Tuesday, December 03, 2013

கட்டம் கட்டி கலக்குவோம்-1

(ஆட்டம் ஆரம்பம் ...ஹி....ஹி...!)

சமீபத்தில் "இளமை குன்றாப்பதிவர் " தருமி அவர்கள், நாங்களும் செஸ் விளையாடினோம் ...! ,என செஸ் பழகியதாக ஒருப்பதிவுப்போட்டிருந்தார்(பழகினோம் என்பது எப்பொருளில் பயன்ப்படுத்தப்பட்டது என எனக்கு அப்போ புரியலை அவ்வ்). சரி ஆட்டம் பழகியவரே பேசுறார்  , நாமளும் ஒரு காலத்தில் பழகிப்பார்த்துட்டு புளிக்குதுனு கரையேறின ஆளுதானேனு போய் ஜமாவில கலந்துக்கிட்டு, வழக்கம் போல "ஜல்லியடிச்சும்" வச்சேன், அப்போதான் ஒரு விடயம் புலப்பட்டது.

சதுரங்கம் என்ற உள் விளையாட்டு "பலகை போட்டியின்"(indoor board games) தாயகமே இந்தியா தான் , மேலும் தமிழரான ஆனந்த் தான் இத்தினி நாளா "உலக நாயகனா" இருந்து வந்தார், அப்படி இருந்தும் தமிழ் இணைய வெளியில் சதுரங்கம் குறித்து பெரிய விழிப்புணர்வே  "அடிப்படை அளவில் கூட" இல்லாமல் இருப்பதான ஒரு உணர்வு ஏற்பட்டது, ஏனிந்த நிலைனு ஒரு கேள்வி ,என் நடு மண்டையில நங்கூரம் பாய்ச்சி குடையவும் ஆரம்பிச்சது அவ்வ்!

தமிழ் இணைய உலகில் பெருமளவு கருத்து ஆக்ரமிப்பு செய்திருப்பது ,சினிமா, அரசியல், கிரிக்கெட் ,அதுக்கு அப்புறமா ஏதோ போனாப்போவுதுனு  ஒரு விளிம்பில் தான் மற்ற சமாச்சாரங்களுக்கு இடமும், கவனிப்பும் கொடுக்கப்படுகிறது.

நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற வழமையான கேள்வியே வாலைத்தூக்கிட்டு மறுபடியும் கிளம்புது, சரி மத்தவங்க தான் கவனிச்சு ஆதரவு கொடுக்கலை ,அதுக்குனு நாமளும் சும்மா போயிட்டா எப்பூடினு , எளிமையாக சதுரங்க ஆட்டத்தின் வரலாறு, அதனை முறைப்படி எப்படி ஆடுவது, மேலும் அதில் உள்ள பல்வேறு துவக்க ஆட்ட முறைகள் மற்றும் ,நுணுக்கங்களையும் ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் விளக்கி ஒரு தொடராக இடலாம் என நினைக்கிறேன்.




சதுரங்க விளையாட்டு  என்பது துவக்க நிலையில்  மலிவான , எளிமையான ஒரு விளையாட்டு, எளிமையான ஒரு சதுரங்க பலகை & ஆட்டக்காய்களுடன் இலகுவாக விளையாட ஆரம்பித்துவிடலாம்,ஆனால் தொழில் முறையில் ஆட நினைத்தால் "உண்மையில் காஸ்ட்லியான ஒரு விளையாட்டு". ஏகப்பட்ட நூல்கள், திறன் வாய்ந்த கணினி, நல்ல சதுரங்க மென்பொருள், பயிற்சியாளர் ,பின்னர் கடும் உழைப்பு என நிறைய செலவழிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் இதற்கான சாதகமான சூழல் சென்னையில் மட்டுமே நிலவுகிறது, இங்கு நிறைய செஸ் கிளப்கள், பயிற்சியாளர்கள் என " கட்டண வாரியாக" கிடைக்கிறார்கள், மேலும் நூல்கள், கணினி, மென்ப்பொருள் பற்றிய ஒரு விழிப்புணர்வும் அதிகம் உள்ளது.

தமிழகத்தின் பிறப்பகுதிகள் எனப்ப்பார்த்தால் , கோவை(ஈரோடு ,நாமக்கல்,கரூர்) உட்ப்பட), மதுரை(மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி செஸ் வளர்த்தது, இப்பவும் போட்டி நடக்குதா), சேலம்,  திருச்சி போன்றப்பகுதிகளில் தான் ஓரளவு விழிப்புணர்வு உள்ளது எனலாம்.  மற்றப்பகுதிகளில் எல்லாம் சதுரங்கத்துக்கு என பெரிதான பிடிப்பே இல்லை, இதுக்குனு புத்தகமெல்லாம் இருக்கு ,அதெல்லாம் படிச்சாத்தான் நல்லா விளையாட வரும், செஸ் கிளாக்னு ஒன்னு இருக்கு அது வச்சு  டைம் லிமிட் உடன் பிராக்டீஸ் செய்யனும் என  சொன்னால் "நாம ஏதோ புருடா" விடுறோம்னு நினைக்குமளவுக்கு இருக்காங்க,அடியேனே அப்படியான சூழலை எதிர்க்கொண்டுள்ளேன் அவ்வ்!

இன்றைய இணைய சூழலில் எதுவும் சாத்தியம் என்றப்போதிலும் , தமிழிணைய மக்கள் என்னமோ இன்னமும் "திண்ணைக்கதை வேகத்திலேயே" இருப்பதாக தோன்றுகிறது.சதுரங்கத்துக்கு என நிறைய ஃபோரம்கள், இணைய தளங்கள், வலைப்பதிவுகள் என ஆங்கிலத்தில் உள்ளது, நிறைய பேரு சுறுசுறுப்பாக பங்கும் பெறுகிறார்கள். தமிழ் வலைப்பதிவுகளில் இதுக்கு முன்னர் யாரேனும் முயன்றார்களா என சரியாக தெரியவில்லை, தற்சமயம் நம்ம பங்குக்கு ஒரு தொடர்ப்பதிவை ஆரம்பிச்சு வைக்கலாம்னு ,முயற்சிக்கிறேன், யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் சொல்லுங்கள் , நிப்பாட்டிக்கலாம் :-))

 சதுரங்கத்தின் முறையான பாலப்பாடம், சதுரங்க துவக்க (ஓப்பனிங்க் ) ஆட்ட முறைகள், துவக்க பொறிகள்(ஓப்பனிங்க் டிராப்கள்),பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்,, நகர்த்தல்களை  குறிப்பெழுதுவது (மூவ்களை "ஸ்கோர் எழுதுவது)" போன்றவற்றை அறிமுகப்படுத்தி வைப்பதன் மூலம் புதிதாக சதுரங்கம் ஆட விரும்புவர்களுக்கும், ஏற்கனவே ஓரளவு பழகியவர்களுக்கும் இத்தொடர் ஓரு ஆரம்பப்புள்ளியாக உதவுக்கூடும் என நம்புகிறேன்.  பழைய நினைவுகளை கிளறியும், கூகிளாண்டவரின் கடாச்சத்தாலும் மட்டுமே எழுத முயல்கிறேன்,மற்றபடி உயர்மட்ட அளவில் எல்லாம் எதிர்ப்பார்க்காதிங்க  அவ்வப்போது சில சதுரங்க ஆட்டங்களை பற்றி தனியாக விளக்கம் வேண்டுமானால் கொடுக்க முயல்கிறேன்.

சதுரங்கத்தின் வரலாறு:

சதுர்  - நான்கு

அங்கம் - உறுப்பு.

சதுரங்கம் அக்காலத்தில் பலகையில் ஆடப்பெற்ற போர் விவரண விளையாட்டாக திகழ்ந்தது. எனவே போர்க்களத்தில் பயன்ப்படுத்தப்படும் நால்வகை படைகளான , யானைப்படை, குதிரைப்படை, விற்படை, காலாட்படை ஆகியவற்றை அங்கமாக கொண்ட விளையாட்டாக உருவாக்கப்பட்டது. இதனை குறிக்கும் வகையிலேயே 'சதுரங்கா" என அழைக்கப்பட்டது. கூடவே நான்கு பக்கங்கள் கொண்ட சதுரப்பலகை /கட்டம் என்பதை குறிக்கிறது எனவும் கொள்ளலாம்.

சதுரங்கத்திற்கு என வரலாற்று ஆவண ரீதியான காலமாக சுமார் ஐந்தாம் நூற்றாண்டையே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், முதன் முதலில் குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் சதுரங்க ஆட்டம் உருப்பெற்று விளையாடப்பட்டதாக ஆவணப்பூர்வமாக சொல்கிறார்கள்.

ஆனால் இந்து ஞானத்தொன்மவியல் மரபின்படி பல்லாயிரமாண்டு பின்புலம் உள்ளதாக சொல்கிறார்கள். சதுரங்கத்தினை ஒத்த  பல வகையான விளையாட்டுக்கள் புராணக்காலத்தில் இருந்து விளையாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை எல்லாம் நவீன சதுரங்கம் போல இல்லை, சில ஒற்றுமைகள் மட்டுமே உண்டு. முன்னோடி விளையாட்டு எனலாம்.

அஷ்டபாதா எனும் எட்டுக்கு எட்டு அடி கட்டம் போட்டு , 100 கட்டங்கள் உடைய பலகையில் ,தாயம் உருட்டி விளையாடும் ஒரு விளையாட்டு இருந்துள்ளது.  இவ்விளையாட்டினை "மன்ம லீலை" சிரி கிருஸ்ணா , ராதையுடன் சேர்ந்து ஆடியதாக இந்துமரபு தொன்மங்கள் கூறுகின்றன(உருண்டது தாயம் மட்டும் தானா அவ்வ்).

(வல்லிய ஆட்டக்கார கிருஸ்ணா-ராதா)

மேலும் மகாபாரத போர்க்கள திட்டத்தினை இவ்விளையாட்டினை வைத்து தான் கிருஸ்ணா பாண்டவர்களுக்கு விளக்கினாராம்,  எனவே "வார் ஸ்ட்ராட்டஜி" விளையாட்டாகவும் திகழ்ந்திருக்கிறது...!

அஷ்டபாதாவின் தற்கால வடிவம் தான் "பரமப்பதம்" எனும் தாயம் உருட்டி ஆடும் விளையாட்டாகும்.

இன்னொரு இந்து ஞானமரபு தொன்மவியல் கதைப்படி , இலங்கை வேந்தன் இராவணரின் மனைவி "மண்டோதரி" தான் சதுரங்க விளையாட்டை உருவாக்கியவர் என்றும் ,ராவணருடன் விளையாடி பொழுது போக்கியதாகவும், இராமருடன் உண்டான போரினையும் விளையாட்டின் மூலம் விளக்கியதாகவும் சொல்கிறார்கள்.

வரலாற்றின் படி ,குப்தர்கள் காலத்தில் உருவான இவ்விளையாட்டை , அரேபிய வணிகர்கள் பாரசீகத்திற்கு எடுத்து சென்று , அங்கு அறிமுகப்படுத்தியதாக சொல்கிறார்கள்.

பாரசீகத்தில் Shatrang (Chess)  என அழைக்கப்பட்டுள்ளது, சதுரங்கா என்பதன் திரிபே அது.

சாசனிட் பேரரசு ஆட்சிக்காலத்தில் (242-651 AD) Middle Persian Pahlavi மொழியில் Chatrang namakwor (A Manual of Chess). என்ற  நூலும் எழுதப்பட்டுள்ளது, வரலாற்றின் அடிப்படையில் சதுரங்கம் குறித்தான முதல் நூல் மற்றும் ஆவணம் இதுவே.

சதுரங்கத்தினை மிகப்பெரிய அளவில் பரப்பியது பாரசீக மன்னர்களே, அவர்கள் அரசவையில் ஒரு விளையாட்டாக ,மன்னர் முன்னிலையில் ஆடப்பட்டு , ரசிக்கப்பட்டுள்ளது.

The Kârnâmag î Ardashîr î Babagâ என்கிற பாரசீக பஹ்லாவி மொழி நூல்,  King Khosraw என்கிற Ardashîr - î   என்ற பாரசீக மன்னனின் பெருமைகளை கூறும் நூலாகும் ,அதில் சதுரங்கம் இந்தியாவில் இருந்து பாரசீகத்துக்கு வந்த கதையாக சொல்லப்படுவதென்னவெனில்,

இந்தியாவில் கன்னோஜை ஆண்ட Divsaram என்ற மன்னன் சத்ராங்க் என்ற பெயரில் ஒரு விளையாட்டை  உருவாக்கி , 64 கட்டங்களுடன் ஒரு தங்கப்பலகை, மற்றும்  வைரங்களால் ஆன 32 ஆட்டக்காய்களை செய்து, கூடவே 1200 ஒட்டகங்களில் பரிசுப்பொருளையும் அனுப்பி அதனுடன் ஒரு சவாலையும் விட்டாராம், இந்த விளையாட்டு எப்படி விளையாடப்பட வேண்டும் எனக்கண்டுப்பிடித்து சொல்லிவிட்டால், தான் கப்பம் கட்டுவதாகவும், அப்படி கண்டுப்பிடிக்கவில்லை எனில் பாரசீக மன்னன் கப்பம் கட்ட வேண்டும் என்பதே சவால்.

சத்ராங்க் விளையாட்டுடன்  Takhtritus,(ஏஜண்ட்) என்ற தூதரும் உடன் வந்திருந்தார், அவரிடம் நான்கு நாட்கள் அனுமதிப்பெற்று ,இரானில் உள்ள அறிஞர்களை எல்லாம் அழைத்து " புதிரை விடுவித்தால்" பெரும் பரிசு என அறிவித்தார், யாராலும் முடியாத நிலையில் , மூன்றாம் நாள் அன்று, Vazorgmitro, son of Bôkhte, என்பவர் முன் வந்து இன்று இரவுக்குள் தீர்வு காண்கிறேன் என சொல்லி அதே போல தீர்வும் கண்டு அடுத்த நாள் தெரிவிக்கவும் செய்தார்.

