Wednesday, October 09, 2013

புதுவை புத்தகச்சந்தை- 2013!

(புத்தகம்னா ரொம்ப புடிக்கும்,புத்தகம் படிக்கிறவங்களையும் ரொம்ப புடிக்கும்,பொதுவாத்தான் சொன்னேன்...ஹி..ஹி)


வாரக்கடைசியில ஊர்ப்பக்கமா போயிட்டு வரலாமேனு கிளம்பினேன் , கடற்கரையோரமா போனால் காத்து சிலு சிலுனு ஜில்பான்ஸா அடிக்கும் , அப்பிடியே போற வழியில புதுவையில தொண்டைக்கு இதமா நல்லத்"தண்ணி" கிடைக்கும் தொண்டைய கொஞ்சம் நனைச்சிக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டு வச்சால் என்னிக்கு நாம நினைச்சது நடந்திருக்கு இன்னிக்கு நடக்கனு நொந்துக்க வேண்டியதா போச்சு, கடைசி நேரத்துல நம்ம வாகன ஓட்டி வேற வேலை இருக்குனு காலை வாரிட்டார்(சீப்பு வச்சு வாரினாரானுலாம் கேட்கப்படாது)சரினு கடைசியில பஸ்ஸ புடிக்கலாம்னு கிளம்பினா , ஊருல இருக்க எல்லாருமே அன்னிக்குனு ஊருக்கு கிளம்பிடுறாங்கய்யா அவ்வ்!

ஒரு வழியா தமிழர்களின் கலாச்சாரப்படி சன்னல் வழியா துண்டப்போட்டு எடம்புடிச்சு ,ஏறியாச்சு ,புதுவையில இறங்கியும் ஆச்சு, இறங்கியதும் நம்ம கண்ணில பளிச்சுனு ஒரு வெளம்பரம் பட்டுச்சு , புத்தி வேண்டாம்னு சொன்னாலும் ,மனசு மசால் வடை தேடிப்போற எலி மாதிரி சொன்னப்பேச்சு கேட்க மாட்டேங்குது அவ்வ்!



யே யப்பா ஏதோ அஜால் குஜால் விளம்பரம் பார்த்து எங்கியோ போய் மாட்டிக்கிட்டான்னு குஜாலாக வேண்டாம், நான் பார்த்த வெளம்பரம் "புதுவை புத்தகக் கண்காட்சி-2013" என்பது தான்!

ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மைதானத்தில் நடப்பதாக போட்டிருந்தது, இவ்விடத்தில் தான் புதுவையில் பெரும்பாலான பொருட்காட்சி &கண்காட்சிகள் (கண்ணை தோண்டி வச்சிருப்பாங்களானு கேட்கப்படாது) நடக்கும் ,அல்லது பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா திடலில் நடக்கும்.

சரி இம்புட்டு தூரம் வந்தாச்சு ,ஒரு எட்டு புத்தகச்சந்தைக்கு  போயிட்டு அப்பாலிக்கா தாகசாந்தி செய்துக்கலாம்னு ஒரு தானீயங்கி மூவுருளிய புடிச்சா , ரொம்ப நியாயமா ஒரு கொள்ளைரேட்டு சொல்லுறாங்க,  பேருந்து நிலையத்தில இருந்து ஏ.எஃப்டி மில் திடல் சுமார் 1.5 கி.மீ தான் இருக்கும் அதுக்கு  ரூ 60 னு சொல்லுறாங்க, ஹே...ஹே நாம கேட்ட ஆளு எப்புடினு பாவம் பயப்புள்ளைக்கு தெரியலை , போட்ட பிளேடுள , வேற எதாவது வண்டிப்புடிச்சுக்கோங்க , ஆளைவிடுனு அப்பீட் ஆகிட்டாப்படி, அப்புறம் 30 ரூவாய்க்கு சல்லீசா ஒரு தானியப்புடிச்சு சந்தைக்கு போயாச்சு, இனிமே சந்தை நிகழ்வுகளை ஒளிப்படங்களாக காணுங்கள்!

ஏ.எஃப்.டி திடல் என்பது புதுவை கடலூர் சாலையில் , புதுவை உயர்நீதிமன்ற கிளைக்கு எதிரில் உள்ளது.

புத்தகச்சந்தையின் முகப்பு ,மஞ்சள் வெயில் மாலையிலே சும்மா தகத்தகனு எம்சிஆரு மாதிரி சொலிக்குது :-))




வலப்புறம் உணவகம் என்ற பெயரில் ஒரு தகர கொட்டாயில இமாச்சலப்பிரதேஷின் ஆப்பிள் சூசு கடையும்,பஜ்ஜி,போண்டா கடையும் வச்சிருக்காங்க. சாப்பிடத்தூண்டும் வகையில் பெருசாவோ,சிறுசாவோ அல்லது திரிசாவோ இல்லை,எனவே ஒரு ஆப்பிள் சூசு மட்டும் குடிச்சு பார்த்தேன் , 20 ரூபா , காசுக்கு பழுதில்லைனு சொல்லலாம்.




#இந்த மஞ்சக்கலர் போர்டை படிக்காம உள்ள போயிட்டு , வரும் போது ஒரு சலசலப்பை கிளப்பிட்டேன் , ஹி...ஹி கடமையே கண்ணா படம் மட்டும் எடுத்திருந்தேன் அவ்வ்!

# போர்டில் என்னா போட்டிருக்குனு படிச்சு வச்சுக்குங்க,நான் என்னா பண்ணேன்னு கடசீல சொல்லுறேன்!

ஆப்பிள் சூசு கடை, கப்பு சூசு 15ரூ, அட்டை டப்பா 20ரூ ,கண்ணாடிக்குடுவை 30 ரூ





# இந்த கடையில ,பொன்னியின் செல்வன்,காவற்கோட்டம், பாலகுமரனின் உடையார்னு ஏகப்பட்ட சரித்திர புதினங்களாக இருந்துச்சு ,ஆனால் விலை தான் என்ன போல தரித்திரங்கள் வாங்க முடியாத வகையில இருக்கு , சரி போட்டா எடுக்க காசா ,பணமானு போட்டா மட்டும் புடிச்சிக்கிட்டேன், வேற வழி அவ்வ்!






# ஹி...ஹி இந்த கடையிலயும் நிறைய புத்தகங்கள் தான் இருந்துச்சு, மிக்சி ,கிரைண்டர்னு எதுவுமே இல்லை...அடேய் புத்தக சந்தையில இருக்க கடையில வேற என்ன இருக்கும்னு நினைச்சேனு டெங்க்சன் ஆவாதிங்கோ, என்ன எழுதுறதுனு தெரியாம ச்சும்மா ஒரு மொக்கை ஹி...ஹி!

# இந்த கிளக்கு படிப்பகம் காரங்களுக்கு ஆனாலும் ரொம்ப குசும்பு, புத்தக சந்தையை புதுச்சேரி கலைப்பண்பாட்டு துறை நடத்துகின்றது,ஆனால் இவங்க என்னமோ "சிறப்பா" தனியா நடத்துறாப்போல ஒரு பேனர் வச்சிருக்காங்க அவ்வ்!

