Wednesday, September 12, 2007
சிமெண்ட் செங்கல்லை இணைப்பது எப்படி?
பசைக்கொண்டு காகிதம் ஒட்டுகிறோம் , அதே போல சிமெண்ட் கொண்டு இரண்டு செங்கல்லை ஒட்ட முடிகிறது , எவ்வாறு அது ஒட்டுகிறது. சிமெண்ட் , பசை இதற்கெல்லாம் ஒட்டும் , இணைக்கும் தன்மை எப்படி வருகிறது.
சிமெண்ட் கால்சியம் சிலிகேட்,கால்சியம் கார்பனேட், கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் பொடி செய்யப்பட்ட கலவையாகும். தண்ணீருடன் கலந்து கிடைக்கும் பசை போன்ற சிமெண்ட் காயும் போது ஏற்படும் நீரேற்ற வினையினால்(hydration) கெட்டிப்படுகிறது, அப்பொழுது அது கால்சியம் சிலிகேட் ஹைட்ரேட் ஆக மாறிவிடும்.அது ஒரு திரும்ப பெற இயலாத வேதி வினை ஆகும். சிமெண் குழம்பு செங்கல்லில் உள்ள நுண்ணிய துளைகளில் புகுந்து காயும் போது இறுகுவதால் பிடித்துக்கொள்ளும். இதன் மூலம் இணைக்கும் தன்மை கிடைக்கிறது. இது மட்டும் இல்லாமல், சிமெண்டில் உள்ள மூலக்கூறுகளின் மின்னியல் பண்புகளும் இணைப்பு சக்தியை சிமெண்டிற்கு தருகிறது.
மேலும் சிமெண்டுடன் தண்ணீர் சேர்ப்பதால் கால்சியம்சிலிகேட், கால்சியம் அலுமினேட் போன்ற மூலக்கூறுகள் பிளவுற்று கால்சியம் அயனிகள்(ca2+) உருவாகும், எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை , அவற்றில் எலெக்ட்ரான்கள் என்ற எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் இருக்கும். செங்கல்லில் உள்ள அணுக்களில் இருந்து சில எலெக்ட்ரான்கள் பிணைப்பில் இருந்துவிடுபட்டு கால்சியம் அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும். கட்டுமானப்பணியின் போது செங்கல் மீது தண்ணீர் தெளிப்பார்கள் ,இது எலெக்ட்ரான்கள் விடுபட்டு எளிதாக இடம் மாற உதவும். இவ்வாறு எலெக்ட்ரான் பரிமாற்றத்தால் ஏற்படும் பிணைப்பிற்கு கோவேலண்ட் பாண்ட்(covalent bond) என்று பெயர்.இதன் மூலம் மூலக்கூறுகளிடையே ஒரு இணைப்பு விசை உருவாகும் அதற்கு வாண்டர் வால்ஸ் விசை(wanderwalls force) என்றுப்பெயர்.
செங்கல்லை சிமெண்ட் இணைப்பதன் காரணம் மேல் சொன்ன இரண்டும் தான்.மேலும் சிமெண்டில் நீரேற்ற வினை ஏற்பட்டு இறுகும் போது சுருங்கும் , அதன் காரணமாக வெடிப்பு ஏற்படலாம் சில சமயங்களில். மேலும் முழுவதும் நீரேற்றம் ஆகாத மூலக்கூறுகளையும் நீரேற்ற அதிகப்படியாக தண்ணீர் கட்டுமானத்தின் மீது ஊற்றப்படும். இதற்கு செட்டிங் என்பார்கள் சாதரணமாக 28 நாட்கள் தேவைப்படும்!
இதே போன்று பசை காகிதத்தை ஒட்டவும் , எலெக்ட்ரான்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் கோவேலண்ட் பாண்ட் தான் காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
படித்த இயற்பியல் நினைவுக்கு வந்து செல்கிறது.
வவ்வால்
இந்த செங்கல் மற்றும் சிமின்ட் சேர்க்கும் போது செங்கல் மீது தண்ணீர் தெளிப்பார்கள் என்று சொல்லியுள்ளீர்கள்.
நமது பொதுப்பணித்துறை standard படி பார்த்தால் செங்கல்லை 3 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து அதற்குப்பிறகு தான் கட்டவேண்டும் என்று இருக்கும் ஏனென்றால் அந்த கல் சிமின்ட்டுடன் இணையும் போது சிமின்ட்டில் உள்ள தண்ணீரை உறிஞ்சிவிடக்கூடாது என்று.சிமின்ட்டில் உள்ள தண்ணீர் அதன் இறுகும் தண்மைக்கு தான் அதை செங்கல் எடுத்துகொண்டால் சிமின்ட் இறுகும் கால வேகம் அதிகரிக்கும் ஆனால் அதன் strength் குறைந்துவிடும்.
