Monday, July 09, 2007

சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:

இன்னாள் - முன்னால்

1)பழனி - திருஆவினன் குடி

2)திருசெந்தூர் - திருசீரலைவாய்

3)பழமுதிர் சோலை - பழம் உதிர் சோலை.

4)திருத்தணி (அ) திருத்தணிகை - செருத்தணிகை

5)மதுரை - மாதுரையும் பேரூர்.

6)செங்கல்பட்டு - செங்கழுநீர்ப்பட்டு!

7)பூந்த மல்லி - பூவிருந்தன் வல்லி.

8)ஆர்காட் - ஆருக் காடு!

9)சோளிங்கர் - சோழ சிங்கபுரம்.

10)சிவகங்கை - நாலுகோட்டை

11)சிதம்பரம் - தில்லை

12)தருமபுரி - தகடூர்

13)ஷ்ரிவில்லிபுதுர் - நாச்சியார் கோயில்

14)அருப்பு கோட்டை - திரு நல்லுர்

15)எக்மோர் - எழுமூர்

16) சிந்தாதரி பேட்டை - சின்ன தறிப் பேட்டை .

17) கோடம்பாக்கம் - கோடலம் பாக்கம்

18)திருவல்லிகேணி - திரு அல்லி கேணி

19) பழவந்தாங்கல் - பல்லவன் தாங்கல்

20)தாம்பரம் - குண்சீல நல்லுர் (அ) தர்மபுரம்

இன்னும் பல ஊர்களின் பெயரையும் தேடி வருகிறேன் தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்

27 comments:

vasikar said...

1) Now Virudhunagar
2) in 1950's VirudhuPatti
3) before 1950's Veyyil Ugantha Pattinam

வவ்வால் said...

வசிகர் ,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

விருதுப்பட்டியும் கேள்விப்பட்டுள்ளேன் , விருதுகல்வெட்டி என்பது தான் விருதுப்பட்டி ஆனது என்று , தவணை முறையில் பெயர்கள் போட இருந்தேன், தாங்கள் குறிப்பிட்டு போட்டதும் நன்று!

லக்ஷ்மி said...

விருதுபட்டி பேர் மாற்றம் பற்றி கி. ரா கூட எழுதியதாக நினைவு. பதிவு முடித்ததும் நான் சொல்ல நினைத்ததை வசிகர் முந்திக்கொண்டுவிட்டார். இது ஒரு நல்ல முயற்சி வவ்வால் - ஒரு முறை தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்று ஒரு பட்டியெலெடுக்க முயன்ற போது நான் தளர்ந்து போனேன். எங்குமே இன்றைய பெயர்களுடன் ஒரு பட்டியல் கிடைப்பதாய் தெரியவில்லை. யாரேனும் அதற்கு ஒரு தளம் தொடங்கலாம். நான் என்னாலான வகையில் பங்குகொள்ளத் தயார்.

வவ்வால் said...

லஷ்மி ,
வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி!

எனக்கு நினைவில் இருந்த பெயர்களை மட்டும் தான் போட்டுள்ளேன் அவ்வப்போது தேடியோ , நினைவுக்கு வந்தாலோ மேலும் போடலாம் என இருக்கிறேன், விருதுநகர் பெயர் கூட எனக்கு த்ரெஇந்தும் பட்டியல் போடும் போது நினைவுக்கு வரவில்லை :-)

தேவார பதிகம் பாடல் பெற்ற தலம் குறித்து ஏதோ ஒரு புத்தகம் உள்ளது மறந்து விட்டது (பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ஆதரவில் வந்த நூல் என நினைக்கிறேன்) , பின்னர் சொல்கிறேன், ஒரு சைட் கூட இருகிறது அதுவும் நினைவில் இல்லை!

செல்வன் said...

Good job vovval

kovanpuththuur = koyamuthur = coimbatore

Suriyaputhran said...

Baskar D.
Thiru sirapalli @ Tiruchirappalli

வவ்வால் said...

செல்வன் ,

நன்றி,

கோனியம்மன் என்று ஒரு அம்மன் கோவில் பெயரால் கோயம்புதூர் ஆனது என கேள்வி பட்டேன் , தொடர்ந்து ஊர்ப்பெயர்களை கொஞ்சம் சரிப்பார்த்துக்கொண்டு போடலாம் என இருந்தேன் , உங்கள் தகவலும் புதிதாக உள்ளது !

நன்றி சூர்யபுத்திரன் ,

திருச்சிகும் சரிப்பார்க்க வேண்டும் என்று தான் போடவில்லை.

எல்லா பெரிய நகரங்களைப்பற்றியும் பார்த்தேன் பலவும் குழப்பியது , சரி எனக்கு தெளிவாக தெரிந்ததை மட்டும் போட்டுள்ளேன் , உங்களைப்போன்ரவர்கள் கொடுக்கும் தகவல்களையும் சேர்த்து அடுத்த பட்டியல் போட்டு விடலாம்.