கடையில சுஜாதா எழுதிய அந்தக்கால புத்தகங்களை மறுபதிப்பு போட்டு கொள்ளை விலையில விக்குறாங்க, ஆனால் அதே புத்தகங்களே வேற பதிப்பகங்களில் மலிவாக கிடைக்குது, இதையும் குறிப்பிட்டு கேட்டேன் ,பேப்பர் குவாலிட்டியா இருக்காம், ம்ஹூக்கும் அப்படியே வாங்கிட்டு போய் ஃப்ரேம் போட்டு வைக்கவா போறோம், படிச்சு கிழிக்க பேப்பர் எப்படி இருந்தா என்ன?

ஒரு காலத்தில "மணிமேகலை பிரசூரம்" உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி முதல் ,நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள் வரை எல்லா தலைப்பிலும் புத்தகங்களை போட்டு தள்ளுவாங்க, அப்போ நினைச்சுக்கிறது இதெல்லாம் யாரு வாங்குவாங்கனு ,அதே போல கிளக்கும் எல்லா தலைப்பிலும் புத்தகம் போடுறதுனு கிளம்பிடுச்சு ,எல்லாருக்கும் வாழ்க்கை வரலாறு, மேலும் ஆயக்கலைகள் 64 க்கும் புக்கு இருக்கும் போல :-))




# பாரதியார் கலைக்கூடம்னு ஒரு நுண்கலை பயிற்சி மையம் அரியாங்குப்பம் அருகே இருக்கு, அவர்கள் ஒரு கடைப்போட்டிருக்காங்க,, அங்கே போய் உட்கார்ந்து "போஸ்' கொடுத்தா நம்மளை அழகா படம் வரைஞ்சு கையிலவே கொடுத்தனுப்புறாங்க, ஏற்கனவே நாம சுமார் மூஞ்சி என்பதால் ,படம் வரையிறவங்களை சோதனைக்குள்ளாக்காமல் நழுவிட்டோம், அங்கே ஒரு குட்டிப்பையனும் படம் வரைஞ்சிக்கொடுத்துக்கிட்டு இருக்காரு ,வருங்காலத்துல ஹீசைன் போல்ட்(ஹி...ஹி தப்பா சொல்லிட்டேன்னு பின்னூட்டத்தில் என்னை திருத்தவும்) போல பெரிய ஓவியரா வருவாராக்கும்!


#எதிர் வெளியீடு (பொள்ளாச்சி) பேரே ஒரு மார்க்கமாக இருக்குனு  யாரும் கடைக்குள்ள போகவேயில்லை போல , நான் போய் ஒரு புக்கு வாங்கினால் , சார் நீங்க தான் முதப்போணி சில்லறையில்லைனு சொல்லிட்டார்(அப்போ மணி மாலை 5 அவ்வ்) பெரும்பாலான கடைகளில் இதான் நிலை சில்லறையில்லைனு சொல்லி அனுப்பிடுறாங்க, வர்ரவன் எல்லாம் 50 ரூவா புக்கு வாங்கிட்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டுனா என்ன செய்யனு என்ன முன்ன போக விட்டு பின்னாடி பொலம்பினத நானும் கேட்டுட்டு கேட்காத மாரியே வந்துட்டேன் அவ்வ்!

ஹி...ஹி அப்படியும் ஒரு கடையில பிடிவாதமா சரி ரெண்டு புக்கு வாங்குறேன்னு சில்லறைய மாத்தி கொடுக்க வச்சிட்டோம்ல!






# விகடன் வெளியீடு கடையில சுஜாதா, மதன் எழுதிய நூல்கள், விகடனில் தொடரா வந்தது எல்லாம் போட்டு கடைய ரொப்பி வச்சிருக்காங்க, பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், பதிவருமான அமுதவன் அவர்கள் சமீபத்தில் எழுதிய " என்றென்றும் சுஜாதா" என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. ஆனால் அங்கே இன்னொரு புக்கு கண்ணில் சிக்கியது, திருப்பூரின் பிரபல தொழிலதிபதிவரான 'ஜோதிஜி" எழுதிய டாலர் நகரம் தான் , ஆனால் விலை தான் டாலரில் சம்பாதிக்கிறவங்களுக்கு ஏத்தாப்போல வச்சிட்டாங்க , சரி போட்டாவாச்சும் எடுத்துப்போம்னு எடுத்துக்கிட்டேன்.

டாலர் நகரம் பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்" படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்‌ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!






"We tamilan" செபாஸ்தியன் சீமான் செவுளிலேயே அப்பிடுவேன் என்பது போல கைய ஒங்கிட்டு படம் போட்ட ஒரு புக்கு, ஏன் இம்புட்டு கோவமா இருக்கார்ன்னு பார்த்தால் ,பக்கத்தில "லிங்கூ' என்ற ஒலக மகா கவித புக்கு அவ்வ்!

 உண்மையில விகடனுக்கு அசாத்திய துணிச்சல் தான் ஓசில கொடுத்தாக்கூட வாங்க மாட்டாங்க  லிங்கூ புக்க ,அதுவும் விலை 60 ஓவா, பக்கத்துக்கு நாலு வரி கவித, எதிர் பக்கத்தில , மசிய பூசிட்டு எச்சித்தொட்டு அழிச்சாப்போல ஒரு படம்,

சாம்பிளுக்கு ஒரு சில பக்கங்கள் புரட்டி பார்த்தேன், தேர் வடம் புடிக்க நீ நடந்து வந்தாய், தேர் நகர்ந்தது...! இத மடக்கி ஒன்னுக்கீழா ஒன்னா எழுதி  மூனு புள்ளி ஒரு ஆச்சர்ய குறி போட்டிருக்கு , கவிதயாம் , முடியலடா சாமி! செபாஸ்தியன் சீமான் கோவமா கைய ஓங்கிட்டு நிக்குறதுல தப்பேயில்லை :-))

சின்ன குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் கொண்ட கடை,அடியேன் மனசளவில் இன்னும் ஒரு கொழந்தை தான் என்றாலும் ,அங்கே வச்சிருந்த டிர் டிர் கிளு..கிளுப்பைக்கூட வாங்க என்னிடம் காசில்லையே அவ்வ்வ்!

நாளு புக்கு 200 ரூவானு போர்டு தொங்கிச்சேனு பார்த்தேன் ,எல்லாம் ஆங்கில பாக்கெட் நாவல்கள், இதெல்லாம் பைகிராப்ட்ஸ் ரோட்டில 25 ரூவாய்க்கே கிடைக்கும்!



புதுமைப்பித்தன் ,இப்பவும் புதுசாத்தான் இருக்கார்!



# ஜெமோவின் எழுத்தாள பிம்பம் அவரை விட பெருசா வளர்ந்து போச்சு போல , என்னமோ கவர்ச்சி நடிகை படம் போட்டு விக்குற வார இதழ்கள் போல அவரு படத்தை வித விதமா டிசைன் செய்து எல்லா புக்கிலும் போட்டிருக்காங்க, ஆனால் யாரும் எடுத்துக்கூட பார்த்தாப்போல தெரியலை.

