Thursday, October 25, 2007

உங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவதேன்?






நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, இதனால் சுற்று சூழல் பாதிப்பு, அதிக சத்தம் எல்லாம் வருகிறது. யோசித்து பாருங்கள் அத்தனை வாகனத்திலும் புகைப்போக்கி ,ஒலிக்குறைப்பான்(exhaust silencer) இல்லாமல் இருந்தால் என்ன ஆகும்.எல்லார் காதும் கேட்க்காது ஆகிடும்.விமானங்களில் புரொப்பெல்லர் வகை சிறிய விமானங்களுக்கு மட்டும் புகைப்போக்கி ஒலிக்க்குறைப்பான் உண்டு.கப்பல்களிலும் உண்டு.

நம்ம வாகனம் சத்தம் போடாமல் ஓட உதவும் புகைப்போக்கி ஒலிக்குறைப்பான் எப்படி செயல் படுகிறதுனு பார்ப்போம்.நம் வாகனத்திலே இருக்கும் பாகங்களில் நமது கவனத்தினை குறைவாக பெருவது இது தான் , ஆனாலும் நிறைவான வேலையை செய்வது.

ஒரு வாகன எஞ்சினில் அதிக அழுத்தத்தில் காற்றுடன் எரிப்பொருள் கலக்கப்பட்டு பற்ற வைக்கப்படுகிறது, அதன் மூலம் கிடைக்கும் விசையே வாகனம் ஓடப்பயன்படுகிறது.

எரிப்பொருள் காற்றுக்கலவை பற்றவைக்கும் போது அது கிட்டத்தட்ட ஒரு வெடிக்குண்டு போல சத்தம் எழுப்பும், எரிந்ததும் வரும் புகையை வெளியேற்றினால் தான் அடுத்த சுற்றுக்கு எஞ்சின் தயாராகும். அந்த புகை கிட்ட தட்ட 1200 C வெப்ப நிலையில் இருக்கும். அதிக அழுத்தத்துடன் வெளிவரும் புகை விரிவடைவதால் பலத்த சத்தத்துடன் புகை வெளிவரும். இந்த ஓசையுடன் வாகனத்தை ஓட்ட முடியாது என குறைக்கப்பயன் படுவது தான் புகைப்போக்கி ஒலி குறைப்பான். இதனை சைலன்சர் என்று சொன்னாலும் "muffler" என்று சொல்வது தான் சரியான சொல்லாகும்.

இனி ஒலிக்குறைப்பான் என்றே சுருக்கமாக சொல்வோம், அது செயல் படும் விதத்தினை பார்ப்போம்.

ஒலிக்குறைப்பான்கள் செயல்படும்விதம்.

1) ஒலி உறிஞ்சுதல்
2)ஒலி எதிரொலித்தல்,
3)ஒலி தடுத்தல்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ , அல்லதும் மூன்றும் இணைந்தோ ஒரு ஒலிக்குறைப்பான் செய்யப்படும். அது வாகனத்தின் தன்மை, செலவிடும் தொகைக்கு ஏற்ப மாறும்.

ஒரு சிலிண்டர் , பல சிலிண்டர்கள் உள்ள எஞ்சின்கள் உள்ளது, அவற்றை ஒரு குழாய் மூலம் ஒன்றாக இணைத்து(exhaust port and manifold) ஒலிக்குறைப்பான் பகுதிக்கு கொண்டு வந்து விடுவார்கள்.இனி ஒலிக்குறைப்பான் உள்ளே செல்வோம்.

ஒலிக்குறைப்பான் உள்ளே ஒரு குழாயில் சிறு துளைகள் இட்டு அதன் மீது கண்ணாடி இழைகள்( glasswool)கொண்டு சுற்றி அதன் மூலம் புகையை வர வைப்பார்கள். ஒலியை கண்ணாடி இழை உறிஞ்சி குறைக்கும், மேலும் புகையின் அழுத்தம் குறைவிக்கப்படும். அதன் பின்னர் புகை வெளியேற்றப்படும் . இதில் நேரானப்பாதை , எதிர்ப்பாதை வெளியேற்றம் என்ற இரண்டு முறை இருக்கிறது.
நேர்ப்பாதை புகைப்போக்கி

ஓரே குழல் மூலம் புகை உள்ளே வந்து வெளியேருவது நேரானாது. ஒரு குழல் மூலம் வந்த புகை, அதனுடன் தொடர்பில்லாத மற்றொரு குழல் மூலம் வெளியேற்றப்படுவது,இதில் புகை சுற்றுப்பதையில் செல்வதால் ஒலியின் வலிமை அதிகம் குறையும். எதிர்ப்பாதை புகைப்போக்கி

மேற் சொன்ன முறையில் ஒலி உறிஞ்சுதல், தடுத்தல் என்ற இரண்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கும்.

கண்ணாடி இழையை விட அதிக பயன் உள்ள ஒலிக்குறைப்பான், ரெசனோட்டர்(resonator) வகை ஒலி எதிரொலித்தல் ஒலிக்க்குறைப்பான் ஆகும்.

இதில் புகை சிறு துளைகள் உள்ள குழாய் மூலம் ரெசனோட்டர் அறை என்ற ஒன்றின் உள் செலுத்தப்படும், அந்த அறையில் சில பள்ளங்கள்/புடைப்புகள் இருக்கும் அதில் பட்டு எதிரொலிக்கும் ஒலி சரியாக உள்ளே வரும் ஒலியின் கட்டத்திற்கு(phase) எதிரான கட்டத்தில் உள்ள ஒலியாக(opposite phase) இருக்கும். இரண்டு ஒலி அலைகளும் ஒன்றின் மீது ஒன்று மோதி வலுவிழந்து விடும். பின்னர் புகை அடுத்த அறைக்கு எடுத்து செல்லப்பட்டு நேர் குழல் அல்லது எதிர்ப்பாதை குழல் வழியாக வெளியில் எடுத்து செல்லப்படும்.

எல்லா வகை ஒலிக்குறைப்பானிலும் குறுகிய குழாயில் வரும் புகை அகன்ற ஒலிக்குறைப்பானுக்கு வரும் போது மெதுவாக விரிவடைய வைப்பதன் மூலம் அழுத்தம் வெப்பம் குறையும், மேலும் ஒலியை வலுவிழக்க செய்ய சுற்றுப்பாதை , ஒலி உறிஞ்சும் பொருள், எதிர்க்கட்ட ஒலியை கொண்டு ஒலியை குறைத்தல் ஆகியவற்ற்றின் அடிப்படையில் தான் எல்லாவகை ஒலிக்குறைப்பான்களும் செயல் படுகிறது.

எஞ்சினின் திறனுக்கு ஏற்ப ஒலிக்குறைப்பானின் குழல் நீளம், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள்,வடிவம் மாறும் , இல்லை எனில் ஒரு எதிர் அழுத்தம் (back pressure)ஏற்பட்டு புகை மீண்டும் எஞ்சினுள் செல்லும், அது எஞ்சினைப்பாதிக்கும்.அப்படி எதிர் அழுத்தம் ஏற்படாமல் இருக்க எஞ்சினின் சக்தியைக்கொண்டு ஒரு விசையை ஒலிக்குறைப்பானுக்கு தருவதை டர்போ சார்ஜிங் என்பார்கள்.

