆனா நம்ம ஊருல சாதாரணமா ரிசர்வ் செய்யாம சென்னை டு திருச்சி போறதுன்னா கூட பெரும்பாடு :-))

கேட்ட உடனே கொடுக்கலைனா எரிக்க செய்யும் சக்தி இருக்குன்னு வேற சொல்லிக்கிறாங்க, கொக்கென நினைத்தாயா கொங்கணவா எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீங்களே.

இந்த விருந்தோம்பல் இந்தியாவில் மட்டுமில்லை ஆப்ரிக்காவிலும் உண்டு,அதுக்கு பேரு உபுண்டு,அதனால தான் லினக்ஸ் திறமூல மென்பொருளுக்கு உபுண்டு எனப்பேர்.

நெல்சன் மண்டேலா உபுண்டு கலாச்சாரம் பற்றி ரெண்டு,மூனு புக்கு எழுதி இருக்கார்.

Anonymous said...

உமது சேவை தமிழுக்குத் தேவை. நல்ல முயற்ச்சி.

Anonymous said...

நன்றி வவ்வால். உபுண்டு இயங்குதளம் பற்றித் தெரியும். சி.டி. கூட வாங்கி பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். தொடர்ச்சியாக உபயோகிப்பதில்லை :-( அவர்கள் வைக்கும் அலிட்டரேட்டிவ், தமிழ்ல என்ன, எதுகை (மோனைன்னு சொல்லிடாதீங்க!) கொண்ட, அட்ஜெக்டிவ் + விலங்குப் பெயர்கள் ரொம்பப் பிடிக்கும்! தமிழ்லகூட இப்படி எழுதிப் பார்க்கலாம்... வளவள வவ்வால்- என்கிற மாதிரி :-))

உபுண்டு ஸ்மார்ட்ஃபோன் கூட வரப்போகிறது என்று சமீபத்தில் தி ஹிந்து நாளிதழில் படித்தேன்.

மண்டேலா புத்தகங்கள் ஆச்சரியமான புதுத்தகவல்.

அகதி என்பதற்கான சொல் ஏதிலி! அதை அராஜகமாக அதிதியுடன் குழப்பிக் கொண்டேன். மன்னிக்க!

சரவணன்

சமீரா said...

நல்லதொரு தமிழ் விளக்க பதிவு!! ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க..இவ்ளோ விபரம் சேகரிக்க!!
நமக்கே தெரியாம இவ்ளோ வடசொற்களை பயன்படுத்திட்டு தமிழ் மூச்சு பேச்சுன்னு சொல்றோம்!!
பிறமொழி கலப்பினை தவிர்கறது கொஞ்சம் கடினம் தான்!!

ராஜ நடராஜன் said...

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சொல்லிக் கொடுக்கிறது.சபேசன் என்ற தமிழ் வாத்தியார் கும்பகோணம் வெத்திலை மென்ன வாயால தமிழ் சொல்லிக் கொடுப்பார் பாருங்கோ கத்துக்கிடறது தமிழா இல்ல கதையான்னு தோணும்.

ராஜ நடராஜன் said...

நக்ஸ்!பதிவு படிச்சிட்டு முன்னாடி பின்னூட்டம் போட்டேன்.இப்பத்தான் உங்களை கவனிச்சேன்.
இப்பவெல்லாம் நாம இல்லாட்டி பின்னூட்டம் களைகட்டாது போல இருக்கே:)

கட்டுவதற்கும்,கொட்டுவதற்கும் சில இலக்கணங்கள் இருக்கின்றன.

ராஜ நடராஜன் said...

வவ்சு!நெனச்சேன்.இன்னும் கொஞ்சம் சொரிஞ்சுக்கோங்க:)

நக்ஸ்!இது எப்படி? கோர்த்து விட்ட பலன் தெரியுதா:)

ராஜ நடராஜன் said...

அனானி!அப்புறமா சரவணன்.இந்த நியாயம் நல்லாயிருக்குது.ஏன்னா அனானியா வர்றதுக என்னோட பெண் விசிறிகள்ன்னு வவ்சு பீத்திக்கிறார்:)

நீங்க அசினோட பிறந்த தேதி நோட்டு திருவல்லிக்கேணியில கிடைக்குன்னு வழிகாட்டுனா சொன்னா இவரு நுமிஸ்மாடிக் வழிகாட்டுறார்:)

ராஜ நடராஜன் said...

//மேலும் அகதி என்பதற்கு திரும்புதல் என்று ஒரு பொருளும் இருப்பதால்,புலம் திரும்பியவர் என்றும் சொல்லலாம்.//

அகதி என்ற சொல்லுக்கு இடம்,பொருள் அத்தனையையும் இழந்து தன் சுயவிருப்பமற்ற நிர்பந்தங்களால் வெளியேறுபவர்களை நிலம் இழந்து புலம் சென்றவர் என்பதே சரியான பொருளாக இருக்க முடியும்.

