Monday, June 18, 2012

பயோடீசல்-2: புங்க எண்ணை(Pongamia pinnatta oil)


பயோ டீசல் என்ற தலைப்பில் முன்னர் தாவர எண்ணையை எப்படி பயோடீசலாக மாற்றுவது உள்ளிட்டவற்றை பார்த்தோம் ,இனி அடுத்து வரும் பதிவுகளில் மேலும் சிலமாற்று எரிப்பொருட்களின் மூலப்பொருட்களையும் அதன் பயன்களையும் பார்க்கலாம்.

இப்பதிவோடு தொடர்புடைய மாற்று எரிப்பொருள் முந்தைய பதிவைக்காண அழுத்தவும்



அந்த வரிசையில் இப்பதிவில் புங்கை மரத்தின் "எரிப்பொருள்" திறனையும், அதற்கு பிரகாசமான ஆற்றல் மரம்(energy tree or oil tree) ஆகும் தகுதி இருப்பதையும் காணலாம்.

வழக்கமாக பயோ டீசல் என்றால் அதற்கான மூலமாக ஜெட்ரோபாவையே நம் நாட்டில் பரிந்துரைப்பார்கள். சில இடங்களில் பயிரிடப்பட்டும் பரிசோதிக்கப்பட்டது. ஜெட்ரோபா எண்ணைக்கு பயோடீசல் ஆக மாற்றும் தகுதி இருந்தும் ,இந்தியாவில் பெரிய அளவில் வெற்றிப்பெறவில்லை எனலாம். காரணம் அதனை பயிரிடவும் அதிக முயற்சியும், ஆற்றலும்,நீரும் தேவைப்படுவதே.

உற்பத்தி இலக்கில்லாமல் மானாவாரி சாகுபடி செய்யும் போது பரவாயில்லை ,ஆனால் ஆண்டுக்கு இத்தனை டன் என உற்பத்தி இலக்குடன் பயிரிட்டால் மற்ற வணிக பயிர் அளவுக்கு உழைப்பை கொடுக்க வேண்டும், மேலும் நீர்ப்பாசனம் ,உரம் என செலவும் செய்ய வேண்டும்.

அதிக உழைப்பு, நீர் தேவை,உரம் , இல்லாமல் வறட்சியிலும் வளரக்கூடிய தாவர எண்ணை தரக்கூடிய ஒரு தாவரம் தான் புங்கை மரம் எனப்படும் புங்கேமியா பின்னேட்டா மரம் ஆகும்.

புங்கை மரம்:

பொது பெயர்: புங்க மரம், கரஞ்சி மரம்,derris indica

அறிவியல் பெயர்; Milletia pinnata, Pongamia pinnata

பட்டாணி ,உளுந்து, நிலக்கடலை வகையை சேர்ந்த லெகூம் (legume)குடும்பத்தினை சேர்ந்தது, எனவே காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று.

பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும்.

கோடையில் மிக சிறிதளவே இலையுதிரும் ,பசுமை மாறா மரம், 3-4 நான்கு ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக்கூடிய மிதமான கடின மரம்(semi hard wood) ஆகும்.


இதன் விதைகளில் 25-40% எண்ணை இருப்பதே இதனை முக்கியமான மாற்று எரிபொருள் மரமாக கருதக்காரணம். ஏற்கனவே இதன் எண்ணை சோப்பு, விளக்கெரிக்க, பெயிண்ட்கள், ஆயுர்வேத மருந்து,இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியனத் தயாரிக்க பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது. கசப்பு தன்மை கொண்ட எண்ணை என்பதால் சமையலுக்கு பயன்ப்படுத்துவதில்லை.

இம்மரம் இந்தியா முழுவதும் சாலையோரங்களிலும், பொது நிலங்களிலும்,வாய்க்கால்,வரப்பு என தானாகவே வளர்ந்து இருப்பதைக்காணலாம்.

நிழல் தரக்கூடிய, எளிதில் அதிக பராமரிப்பு இன்றி வளரக்கூடிய மரம் என்பதால் நெடுஞ்சாலைத்துறையினராலும் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ளது.


மரம் வளர்க்க பெரிய அளவில் பராமரிப்பு தேவை இல்லை, இலைகள் கசப்பு தன்மை கொண்டவை என்பதால் கால்நடைகளும் அதிகம் மேயாது.