சிறிய வாகனங்களில் ரெசனோட்டர் அறை,எல்லாம் ஒரே குழல் உள்ளேயே வைத்து இருக்கும். கார் போன்ற வாகனங்களுக்கு தனியே அடுத்தடுத்து புகைப்போக்கியின் பாதையில் இருக்கும்.வெளிநாட்டுக்கார்கள் சத்தம் குறைவாக இயங்க காரணம் அவர்கள் பொருத்தும் ரெசனோட்டரின் தரம் தான் காரணம்.

தற்போது ரெசனோட்டரில் எதிரொலி மூலம் ஒலியை மட்டுப்படுத்துவதற்கு பதில் ஒரு மின்னணு கருவி மூலம் ஒரு எதிர்க்கட்ட ஒலியை உருவாக்கி புகை,ஒலி வரும் திசைக்கு எதிரில் அனுப்பி ஒலியை வலுவிழக்க செய்து குறைக்கலாம் எனக்கண்டுப்பிடித்துள்ளார்கள். இம்முறை இன்னும் வாகனங்களில் நடைமுறைக்கு வரவில்லை.
காரின் புகைப்போக்கி அமைப்பு

கார்களுக்கு கூடுதலாக கேட்டலிடிக் கன்வெர்டெர் என்ற அமைப்பும் இருக்கும்.இதில் பல்லாடியம், பிளாட்டினம், ரோடியம் கலவையின் பூச்சு கொண்ட சிறு துளைகள் கொண்டபீங்கான் தகடுகள் இருக்கும் .இதனை ஒரு துருப்பிடிக்காத கலத்தினுள் வைத்திருப்பார்கள். இதன் வழியே புகை செல்லும் போது , சரியாக எரியாத எரிப்பொருளையும், நைட்ரஜன் ஆக்சைடு , கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றை மீண்டும் ஆக்சிஜன் ஏற்றம் செய்து காற்று மாசுபடுதலைக்குறைக்கும். தற்போது இரு சக்கர வாகனத்தின் புகைப்போக்கியிலும் கேட்டலிடிக் கன்வர்டர் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இதனை மாற்ற வேண்டும்.
கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள் அமைப்பு

Wednesday, October 17, 2007

விசில் அடிக்கலாம் வாங்க!


கிரிக்கெட் மேட்ச் நடக்கும் மைதானம், சூப்பர் ஸ்டார் ரஜினி படம் ஓடும் திரையரங்கம் , மாநகரப்பேருந்து என்று எங்கும் கேட்கும் சத்தம் விசில் சத்தம்! நம்மில் பலரும் விசில் அடித்து இருப்பார்கள்(சிலருக்கு காத்து மட்டும் வரும்) சிலர் வாய்ல விரல் வைத்து அடிப்பார்கள், சிலர் கடையில் விற்கும் விசில் வாங்கி ஊதுவார்கள். வாயில் வைத்து உஷ் என்று ஊதினால் எப்படி உய்ங்க் என்று சத்தம் வருகிறது?

விசிலுக்குள்ள என்ன இருக்கு?

விசில் என்பது ,ஒரு சிறிய குழல் , அதனை கழுத்து என்பார்கள், பிறகு உருண்டையான பந்து போன்ற வெற்றுக்கூடு அதனுடன் இணைந்து இருக்கும். அதன் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். இது தான் ஒரு விசிலின் அமைப்பு.

குழல் பகுதியை வாயில் வைத்து காற்றினை உட்செலுத்தும் வண்ணம் ஊதினால் சத்தம் வரும்! அந்த சத்தம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

விசிலை அறிவியல்ப்பூர்வமாக அழைத்தால் ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசொனட்டோர் என்று அழைக்க வேண்டும்(Helmholtz resonator or Helmholtz oscillator ) உருண்டையான பந்து ஒரு காற்றுக்கலமாகசெயல்படுகிறது இதனை தான் ரெசனோட்டர் என்பது. இது தான் ஒலி வரக்க்காரணமாக இருக்கிறது.


ஹெர்ம் ஹோல்ட்ஸ் என்பவர் காற்றின் அதிர்வில் இருந்து ஒலி வருவதற்கான அறிவியல்ப்பூர்வமான விளக்கம் கொடுத்தார். அதை விளக்க அவர் விசிலை ஒத்த ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கினார். அதனை ஹெர்ம்ஹோல்ட்ஸ் ரெசனோட்டர் என்பார்கள்.விசில் என்பது முன்னரே இருந்தாலும் அவர் பெயரால் விசிலையும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசனோட்டர்


ஹெர்ம் ஹோல்ட்ஸ் தத்துவத்தின் படி விசிலில் இருந்து ஒலி எப்படி வருகிறது எனப்பார்ப்போம்.

குழலின் வாய்ப்பகுதியின் வழியாக காற்றினை செலுத்தும் போது காற்றின் ஒரு பகுதி உருண்டை வடிவ பந்தில் உள்ள மேற்புற திறப்பின் வழியே மேலே செல்கிறது மறு பகுதி உருண்டை வடிவத்தின் உட்பகுதியில் கீழ் நோக்கி செல்கிறது,அப்போது பந்தின் உட்பகுதியில் உள்ள காற்றினை அழுத்துகிறது. இப்பொழுது மேல் திறப்பின் வழி சென்ற காற்றால் வெற்றிடம் ஏற்பட்டு மேற்ப்பரப்பில் அழுத்தம் குறையும் இதனால் பந்தின் உட்பகுதியில் அழுத்தப்பட்ட காற்று மீண்டும் விரிவடையும், இந்த விளைவு தொடர்ச்சியாக நடக்கும் போது அதுவே ஒரு ஒத்திசைவான காற்றின் அதிர்வாக மாறும்(harmonic vibration of air) தொடர்ச்சியாக ஊத சீரான இனிமையான ஒலி வரும்.

உருண்டையான பந்து போன்ற வடிவத்தின் கன அளவிற்கு ஏற்ப ஒலியின் வீச்சு இருக்கும். இந்த உருண்டைதான் ரெசனோட்டர் ஆக செயல்படுகிறது. பந்தில் உள்ள காற்று தம்பத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒலியின் வலிமை இருக்கும்,ஏன் எனில் காற்று தம்பத்தின் அதிர்வு தான் ஒலி உருவாகக்காரணம்.

விசில் என்றில்லை காற்றினை செலுத்தி ஒலி எழுப்பும் வாத்தியக்கருவிகள்/கருவிகள் அனைத்துமே இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

வீசில் ஒலியின் அதிர்வெண் கண்டுப்பிடிக்க ஹெர்ம் ஹோல்ட்ஸ் கண்டுப்பிடித்த சூத்திரம்,



f= frequency
c= speed of the sound
s= surface area of the top hole
v= volume of the air
L= length of the whistle neck

வீணை, கித்தார் போன்றவற்றிலும் ஒரு காற்றுக்கலம் உருண்டையாகவோ இல்லை பெட்டிப்போன்றோ இருக்கக்காரணம் இது தான்.


Tuesday, October 16, 2007

குண்டு துளைக்காத கண்ணாடி!

சாதாரணக்கண்ணாடி நம் வீடு முதல் அலுவலகம் வரை எங்கு பார்த்தாலும் காணக்கிடைக்கிறது. கண்ணாடியை கவனமாக கையாளவும் என்றே சொல்வார்கள் காரணம் அது எளிதில் உடைந்து விடும். ஆனால் சில கண்ணாடி துப்பாக்கியால் சுட்டால் கூட தாங்கும் வலிமை மிக்கதாகவும் இருக்கிறதே எப்படி, அதே கண்ணாடியா அல்லது வேறா?