வவ்வால் said...

சரவணன்,

நன்றி!

நானும் உபுண்டு பயன்ப்படுத்திப்பார்த்துட்டு வேலைக்காவலைனு விட்டுட்டேன், அதனைப்பயன்ப்படுத்த கொஞ்சம் பொறுமையும் தேவைப்படுது.

எல்லாருக்கும் தெளிவா பதில் சொல்லணும்னு விரிவா மெனக்கெட்டு சொன்னா, வளவள வவ்வ்வாலா, ...அவ்வ்வ்

#ஏதிலி நல்ல தமிழ்ச்சொல்,ஆனால் ஒன்றுமில்லாத வறியவரை நேரடியாக குறிப்பதால் ,அகதிக்கு பொறுத்தமாக வராது.ஏன்னா உள்லூரிலேயே பலர் ஏதுமற்ற நிலையில் இருக்கிறார்கள் தானே.

ஏதிலியை ,அதிதியுடன் மசலா மிக்ஸ் செய்து ,வேறென்னமோ எல்லாம் கண்டுப்பிடிச்சாச்சு :-))
------------
அனானி,
நன்றி!

சேவைனா எனக்கு ரொம்பெ பிடிக்கும், ஹி...ஹி சேமியா சேவை :-))
---------------
சமீரா,
நன்றி!

ஒரே நாளில் செய்வதில்லை, அவ்வப்போது கிடைக்கும் சொற்களை சேமித்துக்கொண்டே வருவதை தான் ,கொஞ்சம் விளக்கமாக பதிவாக்கினேன். இன்னும் நிறைய சொற்கள் இருக்கு, அதற்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கம் தயார் செய்து போடணும்.

# பிற மொழி சொற்களை பயன்ப்படுத்துவது தவிர்க்க முடியாத சூழல் தான் ,ஆனால் எது பிறமொழினே தெரியாமல் இருக்கும் நிலை சரியல்லனு தான் பதிவிடுகிறேன்.
-------------

ராச நட,

வாரும்,நன்றி!

அப்போலாம் பெரும்பாலான தமிழாசான்கள் "VSP"பார்ட்டிகளாகவே இருந்திருக்காங்க. அதுவும் செய்யுள் எல்லாம் நன்னா ராகம் போட்டு பாடுவாங்கோ :-))

முன் பெஞ்சில உட்காரும் பசங்களுக்கு பன்னீர் புகையிலை வாசம் மூக்கில அடிக்கும் :-))

அந்த அளவுக்கு "பம்ப்செட்' ஓடும் :-))

#
//கட்டுவதற்கும்,கொட்டுவதற்கும் சில இலக்கணங்கள் இருக்கின்றன.//
நானாவது காமெடி செய்கிறேன்னு தெரிஞ்சே செய்யுறேன்,ஆனால் காமெடினே தெரியாம ஒருத்தர் காமெடி செய்யுறாரே :-))

# சொரியிரதா நினைச்சு , முள்ளு எடுத்து சொரிஞ்சுக்கிறாரே :-))

#அனானியா வந்தாலும் பேரு போடுங்கன்னு சொன்னதே நான் தானே, சரவணன் அதை சரியா செய்யுறார்.

ரூபா நோட்டுல என்ன நம்பர் வேண்டிக்கிடக்கு, எனக்கு வேண்டிய நம்பர் அது எவ்வள்வு ரூபானு சொல்லும் நம்பர் மட்டுமே :-))

# // நிலம் இழந்து புலம் சென்றவர்//

ரொம்ப சின்னதா சொல்லுறிங்க இன்னும் கொஞ்சம் நீட்டமா சொல்லுறது :-))



? said...

வெளியிட்டுள்ள படத்தை பார்த்தால் கற்றது மலையாளம் என்றல்லாவா தெரிகிறது?

அதிதி குழப்பம் தமிழில் ஒரு த மட்டும் இருப்பதால் வரும் குழப்பம். அதிதி சம்ஸ்கிருத வார்த்தைகள்.

Cologne சம்ஸ்கிருத அகராதியிலிருந்து

Aditi: one of the most ancient of the Indian goddesses, daughter of Daksha and wife of Kas3yapa , mother of the Adityas and of the gods

Atithi: one who has no fixed day for coming "') , a guest , a person entitled to hospitality ; N. of Agni ; of an attendant on Soma ; N. of Suhotra (king of Ayodhya1 , and grandson of Ra1ma).