வறட்சி தாங்கவல்லவை எனவே குறைவான நீரை மரக்கன்று நடும் காலத்தில் வாரம் ஒரு முறை என சுமார் ஆறு மாதங்கள் பாய்ச்சினால் போதும் , வேர் நன்கு ஊன்றியதும் ,மரமே தனக்கான தண்ணீர் தேவையை பார்த்துக்கொள்ளும்.

வேர்கள் ஆழத்தில் மட்டும் அல்லாமல் பக்க வாட்டிலும் வலைப்போல பரவும் தன்மை கொண்டவை என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் ,மண் பாதுகாப்பிற்காகவும் நடப்படும் ஒரு மரம்.

மேலும் வேர் முடிச்சுகள் வளி மண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்துவதால் ஊட்ட சத்து இல்லாத நிலமும் வளமடையும், எனவே மரங்களுக்கு இடையே ஊடு பயிர் செய்தால் நல்ல விளைச்சலும் லாபமும் கிடைக்கும்.

இதனால் இந்திய வேளாண் துறை மற்றும் பயனற்ற நில அபிவிருத்தி கழகம்(National Wasteland Development Board) ஆகியவை நில வளப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பல இடங்களில் புங்கை மரத்தினை நட்டும் வருகிறார்கள்.

நிலப்பரப்பு கையிருப்பு:

அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் பயிரிட தகுதியற்ற ஊட்டச்சத்தில்லாத,வறண்ட ,தரிசு நிலத்தின் அளவு சுமார் 38.4 மில்லியன் ஹெக்டேர் முதல் 187 மில்லியன் ஹெக்டேர் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கணக்கு கூட துல்லியமாக எடுக்கமாட்டாங்க போல. வறுமைக்கோட்டுக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்காங்க கேட்டாலும் சரியான கணக்கு இல்லைனு சொல்லுறவங்க தானே :-))

National Wasteland Development Board இன் கணக்குப்படி 123 மில்லியன் ஹெக்டேர் நிலம் பயனற்றது. எனவே நம் நாட்டில் நிறைய இடம் காலியாக சும்மா கிடக்கிறது என்பது புலனாகிறது.

எனவே பயோ டீசலுக்கு மரம் வளர்க்க இடம் இல்லைனு சொல்ல முடியாது முயற்சி எடுத்து வளர்த்தால் ஏகப்பட்ட அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம், மேலும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

இவ்வளவு பயனற்ற/தரிசு நிலங்களும் இந்தியாவில் 19 மாநிலங்களில் 146 மாவட்டங்களில் பரவி கிடக்கிறது. அதிக பயனற்ற நிலப்பரப்பில் ஆந்திரா முதலிடத்திலும் பின்னர் வரிசையாக குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ,மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் மொத்த தேசிய பயனற்ற நிலப்பரப்பில் 83% நிலம் இருக்கிறது.

தற்போதைய புங்க மர சாகுபடி நிலை:

மத்திய ,மாநில அரசுகள் ஒருங்கிணைந்த்து பயோ டீசலுக்காக புங்கை மரம் வளர்க்க திட்டமிடலாம், இது வரை சிறிய அளவிலே அரசு புங்க மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது,அதுவும் மண் அரிப்பை தடுக்கவும்,சாலையோர நிழல் மரம் அமைக்கவும் மட்டுமே.

பெருமளவில் முறையாக யாரும் புங்க விதைகளை சேகரித்து பயோ டீசல் தயாரிக்க முயலவில்லை. சில தன்னார்வ மற்றும் சுற்று சூழல் அமைப்புகள் மட்டும் சிறிய அளவில் விதைகளை சேகரித்து பயோ டீசல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்தியாவில் பயனற்ற இடங்கள் எல்லாம் அரசின் பொறுப்பில் உள்ளதால் அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் கூட நில குத்தகைக்கு எடுத்து புங்க மரம் பயிரிட முயற்சித்து வருகிறார்கள்.

Himalayan Institute of Yoga Science and Philosophy என்ற தன்னார்வ அமைப்பு இந்தியாவில் 20 மில்லியன் புங்க மரத்தினை 45,000 விவசாயிகள் மூலம் நட்டுள்ளது. மத்திய அரசின் உதவியாக வேலைக்கு உணவு என விவசாயிகளுக்கு 5,000 டன் அரிசி வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடான உகாண்டா, கேமரூனிலும் குத்தகை அடிப்படையில் புங்க மரம் பயிரிட்டுள்ளார்கள்.