இதே கடையில "பிரபல இலக்கியப்பதிவர்"ராஜா சுந்தர்ராஜனின் "நாடோடித்தடம்" புக்கும் கண்ணில பட்டிச்சு , அட்டைப்படம் தான் அந்தக்கால 'ராணி முத்து" போல ஒரு பொண்ணு படத்தை பெருசா போட்டிருக்கு ,வரைஞ்ச படம் போல, இன்னும் அதே போல "அடாசான" அட்டைப்பட வடிவமைப்பில ரமணிச்சந்திரன் நாவல்கள் மட்டும் தான் வந்துக்கிட்டு இருக்குனு நினைச்சேன், ஏன் நானும் இருக்கேன்லனு ராஜா சுந்தரராஜன் ஆஜாராகிட்டார் அவ்வ்!

அடுத்தப்பதிப்பில "இலக்கியத்தரமாக " அட்டைப்படம் போடுங்க சார், இல்லை பொண்ணு படம் தான் போடுவேன்னு அடம்பிடிச்சிங்கனா ,ஹி...ஹி நான் சொல்லுற படத்த போடுங்க! நானே எல்லாரையும் புக்கு வாங்க சொல்லி ரெக்கமண்ட் செய்வேன்!



# கண்ண தாசன் புத்தக நிலையத்தில், கவிஞர் கன்னத்தில கைய வச்சு ரொம்ப தீர்க்கமா சிந்திச்சுக்கிட்டு இருந்தார், அப்பாலிக்கா தான் நாம எதுக்கு வந்தோம், என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்னு உறைச்சது ஹி...ஹி!


# மஞ்ச போர்டை படிக்காம ,படம் மட்டும் எடுத்துட்டு போனாதால ,சல சலப்பாச்சுனு சொன்ன மேட்டருக்கு வருவோம்.




வெளியில் வரும் வழியில் , புக்கு எல்லாம் வாங்கி ,பில்லு இருக்கானு செக் பண்ணுறாங்க, பில்லின் ஒரு காப்பியும் வாங்கி வச்சிக்கிறாங்க, சரி அது போகட்டும், ஆனால் புக்கு மேல "மறு விற்பனைக்கல்ல, 15% தள்ளுபடி"னு ரப்பர் ஸ்டாம்ப் வச்சி சீல் போட்டு தராங்க, அது என்ன தள்ளுபடில கொடுத்தாலும் ,என்னமோ இலவசமா கொடுக்கிறாப்போல இப்படி முத்திரைக்குத்துறிங்களேனு கேட்டால் ,அதான் வாசலில் போர்டு வச்சிக்கீறோமேனு சொல்லுறாங்க, அப்படியும் விடாம சீல் போடக்கூடாதுனு சொன்னேன், சீல் போடலைனா 10% மட்டும் தள்ளுபடி, சீல் போட்டால் 15% கூடுதல் தள்ளுபடியாம், சீல் வேண்டாம் என்றால் 15%  இல்லைனு தான் போர்டுல போட்டிருக்கு, 15% பணத்தினை திரும்ப செலுத்த வேண்டும் என வெளக்கினார்கள், அவ்வ்!. மேலும் சில விவரங்களும் சொன்னார்கள்,

புதுவை புத்தகச்சந்தையில் மொத்தம் 25% தள்ளு படி அளிக்கிறார்கள், இதில் 10% தான் புத்தக விற்பனையாளர்கள் அளிப்பது, மீதி 15% ஐ புதுவை அரசு அளிக்கிறது, முதலில் இப்படி சீல் எல்லாம் போடாமல், பில்லின் ஒரு காப்பியை மட்டும் வாங்கிக்கொண்டு தான் இருந்தார்களாம், ஆனால் புத்தக விற்பனையாளர்கள், சும்மா பில் போட்டு வெளியில் எடுத்து போய்விட்டு மீண்டும் உள்ளே எடுத்து வந்து விற்கிறார்கள், இதன் மூலம் புத்தகங்களை விற்காமலே , 100 ரூவாக்கு 15 ரூபா லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதை தடுக்கவே , வெளியில் எடுத்து செல்லும் புத்தகங்களில் சீல் போடுவதாகவும் சொன்னார்கள்.

புதுவை அரசு படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கவும், மக்களுக்கு மலிவாக புத்தகங்கள் கிடைக்க வேண்டும் எனவும் , நிதி ஒதுக்கி தள்ளுபடி அளிக்க செய்வதிலும் ,இந்த புத்தக விற்பனையாளர்கள் குறுக்கில் புகுந்து கைய வைக்கிறாங்களே, அப்புறம் என்ன அறம்,முறம்னு பினாத்த வேண்டியது,அரசு புத்தக வெளியீட்டாளர்களுக்கு உதவியே செய்யலைனு பொலம்ப வேண்டியது?

தமிழகத்தில் எல்லாம் இப்படி கூடுதல் தள்ளுபடி கொடுக்க அரசு நிதியே ஒதுக்குவதில்லை, புதுவையில் ஏதோ பெரிய மனசு செய்து நிதி ஒதுக்குறாங்க, அதிலும் இப்படி குழப்படி செய்தால் ,வருங்காலத்தில் ஒரே அடியாக அரசு சார்பான தள்ளுபடியே இல்லை என அறிவிக்க கூடும், இது மக்களுக்கு தான் இழப்பு, புத்தக வெளியீட்டாளர்கள் வழக்கம் போல 10% தள்ளுபடியில் கடைப்போட்டுக்கொண்டு ,மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைஞ்சுப்போச்சுனு சொல்வதில் அர்த்தமேயில்லை!
-------------------------------------------------------------

பின் குறிப்பு:

யாருக்காச்சும் நன்றினு சொல்லியாகனும் இல்லைனா , சண்டைக்கு வந்தாலும் வருவாங்க போல எனவே,

# வாகன உதவி, த.நா போக்குவரத்து கழகம்,குடந்தைக்கோட்டம்,

# தள்ளுபடி அளித்துதவியவர்கள், பபாசி மற்றும் புதுவை அரசு கலைப்பண்பாட்டு துறை!

# ஒளிப்படங்கள் உதவி,அடியேன்!

# பதிவேற்ற உதவி, பிலாக்கர்.காம் இணைய தளம்.

நன்றி!
--------------------------

25 comments:

Philosophy Prabhakaran said...

ஆரம்பத்தில் தெளிவாக இருந்த புகைப்படங்கள் போகப் போக ஷேக் ஆகியிருக்கிறதே... உள்ளே சென்ற திரவ உணவு... அதான்யா ஆப்பிள் சூசு வேலையைக் காட்டிடுச்சா ?

குட்டிபிசாசு said...

ஆடி ஆடி படத்தை எடுத்தீரா? சரக்கை நினைச்சாலே போதை வரும்போல.

…//பொன்னியின் செல்வன்,காவற்கோட்டம், பாலகுமரனின் உடையார்னு ஏகப்பட்ட சரித்திர புதினங்களாக இருந்துச்சு ,ஆனால் விலை தான் என்ன போல தரித்திரங்கள் வாங்க முடியாத வகையில இருக்கு //

…எனக்கும் புதுசா புத்தகம் வாங்கனும்னு தான் ஆசை ஆனா விலைய பார்த்தால்....

…//டாலர் நகரம் பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்" படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்‌ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!//

…உண்மையா சோடி போட்டுத்தான் இருந்ததா? இல்லாட்டி நீயே ரெண்டு புத்தகத்தையும் வச்சி உன் அபிப்ராயத்தை சொல்லுரீரா?

சார்வாகன் said...

நல்ல பதிவு சகோ!!

ஏதேனும் புத்த்த்கம் வாங்கினீரா இல்லையா???