வடக்கில் பல Atithi niwas எனும் விருந்தினர் விடுதிகளை அதாவது ஹோட்டல்களை பார்க்கலாம். பிச்சைக்கார விடுதி என ஓட்டல் கட்டினால் எவனாவது வருவானா? ஆக அதிதி என்பது பிச்சைக்காரனை குறிப்பதல்ல, தீடீரென சொல்லாமல் அழைக்காமல் வரும் விருந்தினன்; இது மொழி அகராதிப்படி. அப்படி வரும் விருந்தினரை பிச்சக்காரன் என்பது வவ்வாலின் அகராதி!

Anonymous said...

அப்ப.. அகராதி ப(பு)டிச்ச வவ்வாலா?...:-)


ரவிகுமார்

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

மலையாளம் தமிழின் குழந்தையல்லவா, மேலும் மலையாளத்தில் தான் இன்னும் பல "அழகு தமிழ்ச்சொற்கள்"அப்படியே புழக்கத்தில் உள்ளது.

"சிந்துநதியின் மிசை நிலவினிலே சேரர்தம் நாட்டுப்பெண்களுடனே தோணிகள் ஓட்டி விளையாடிடுவோம்"

எனப்பாடிய பாரதியின் கூற்றினை மெய்யாக்க துடிக்கும் தமிழனய்யா நான் :-))

அதிதி வடமொழினு சொல்லிதானே விளக்கியிருக்கேன்,மேலும் அழையா விருந்தாளின்னு சொல்லி இருக்கேனே கவனிக்கலையா. அக்காலத்தில் பிச்சை கேட்கும் சாமியார்களே அதிதியாக போவார்கள்,என்பதெல்லாம் சொன்னப்பிறகும் ஆரம்பத்தில இருந்து ஆரம்பிச்சா எப்படி.

நீங்க சொன்னாப்போல அதிதி நிவாஸ்னு உணவகம் இருக்கலாம்,ஆனால் வழக்கமாக அதிதி என்ற சொல் எதை பெரும்பாலும் குறிக்கும் என்பதை வைத்து பொருள்னு பார்க்க வேண்டாமா?
----------------
ரவிகுமார்,

நன்றி!

அகராதி பிடித்து இருப்பதால் ,படிப்பேன் :-))

ஒன்னு பிடிச்சா தானே அதை செய்வோம்!

Anonymous said...

///அகராதி பிடித்து இருப்பதால் ,படிப்பேன் :-))

ஒன்னு பிடிச்சா தானே அதை செய்வோம்!///


சிலேடை...அருமை....தமிழ்!!!தமிழ்!!!


ரவிகுமார்

ராஜ நடராஜன் said...

வவ்சு!இது போன பதிவு பின்னூட்ட உள்குத்து பதிவுதானே:)

பாகவதரை கலாய்க்க இப்படி பாக வதமா:)

Anbazhagan Ramalingam said...

நல்ல பதிவு .நன்றி!

குறும்பன் said...

நல்ல இடுகை. குத்து விளக்கோடு பக்கவாட்டில் நின்று படம் பிடிக்க பசின் நின்றது மிக அழகு, நன்றி. (கலைக் கண்ணோட பார்க்கனும் ;) ).
அநியாயமா முறையின்மை என்று சொல்லக்கூடாது. அச்சொல்லை விட முறையற்ற என்பது பேச்சு வழக்குக்கு நன்றாக இருக்கும்.

NRIs are migrated from India (I Believe). Unless they don't get citizenship from other country (Indian passport so officially Indian) they can come back (that is the only option for them :) ). So i think புலம்பெயர்ந்தவர்கள் என்பது பொதுவாக 'migrated" என்பதையே குறிக்கும் is not true.

Anonymous said...

சீரிய பதிவு


மனோகரன்

முட்டாப்பையன் said...

வவ்வால்.புல் தடுக்கி பயில்வானை எல்லாம் பெரிய ஆள் என்று நினைத்து பிரபா போஸ்டல் கமெண்ட் போடுறீர்.அவரு லச்சணம் தாம் தெரிந்த கதையாயிற்றே.கிளப்பி விட்டுட்டு வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்.வேற கருத்து ஒன்னும் சொல்ல மாட்டார்.

கருத்து போடும் முன் நமக்கு உகந்த ஆளா தகுதி இருக்கிறதா என்று பாரும்.இதோ இந்த லிங்க்ல் உள்ளதை காபி பண்ணி அங்க போட்டா கமெண்ட்ஐ நீக்குறார்.

https://www.facebook.com/vikkiulagam/posts/380911152007390?comment_id=2117371&notif_t=feed_comment_reply

தரத்தை பார்த்துக்கொள்ளும்.

வவ்வால் said...

ரவிகுமார்,

நன்றி!