பெரும்பாலும் பல நிறுவனங்கள் இதை செய்வதில்லை,நீங்கள் சொல்லுவது போல் லேசாக தண்ணீர் தெளித்துவிடுகிறார்கள்.
சிமின்ட் செட்டிங்க்கு முதல் 7 நாட்கள் தான் மிக முக்கியம்,அப்போது தான் கெமிக்கல் ரியாக்ஷ்ன் அதிகமாக இருக்கும் அப்போது வெப்பமும் அதிகமாக வெளிப்படும்.அதை மட்டுப்படுத்த மட்டுப்படுத்த கான்கிரீட்டில் விழும் விரிசல்கள் குறையும் அதே சமயத்தில் நன்றாக இறுகும்.
28 நாட்களில் முழுவதுமாக முடிவுக்கு வரும்.Design செய்யப்பட்ட அளவை கான்கிரீட் பொதுவாக 10 நாட்களிலேயே அடைந்துவிடும்.
இதில் நிறைய விஷயம் உள்ளது.
வவ்வால்
கலக்குறீங்க..சூப்பர்..
பகிர்வுக்கு நன்றி!
சிமெண்ட்டுலே இவ்வளோ விஷயம் இருக்கா? அதை நான் கவனிக்கலையே(-:
குளிர்காலத்துலே சிமெண்ட் சீக்கிரம் காயாதுன்னு இங்கே 'க்விக் சிமெண்ட்'ன்னு ஒண்ணு
போட்டாங்க.
ஆழியூரான்,
தங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும் நன்றி,
//படித்த இயற்பியல் நினைவுக்கு வந்து செல்கிறது.//
சைக்கிள் ஓட்டிக்கிட்டே போகும் போது ஞாபகம் வருதேனு காதுல பாட்டு சத்தமும் கேட்குமே :-))
வாங்க குமார்,
கண்டிப்பாக விளக்கமான பின்னூட்டம் உங்களிடம் இருந்து வரும்னு எனக்கு தெரியும், சொல்லாமல் விடுபட்டதை எல்லாம் எடுத்து சொல்லிட்டிங்க நன்றி!
//3 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து அதற்குப்பிறகு தான் கட்டவேண்டும் என்று இருக்கும் ஏனென்றால் அந்த கல் சிமின்ட்டுடன் இணையும் போது சிமின்ட்டில் உள்ள தண்ணீரை உறிஞ்சிவிடக்கூடாது என்று//
3 நாட்கள் என்பது புதிய தகவல். ஆனால் நீர் ஒரு அனைத்து கறைப்பான் என்பதால் கொஞ்சம் எலெக்ட்ரான்களையும் பிணைப்பிலிருந்து விடுவிக்க மட்டும் என நினைத்தேன்.
ஆம் குமார், நிறைய இருப்பதால் , சிமெண்டின் ஒட்டும் தன்மைக்கு விளக்கம் மட்டும் போட்டு வைத்தேன்!
சிவபாலன் நன்றி!
துளசிகோபால் நன்றி!
வேகமா இறுகும் சிமெண்ட் , சிறப்பு கட்டுமானங்களுக்கு தான் பயன்படுத்துவார்கள் , பொதுவாக பயன்படுத்துவதில்லை. காரணம் இறுகும் போது சிமெண்ட் சுறுங்கும் , அது ஒரு சீராக நடக்க வேண்டும், இல்லை எனில் விரிசல் விழலாம் , அது வெளிப்பார்வைக்கு தெரியாமல் கூட இருக்கும். மேலும் நுண்துளைகள் உருவாகும் , அதன் அளவும் அதிகம் ஆகும்.
ஆனால் நல்ல வலிமையான சிமெண்ட் தான் , ஆற்றில் பாலம் கட்ட எல்லாம் இவ்வகை சிமெண்ட் தான் பயன்படுத்துகிறார்களாம்.
ஆகா. எத்தனை தகவல்கள் இருக்கின்றன இந்த 'சாதாரணமானதொன்று' என்று பலரும் நினைப்பதில். எழுத எண்ணினால் பல நல்ல இடுகைகள் எழுதலாம் என்று உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து உறுதிபடுத்துகிறீர்கள் வவ்வால்.
குமரன்,
//சாதாரணமானதொன்று' என்று பலரும் நினைப்பதில். எழுத எண்ணினால் பல நல்ல இடுகைகள் எழுதலாம் //
பதிவு போடவென்று இல்லை வழக்கமாக "சாதாரணமாக" இருப்பதில் இருக்கும் அறிவியல் பின் புலன் அறிவதில் எனக்கு விருப்பம் உண்டு. அதன் விளைவாக எனக்குள் எழும் கேள்விகளுக்கு வழக்கமாக விடை தேடுவேன் , தற்போது வலைபதிவெல்லாம் இருப்பதால் பிடித்ததை பதிவாகவும் இப்போது போடுகிறேன்(இது ஒரு சவுகரியம் மொக்கை போட).
