Sunday, February 12, 2012

மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .



மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .




எப்போ வரும் எப்போ போகும் தெரியாது, வர வேண்டிய நேரத்தில் வராது, ஆனால் வரும் அது யார் ? ஹி..ஹி சூப்பர் ஸ்டார் அல்ல அது மின்வாரிய மின்சார கண்ணா மின்சாரம் தான்.

முன்னர் அறிவிக்கப்படாமல் 4-5 மணிநேரம் எல்லாம் மின் தடை செய்தார்கள், இப்போ தெம்பாக 8 மணிநேரம் மின் தடை சொல்லிட்டாங்க. உலகம் முழுக்க புவி வெப்பமாதல் தடுக்க 5 நிமிடம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வாங்க அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை ஆனால் தமிழக அரசு தினசரி 8 மணிநேரம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க கடுமையாக போராடி வருகிறது என்று சொன்னால் மிகையல்ல!


அனேகமாக இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபெல், யுனெஸ்கோ சுற்றுசூழல் விருது, கிரீன் பீசின் பசுமை நோபெல் பரிசெல்லாம் தமிழக முதல்வருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.

தமிழக மக்களும் புவிவெப்பமாதலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும், அப்படியும் சிலர் பதிவெழுத மின்சாரம் வேண்டுமே என தலையை சொறியக்கூடும் அவர்களைப்போன்ற சுயநல கிருமிகளுக்கு உதவவே இப்பதிவு..ஹி..ஹி ஏன் எனில் நானும் ஒரு சுயநலக்கிருமி ஆச்சே :-))

மின்வெட்டை குறுக்கு வெட்டாக வெட்டி புறவழிக்காண சில ,பல மக்கள் தலைக்கீழ் மின்மாற்றி சேமக்கலன் (இன்வெர்ட்டர் தானுங்க)வாங்கக்கூடும் , அப்படி வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்.

இனி நீட்டி முழக்காமல் த.சே என சுருக்கமாக சொல்வோம் , இது பல மின் திறன்களில் கிடைக்கிறது. ஆரம்பம் 600 வா.ஆ. பின்னர் 800va,1200va, 1500 vaஎன காசுக்கு ஏற்ப பல வண்ணங்களில், செயல்முறைகளில், பல நிறுவனங்களின் பெயர்களில் கிடைக்கிறது.

600 , 800 வா.ஆ எல்லாம் இப்போதைய நமது தேவைக்கு காணாது. குறைந்தது 1200 வா.ஆ திறனில் வாங்குவதே சிறந்தது. சில ஆயிரங்கள் மட்டுமே வித்தியாசம், 800 வா.ஆ ரூ 12000 எனில் 1200 வா.ஆ ரூ 15000 வரும்.

பிரபலம் அல்லாத நிறுவன தயாரிப்புகள் மலிவாக இருக்க கூடும், ஆனால் நம்பக தன்மை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.அமரன், கிராம்ப்டன் கிரீவ்ஸ், மஹிந்திரா, மைக்ரோ டெக் எல்லாம் நான் சொல்லும் விலை வரிசையில் கிடைக்கின்றன.


மின்னணு , தூய முழுஅலை தலைகீழ் மின்மாற்றி சேமக்கலன் (pure sinwave digital inverter)வாங்குவதே நல்லது.அப்போது தான் கணினிப்பயன்பாட்டுக்கு உதவும். இதனை இல்ல தடையில்லா மின்வழங்கி (home ups) என்று சொல்வார்கள்.இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யும் போதே ,த.சே இணைப்புக்கு என தனியே ஒரு மின்கம்பி பொருத்திவிடுகிறார்கள். எனவே இணைப்புக்கொடுக்கவேண்டிய சாதனத்திற்கு மட்டும் இணைப்பு வழங்கிவிடலாம் ,மீண்டும் புதிதாக மின் கம்பி இணைப்பு செய்ய தேவை இல்லை.