சிலேடைகளும் பிடிக்கும் சில அடைகளும் பிடிக்கும் :-))
-----------

ராச நட,

வாரும்,நன்றி!

இதிலென்ன நுண்ணரசியல் கண்டீரோ, தமிழ் மட்டுமே இதில் உள்ளது அரசியலில்லை.
--------------

அன்பழகன் ராமலிங்கம்,

நன்றி!
---------
குறும்பன்,

நன்றி!

கலைக்கண் அது முக்கியம்,(கா)மாலைக்கண் இல்லாதவரையில் நல்லது!



நியாயம்- பெயர்ச்சொல்

முறையின்மை -பெயர்ச்சொல்.

முறையற்ற என சொன்னால் அது வினைஎச்சமாகவும், பெயரெச்சமாகவும் தொக்கி நிற்கிறது.

முறையற்ற செயல் -இங்கு வினை எச்சம்.

முறையற்ற மனிதன் பெயரெச்சம்.

முறையற்றது என வினைமுற்றாக முடித்து இருக்கலாம்.

அப்படியே இன்னும் வினைஉரிச்சொல்,பெயர் உரிச்சொல்னும் ஜல்லி அடிக்கவும் வாய்ப்பு இருக்கு :-))

ஏதோ எனக்கு தெரிந்த இலக்கணம் இம்புட்டு தான் அதை வைத்து ஒரு சொல்லை போட்டு இருக்கிறேன்.
------------

மனோகரன்,

நன்றி1
---------

முட்டாப்பையர்,

என்னய்யா இது அக்கப்போரா இருக்கு, அங்கே இருந்து இங்கே இஸ்த்துக்கிணு வாரீர் :-))

சரி,சரி விடும், பதிவர்னு இருந்தாலே பின்னூட்டத்தை தூக்காத ஆளுங்க யாரு.

எல்லாம் என்னைப்போல மறப்போம்,மன்னிப்போம்னு தாரலமாக இருப்பாங்களா என்ன?

Anonymous said...

நல்ல பதிவு.


by---

Maakkaan.

வெற்றி said...

வவ்வால்,
நல்ல பதிவு. படித்துப் பயனடைந்தேன்.
நல்ல முயற்சி. தொடருங்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் குமரன், இராகவன், பொன்ஸ் போன்ற பதிவர்கள் சொல் ஒரு சொல் எனும் பதிவு மூலம் நல்ல தமிழ்ச் சொற்களை
இனம் காட்டி வந்தார்கள். என்ன காரணமோ அவர்கள் அந்த முயற்சியைத் தொடரவில்லை.



அகதி எனும் சொல்லுக்குப் பதிலாக ஏதிலி எனும் சொல்லை சில நூல்கள்/செய்தித்தாள்கள் புழங்கியிருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் வாசித்த ஞாபகம்.

அடுத்து, விரைவு என்ற சொல் தமிழ் சொல்லா? விரைவு வடமொழிச் சொல்லென எண்ணியிருந்தேன்.

விரைவு என்பதை சுறுக்காக என பேச்சு வழக்கில் எமது ஊரில் புழங்கியதைக் கேட்டிருக்கிறேன்.

நன்றி.



வவ்வால் said...

மாக்கான்,

நன்றி!
-------

வெற்றி,

நன்றி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நம்மப்பதிவு பக்கம் வந்து இருக்கீங்க போல :-))

அப்போவே குமரன்,பொன்ஸ்,ராகவன் அப்படிலாம் செய்தார்களா?(மறந்திருப்பேன் என நினைக்கிறேன்) நான் தான் கவனிக்கலை போல, ஏதோ இப்போ நானும் ஆரம்பிச்சு இருக்கேன்.

பொதுவாக எதுவுமில்லாதவர்கள் - ஏதிலி எனப்பொருள் கொடுப்பதால் சரியாக வராது என நான் நினைக்கிறேன்.

விரைவு தமிழ்தான் ,ஸ்துரிதம் என்பதை துரிதம் என தமிழில் எழுதிவிட்டதால் ,பெரும்பாலும் துரிதம் என புழங்கி வருகிறார்கள்.

சுருக்கம்= சிறியதாக , சுறுக்கம் என்றால் குறுக்கே என பொருள் வருது,

சுருக்கமாக= ஷார்ட் என சொல்வது, ஒரு வேலையை சுருக்கா முடின்னா சீக்கிரமா முடினு எங்க ஊரிலும் சொல்வதுண்டு, பேச்சு வழக்கில் ,சீக்கிரம்,சுருக்கம், விரைவு எல்லாம் ஒரே போல தான்.

சுறுக்கா செய் என்றால் குறுக்கு வழியில் செய்னு வரும் போல.