குண்டுதுளைக்காத கண்ணாடி எதனால் ஆனது?

முதலில் கண்ணாடி என்றால் என்னவென்று பார்ப்போம்.
கண்ணாடி என்பது வேதியல் ரீதியாகப்பார்த்தால் வேறொன்றும் இல்லை "மணல்" தான். சிலிக்காவால் ஆனது தான் மணல். இதனை அதிக வெப்பத்தில் சூடுப்படுத்தி உருகவைத்து குளிரவைத்தால் கிடைப்பது தான் கண்ணாடி.சுத்தமான சிலிக்காவில் இருந்து கண்ணாடி தயாரிக்கலாம் என்றாலும், எளிதாக தயாரிக்க சிலிக்காவுடன், சுண்ணாம்பு, சோடீயம் கார்பனேட் எல்லாம் கலந்து சூடுப்படுத்தி, உருக்கி பின்னர் குளிர வைப்பார்கள்! கண்ணாடி என்பது திடப்பொருளோ, திரவப்பொருளோ அல்ல அது ஒரு உறைந்த திரவம்!(frozen liquid)

இப்படி தயாரிக்கப்படும் கண்ணாடி ஒளி ஊடுருவும் வகையிலும், எளிதில் உடையும் தன்மையுடனும் இருக்கும்.

மேலும் கடினப்படுத்த கண்ணாடி தயாரிக்கும் போது வேகமாக குளிர வைப்பார்கள் , இதற்கு "குயிஞ்சிங்க்"(quenching) என்று பெயர்.

குண்டு துளைக்காதக்கண்ணாடி:

துப்பாக்கி குண்டினை தாங்கும் வலிமைக்கொண்ட கண்ணாடி ஒரேக்கண்ணாடிக்கிடையாது, பல மெல்லிய கடினமாக்கப்பட்ட கண்ணாடி ஏடுகளை ஒன்றன் மீது ஒன்றாக படியவைத்து தயாரிக்கப்படுவது. ஒவ்வொருக்கண்ணாடிப்படிமத்தின் இடையிலும் பாலிக்கார்பனேட் என்ற பிளாஸ்டிக் படிமம் வைக்கப்படும்.எனவே குண்டு துளைக்காத கண்ணாடியில் ஒரு ஏடு கண்ணாடி, அடுத்த ஏடு பாலிகார்பனேட் என அடுத்தடுத்து இருக்கும்.

பாலிக்கார்பனேட் என்பது ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் ஆகும் இதனை பல இடங்களிலும் பார்த்து இருப்போம், சுத்திக்கரிக்கப்பட்ட குடி நீர் கேன்கள் செய்யப்பயன்படுவதும் பாலிக்கார்பனேட் தான்.

பாலிக்கார்பனேட்டின் ரசாயான மூலங்கள்:

பிஸ்பினால் -A (bisphenol-A), சோடியம் ஹைட்ராக்சைடு(NAOH), பாஸ்ஜீன்(phosgene) ஆகியவற்றை வினைபுரியவைத்து கிடைப்பது தான் பாலிக்கார்பனேட்,இதனை பிஸ்பீனால் பாலிக்கார்பனேட் என்பார்கள்.

மற்றொரு வகை பாலிக்கார்பனேட் பாலி மெத்தில் மெத்தாகிரைலேட் (poly methyl-methacrylate)ஆகும்.



இவ்வாறு தயாரிக்கப்பட்ட கண்ணாடி அதன் தடிமனுக்கு ஏற்ப குண்டு துளைக்காத தன்மையுடன் இருக்கும். சாதாரண கைத்துப்பாக்கி முதல் ஏ.கே-47 வரைக்கும் துப்பாக்கியின் சக்திக்கு ஏற்ப கண்ணாடியின் தடிமன் வேறுபடும்.அதிகப்பட்சமாக 50 மி.மீ தடிமன் கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது.

குண்டு துளைக்காத கண்ணாடி செயல்படும் விதம்:

துப்பாக்கி குண்டு மோதியதும் கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள ஏடு மட்டும் விரிசல் விடும் இதன் மூலம் துப்பாக்கி குண்டின் விசை பல திசைகளிலும் பரவி குறையும், அதற்கு அடுத்துள்ள பாலிக்கார்பனேட் ஏடு குண்டினால் ஏற்படும் விசையின் அதிர்வை மட்டுப்படுத்தும், இதனால் வேகம் குறையும் குண்டு துளைக்கும் சக்தி இழக்கும்.

a bullet proof glass after fired

கண்ணாடி என்பது கடினமான ஒரு பொருள், இடையில் உள்ள பாலிக்கார்பனேட் பிளாஸ்டிக் , இரப்பர் போன்று அதிர்வுகளை உள்ளிழுத்துக்கொள்ளும்.

வழக்கமான குண்டு துளைக்காத கண்ணாடி மிக கனமாக இருக்கும் இதனால் இக்கண்ணாடிப்பொறுத்தப்பட்ட வாகனத்தின் செயல் திறன்ப்பாதிக்கப்படும் , இதனைக்குறைக்க தற்சமயம் நவீன வகையிலான லேசான எடைக்கொண்ட ஒருக்கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது. இக்கண்ணடியில் சிலிக்காவுடன் அலுமினியம் ஆக்சைடு, நைட்ரேட் ஆகியவை கலந்து இருக்கும், இதனால் அது குறைந்த எடையில் அதிக கடினமாக இருக்கும்.இக்கண்ணாடியை அலுமினியம் ஆக்சிநைட்ரைட் கண்ணாடி என்பார்கள்.

ஒரு குண்டு துளைக்காதக்காரில் , குண்டு துளைக்காத கண்ணாடி, அதன் உலோகப்பகுதியில் உள்ப்புறமாக இன்னும் தடிமனான இரும்பு தகடுகளும் பொறுத்தப்பட்டு இருக்கும், காரின் அடிப்பகுதியில் "fibre reinforced plastic" பொறுத்தி இருப்பார்கள்.

உங்களுக்கும் குண்டு துளைக்காத கார் வேண்டுமா விலை அதிகம் இல்லை , குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் ஒன்றின் விலை 18 லட்சம் தான்.கண்ணிவெடி தாக்காத கார் எனில் 70 லட்சம் ஆகும். விலையுயர்ந்த மாடல் கார் எனில் அதற்கு ஏற்ப விலை. எல்லாக்கார்களும் குண்டு துளைக்காத கார்களாக மாற்றி அமைக்கபடுவது தான். எந்தக்கார் தயாரிப்பு நிறுவனமும் சொந்தமாக தயாரிக்கவில்லை.

வேகமா எங்கே கிளம்பிட்டிங்க குண்டு துளைக்காத கார் வாங்கவா?

Friday, October 12, 2007

சில வினாக்களும் , விடைகளும்!





விக்கி பசங்களின் கேள்வியின் நாயகனே பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளில் எனக்கு தெரிந்த சில கேள்விகளுக்கான பதில்கள், பிழை இருப்பின் திருத்தலாம்!