பயிரிடும் முறை:

வழக்கம் போல விதைகளினை நாற்றாங்காலில் நட்டு வரும் மரக்கன்றையும் பயன்ப்படுத்தலாம் அல்லது ஒட்டுக்கன்றையும் பயன் படுத்தலாம்.

ஒட்டுக்கன்று:(grafting)

இளம் மரக்கன்றினை எடுத்துக்கொண்டு அதன் மேல் புற தண்டில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு அதில் செங்குத்தாக பிளவினை ஆங்கில V வடிவில் உருவாக்கவும். இப்படி செய்யப்படும் அடிப்பாகத்திற்கு ரூட் ஸ்டாக் (root stock)என்று பெயர்.

பின்னர் ஏற்கனவே நன்கு முற்றிய ,விளைச்சல் தரும் புங்க மரத்தின் சிறு கிளையை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பாகத்தினை உளி/ஆப்பு போல சீவி விடவும்,இந்த மேல் பாகத்திற்கு சியான் (scion)என்று பெயர்.


பின்னர் மேல் பாகத்தினை V வடிவ பிளவில் செறுகி ,இதற்கென விற்கப்ப்படும் துணிப்பட்டை / பாலித்தீன் டேப் கொண்டு சுற்றிக்கட்டி விட வேண்டும்.(பழைய துணிகளையும் கிழித்துப்பயன்ப்படுத்தலாம்)

இப்படி செய்வதன் மூலம் இளமரக்கன்றுக்கு முதிர்ந்த மரக்கன்றின் முதிர்ச்சியும், காய்ப்பு திறனும் கிடைக்கும். எனவே விரைவில் காய்க்க துவங்கும்.

இப்படியான ஒட்டு முறைக்கு "grafting"என்று பெயர், இம்முறையில் தான் ஒட்டு மாங்காய், பலா மரக்கன்று என பல மரக்கன்றுகள் ,பூச்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நடவு:(planting)

தொழு உரம் இட்டு உழுத நிலத்தினை 4 மீட்டர் இடைவெளியில் பாத்திகளாக பிரித்துக்கொள்ளவும் அல்லது சம தரையிலும் அமைக்கலாம்.

எப்படி இருப்பினும், நான்குக்கு நான்கு மீட்டர் என்ற இடைவெளியில் சுமார் இரண்டு அடி ஆழம்,அகலம்,நீளம் என்ற அளவில் பள்ளம் வெட்டிக்கொண்டு வழக்கமான முறையில் 1:3 என தொழு உரம் ,மண்,மணல் கலந்த கலவையினை நிரப்பி மரக்கன்றினை நட வேண்டும்.


spacing:

இடைவெளி: 4 மீ X4 மீ

குழி ஆழம்: 2 X2X2 அடி.

இப்படி அமைத்தால் ஒரு ஏக்கர் பரப்பில் சுமார் 250 மரக்கன்றுகள் நடலாம்.

இடைப்பட்ட பகுதிகளில் ஊடு பயிராக மண்ணின் வளத்திற்கும், நீரின் அளவுக்கும் ஏற்ப எந்த பயிரினையும் சாகுபடி செய்யலாம்.ஊடு பயிராக சீதா,நெல்லி,சப்போட்டா போன்ற பழ மரங்களும் நடலாம்.கிடைக்கும் நீராதாரம் பொறுத்தே.

மரக்கன்று நடும் போது தான் செலவு கொஞ்சம் ஆகும் பின்னர் அதிகம் பராமரிப்பு தேவை இல்லை.

செலவு:(cost of cultivation)

முதல் ஆண்டு:

நிலத்தயாரிப்பு மற்றும் மரக்கன்று நட=7246 ரூ

பராமரிப்பு, பாசனம்=2,400 ரூ

இரண்டாம் ஆண்டு= 1410 ரூ

மூன்றாம் ஆண்டு=1,383 ரூ

மொத்தம்= 12,439 ரூ

முதல் ஆண்டு மட்டுமே பராமரிப்பு ,நீர்ப்பாசனம் என கொஞ்சம் செலவு வைக்கும் பின்னர் வெகு சொற்பமே.

மூன்றாம் ஆண்டு முதல் காய்ப்பு துவங்கிவிடும்,5-6 ஆண்டுகளில் முழு திறனில் காய்க்க துவங்கிடும்.