உமதுநிழல் பதிவுக்கு ஒரு நீட்சி பதிவு போட்டு இருக்கேன்.

வாழ்க வளமுடன்!!

நன்றி!!!

Anonymous said...

நீங்க பாண்டிச்சேரி ல தான் போட்டோ எடுத்திருக்கீங்கன்று போட்டோவ பார்த்தாலே நல்லாவே தெரியுது. ஹி...ஹி...ஹி...

இப்படிதாங்க, நானும் புத்தக வாங்கலாம்னு சென்னை பச்சையப்பாஸ் காலேஜ் எதிர்த்தாப்ல இருக்குற புத்தக கண்காட்சிக்கு போன வருஷம் போனேன். போய் 3 னு புக் வாங்கினது தான் மிச்சம். ஒரு புக்குல 4 பக்கம் கூட முழுசா படிக்கல (முடியல). ஏன் தெரியுமா? நான் சில காலமா, இணையதளத்துல தலை கீழ் ப்ளாக் படிக்கிறதால, இதுல உள்ள சுவாரசியம் புத்தகத்துல இல்ல. நீங்களாவது வாங்கினதோடு இல்லாமல் புல்லா படிச்சி முடிங்க....

”தளிர் சுரேஷ்” said...

நக்கல் உங்களுக்கு நல்லாவே வருது! சிறப்பாக புத்தக கண்காட்சியை பகிர்ந்தமைக்கு நன்றி! படங்கள்தான் சில் தெளிவில்லாமல் உள்ளன!

? said...

ரொம்ப நாளா பதிவே போடாததால் உம்ம கடைக்கு வந்து வந்து சலித்துவிட்டது. அதனால கேப்விட்டா அதுகுள்ளற 2 பதிவு போட்டிருக்கீர்! நீர் மறுபடியும் பதிவிட்டதாக சகோ சார்வாகனின் பதிவை தமிழ்மணத்தில் பார்த்துவிட்டு வருகிறேன்.

பதிவு பூராவிலும் புததகம் வெலை ஜாஸ்தி, கிலுகிலுப்பை வாங்க காசில்லை என புலம்பியிருக்கீர். அதை படிச்சதும் 'மைடியர் மார்த்தான்டன்' படத்தில் கவுண்டமனி, பிரபுவையும் சிவாஜியையும் 'ஏனுங்க ஏழைங்களா' என்பார் அதுதான் ஞாபகம் வந்துச்சி! கார் மட்டுமில்லாம அதுக்கு டிரைவர் வேற வசசிருக்கீர் இதுக்கே இந்த பாட்டு!

நான் ஒரு ஓட்டை சைக்கிள் வச்சிகிட்டு பைக் வைச்சிருக்கேன்னு ஊரை ஏமாத்தி கிட்டு இருக்கேன் (இருக்குற நாட்டுல சைக்கிள பைக்குன்னுதான சொல்லுறானுக, பத்தாதுக்கு அதுக்கு கியரெல்லாம் வேற இருக்கு, அதனால சொல்லுறது ஒரு விதத்தில் பொய்யில்ல பாருங்க!) நானெல்லாம் எங்க போய் புலம்பறது?

-----------
//அப்புறம் என்ன அறம்,முறம்னு பினாத்த வேண்டியது,அரசு புத்தக வெளியீட்டாளர்களுக்கு உதவியே செய்யலைனு பொலம்ப வேண்டியது?//

அறம் முறமெல்லாம் அடுத்தவனுக்கு சொல்லுறது.ஊருல 5 பைசா ஏமாத்தறவனை எதிர்த்து இயக்கம் நடத்திபுட்டு தனக்கு தேவைன்னதும் லம்பா சினிமா தலைப்பை வெட்கமில்லாமல் சுடுவதுதான் நம்மாளுக வழக்கம்! இந்த காப்பிரைட் குறித்து பதிவு போடுவதாக அடித்து விட்டீர் என்னாச்சு?

Anonymous said...

வாவ்!!!வவ்ஸ்!!!

நல்ல பதிவு....ஆனால் படங்ககளும் மப்பு கட்டியிருக்கு....:-)


+++மாக்கான்

வவ்வால் said...

பிரபா,

வாரும்,நன்றி!

ஹி...ஹி ஆப்பிள் சூசுக்கெல்லாம் அசையுற கட்டையா இது, ஆஃப் அடிச்சாலும் எறும்பு கடிச்சா போல இருக்கேனே இன்னொரு கட்டிங் இறக்குவோம்ல!

வேற ஒன்னும் இல்ல, ஒரு கையில புத்தகங்கள் சேர்ந்தவுடன் ஒத்த கையில மொபைல புடிச்சிட்டு அப்படியே கிளிக்குனது, வியூ பார்க்கும் போது தெளிவா இருக்கவும் அமுக்கினா அப்போ ஷேக் ஆகிடுச்சு, வூட்டுக்கு வந்தப்பிறகு தான் படத்தோட லட்சணம் தெரியுது அவ்வ்!

-------------------------------

குட்டிப்பிசாசு,

வாரும்,நன்றி!

ஹி...ஹி கேமராத்தான் ஆடிப்போச்சு ,அடியேன் இஸ்டெடியாத்தான் எப்பவும் இருப்போம், அதுவும் சரக்கு உள்ளப்போனால் தான் இன்னும் நிதானமா இருப்பேன்,அப்போத்தான் உள்ளொளி பீறிட்டு கிளம்பி இருக்கும் அவ்வ்!

# விலையெல்லாம் சர்வ சாதரணமாக 400-500னு இருக்கு. லிங்கு புத்தகம்ம் ஒரு காலத்தில விகடனில் கொடுக்கும் இலவச இணைப்பு அளவு தான் இருக்கு அதுவே 60 ஓவா அவ்வ்!

மலிவான விலையில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடுகள் கிடைக்குது,தென்னிந்திய கோயில்கள் என்ற புக்கு 226 பக்கம், 70 ரூவாத்தான் தள்லுபடியில் 45 ரூவாவுக்கு வாங்கினேன், தரமான காகிதமும் கூட.கிளக்குலாம் கொள்ளையடிக்கிறாங்க, இந்த லட்சணத்துல மக்களுக்கு வாசிக்கும் பழக்கம் குறைஞ்சு போச்சுனு பொலம்பல் வேற!

# சோடிப்போட்டு வைக்கிற எடமா ,ரெண்டும், பெத்த கைங்க,, நீர் சொன்னாப்படி சோடி போட்டு வைக்க நான் என்ன அரசியல் தரகரா, ஒரு படம் எடுத்ததுக்கே என்ன கஞ்சா கேசுல உள்ள தள்ள வழிக்காட்டுறீர் அவ்வ்வ்!
-----------------

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

பதிவு படிச்சேன் நன்றி!

ஹி...ஹி விலைய பார்த்து பார்த்து சில புத்தகங்கள் வாங்கியாச்சு, அதன் தாக்கம் வரும் பதிவுகளில் காணலாம், ஹி..ஹி கவித புத்தகங்கள் கூட வாங்கினேன்,எனவே மீண்டும் கவிப்பிரவாகம் எடுக்கலாம் உசாரு :-))
--------------------------

வவ்வால் said...

வேற்றுகிரவாசி,

வாரும்,நன்றி!