ரவிசங்கர் கேட்டது:

//9. பாம்புக்கு காது இருக்கிறதா? பால் குடிக்குமா?//

பாம்புக்கு காது இல்லை, அதன் உடல் மூலம் தரையில் ஏற்படும் அதிர்வுகளை வைத்தே ஒலியை கிரகிக்கும், மற்ற உயிரினங்களின் நட மாட்டத்தை அறியும்.

பாம்பின் நாக்கு பிளவுப்பட்ட தன்மையுடன் இருக்கும் , மேலும் அதற்கு திரவத்தை உறிஞ்சும் தொண்டை கிடையாது. எனவே பால் எல்லாம் குடிக்காது. இன்னும் சொல்ல போனால் மென்று தின்னும் அமைப்பில் அதன் தாடைகளும் இல்லை, அப்படியே முழுங்கும்.

சிபிக்கேட்டது:

//ரோடு ரோலர்கள் இன்னும் அளவில் பெரியதாகவே இருப்பது ஏன்?

அதன் வடிவமைப்பை மாற்றியமைக்க யாரும் முன்வரவில்லையா? முயற்சி செய்யவில்லையா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா?//

ரோலர்கள் அது தரும் அழுத்தத்தின் மூலம் தரையை சமம் செய்கிறது , சிறியதாக வைத்தால் தேவையான அழுத்தம் கிடைக்காது. ஆனால் தற்போது வேகமா இயங்கும் (ஓடும்) ரோட் ரோலர்கள் இருக்கிறது.

சாலைப்பணிகள் அல்லாமல் நிலத்தை சமன் செய்ய என சிறிய ரோலர்களும் உள்ளது. தேவையைப்பொருத்து அளவு.

//தீக்கங்குகளை தண்ணீரில் போட்டால் "புஸ்"ஸென்ற சப்தம் வருவது எதனால்?

(இந்தியாவிலும் இதே சத்தம்தான் கேட்கிறது?)

வெந்நீரில் போட்டாலும் இதே சப்தம் வருமா?//

எல்லாம் வெப்ப நிலை வேறுபாடு தான். வென்னீரை எரியும் நெருப்பில் ஊற்றினால் அணைக்காதா? தீக்கங்கின் வெப்பத்தில் நீர் ஆவியாகிவிடும், அது விரைவாக நடப்பதால் ஏற்படும் விரிவினால் காற்றில் ஒரு அதிர்வு ஏற்படும் அது தான் புஸ் சப்தம். அதாவது தீக்கங்கின் அருகில் மட்டும் காற்று விரிவடையும் மற்றப்பகுதியில் காற்று விரிவடையாது இருக்கும் இந்த வித்தியாசம் தான் சத்தம்.

துளசிகோபால் கேட்டது:
//போட்டோஜினிக் என்றால் என்ன?//

ஒரு புகைப்படம் என்பது பொருளின் மீது பட்டு எதிரொளிக்கும் ஒளியை புகைப்பட சுருளில் சிறைப்பிடிப்பது.

நம் முகம் எந்த அளவுக்கு ஒளியை மீண்டும் வெளியிடுகிறதோ அந்த அளவுக்கு நம் முகம் தோற்றப்பொளிவுடன் இருக்கும்.

முகத்தில் இருக்கும் மேடுகள் ஒளியை நன்கு திருப்பும் , பள்ளங்கள் அப்படி திருப்பும் ஒளியின் அளவு குறைவாக இருக்கும்.

இதை எல்லாம் சரிக்கட்ட தான் மேக் அப். மேக் அப் பொருள் சிவப்பாக காட்டும் என்றாலும், அதில் நிறைய ஒளியை எதிரொளிக்கும் ரசாயனங்களும் இருக்கும்.

இன்னும் சொல்ல போனால் எந்த அளவு லைட்டுக்கு எந்த கிரேட் மேக் அப் என்று கூட உள்ளது.

பிலிம்களும் ஒளி அளவுக்கு ஏற்றார் போல ரேட்டிங்க் இருக்கு. சாதாரணமான கையடக்க கேமிரா பிலிம் பார்த்தீர்கள் எனில் 100 என போட்டு இருக்கும். அப்படியே 200, 400, 600 என ரேட்டிங்களில் எல்லாம் பிலிம் வருகிறது, அதற்கு ஏற்றார்ப்போல ஒளியை நன்கு வாங்கிக்கொள்ளும். இண்டோர், அவுட்டோர் எனவும் பிலிம் இருக்கிறது.
(சாமுத்திரிகா லட்சணம் படி முகம் இருப்பது வேறு அம்முகம் நேரிலும் அழகாகவே இருக்கும்)

ஓகை கேட்டது:

//கௌ்வி: கிபி 1000 ஆவது ஆண்டில் உலகின் மிக உயரமான கட்டிடம் எது?//

அப்பொழுது என்று இல்லை ஆரம்பத்தில் இருந்தே மிக உயரமான கட்டுமான அமைப்பு எகிப்திய கிரேட் பிரமிட் தான் உயரம் 487 அடி. தஞ்சை பெரிய கோயிலின் உயரம் 216 அடிகள் தான். தற்காலத்தில் எக்கச்சக்கமான உயரமான கட்டிடங்கள் வந்தாச்சு . தற்போது உலகின் உயரமான கட்டிடம் ,தாய் பே-101 , தைவான், உயரம்1671 அடிகள், அதற்கு முன்னர்ர் பெட்ரோனாஸ் டவர், மலேசியா உயரம் 1483 அடிகள்.

தருமி் கேட்டது:

//டென்னிஸ் மேட்சுகளில் இப்போதெல்லாம் controvercial calls பற்றி விளையாடுவோர் கௌ்வி எழுப்பலாம். உடனே பந்து கோட்டின் எந்த இடத்தில் விழுந்தது என்பது உடனே காண்பிக்கப் படுகிறது.
இது எப்படி?//

டென்னிஸ் கோர்ட்டில் உள்ள எல்லைக்கோடுகள் வெள்ளை நிறப்பட்டியாக இருக்கும் அதன் அடியில் முழுவதும் பட்டையாக சென்சார்கள் வைத்து , கம்பியூட்டர் உடன் இணைத்து இருப்பார்கள், பந்து கோட்டில் பட்டதும் பீப் சத்தம் வரும். மேலும் பலக்கேமிராக்கள் இருக்கும் அதன் மூலம் பதிவு செய்துக்கொண்டே இருப்பார்கள். தொலைக்காட்சியில் ஏதேனும் ஒரு காமிரக்கோணம் தான் வழக்கமாக வரும். ஒளிப்பரப்புவதற்கு ஒரு பெரிய அணியே வேலை செய்யும்.

//கிர்க்கெட் மேட்சுகளில் விழுந்து எழும்பிச் செல்லும் பந்தைமட்டும் close-up-ல் replay-ல் காட்டுகிறார்களே. நிச்சயமாக manual-ஆக அந்தப் பந்தை மட்டும் படம் பிடிக்க முடியாது - with very long focal length lenses.
எப்படி முடிகிறது.//

கிரிக்கெட் மேட்சில் காட்டும் பந்து கிராபிக்ஸில் காட்டுவது. அதை சொல்கிறீர்களா, இல்லை மற்ற ரீப்பிளே வா? எதுவாக இருந்தாலும் சாத்தியமே.