உற்பத்தி மற்றும் வருமானம்:(economics of cultivation ,yield &income)

ஒரு மரம் ஆரம்பத்தில் குறைவாக காய்க்க துவங்கினாலும் முதிர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப சராசரியாக 90 கி.கி அளவுக்கு விதைகள் கொடுக்கும்.

ஒரு ஏக்கருக்கு 250 மரம் எனில்

250X90=22,500 கிலோ விதைகள் கிடைக்கும்.

இது ஒரு சராசரி அளவு , நிலத்தின் தன்மை, பாசனம் பொறுத்து உற்பத்தி கூடவோ ,குறையவோ செய்யலாம்.எப்படிப்பார்த்தாலும் அதிக செலவில்லாமல் 10,000 கிலோவுக்கு குறையாமல் விதைகள் கிடைக்க வாய்ப்புண்டு.

25-40 % எண்ணை பிழி திறன் உள்ளது ,குறைந்த பட்சம் 25% என வைத்துக்கொண்டாலும் ஒரு கிலோ விதைக்கு கால் லிட்டர் எண்ணை கிடைக்கும்.

எனவே குறைந்த பட்சம் 10,000 கிலோ விதை எனக்கொண்டாலும் 2,500 லிட்டர் எண்ணை ஒரு ஏக்கரில் கிடைக்கும்.

ஒரு லிட்டர் எண்ணை 30 ரூ என வைத்தாலும்
2,500X30=75,000 ரூ

வறண்ட, வளம் இல்லாத நிலத்தில் 75,000 ரூ ஒரு ஏக்கருக்கு வருமானம் கிடைப்பது பெரிய காரியம் அல்லவா.மேலும் ஊடு பயிர் வருமானமும் உள்ளது.மேலும் எண்ணை பிரித்த பின் கிடைக்கும் பிண்ணாக்கு சிறந்த இயற்கை உரம் ஆகும்.

இதில் விதை சேகரிப்பு ஆட்கூலி, எண்ணை ஆட்டும் செலவு சேர்க்கப்படவில்லை. ஆனாலும் வேலை வாய்ப்பு அற்ற சூழலில் குறைவான முதலீட்டில் வருமானம் ஈட்ட நல்ல வழி புங்க மரம் வளர்ப்பு. இந்த விதைகளில் இருந்து எண்ணை எடுத்து பயன்ப்படுத்த அரசு முன்வந்தால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமடையும்.

வீடியோ:


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புங்கமர வளர்ப்பு திட்டம்.


புங்க எண்ணை இயல்பு:(pongamia oil nature)

ஜெட்ரோபா எண்ணைப்போல டிஸ்டில்லேஷன் அல்லது டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்யாமல் அப்படியே புங்க எண்ணையை டீசல் எந்திரங்களில் பயன்ப்படுத்த முடியும் ,சிறிது கரி படியும் என்பதால் 20% வரைக்கும் பெட்ரோலிய டீசலில் கலந்து பயன்ப்படுத்துகிறார்கள்

ஏன் எனில் இதன் இயல்பிற்கும் ,பெட்ரோலிய டீசல் இயல்பிற்கும் மிகச்சிறிய அளவிலே வித்தியாசம் உள்ளது.

புங்க எண்ணை இயல்பு:(அடைப்புக்குள் டீசலின் இயல்பு)

விஸ்காசிட்டி= 5.51(3.60)

அடர்த்தி =0.917(0.841)

பிளாஷ் பாயிண்ட் வெப்பம்= 110(80)

டிஸ்டில்லேஷன் வெப்பம்= 285-295(350)

கந்தக உமிழ்வு= 0.13-0.16(1.0)

சீட்டேன் மதிப்பு=51(47.8)

மேற்கண்ட ஒப்பீடுகளில் இருந்து அறிய பெறுவது என்னவெனில்

டீசலை விட விஸ்கோசிட்டி, அடர்த்தி, ஃப்ளாஷ் பாயிண்ட் சற்றே கூடுதலாக இருப்பது ஒரு பின்னடைவு எனவே தனியாக பயன்ப்படுத்துவதை விட டீசலுடன் கலந்து பயன்ப்படுத்துவது சிறப்பான பலனை தரும்.

எப்படி எனில் இதன் சீட்டேன் மதிப்பு(ஆக்டேன் மதிப்பு போன்றது)அதிகமாகவும், கந்த உமிழ்வு குறைவாகவும் உள்ளது .

