விவசாயி படும் பாடு-1 இன் தொடர்ச்சி....
ஒரு நாட்டில் அனைவரும் வாங்கும் திறனுடன், மானிட வாழ்வியல் குறியீடு அதிகமாக இருக்க வேண்டும் எனில் அங்கே உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இணக்கமான சந்தை பொருளாதாரம் இருக்க வேண்டும். அப்படி அனைவரும் சுபிட்சமாக இருக்கும் பொருளாதார நிலை உபரி பொருளாதார நிலை எனப்படும்.(surplus economy)
பொருளாதார உபரி என்பது உற்பத்தியாளர் உபரி, நுகர்வோர் உபரியை சார்ந்தது.
உற்பத்தியாளர் உபரி(producer's surplus):
விவசாயி தான் விற்க விரும்பும் விலையை விட சந்தையில் ஒரு கூடுதல் விலைக்கு விற்க இயல்வதால் கிடைக்கும் அதிக தொகையின் மூலம் விளையும் நன்மையே ஆகும்.
உ.ம்: 10 ரூபாய்க்கு விற்றால் போதும் என்ற மன நிலையில் சந்தைக்கு வரும் விவசாயிக்கு 11 ரூபாய்க்கு விலைப்போனாலே ஒரு திருப்தி, லாபம் வரும் அல்லவா.
நுகர்வோர் உபரி(consumer's surplus):
நுகர்வோர் தான் வாங்க விரும்பும் விலையை விட சந்தையில் குறைவான விலைக்கு பொருட்கள் கிடைத்தால் அதே பொருளை இன்னும் அதிகம் வாங்கி நுகர்வது.
உ.ம்: ஒரு குவார்ட்டர் 100 ருபாய் என நினைத்து சரக்கு வாங்க கடைக்கு போய் குவார்ட்டர் 50 ரூபாய் எனக்கிடைத்தால் 100 ரூபாய்க்கும் ஒரு அரைப்புட்டி மது வாங்கி அருந்துவதால் கிடைக்கும் நுகர்வு இன்பமே இது. வழக்கமாக புதுவை செல்லும் குடிமக்கள் இப்படித்தான் மலிவாக கிடைப்பதால் கால்ப்புட்டி குடிப்பவரும் அரைப்புட்டி அடித்து அதிக நுகர்வு உபரி அனுபவிக்கிறார்கள்.
ஹி..ஹி மனசில நச்சுனு நங்கூரம் பாய்ச்சினா போல பதியனும் என்று தான் இந்த உதாரணம் :-))
உற்பத்தி அதிகம் ஆகும் போது பொருளின் நுகர்வு தேவை அதே அளவு இருந்தாலும் ஒரு நிலைக்கு மேல் நுகர்வு அதிகம் ஆகாத காரணத்தால் தேவை குறைந்து விலை விழும். "உற்பத்தியாளர் உபரி "குறையும். அதாவது அவருக்கு கிடைக்கும் லாபம் குறையும்.
அதே போல உற்பத்தி குறையும் போது நுகர்வு தேவை ஒரு குறைந்த பட்சம் என்ற அளவிலேயே இருக்கும், அதனை விட கீழே போகாது, ஆனால் அதனை பூர்த்தி செய்ய கூட தேவையான உற்பத்தி இல்லாத போது தேவை அதிகரிக்கும், விலை அதிகரிக்கும் , இதனால் நுகர்வோர் கூடுதலாக வாங்கி அனுபவிக்கும் " நுகர்வோர் உபரி" குறையும்.
அதாவது கை நிறைய பணம் எடுத்து சென்று பை நிறைய பொருள் வாங்க இயலாது, பை நிறைய பணம் எடுத்து சென்றால் மட்டுமே கை நிறைய பொருள் வாங்க இயலும்.
surplus economy:
இந்நிலையில் தான் உணவுப்பொருள் பணவீக்கம்(food price inflation) என்பது அதிகரிக்கும்.
ஒரு நல்ல பொருளாதார சூழல் உள்ள நாட்டில் , உற்பத்தியாளர் உபரிக்கும், நுகர்வோர் உபரிக்கும் ஒரு சம நிலை நிலவும் விலைக்கு சந்தையில் விலை இருக்கும். அதாவது உற்பத்தியாளனுக்கும் விலைக்கட்டுப்படியாகும், நுகர்வோருக்கும் வாங்கும் விலையில் பொருட்கள் கிடைக்கும்.இந்நிலையை "உபரி பொருளாதார சமநிலை" நிலை என்பார்கள்.