//one way mirror-ன் அறிவியல் என்ன?
கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?//

போலரைசர் பிலிம்களின் வேலை அவை.வழக்கமாகஒளிக்கற்றையில் பல தளங்களிலும்ம் ஒளி அதிர்வடைந்து கொண்டு ஒரு கலவையாக இருக்கும்.இதில் நாம் சில தளங்களை மட்டும் வடிக்கட்டி ஒரே தளத்தில் மட்டும் அதிரும் சமச்சீரான அதிர்வு கொண்ட ஒளியைப்பெற முடியும். அல்லது முழுவதுமாக வடிகட்டி தடுக்க முடியும். ஒரு வழிக்கண்ணாடி, கார் கண்ணாடி பிலிம்களில் ஒரு பக்கத்தில் இருந்து வரும் ஒளியின் அதிர்வுகளை மட்டும் வடிக்கட்டி விடும் போலரைச்சர் பிலிம்கள் அல்லது பூச்சுகள் இருக்கும்.

சிபி கேட்டது

//சாதாரணமாக உணவுப் பொருட்களை தீயில் காட்டி சூடு செய்யும்போது இன்னும் மொறுமொறுப்புதானே (கிரிஸ்பி) அடையவேண்டும். மாறாக பிஸ்கட்டுகளை தீயில் சுட்டால் கிரிஸ்பி தன்மையை இழந்து நெகிழ்வதன் காரணம் என்ன?//

காரணம் பிஸ்கெட்டில் உள்ள சர்க்கரை, நேரடியாக சுட்டால் வெப்பத்தில் இளகுவது. நீங்கள் மைரோவேவ் அவனில் வைத்து சுட்டால் அப்படி ஆகாது மொறு மொறுப்பாக இருக்கும்.

Tuesday, October 09, 2007

சேது சமுத்திர திட்டம்:எதிர்ப்புகளும் , காரணங்களும்! -2

சேது சமுத்திர திட்டம் , அதன் சாதக பாதகங்கள், அதற்கு எதிராக எழும் எதிர்ப்ப்புகள் என முந்தையப்பதிவில் பார்த்தோம் , பதிவை விட அதில் பின்னூட்டங்களில் மி்க விலாவாரியாக பேசப்பட்டாலும் பலருக்கும் சில வெகு சன ஊடகங்களில் ராமர் பாலம் என்ற ஒன்றைக்காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்ட அசட்டு வாதங்களையே அதிகம் முன்னிறுத்தி பேசினர்.

எனவே இன்னும் கொஞ்சம் விரிவாக உலக அளவில் பெரிதும் பயன்படும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இரண்டு கடல் வழிக்கால்வாய்கள் (பனாமா, சூயஸ்), மேலும் இந்திய துறை முகங்கள் , முக்கியமாக குறிப்பிடப்படும் இலங்கையின் கொழும்பு துறை முகங்களின் கையாளும் திறன் அடிப்படையில் தொழில் நுட்ப ரீதியானப் பார்வையில் , சேது கால்வாயை ஒப்பிட்டுப்பார்ப்போம்.

பனாமா கால்வாய் தொழில் நுட்ப விவரம்:

வட அமெரிக்க , தென் அமெரிக்க இடையே உள்ள பனாமா இஸ்துமஸ் என்ற நில இணைப்பை வெட்டி உருவாக்கப்பட்டது.

கால்வாய் அளவுகள்:
நீளம்: 59 மைல்கள்
ஆழம்: 41 - 45 அடிகள்
அகலம் 500 - 1000 அடிகள்(கால்வாயின் மிக குறுகிய அடிப்பகுதி அகலம் 300 அடிகள்)

இந்த கால்வாயில் மூன்று பெரிய பிரிவுகள் இருக்கிறது , எனவே எல்லா இடங்களிலும் ஒரே அகலம் , ஆழம் இல்லை. எனவே இக்கால்வாயில் செல்லும் அனுமதிக்கப்பட்ட கப்பல் அளவு குறைந்த பட்ச ஆழம் ,அகலத்திற்கு ஏற்றவாறு தான் இருக்க வேண்டும் என்பதைக்கணக்கில் கொள்ளவும்.

இந்தக்கால்வாயில் மூன்று பெரிய நீர் கதவுகள் வைத்து (water locks) கால்வாயில் செயற்கையாக நீரினை தேக்கி இக்கால்வாயின் ஆழத்தை இரட்டிப்பாக்கி சற்றே பெரியக்கப்பல்களையும் செலுத்துகிறார்கள். அது இல்லாமல் மேலும் பன்னிரண்டு சிறிய நீர்க்கதவுகள் உள்ளது.

இதில் நீர் செலுத்தி தேக்க உதவுவது அங்கு பாயும் நதிகளானா "the charges river(இதற்கு 24 கிளை நதிகள் வேறு உண்டு), obispo river" ஆகியவற்றின் நீர் ஆகும் அதற்காக அணைகள் கூடக்கட்டப்பட்டு உள்ளது.

இந்த நதிகளால் கால்வாய்க்கு உதவி என்றாலும் பிரச்சினையும் உண்டு, அந்த நதிகளும் அதன் கிளை நதிகளும் மணலை அடித்து வந்து கால்வாயினை மேடிட வைக்கிறது எனவே வருடா வருடம் தூர் வாரிக்கொண்டே இருப்பார்கள். அதோடு அல்லாமல் கால்வாய் துவக்கத்தில் கடல் நீரோட்டம் காரணமாகவும் மணல் படிகிறது அதற்காக நீரடியில் சில்டிங்(silting) தடுப்புகளும் கட்டப்பட்டுள்ளது.

மேலும் அட்லாண்டிக் கடல் பக்கம் உள்ள நிலம் 20 இன்ச்கள் பசிபிக் கடலை விட தாழ்வானாது. எனவே அட்லாண்டிக் கடல் பகுதியில் கடல் அலையின் உயரம் 2.5 அடிக்கு தான் எழும், ஆனால் பசிபிக்கில் 21.1 அடிக்கு அலை அடிக்கும் வாய்ப்பு உண்டு. எனவே இக்கால்வாயில் கப்பல் செலுத்துவது எப்போதும் அபாயமானது, அதிக கவனம் தேவை.

இது போன்ற தொழில்நுட்ப காரணங்களால் தான் இக்கால்வாயின் ஆழத்தை அதிகரிக்க முடியவில்லை. ஆரம்பக்காலத்தில் சிறியக்கப்பல்கள் தான் செல்லும் பின்னர் படிப்படியாக ஆழம், நீர் கதவுகள் எனப்போட்டு தற்போது தான் மிதமான பெரியக்கப்பல்கள் செலுத்தப்படுகிறது ,அதுவும் அதிக எடை இருந்தால் அதனை இறக்கி சிறுகப்பல்களில் எடுத்து செல்வார்கள்.

சூயஸ் கால்வாய்:

செங்கடலையும் , மத்திய தரைக்கடலையும் இணைக்கும் வண்ணம் எகிப்தில் வெட்டப்பட்ட கால்வாய் இது.
கால்வாய் அளவுகள்:
நீளம்: 105 மைல்கள்.
அகலம்: 300 - 365 மீட்டர்
ஆழம்: 16 மீட்டர் - 21 மீட்டர்.

இக்கால்வாய் வெட்டுவதிலும் இரண்டுபகுதிகளுக்கும் இருக்கும் கடல் மட்டம் வித்தியாசம் பிரச்சினையாக இருந்தது, பின்னர் அதனை சமாளித்து அதற்கேற்ப வடிவம் அமைத்தார்கள். மணல் பாங்கான பகுதி என்பதால் அதிகம் மணல் படிந்து தூர்ந்து விடும் ,அடிக்கடி தூர்வாருகிறார்கள்.