(முதல் சதுரங்கப்போட்டி)

பின்னர் இந்திய தூதருடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு போட்டியிலும் கலந்துக்கொண்டு , மூன்றிலும் வென்றும் காட்டினாராம்,  வரலாற்றில் பதிவான முதல் சதுரங்க போட்டி இது தான்.இதனால் இந்திய தூதர் ஒப்பந்தப்படி , கொஸ்ருவை தங்களின் மன்னராக ஏற்றுக்கொண்டதாக அறிவித்து விட்டார்.

இவ்வெற்றிக்கு பரிசாக  12,000 jôjans எனப்படும் சாசனிட் நாணயங்களை Vazorgmitro, son of Bôkhteவுக்கு மன்னர் வழங்கினார்.

அதன் பின்னர் Vazorgmitro, son of Bôkhte, அதே போல ஒரு ஆட்டத்தினை உருவாக்கி அதற்கு "Vin-Artakhshir" எனப்பெயரிட்டு , இந்திய மன்னருக்கு அனுப்பி ,  இது எவ்வகையான விளையாட்டு எனக்கண்டுப்பிடிக்கவில்லை எனில் இரு மடங்கு கப்பம் கட்ட வேண்டும்  சவால் விட்டதாகவும் செல்கிறது.

அர்தாஷீர் -1 -"கொஸ்ரு" என்ற பாரசீக மன்னர் பின்னாளில் சதுரங்கத்தில் யாரும் வெல்ல முடியாத சதுரங்க ஆட்டக்காரராக மாறியதாக அமீர் குஸ்ரு எழுதிய ஷா நாமா என்ற நூலில் புகழ்ந்தும் பாடி உள்ளாராம்.

ஒன்பதாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அல் அல்டி (Al-Aldi)என்ற அரேபிய எழுத்தாளர் "சதுரங்கப்புதிர்கள் மற்றும் விதிகள்" கொண்ட நூலினை  mansubat என்ற நூலாக எழுதியுள்ளார், இதில் இந்திய மற்றும் பாரசீக சதுரங்கத்திற்கிடையே உள்ள வேறுப்பாடுகள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.  அரபியாவில் பொதுவாக Shah-mat (checkmate) என சதுரங்கத்தினை அழைப்பார்கள். அக்காலத்திலேயே Blindfold play,முதல் பல் வேறு வகையான முறையில் சதுரங்கம் விளையாடப்பட்டதாக இந்நூலில் காணப்படுகிறதாம். இந்நூலே உலகில் இருக்கும் மிகப்பழமையான சதுரங்க ஆட்ட விதி நூலாகும்.

இப்படியாக பாரசீகத்தில் வளர்ந்த சதுரங்கம், பின்னாளில் இஸ்லாமிய எழுச்சியின் போது,கலிபாக்களின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் வென்ற இடங்களுக்கு எல்லாம் பரவியதாம், கலிபாக்களும் சதுரங்கம் ஆடுவதில் ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில் இந்தியாவில்  தான் "நவீன சதுரங்கம் "தோன்றியது என்பதற்கு சான்றாக தற்போதுள்ளவை இந்த பாரசீக நூல்கள் தான், நம்ம ஊருல ஆதாரமே இல்லை ,புராணங்களில் கிருஸ்ணர் ஆடினார், இராவணன் ஆடினார்னு தொன்மங்கள் மட்டும் தான் இருக்கு அவ்வ்

சிந்து சமவெளிப்பகுதியிலும் சதுரங்கம் போன்ற ஒரு விளையாட்டு புழங்கி வந்ததாக தொல்ப்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது ,ஆனால் அவை எல்லாம் ஒத்த விளையாட்டு வடிவங்களே, 64 கட்டம், 32 ஆட்ட காய்கள் என்ற வடிவத்தில் ஆடப்பட்ட "சதுரங்கம்" என்ற விளையாட்டு 5 ஆம் நூற்றாண்டு காலம் முதல் தான் ஆடப்பட்டு வந்துள்ளது.

மேலும் சீனா, பர்மா, பிலிப்பைன்ஸ் ,ஜப்பான் எனப்பல நாடுகளிலும் சதுரங்கத்தினை ஒத்த விளையாட்டுக்கள் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

 பல்வேறு ஆசிய நாடுகளில் புழங்கி வரும் சதுரங்க விளையாட்டுக்களின் பெயர்கள்:

# பாராசீகம்(இரான்)- சத்ரஞ்ச்

(சத்ராஞ்ச் ஆட்டக்காய்கள்)

# சீனா-Xiang Qi



# ஜப்பான் - Shogi



# பர்மா -Sittuyin





# கொரியா- Changgi




# தாய்லாந்து- Makruk




அரபு தேசத்தின் மூலம் இத்தாலி ,ஸ்பெயின் எனப்பரவி ,அங்கிருந்து இங்கிலாந்து அமெரிக்கா, ரஷ்யா என சதுரங்கம் பரவியதாம், இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவிற்கு 19 ஆம் நூற்றாண்டில் தான் போய் சேர்ந்திருக்கிறது,  கம்யூனிச ஆட்சியின் போது , தான் தீவிரமாக பரவ ஆரம்பித்தது, ஜார் மன்னர்கள் காலத்திலும் சதுரங்கம் ஆடப்பட்டிருந்தாலும்,  லெனின் ஆட்சிக்கு வந்த பின்னரே சதுரங்கம் முக்கியத்துவம் பெற்றது ஏன் எனில் புரட்சிக்கு முந்தைய தலைமறைவு காலத்தின்  போது , "Aleksander Fiodorvich Iliin-Zhenevskii" என்ற சக கம்யூனிச தோழருடன் ,லெனின் சதுரங்கம் ஆடி பொழுது போக்கினாராம்.

லெனின் ஆட்சிக்கு வந்த பின்னர் Aleksandr Fiodorvich Iliin-Zhenevskii இனை இளம் சிவப்பு படை வீரர்களை(இவர்கள் பெரும்பாலும் உளவாளிகள் என சொல்லப்பட்டவர்கள்),  உருவாக்கும் பொறுப்பின் தலைமை அதிகாரியாக நியமித்தார், அப்பொழுது தான் "சதுரங்கம்" ஆடினால் பொறுமை, புத்திசாலித்தனம்  மற்றும் கட்டுப்பாடு பெருகும், எனவே உடற்பயிற்சியுடன் அனைவருக்கும் சதுரங்கப்பயிற்சியும் அளிக்க வேண்டும் என லெனினுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார், இதனடிப்படையில் அனைவருக்கும் கட்டாயமாக சதுரங்கப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

(தமிழ் நாட்டைப்பொறுத்தவரையில்,  வருங்காலத்தில்  நடைமன்னர் வைக்கோ மட்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் வாலிபாலுக்கு நல்ல கவனம் கிடைக்க கூடும் ஏன்னா ஜெயிலில் வாலிபால் எல்லாம்  ஆடியிருக்காருல்ல அவ்வ்!)

அதன் பிறகு வெகு விரைவில் ரஷ்யா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் எல்லாம் "லேபர் செஸ் யூனியன்" என்றப்பெயரில் சதுரங்க யூனியன்களும் ஆரம்பிக்கப்பட்டு அனைவரும் விளையாட ஆரம்பித்தனர், பின்னர் சதுரங்கத்திற்கு என சிறப்பு பள்ளிகளும் உருவாக்கப்பட்டது.

 Nikolai Krylenko, என்பவரை சதுரங்க ஆட்டத்தினை மட்டும் கவனிக்க சிறப்பு அதிகாரியாக லெனின் நியமித்தார் , உலக அளவில் சதுரங்கத்தில் ரஷ்யர்கள் பெரும்  தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு , சிறப்பாக விளையாடக்கூடிய 100 நபர்களை தேர்ந்தெடுத்து "சிறப்பு ஊதியம்" கொடுத்து பயிற்சியில் ஈடுபட வைத்தார்.  இதே போல வரிசையாக செய்யப்பட்டது. இம்முயற்சியை ரஷ்யாவின் "chess production line"  அப்போதைய ஆங்கில ஊடகங்கள் வர்ணித்தன.

 அக்காலக்கட்டத்தில் ரஷியா உலக அளவில் சதுரங்கத்தில் பெரிய  இடத்தில் இல்லை,ஆனாலும் கம்யூனிச புரட்சியினை விரும்பாமல் ,நாட்டை விட்டு தப்பி சென்று பிரான்சில் தஞ்சமடைந்த போல்ஷ்விக்கை சேர்ந்த "Alexander Alekhine" என்ற கிராண்ட் மாஸ்டரே கி.பி 1945 இல் இறக்கும் வரையில் உலக சாம்பியனாக இருந்தார், ஆனாலும் ரஷ்யா அவரை தங்கள் நாட்டவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னரே ரஷ்யா உலக சேம்பியன் ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்ள ஆரம்பித்தது.

 கம்யூனிச ஆட்சியின் தயாரிப்பான "Mikhail Botvinnik," 1945 இல் உலக சேம்பியன் ஆனார். இதன் விளைவாகவே  Vasili Smyslov, and Paul Keres,Mikhail Tal,,Tigran Petrosian, Boris Spassky என பல ரஷ்யர்கள்   உலக சாம்பியன்களாக உருவானார்கள், இன்று ரஷ்யாவில் பள்ளிகளில் சதுரங்கமும் ஒரு பாடமாக இயல்பாக சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது.

*************

சதுரங்க போட்டிகளின் நவீனக்கால வரலாறு:

# நவீனகாலத்தின் முதல் சர்வதேச சதுரங்கப்போட்டி கி.பி 1851 இல் லண்டனில் நடைப்பெற்றது , அதில் ஜெர்மனியை சேர்ந்த  Adolf Anderssen என்பவர் வெற்றிப்பெற்றார், அவரே அப்பொழுது அதிகாரப்பூர்வமற்ற உலக சேம்பியன் எனக்கருதப்பட்டார். ஏன் எனில் அப்பொழுது உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொள்ளும் வகையில் போட்டிகள் நடைப்பெறவில்லை என்பதால், அவ்வாறு அழைக்கப்பட்டார்.

# கி.பி 1866 இல் லண்டனில் முதல் உலக சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைப்பெற்றது, அதில் செக்கோஸ்லோவாக்கியாவை சேர்ந்த  Steinitz வென்று அதிகாரப்பூர்வமாக  உலகின் முதல் சேம்பியனாக ஆனார்.

போரிஸ் ஸ்பாஸ்கி ,கி.பி 1945 முதல்  கிபி 1972 இல் அமெரிக்கரான பாபி பிஷரிடம் தோற்கும் வரையில் ரஷ்யா  மட்டுமே அசைக்க முடியாத உலக சேம்பியனாக இருந்தது. ரஷ்யர்களின் ஆதிக்கத்தினை முறியடித்த பாபி பிஷர், ஒரு இளம் சாதனையாளர் ஆவார், 15 வயதுக்குள்ளாகவே கிராண்ட் மாஸ்டர் ஆனவர், ஆனால்  கொஞ்சம் "மனம் போன போக்கில்" நடந்துக்கொள்வார், பல நேரங்களில் மிக தாமதமாக போட்டிக்கு வருவார், சமயங்களில் வராமலே போய் விடுவார், ஆனால் வந்து உட்கார்ந்தாச்சுனா எதிர்த்து ஆடுபவருக்கு சங்கு தான் , உலக சேம்பியன்  ஷிப் போட்டிகளின் தகுதி சுற்றில் இரு முறை கிளீன் ஸ்வீப் ஆக அனைத்து ஆட்டங்களையும் வென்றவர், அமெரிக்க தேசிய போட்டியில் 13 சுற்றுகளிலும் தோல்வியே அடையாமல் முழுதாக 13 புள்ளிகள் பெற்று சாதனைப்படைத்தவர், உலக சேம்பியனாக  22 வயதுக்குள் ஆனவர், அவரின் சாதனையை சமீபத்தில் சென்னையில் நடந்த உலக சேம்பியன் ஷிப் போட்டியில் தான்   முறியடிக்க முடிந்தது, நார்வேயின், மேக்னஸ் கால்ர்சன்  மிக இளம் உலக சேம்பியன் ஆனார்.

பாபி பிஷரின் நிலையற்ற போக்கு , பிடிவாதம் மற்றும் அதிக அப்பியரன்ஸ் ஃபீஸ் கேட்கும் பழக்கத்தினால் அவரது விளையாட்டு வாழ்க்கை ஒரு நிச்சயமற்றதாகவே விளங்கியது,பல முறை சதுரங்கத்தினை விட்டு விலகியதாக அறிவித்து பின்னர் மீண்டும் ஆட வந்துள்ளார்.

 சதுரங்கத்தில் உலகளாவிய போட்டிகளில் பரிசுப்பணம் தவிர்த்து போட்டிகளில் கலந்து கொள்ள " appearance fees" என   ஒரு தொகையினை போட்டியாளர்களுக்கு கொடுப்பதுண்டு, அதற்கு பெரும் தொகை கேட்பதை வழக்கமாக பிஷர் வைத்திருந்தார், உலக சேம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்ளவே பெரும் தொகை கேட்டவர். அப்படி வாங்கிக்கொண்டு  தான் அவரும் போட்டியில் கலந்துக்கொண்டார், அப்பொழுதெல்லாம் புகழ்ப்பெற்ற ஆட்டக்காரர் எனில் அப்படி ஒரு மரியாதை இப்பொழுதும் உண்டு ,ஆனால் தற்போது உலக சேம்பியன் ஷிப் போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக அப்பியரன்ஸ் ஃபீ இல்லை ஆனால் நல்ல பரிசு தொகை உண்டுமேலும் பிஷரின் அதிரடிகளுக்கென்றே தனி ரசிக கூட்டம் உண்டு, அவர் அன்று என்ன செய்தார் எப்படி ஆடினார் என தெரிந்துக்கொள்ளவே பலரும் சதுரங்க ஆட்டத்தினை கவனிக்க ஆரம்பித்தார்கள். எனவே சர்வதேச சதுரங்க சம்மேளனமும் ,ஃபிஷருக்கு ஏற்றார்ப்போல பல முறை வளைந்துக்கொடுத்துள்ளது.