நம் நாட்டில் கூடுதல் விலைக்கு ஒரு பொருள் விற்பனை ஆனாலும் அந்த கூடுதல் விலையான பணம் உற்பத்தியாளர் ஆன விவசாயிக்கு இந்தியாவில் போய் சேர்வதில்லை, அது வியாபாரிகள் , இடைத்தரகர்களுக்கே போய் சேர்கிறது.
இந்தியாவில் உற்பத்தியாளர் உபரி என்பது வியாபாரிகள்/ இடைத்தரகர்கள் உபரியாக அவர்களுக்கு போய் சேர்கிறது. விவசாயி வழக்கம் போல வானத்த பார்த்தேன் ,பூமிய பார்த்தேன் லாபத்த இன்னும் பார்க்கலையேனு சோக கீதம் பாடிக்கொண்டு இருக்கிறான்.
இப்போ எப்படி விவசாய விலைப்பொருளை உற்பத்தி செய்பவன் பலன் அடையாமல் அதனை வாங்கி விற்கும் வியாபாரியும், இடைத்தரகர்களும் லாபம் அடைகிறார்கள், நுர்கவோரும் அதிகம் பணம் இழக்கிறார்கள் என்பதனை பார்க்கலாம்.
அரிசி இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் உணவாக உண்ணப்படும் நிலையான உணவு. அனைவர் பசியும் தீரும் வண்ணம் அரிசி உற்பத்தி இருக்க வேண்டும் இல்லை எனில் பட்டினி சாவுகள் தான் ஏற்படும்.
இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தி 132 மி.மெ .டன்கள், ஆண்டு சராசாரி நுகர்வுத்தேவை 128 மி.மெ.டன்கள் மட்டுமே அதாவது தேவையை விட உற்பத்தி அதிகம் எனவே பெரும்பாலும் அனைவருக்கும் அரிசி கிடைத்து விடும். இப்படி உபரி இருந்தாலும் 3 வேளை முழுதாக உணவு அருந்தும் நிலை அனைவருக்கும் இல்லை. கிட்ட தட்ட 40% மக்கள் வறுமையின் நிறம் சிவப்பு என்கிறார்கள்.காரணம் அனைவராலும் வாங்க முடிவதில்லை.
இந்திய உணவுக்கழக கிடங்குகளில் கிடந்து பல லட்சம் டன் உணவுத்தானியங்கள் புழுத்துப்போகின்றன. பின்னர் அவை கால் நடைத்தீவன தானியமாக குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது.
உபரி உணவு தானியம் பசியால் வாடும் மக்களுக்கு செல்லாமல் வீணாகவோ அல்லது மலிவான விலைக்கோ அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்பதனை CNN-IBN தளத்தில் உள்ள செய்தி காட்டுகிறது.
சுட்டி:
CNN_IBN
இந்தியாவில் தான் அறுவடைக்கு பின் ஏற்படும் உணவுத்தானிய இழப்பு விகிதம் அதிகம்(சுமார் 40%) என சர்வதேச நெல் ஆய்வு மையம் , பிலிப்பைன்ஸ், சொல்கிறது.
இலவச அரிசி, பொது விநியோக திட்டம் என பல மாநிலங்களில் இருப்பதால் மட்டுமே பெரும்பாலோருக்கு அரிசி கிட்டுகிறது, அதுவும் இல்லை எனில் வறுமைக்கோடு இன்னும் பெரிதாக வளர்ந்து இருக்கும்.
தமிழக அரசின் இலவச அரிசி திட்டம்:
தொழில் நுட்பத்தில் வளர்ச்சி, சந்திரனில் நீர் இருக்கா என எட்டிப்பார்க்கிறாங்க, உள் நாட்டில ஒரு கால்வாய்ல கூட தண்ணி தரமாட்டாங்க, பசுமை புரட்சி, உற்பத்தியில் தன்னிறைவு என ஒருபுறம் ஆனால் மறுபுறம் அதனை அனுபவிக்க இயலாத மக்கள் கூட்டம் என இந்தியா காலம் காலமாக கஷ்ட ஜீவியாகவே இருக்கிறது ஏன்?
பட்டினி சாவுகள் பற்றி தெரிந்துக்கொள்ள் இந்த சுட்டிகளை அழுத்தவும்:
1)ஒரிசா பட்டினிச்சாவு
2)
பட்டினிச்சாவுகள் ஒரிசாவில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் உள்ளது. மேலும் விவசாயத்தில் நட்டம் ஏற்ப்பட்டதால் பலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்கள்.