இக்கால்வாயிலும் மிகப்பெரிய கப்பல்கள் செல்ல முடியாது. இக்கால்வாயினை இதுவரை 15 முறை ஆழப்படுத்தி இருக்கிறார்கள் , தற்போது 22 மீட்டராக ஆழப்படுத்தும் பணியும் நடக்கிறது.

மும்பை துறை முகம்:

இங்கு இரண்டு துறை முகங்கள் உள்ளது மும்பை துறை முகம் , ஜவகர்லால் நேரு துறைமுகம்.

மும்பை துறைமுகம் அளவுகள்:

இதில் மூன்று கப்பல் நிறுத்தங்கள்(docks) இருக்கிறது ,

சராசரியாக ஆழம்: 9.1 மீட்டர் முதல் 11.1 மீட்டர் வரை

துறைமுகத்தை அனுகும் கால்வாய் நீளம்: 21 கி.மீ.

ஆழம்:10.7 - 11.0மீட்டர்

ஜவகர்லால் நேரு துறைமுகம்:

சராசரியாக ஆழம்: 13.5 மீட்டர்

அணுகும் கால்வாய் நீளம்: 7.22 கி.மீ,

ஆழம்:11.5 மீட்டர்

கொழும்பு துறைமுகம்:

துறைமுக ஆழம்: 15 மீட்டர்.

அணுகும் கால்வாய் நீளம்: 1.1கி.மீ.

ஆழம்: 16 மீட்டர்.

தூத்துக்குடி துறைமுகம்:

ஆழம்:10.9 மீட்டர்.

அணுகும் கால்வாய் நீளம்:1450 மீட்டர்,

ஆழம்:10.9 மீட்டர்.

சென்னை துறைமுகம்:
இங்கு இரண்டு கப்பல் நிறுத்தம் உள்ளது.

ஆழம்:18 மீட்டர்.

அணுகும் கால்வாய் நீளம்: 7 ,கி.மீ

ஆழம்: 18.6 - 19.2 மீட்டர்



தற்போது சேது திட்டக்கால்வாயின் அளவுகளையும் பார்ப்போம்,

சேதுக்கால்வாய்:

நீளம்:167 கி.மீ
அகலம்: 300 மீட்டர்.

ஆழம்: 12 மீட்டர்(12.8 என பத்திரிக்கைகளில் வந்துள்ளது)

ஒப்பீட்டு பார்வையில் ஒரு அலசல்:

அதனோடு இத்துறைமுகங்களின் ஆழத்தினை ஒப்பிட்டால் சேதுக்கால்வாய் ஒன்றும் மிகவும் பின் தங்கி போய் இல்லை என்பதும், எதிர்காலத்தில் மேலும் அக்கால்வாயின் ஆழம் மேம்படுத்தப்படும் என்பதும் புரியும் , எனவே சிலர் சொல்வது போன்று அத்திட்டம் ஒன்றும் உதவாத வெறும் கனவல்ல என்பதும் புரியும்.

நாம் பார்த்த சர்வதேசக்கால்வாய்களில் பனாமா கால்வாய் சேதுக்கால்வாய் அளவே ஆழம் தற்போதும் இருக்கிறது, நீர் கதவுகள் வைத்து பெரிய கப்பல் விடுகிறார்கள். அதுவும் தற்போது தான் சாத்தியம் ஆயிற்று. எனவே நாமும் கால்வாய் வெட்டியப்பிறகு படிப்படியாக அதன் திறனை அதிரிக்கலாம் தானே. அதற்குள் அங்கே பாருங்கள் இங்கே பாருங்கள் இக்கால்வாய் நடை முறைக்கு ஒத்து வராது என்பது ஏன்?

மேலும் சூயஸ், பனாமா கால்வாய்களிலும் மணல் படிவது நடக்கிறது , தூர் வாரப்படுகிறது , அனைத்து துறைமுகங்களிலும் மணல் படியும் , தூர்வாரப்படும். இது ஒரு பொதுவான நடைமுறை.எனவே சேதுக்கால்வாயில் மட்டும் மணல் படியும் , செலவு ஆகும் , பராமரிப்பது கடினம் என்பது ஏன்?

இப்படி துறைமுகங்களை தூர்வாறும் பணியில் அதிக லாபம் இருப்பதாலும், அடிக்கடி தேவை இருப்பதாலும் ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தூர்வாறும் நிறுவனத்தை துவக்க காக்கி நாடா துறைமுகத்தினை அரசிடம் கேட்டுள்ளது.

மேலும் மும்பை துறைமுகத்தின் ஆழம் சேதுக்கால்வாயினை விட குறைவாகவே இருக்கிறது எனவே அங்கு வரும் கப்பல்கள் எல்லாமே சேதுக்கால்வாய் வழியே சென்னைக்கு எளிதாக வரும் தானே!

தற்போது இந்திய துறைமுகங்கள் அனைத்தும் ஆழப்படுத்தி வசதியினை மேம்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. சென்னையில் மூன்றாவது கப்பல் நிறுத்தம் வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் ஆழம் அதிகரிக்க வேலை நடக்கிறது புதிய டெர்மினலும் வருகிறது. சொல்லப்போனால் சேதுக்கால்வாய் விட அதிகப்பணம் சுமார் 6000 கோடி தூத்துக்குடியில் முதலீடு செய்யப்பட உத்தேசித்துள்ளது அரசு.

மேலும் கொழும்பு துறைமுகம் ஒன்றும் அத்தனை பெரியது அல்ல ஆழம் 15 மீட்டர் தான் , வேறு வழி இல்லாததல் அங்கு போகிறார்கள் , நாம் இப்பொழுதே 12 மீட்டரில் கால் வாய் ஆரம்பித்து சில ஆண்டுகளில் இன்னும் மேம்படுத்தினால் கொழும்பு துறைமுகம் வருவாய் இழக்கும் .

கொழும்பு துறை முகத்தை 21 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தி இன்னொரு டெர்மினல் கட்ட ஜப்பானிட்ம் கடன் கேட்டுள்ளார்கள் ,அவர்களும் சம்மதித்துள்ளார்கள், அத்திட்டம் வருவதற்குள் சேது வந்து விட்டால்(வரும் வாய்ப்புஅதிகம்) என்னாவது , எதிர்கால கப்பல் போக்குவரத்தினை நம்பி தான் கொழும்பு துறைமுகத்தில் முதலீடு செய்கிறார்கள். கொழும்புவில் இருந்து ஆவது ஏற்றுமதி அல்ல டிரான்சிட் சரக்கு தான் அவை. எனவே அத்திட்டம் பாதிக்கபடுமே என்ற பயம் தான் சேதுவை எதிர்க்க காரணம்.

கொழும்பு துறைமுகத்தினை விட சென்னை அதிக வசதிக்கொண்டது , (கொழும்புவின் பலம் அது இருக்கும் இடம் தான் சர்வதேச கடல் வழியில் உள்ளது)மேலும் சேதுக்கால்வாய் மூலம் சென்னை , தூத்துக்குடி, மும்பை என துறைமுகங்கள் இடையே ஒருங்கிணைப்பு வருவதால் இந்தியாவிற்கு நல்லது தானே.