(பாபி ஃபிஷர்)

 சதுரங்க போட்டியில் ஒரு ஆட்டக்காரர் வரவில்லை எனில் மற்ற ஆட்டக்காரர்  போட்டியாளரின் செஸ் கிளாக்கை ஓட விட்டு விட்டு காத்திருப்பார், இதன் மூலம் போட்டியாளர்  தாமதமாக வந்தால் அவரது மூவ்களுக்கான நேரமும் குறைந்து விடும், மேலும் , அப்பொழுதெல்லாம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் எதிர் தரப்பு வர வேண்டும் என விதி இருந்தது , அதற்குள் வந்து விட்டால் ஆடலாம், ஒரு மணி நேரம் கழித்து வந்தால் தோற்று விட்டதாக அறிவிக்கப்படும்( இப்பொழுது உடனே வர வேண்டும்),பாபி பிஷர்  பெரும்பாலும் கடைசி நேரத்தில் வந்து தான் ஆட ஆரம்பிப்பார், ஆனால் எதிரில் ஆடுபவரை விட வேகமாக ஆடி சம நிலையோ வெற்றியோ பெற்றுவிடுவார், இது போன்ற அபரிமிதமான விளையாட்டுத்திறன் இருந்ததால் தான் இன்றளவும் ஆல் டைம் பெஸ்ட் பிளேயர் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்.

பல முறை இறுதிக்காலக்கெடுவெல்லாம்  முடிந்த பின்னர் வந்து ஆட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க சொல்லி இருக்கிறார், அதற்கும் சதுரங்க சம்மேளனம் தலையாட்டிய கதையெல்லாம் உண்டு.

பாபி ஃபிஷருக்காக ஆட்ட நேரத்தினை மாற்றியமைத்ததால், கடுப்பான Oscar Panno, என்ற கிராண்ட் மாஸ்டர் ஒரே ஒரு  நகர்த்தல் கூட செய்யாமல் தான் தோற்றுவிட்டதாக எழுதிக்கொடுத்துவிட்டு போய்விட்ட சம்பவமும் நடந்துள்ளது.

ஆனால் இவரது கடைசி காலத்தில்  நிம்மதியற்று நாடற்றவராக அலைய வேண்டியதாகிவிட்டது , 1992 உள்நாட்டு யுத்தம் காரணமாக யுகோஸ்லாவிவாவை  நாடாக கருத முடியாது என அறிவித்து ,அமெரிக்கா தடை செய்திருந்த காலக்கட்டம், அப்பொழுது , போரிஸ் ஸ்பாஸ்கியுடன் மீண்டும், ஒரு போட்டியினை  ஸ்பான்சர் விருப்பப்படி ?! ,யுகோஸ்லாவியாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள், யுகொஸ்லாவியா செல்லக்கூடாது என அமெரிக்க அரசு எச்சரித்தது ,ஆனால் முன்னரே ஒப்பந்தம் போட்டு பெருந்தொகையினை அப்பியரன்ஸ் ஃபீ ஆக வாங்கிவிட்ட நிலமை, நீண்ட காலம் கழித்து பெரிய போட்டி என்பதாலும், யுகோஸ்லாவியா சென்று ஸ்பாஸ்கியுடன் போட்டியில் கலந்துக்கொண்டார்.

 இதனால் கடுப்பான அமெரிக்க அரசு 1992 இல் வருமான வரிக்கணக்கெல்லாம் கேட்டு குடைந்ததும் அல்லாமல் , பாபி ஃபிஷரின் அமெரிக்க குடியுரிமையையும் ரத்து செய்துவிட்டது, எந்த நாட்டுக்குடியுரிமையும் இல்லாமல் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்தார் ,ஐஸ்லாந்தில் சிறிது காலம் அகதியாக தங்கியிருந்தார். கி.பி  2002 இல் எந்த நாட்டின் முறையான பாஸ்போர்ட்டும் இல்லாமல் பயணம் செய்தார் என ஜப்பானில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதங்கள் சிறையிலும் கழித்தார் , புகழ்ப்பெற்ற உலக சேம்பியன் என தெரிந்தாலும்   தண்டனைக்காலம் முடிந்த பின்னர் ; டெர்மினல் படத்தில் டாம் ஹேங்க்ஸ் நிலைப்போல ,எந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது என தெரியாத நிலை நிலவியது,பின்னர் ஐஸ்லாந்து நாடு பிஷருக்கு குடியுரிமை கொடுத்து அழைத்துக்கொண்டது, 2008 இல் இறக்கும் வரையில் ஐஸ்லாந்தில் ரெஜவிக் நகரத்தில் வசித்து வந்தார்.

பாபி பிஷர் ரஷ்யாவின் ஆதிக்கத்தினை தகர்த்தது சிறிது காலமே நீடித்தது, அதன் பின்னர் ,அனடொலி கார்ப்போவ், கேரி காஸ்ப்பரோ என்ற இரட்டையர்கள் வந்து மீண்டும் ரஷ்யாவின் ஆதிக்கத்தினை துவக்கி வைத்துவிட்டார்கள்.

ரஷ்யர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தான் சதுரங்கம் பழக ஆரம்பித்து 20 ஆம் நூற்றாண்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ ஆரம்பித்த போதும் ,சதுரங்கத்தின் தாயகமான இந்தியாவில் பெரிதான சலனம் எதுவுமில்லாமலே கழிந்தது, ஆனால் 1972 இல் ,பாபி பிஷர் உலக சேம்பியன் ஆன அதே ஆண்டில் ஒரு எழுச்சி ஏற்பட்டது, சென்னையை சேர்ந்த மானுவல் ஆரோன் என்பவர் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தினை வென்றார்.

(இந்தியாவின் முதல் "International Master" மானுவல் ஆரோன்)

அதன் பின்னரே இந்தியர்களும் சர்வதேச அளவில் பிரகாசிக்க முடியும் என்ற எண்ணம் உருவாகி பரவலாக சதுரங்கம் ஆட ஆரம்ம்பித்தார்கள் என சொல்லப்படுகிறது. பின்னர் மானுவல் ஆரோன் சென்னையில் "டால் சதுரங்க கழகம்" என ஒன்றினை நிறுவி பயிற்சியும் அளிக்கலானார், இன்றும் அக்கழகம் இயங்குகிறது. ஒரு நாள் மாலை அப்பயிற்சி மையத்திற்கு  சுமார் 7 வயது சிறுவன் ஒருவன் புதிதாக ஆட வந்தான், ஆனால் பல பெரியவர்களையும் வெற்றிக்காணவே ,நல்ல திறமை இருக்கிறது என அடையாளங்கண்டு தொடர் பயிற்சியில் ஈடுபடுத்த சொல்லி அச்சிறுவனின் தயாரிடம் சொன்னாராம், அச்சிறுவன் வேறு யாரும் அல்ல , பின்னாளில் ஐந்து முறை உலக சேம்பியனாக திகழ்ந்த "விசுவநாதன் ஆனந்த்" தான்!!!



பாபி பிஷர் செய்தது போன்று ரஷ்ய ஆதிக்கத்தினை அதிரடியாக தகர்க்க வில்லை என்றாலும் நிதானமாக தகர்த்த இன்னொருவர் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் ஆவார், ஆனால் இவரால் கார்ப்போவ், காஸ்பரோவ் ஆகியோரின் சதுரங்க வாழ்வின் இறுதியில் தான் அசைக்க முடிந்தது, ஆனாலும் இரண்டாம் முறையாக ரஷ்ய ஆதிக்கம் அகன்ற காலக்கட்டம் என்பது ஆனந்தின் காலக்காட்டமே. இப்பொழுது கார்ல்சன் மூலம் இந்தியாவின் ஆதிக்கமும் தகர்க்கப்பட்டுவிட்டது, கண்ணுக்கு எட்டிய தொலைவில் ,உலக அளவில் சவால் விடக்கூடிய சதுரங்க ஆட்டக்காரர்கள் ,ஆனந்த் தரத்தில்  இந்தியாவில் உருவாகவில்லை,  இந்நிலைக்கு ஒரு காரணமாக ஆனந்த்தையே சொல்லலாம், இந்தியாவில் நடக்கும் போட்டிகளை முற்றிலும் தவிர்த்து விட்டார், மேலும் இந்தியாவின் சார்பில் செஸ் ஒலிம்பியாடிலும் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார், எனவே அடுத்தக்கட்ட தலைமுறைக்கு தேவையான வழிக்காட்டலையோ அல்லது போட்டிகளின் போது கொடுக்கும் அனுபவ பகிர்வுகளையோ அளிக்க தவறிவிட்டார் எனலாம்.

கிரிக்கெட்டில் வேகமான ஆடுகளத்தில், வேகமான பந்து வீச்சாளர்களை எதிர்க்கொண்டு பயிற்சி எடுத்திருந்தால் தான் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளரை  எதிர்க்கொள்ள முடியும், சதுரங்கத்திலும் அதே கதை தான் .சதுரங்கத்தினை பொறுத்த வரையில் பலமான ஆட்டக்காரர்களுடன் ஆடிப்பழகினால் தான் ஆட்டத்திறன் மெருகேறும்.

வருங்காலத்திலும் இந்தியாவின் புகழ் சதுரங்கத்தில் உலக அளவில் கொடிக்கட்டி பறக்க வேண்டும் எனில் ரஷ்ய பாணியில் சிறப்பு பயிற்சிகளை பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்த வேண்டும். நடக்குமா எனத்தெரியவில்லை, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வகுப்பு துவங்கினாலே ஒப்பாரி வைக்கும் போலி கொள்கைவாதக்கோஷ்டிகள் இருக்கும் வரையில் அரசே நினைத்தாலும் சாத்தியப்படும் என்று தோன்றவில்லை அவ்வ்!

இந்தப் பதிவில் வரலாறே மிகவும் நீண்டு விட்டதால், சதுரங்க விளையாட்டின் அறிமுகத்தினை அடுத்தப்பதிவில் தொடர்கிறேன்.

கட்டங்கள் தொடரும்...
--------------------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி,

# http://math.uww.edu/~mcfarlat/177hist.htm

# http://www.avesta.org/pahlavi/chatrang.htm

# Bobby Fischer Goes To War- DAVID EDMONDS AND JOHN EIDINOW

  முழுப்புத்தகமும் மின்னூலாக படிக்க

http://www.e-reading.co.uk/bookreader.php/1010825/Edmonds_-_Bobby_Fischer_Goes_to_War.html

மற்றும்

விக்கி & கூகிள் ,தி இந்து,இணைய தளங்கள்,நன்றி!
----------------------------------------------

Wednesday, November 27, 2013

உலை வாயை மூட முடியுமா?.

(கதிர்வீச்சு கண்ணழகி ...ஹி...ஹி..!)

கி.பி 1986 ஆம் ஆண்டு முன்னால் சோவியத் ஒன்றியத்தில் இருந்த செர்நோபிள் (இன்றைய உக்ரெயின்),அணு மின்நிலையத்தில் ,அணு உலை நான்கில் பராமரிப்பு பணிகளின் போது ஏற்பட்ட "கவனக்குறைவால்" அணு உலை வெடித்து , பலத்த உயிர்ச்சேதமும், பெரும் அணுக்கதிர்வீச்சு மாசும் உருவானது அனைவருக்கும் நினைவிருக்கும்.



சரித்திரத்தில் மிகப்பெரிய அணு உலை விபத்தாக , செர்நோபிள் சம்பவம் கருதப்படுகிறது. அவ்விடத்தில் உள்ள செயல்படாத அணு உலை மூலம் இன்றும் கதிரியக்க பரவல் நடைப்பெறுவதால், அப்பகுதியே மனிதர்கள் வாழத்தகுதியற்றதாக கருதி " மனிதர்கள் இல்லா மண்டலமாக" அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:
----------------------------------------------------------


செர்நோபிள் அணு உலையை மையமாக வைத்து சுமார் 30 கி.மீ ஆரம் அளவில் "மனித சஞ்சாரமற்ற பிரதேசமாக " அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் பெரும்பாலும் பைன் மரக்காடுகளே உள்ளன ,அவையும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு , வாழும் கதிரியக்க மரங்களாக உள்ளன.எனவே பைன் மரக்காட்டில் காட்டுத்தீ ஏற்படுமானால், அதன் மூலமும் கதிரியக்கம் காற்றில் பரவும் அபாயம் உள்ளதாம்.


இதற்காக சுமார் 80 தீயணைப்பு வாகனங்கள் எப்பொழுதும் தயாராக செர்நோபிள் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது , கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காட்டுத்தீ உருவாவதை கவனித்து அவ்வப்போது அணைத்தும் விடுகிறார்கள்.


----------------------------------------------

கைவிடப்பட்ட செர்நோபிள் அணு உலை வளாகத்தில் இன்றும் அணு கழிவுகளும்,எஞ்சிய அணு உலை எரிப்பொருளும் அகற்றப்படாமல் உள்ளது, ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் ,அவை எல்லாம் " கலைக்கப்பட்டால்" காற்றில் கதிரியக்கம் பரவும் அபாயம் உள்ளது ,ஆனால் ஒட்டு மொத்த "அணுவளாக கழிவுகளையும்" அகற்ற போதுமான தொழிற்நுட்பம் இல்லை ,அப்படியே முயன்றாலும் அதற்கு மிக மிக அதிகம் செலவாகும் நிலை.

தற்போதுள்ள நிலையில் கதிரியக்கம் பரவாமல் பாதுகாக்கவே மிக அதிகம் செலவாகிறது,அதனையே ரஷிய அரசால் செய்ய இயலவில்லை. உக்ரெயின் தனி நாடாக பிரிந்து விட்டாலும் , இன்னமும் ரஷியா தான் அணு உலை சமாச்சாரங்களை கவனிக்கிறது. இப்படியே தொடர்ந்தால் , என்றாவது இயற்கை சீற்றத்தினால் "பழுதடைந்த அணு உலை கலைக்கப்பட்டு " உள்ளிருக்கும் அணுக்கழிவுகள் காற்றில் கலக்கலாம், அதனால் உக்ரெயின் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் நிலை, எனவே வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜீ-8 மூலம் நிதி திரட்டி ,செர்நோபிள் உலையில் இருந்து கதிரியக்கம் வெளியாகும் ஆபத்தினை தவிர்க்க ஒரு திட்டம் வகுத்துள்ளார்கள்.