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
வவ்வால்!
இவ்வளவு விபரமாகப் படிக்கவில்லை.
ஒரு சந்தேகம் நம்ம ஊர்க் கொத்தனார்களுக்கு இந்த விபரம் தெரியுமா???
பழைய முருகைக்கல் கட்டங்கள் சுண்ணாம்புச் சாந்தால் இணைத்திருப்பார்கள். அதற்கும் இதே
விஞ்ஞானக் காரணம் தானா?
என் பேத்தியார்(பாட்டி) அந்த நாளில் மண்வீடுகள் கட்ட மண்குழைக்கும் போது, கோழிமுட்டை,சர்க்கரை,பிசின்
வேறு பல பொருட்கள் கூறினார்,கலப்பார்களாம்.பலமான சுவராக இருப்பதற்காக...இந்த விபரம்
எங்கள் ஈழஎழுத்தாளர் பாலமனோகரன் எழுதிய 'நிலக்கிளி' எனும் கிராமிய நாவலில் குறிப்பிட்டிருந்தது.
இதை நீங்கள் அறிந்துள்ளீர்களா???
யோகன்,
நன்றி!
சுண்ணாம்புகல் கொண்டு தான் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. எனவே சுண்ணாம்பு கலவையும் இதே அடிப்படையில் தான் செயல் படுகிறது.
நீங்கள் சொன்ன முட்டை , சர்க்கரை , பிசின் எல்லாமே எலக்ட்ரோலைட் திரவம் போன்றவை, கோ வேலண்ட் பிணைப்பிற்கு உதவக்கூடும். மேற் சொன்ன கலவைக்கொண்டு தான் "fresco" எனப்படும் சுதை ஓவியங்கள் நம்ம ஊர் கோவில்களில் வரைந்து இருப்பார்கள்.கூடப்பச்சிலை சாறுகளும் சேர்த்துக்கொள்வார்கள்.
முட்டையின் வெள்ளைக்கரு , சாதாரண ஒட்டும் பசையை விட வலிமையாக ஒட்டும் தண்மை கொண்டது!
செட்டினாடுப்பூச்சு என்று ஒன்று உண்டு. சுவரைத்தொட்டால், பளிங்கைத் தொடுவது போல் இருக்கும்.
திருமலை நாயக்கர் மகாலைப் புதுப்பிக்கும் பொழுது, எண்பதுகளின் ஆரம்பத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். இதிலுள்ள பொருட்களில் முட்டைக்கருவும் ஒன்று.
இந்தக் கலையைத் தெரிந்தவர்கள் இன்று இருந்தால், இதை patent செய்ய முன் வர வேண்டும்.
நல்ல பதிவு!
வாங்க அனானி ,
அப்படி செய்வது தமிழக/இந்திய முறை பூச்சு அதற்கு செட்டி நாடு பூச்சு என்று பெயரா எனத்தெரியாது.
அப்படி பூச்சு வழவழப்பாக இருக்க காரணம் , கூழாங்கல் கொண்டு பூசிய பிறகு சீறாக தேய்த்து விடுவார்கள்.எவ்வளவு கவனித்து தேய்க்கிறோமோ அவ்வளவு வழு வழுப்பு வரும்!
வவ்வால் இப்படியெல்லாம் சொன்னா இதென்ன ஸ்கூலான்னு கேப்பாங்கன்னுதான் சொல்லலை.இல்லைன்னா உங்களை முந்தியிருக்கலாம்.
அப்புறம் சிமெண்ட் நீருடன் சேர்ந்து கால்சியம் அலுமினோ சிலிக்கேட் ங்கிற ஒரு கூழ்மமா [colloid]மாறும்.அதுதான் செங்கல் இடுக்குகளில் பரவி மெதுவாக இறுகத் தொடங்குகிறது.
உபரி தகவல்:சிமெண்ட் மெதுவாக இறுகினால்தான் வலிமை மிக்கதாக இருக்கும்.எனவேதான் அதில் ஜிப்சம் சேர்ப்பார்கள்.ஜிப்சம் என்பது ஹைட்ரேட்டட்கால்சியம் சல்பேட்[CaSo4 2H2O].
இப்படி ஈரநிலை சிமெண்ட் இறுகி கெட்டிப்படுதல்தான் செட்டிங் ஆப் சிமெண்ட் எனப்படுகிறது.