பாண்டில நின்னு பச்சத்தண்ணி குடிச்சா கூட ஒரு மார்க்கமாத்தான் பார்க்கிறாய்ங்க அவ்வ்!

படம் ஆடிப்போனதுக்கு காரணம் திரவத்தின் விளைவு இல்லை, ஒத்த கையால எடுத்தேன்.

# புத்தகம் படிக்க ரொம்ப நேரம் எடுக்குது, ஆனால் நான் எல்லா புக்குலவும் கொஞ்சம் ,கொஞ்சம்னு உருட்டிக்கிட்டே போயிடுவேன் அவ்வ்!

கடைசில தலைக்கீழ் ஆசாமி உங்களையும் பாதிச்சுட்டாரே அவ்வ்!

தலைக்கீழ் ஆசாமிக்கு எழுதவே தெரியாதுனு ஊருக்குள்ள ஒரு பேச்சு இருக்கு,ஆனால் நீர் அதுக்கு தலைக்கீழா கருத்து சொல்லுறீர் ,எல்லாம் தலைக்கீழ் விளைவா அவ்வ்!
----------------------

சுரேஷ்,

வாங்க,நன்றி!

என்னது நக்கலா, அதெல்லாம் எனக்கு சாமி சத்தியமாத்தெரியாது சாமி(ஹி ஹி நாத்திகன் இப்படிலாம் பேசலாமானு கேட்கப்படாது) ஏதோ உள்ளதை உள்ளபடிக்கா சொல்லி வச்சிருக்கேன்.

படம் ஆடியதற்கு மேல விளக்கம் சொல்லி இருக்கேன், இன்னும் பல படங்கள் இதை விட கோரமாக வந்துடுச்சு,அதை எல்லாம் போடலை!
------------------

நந்தவனம்,

வாரும் நன்றி!

கடைய எப்போ திறப்பாங்கனு "டாஸ்மாக்" கடை முன்ன தவமாய் தவமமிருப்பது போல நம்ம கடைக்கும் ஆளுங்க இருக்காங்களே ,பலே வவ்வால் பலே!

சார்வாகன் (கண்டிப்பாக சுவனத்துல ஹூரிக்கள் கிடைக்க கடாவக)புண்ணியத்துல தகவல் கிடைச்சுதா, நன்றி!

# விலை எல்லாம் சாமானியனுக்கு கட்டுப்படியாகத நிலை! அதான் பொலம்பி வச்சேன் ,அது பொறுக்கலையே அவ்வ்!

# கரகாட்டக்காரன் படத்துல வரமாரி ஒரு வண்டி அதுக்கே ஏன் இப்படி பொகைய விடுறீர்( அந்த காரு இருக்கட்டும் ,சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கானு கேட்டுப்புடாதீர் அவ்வ்வ்)

# டாலர் தேசத்தில இருந்துக்கிட்டு பைக்(சைக்கிள்)னு கதைய விட வேண்டியது, ஓய் நீர் வேலை செய்யும் வளாகத்தில மோட்டார் வாகனங்கள் ஓட்ட தடை என்பதால் பைக் ஓட்டுறீர் என்பதும், ஷாப்பிங் செல்ல "லம்போர்கினி" பயன்ப்படுத்துவதாகவும் CIA fact book இல் போட்டிருக்கு :-))

#//அறம் முறமெல்லாம் அடுத்தவனுக்கு சொல்லுறது.ஊருல 5 பைசா ஏமாத்தறவனை எதிர்த்து இயக்கம் நடத்திபுட்டு தனக்கு தேவைன்னதும் லம்பா சினிமா தலைப்பை வெட்கமில்லாமல் சுடுவதுதான் நம்மாளுக வழக்கம்//

ஹி..ஹி இதுக்கு பேரு தானுங்ணா பிழைப்பு வாதம், டாஸ்மாக்கில் குவாட்டருக்கு 5 ரூவா புடுங்குறாங்க பத்தாததுக்கு சேரில் உட்கார்ந்து சரக்கடிக்க ஒரு நபருக்கு 15 ரூபா/மணி ,நான் ஏசி, ஏசிக்கு 30 ரூவா.அந்த கடைக்கு தான் நம்ம பதிவுலக மக்கள் அடிக்கடி போறது,ஆனால் அங்கே எல்லாம் சத்தமே காட்ட மாட்டாங்க :-))

மேல சொன்ன கட்டணம் சில இடங்களில், பெரும்பாலான இடங்களில் சரக்கடிக்க உட்கார 5 ரூ மினிமம். புட்டிய வாங்கும் போதே 5 ரூ எடுத்துக்கிட்டு டோக்கன் கொடுக்கிறாங்க அவ்வ்!

இதுவே டீக்கடையில் டீக்கு 10 ரூவா ,உட்கார்ந்து குடிக்க 5 ரூவானு கேட்டால் எல்லாம் அறச்சீற்றம் காட்டிட மாட்டங்க :-))

# //இந்த காப்பிரைட் குறித்து பதிவு போடுவதாக அடித்து விட்டீர் என்னாச்சு?//

என்னய கிளப்பிவிட்டு வில்லங்கமாக்கலைனா தூக்கம் வராதே, ஏற்கனவே தலைவருக்கு என் மேல செம காண்டு , அந்த மேட்டரை கிண்டினால் கொலவெறியாகிடுவாரோனு பார்க்கிறேன் அவ்வ்!

Amudhavan said...

புகைப்படங்கள் பற்றித்தான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். பார்த்தால் நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்.புகைப்படத்துக்கெல்லாம் அதற்கே அதற்கென்று இருக்கும் காமிராதான் சரி. செல்போனில் இன்னமும் வாஷ்பேஷினும் இன்னொரு பேஷினும்தான் வைக்கலை என்று நினைக்கிறேன். மத்ததெல்லாம் வச்சி பாழடிச்சுட்டாங்க.
நான் எழுதிய கிடைக்காத புத்தகத்திற்கே சிவப்புக்கலரெல்லாம் போட்டு கிடைக்கலை என்று சொல்லியிருக்கிறீர். இன்னமும் பல ஊர்களில் கிடைக்கலை என்றுதான் நண்பர்கள் தொலைபேசுகிறார்கள். பல ஊர்களுக்கும் அனுப்பிவைப்பதில் நடைமுறைச் சிக்கல் என்று கேள்விப்படுகிறேன். நேற்றுதான் திருச்சியில் கிடைத்து வாங்கினேன் என்று நண்பர் ஒருவர் இன்று காலை போன் பண்ணியிருந்தார்.
ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட உங்களுக்கேயுரிய நக்கலும் நையாண்டியுமான நடையில் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறீர்கள்.
அதெல்லாம் போகட்டும். 'அந்தம்மாவின்' படங்கள் இன்னமும் எத்தனைக் கைவசம் வைத்திருக்கிறீர்கள்?

Anonymous said...

//தென்னிந்திய கோயில்கள் என்ற புக்கு 226 பக்கம், 70 ரூவாத்தான் தள்லுபடியில் 45 ரூவாவுக்கு வாங்கினேன்//

சாமி கும்பிடவா? அல்லது ஆராய்ச்சி பண்ணவா?

வவ்வால் said...