பொதுவாக ஒரு த.சே வில் ஒரு மின் ஏற்றி அமைப்பு(charging unit), மின்சாரம் சேமிக்க மின்சேமகலம்(12v battery) என இரண்டு அமைப்பு இருக்கும்.

மின் ஏற்றி அமைப்பு (charging unit) என்பது , மாறு மின்சாரத்தை நேர் மின்சாரம் ஆக முதலில் மாற்றி மின் சேமகலத்தில் சேமிக்கும் ,பின்னர் மின் தடையின் போது நேர் மின்சாரத்தை(டி.சி) மீண்டும் மாறு மின்சாரம் (ஏ.சி)ஆக மாற்றி உபகரணங்களுக்கு வழங்கும்.
எனவே தான் தலைகீழ் மின்மாற்றி சேமகலன்(இன்வெர்ட்டர்) என அழைக்கப்படுகிறது.ஒரு த.சே வின் திறன் 800வா.ஆ எனில் அதே அளவுக்கு மின்னேற்றம் செய்யும், அதே அளவுக்கு மின்சக்தியையும் உபகரணங்களுக்கு வழங்கும்.

ஒரு எளிய த.சே மின்சுற்று திட்ட விளக்க படம்.



அப்படிப்பட்ட எல்லா த.சேக்களும் ஒரே போல கட்டமைக்கப்படுவதில்லை. சிலவற்றில் இயங்கா வெப்ப நீக்கி (passive heat removal), இயங்கும் வெப்ப நீக்கி(active heat removal), என எல்லாம் இருக்கும்.த.சே செயல்ப்படும் போது அதிகம் வெப்பம் உருவாக்கும் எனவே வெப்ப நீக்கி அமைப்பு /குளிர்விக்கும் அமைப்பு முக்கியம், இல்லை எனில் மின்சுருள் புகை விடும்.

இயங்கும், இயங்கா வெப்ப நீக்கி என இரண்டும் உள்ளதில் வெப்பம் நீக்க ஒரு வெப்ப தொட்டி(ஹீட் சின்க்) யுடன் ஒரு குளிர்விக்கும் மின்விசிறியும் இருக்கும்.இரண்டும் உள்ளதே நல்லது அப்போது தான் எப்போதும் குளிர்ச்சியாக உங்கள் த.சே வேலை செய்யும்.

இப்போது மின் சேமகலன்(பேட்டரி) பற்றிப்பார்ப்போம். எல்லாமே 12வோல்ட் தான் ஆனால் அவற்றின் மின்னோட்ட திறன்= ஆம்பியர் வேறுபடும். அதைப்பொறுத்தே ஒரு த.சே எத்தனை மணி நேரம் மின்சாரம் வழங்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.

சில த.சே விலைக்குறைவாக இருக்கும் காரணம்  குறைவான மின்னோட்ட திறன் கொண்ட மின்கலத்தை கொடுப்பார்கள்.

ஒரு 800 வா.ஆ த.சே வுடன்
100 ஆம்பியர் /ஹவர் மின்கலம் இருப்பது ஆரம்ப நிலை.மலிவானதும் கூட.

அடுத்து 120 ஆ/ஹ, 150 ஆ/ஹ என்று போகும். அதிகப்பட்சமாக 180 ஆ/ஹ , 12 வோல்ட் தான் சந்தையில் கிடைக்கிறது.

800 வா.ஆ க்கு 120 ஆ/ஹ மின்கலம் பொறுத்தமானது. அதிக திறனில் சேர்த்தால் மின்சாரம் ஏற அதிக நேரம் பிடிக்கும்.

1200 வா.ஆ த.சேவுடன் 150 ஆ/ஹ மின்கலம் என்ற அளவில் வாங்குவது நல்ல மின்வழங்கும் திறனுடன் இருக்கும்.