கந்தகம் சூழலை மாசுப்படுத்தும் என்பதாலேயே தற்போது பிரிமியம் டீசலில் கந்தமில்லாத வகை விற்கிறார்கள்.

மேலும் சீட்டேன் (cetene)மதிப்பு என்பது எஞ்சின் சிலிண்டரில் கம்ப்ரெஷன் ரேஷியோ கணக்கின் படி எஞ்சினை வடிவமைக்க உதவுவது. கம்ப்ரஷன் ரேஷியோ அதிகம் இருந்தால் அதிக திறனுள்ள எஞ்சினை வடிவமைக்கலாம். அதிக கம்ப்ரஷன் ரேஷியோ உள்ள எஞ்சினில் அதிக ஆக்டேன் மதிப்புள்ள எரிப்பொருளை பயன்ப்படுத்த வேண்டும்.

டீசலை விட ,புங்க எண்ணையின் சீட்டேன் மதிப்பு கூடுதலாக இருப்பதால் கலந்து பயன்ப்படுத்தும் போது அதிக ஆற்றல் கிடைக்கும்.

சீட்டேன் மதிப்பு என்பதும் ஆக்டேன்(octane) மதிப்பு என்பதும் ஒன்று தான்.இந்தியாவில் தான் ஆக்டேன் மதிப்பை எல்லாம் எண்ணை நிறுவனங்கள் வெளியில் சொல்வதில்லை. வெளிநாட்டில் ஆக்டேன் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல் பங்கில் கலர் கோட் வைத்திருப்பர்கள்,அதிக ஆக்டேன் மதிப்புள்ள எரிபொருள் அதிக விலை. அதிக வேகமும் ,திறனும் உள்ள வாகனத்திற்கு அதிக ஆக்டேன் எரிப்பொருளை தான் நிரப்ப வேண்டும், குறைவான ஆக்டேன் எரிபொருளை நிரப்பினால் எஞ்சின் சேதமடையும்.

இந்தியாவில் ஆக்டேன் எண்ணை வெளியில் சொல்லாமல் பிரிமியம், ஸ்பீட் என்ற பெயரில் கூடுதல் விலையில் விற்கிறார்கள் ஆனால் அவற்றின் ஆக்டேன் எண்ணும் மிக குறைவே.

புங்கை மரம் சாகுபடி பலன்கள்:

#தரிசு நிலப்பயன்ப்படு உயரும், நிலம் வளமடையும்.

#மண் அரிப்பு தடுக்கப்படும்.

#ஊரக வேலை வாய்ப்பு & பொருளாதாரம் பெருகும்.

#விதைகள் மட்டுமே சேகரித்துப் பயன்ப்படுத்தப்படுவதால் மரங்களின் அடர்த்தி அதிகமாகும் ,அதிக கரியமில வாயு(co2) கிரகிக்கப்பட்டு ,புவி வெப்பமாதல் குறையும்.

#பெரிய அளவில் புங்க மரம் பயிரிடும் போது அதனை வைத்து கார்பன் கிரெடிட் டிரேடிங்க் மூலமும் வருமானம் ஈட்டலாம்.

# சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத பசுமை எரிப்பொருள் கிடைக்கும்.

#அன்னிய செலவாணி சேமிப்பாகும்.


புங்க எண்ணையின் மகத்துவம் அறிந்து அமெரிக்க எரிசக்தி துறை புங்க விதைகளை இறக்குமதி செய்து ஆய்வு செய்துள்ளது, இப்போது அமெரிக்காவிலும் பயிரிட ஆலோசனைகள், முன்னோடி(pilot project) திட்டங்கள் போட்டுள்ளதாக செய்தி.

எனவே மெத்தனமாக செயல்படும் நமது அரசு எந்திரம் சோம்பல் களைந்து புங்க மரம் வளர்ப்பினை ஊக்குவித்தாலே பல தன்னார்வ அமைப்புகள், மகளீர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் புங்க மர வளர்ப்பில் ஈடுபடுவார்கள். இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும். இப்பொழுதும் புங்க மரம் நடும் திட்டம் இருக்கு அது பெயரளவிலே எனவே இதற்கான முயற்சியை முழு வீச்சில் மத்திய ,மாநில அரசுகள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம், செய்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி?

-----------------------------------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

விக்கி ,கூகிள், agbiotek., icrisat(hydrabad),யூடுயூப், இணைய தளங்கள்,நன்றி!