Sridhar Venkat said...

'சிராப்பள்ளி குன்றுடையானே' என்று பாடலில் படித்த நினைவு இருக்கிறது.

'சின்ன தறி பேட்டை என்றுதானே இருக்க வேண்டும்?

எனக்கு தெரிந்த சில. கேள்வி ஞானம்தான்.

திருவெல்லிக்கேணி - திரு அல்லி குளம் (அ) திரு அல்லி கேணி
மயிலாப்பூர் - திரு மயிலை
சென்னை - சென்னப்ப பட்டினம்
கும்பகோணம் - குடந்தை

Sridhar Venkat said...

இதோ திருச்சி பற்றிய அந்தப் பாடல்

நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளே(று)
ஒன்றுடை யானை யுமையொரு பாகமுடையானைச்
சென்றடையாத திருவுடை யானை சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் னுள்ளங் குளிரும்மே

வவ்வால் said...

வாங்க ஷ்ரிதர் வெங்கட்,

நன்றி!

திரு அல்லிக் கேணி என்று தான் நானும் போட்டுள்ளேன்,

றி, ரி பிழை அடிக்கடி வந்து விடுகிறது, கவனமின்மையால் ,சின்ன தறிப்பேட்டை தான் ,

, திருமயிலை, சென்னப்பட்டினம் பெயர் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று என்று போடவில்லை. கொஞ்சம் தெரியாத பெயர்களாக போட முயன்றேன்.

கும்மகோணம் = திருக்குடந்தை எனக்கேள்விப்பட்டுள்ளேன்!

சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டினம் என வந்ததாக சொல்வார்கள் , ஆனால் இன்னொரு தகவல் உண்டு, மட்ரஸ் என வந்ததற்கு.

வெள்ளைக்காரர்கள் 1869 இல் இடம் வாங்க வந்த போது புதிய நகரத்திற்கு சென்னப்ப நாயக்கர் பெயர் வைத்தால் இலவசமாக இடம் தருவதாக அப்போதையா நாயக்கர் மன்னர் அங்கப்ப நாயகர் சொன்னர்(அவர் தந்தை தான் சென்னப்ப நாயகர்)

ஒரு பெயரை வைத்தால் இலவசமாக இடம் தருகிறாரே இவர் சரியான மாட(mad raasa)் ராசா என்று அவர்களுக்குள் சொல்லிக்கொண்டார்களாம் அதுவே பின்னர் பெயராக ஆங்கிலத்தில் "mad raasaa pattinam "நிலைத்துவிட்டது என்று. எந்த அளவு அது உண்மை என தெரியாது .

இன்னொரு செய்தி, அப்பொது இங்கே நிறைய முச்லிம் பள்ளிகள் மதராசாக்கள் இருந்தததால் அப்பெயர் வந்தது என்பார்கள்.

திருச்சி பற்றி அருமையான ஒன்றினை அளித்துள்ளீர்கல்,

திருச்சி பெயர் வரக்காரணம் என ஒன்று படித்தேன் சரியா என சொல்லவும்,

திரு + சிரா + பள்ளி

திரு = மரியாதை

சிரா என்னும் சமன துறவி அங்கே வாழ்ந்தாரம்,
பள்ளி = வசித்தல்

எனவே திருச்சிராப்பள்ளி என்றப் பெயர் வந்ததாம்!

மற்றொரு கதை,

ராவணன் மகன் திரிஷுர் என்ற 3 தலை உடையவன் சிவன் மீது அங்கு இருந்து தவம் செய்ததாக!

Anonymous said...

Vriddhachalam---Thirumudhukunram
Lalgudi ------Thiruthavathurai
Pennadam ------Pen+Aaa+Kadam

வவ்வால் said...

நன்றி , அனானி,

விருதாச்சலம் பெயருக்கு தான் தேடிகொண்டிருந்தேன் , இந்த பெயர் எனக்கு நினைவில் இல்லை.
விருதாச்சலம் = திருமுதுக்குன்றம்
லால்குடி = திருதவத்துறை

பெண்ணாடம் என்பதற்கு தாங்கள் சொல்லியிருப்பது அந்த பெயரின் விளக்கம் மட்டுமெ, பெண்ணடகம் என்றால் பெண்ணை அடகு வைத்தவர் என்று பொருள், அங்கு இருந்து சிவனடியார் சிவனுக்கு சேவை செய்ய அவர் மனைவியை அடகு வைத்தாராம். வேறு ஒரு அருமையான தமிழ்பெயர் இருக்கிறது மறந்து விட்டது.