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

உங்கப்பதிவுல வந்து தகவல் சொல்லலாம்னு பார்த்தேன், சரி பதிவுல எழுத ஒன்னுமே மேட்டரே இல்லையேனு எழுதி வச்சுட்டேன், ஹி...ஹி நீங்க சொன்னாப்ப்போல ஒன்னுமே இல்லாம தான் பதிவ குன்சா ஜல்லியடிச்சு வச்சிருக்கேன்,ஆனாலும் உங்க அனுபவ கண்ணுல "ஒன்னுமேயில்லாத ரகசியம் "சிக்கிடிச்சு அவ்வ்!

புக்குலாம் வித்து தீர்ந்து போயிருக்கும்னு நினைச்சேன், எல்லா ஊரிலும் இப்போ தான் டிஸ்ட்ரிபூட் ஆகிட்டு இருக்கா, அப்போ ஓ.கே கிடைச்சிடும்.

# செல்போனில் இன்னும் மிக்சி ,கிரைண்டர்,வாஷிங் மெஷின் எல்லாம் வைக்கலையேன்னு மக்கள் கவலைப்படுறாங்க,நீங்க இதுக்கே அலுத்துக்கிறிங்க, வருங்காலத்தில செல்போன் வச்சு வடை சுடலாம், காபி போடலாம் போல கண்டுப்பிடிச்சுடுவாங்க, இப்போவே ரெண்டு செல் போன் வச்சு முட்டை வேக வைக்கலாம்னு கண்டுப்பிடிச்சிருக்காங்க :-))

#//. 'அந்தம்மாவின்' படங்கள் இன்னமும் எத்தனைக் கைவசம் வைத்திருக்கிறீர்கள்?//

ஹி..ஹி இருப்பது கையளவு இல்லாதது கூகிள் அளவு!

கூகிளாண்டவர் உள்ளவரையில் படத்துக்கு பஞ்சமில்லை :-))

---------------------

வேற்றுகிரக்கவாசி,

வாரும்,நன்றி!

என்னமா டவுட்டு வருது? பாண்டிய மன்னர் பரம்பரையோ?

மாமிய ச்சே சாமிய கும்பிட எல்லாம் புக்கு வாங்குற மூஞ்சு மாரியா தெரியுது அவ்வ்!

அந்த புத்தகம் வரலாற்று புத்தகம், தென்னிந்திய கோயில்கள் கட்டப்பட்ட காலம், கலைப்பற்றி சொல்லி இருக்கு, முன்னர் "temples of south india" என ஆங்கில பிடிஎஃப் ஒன்னு படிச்சேன் இந்த புக்குலவும் அந்த பேருல வந்த் ஆங்கில நூலின் தமிழாக்கம்னு போட்டிருக்கவே அதோட தமிழ் வடிவா இருக்குமோனு தான் வாங்கினேன் (ஹி..ஹி விலை மலிவு)ஆனால் ரெண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு,ஆனால் ஓரளவுக்கு தகவல்களும் இருக்கு, இன்னும் நல்லா விரிவா எழுதி இருக்கலாம்னு நினைக்கிறேன்.

கோயில் புக்கு வாங்கிட்டு கூடவே "நான் ஏன் நாத்திகன்" என்ற பகத் சிங்கின் புக்கும் வாங்கி கணக்கை நேர் செஞ்சிட்டேன்ல அவ்வ்!

தி.தமிழ் இளங்கோ said...

// ஒரு வழியா தமிழர்களின் கலாச்சாரப்படி சன்னல் வழியா துண்டப்போட்டு எடம்புடிச்சு ,ஏறியாச்சு ,புதுவையில இறங்கியும் ஆச்சு //

சன்னல் ஓர சீட்டுக்கு நடக்கும் அடிதடி பற்றி நீங்கள் ஒரு நகைச்சுவை பதிவைப் போடலாம்.

// வலப்புறம் உணவகம் என்ற பெயரில் ஒரு தகர கொட்டாயில இமாச்சலப்பிரதேஷின் ஆப்பிள் சூசு கடையும்,பஜ்ஜி,போண்டா கடையும் வச்சிருக்காங்க. சாப்பிடத்தூண்டும் வகையில் பெருசாவோ,சிறுசாவோ அல்லது திரிசாவோ இல்லை,எனவே ஒரு ஆப்பிள் சூசு மட்டும் குடிச்சு பார்த்தேன் , 20 ரூபா , காசுக்கு பழுதில்லைனு சொல்லலாம்.//

கண்காட்சி என்றாலே மிளகாய் பஜ்ஜி, பெரிய அப்பளம், பஞ்சு மிட்டாய் சாப்பிட்டே ஆகவேண்டும்.

// # போர்டில் என்னா போட்டிருக்குனு படிச்சு வச்சுக்குங்க,நான் என்னா பண்ணேன்னு கடசீல சொல்லுறேன்! //

போர்டை ஏன் வைத்தார்கள் என்று கடைசியில் தெரிந்து கொண்டேன்.

// கடையில சுஜாதா எழுதிய அந்தக்கால புத்தகங்களை மறுபதிப்பு போட்டு கொள்ளை விலையில விக்குறாங்க, ஆனால் அதே புத்தகங்களே வேற பதிப்பகங்களில் மலிவாக கிடைக்குது, இதையும் குறிப்பிட்டு கேட்டேன் ,பேப்பர் குவாலிட்டியா இருக்காம், ம்ஹூக்கும் அப்படியே வாங்கிட்டு போய் ஃப்ரேம் போட்டு வைக்கவா போறோம், படிச்சு கிழிக்க பேப்பர் எப்படி இருந்தா என்ன? //

தகவலுக்கு நன்றி! இனிமேல் புத்தக கண்காட்சிக்கு போகும் முன் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களின் விலையையும் இண்டர்நெட்டில் ஒப்பிட்டு பார்த்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

// புதுவை அரசு படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கவும், மக்களுக்கு மலிவாக புத்தகங்கள் கிடைக்க வேண்டும் எனவும் , நிதி ஒதுக்கி தள்ளுபடி அளிக்க செய்வதிலும் ,இந்த புத்தக விற்பனையாளர்கள் குறுக்கில் புகுந்து கைய வைக்கிறாங்களே, அப்புறம் என்ன அறம்,முறம்னு பினாத்த வேண்டியது,அரசு புத்தக வெளியீட்டாளர்களுக்கு உதவியே செய்யலைனு பொலம்ப வேண்டியது? //

சரியான இடத்தில் ஒரு குத்து விட்டீர்கள்.

அதெல்லாம் சரி! அசின் அம்மையார் என்ன புத்தகம் படிக்கிறார் என்று நீங்கள் சொல்லவே இல்லையே?



வவ்வால் said...

தி.தமிழிளங்கோ சார்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி கூட்டமான நாட்களில் முன்ப்பதிவு இல்லாமல் பயணம் செய்வது, இடம் பிடிப்பது எல்லாம் ஒரு காமெடியான சாகசமாகும், அதை எல்லாம் எழுதினா தொடராகத்தான் போடணும் அவ்ளோ இருக்கு , சமீபத்தில ஆம்புலன்ஸில் கூட 100 ரூவா கொடுத்துட்டு பயணம் செய்தாச்சு அவ்வ்!