இப்போது செய்ய வேண்டியது எல்லாம் கால்வாய் கொண்டு வந்த பிறகு அப்படியே போடாமல் சில ஆண்டுகளில் 15 மீட்டர் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்புறம் நம்மை அடித்துக்கொள்ள முடியாது.

இதில் ஊழல் நடக்க மிகப்பெரிய வாய்ப்புள்ளதால் தான் , அவ்வாய்ப்பு பறிபோன ஆவேசத்தில் அதிமுக எல்லாம் எதிர்க்கிறது. தற்போதே ஊழல் இல்லாமல் இல்லை ஒரு பெரிய தொகையை அடித்து விட்டார்கள்.

இத்திட்டம் ஆரம்பத்தில் 1800 கோடிக்கு தான் மதிப்பிடப்பட்டது தற்போது 2427 கோடி ஆக்கி இருக்கிறார்கள். 1800 கோடியிலேயே இத்திட்டம் சாத்தியம் என்பதை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.

மும்பைக்கு அருகே மிகப்பெரிய தனியார் துறைமுகம் ஒன்று ரேவா என்ற இடத்தில் கட்டப்படுகிறது அதில் ரிலையன்ஸ் 40 சதவீத பங்கு தாரர். அவர்கள் அகழ்ந்தெடுத்த மண்ணின் கனபரிமானம் சேதுக்கால்வாய் விட அதிகம் , கால்வாய் திட்டம் மதிப்பிடப்படுவது தோண்டப்படும் மண்ணின் அளவைப்பொறுத்து என்பதை இங்கு நினைவில் கொள்க.

ரேவாத்துறைமுகத்தின் அகழ்வெடுத்த செலவு 1800 கோடி, இதனை அத்திட்ட இயக்குனரே பேட்டியில் சொல்லி இருக்கிறார் சேது சமுத்திர திட்டத்தினை விட பெரிய கடல் அகழ்வை நாங்கள் மலிவாக ஒரு ஹாலந்து கடல் அகழ்வு(dredging) நிறுவனத்தை வைத்து செய்துள்ளோம் என. அவர் அப்படி சொன்னதே இச்சேது கால்வாய் திட்டத்தில் எப்படி பணம் விளையாடி இருக்கும் என்பதை நக்கலாக சொல்லத்தான்.

அரசியல் விளையாட்டுக்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால் இத்திட்டத்திற்கு எதிர்காலம் இருக்கிறது, எனவே கொண்டு வரலாம். தி.முக அரசு மெத்தனமாக சரியாக இத்திட்டம் பற்றி விளக்காமல் ராமர் , புராணம் என ஒரு விளம்பரத்திற்கு சண்டைப்போடுகிறது.

Saturday, October 06, 2007

சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும் , காரணங்களும்!


சேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது , ஆரம்பித்த நாளது முதலாக அரசியல்வாதிகளில் இருந்து போலி சாமியார்கள் வரை அனைவரும் ஆளுக்கு ஒரு காரணத்தினை சொல்லி தடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அத்திட்டம் வருவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத பல சக்திகள் உள்ளது.

இந்தியாவிற்கும் , இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்த பட்சம் 25 கீ.மீ இல் இருந்து 107 கி.மீ வரை இருக்கிறது, இந்த கடல் பகுதியில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படுகிறது.

திட்டம் வர தடையாக சொல்லும் காரணங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

* ராமார் கட்டிய பாலம்.இரண்டு மில்லியன் ஆண்டு பழமையானது எனவே அதனை சேதப்படுத்த கூடாது என்பது!

இது எத்தனை சத வீதம் உண்மை ,

மனித இனம் தோன்றிய வரலாற்றினை அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலக்கட்டத்தில் எல்லாம் குரங்குகளாக தான் இருந்தோம். பின்னர் மனிதனாக பரிமாண வளர்ச்சி அடைந்த பின்னர் நாகரீகத்தின் முதல் கட்டமாக கருவிகளை உருவாக்கியதன் அடிப்படையில் காலம் பிரிக்கையில் , கி.மு 3000க்கு முன்னர் கற்காலம் வருகிறது , பின்னர் தாமிரக்காலம் , இரும்பை பற்றி அறிந்து கொண்டதே கி.மு 1200 இல் தான். அப்படி இருக்கும் போது இரண்டு மில்லியன் ஆண்டுகள் காலத்திற்கு முன்னர் இராமாயண காலம் போல முழு நாகரீகம் பெற்ற இராம ராஜ்யம் இருந்து இருக்குமா? பாலம் கட்டி இருக்க தான் முடியுமா?

நாசா எடுத்தது என ஒரு படம் காட்டுகிறார்களே அது என்ன?

அது ஒரு இயற்கை அமைப்பு , இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நில இணைப்பிற்கு இஸ்துமஸ்(isthmus) என்று புவியியல் பெயர். இப்படிப்பட்ட இணைப்பு வட , தென் அமெரிக்காவிற்கு இடையே கூட உண்டு , அதனை வெட்டி தான் பனாமா கால்வாய் போடப்பட்டுள்ளது.

சில இடங்களில் கடல் மட்டத்திற்கு மேல் இருக்கும் இங்கே கடலில் மூழ்கி இருககிறது. மேலும் அந்த அமைப்பை ஒட்டி மணல் படிவதால் ஆழம் குறைவாக உள்ளது.

இயற்கை, சுற்று சூழல் பாதிப்புகள் வரும் என்பது,

ஏற்கனவே சொன்னது போல இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் அகலம் 25 கி.மீமுதல் 107 கி.மீ வரையுள்ளது. இதில் சேதுக்கால்வாய் அமையப்போவது 300 மீட்டர் அகலத்தில் மட்டுமே , அவ்வளவு பெரிய பரப்பில் இது மிக சிறிய அகலமே. 12 .8 மீட்டர் ஆழம் வெட்டுவார்கள் இதில் சரசரியாக 8 முதல் 10 மீட்டர் ஆழம் கடலில் உள்ளது , எனவே மேற்கொண்டு வெட்டும் ஆழமும் அதற்கு ஏற்றார் போல குறையும்(4-5 மீட்டர்). சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள மணல் திட்டுகள் தான் பெரிதாக தெரிகிறது , கடல் அடியில் மிகப்பெரிய பாதிப்பு வராது.

மன்னார் வளைகுடாப்பகுதி தான் கடல் வாழ் உரினங்களின் முக்கியமான பகுதி , அப்பகுதியில் இயற்கையிலே ஆழம் இருப்பதால் அங்கு கால்வாய் வெட்டப்படவில்லை. பால்க் நீரிணைப்பு பகுதியிலும் , ஆடம் பாலம் பகுதியிலும் இரண்டு பகுதியாக கால்வாய் வெட்டப்படுகிறது. இது செயற்கை ,இயற்கை சேர்ந்த கடல் வழி கால்வாயாக தான் இருக்கும்.

மேலும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் சரியல்ல, இப்பகுதியில் குறைவாக மீன் கிடைக்கிறது எனவே எல்லை தாண்டி மீன் பிடிக்க போய் தானே இலங்கை ராணுவத்திடம் குண்டடிப்படுகிறார்கள் அப்படி இருக்கும் போது இப்போது கால்வாய் வெட்டும் போது மட்டும் எப்படி மீன்கள் காணாமல் போகும். ஆழ்கடலில் தான் அதிக மீன்கள் பிடிக்கபடுகிறது.