*1)வா.ஆ= வால்ட், ஆம்பியர்,

2)ஆ/ஹ= ஆம்பியர்/ஹவர்

நாம் வாங்கும் த.சே வில் விரைவு மின் ஏற்றி (குயிக் சார்ஜ்)மற்றும் வழக்கமான மின் ஏற்றி(நார்மல் சார்ஜ்) என இரண்டும் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு 12 வோல்ட், 150 ஆ/ஹ உள்ள மின்கலத்தின் மிந்திறன் என்ன எனப்பார்ப்போம்.

வாட்ஸ்= ஆம்பியர் Xவோல்ட்
=150 X12
=1800 வாட்ஸ்.

எனவே 1800 வாட்ஸ் திறனுக்குள் நாம் மின்சாதனங்களை த.சே மூலம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். குறைவான மின் திறன் உள்ள சாதனங்களைப்பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் கிடைக்கும்.

ஒரு இல்லத்தின் சராசரி மின் உபகரணப்பயன்பாட்டு தேவை:

குழல் விளக்கு -4= 60வாட்ஸ்* 4= 240 வாட்ஸ்

மின்விசிறி -4= 80 வாட்ஸ்* 4 = 320

கையடக்க குழல் விளக்கு--4 = 30 வாட்ஸ் *4= 120

ஒரு 21 இஞ்ச் குழாய் தொ.கா(inch CRT T.V) =100-120 வாட்ஸ்

ஒரு 14 இஞ்ச் மடிக்கணினி=25 வாட்ஸ்
----------------------
மொத்த மின்நுகர்வு =825 வாட்ஸ்/ஹவர்அப்படி எனில் ஒரு 1200 வா.ஆ, 150 ஆ/ஹ ,12 வோல்ட் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் மூலம் மின்சாரம் கிடைக்கும் கால அளவு=1800/825=2.18மணிநேரம்.

எனவே குறைவான மின்சாதனம் பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும். 8 மணிநேரத்திற்கு பயன்ப்படுத்த வேண்டும் எனில் சுமார் 200 வாட்ஸுக்குள் மின்சாதனங்களைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரி மின்கலத்துக்கு மின்சாரம் ஏற ஆகும் காலம் எவ்வளவு இருக்கும்.?

ஒரு முனை மின் இணைப்புள்ள (சிங்கிள் பேஸ்)வீடு எனில்,

220 வோல்ட், 5 ஆம்பியர் மின்சாரம்,

220* 5 =1100 வாட்ஸ்,

காலம்=1800/1100
             =1.63

எனவே 1800 வாட்ஸ் மின்கலம் மின்சாரம் ஏற =1.63 *60 நிமிடங்கள்
= 98 நிமிடங்கள் ,
அதாவது 1 மணி 38 நிமிடங்கள் ஆகும்.

எல்லா தலைகீழ் மின்மாற்றி சேமகலத்துடனும் கொடுக்கப்படும் மின்சேமகலம் பராமரிப்பு தேவையில்லாத அடைக்கப்பட்ட மின்கலம் என்றே சொல்வார்கள் ஆனால் அப்படியல்ல, அவை யாவும் மிக குறைவான பராமரிப்பு மின்கலங்களே (ultra low maintanance sealed battery)எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை கலத்தில் நீர் அளவு பார்த்து வாலைவடி நீர் (distilled water)ஊற்ற வேண்டும் இல்லை எனில் மின்கல சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு வீண் ஆகிவிடும்.


பின்குறிப்பு:

# பட உதவி கூகிள் படங்கள்,நன்றி!

# மொழிமாற்றம், இன்ன பிற தகவல்களில் பிழை இருக்கலாம் :-))

சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.

17 comments:

சார்வாகன் said...

வண்க்கம் நண்பா
அருமையான் பதிவு,இருளில் இருப்பவர்களை ஒளிக்கு கொண்டுவரும் பல் முயற்சிகளில் ஒன்றான இப்பதிவுக்கும் பாராட்டுகள். இன்வெர்ட்டெரில் மாறாத மின்னோட்ட முறையில்தான்[constant current chagring] மின்னேற்றம் நடக்கிறதா?.நல்ல தக்வல்கள்.நன்றி

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,வணக்கம் நன்றி!