இன்னும் அமரர் ஊர்தி மட்டும் தான் பாக்கி இருக்கு அதையும் முயற்சித்து பார்த்துடலாமானு பார்க்கிறேன் :-))

# அதெல்லாம் சாப்பிடுவது பொருட்காட்சி பாரம்பரியம் இல்லையா, ?இங்கேயும் மிளகாய் பஜ்ஜி,பிரட் பஜ்ஜினு இருந்துச்சு எல்லாம் எப்பவோ சுட்டு அடுக்கி வச்சிந்தாங்க , வாடி வதங்கி போய் இருந்துச்சு அதான் சாப்பிடலை :-))

# பிரபல எழுத்தாளர்கள் புத்தகம் என்றாலே இந்த கோல்மால் நடக்குது.

இதுல பெரிய கொடுமை என்னவென்றால், கல்கி, ஜெயகாந்தன்,புதுமை பித்தன்,பாரதியார் எனப்பல எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவை, ராயல்டியே கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம், ஆனால் அந்த வகைக்கும் வித விதமான விலையில் புத்தகம் போடுறாங்க, பொன்னியின் செல்வன் முழுத்தொகுதி 400-500 விலையில் விக்குறாங்க, அதே சமயம் 200 ரூக்கும் விக்குறாங்க.

லக்‌ஷ்மி நிலையமோ என்னவோ 240 ரூக்கு கெட்டி அட்டையுடன் மெல்லிய பேப்பரில் இருந்தாலும் தரமாகவே போட்டிருக்கு ,எனவே விலையை ஆராய்ந்து வாங்குவது நமக்கு நல்லதே.

#//சரியான இடத்தில் ஒரு குத்து விட்டீர்கள்.//

இன்னும் நல்லா குத்து விடனும், அப்போவாது இந்த புத்தக வெளியீட்டாளர்கள் திருந்துறாங்களானு பார்க்கனும்.

இவர்கள் செய்யும் கோல்மாலால் வாங்க வரவங்களுக்கு பல பிரச்சினைகள்,

பில் செக் செய்யவும், சீல் போலவும் என சுமார் பத்து கல்லூரி மாணவர்களை வாலண்டியராக வைத்துள்ளார்கள், அவங்களுக்கு சாப்பாடு மட்டும் போடுவாங்க போல.

இது தேவையில்லாத மனித ஆற்றல் இழப்பு. மேலும் நம்மை வேற வரிசையில் காத்திருக்க வைக்கிறாங்க.

சிலர் 10 புக்கு வாங்கியிருப்பாங்க,ஆனால் ஒரு சில புத்தகத்தின் பில்லை தவற விட்டுவிடுகிறார்கள், அவர்களை பில் இல்லாமல் வெளியில் விட மாட்டேன் என்க ,ஒரே வாக்குவாதமாகிடுது. ஒருத்தர் பில் இல்லாமல் நான் அரசு ஊழியர் என்ன போய் இப்படி கேட்கிறீங்களேனு பஞ்சாயத்து பேசிட்டு இருந்தார், விட்டாங்களா என்னனு தெரியலை,வேடிக்கை பார்க்காமல் வந்துட்டேன் அவ்வ்!

பில்லில் ஒருவர் சீல் போடுகிறார், புக்கில் ஒருவர் சீல் போடுகிறார், அப்புறம் புக்கை கவரில் ஒருவர் போடுகிறார், இதில் குழப்பமாகி புக்கெல்லாம் மாறி வேற போயிடுது, நான் குல்தீப் நய்யாரின் ஸ்கூப் வாங்கி இருந்தேன், அதை என் கண் முன்னாலே இன்னொருவரின் கவரில் போட்டு கொடுக்கிறாங்க, அந்த கவரை வாங்கிய நபரும் இதெல்லாம் பார்த்துக்கிட்டே தான் இருக்கார், ஆனால் நாம வாங்காத புக்க தராங்களேனு , இது நம்ம புக்கு இல்லைனு சொல்லவேயில்லை, அம்புட்டு நல்லவர்!!! ஏதோ நான் பார்த்துக்கிட்டே இருந்ததால், அது நான் வாங்கினது என சொல்லி திரும்ப வாங்கினேன், இது போல ஒரே கசமுசாவாகிடுது,எல்லாம் யாரால? அரசு கொடுக்கும் மாநியத்தை அமுக்க குறுக்கு வழி தேடும் புத்தக வெளியீட்டளர்களால் தானே?

சென்னை புத்தக சந்தையில் எல்லாம் இப்படி பில் செக் செய்து முத்திரைக்குத்தனும் என்றால் என்னாகும்? ஒரே சண்டையாகிடாது அவ்வ்!

இதை பதிவில எழுதனும்னு நினைச்சேன் மறந்துட்டேன் , உங்க பின்னூட்டம் நியாபகப்படுத்திடுச்சு!

#//அதெல்லாம் சரி! அசின் அம்மையார் என்ன புத்தகம் படிக்கிறார் என்று நீங்கள் சொல்லவே இல்லையே?//

இந்த புத்தகத்தின் பெயரென்ன? ஹி...ஹி புத்தகத்தின் பேரே அதான், எழுதியவர் "தி ஞான சூனியம்" வவ்வால், ஒரே ஒரு புக்கு மட்டும் அச்சடித்து படிச்சி பார்த்துட்டு முன்னுரை எழுதி தரே சொல்லி கொடுத்திருக்கேன் ,விரைவில் எல்லாருக்கும் கிடைக்கும் :-))

Anonymous said...

என்ன வவ்வால் படம் எல்லாம் மப்பில் எடுத்ததா ?
அட்டகாசமாக இருக்கு ஹிஹிஹிஹிஹிஹ்ஹி

babu siva

BABU SIVA said...

"என்றென்றும் சுஜாதா" என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. "

அப்படி ஒன்றும் தீர்ந்து போகல. விகடன் அப்படி அந்த புத்தகங்களை மொத்தமாக சுண்டல் கடைகாரங்களுக்கு வித்துட்டாங்களாம்

BABU SIVA said...

"" என்றென்றும் சுஜாதா" என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. "

நகைச்சுவை இல்லாம சீரியஸாக சொல்லுறது என்றால் அந்த புத்தகம் பிரபலமாகாமைக்கு காரணம், சுஜாதாவை பற்றி எத்தனையோ பேர் எழுதிட்டாங்க அது போதாது என்று அவர் மனைவி கூட சர்ச்சைக்குரிய விடயங்களை சொல்லிட்டாங்க.
இதெல்லாம் விட இந்த புத்தகத்தில் வேற என்ன இருக்க போகின்றது என்று யாரும் சீண்டல.

சுஜாதா பற்றி கிசு கிசு எழுதினா தான் இனி விக்கும்

வவ்வால் said...

அனானி பாபு,

நம்ம கடை வரை தேடி வந்ததுக்கு நன்றி!

ஆனால் காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு அமுதவன் அவர்களாஈப்பற்றி கூறீயவற்றை ஆட்சேபிக்கிறேன், சுஜாதா ரெங்கராஜனுக்கு சினிமா ஒளீவட்டம் எல்லாம் உருவாகாத காலம் முதல் பழகி வந்துள்ளவர் அமுதவன் சார்,எனவே அவருக்கு என்ன தெரியும் என நீங்களோ, நானோ மதிப்பிட இயலாது.

அந்நூல் வெளியாகி சில்நாட்கள் தான் ஆகிறது எனவே இன்னும் சரியாக விநியோகம் ஆகவில்லை,விரைவி ல் கிடைக்கும்,வாங்கிப்படிச்சுப்பார்த்துட்டு கருத்து சொல்லுங்களேன்!