இத்திட்டத்தின் படி சுமார் 1.5 பில்லியன் ஈரோ மதிப்பீட்டில் ஒரு மாபெரும் இரும்பு உறை தயாரித்து , ஒட்டு மொத்தமாக செர்நோபிள் அணு உலையை மூடி சீல் வைத்து விடுவதாகும்.



உலகில் மேற்கொள்ளப்படும் பொறியியல் கட்டுமானங்களிலேயே இது தான் தற்போது மிகப்பெரியது.

அரைவட்ட வடிவக்கூறையாக " இந்த இரும்பு கவசம்" தயாராகிறது.

உயரம் -110 மீட்டர்.

லிபர்ட்டி சிலையை விட உயரமானது,

அகலம்- 257 மீட்டர்.

ஒரு கால்பந்து மைதானமே இவ்விரும்பு கூறையின் கீழ் அமைக்கலாம்.

மொத்த எடை , 29,000 டன்கள்.

எப்படி மூடப்படும் என்பதனை விளக்கும் படங்கள்.

(முதற் பகுதி டோம்)

(டோம்-2)

(இரு பகுதிகள் இணைக்கப்படுகிறது)

(முழுவதும் மூடப்பட்ட நிலை)

இவ்வளவு பெரிய இரும்புக்கூறையை வேறு இடத்தில் செய்துவிட்டு , தூக்கி வந்து அணு உலையின் மீது பொறுத்த முடியாது என்பதால் , சிறு சிறு பாகங்களாக தயாரித்துவிட்டு ,அணு உலைக்கு சில மீட்டர்கள் தொலைவில் வைத்து ஒன்றாக இணைத்து , பின்னர் உலையை மூடி விட திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

அணுக்கதிர் வீச்சு நிரம்பிய சூழலில் பல நூறு பேர் உயிரை பணயம் வைத்து அங்கு வேலை செய்துக்கொண்டுள்ளார்கள். பாதுகாப்பு கவசம், பிராணவாயுக் கலன்கள் அணிந்துக்கொண்டு தான் வேலை செய்ய வேண்டும், இது போன்ற பல தடைகள் இருப்பதால் வேலை மெதுவாகத்தான் நடைப்பெற்று வருகிறது.

இவ்வேலையில் தற்போதுள்ள மிகப்பெரிய சவால் , அணு உலையின்  புகைப்போக்கி மிக உயரமாக உள்ளது எனவே அதனை பிளாஸ்மா கட்டிங் முறையில் வெட்டி அகற்ற வேண்டும், அப்பொழுது , சில துண்டுகள் அணு உலையின் மீது விழுமானால் , செயல்படாத அணு உலையில் உள்ள கழிவுகள் மேல் கிளம்பி அனைவரையும் தாக்கும் அபாயம் உள்ளதாம்.

எப்படியும் வெட்டி அகற்றிவிட்டு , மொத்தமாக .இரும்பு உறை போட்டு மூடிவிடுவது தான் ஒரே வழி என்பதால் ,நிதானமாக ஆனால் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டுள்ளார்கள், இத்திட்டம் 2015 இல் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இரும்பு உறையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளாம், அப்பவும் அணு உலையில் உள்ள கழிவுகள் கதிவீச்சுடன் வீரியமாகவே இருக்கும், எனவே அதற்கு பிறகு என்ன செய்ய உத்தேசம் எனத்தெரியவில்லை.

ஊருல ஒரு சொலவடை சொல்வாங்க உலை வாய மூடினாலும் ஊர் வாய மூடவா முடியும்னு ,ஆனால் அவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, அணு உலை வாயை மூடுவது ஊர் வாயை மூடுவதை விட ரொம்ப கஷ்டம்னு :-))

சனங்க தொலைக்காட்சி பார்க்கவும், லைட் எரியவிடவும் மின்சாரம் இல்லைனு ,அணு மின்சாரத்தை உருவாக்கிட்டு ,இப்போ குத்துதே,குடையுதேனு ,எம்புட்டு கஷ்டப்பட வேண்டி இருக்கு, இதுக்கு பேசாம மின்சாரமே இல்லாம தீப்பந்தம் புடிச்சுட்டு நிம்மதியா வாழ்ந்திடலாம் போல இருக்கே அவ்வ்!

ஆமாம் நம்ம ஊரிலவும் "அதி நவீன அணு மின் உலைய " கூடங்குளத்திலே கட்டினாங்களே ,அதுக்கதை என்னதான் ஆச்சு, தொறப்பாங்களா ,இல்லை அப்படியே  வேலை நடக்கிறது இன்னும் 15 நாளில் மின் உற்பத்தி துவக்கம்னே கதை ஓடுமா, அதுக்கு பாதிப்பு வந்தா மூடி வைக்க இப்படி "இரும்பு கவச மூடி" எதுவும் செஞ்சு வச்சிருக்காங்களா , ஒன்னுமே தெரியலையே அவ்வ்!

--------------------------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.bbc.co.uk/news/magazine-25086097

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
------------------------------------------

Friday, November 22, 2013

பெயரும் பின்புலமும்-1

(நம்மளையும் ஊரு பேருலாம் படிச்சு காட்ட சொல்வானோ? ...ஹி...ஹி)


"WARNING": A "சுயவிளம்பரம்" AHEAD OF U!

என்னை எழுத வைக்கும் தெய்வங்களான ,உயிரினும் இனிய அன்பு நெஞ்சங்களே,

இத்தனை நாளாக எவ்வளவோ மொக்கை பதிவுகளை முழம் முழமாக ,சரம் ,சரமாக எழுதி சல்லடை கண்ணாக உங்கள் நெஞ்சமும் புண்ணாக செய்து வந்தப்போதிலும்  , சற்றும் அயராது அவற்றைப்படித்து பின்னூட்டமிட்டு ,அடியேனை அன்புடன் ஊக்கப்படுத்தி வந்துள்ளீர்கள், உங்கள் பேராதரவுடன் வெற்றிகரமாக இன்று 256 ஆவது பதிவு எனும்  "மைல் /கிலோமீட்டர் கல்லினை" எட்டியுள்ளேன்,  மேலும் வழக்கமாக சராசரியாக 300-400 அடிகள் மட்டுமே ஒவ்வொரு பதிவுக்கும் கிடைக்கும், ஆனால் இதற்கு முன்னர் வெளியிட்ட "255' ஆவது பதிவான "கற்றது தமிழ்-6" எனும் பதிவிட்ட அன்றே ஒரே நாளில் "966" அடிகள்(ஹிட்ஸ்) போட்டு குபீர் என உச்சத்தில் தூக்கி வைத்து எமது பதிவை பெருமை படுத்தவும் செய்தீர்கள்,  ஆதாரமில்லாமல் அடுப்பு பற்ற வைக்கும் பழக்கமில்லை என்பதால் ,இதோ ஆதாரங்கள்,

படம்-1




படம்-2



இன்றளவில் எமது வலைப்பதிவிற்கு ஒட்டு மொத்த அடிகளாக (hits)"199,556" என்ற அரிய இலக்கினை அடையவும் செய்துள்ளீர்கள், ஒப்பாரும் இல்லாமல் மிக்காரும் இல்லாமல் ,மொக்கையிலும் கடைந்தெடுத்த மொக்கைகளாக  எத்தனையோ பதிவுகளை போட்டு வந்தப்போதிலும் அடியேனுக்கு ஆக்கமும்,ஊக்கமும்,அன்பும்,ஆதரவும் அள்ளி அள்ளி தந்து போஷித்த உங்களுக்கு நன்றி சொல்ல தமிழ் ,ஆங்கிலம், மலாய், சீன மான்டரின், தகலுகா, ஸ்வாகிலி,செல்டிக் ,ஸ்பானிஷ் என எந்த மொழியிலும் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை,,ஆயினும்  வேறு வழி எதுவும் புலப்படாத காரணத்தினால் எனக்கு தெரிஞ்ச தமிழிலேயே  நன்றி சொல்லிவிடுகிறேன் ,"டேங்க்ஸ்"

ஹி...ஹி வழக்கமாக எல்லாரும் 100,200,500,1000 ஆவது பதிவுகளை தான்  அல்பத்தனமாக "மைல் கல்" என  சொல்லி பெருமை பட்டுப்பாங்க,நாம அம்மாம்  பெரிய சாதனை எல்லாம் செய்ய வாய்ப்பில்லை, வருங்காலத்தில அப்படிலாம் சாதனை செய்யுற வரைக்கும் பொழைச்சிக்கிடப்போமானும் தெரியாது,மேலும் இந்த 256,(or)342 போன்ற எண்கள் எல்லாம் என்னப்பாவம் பண்ணிச்சுனு அதை எல்லாம் குறிப்பிட்டு மக்கள் கொண்டாடுவதில்லையேனும் தோன்றியது, அதான் சும்மா "ஒரு மொக்கை +சுய விளம்பரம்"  ஆக எழுதி அவ்வெண்களையும் சிறப்பித்தாயிற்று ,எல்லா நாளும் நல்ல நாளே ,எல்லா எண்களும் சிறப்பான எண்களே, நல்லோர்க்கில்லை நாளும் கோளும்!

இந்த மொக்கைய படிக்கவா இம்பூட்டு தூரம் வந்தோம்,எதாவது "கருத்தா "சொல்லுய்யானு நீங்க சொல்லுறது கேட்குது , சரி உங்களுக்காக ,உங்க ஆசைக்காகவே கருத்தா , சில ஊர்களின் இன்னாள் மற்றும் முன்னால் பெயர்களை பட்டியலிடுகிறேன் ,படித்து இன்புறுங்கள்!

அக்காலத்தில் சில ஊர்களை மட்டும் தொகுத்து,இன்னாள்,முன்னால் ஊர்ப்பெயர்கள் என ஒருப்பதிவிட்டிருந்தேன்,அதன் பின்னூட்டத்தில் பலரும் மேலும் சில ஊர்களின் முன்னால் பெயர்களை அளித்திருந்தார்கள், அவற்றையும் சேர்த்து ,இன்னும் சில ஊர்களின் பெயர்களையும் தொகுத்து வழங்கியுள்ளேன்.

அப்பழைய பதிவினை படிக்க சுட்டியை அமுக்கவும்,


ஊர்பெயர்கள்-1



இந்நாள் -    முன்னால்

#மதுரை - திருவாலவாய் (ஆலவாய்)

மருத மரங்கள் அதிகம் கொண்ட இடம் என்பதால் மருத வனம் என்ற பெயரும் உண்டு,அதுவே மருதை ,மதுரை ஆயிற்று என்கிறார்கள்.

# திருநெல்வேலி - வேணு வனம்.

மூங்கில் காடுகள் நிறைந்த பகுதி என்பதால் ,வேணு வனம் என்ற பெயர் உண்டு.

#சீர்காழி - பிரமாபுரம்

#மயிலாடுதுறை - மாயுரம், மாயவரம்

ஆற்றில் இறங்க படிகள் உள்ள இடத்தினை துறை என்பார்கள்,அத்துறையில் மயிலாடும் என்பதால் மயிலாடுதுறை என்றப்பெயர் என்கிறார்கள்.
இன்னொரு காரணம் மொழியியல் அடிப்படையில் நானே கண்டுப்பிடிச்சது,

மயிலம் என்றால் பால்வெண்மை,பழுப்புவெண்மை நிறம் ஆகும், மயிலக்காளை என்பது பழுப்புகலந்த வெள்ளை மாட்டினைக்குறிக்கும்.

மயிலம் +ஆடு = பழுப்பு நிற ஆடுகள் = செம்மறியாட்டினை குறிக்கும். எனவே செம்மறியாடுகள் கூட்டமாக தண்ணீர் அருந்திய ஆற்றந்துறையாகவும் இருக்கலாம். ஏன் எனில் அருகிலே ஆடுதுறை என இன்னொரு ஊரும் உள்ளது. அங்கு விவசாய ஆராய்ச்சி நிலையமும் உள்ளது,அவ்வூரில் இருந்து வெளியாகும் பயிர் வகைகளுக்கு "ADT-1,ADT-2 என்பதாக பெயர் வைப்பார்கள்.

மேலும் அந்த பக்கமெல்லாம் மயில்களின் நடமாட்டமும் இல்லை.

#வைத்தீஸ்வரன் கோயில் - புள்ளிருக்கு வேளூர்

#காஞ்சிபுரம் - கச்சி ஏகம்பம்

#விருத்தாசலம் - திருமுதுகுன்றம்,பழமலை.

#திருவெண்காடு - ஸ்வேதாரண்யம் (ஸ்வேத - வெண்மை, ஆரண்யம் - காடு)

#லால்குடி = திருதவத்துறை

பெண்ணாடம் - பெண்ணாடகம் .

 பெண்ணாடகம் என்றால் பெண்ணை அடகு வைத்தவர் என்று பொருள், அங்கு இருந்து சிவனடியார் சிவனுக்கு சேவை செய்ய அவர் மனைவியை அடகு வைத்தாராம்.

# திருச்சி - சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி.




திரு + சிரா + பள்ளி

திரு = மரியாதை

சிரா என்னும் சமண துறவி அங்கே வாழ்ந்தாரம்,
பள்ளி = வசித்தல் ,அல்லது சமண மடலாயம் அமைத்து நடத்திவந்துள்ளார்.

எனவே திருச்சிராப்பள்ளி என்றப் பெயர் வந்ததாம்!

மற்றொரு கதை,

ராவணன் மகன் திரிஷுர் என்ற 3 தலை உடையவன் சிவன் மீது அங்கு இருந்து தவம் செய்ததாக கூறப்படுகிறது.

சிராப்பள்ளி எனக்கூறும் ஒரு தேவாரப்பாடல்,

நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளே(று)
ஒன்றுடை யானை யுமையொரு பாகமுடையானைச்
சென்றடையாத திருவுடை யானை சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் னுள்ளங் குளிரும்மே.