*****

20 comments:

முத்தரசு said...

வணக்கம் வவ்வால்

பதிவு பெருசா இருந்தாலும் விஷயம் இருக்கு - பதிவை பொறுமையா படிக்கணும் போல - பகிர்வுக்கும் விரிவான விளக்கத்துக்கும் நன்றி

சார்வாகன் said...

வணக்கம் சகோ
அருமையான தகவகள்.பார்க்கப்போனால் இந்த எரிபொருள் பிரச்சினையை எளிதில் சுய சார்பாகவே நம் நாட்டில் தீர்க்க இயலும் என தோன்றுகிறது.


ஆனாலும் கையில் வெண்ணெய் வைட்துக் கொண்டு நெய்க்கு அலையும் கோமாளிகளால் ஆளப்படுவதால் வேறு வழியே இலாமல் போனால் மட்டுமே இம்ம்முறை முயற்சிக்கப்படலாம்.

எப்போது செய்வார்களோ!

அப்படி சூழல் வந்தால் வெள்ளைக்காரன் காப்புரிமை பெற்றாலும் வியப்பு ஒன்றுமில்லை.அதிலும் ஏதேனும் கட்டுப்பாடு,உரிமம் கொண்டு வந்து விலை நிர்ணயத்தை சிக்கல் ஆக்குவார்கள்

இயற்கை எரிபொருள் உள்ளிட்ட பல விடயங்களில் அற்புதமாக விளக்கம் அளிக்கிறீர்கள்.

தொடருட்டும் பணி

நன்றி

வவ்வால் said...

மனசாட்சி,

வாங்க,வணக்கம்,நன்றி!

ஒரு 100 பக்கத்துக்கும் குறையாத தகவல்களை சுருக்கோ சுருக்குனு சுருக்கியும் இந்த அளவுக்கு தான் சுருக்க முடிஞ்சது ,அதுக்கே பெருசா இருக்குன்னு ஓடுறிங்களே, கால்ப்பக்கம்,அறைப்பக்கம்னு இதை ஒரு நாளைஞ்சு பதிவா இழுத்து இருக்கணும் போல :-))

-------

சகோ.சார்வாகன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

முயன்றால் முழுக்க சுய சார்புடன் செயல்பட முடியவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இப்போதைய இறக்குமதி எரிப்பொருளின் அளவை பாதியாக குறைக்க முடியும்.

இதனால் அந்நிய செலவாணியும் மிச்சம், கிராம மக்களுக்கு வேலையும் கிடைக்கும்.

மிகச்சிறிய பிஜி தீவில் ஒரு லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு ,எண்ணையை ஏற்றுமதியே செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது மிகப்பெரிய நாடு ,பல லட்சம்ம் ஹெக்டேர் தரிசிசு நிலம் கிடக்கிறது அதில் வேறு பயிரும் செய்ய முடியாது என்னும் போது செய்யாமல் தூங்கும் நம்மவர்களை என்ன செய்ய?

நம்ம ஆட்களுக்கு எல்லாம் ரெடிமேடாக கிடைக்கணும், சில ஆண்டுகள் வேலை செய்து கிடைக்கும் எனில் செய்ய மாட்டார்கள்.

நமக்கு பின்னாடி தெரிந்துக்கொண்டு அமெரிக்கா நம்மை முந்தும் பயோ டீசலில் என நினைக்கிறேன். இறக்கு மதி செய்து செயல்ப்படுத்தும் பைலட் திட்டமே 300 ஹெக்டேரில் தான் செய்கிறார்கள். அந்த மரக்கன்று நடவு படம் தான் பதிவில் போட்டுள்ளேன்.

அமெரிக்க அரசு பயோடீசல் ஆய்வுகளுக்கு ஆண்டுக்கு இரண்டு பில்லியன் டாலர் மாநியம் கொடுக்கிறது.

நம்மால் முடிந்த ஒரு சிறிய முயற்சி படித்ததை ,வலைப்பதிவில் பதிவு செய்து வைக்கிறோம். உற்சாகமூட்டியதற்கு நன்றி! ச்சியர்ஸ்:-))

குறும்பன் said...