# படமெல்லாம் ஆடிப்போனதுக்கு காரணாம் முன்னரே சொல்லி இருக்கேன், ஒரு வேளை படம் எடுத்துட்டு நேராக்கடைக்கு போயிட்டதால உள்ள இருந்தப்படமெல்லாம் வாசனபுடிச்சு தானா ஆடிப்போச்சோ என்னவோ அவ்வ்!

ஜோதிஜி said...

வீட்டுக்குள் வந்ததும் பயபுள்ள ஏதாவது எழுதியிருக்கான்னு மேலே இருந்து படித்துக் கொண்டே வர கீழே வந்ததும் ஒரு நிமிடம் தடுமாறி கீழே விழுந்து விட்டேன்.

என்னவொரு பெருந்தன்மை. என் புத்தக படம் மட்டும் தெளிவாக வந்துருக்கே.

Thekkikattan|தெகா said...

:)) ...சொல்லியிருந்தா கூடவே கண்ணு காட்சிக்கு நானும் வந்திருப்பேன்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிசின் படத்தோட இனி வைரசும் சேர்ந்து வந்தாதான் இவரு அடங்குவாரு போல.....

அ.பாண்டியன் said...

வணக்கம் வவ்வால் அய்யா!
தங்கள் நகைச்சுவை ததும்பிய பதிவைப் படித்து விட்டு உண்மையில் நான் தனியாக வாய்விட்டு சிரித்த அனுபவம் ஏற்பட்டது. அழகோ அழகு. பதிவு மட்டும் அல்ல கருத்துரைக்கு பதிலுரையும்.
======
ஆமாம் அசின் கையில லேப்டாப் தானே வச்சிருந்தாங்க! எப்ப உங்க புத்தகமா மாறி போச்சு!
=====
தலைகீழாய் தொங்கிக் கொண்டு பார்க்குறாரே இவர் மாறுபட்டு பதிவிடுவார் என்று நினைச்சேன். அது பொய்க்கவில்லை. பல்கலை வித்தகரின் நட்பு கிடைத்தது மகிழ்ச்சி.
====
புத்தக வெளியாட்டாளர்களின் கோல்மால்களை இன்று தான் அறிந்து கொண்டேன். புதுச்சேரி அரசின் முயற்சிக்கும், செயலுக்கும் பாராட்டுக்கள். (புத்தக கண்காட்சியை மனசுல வச்சு தானுங்க சொல்றேன்)
=====
உங்க கூட நோயாளி ஒரு வாரம் இருந்தால் அவன் நோய்விட்டு போவான் காரணம் அவன் வாய்விட்டு சிரிப்பான்.
=====
நல்லதொரு நகைச்சுவையான பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

ஜோதிஜி said...

பாண்டியன் இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியல. அவரு ஏற்கனவே அசின் மேல பிசின் மாதிரி ஒட்டி கெடக்குறாரு. நீங்க வேற அய்யா கொய்யான்னு.............

வவ்வால் said...

தொழிலதிபதிவரே,

வாங்கோ,நன்றி!

//மேலே இருந்து படித்துக் கொண்டே வர கீழே வந்ததும் ஒரு நிமிடம் தடுமாறி கீழே விழுந்து விட்டேன்.//

ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்பா வருவிங்க :-))

ஹி..ஹி நீங்க லேசுப்பட்ட ஆளா அதான் பொறுப்பா படம் எடுத்தோம், நல்லா வந்திருந்தா சரி தான்,ஆனாலும் டாலர் நகரமும், தலை நகரமும் செம சோடி பொருத்தங்க்ணா :-))
-----------------------

தெ.கா,

வாங்க,நன்றி!

உங்களை அழைக்கலாம் தான் ஆனால் குடந்தை கோட்டம் பேருந்துலாம் சரிப்படாது "ஏர்பஸ்" ஏ-747 இல்ல ஏற்பாடு செய்யணும் அவ்வ்!

அம்மா "தண்ணி முதல் டாஸ்மாக் வரையில் எத்தினியோ புரட்சிகர திட்டம் எல்லாம் போடுறாப்போல அமேரிக்காவுக்கும் தமிழ்நாடு அரசு பேருந்து விட்டு சாதனை பண்ணா நடக்கலாம் அவ்வ்!
-------------------------------

ப.ரா,

வாரும்,நன்றி!

ஒருப்படத்துக்கு இம்புட்டு அக்கப்போரா? ஏதோ அறியாத வயசுப்புள்ள படம் போட்டு மகிழுதுனு விடாமா என்னா இது வைரஸ், கிய்ரஸுனு மிரட்டிக்கிட்டு அவ்வ்!
----------------------
பாண்டியன் அய்யா,

வாங்க,நன்றி!

உங்க பாராட்டுக்கு நன்றி!
எல்லாம் உற்சாக பானத்தின் மகிமை ...ஹி...ஹி!

# ஹி..ஹி லேப் டாப்பு .. புத்தகம்னு நாம ஆசைப்பட்டதை கையில கொடுத்திடுவோம்ல :-))

# என் கூட நோயாளி இருந்தா நோய் போயிடும் ஏன்னா நோயாளியே போயிடுவார்ல அவ்வ்!
(இதை நான் சொல்லலைனா நம்ம தொழிலதிபதிவர் அடுத்த பின்னூட்டத்தில சொல்லிடுவாரு)

----------------

தொழிலதிபதிவரே,

அதானே என்ன அய்யா கொய்யானு பெருசுங்கள சொல்லுறாப்போல ஒரு பச்சமண்ண பார்த்து சொல்லுறாரே , எப்படி சொல்லலாம், இதை பார்த்துட்டு ஊரு உலகம் என்ன நினைக்கும் ?

நம்மள ஒருத்தர் நல்லவிதமா சொல்லிட்டா போதுமே , கிடக்கிற வேலைய எல்லாம் விட்டுட்டு வண்டிக்கட்டிக்கிடு வந்திடுவாங்களே அவ்வ்!

Vijayan Durai said...

//சாம்பிளுக்கு ஒரு சில பக்கங்கள் புரட்டி பார்த்தேன், தேர் வடம் புடிக்க நீ நடந்து வந்தாய், தேர் நகர்ந்தது...! இத மடக்கி ஒன்னுக்கீழா ஒன்னா எழுதி  மூனு புள்ளி ஒரு ஆச்சர்ய குறி போட்டிருக்கு , கவிதயாம் , முடியலடா சாமி! செபாஸ்தியன் சீமான் கோவமா கைய ஓங்கிட்டு நிக்குறதுல தப்பேயில்லை :-))
//
செமயா சிரிக்க வச்சிட்டீங்க வவ்வால் :)..
அடப் பாவிகளா இப்டிலாமா ஏமாத்துவாய்ங்க புத்தகக் கடைக்காரங்க!! புதுசு,புதுசா யோசிக்கிறாய்ங்க ப்பா ஏமாத்துறதுக்கு ..
புத்தகங்களைப்பற்றி நானும் ஒரு பதிவு போட்டுருக்கேன் ,
vijayandurai.blogspot.com/2013/10/pk1.html

ஒரு எட்டு வந்துட்டு போங்க வவ்வால் !