#உறையூர்- உறந்தையூர்.

உறையூர் 'சூரவாதித்த சோழனால்' உருவாக்கப்பட்டது. உறந்தை, வாசபுரி, கோழியூர் ,முக்கீச்சுரம் என்னும் பெயர்களும் இதற்குண்டு.

சோழர்காலம் தொட்டு தலைநகராக,பெருநகராக விளங்கியது,அப்பொழுது திருச்சியெல்லாம் வெறும் மலைக்காடாகவே இருந்தது பின்னாளில் திருச்சி வளர்ந்து, உறையூர் அதன் ஒரு சிறுப்பகுதியாகிவிட்டது.

# குளித்தலை - குழித்தண்டலையூர்.

தண்டலை என்றால் சோலை எனப்பொருள்,காவிரி ஆற்றங்கரையோரம், சற்றே பள்ளமான இடத்தில் உள்ள சோலைகள் சூழ்ந்த ஊர் எனும் பொருள்பட "குழித்தண்டலையூர்" எனப்பெயரிடப்பட்டுள்ளது. பின்னர் குழித்தலையாகி, இப்போது குளித்தலை என்றாகியுள்ளது.

திருவாரூர் - ஆரூர் அல்லது ஆருக்காடு.

ஆர் என்றால் அத்திமரம், நிறைய அத்திமரங்கள் சூழ இருந்த ஊர் என்பதால் ஆருர் எனப்பட்டு ,சைவ சமயக்குறவர்களால் பாடல் பெற்ற தலம் என்பதால் ,திருவாருர் ஆயிற்று.

வட ஆர்க்காடு,தென் ஆர்க்காடு என்பதும் அத்திமரங்களால் சூட்டப்பட்ட பெயரே.

# பழவேற்காடு - பழவேலங்காடு.

மிக பழமையான அல்லது முதிர்ந்த கருவேல மரங்கள் கொண்ட காடு என்ற பொருளில் பெயரிடப்பட்டது.

பின்னர் டச்சுக்காரர்கள்(ஆங்கிலேயர்கள்) "புலிக்காடு" எனப்பெயர் வைத்துவிட்டார்கள், ஒரு வேளை அக்காலத்தில் அங்கு புலிகளும் நடமாடி இருக்கலாம்.

சென்னை கோடம்பாக்கத்திற்கே புலியூர் என்ற பெயர் உண்டு.

#சீவலப்பேரி- ஶ்ரீவல்லபப் பேரேரி.

பாண்டிய மன்னன் மாறன் ஶ்ரீவல்லபன் என்பவர் பாசனத்திற்காக பெரும் ஏரியை வெட்டினாராம், பெரிய ஏரியை பேரேரி என்பார்கள், மன்னன் பெயரால் ஶ்ரீவல்லப்பபேரேரி என அவ்வூருக்கும் பெயராயிற்று. காலப்போக்கில் ஶ்ரீவல்லபன் -சீவல்லபன் - சீவலம் என ஆக்கி சீவலப்பேரி என புழங்க ஆரம்பித்தது.

இவ்வூரில் உள்ள பெருமால் கோயிலால் தென் திருமாலிருஞ்சோலை என்ற பெயரும் உண்டு.

# கயத்தார் - கோதண்டராம நதி, முக்கூடல்.

பெயர் காரணத்திற்கான ஒரு புராணத்தின் படி, சிரிராமர் வனவாசத்தின் போது அவ்வழியே செல்கையில் சீதைக்கு தண்ணீர் தாகம் ஏற்படவே ,வில்லின் முனையால் தரையில் ஊன்றி நீர் வர செய்தாராம்,அப்படி உருவான  அந்த ஆற்றுக்கு கோதண்டராம நதி எனப்பெயர்.

# இன்னொரு பெயர்க்காரணம், கயம் என்றால் ஆழமான நீரூற்று ,அந்நீரூற்றில் இருந்து உற்பத்தியாகும் ஆறு என சொல்ல கயத்தாறு எனப்பெயர் சூட்டப்பட்டது,அவ்வாற்றின் கறையோரம் உள்ள ஊர் கயத்தார் என அழைக்கப்பட்டுள்ளது.

பொதிகை மலையில் இருது உற்பத்தியாகும் சித்ரா நதி,தாமிரபரணி மற்றும் கயத்தாறு ஆகியவை ஒன்று சேரும் இடம் என்பதால் "முக்கூடல்" எனவும் பெயர் ,முக்கூடல் பள்ளு என ஒரு சிற்றிலக்கியம் கூட பாடப்பட்டுள்ளது.

# பெரம்பலூர்- பெரும்புலியூர்.

நிறைய புலிகள் அக்காலத்தில் இங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.

# திண்டிவனம்- திந்திருணி வனம்.

திந்திருணீ என்றால் புளிய மரம், நிறைய புளிய மரங்கள் காடாக இருந்தமையால் ,புளியங்காடு என்ற பொருளில் திந்திருணி வனம் என பெயரிடப்பட்டது.

# அரங்கண்ட நல்லூர்- அறையணி நல்லூர்.

அறை என்றால் பாறை, அதன் அருகே உள்ள(அணி) நல்ல ஊர் எனும் பெயரில் அறையணி நல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது.

# திருவள்ளூர்-திரு எவ்வுள்ளூர்.

எவ்வுள்ளூர் என்ற பெயர், ,திருமங்கையாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் இவ்வூரில் உள்ள பெருமாளை பாடியதால் திருஎவ்வுள்ளூர் என அழைக்கப்பட்டு , பின்னர் திரிந்து திருவள்ளூர் ஆகிற்று.

#ஊட்டி - உதகைமண்டலம் - ஒத்தைக்கல் மந்தை.

தோடர்கள் மாடு மேய்க்கும் இடம் , ஒற்றை பெரும்பாறை இருக்கும் இடத்தில் மந்தையாக மாட்டினை மேய்த்து வாழ்ந்ததால், அவ்விடம் ஒற்றை கல் மந்தை என அழைக்கப்பட்டது.  வெள்ளையர்கள் அதனை ஒட்டகமண்ட் என அழைத்து ஊட்டி ஆகி ,பின்னர் உதகை மண்டலம் ஆகிவிட்டது.

# கோயம்பேடு - கோசை நகர்.




சிரிராமரு, சீதை மீது சந்தேகம் கொண்டு அனுப்பிவிட்டதால் வால்மீகி ஆதரவில் அங்கு தங்கி இருந்தார்களாம், லவ -குசா என்ற இரட்டையரின் பெயரால் "லவ-குச புரி" என்றும்,பின்னர்  குசன் பெயரால் அவ்விடம் குசன் நகர் என்றழைக்கப்பட்டு ,கோசை நகர் ஆகியதாம், திருப்புகழில் "கோசை நகர் "எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாம்.இன்றும் அங்கு ஒரு  ராமர் கோவில் உள்ளதாம்.

குசம் - கோரைப்புல். சீதை குளிக்க சென்றப்போது ,லவனை பார்த்துக்கொள்ள சொல்லி ,வால்மீகியிடம் விட்டு சென்றார்களாம், ஆனால் திடீர் என லவன் காணமால் போய்விட்டதால், சீதை வந்துக்கேட்டால் என்ன செய்வது என அச்சமுற்று , ஒரு கோரைப்புள்ளை கிள்ளிப்போட்டு மந்திரம் சொல்லி "லவன்" போன்ற ஒரு சிறுவனை உருவாக்கினாராம், ஆனால் சீதை திரும்ப வருகையில் ,விளையாட போயிருந்த உண்மையான லவனும் திரும்பிவிடவே .இரண்டு சிறுவர்களைக்கண்டு , "கோன் ஹை" என சீதாப்பிராட்டி வினவவே ,நடந்தக்கதையை சொல்லி மன்னிப்பு கேட்டாராம் வால்மீகி. சரி போனது போகட்டும் இருவருமே எனது பிள்ளைகளாக இருக்கட்டும் என  சொல்லி, கோரை- குசம் இல் இருந்து உருவான சிறுவன் என்பதால் "குசன்" எனப்பெயரிட்டார்களாம்.

சீதை,வால்மீகிலாம்  மெட்ராச பட்டிணத்துக்கு வந்திருப்பாங்களானு அறிவுப்பூர்வமாக கேள்விக்கேட்கலாம், என்ன செய்ய ஊருக்கு பெயர்க்காரணம்னு இப்படிய்யாப்பட்ட கதைகளை தானே சொல்லுறாங்க அவ்வ்.

கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டும் முன் அவ்விடம் எல்லாம் கோரைப்புல் அடர்ந்து காணப்படும், ஒரு வேளை கோரைக்காடு என்பதில் இருந்து கூட கோசை நகர் எனப்பெயர் வந்திருக்கலாம்.

இது மட்டுமில்லாமல் இன்னும் பல "இராமாயண தொடர்பில்" ஊர்ப்பெயர்கள் சென்னையை சுற்றி இருக்கு.

# நந்தம்பாக்கம்- நந்தவனபுரம் அல்லது நந்தவனப்பாக்கம்

பிருகு முனிவர் அங்கே ஒரு நந்தவனம் அமைத்து  அதில் குடில் கட்டி வாழ்ந்தாராம், சிரிராமரு வனவாசம் வந்திருந்த போது சிறிது காலம் ,பிருகு முனிவர் ஆசிரமத்திலும் தங்கி சிரமபரிகாரம் செய்ததாக புராணம்.

நந்தவனம் இருந்தமையால் ,நந்தவனப்பாக்கம்.- நந்தம்பாக்கம்.

சிரிராமர் நினைவாக அருகில் இருந்த ஊருக்கு "ராமாபுரம்" எனப்பெயரிட்டார்களாம், தற்போது .ராமாவரம் என அழைக்கப்படுகிறது,அங்கு தான் "கலியுக ராமர்" எம்சிஆர் வாழ்ந்தார் என்ற அழியாப்புகழும் பெற்ற திருத்தலம் ஆகும்!

# திருவான்மியூர்- திரு வால்மீகி நகர்.

வால்மீகி ராமாயணம் எழுதினப்பிறகு டயர்டாகி களைப்பார இன்பச்சுற்றுலா ஒன்னு கிளம்பி தென்னிந்தியாவுக்கு வந்தாரம்,அப்போ கடற்காத்து வாங்குறாப்போல , கிழற்குகடற்கரையோரமா கொஞ்ச காலம் "SUNBATH" எடுத்துக்கொண்டு "BAY WATCH" செய்தபடி தங்கி இருந்த இடம் தான் இன்றைய திருவான்மியூர்.

மரியாதைக்கு திரு சேர்த்து "திருவால்மீகி நகர்" என அழைக்கப்பட்டு இன்று திருவான்மியூர் ஆகிடுச்சாம், இன்றும் அங்கே வால்மீகி நகர்னு ஒரு நகர் வேற இருக்கு.

(வால்மீகி கெஸ்ட் அவுஸ்@ நடு ரோடு. படம் தி இந்து)

கிழக்கு கடற்கரைச்சாலையில், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே ,நடு ரோட்டில் "வால்மீகிக்கு" ஒரு கோயிலும் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் போது கூட அக்கோயிலை இடிக்க முடியலை, யாருமே அக்கோயிலை இடிக்க முன்வரலையாம், சாமியார் சாபம் விட்ருவாருன்னு பயப்படுறாங்களாம் அவ்வ்!

தகவல் மூலம்,

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/whats-in-a-name/article5048779.ece
----------------------------------------------

#பழவந்தாங்கல்- பல்லவன் தாங்கல்.

தாங்கல் என்றால் குளம் அல்லது ஏரியை குறிக்குமாம், பல்லவர்கள் வெட்டிய ஏரி/குளத்தின் பெயரால் அவ்விடத்துக்கு பல்லவன் தாங்கல் எனப்பெயரிடப்பட்டு பின்னர்  பழவந்தாங்கல் எனப்பெயர்  திரிப்புற்றது.

இவ்வாறே ஐயப்ப நாயக்கர் என்பவர் வெட்டிய குளத்தால் ,அய்யப்பந்தாங்கல் என்ற பெயரும்  உருவாயிற்று.

# திரிசூலம் - திருச்சுரம்.

சுரம் என்றால் காடு, அக்காட்டில் பிருகு முனிவர் தவம் இருந்தாராம்,எனவே திருச்சுரம் என அழைக்கப்பட்டு ,திரிந்து திரிசூலம் ஆகிற்று. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த திரிசூலம் படத்துக்கும் ,இவ்விடத்தின் பெயருக்கும் தொடர்பில்லை அவ்வ்!

கிண்டியில் தான் யாகம் செய்தாராம், யாகத்தீயை கிண்டும் கோலை போட்ட இடம் தான் கிண்டி என்றப்பெயரில் அழைக்கப்படுகிறதாம் அவ்வ்!

# பெரிய மேடு-  பெருமேடு.

சென்னையில் அக்காலத்தில் மேடும்,பள்ளமுமாக இருந்ததாம், பெரிய மேடு இருந்த இடத்தில் இருந்த மண்ணை எல்லாம் வெட்டி வசிப்பிடம் ஆக்கியது வெள்ளையர்கள் காலத்தில் தானாம்.

அப்படி வெட்டி அப்புறப்படுத்திய மண்ணை ஒரு பள்ளமான இடத்தில் கொட்டி சமப்படுத்தி வசிப்பிடம் ஆக்கிய இடமே ,"மண்ணடி" ஆகும்,அதாவது மண்ணடிச்சு மேடாக்கி இருக்காங்க!

மண்ணடி என்பதற்கு இன்னொரு பெயர்க்காரணமும் சொல்கிறார்கள், பெரிய மண்மேட்டிற்கு கீழ் - அடியில் இருந்த இடம், மலையடிவாரம் என்பது போல,மண்ணடிவாரம் - மண்ணடி எனப்பெயர் வந்ததாம்.

# சூளை - செங்கல் சூளைகள் அமைத்திருந்த இடம், இங்கு தான் பெரிய செங்கல் சூளை அமைத்து புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான செங்கற்கள் தயாரிக்கப்பட்டது.