ஆமாம் நீங்க சொன்னாற்போல நேர் மின்சாரம்(டி.சி) ஆக தான் மின்சேமகலத்திற்கு மின்னூட்டம் ஏற்றப்படுகிறது. அதைக்குறிப்பிட மறந்து விட்டேன். மாறு மின்னோட்டம், நேர் மின்னோட்டம் ஆக மாற்றி சேமிக்கப்பட்டு பின் மீண்டும் மாறு மின்னோட்டம் ஆக உபகரணங்களுக்கு வழங்கப்படுவதால் தான் தலைக்கீழ் மின்மாற்றி(இன்வெர்ட்டர்) என அழைக்கப்படுகிறது. இதையும் பதிவில் சேர்த்து விடுகிறேன்.குறிப்பிட்டதற்கு நன்றி!

Vetirmagal said...

பயதுள்ள பதிவு. இந்த மாதிரி இன்வர்ட்டர்
வாங்கியே ஆக வேண்டிய கட்டாய்மான நிலை குறித்து, வருத்தப் பட வேண்டி இருக்கிறது. நாட்டில் எல்லோருமே வாங்கினால்? எங்கே போகிறோம் தெரியவில்லை.

நன்றி, வணக்கம்.

வவ்வால் said...

வெற்றிமகள்,

வாங்க, வணக்கம்,நன்றி!

மக்கள் தொகை,தொழில் வளர்ச்சி , மின் தேவை, எல்லாம் பெருகிடுச்சு, ஆனால் போதுமான மின் உற்பத்தி இல்லை. ஒரு நல்ல அரசென்றால் அடுத்த பத்தாண்டுகளுக்கு என்ன தேவை இருக்கும்னு கணக்கிட்டு இப்போதே திட்டமிட்டு வேலை செய்யனும். இங்கே தான் இலவசம் கொடுத்தா ஓட்டு, அப்புறம் ஏன் திட்டமிடப்போறாங்க.

இப்போ சில அனல், புனல், காற்றாலைனு திட்டங்கள் துவங்க்கி இருக்கு அதெல்லாம் நடைமுறைக்கு வர எப்படியும் 3 ஆண்டுகள் ஆகும் அது வரைக்கும் மின் தடை இருக்கவே செய்யும். இப்போ இன்வெர்டெர் விற்பனை தான் செம சூடு , போகிற போக்கைப்பார்த்தால் இன்னும் கொஞ்ச நாளில் ஜெனெரேட்டர் விற்பனை சூடு பிடிக்குமோனு நினைக்கிறேன்.



காசு உள்ளவங்க இன்வெர்ட்டர் இல்லாத மக்கள் சீமெண்ணை சிம்னி விளக்கு , தீபந்த்தம்னு பழகிக்க வேண்டியது தான் :-))

Radhakrishnan said...

//இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யும் போதே ,த.சே இணைப்புக்கு என தனியே ஒரு மின்கம்பி பொருத்திவிடுகிறார்கள்.//

:) ஆமாம், ஆமாம். வீட்டில் த.சே மாட்ட வேண்டும் என சொன்னவுடம் இந்த கணக்கு எல்லாம் பார்க்கவில்லை. த.சே மாட்டியாகிவிட்டது.

அற்புதமான பதிவு வவ்வால். அனைத்தையும் மிகவும் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது. படித்து கொண்டு வரும்போதே மனதில் ஏற்பட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலும் தொடர்ந்து எழுதப்பட்டு இருந்தது மிகவும் பாராட்டுக்குரியது.

சொல்லுக சொல் பிறிதோர் சொல் இல்லை என்பதை அறிந்து. :)

சமுத்ரா said...

Thank you

வவ்வால் said...