அமெரிக்காகாரன் சொன்னா (சொல்லுவதை மட்டும்) தான் நாங்க கேட்போம். எப்படி பெட்ரோலிய இறக்குமதிய குறைக்கலாமுன்னு அவன் ஆராய்ச்சிக்கு கண்டபடி செலவு செய்யறான். அமெரிக்காவில் மக்காசோளம் விளைச்சல் அதிகம். மக்காசோளத்திலிருந்து பயோ-எரிபொருள் எடுத்து நிறைய இடங்களில் பெட்ரோலுடன் 10% கலந்து தான் விக்கறான். நாம்மாள முடிஞ்சது பெட்ரோல் விலையை ஏத்தறதுதான். என்ன செய்ய, ம்கூம்...

Paleo God said...

நிழலுக்காக வீட்டில் வளர்க்கிறேன் :))

ராஜ நடராஜன் said...

பதிவுகளின் கடின உழைப்பு தெரிகிறது.

இப்ப வேற சொல்ல தெரியவில்லை.

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க,வணக்கம்ம்,நன்றி!

அமெரிக்க ஜீன்ஸ், பீட்சா,கோக் என அனுபவிக்க மட்டுமே , மற்ற நல்ல விஷயங்களுக்கு அல்லனு தெளிவா இருக்கோம்ல :-))

எத்தனால் கலப்பது, தாவர எண்ணை கலப்பது எல்லாம் முதல் பாகத்தில் சொல்லி இருக்கேன். வரும் பதிவுகளில் பயோமாஸ், எத்தனால் இன்ன பிற மாற்று எரிப்பொருட்களை விரிவா சொல்லலாம்னு இருக்கேன். நேரம் கிடைப்பதை பொறுத்து.

----
ஷங்கர்,

வாங்க,வணக்கம்,நன்றி!

நிழலுக்காக ஆவது வளர்க்கிறிங்களே, அதுவே பாராட்டப்பட வேண்டிய ஒன்று.பெரும்பாலான பள்ளி,கல்லூரிகளிலும் நிழலுக்காக வளர்ப்பார்கள். ஆனால் எரிப்பொருளுக்கு என மொத்தமாக பெரிதாக வளர்க்க ஆரம்பிக்கணும், மேலும் இப்படி தனியாக வளர்க்கப்படும் மரங்களில் இருந்தும் விதை சேகரிப்பு செய்ய முயற்சிக்கலாம்.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

இப்போ தான் பார்க்கிறேன் குறுக்க உங்க வண்டி பாய்ஞ்சு இருக்கு.

கடின உழைப்பு தெரியுதா ,அப்போ உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுங்க :-))

Anonymous said...

நடு நடுல மானே பொன் மானேன்னு போட்டா எல்லாருக்கும் படிக்க பிடிக்கும்...-:)

இதையும் படிச்சு பாருங்க வவ்வால்...

http://www.sciencedirect.com/science/article/pii/S0960852405000192

தி.தமிழ் இளங்கோ said...

புங்க எண்ணெய் எடுத்து புண்ணுக்குத் தடவ மட்டுமே நம் நாட்டு பெட்ரோல் முதலாளிகள் அரசாங்கத்தை அனுமதிப்பார்கள். மலிவு விலை சைனா சைக்கிள் வந்தால் காசு பார்க்க முடியாது என்று தடுத்தவர்கள் நமது முதலாளிகள். மாற்று எரிபொருளை அனுமதிப்பார்களா?உங்கள் புங்க எண்ணெய் பயோடீசல் கட்டுரை மற்றும் காணொளி அருமை.

சிவானந்தம் said...

நான் மட்டும் பணக்காரனாக இருந்தால், இதை மேலும் ஆராய்ந்து (கிராஸ் செக் செய்வது நல்லதுதானே?), அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்தி இருப்பேன்.

இப்போதைக்கு நல்ல பதிவு போட்ட உங்களுக்கு பாராட்டு மட்டும்.

ராஜ நடராஜன் said...