BBC news ,
//Some 200,000 farmers have committed suicide in India since 1997.
Drought, a fall in crop prices and an increase in the cost of cultivation are cited as reasons for the farmers' plight.
Media reports say that 680 farmers have taken their lives in western Maharashtra state this year, while another 98 have committed suicide in southern Andhra Pradesh and Kerala states since October.//
சுட்டி:
BBC news
BBC செய்தி வெளியீட்டில் இந்தியாவில் 1997 முதல் இன்றுவரை சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 680 பேர் மஹாரஷ்ராவிலும், 98 பேர் தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திராவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தற்கொலை செய்துள்ளார்கள்.
வறட்சி,உற்பத்தி செலவு அதிகம், குறைவான சந்தை விலை, கடன் தொல்லை ஆகியவையே காரணங்களாக கூறப்பட்டுள்ளன.
சுமார் 60% சத வீத மக்கள் விவசாயம், மற்றும் விவசாய தொழிலாளிகளாக இருக்கிறார்கள் அவர்கள் தான் வறுமைக்கோட்டினை வரையும் ஓவியர்கள். காரணம் அவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை.
விவசாயி என்ன தான் பாடுப்பட்டு அதிகம் விளைவித்தாலும் உரிய விலை இல்லாமல் விற்றுக்கஷ்டப்படுவதால் ,நிலம் வைத்திருக்கும் விவசாயி , அவர் நிலத்தில் உழைக்கும் விவசாய தொழிலாளிக்கும் உரிய ஊதியம் அளீக்க முடியாத நிலை தான் இதற்கு காரணம்.இதன் விளைவாக விவசாயத்தொழிலாளி அதிக வருமானம் தேடி மாற்று வேலைக்கு போகிறான், இந்நிலை தொடர்ந்து அதிகரித்து வருவது அபாயமானது, பின்னர் நிலம் வைத்து விவசாயம் செய்பவரும் அதனை விட்டு வெளியேற நேரிடும். தற்போது உபரி உற்பத்தி இருக்கும் போதே 40% சதம் வறுமைக்கோடு என்றால் உற்பத்தி குறைந்தால் என்னாகும்?
சரி இப்போது அரிசி உற்பத்தியின் பொருளாதாரம் பார்ப்போம்.
சந்தையில்,
ஒரு மூட்டை சன்ன ரக நெல்= 1180 ரூபாய்,
ஆனால் ஒரு மூட்டை சன்ன ரக அரிசி = 3000-3500 ரூபாய்
இந்த பரிமாண மாற்றம் எப்படி எனப்பார்ப்போம்.இப்படி உற்பத்தி இடத்தில் இருந்து நுகர்வோரை அடையும் போது மதிப்பு கூடுவதை விநியோக மதிப்பு சங்கிலி (supply value chain) என்பார்கள்.
நெல் அறவை திறன்* ஒரு நவீன அரிசி ஆலையில் 85% முதல் 90% *வரை இருக்கும் என தகவல் உள்ளது.
அரிசி அறவை எந்திரம்:
அதாவது 100 கிலோ நெல் அறைத்தால் குறைந்தது 85 கிலோ அரிசி கிடைக்கும்.
நாம் இன்னும் கொஞ்சம் சேதாரம் சேர்த்துக்கொள்வோம் 100 கிலோ நெல் அறைத்தால் 75 கிலோ கிடைக்கும் என வைத்துக்கொள்வோம்.
இரண்டு மூட்டை சன்ன ரக நெல் அரிசியாக மாறி அளிக்கும் வருமானம்,
நெல் 2 மூட்டை 200 கி= 1180X2=2360 ரூபாய்கள்.
அரிசி கிடைப்பது 75% திறன் எனில்= 200*75/100=150 கிலோ.
எஞ்சிய 50 கிலோ தவிடு, நொய் ஆகும் மொத்தமாக அனைத்தும் தவிடு என்றே வைத்துக்கொள்வோம்.தவிட்டில் இருந்து அரிசி எண்ணை, கால்நடை தீவனம் தயாரிப்பதால் அதற்கும் தேவை, விலை உண்டு.
அரிசி 100 கிலோ = 3000 எனில் ,
150 கிலோ அரிசி =4500 ரூபாய்,
50 கிலோ தவிடின் விலை= சுமார் 400 ரூபாய்*
மொத்த சந்தை மதிப்பு= 4900 ரூபாய்.
அரவைக்கூலி =200 ரூபாய் எனில் ,
தள்ளுபடி செய்தால் நிகர வருமானம் =4900-200=4700 ரூபாய்.