வாங்க ரா.கி,

வணக்கம்,நன்றி!

//சொல்லுக சொல் பிறிதோர் சொல் இல்லை என்பதை அறிந்து. :)//

அட ...டா வள்ளுவர் ஒன்னுத்தையும் விட்டு வைக்காம எல்லாத்துக்கும் எழுதிட்டாரே, அவர் மெய்யாலுமே திரிகால ஞானியா இருப்பார் போல :-))

நான் தகர டப்பா தமிழில் எழுதினாலும் இலக்கியத்தை சேர்த்து சுவைக்கூட்டுறிங்க ரா.கி ,நன்றி!

-------

சமுத்திரம்,

வாங்க,வணக்கம்,நன்றி!

நான் அல்லவா நன்றி சொல்லனும் :-))

ராஜ நடராஜன் said...

வகுப்புக்கு போற க்டைசி பையனா நானாகவே அதுவும் எட்டாகவே இருக்கிறேன்.அது ஏன்:)

பதிவுக்கு போறத்துக்கு முன்னாடி மறக்காம இருக்க பதிவோட இடத்தை வலது அல்லக்கைப் பக்கம் நிறைய இடத்தைப் பிடிச்சிக்குது.இடது பக்கம் இன்னும் சுத்தம்...ஒரு வேலையும் கிடையாது.ஆனாலும் காலி இடத்தைப் பட்டா போட்டு வச்சிருக்குது.

விவசாயியா இருந்துகிட்டு பங்காளி வரப்ப புடிக்கிறதெல்லாம் தெரியாம இருக்குறீங்களே:)

நான் உபயோகிக்கும் கூகிளின் முதல் ரெடிமேட் சர்ட்டை நிறைய பேர் போடுறதைப் பார்க்கிறேன்.

அதனால வரப்பு புடிக்கிறீங்க இல்லன்னா கூகிள் புது சர்ட்டை போடுறீங்க.

ராஜ நடராஜன் said...

மொத்த இந்தியாவின் மின்சார உற்பத்தியை சேர்த்தால் இந்தியா மின்சார உற்பத்தியில் பின் த்ங்கவில்லை.ஆனால் மொத்த மக்கள் தொகை பயன்பாட்டின் பற்றாக்குறை பெரிய பிரச்சினை.அத்தியாவசியமாக வீட்டுக்கு மின்சாரம்,சுழல் விசிறி என்ற நிலை போய் தொலைக்காட்சி,வீடியோ,கணினி,இணையம்,போன் ரீஜார்ஜ்,குளிர் சாதனப் பெட்டி என்ற் நிலை அத்தியாவசியமாகி விட்டது.இது தவிர தொழிற்சலைகள் பெருகி விட்டன.

இது தவிர அதிக மின்சாரத்தின் சூடு,வாகனப் புகை போன்றவை ஏனைய நாடுகளை விட எவரெஸ்ட்டை பக்கத்துல வைத்திருக்கும் நமக்கே கால சூழல் மாற்றங்களை தோற்றுவிக்கும்.

என்றாவது ஒரு நாள் தங்கம்,பெட்ரோல் விலையை விட உணவு உற்பத்திப் பொருட்கள் முந்திக்கொள்ளுமா என தெரியவில்லை.ஆனால் நீலத்தங்கம் என்ற நீர் பற்றாக்குறை நிச்சயம் என்பது நிச்சயம்.நீரில்லாமல் மின்சாரமா?தற்போதைய நெய்வேலி நிலக்கரி இருக்குதே என்று பார்த்தால் எவ்வளவு குழி தோண்டனுமோ அவ்வளவு தோண்டியாச்சு.கூடங்குளம்?

வவ்வால் said...

ராஜ்,

வணக்கம்,நன்றி!

எட்டு எட்டா உலக வாழ்க்கையை பிரித்துக்கொண்டீர்களோ என்னமோ?