ரா.பி.சேது பிள்ளை என்பவர் எல்லா ஊர்களின் பெயருக்கும் அர்த்தம் சொல்லும் நூல் எழுதியுள்ளார் அதைத்தான் தேடிப்படிக்க வேண்டும்!

செல்வன் said...

வவ்வால்

கோனியம்மன்புதூர் என்பது கோவை ஆனது என்பார்கள். ஆனால் கோவன் எனும் அரசன் ஆண்டதால் கோவன்புதூர் என ஆனது என்றும் கேள்வி.இரண்டாவது சரியாக இருக்கவே வாய்ப்பு அதிகம்

செந்தழல் ரவி said...

எங்க ஊர் திருக்கோவிலூர் பக்கத்தில்

அரகண்டநல்லூர் = அறம் கண்ட நல்லூர்
கொழுந்திராம்பட்டு = கொழுந்து இராம் பட்டு

அப்போ எல்லாம் அரசர்கள் ஊர்களுக்கு பெயர் வைக்கச்சொல்லி புலவர்களை கூட்டமாக அனுப்புவாங்களாம்...

அவங்களும் அந்த ஊரில் அவங்க பெறும் அனுபவத்துக்கு தக்கனமாதிரி பெயரை வெச்சுட்டு வந்துருவாங்களாம்...

அறம் கண்ட நல்லூர் ஆக்சுவலா மெய்ப்பொருள் நாயனார் என்ற நாயன்மாரின் ஒரு கீர்த்திக்காக வைக்கப்பட்ட பெயர்...

கொழுந்திராம்பட்டு வந்து, அந்த ஊருக்கு புலவர்கள் வரும்போது எந்த செடியிலயும் கொழுந்து இல்லாம ஆடுகள் கடிச்சு வெச்சிருந்ததாம்..

இப்படி ஒவ்வொரு ஊருக்கு பின்னாலும் ஒரு கதை...

:)))

நல்ல பதிவு இது...!!

வவ்வால் said...

செல்வன்,

இப்படி எல்லா ஊருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்க்காரணங்கள் உள்ளது எல்லாவர்றையும் எப்படி எடுத்துக்கொள்வது என்று குழப்பம் , ஆனால் அனைத்துமே சுவாரசியமானவை!

வவ்வால் said...

வாங்க ரவி, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

நல்ல தகவல்களை அளித்துள்ளீர்கள், இப்படியாக அனைவரும் தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால் நிறைய ஊர்களின் பெயர்க்காரணம் எளிதாக கிடைத்து விடும்.

திருவெண்ணை நல்லூர் கூட அந்த பக்கம் தான் , கம்பருக்கு உதவிய சடையப்ப வள்ளல் இருந்த இடம் , சுந்தரர் வசித்த பிறந்த ஊர்.நாயன்மார்கள் பிறந்த ஊர் என்றால் முன்னே "திரு" என்ற அடை மொழி சேர்ப்பார்களாம்!

Sridhar Venkat said...

வவ்வால் அவர்களே,

நிறைய பெயர்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

திருச்சிராப்பள்ளி - நீங்கள் சொன்னபடி நானும் படித்திருக்கிறேன்.

மதுரை - நானறிந்த வரையில் அது மதுரை என்றுதான் அழைக்கப் படுகின்றது சங்க காலத்திலிருந்து. 'மாது உறையும் ஊர்' என்று ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் அது எப்பொழுதும் மதுரைதான். மதுரையேதான் :-)

சென்னப்ப நாயக்கரின் மகன் அங்கப்ப நாயக்கரா? எங்கோ ஐயப்ப நாயக்கர் என்று படித்ததாக நினைவு. :-)

நீங்கள் சரியென்று நினைக்கும் சில பெயர்கள் பின்னூட்டத்தில் வந்தால் அதை இடுகையிலும் அளித்தால் படிக்கிரவர்களுக்கு வசதியாக இருக்குமே.

வவ்வால் said...

வாங்க ஷ்ரிதர் வெங்கட்,

வருகைக்கு நன்றி,

மதுரை என்பது தான் பெயராக இருக்கிறது , ஆனால் எதிலிருந்து வந்தது அல்லது மாற்று பெயர் என்ன என்று சொல்லத்தான் மாதுறையும் பேரூர் என்பதை குறிப்பிட்டுள்ளேன்!

மதுரை பெயர்க்காரணத்திற்கு மேலும் சில விளக்கம் உள்ளது,

தேன் சொறியும் மலர்களை சூடியவள், தேன் = மதுரம் எனவே மதுரா புரி

மருத நிலப்பகுதி அங்குள்ள கடவுளுக்கு மருதையன்(காளையார் கோயில் சிவனுக்கு மருதையன் என்று தான் பெயர்) என்றும் எனவே மருதை என்பதே மதுரை ஆகியதாகவும் சொல்வார்கள், இன்றும் கிராமப்பகுதியில் மருதை தானே சொல்கிறார்கள்.