2 மூட்டை நெல் =2360 ரூ
அதிலிருந்து பெறப்படும் அரிசியின் மதிப்பு=4700 ரூ,
லாபம் = 4700
-2360
------------------
2340 ரூபாய்
----------------------
*தவிடு விலை:
//Punjab Rice Millers Association president Tarsem Saini, when questioned on this issue, said rice bran, which was earlier selling at around Rs 850 per quintal, was presently going for only Rs 500 to Rs 550 per quintal. He said similarly rice husk, which was till recently selling for Rs 300 to Rs 350 per quintal, was now being sold at Rs 225 to Rs 250 per quintal.//
http://www.tribuneindia.com/2008/20081126/punjab1.htm
*அறவைத்திறனுக்கு:
The most effective and economical means of rice hulling operation giving a hulling efficiency from 85% to 90% depending on Paddy type
http://www.rimac-ricemachinery.com/page3.html
இதன் மூலம் தெரிவது என்னவெனில் , வியாபாரிக்கு அவன் முதலீட்டின் மீது சுமார் 100 சதம் அளவுக்கு லாபம் ஈட்டப்படுகிறது.
இந்த 2340 ரூபாய் என்பது மொத்த வியாபாரி, இடைத்தரகர் ,குறு வியாபாரி, சிறு வியாபாரி, என அனைவராலும் பகிறப்படுகிறது.
ஆனால் மூலப்பொருளான நெல்லை விளைவித்த விவசாயிக்கோ 10 சதம் கூட லாபம் வருவதில்லை என்பதனை முந்தையப்பதிவில் பார்த்தோம்,
நான்கு மாதம் வயலில் பொருள் முதலீடு, உழைப்பு முதலீடு செய்து முதுகொடிய பாடுப்பட்டால் மொத்த குடும்பத்திற்கும் 4400 ரூ தான் வருவா ஆக கிடைக்கிறது(அதுவே சந்தேகம் தான் பல மாநிலங்களில் உற்பத்தி செலவு , வருவாய் விட அதிகம் ஆக இருக்கிறது நிகர நட்டம் என முந்தையப்பதிவில் பார்த்தோம்),.
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தலைக்கு தலா மாதம் 275 ரூ தான் வருமானம், இது திட்டக்கமிஷனால் நிர்ணயம் செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு மேல் வசிப்பவரின் மாத சம்பளம் ஆன 960 ரூ என்பதனை விடவும் வெகு வெகு குறைவு!
மக்களுக்கு மலிவாக உணவு கிடைக்க வேண்டும் என அரசாங்கம் நினைப்பதில் தவறில்லை ஆனால் அதனை நெல்லின் அடிப்படை குறைந்த பட்ச ஆதரவு விலையை குறைவாக வைப்பதன் மூலம் செய்ய நினைப்பதால் தான் விவசாயிக்கு இந்நிலை.
தமிழக அரசின் நெல்கொள்முதல் கணக்கு:
அவ்வளவு குறைந்த விலைக்கு நெல்லை வாங்கினாலும் அரிசி என்னமோ கிலோ 30 ரூபாய்க்கு மேல் தானே விற்பனை ஆகிறது, அப்படி எனில் அரசு மலிவாக உணவு கிடைக்க போட்ட திட்டம் மக்களை சென்றடையவில்லை, விவசாயிக்கும் பலன் தறவில்லை தானே.
குவிண்டால் நெல் 1500 என அரசு நிர்ணயித்தாலும் இப்போது விற்கப்படும் அரிசி விலைக்கே விற்கலாம், அதிலும் லாபம் வரும் ஆனால் அதனை வியாபாரிகள் விரும்புவதில்லை, எனவே உடனே விலையை ஏற்றி விடுவார்கள். நெல் விலை ஏறிப்போச்சு அதான் நாங்க விலை ஏத்தினோம் என காரணம் சொல்வார்கள்.
மேலும் செயற்கையாக தட்டுப்பாட்டினையும் உருவாக்கி இயல்பினை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.
மேலும் எப்பொழுதும் மொத்த கொள்முதல் விலையில் அரிசி விலை என்பது குறைவாகவே இருக்கு ஆனால் சில்லறை விற்பனைக்கு வரும் போது தான் ஏறி விடுகிறது.
அரிசி மண்டி:
மொத்த விலையில் அரிசி ஒரு குவிண்டால் சுமார் 1500 முதல் 1800 வரை மட்டுமே, ஆனால் சில்லறை வர்த்தகர்கள் மக்களுக்கு விற்பது 3000 ரூபாய்.