வாய்க்கா ,வரப்ப்பை எல்லாம் சரி செய்து அண்டை எடுத்து நிலத்தை உழுது பரம்படித்து பயிரும் போட்டாச்சு :-))

அப்புறம் பார்த்துக்கலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே தான் இருந்தேன், நாம ஒன்று செய்ய அது ஒன்றாக முடியும்னு கை வைக்காம இருந்தேன் , உங்க புண்ணியத்துல செய்துட்டேன்.

---

எப்படி பின் தங்கவில்லைனு சொல்றிங்கனு புரியலை நுகர்வு வளரும் வேகத்தில் மின் உற்பத்தி பெருகவில்லை, நீங்கள் அறிவிக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களின் அடிப்படையில் சொல்றிங்கனு நினைக்கிறேன், ஆனால் செயல்பட துவங்க்கியது அதன் மின் உற்பத்தி எனப்பார்த்தால் டெபிசிட் தான், அதான் மின் வெட்டு.

இந்தியாவில் தான் திட்டக்கால எல்லைக்குள் முடிக்கபடாத திட்டங்கள் மிக அதிகம். சீனாவில் 10000 மெ.வாட் திட்டங்களை கூட 3 ஆண்டுக்குள் முடித்துவிடுவார்கள், இங்க்கே 1500மெ.வா திட்டத்தையே 10 ஆண்டுகள் இழுப்பார்கள்.வள்ளூரில் 2007 இல் துவங்கப்பட்ட 1500மெ.வா அனல் மின்நிலையம் முதல் கட்டமாக 1000 மெ.வா அளவுக்கு ஜூனில் முடியும் என செய்தி வருகிறது.

தமிழ்நாட்டைப்பொறுத்த வரை உற்பத்தியை பெருக்காமல் நுகர்வை பெருக்கிவிட்டார்கள் கடந்த 5 ஆண்டுகளில் அதன் உச்சம் இப்போது முட்டுகிறது.

குளோபல் வார்மிங் என்பதே ஒருக்கட்டுக்கதை என்று கூட சிலர் சொல்கிறார்கள். புகை , இன்னபிற காற்றினை மாசுப்படுத்துவதை நேரடியாக உணரமுடிகிறது.இன்னும் அமில மழை தான் பொழியவில்லை :-))

நீருக்கு பஞ்சம் வரும் அளவுக்கு நீர் குறைந்து விடாது,ஆனால் இருக்கும் நீரை பயன்ப்படுத்த முடியாத அளவுக்கு மாசுப்படுத்தி விடுகிறோம். நம்ம பூமியே நீர்கிரகம் தான் 71% நீர் பரப்பு. நீர் சுழற்சியின் மூலம் நீர் கிடைத்துக்கொண்டே இருக்கும் எப்படி பயன்ப்படுத்த போகிறோம் என்பதில் தான் நீர்ப்பஞ்சம் ஏற்படுவது இருக்கு.

நெய்வேலி நிலக்கரி இன்னும் 20 ஆண்டுகளுக்கு தாங்கும் ,மேலும் புதிய விரிவாக்கமும் நடைப்பெறுகிறது. உங்கள் வாய்முகுர்த்தம் போல கூடங்குளத்தையும் திறக்க போறாங்க அம்மையார். 4-5 மாதங்களுக்கு முன்னரே இதை சொல்லிவிட்டேன், கூடங்குளம் பற்றிய பதிவில்.

Boss said...

Nice post Friend

I came across your post while seeing Surekaas post. Nice Translation for Inverter.

Thank you for sharing useful information and advice for those purchasing Inverter.

With warm regards

S Bhaskar
9099024667

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! இன்வெர்டர் புதிதாக வாங்க நினைப்பவர்களுக்கு பயனுள்ள கட்டுரை.

Anonymous said...

குழல் விளக்கு 60 வாட்ஸ் என்பது தவறு. 40 வாட்ஸ்தான்.