சாதாரணமாக புதிதாக சாலை போட்டாலே அதற்காக மரங்கள் வெட்டுவது என எதாவது ஒரு சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இருக்காது , அப்படி இருக்கும் போது கடலில் கால்வாய் வெட்டும் போது சுத்தமாக பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி. ஏற்படும் பாதிப்பு குறைந்த பட்சமாக இருக்குமாறு பார்த்து செயல் பட வேண்டும்!

இப்படி தற்போது சில எதிர்ப்புகள் உள் நாட்டில் கிளம்பினாலும் , ஆரம்பம் காலம் தொட்டே இதனை இலங்கை அரசு எதிர்க்கிறது காரணம் , அவர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் , கொழும்பு துறை முகம் பாதிக்கப்படும் என்ற பயமே! எனவே இத்திட்டம் வரமால் இருக்க அனைத்து திரை மறைவு வேலைகளையும் செய்வதாகவும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.வர்த்தக இழப்பு என்ற பயம் மட்டும் காரணம் அல்ல , ஆழமான கால்வாய் அமைய போவது வடக்கு இலங்கைக்கு அருகே அது முழுவதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம்.

ஏற்கனவே வலுவான கடற்படை வைத்துள்ளார்கள் இதனால் அவர்களது கடற்படை கப்பல்கள் எளிதாக சர்வதேச கடல் எல்லைக்கு போய் வர முடியும். மேலும் வழக்கமாக சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து அவர்களுக்கு தேவையான சரக்குகளை சிறிய படகில் போய் ஏற்றி வருவார்கள் தற்போது கால் வாய் வந்துவிட்டால் பெரிய கப்பல்களைப்பயன் படுத்த முடியும்.

மேலும் அவர்கள் இதனைப்பயன் படுத்தி கப்பல் படையை மேலும் வலுப்படுத்த கூடும், தலை மன்னார், ஆனைஇரவு, காங்கேசன் துறைமுகம்,யாழ்பாணம் ஆகியவற்றிர்க்கிடையே கடல் பயணம் எளிதாகவும் , பெரிய படகுகளுக்கும் வசதியாக அமையும் ஏன் எனில் சேதுக்கால்வாய் அப்பகுதிகளுக்கு அருகே செல்கிறது . எனவே இலங்கை அரசு இக்கால்வாயினால் ஆபத்து எனப் பயப்படுவதால் இத்திட்டம் வர விடாமல் தடுக்க முயல்கிறது.


முடிந்த வரை தடுக்க பார்க்கும் இலங்கை அரசு , முடியவில்லை எனில் திட்டம் வந்தால் அதிலும் ஒரு நன்மையை எதிர்ப்பார்க்கிறது , அக்கால்வாய் பாதுக்காப்பு , ரோந்து ஆகியவற்றில் இலங்கை கடற்படையை ஈடுபடுத்த அனுமதி தரவேண்டும் என்று!மேலும் மன்னார் வளைகுடாப்பகுதியில் கப்பல் போக்குவரத்தினை அனுமதிக்கும் நிர்வாக உரிமையையும் கேட்கிறது.சுருக்கமாக சொல்ல போனால மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு வர கடலைப்பயன்படுத்த இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் யாரும் வரமுடியாத நிலை வரும்.

கால்வாய் முழுக்க முழுக்க அமையப்போவது இந்திய கடல் எல்லைக்குள் தான் , அப்படி இருக்கும் போது பாதுகாப்பினை காரணம் காட்டி சந்தடி சாக்கில் நம்ம கடலையும் சேர்த்து கண்காணிக்க ஆசைப்படுகிறது இலங்கை! நாம் செலவு செய்து கால்வாய் வெட்டுவோம் , நிர்வகிக்கும் அதிகாரம் அவங்களுக்கு வேண்டுமாம்!

இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.

தற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.

ஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே!

ஜெயலலிதா போன்றவர்கள் ஆரம்பத்தில் தேர்தல் அறிக்கையிலேயே இத்திட்டதை கொண்டுவருவதாக சொன்னவர்கள் தற்போது எதிர்க்க காரணம் மிகப்பெரிய இத்திட்டதை கொண்டு வருவதால் கிடைக்கும் கமிஷன் தொகை கை விட்டுப்போகிறதே என்ற வயத்தெரிச்சல் தான்! 2,427 கோடி ரூபாய் திட்டம் ஆச்சே சுளையாக ஒரு தொகை கமிஷனாக வருவது போனால் சும்ம இருக்க முடியுமா!

சேது கால்வாய் திட்டம் பற்றிக்கவலைப்படுவதானால் அதன் பொருளாத லாபம் ஈட்டும் தன்மை குறித்தும் , சுற்று சூழல் பாதிப்பு அதிகம் ஆகாமல் இருப்பது குறித்து மட்டும் தான் இருக்க வேண்டும்.

இக்கால்வாய் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு அத்தனை பிரகாசமாக இல்லை எனதிட்டத்திற்கு நிதி திரட்டும் ஆக்சிஸ்(uti bank) வங்கியின் சேர்மன் பேட்டி அளித்துள்ளார். இது மிகவும் முக்கியமானது. லாபம் ஈட்டும் வாய்ப்பினை பெருக்க திட்டம் தீட்ட வேண்டும்.

Friday, October 05, 2007

ஆபாசம், வக்கிரம் அதன் மறு பெயர் தான் என்ன?

சிலர் ஆபாசமாக திட்டுகிறார்கள் என ஒப்பாரி வைப்பார்கள் ஆனால் அவர்கள் நடந்து கொள்வது அதை விட கேவலமாக இருக்கிறது, அற்ப விளம்பர மோகம் கொண்டு அலைகிறார்கள் ,உண்மையில் நாலு பேரு கண்டனம் சொல்லி திட்ட வேண்டும் , பின்னர் மனம் உருகி அய்யோ நான் தப்பு செய்து விட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டு பதிவு போட வேண்டும் என்ற நமைச்சல் சிலருக்கு அதிகம் ஆகி விட்டதோ எனத் தோன்றுகிறது.

நான் பெயர் எதுவும் போடாமல் சொல்வதால் அனாவசியமா யார் என்று குழம்பிகொள்ள வேண்டாம் , தமிழ்மணத்தை பார்த்தாலே தானாகவே புரியும. நாளு பேர் அவங்களை கண்டுக்க வேண்டும் என்பதற்காகவே பதிவு போடும் அவர்களது பெயரை சொல்வதும் அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் என நினைத்து சந்தோஷம் அடையும் அல்பமாக இருக்கிறார்கள் .சாவு வீட்டுக்கு போனாலும் அண்ணன் வாழ்க என்று கோஷம் போடும் அல்லக்கை கூட்டம் கொண்டவர்கள் ஆச்சே!அது தான் மொட்டை கடுதாசிப்போல பதிவு போட்டு இருக்கேன்!


மக்களே வாரக்கடைசியில் இப்படிப்பட்ட மண்டை இடி தேவையா என டென்ஷன் ஆகாம சிந்தித்து சத்தம் போடாமல் கண்டு பிடியுங்கள் அந்த விளம்பர பிரியரை! ங்கொய்யாலே இந்த லட்சணத்தில் மக்களுக்கு இணைய விழிப்புணர்வு இல்லை , அது இல்லைனு சீன் காட்டுகிறது அந்த அல்பம்!