தொடரும்...
---------------------------------------------

பின்குறிப்பு:

# மக்களே உங்களுக்கும் ஏதேனும் ஊரின் பெயர்க்காரணம் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்,பின்னர் அவற்றையும் தொகுத்துவிடலாம்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# History of city of madras by C.S.Srinivasachari.M.A

# ஊரும் பேரும் -ரா.பி.சேது(பிள்ளை)

மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள் நன்றி!
---------------------------------------------------------

Friday, November 15, 2013

கற்றது தமிழ்-6

(சூடானம்மிணி...ஹி...ஹி!)

2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவாக்கப்பட்டு பயன்ப்பாட்டிலும் இருந்துள்ளன,காலப்போக்கில் இயல்பு வாழ்க்கையில் மக்களின் அலட்சியத்தினால் பலச்சொற்கள் பயன்ப்படுத்தாமல் விடப்பட்டதால் ,வழக்கொழிந்து போன நிலையில் , தமிழில் பல சொற்கள் இல்லை எனவே  அவற்றை எல்லாம் பிற மொழியில் இருந்து கடன் வாங்க வேண்டிய நிலை நிலவுவது போன்று ஒரு மாயை உருவாகிவிட்டது, எனவே பழந்தமிழ் சொற்கள் அல்லது அக்கால சொற்களை முடிந்தவரையில் தேடிப்பார்த்து தொகுக்கலாம் என அவ்வப்போது இணையத்தில் துழாவி வருவது வாடிக்கை ,அப்படி கிடைக்கப்பெற்ற சில அக்கால சொற்களின் தொகுப்பை இப்பதிவில் காணலாம்.

சூடாமணி நிகண்டு:

வீரமண்டல புருடர் என்ற சமணத்துறவி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் பல தமிழ்ச்சொற்களுக்கு உள்ள இணைச்சொற்களை தொகுத்து சூடாமணி நிகண்டு என்ற நூலாக வெளியிட்டுள்ளார். நிகண்டு என்பதற்கு உரிச்சொல் பனுவல் என்ற பெயரும் உண்டு, இவை அகரமுதலிகளுக்கு முன்னோடியாக கருதப்படுகின்றன. ஒரு சொல்லுக்கு பலப்பொருள் விளக்கம் அளிக்க வல்ல நூலாகும்.

சூடாமணி நிகண்டில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளின் பல்வகை பெயர்களை மட்டும் தொகுத்து "தமிழம்" என்ற இணையத்தளத்தில் வழங்கியுள்ளார்கள், மேலும் புதிய சொற்கள்,பொதுப்பெயர்கள்,படங்கள் இணைத்து அதனை மேலும் மேம்படுத்தி  பகிர்ந்துள்ளேன்.

மூல நூல் புராஜெக்ட் மதுரை இணையத்தளத்திலும் உள்ளது.

விலங்கின் பெயர்த் தொகுதி மற்றும் அவயங்கள் பெயர்கள்:

#சிங்கத்தின் பெயர்
(சிங்கம் டபுளாவும் வரும்!)

வயப்போத்து, சீயம், அறுகு, கேசரி, பூட்கை, மிருகராசன், வயமா, மடங்கல், கண்டீரவம், பஞ்சானனம்.

யானையாளியின் பெயர்

யாளி, அறுகு, பூட்கை

#புலியின் பெயர்


(கணக்குல படிக்காமலே பட்டம் வாங்கியவர்)

வல்லியம், வயமா, சித்திரகாயம், வெல்லுமா, உழுவை, பாய்மா, வியாக்கிரம், தாக்கு, வேங்கை, குயவரி, சார்த்தூலம், புல், புண்டரீகம், கொடுவரி,

#யானையின் பெயர்

(ஆனை ஆனை அழகர் ஆனை)

தும்பி, மாதங்கம், தூங்கல், தோல், கறையடி, எறும்பி, உம்பல், வாரணம், புழைக்கை, ஒருத்தல், வல்லிலங்கு, நாகம், கும்பி, நால்வாய், பூட்கை, குஞ்சரம், கரேணு, அத்தி, வேழம், உவா, கரி, கயம், களிறு, கைம்மா,
சிந்துரம், வயமா, இபம், புகர்முகம், தந்தி, மதாவளம், தந்தாவளம், வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா, மதகயம், போதகம்,

யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்

யூதநாதன்

(தலைவா! (ஹி...ஹி ஆனால் பெரும்பாலும் யானைக்கூட்டத்துக்கு பெண் யானைகள் தான் தலைமையாம் அவ்வ்)

மதகயத்தின் பெயர்

மதோற்கடம்

யானைவாலின் பெயர்

தாலவட்டம்

யானைவானுனியின் பெயர்

வேசகம்

யானைமுதுகின் பெயர்

மஞ்சு

யானை மத்தகத்தின் பெயர்

மதகம், கும்பம்,

யானை மதம் பாய்சுவட்டின் பெயர்

கரடம்

யானைக் கைந்நுதியின் பெயர்

புட்கரம்

யானைமதத்தின் பெயர்

ஸ்ரீ கடம், கடாம், தானம்

யானைக்கொம்பின் நடுவின் பெயர்

பிரதிமானம்- இரு தந்தங்கள் இடையே தெரியும் முகத்தின் அளவு.

யானைத் தந்தத்தின் பெயர்

கோடு, எயிறு

யானைக்கடைக்கண்ணின் பெயர்

நிரியாணம்

யானைச் செவியடியின் பெயர்

குளிகை

யானைக் கவுளின் பெயர்

கதுப்பு

யானைத் துதிக்கையுமிழ்நீரின் பெயர்

விலாழி

யானைப் பல்லடியின் பெயர்

கரீரம்

யானைமுன்காலின் பெயர்

காத்திரம்

யானைப்பின்காலின் பெயர்

அபரம்

யானைத் துதிக்கையின் பெயர்

தொண்டை, தொண்டலம், சுண்டை

யானைப் பிடியின் பெயர்

வடவை, அத்தினி, கரிணி

யானைத்திரளின் பெயர்


(போவாமா ஊர்கோலம் ...காடெங்கும்...)
கடகம்

#யானைக்கன்றின் பெயர்

கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி

யானைபடுகுழியின் பெயர்

பயம்பு

யானை நோயின் பெயர்

பாகலம்

##குதிரையின் பெயர்


(சிட்டாப்பறக்கும் செவலைக்குதிரை)

பரி, தூகம், பாடலம்., கிள்ளை, பாய்மா, துரகதம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அரி, அயம், இவுளி, மா, அச்சுவம், புரவி, கோரம், குரகதம், கோணம், கொக்கு, கொய்யுளை, சடிலம், கோடை
கத்துகம், கனவட்டம், பத்திரி, துரங்கம், குந்தம், அத்திரி,

குதிரை மயிரின் பெயர்

மேசகம், சுவல், குசை

குதிரைக்குளம்பின் பெயர்

குரம், குரச்சை

குதிரை போமார்க்கத்தின் பெயர்

மாதிகம்

#பசுவின் பெயர்
(புல்லுக்கொடுத்தா பாலு கொடுக்கும்)

கூலம், கோ, குடம், சுரபி, ஆ, நிரை, தேனு, பெற்றம்

தெய்வப்பசுவின் பெயர்

கபிலை, தேனு

மலட்டுப்பசுவின் பெயர்

வசை

ஈன்றபசுவின் பெயர்

வற்சலை

பசுவின் கன்றின் பெயர்

வற்சம்

ஒரீற்றுப்பசுவின் பெயர்

கிட்டி

நற்பசுவின் பெயர்

பத்திரை

பசுவின் முலைப் பெயர்

சுரை

உதைகாற்பசுவின் பெயர்

சுதை

முலை மடியின் பெயர்

செருத்தல், ஆபீனம்

பசுக்கூட்டத்தின் பெயர்



நிரை, தொறு, காலி, கோட்டம், காலேயம்

எருத்தின் பெயர்
(முன்னால பாயும் முரட்டுக்காளை )

பாறல், சே, பெற்றம், பூணி, பாண்டில், கொட்டியம், இறால், ஏறு, மூரி, புல்லம்,

எருத்தின் முரிப்பின் பெயர்

இமில்

பேரெருத்தின் பெயர்

பாறல், பகடு, தூர்வகம்

இடபத்தின் பெயர்

ஏறு, உக்கம், நரை, நந்தி, கூளி

பொதியெருத்தின் பெயர்

தூர்வகம், துரியம்

எருமையின் பெயர்

காரான், வடவை, மேதி, சைரிபம், கவரி, காரா, மூரி, மகிடம்

எருமையாண் பெயர்

கடா, பகடு

மலட்டெருமையின் பெயர்

மை

#ஆட்டின் பெயர்


(ஆத்தா ஆடு வளத்தா பேரு வைக்கலையே அவ்வ்- ஜமுனாபாரி ஆடு)

அருணம், செம்மறி, மோத்தை, அசம், உதள், உடு, கொச்சை, துருவை, ஏழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், புருவை, தகர்

செம்மறியாட்டின் பெயர்

துருவை, மை, கொறி

செம்மறியாட்டாணின் பெயர்

தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம்

ஆட்டுக்குட்டியின் பெயர்

குட்டன், சோரன், மறி, பறழ்

வெள்ளாட்டின் பெயர்

வெள்ளை

வெள்ளாட்டாணின் பெயர்

செச்சை, சாகம், மோத்தை

#வரையாட்டின் பெயர்




(தமிழ்நாட்டு "தேசிய விலங்கு")

சரபம், வருடை,கேளையாடு,சருகு மான்

#பன்றியின் பெயர்

கேழல், அரி, குரோடம், கிரி, கிடி, கிருட்டி, ஏனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, மைம்மா, கோட்டுமா, போத்திரி, வராகம், கோலம், குகரம், எறுழி

#முட்பன்றியின் பெயர்

சல்லியம், முளவுமா, எய், சல்லகம்



(கவுண்டரின் வளர்ப்பு!)

*முட்பன்றி முள்ளின் பெயர்

சலம், சவலம்

#கரடியின் பெயர்
(இங்கே யாருப்பா டீ.ஆர் வரச்சொல்லு ஒரு கைப்பார்க்கிறேன்)

பல்லுகம், உளியம், எண்கு, பல்லுகம், எலு, பல்லம், குடாவடி


#மானின் பெயர்


(அந்த "மானை"ப்பாருங்கள் அழகு!)

அரிணம், சாரங்கம், நல்லி, உழை, பிணை, குனம், மிருகம், மறி, குரங்கம், ஏணம்

#கவரிமா(ன்) பெயர்.


"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"


மயிர் நீப்பின் உயிர் வாழா "கவரிமா" எனத்தான் வள்ளுவர் சொல்லி இருக்கார் ,மான் என்றல்ல,கவரிமான் என ஒரு மானே இல்லியாம்.

கவரி - மயிர், மா- பெரிய விலங்கு.

இதன் அடிப்படையில் "கவரி"மா என சொல்லப்படுவது திபெத்திய "யாக்" வகை மாடு ஆகும்.வயதாகி மயிர் உதிர்ந்துவிட்டால் குளிர் தாங்காமல் யாக் இறந்துவிடும்,அதை தான் திருவள்ளுவர் ஒப்பிட்டு இருக்கனும். வள்ளுவர் திபெத்துக்குலாம் போயிருப்பாரா?

(எந்த குறளும் எனக்கு தெரியாது "குளிர்" தான் தெரியும் அவ்வ்)

படகம், பட்டம், மனமா, எகின்

#சாமரத்தின் பெயர்

பவரி, சீகரம், கவரிமா(ன்) வகை


#காட்டுபசு,எருதுவின் பெயர்




கவயமா, கவயல்,ஆமா,கடமா,காட்டா,மரை,காட்டேணி,காட்டுப்போத்து.


#கத்தூரிமானின் பெயர்


(இந்திய கஸ்த்தூரி மான்)

துருக்கம், நானம், மான்மதம், நரந்தம்.

(இமயமலை கஸ்த்தூரி மான்)


(கஸ்தூரி மான்குட்டி கண்ணீரை ஏன் சிந்துதாம்?)

வாசனை திரவியம் கஸ்தூரிக்காக பெருமளவு வேட்டையாடப்பட்டுவிட்டதால் அழியும் நிலையில் உள்ள அரிய இனமான் ஆக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

#கலைமானின் பெயர்(blackbuck)





கரும் இரலை, வச்சயம், புல்வாய், கருமான்

#  வெள்ளை வெளிமான் பெயர்




வெள்ளை இரலை,புல்வாய்,ஏணம்,சூனம், உழை மான்.

#கழுதையின் பெயர்

வாலேயம், கர்த்தபம், காளவாய், அத்திரி, கோகு, வேசரி, கரம்

#கோவேறு கழுதையின் பெயர்


(கற்பூர வாசனை தேடுறரோ?)

வேசரி

#ஒட்டகத்தின் பெயர்


(இந்தியனெல்லைப்பாதுகாப்பு ராணுவத்தின் ஒட்டகப்படை)

தாசேரம், அத்திரி, நெடுங்கழுத்தல்

#நரியின் பெயர்

(ஓடுற(வேக) நரியில ஒரு நரி குள்ளநரித்தான் ஆ ஜிங் ஜக்கா ஜிங்!)