சில்லறை வர்த்தகர்கள் எப்படி விலையை தீர்மானிக்கிறார்கள் எனில் அவர்கள் வாங்கும் பொருளின் அளவு, விற்கும் அளவு, அவர்கள் போட்ட முதல், கட்ட வேண்டிய கடன், தினசரி தண்டலில் கடன் வாங்கி இருப்பார்கள். இதுக்கு ஏற்றார்ப்போல விலையை கூட்டி அல்லது குறைப்பார்கள், உண்மையான அரிசி என்ற பொருளின் உற்பத்தி அளவு,சந்தை வரவு மற்றும் நுகர்வு தேவையின் அடிப்படையில் அல்ல விலை நிர்ணயம்.
இதற்கு உதாரணம் இந்து பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியே,
"According to M. Jayapalan, vice-resident, Red Hills Paddy and Rice Wholesale Merchants Association, there has been no increase in wholesale prices of rice recently.
“The wholesale rate of raw rice is Rs.28. Seasoned raw rice is only a few rupees more. It may be the best variety of rice that a retailer is selling, but Rs.42 is certainly overpricing it,” he says.
Speaking of wholesale rates of boiled rice, he said it ranged from Rs.27 to Rs.34 a kg. "
“More than a three rupee-margin is unfair. Even we are into retail sales, but we do not price it so high,” Mr.Jayapalan adds. "
சுட்டி:
the hindu news paper
இந்த செய்தி மொத்தக்கொள்முதலில் கிலோ 27 முதல் 34 என இருந்த போது சில்லறை விலையில் 42 க்கு விற்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
தற்ப்போது மொத்தக்கொள்முதலில் கிலோ அரிசி 15 ரூ முதல் 18 ரூ என்ற அளவில் உள்ளது சில்லறை விலையில் கிலோ அரிசி 30 ரூ முதல் 35 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாய சந்தை நிலவரம் இங்கே:
சுட்டி:
agri market
அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை எதிர்ப்பார்த்தது போல நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியினை கொடுக்கவில்லை, விவசாயிக்கு லாபத்தையும் கொடுக்க வில்லை, இடையில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் மட்டுமே தங்கள் இஷ்டம் போல லாபம் வைத்து அனுபவிக்கிறார்கள். இது தான் இந்தியா!
உற்பத்தியாளர் ஆன விவசாயி என்ன விலைக்கு விற்கிறான், கடையில் நாம் என்ன விலைக்கு வாங்குகிறோம், இரண்டுக்கும் என்ன தொடர்பு, விலை உயர்வு ஏன் என்பது போன்றவற்றில் போதுமான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.
செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை ஏற்றம் என செய்தி வந்தால் அச்சச்சோ விலை வாசி போறப்போக்கப்பார்த்தா நாட்டுல மனுஷன் வாழ முடியாது போல இருக்கே என உச்க்கொட்டிவிட்டு, தொலைக்காட்சில அடுத்து என்ன நிகழ்ச்சினு போய்விடுவோம்.
சரவண பவன் போன்ற உணவங்களில் காத்தாடிப்போட்டா பறக்கிறாப்போல வைக்கிற நாலு இட்லிக்கு 25 ரூ சொன்னாலும் சப்புக்கொட்டி சாப்பிடுவோம்! கூடவே வித விதமா டீ ஸ்பூன் அளவு சட்டினி பல வண்ணத்தில் கொடுப்பதையும் சூப்பர்ல என சிலாகிப்போம்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் விவசாயம் அழியும்னு யாராவது சொன்னாலும் சுதேச உணர்வுப்பீறிட ஆமாம் போடுவோம்! ஏற்கனவே நம்ம அண்ணாச்சிகளே அழித்துக்கொண்டிருப்பதை சுலபமாக மறந்துவிடுவோம்.
நம் நாடு பாரதம் என்ற ஒரு நோஞ்சானாகவும் இந்தியா என்ற ஒரு வளமான நாடாகவும் வழக்கம் போல இரு மாறுப்பட்ட கூறுகளாக வளர்ந்துக்கொண்டிருக்கும் .வேற்றுமையில் ஒற்றுமையாம் ,2020 இல் நாம தான் வல்லரசு! வாங்க கனவு காணலாம்!
பின்குறிப்பு:
புகைப்படங்கள் , பிபிசி,இந்து நாளிதழ்,ரைஸ்மெக்,விக்கிபீடியா ,IRRI,outlookஆகிய தளங்களில் இருந்து பயன்ப்படுத்தப்பட்டுள்ளது, நன்றி!