மின்கலன் 200 ஆ.ஹ. வரை கிடைக்கிறது. (சு-காம்)

டியூபுலர், சாதா என இரு வகை மின்கலன்கள் உண்டு! அதையும் குறிப்பிட்டிருக்கலாம், டியூபுலர் விலை அதிகம், நீண்ட உழைப்பு

சரவணன்

வவ்வால் said...

பாஸ்கரன் ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ,அடிக்கடி வாங்க.
-----
தி.த.இளங்கோ,
வாங்க, நன்றி,வணக்கம்,
------
சரவணன்,

வாங்க,நன்றி,வணக்கம்.

குழல் விளக்கில் 40 வாட்ஸ் ,60 வாட்ஸ் இரண்டுமே இருக்கு சரிப்பார்க்கவும்,கணக்கிட பொதுவாக எடுத்துக்கொண்டேன்.

மின்விசிறி,ஏசி என அனைத்திலும் மாறுப்பட்ட வாட்ஸ் திறனில் உள்ளன, மடிக்கணினியிலும் அவ்வாறே கணக்குக்கு பொதுவாக சிலவற்றினை எடுத்துக்கொண்டேன்.

சு-கம் 200 ஆ.ஹ இல் இன்வெர்டர் இப்பொழுது தான் போடுகிறார்கள், விளம்பரம் பார்த்தேன் , தேவைக்கு ஏற்ப அவ்வப்போழுது புதிய திறனுடன் வருவது வழக்கம் தானே. இன்ட்ஸ்ரியல் இன்வெர்டர்ஸ் என கன ரகம் கூட இருக்கு.

டூயுபுலர் மின்கலம் விலை அதிகம் மேலும் திறனும் குறைவு , ஒரு வீட்டுக்கு குறைந்த இரண்டு மின் கலத்துடன் இன்வெர்டர் போட வேண்டியதாக இருக்கும் என்பதால் ,இன்வெர்டருக்கு என இருக்கும் கம்ப்ளீட்லி சீல்ட் அல்ட்ரா லோ மெயின்டனன்ஸ் பேட்டரிகளை பற்றி சொல்லி இருக்கிறேன்.

// நீண்ட உழைப்பு//

நீண்ட உழைப்பும் கிடையாதே அதன் ஆயுட்காலம் முடிந்ததும் தூக்கி எறிந்துவிட வேண்டியது தான், மேலும் காலப்போக்கில் திறன் குறைந்துக்கொண்டே வரும் அப்போது மீண்டும் அதன் திறனை அதிகரிக்கவும் முடியாது.பெரும்பாலும் ஆயுட்காலம் முடியும் முன்னரே திறனில் பாதியாகி விடும்.

ludba said...

மிகவும் பனுள்ள பதிவு tube light ல் 60 w கிடையாது 20w & 40 w மட்டும் உள்ளது நன்றி சார்

ludba said...

மிகவும் பனுள்ள பதிவு tube light ல் 60 w கிடையாது 20w & 40 w மட்டும் உள்ளது நன்றி சார்

வவ்வால் said...

ludba,

வாங்க,நன்றி!

20 w, (அ) 40 w என tubeligt மேல் போட்டு இருப்பதை சொல்றிங்க என நினைக்கிறேன்.

ஒரு டூயுப் லைட் செட் ஆ மின்நுகர்வு செய்வதை நான் சொல்கிறேன்.

சோக் +டுயூப் லைட் சேர்ந்து என்ன மின்சாரம் நுகர்வு செய்யும் என்பதை நான் ரெபர் செய்த தளம் காட்டுகிறது.அதன் அடிப்படையிலே நான் சொன்னது.

சரியா சொல்லப்போனால் 40-50 வாட் என்றும் 60-70 வாட்ஸ் என்றும் மின் நுகர்வை சொல்லி இருக்கணும்.

சில மாறுதல்களால் மின் நுகர்வு மாறுபடுது, நான் தோராயமாக 60 வாட்ஸ் என வைத்து கணக்குப்போட்டுக்கொண்டேன்.