ஒரி, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சம்பு, பூரிமாயன், குரோட்டா, சிருகாலன்

#கீரியின் பெயர்

காத்திரி, நகுலம், தீர்வை

#குரங்கின் பெயர்

வலிமுகம், கடுவன், வானரம், அரி, மந்தி, பிலவங்கம், கோகிலம், கோடாரம், யூகம், மர்க்கடம், நாகம், கவி,

கருங்குரங்கின் பெயர்

காருகம், யூகம்


#அனுமன் குரங்கின் பெயர்




முசு,ஒரி, கோலாங்கூலம், மைம்முகன், கள்வன், கலை

#நாயின் பெயர்


(கொஞ்சம் ஸ்சூனு விரட்டிட்டு போறது  அவ்வ்)

சூரன், முடுவல், பாசி, புரோகதி, சுனகன், குக்கல், கூரன், எகினன், அக்கன், குரைமுகன், ஞமலி, ஞாளி, சாரமேயன், கணங்கன், சுவர்

பெண்ணாயின் பெயர்

முடுவல்

செந்நாயின்(cuon alpinus) பெயர்

(செவப்பா இருக்கிறதால பொய் சொல்லாது அவ்வ்)

விருகம், கொக்கு

#பூனையின் பெயர்


(வேட்டையில் காட்டுப்பூனை)

வெருகு, அலவன், ஓதி, விடாரகம், விலாளம், பூசை, மார்ச்சாலம், பாக்கன், இற்புலி


#நாவியின் பெயர்

மறுவி



#ஒந்தியின் பெயர்


,பச்சோந்தி,சாயானதம், சரடம், காமரூபி, தண்டு, ஓமான், ஓதி, கோம்பி, முசலி, ஒத்தி,


#எலியின் பெயர்

சிகரி, ஆகு, இரும்பன்

#மூஞ்சூற்றின் பெயர்

சுவவு, சுண்டன், சுசுந்தரி


#காரெலியின் பெயர்

கருப்பை

#பெருச்சாளியின் பெயர்

களதம், துந்துளம், ஆகு, முடுடிகம், உந்துரு

#அணிலின் பெயர்


(ஹி...ஹி ஜில்லா விட்டு ஜில்லா வந்த அணில்)

வரிப்புறம், வெளில்

#உடும்பின் பெயர்

தடி, முசலி, கோதா,

#முயலின் பெயர்

சசம்

#பாம்பின் பெயர்

அரவு, கட்செவி, போகி, அகி, அரி, வியாளம், சர்ப்பம், உரகம், பன்னகம், நாகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம், பணி,

சாரைப்பாம்பின் பெயர்

அண்டம், இராசிலம்

மண்டலப் பாம்பின் பெயர்

கோளகல்

கண்குத்திப் பாம்பின் பெயர்

மாலுதானன்

பெரும்பாம்பின் பெயர்

மாசுணம், பாந்தள்

நாகத்தின் பெயர்

மூர்க்கன்

கருவழலைப் பாம்பின் பெயர்

இராசமாநாகம்

பறவை நாகத்தின் பெயர்

குக்குடசர்ப்பம்

பாம்பின் படத்தின் பெயர்

பணம், பை,

படப் பொறியின் பெயர்

உத்தி, துத்தி

பாம்பின் நச்சுப் பல்லின் பெயர்

தட்டம்

பாம்புயிர்ப்பின் பெயர்

அதட்டம்


#மயிலின் பெயர்

(அழகு மயிலாட  அபிநயங்கள் கூடும்)


சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், மயூரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம்

மயிற்பீலியின் பெயர்

சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, தோகை, தொங்கல், தூவி

மயிற்குரலின் பெயர்

அகவல், ஆலல், ஏங்கல்

இறகின் முள்ளின் பெயர்

முருந்து.

# அன்னத்தின் பொதுப்பெயர்


(அன்னமே மதுக்கிண்ணமே அவ்வ்)

எகினம், ஓதிமம், மராளம், விகங்கம், வக்கிராங்கம்


அன்னச்சிறகின் பெயர்

தூவி

* அன்னப்பறவை ,பாலும் ,நீரும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து பருகும் என சொல்லப்படுவதெல்லாம் ச்சும்மாச்சுக்கும் "கப்சா' அல்லது அப்படியான பறவை இல்லை,அழிந்து போயிருக்கலாம்,தற்சமயம் உள்ளதெல்லாம் "வாத்து"வகை அன்னங்களே.

#சாதகப்புள்ளின் பெயர்


(பாடும்வானம்பாடி...பாட வா நீ...)

சாரங்கம்,வானம்பாடி,சாதகப்பட்சி(பறவை),நெல்குருவி.

#எண்காற்புள்ளின் பெயர்.
(கிரீஷ்-4 இல் கிராபிக்ஸ் செய்தாலும் செய்வாங்க ...ஹி..ஹி)


சிம்புள், வாருண்டம், வருடை, சம்பரம், துரோணம், சரபம்,வெம்பறவை,கண்டப்புள், கண்டபேரண்டம், கருடப் பறவை ,இது ஒரு இதிகாசப்பறவை,இயல்பில் இல்லை.சிவன் சரபப்பறவை அவதாரம் எடுத்து நரசிம்மவதாரத்தை அடக்கினார் என புராணம் சொல்கிறது.

வெட்டுக்கிளிக்கும் இப்பெயர் உண்டு.


#கருடன் பெயர்


(கருடா சவுக்கியமா?)

கலுழன், வைனன், வைனதேயன், பன்னகவைரி, தார்க்கியன், பறவைவேந்தன், உவனம்


#கழுகின் பெயர்
(நீலகிரி "இரவுக்கழுகு" ஜீவில ரகசிய ரிப்போர்ட்டரா வேலை! அவ்வ்)

புண்டரம், கங்கம், எருவை, பவணை, உவணம், சகுந்தம்,

#பருந்தின் பெயர்


(பாறு-நீலகிரி வல்லூறு -Gyps indicus)

சேனம், பாரசிகை, பாறு, கங்கம்

# அசுணமாவின் பெயர்

கேகயம்(மயில் அல்லது பருந்து/வல்லூறு)

#கிளியின் பெயர்.


(பழம் கொடுத்து வளர்த்த கிளி கச்சேரிக்கு வருமா?)

சாரு, அரி, வன்னி, தத்தை, சுகம், கிள்ளை, கீரம், சுவாகதம், அவந்திகை

மலபார் நீலக்கிளி.
(மலபார் என்றாலே அழகு தான்...ஹி...ஹி)

#கருங்கிளியின் பெயர்

(கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..)

கீரம், கிள்ளை

#சக்கரவாகப்புள்ளின் பெயர்


(பறவையின் சிறகில் பாஸ்போர்ட் இல்லை ...)

நேமிப்புள், கோகம், யானைக்குருகு(பறக்கக்கூடிய அன்னமும் சக்ரவாகமே,நிலமுகி வகையே)


#நிலாமுகியின் பெயர்


(லக லக ....சந்திரமுகி!)

சகோரம்,அன்னம்,சக்கரவாகம்,(brahmany goose- swan)

#செம்போத்தின் பெயர்




குக்கில்

#குயிலின் பெயர்


(இந்திய பொது குயில்)

கோகிலம், களகண்டம், கோரகை, பிகம், பரபுட்டம்

கருங்குயில்.

(கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா..வரியா)

மாங்குயில்.


(மாங்குயிலே ...பூங்குயிலே சேதி ஒன்னு கேளு..)


செண்பக்குயில்.

இந்தக்குயிலைத்தான் பூங்குயில்னு சொல்லுறாங்களோ?


(பூங்குயிலே பாட்டுஓன்னு பாடு)

#மைனாவின் பெயர்
(மஞ்சக்காட்டு "மைனர்"மைனா)

பூவை, சாரிகை,நாகணவாய்ப்புள்(மைனா.)

# கரிச்சான் குருவியின் பெயர்


வலியன்,கஞ்சனம், கிகினி, வயவன், கஞ்சரீடம், பாரத்துவாசம்,கரிக்குருவி,கரிச்சான்,கயவாய்,ஆனைச்சாத்து.

#காரிப்பிள்ளையின் பெயர்

வஞ்சுளன், வயவன், வயான்



#மீன்கொத்தியின் பெயர்(king fisher)


(மோர் கூட குடிக்காத என்ன பீர் பாட்டிலில் எதுக்குய்யா போட்டாங்க அவ்வ்)

கிச்சிலி,சிநல், கவுதம், பொன்வாய்ப்புள், தித்திரி


#ஆந்தையின் பெயர்.

இருடி, பிங்கலை, கின்னரம்

ஆந்தை எனப்பொதுவாக அழைக்கப்படுகிறது.

(இந்திய பொது ஆந்தை -bubo bengalensis)

மண்ணில் குழித்தோண்டி வலையமைத்து வாழும் ஆந்தை மண்ணாந்தை எனப்படும் அல்லது குழி ஆந்தை.

(நாங்க எவ்ளோ ஸ்மார்ட் ஆனால் மடத்தனத்துக்கு எவனோ மண்ணாந்தைனு சொல்லிட்டானே அவ்வ்)


#கோட்டான் பெயர்




கூகை, உலூகம், குடிஞை, குரால்

* கூகை,கோட்டான் இரண்டுமே நீண்ட ஒலி எழுப்பி "கூவும்- கூகை" ஆகும்,ஆனால் தலையில் கொம்பு போல (கொம்பு- கோடு) உள்ளது "கோட்டான் ஆகும்.

#கூகையின் பெயர்








பெரும்புள், கெளசிகம், ஊமன்

#கோழியின் பெயர்.


(கொண்டை சேவல் கூவக்கிளம்பிட்டார் ..இனிமே விடிஞ்சிடும் அவ்வ்)

குருகு, காலாயுதம், குக்குடம், ஆண்டலைப்புள், வாரணம்

#வரகுக்கோழி.

அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.


(வறுத்து சாப்பிட்டே வரகுக்கோழியை காலிப்பண்ணிட்டாங்களே அவ்வ்)

#காட்டுக்கோழி.

சேவல்.
(கொக்கரக்கோ சேவல்)

பெண் காட்டுக்கோழி.


நீர்ச்சேவல்கோழி.

(தரைமேல் பிறக்க வைத்தான் தண்ணீரில் நடக்க விட்டான் அவ்வ்)

ஏசுக்கோழி:


(இலை மலர்ந்தால் ஈழம் வரைக்குமே நடப்பேன் அவ்வ்)


தாமரை இலைகளின் மேல் நடக்க வல்லது ,தொலைவில் இருந்து பார்க்கும் போது தண்ணீர் மேல் நடப்பது போல தெரிவதால் அபூர்வ சக்திக்கொண்டது என்ற பொருளில் "கிருத்து (அ) ஏசுக்கோழி என அழைப்பர்.

தாமரைக்கோழி எனப்பொதுவாக அழைக்கப்படுகிறது.

#ஊர்க்குருவியின் பெயர்


(சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?)


சிட்டுக்குருவி,குலிங்கம், சடகம், புலிங்கம்


நெற்குருவி:

(நல்லவேளை இன்னும் பிடி நெல் வரலை அவ்வ்)



#கானங்கோழியின் பெயர்.


(கண்ணியில சிக்காதய்யா காணாங்கோழி)

கலிங்கம், கம்புள்

#காடையின் பெயர்

(கடாய் ஃப்ரை காடை இதானா அவ்வ்)

குறும்பூழ்.

#சிவலின்(ஒரு வகை கவுதாரி) பெயர்




கோரசம், புல், இதல்

#கவுதாரியின் பெயர்

சிரவம்,கதுவாலி,

#பகண்டையின் பெயர்


சில்லை,சிவப்புக்குருவி.

#பொய்யாப்புள்ளின் பெயர்
(எனக்கு பொய் சொல்லப்புடிக்காது அதனால தான் இன்னும் "பிலாக்" ஆரம்பிக்கலை அவ்வ்))

சலாங்கு,ஒரு வகை அன்னம்.(அ)நீர்க்கோழி.



#புறாப் பொதுப் பெயர்

தூதுணம், கபோதம், களரவம்

மரகதப்புறா(emerald dove)

(தமிழ்நாட்டின் "தேசிய பறவை")

#கரும்புறாவின் பெயர்

பாராவதம், கபோதம்


#மாடப்புறாவின் பெயர்


(மயக்கும் மாடப்புறா )

கன்மேய்வு, காளபதம்

#உள்ளான் பெயர்
(நெடுங்கால் உள்ளான்- பிரியாணி ரெடி)


(குட்டைக்கால் உள்ளான்-Common Sandpiper )
உள்ளல்

#தூக்கணங்குருவியின் பெயர்


(தூக்குனா குருவி ...எறக்குனா அருவி!)

சிதகம்

#சம்பங்கோழியின் பெயர்


கம்புள்,காட்டுக்கோழி,காட்டுகவுதாரி.


#நீர்வாழ் பறவையின் பொதுப்பெயர்

உன்னம், கிராமம், உற்குரோசம், கின்னரம்


#அன்றிலின் பெயர்


(ஒன்னு இங்கே இருக்கு ,இன்னொன்னு எங்க?)
கவுஞ்சம்

#கொக்கின் பொதுப்பெயர்

குரண்டம், வாலாகம், பகம்.


#கொய்யடி நாரையின்(grey heron) பெயர்




குருகு, வண்டானம்,சாம்பல் நாரை.

"வண்டானம்" என்ற ஊர் தூத்துக்குடி அருகே உள்ளது ,வண்டானம் உலகநாதப்பிள்ளை.சிதம்பரம் என்பதே "வ.உ.சி"யின் முழுப்பெயர். கடற்கரையோர ஊர் என்பதால் இவ்வகை நாரைகள் அங்கு நிறையக்காணப்பட்டதால் அவ்வூருக்கு பெயர் வதிருக்கலாமோ?

#பொருநாரையின்(greater adjutant- (Leptoptilos dubius) பெயர்


(பெரியண்ணன்)

பிதா, போதா

சிறு பொருநாரை-Lesser Adjutant (Leptoptilos javanicus)


(சின்ன தம்பி)

சிறு போதா, சிறு பிதா.

# பெரும் பூநாரை.(Greater Flamingo)




சிறு பூநாரை: Lesser Flamingo :





#செங்கால்நாரை.

 சங்கப்பாடலில் "நாரைவிடு தூது" ஆக பாடல்ப்பெற்றது செங்கால் நாரை. சத்திமுத்து  என்ற ஊரின் பெயரால் அறியப்படும் புலவர் ,தன் மனைவிக்கு தூதாக செங்கால் நாரையை அனுப்புவதாக பாடிய பாடல் புகழ்ப்பெற்ற ஒன்று.

"நாராய் நாராய் செங்கால் நாராய்


பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்

நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

"எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

இப்பாடலை தற்செயலாகக்கேட்ட பாண்டிய மன்னன் "வழுதி மாறன்" பரிசில் அளித்து ,புலவரின் துயர் துடைத்தானாம்.