அங்கப்ப நாயக்கர் என்று தான் போட்டு இருக்காங்க ஒரு வேளை எழுத்து பிழையோ?(தெலுங்கு பேசுவோர் அய்யப்பன் என்று பெயர் வைக்க வாய்ப்பு இல்லை அதுவும் அந்த காலத்தில் )

நிறைய பெயர்களுக்கு இப்படி பல காரணங்கள் இருக்கிறது , எதை போடுவது என்று தெரியாமல் தான் சிலவற்றை மட்டும் போட்டேன் , விரைவில் மற்றவர்கள் சொன்னது எல்லாம் சேர்த்து தனியே பதிவிட்டு விடுகிறேன்!

காட்டாறு said...

தூத்துக்குடி - தூர்த்துக் குடி.

எங்க தாத்தா சொல்லுவாங்க.... அந்த காலத்தில் (?) தூத்துக்க்குடியில் எங்கே தோண்டினாலும் நீ இருக்குமாம்; உப்பு நீராகவோ, குடி நீராகவோ. உண்மை நானறியேன்.

வவ்வால் said...

வாங்க காட்டாறு,
வருகைக்கு நன்றி!

நீங்க சொன்னது போல கூட இருக்கலாம் ,நானும் பல உறுதி செய்யப்படாத பெயர்க்காரணங்களைக் கேள்விபட்டுள்ளேன் , எல்லாம் செவி வழி செய்தி என்பதம் அவற்றை போடவில்லை.

தோற்றுக்குடி என்பது தூத்துகுடி ஆனது எனவும் கேள்விப்பட்டேன். துத்தம் என்றால் உப்பு என்று ஒரு பொருள் உள்ளதாகவும் அதிலிருந்து தூத்துகுடி வந்ததாகவும் ஒரு செய்தியுண்டு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முன்பு திருமறைக்காடு பின்பு வேதாரணியம் ஆனதாம்.
இன்னாள் எனும் போது முன்னாள்
எனத் தானே வரவேண்டும்.
தலைப்பில்

வவ்வால் said...

யோகன் பாரிஸ்,
நன்றி!

வேதம் = திருமறை, ஆரண்யம் = காடு, என நேரடியாக சமஸ்கிருதத்திற்கு அர்த்தப்படுத்தும் பெயர் அது எனவே தான் இப்பெயரை போடலாமா வேண்டாம என்று விட்டு இருந்தேன் ... நீங்கள் எடுத்துகொடுத்து விட்டீர்கள். அதுவும் நல்லது தான்.

நீங்க கேட்டதுக்கு வருவோம்,
முன்னாள் என்பது முதல் நாள் எனப்பொருள்படும், ஆனால் கொஞ்ச காலத்துக்கு முன்னர் என அதவது "previous" என சொல்ல முன்னால் எனத்தான் வரும். அதே சமயம் இன்றைய என சொல்ல இன்னாள் வரும்.
உதாரணம்: முன்னால் முதல்வர் , முன்னால் அமைச்சர் போன்றவை.

சேதுக்கரசி said...

மதுரை - திருவாலவாய் (ஆலவாய்)
சீர்காழி - பிரமாபுரம்
மயிலாடுதுறை - மாயுரம், மாயவரம்
வைத்தீஸ்வரன் கோயில் - புள்ளிருக்கு வேளூர்
காஞ்சிபுரம் - கச்சி ஏகம்பம்
விருத்தாசலம் - திருமுதுகுன்றம்
திருவெண்காடு - ஸ்வேதாரண்யம் (ஸ்வேத - வெண்மை, ஆரண்யம் - காடு)

வவ்வால் said...

சேதுக்கரசி,
நன்றி!
(சரியான பேர் சொல்லிட்டனா) ஒரு வேகத்தில பழையப்பதிவை எல்லாம் போய் படிக்க ஆரம்பிச்சிட்டிங்க போல

விருத்தாச்சலம் பேருக்கு சிலர் ஏற்கனவே சொல்லிட்டாங்க, மாயவரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்பதால் விட்டாச்சு,மேலும் சில ஊர்களைப்பற்றி நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள், நான் அப்போது நினைவுக்கு வந்ததை மட்டுமே போட்டேன், அடுத்த பட்டியல் போட வேண்டும் என்று ரொம்ப நாளாக கிடப்பில் இருக்கு , விரைவில் போட்டே ஆக வேண்டும்.

Senthil Raja said...

thoothukudi thirumanthira nagar

jansi kannan said...

அறிந்துகொள்ளக்கூடிய தகவல். அருமை.

Unknown said...

பனிச்சைவெட்டுவான் என்றால் என்ன ஊர்? Plz tell