கண்மணி,
நன்றி,
//வவ்வால் இப்படியெல்லாம் சொன்னா இதென்ன ஸ்கூலான்னு கேப்பாங்கன்னுதான் சொல்லலை.இல்லைன்னா உங்களை முந்தியிருக்கலாம்.//
அடுத்தவங்க எதாவது நினைப்பாங்கனு மொக்கை மட்டுமே போட்டுக்கிட்டா இருக்க முடியும்!
நாம் படித்ததை அப்படியே பகிர்ந்து கொள்வோமேனு போட்டு வைக்கிறது தான்.
நான் என் பதிவில் அறிவியல் பேசுவதை விட அடுத்தவங்க பதிவில் தான் அதிகம் பேசுவேன், :-))
கூழ்மம் என்பதை தவிர்த்து விட்டு "சிமெண்ட் பசை" என போட்டேன், ஒரு அழுத்ததிற்காக!ஒட்டும் தண்மையை அழுத்தி சொல்ல வேண்டுமே அதான்!
//உபரி தகவல்:சிமெண்ட் மெதுவாக இறுகினால்தான் வலிமை மிக்கதாக இருக்கும்.எனவேதான் அதில் ஜிப்சம் சேர்ப்பார்கள்//
சிமெண்ட் மெதுவாக இறுகும் போது கிடைக்கும் வலிமையை விட வேகமாக இறுகும் போது அதன் வலிமை அதிகம். ஆனால் அதனால் நிறைய கேவிட்டி உருவாகும் , விரிசல் வரும், மேலும் அதிக வெப்பம் வெளிப்படும். சில சமயம் கான்கிரிட் உருவம் மாறிவிடும்.செட்டிங்க் ஆவது சீராக இருக்காது.
மெதுவாக இறுகும் போது இதனை தவிர்க்கலாம். அதற்காக ஜிப்சம் கலக்கிறார்கள் ஜிப்சம் இல்லாத சிமெண்ட் கூட இருக்கிறது. வகைகளை எல்லாம் சொல்லி பெருசாக்க விரும்பாமல் விட்டு விட்டேன்.
போர்ட் லேண்ட் சிமெண்ட் என்பது தான் உண்மையான சிமெண்ட் , தற்போது சந்தையில் விற்பது எல்லாம் பிளெண்டட் சிமெண்ட் எனப்படும் , அனல் மின் நிலைய சாம்பல் கலந்தது. கிட்ட தட்ட 40 சதம் இருக்கும்.
நான் கேள்விப்பட்ட ஒன்று,பிளெண்டட் சிமெண்ட்டை அரசு கட்டு மானத்திற்கு பயன்படுத்த தடை உள்ளது. குறிப்பாக அணைகள் ,பாலங்கள் கட்ட கூடாது.டெண்டர் விடும் போதே இதனை குறிப்பிட்டு சொல்லி தான் விடுவார்கள்.
இதை 'chettinad plastering'என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பழைய நினைவு. கூகிளாண்டவரின் உபயத்தில்
இது குறித்து சில மேற்கோள்கள். இதுவே வேறு பெயரில் மற்ற ஊர்களில் இருந்திருக்கலாம்!
"Another original technique called lime or egg plastering, involved the application of a finely ground mixture of powdered shells, lime, jaggery and spices, including gallnut (myrobalan), to walls. After plastering, the surface was gently sponged with a fine piece of cloth as the plaster ‘sweated’ out its moisture. This technique keeps the interior of the house cool in the hot and humid Indian summers and lasts for a lifetime, or longer. The muted shine and even appearance of the final finish actually comes from the egg whites. Today, this too is a dying tradition, a victim of chemical substitutes like acrylic distempers and plastic emulsions."
" The Chettiars had the plaster made from an elaborate concoction of roots, yolk and lime that made the Chettinad walls silky, cool and washable, "Tragically, nobody today has the formula for this wonderful plaster, called the Chettinad plaster", Muthiah points out."
அனானி ,
முன்னர் வந்த அனானி தான், விரிவான தகவல்களுக்கு நன்றி, அந்த அடிப்டையில் கட்டடம் கட்டுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என நினைக்கிறேன், பழைய கட்டிடங்கள் சிலவற்றை இப்படி பராமரிப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். மேலும் கோயில்கள் சிலவற்றை புனரமைக்கும் போது பழைய முறையைப்பயன்படுத்தி தான் கோபுரம் முதலானவற்றை செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
அந்த சுண்ணாம்பு கலவைக்கொண்டு கட்டிடம் கட்டி வசிக்க தான் தற்போது ஆட்கள் இல்லை. ஆனால் விஷயம் தெரிந்த கட்டுமான கலைஞர்கள் இருக்கக்கூடும்.
Post a Comment