(காம்ளான் குடிச்சு நானும் பூநாரை போல உசரமா ஆகிக்காட்டுறேன்)


purple heron- செந்நாரை.

(இது மேக்கப் இல்லிங்ணா எல்லாம் ஒரிஜினல்)

செந்நீலநாரை எனவும் அழைப்பதுண்டு.

#வெள்ளை நாரையின் பெயர்


(கிரேன் பாக்கு கம்பெனி ஓனர்)

சாரசம்

#கருநாரையின் பெயர்


(ஃபேர்&லவ்லி போட்டு நானும் வெள்ளையாகி காட்டுறேன்)

சிகரி


மடையான் -I(ndian Pond Heron )


 (எந்த மடையனோ எனக்கு போய் மடையானு பேரு வச்சிட்டனே ...அவன)

குருட்டு கொக்கு,குளக்கொக்கு.

#கரை கொக்கு.(reef heron)

(வளரும் கொக்கு இவன் அப்படியே சாப்பிடுவான் அவ்வ்)

#நீர்க்காக்கையின் பெயர்


(எவ்ளோ "தண்ணி"யிலும் தள்ளாடாத "தண்ணீர்"காகம்)

அர்க்கம், காரண்டம்

ஆலாப்பறவை(seagull)




கடல் புறா, வலசை பறவை.

#வண்டின் பெயர்

அரி, அளி, ஞிமிறு, மந்தி, அறுபதம், சிலீமுகம்,சஞ்சரிகம், சரகம், சஞ்சானிகம், சுரும்பு, கீடம், பிரமரம், மா, கீதம், பிருங்கம்,பிரசம், புள், புண்டரீகம், தும்பி, மதுபம்

பெண்வண்டின் பெயர்

கரும்புள், கேசவம், தேன்

ஆண்வண்டின் பெயர்

சுரும்பு, மதுகரம், தும்பி

#வீட்டு வவ்வால். பெயர்

ஆலாலம்,துருஞ்சில்.

#வாவலின் பெயர்(ஹி..ஹி வவ்வால்)


அஞ்சலிகை

.#கரையான்-ஈசல் பெயர்




ஈயல், மூதா,இந்திரகோபம்.

#தேனீயின் பெயர்

சரகம், பிரசம்

#சிள் விட்டின்(cricket) பெயர்




சிதடி, சில்லிகை, சில்லை, சிமிலி

#விட்டிற் பறவையின் பெயர்




சலபம், பதங்கம்,வெட்டுக்கிளி.


#விலாங்கின் பெயர்

பூழ்

#அளம்பின்(கொசு) பெயர்

நிலத்தி

#மின்மினியின் பெயர்

கச்சோதம்

#கொதுகின்(சிறு கொசு) பெயர்




கொசு,மசகம், துள்ளல், அசவல்,உலங்கு,ஒலுங்கு,சுள்ளான்,முஞல்,நுளம்பு.

#முதலையின் பெயர்



இடங்கர், சிஞ்சுமாரம், வள்மீன், கராம்

ஆண்முதலையின் பெயர்

சாரம்

#ஆமையின் பெயர்


(அரிய வகை கிரீன் ரிட்லி ஆமை)

கூர்மம், உறுப்படக்கி, கச்சபம், கமடம்

#பெண்ணாமையின் பெயர்

துளி

#விலாங்கின் பெயர்

நூறை

#கிளிஞ்சலின் பெயர்

ஏரல், எருந்து, ஊரல்

#இறால்மீனின் பெயர்

இறவு

#ஆரான்மீனின் பெயர்

ஆரல்

#கெண்டை மீனின் பெயர்

சபரம், சேல்

#நத்தையின் பெயர்

கருநந்து, நாகு

#அட்டையின் பெயர்

உரு

#மீன் பொதுப்பெயர்

மயிலை, மற்சம், பழல்

#பல்லியின் பெயர்

புள்ளி, கெவுளி, கோகிலம்

#நாகாவண்டின் பெயர்

நொள்ளை


#சிலந்தியின் பெயர்

,காலந்தி,உலூதை(எறும்புக்கும் இப்பெயருண்டு)

#எறும்பின் பெயர்

பிலஞ்சுலோபம், பிபீலிகை

#பூநாகம் பெயர்

நாங்கூழி

#செல்லின் பெயர்

சிதலை, கறையான்

#தேளின் பெயர்

நளிவிடம், தெறுக்கால், துட்டன், விருச்சிகம்,

#நண்டின் பெயர்


அலவன்,களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கர்க்கடகம்,வானரப்பகை,

#மரப்புழுவின் பெயர்

உசு,உளு(கொசுவுக்கும் இப்பெயர் உண்டு)

#தவளையின் பெயர்

மண்டூகம், தேரை, அரி, நுணலை, நீகம், பேகம்,

#புழுவின் பெயர்

கிருமி, பொட்டு

#புழுவின் பெயர்

கீடம்,,உலண்டு கோற்புழு

#மலைத்தேனியின் பெயர்

பிரசம்,கோற்றேன்,கோற்றேனி

#தேன்கூட்டின் பெயர்

இறால்.

#நாகத்தின் பெயர்

கரடம், வாயசம், அரிட்டம், கரும்பிள்ளை, கொடி,

------------------------------------------------

இதர உறுப்புகள் மற்றும் பண்புகளின் பெயர்:

விலங்கினாண்பெயர்

கடுவன், மா, ஒருத்தல், போத்து, கலை, தகர், களிறு, சே, பகடு, உம்பல், ஏறு, ஓரி

கடுவனென்னும் பெயர்

குரங்கு, பூஞை, இரண்டுக்குமாம்

மாவென்னும் பெயர்

யானை, பன்றி, புரவி

ஒருத்தலென்னும் பெயர்

கரடி, புல்வாய், மான், யானை, கவுரி, எருமை, பன்றி, புலி, மரை

போத்தென்னும் பெயர்

மரை, பசு, புலி, பூஞை, புல்வாய்

கலையென்னும் பெயர்

முசு, மான்

தகரென்னும் பெயர்

துரவாடு, வேழம், யாளி, சுறா

களிறென்னும் பெயர்

நரி, சுறவு, பன்றி

சேவென்னும் பெயர்

குதிரை, பெற்றம், புல்வாய்

பகடென்னும் பெயர்

எருமை, யானை, பெற்றம்

உம்பலென்னும் பெயர்

இபம்

ஏறென்னும் பெயர்

ஆன், எருமை, பன்றி, கவரி, சங்கு, மான், மரை, புல்வாய், சுறவு

ஓரியென்னும் பெயர்

நரி, முசு

விலங்கின் பெண்பாற்பெயர்

பிடி, பிணை, பெட்டை, மந்தி, பிணா, ஆ, நாகு, பாட்டி

பிடியென்னும் பெயர்

குஞ்சரம், கவரி, ஒட்டகம்,

பிணையென்னும் பெயர்

உழை, புல்வாய், நாய், வராகம்,

பெட்டை யென்னும் பெயர்

ஒட்டகம், கழுதை, வாசி, சிங்கம், மரை

மந்தியென்னும் பெயர்

முசு, ஊகம், குரங்கு

பிணாவென்னும் பெயர்

புல்வாய், நாய், பன்றி

ஆவென்னும் பெயர்

எருமை, பெற்றம், மரை

நாகென்னும் பெயர்

எருமை, மரை, பெற்றம், நீர்ச்சாதி

பாட்டியென்னும் பெயர்

நரி, பன்றி, நாய்

பிணாப்பெண்ணென்னும் பெயர்கள்

பெண்பாலெவற்றிற்குமாம்

விலங்கின் பிள்ளைப பெயர்

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பு, குருளை, கன்று, மறி, போதகம்

பறழ் குருளை குட்டியென்னும் பெயர்கள்

புலி, முயல், வராகம், நரி, நாய்

பிள்ளை யென்னும் பெயர்

நாயொழிந்தவற்றிற்காம்

மறியென்னும் பெயர்

ஆடு, அழுங்கு, மான், குதிரை

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பென்னும் பெயர்கள்

குரங்கு முதன் மரக்கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளைகட்காம்

கன்றென்னும் பெயர்

கடமை, மான், எருமை, பெற்றம், கவயம், ஒட்டகம், யானை, பரி, மரை, கராம், கவரி

குழலியென்னும் பெயர்

கடமை, மான், எருமை, யானை

போதகமென்னும் பெயர்

புலி, சிங்கம், யானை

பறழ் குட்டி பிள்ளை யென்னும் பெயர்கள்

கீரி, பூனை, முயல், அணில்

பறழ் குட்டி யென்னும் பெயர்கள்

பாக்கன், அணில்

பறழ் பிள்ளையென்னும் பெயர்கள்

பார்ப்பு, தவழ்சாதி

குருளைகன்றென்னும் பெயர்கள்

மான்

குழவிகுருளை யென்னும் பெயர்கள்

யாளி

குழலிகுருளை யென்னும் பெயர்கள்

முசு

விலங்கின் பொதுப்பெயர்

மா, மான், மிருகம், குரங்கு

விலங்கின் கூட்டத்தின் பெயர்

சாலம், வியூகம், யூதம், குலம், விருந்தம், கணம்

விலங்கின் வாலின் பெயர்

கூலம், வேசகம், தோகை, இலாங்கூலம், வாலதி

விலங்கின் வாற்கீழிடத்தின் பெயர்

வெருகம்

விலங்கின் கொம்பின் பெயர்

மருப்பு, சிருங்கம், கோடு, உலவை, விடாணம்

கொம்பில்லா விலங்கின் பெயர்

குமரம்

தோலின் பெயர்

கிருத்தி, புறணி, போர்வை, அதள், ஒலியல், தொக்கு, துருத்தி, சருமம், பச்சை, துவக்கு, உரி, வடகம்

ஊனின் பெயர்

தசை, புலால், புலவு, புண், தடி, புளிதம், தூ, பிசிதம், வள்ளுரம், விடக்கு

புலாலின் பெயர்

முடை, ஊழ்த்தல், பூதி, தசை

பசுவினிறைச்சியின் பெயர்

வள்ளுரம்

இரத்தத்தின் பெயர்

எருவை, நெய்த்தோர், சோரி, உதிரம், புண்ணீர், குருதி, செம்பால், புலானீர், சோணிதம், செந்நீர், சுடுவன்கறை

கொழுப்பின் பெயர்

நிணம், விளர், விழுக்கு

கருப்பத்தின் பெயர்

கரு, சினை, பீள், சூல், வயாவு

வழும்பின் பெயர்

வழுக்கு

ஈரலின் பெயர்

ஈருள்

முடையின் பெயர்

புலவு, ஊத்தை

மாசின் பெயர்

மலம்

உண்மாசின் பெயர்

உபமலம்


மயிலும் ஏழாலுமல்லனவாகிய புள்ளினாண்பெயர்

சேவல்

கோழி கூகைகளின் பெண் பெயர்

அளகு

பறவைப்பெண்ணின் பெயர்

பெடை, பெட்டை, பேடை

புட்பொதுவின் பெயர்

லிகங்கம், ஆசுகி, வீ, விகிரம், குடிஞை, பக்கி, சகுந்தம், பத்திரி, பதங்கம், பிணிமுகம், சுகம், பறவை, பதகம், போகில், குரீஇ, வயானம்

இறகின் பெயர்

சிறகு, சதனம், வாசம், சிறை, பிஞ்சம், கூரல், பக்கம், பறை, சதம், தூவி, தோகை, பத்திரம், குரல், கூழை, இறை

முட்டையின் பெயர்

அரிட்டம், கோசம், அண்டம், சினை

பறவைக் குஞ்சின் பெயர்

பிள்ளை, பார்ப்பு

பறவை மூக்கின் பெயர்

சுச்சு, சுவவு, துண்டம், அலகு

புட்சிறகடித்துப் புடைத்தலின் பெயர்

ஓசனித்தல்

புள்ளீட்டத்தினோசையின் பெயர்

துழனி

பறவைக் கூட்டத்தின் பெயர்

தொழுதி

மகாமீனின் பெயர்

கலை, சுறா, மீனேறு

பெருமீனின் பெயர்

யானை மீன், திமி

யானைமீனை விழுங்குமீனின் பெயர்

திமிங்கிலம்

திமிங்கிலத்தை விழுங்குமீனின் பெயர்

திமிங்கிலகிலம்

சங்கின் பெயர்

நந்து, சுத்தி, நாகு, வளை, கம்பு, கோடு, வாரணம், வண்டு, இடம்புரி, வெள்ளை

வலம்புரிச் சங்கின் பெயர்

கொக்கரை

சலஞ்சலத்தின் பெயர்

பணிலம்

இடம்புரி

இப்பியாயிரஞசூழ்ந்தது

வலம்புரி

இடம்புரிச் சங்காயிரஞ் சூழ்ந்தது

சஞ்சலம்

வலம்புரியாயிரஞ் சூழ்ந்தது

பாஞ்சசன்னியம்

சலஞ்சலங்களாயிரஞ் சூழ்ந்தது

-------------------------

தொடர்புடைய சில பழையப்பதிவுகள்:

வனவிலங்குகளின் அறிவியல்ப்பெயர்கள்-1

#அறிவியல்ப்பெயர்கள்-1

வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்-2

#அறிவியல்ப்பெயர்கள்-2


காணாமல் போகும் நாட்டுக்காளைகள்.

#காளை-1

#காளை-2


-------------------------
பின்குறிப்பு;

#முடிந்த வரையில் படங்கள் இணைத்துள்ளேன், பிறப்படங்கள் கிடைப்பதைப்பொறுத்து  இணைக்கப்படும்.


# பிறகு பிழை திருத்தம் &விளக்கம், மேம்பாடு செய்யப்படும்.

# http://www.thamizham.net/pezhi/sangam/nikandu03-u8.htm

# http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0118.html

# பிடிஎஃப் கோப்பாக வேண்டுவோர் நூலகம் இணையத்தளத்தில் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம்.

http://noolaham.net/project/48/4782/4782.pdf

நன்றி!


தகவல் மற்றும் படங்கள்,

விக்கி & கூகிள் இணையத்தளங்கள்,நன்றி!
---------------------------------------------