ஊதியமா!பாண்டிசேரில கிடைக்காததா!ஊருக்கு வரும் போது ட்யூட்டி ஃப்ரீல கறுப்பு அட்டை ஏதாவது மாட்டுதான்னு பார்க்கிறேன்:)

இப்படி ஏதாவது எடுத்துக்கொடுத்தாத்தான் எனக்கு பின்னூட்டம் பத்திக்குமே!மக்கா சோளத்தை இங்கே மாலில் வேகவைத்து எலுமிச்சை ரசம்,நம்ம ஊரு மொளகாப் பொடி,சீரகப்பொடி,குருமிளகெல்லாம் தூவி 75 ரூபாயை புடிங்கிறாங்க.இதுவே முன்னாடி காஞ்சு போய் கிடந்த பம்பாய் அந்தேரியில் நாலஞ்சு குச்சியை வச்சு தீ மூட்டி வறுத்து கொடுத்தாங்க.முந்தா நாள் எப்படி தயாரிக்கிறார்கள் என்ற தலைப்பில் பேன்ட் எய்ட்,நாப்கின்,கார்,விஸ்கின்னு நிறைய சொன்னதில் நம்ம கண்ணை கவர்ந்தது போதை தண்ணிதான். விஸ்கின்னு மக்கா சோளத்தை ஊற வச்சு என்னமோ மொலாசிஸ் சேர்த்து கார்பன்டை ஆக்ஸைடு நீக்கி கொஞ்சம் சாயா கலர் சேர்த்து பாட்டிலுக்குள் அடைச்சா விஸ்கியாம்.அமெரிக்கா விவசாயம்,உற்பத்தின்னு எதை செய்தாலும் பெரும் கொள்ளளவு தயாரிப்பை செய்கிறது.ஒரு வியாபாரத்தின் தேவை,முதலீடு,உற்பத்தி கருவிகள்,உற்பத்தி திறன்,சந்தைப்படுத்துதல் என அனைத்துமே மொத்த வியாப்ரார சிந்தனையே.

புங்கை மரமல்ல புளியமரதைக் கூட நம்மால் சந்தைப்படுத்த இயலவில்லை.

வவ்வால் said...

ரெவரி,

வாங்க,நன்றி!

மானு ,மயிலை எல்லாம் ஒயிலா படம் போட்டேன் ராச நடரசரு தான் செல்லாது செல்லாதுனு சொல்லிட்டார் , இன்னும் நிறைய சிவப்பு சிங்காரி,வயலட் வள்ளி படம்லாம் கீது போட்டு குஜாலா பதிவு போடலாம்னு பார்த்தா கலாச்சாரம் பேசுராங்க :-))

சயின்ஸ் டைரக்ட் தளத்தில் எல்லாம் அப்ஸ்ராக்ட் தான் காட்டும், அதில் எதுவும் முழுசா படிக்க முடியாது, இன்னும் பல தளங்களில் தகவல்கள் கிடைக்குது என்ன ஒன்று சரியான தளத்தில் கால் வைக்கும் ஒரு நூறு உடான்ஸ் தளத்தையாவது தாண்டிக்குதிக்கணும் :-))

----
தி.த.இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

சரியா சொன்னீங்க, திட்டமிட்டே இப்படிலாம் அரசும், பெரு முதலாளிகளும் செய்றாங்க, எண்ணை இறக்குமதி செய்வதிலும் கமிஷண் உண்டு, மார்க்கெட் விலைக்கு வாங்கினாலும் இன்னாரிடம் வாங்க வேண்டும் என முடிவு செய்து வாங்குவார்கள், விற்பவன் பல ஆயிரம் கோடி வியாபரத்தில் சில கோடி கமிஷண் ஆக கொடுப்பான்.

இன்னும் பல பல வகையில் எண்ணை வியாபாரத்தில் பணம் அடிக்க முடியும், உள்நாட்டு கூட்டுறவு முயற்சியில் என்ன கிடைக்கும்? எனவே தான் அன்னிய செலவாணி போனாலும் பரவாயில்லை என இறக்குமதி செய்கிறார்கள்.

--------
சிவானந்தம்,

வாங்க ,நன்றி!

இதுலாம் வேலைக்கு ஆகாது, பெட்ரோல் தான் சரினு சொல்வீங்க பார்த்தேன் , ஆய்வு செய்வேன் சொல்றிங்க :-))

பல இடங்களில் புங்கை எண்ணை எடுத்து டீசல் பம்செட் ,டிராக்டர் என இயக்குகிறார்கள், எண்ணைக்கு எரிபொருள் திறன் இருப்பது உறுதியானதால் தான் ஆஸ்திரேலியா, அமெரிக்கா எல்லாம் மாஸ் புரொடக்‌ஷன் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இது தரிசு நிலத்தில் வானம் பார்த்த பூமியில் செய்யப்படுவது என்பதால் ,எவ்வளவு எண்ணைக்கிடைத்தாலும் லாபம் தானே.

100 நாள் வேலை திட்டத்தில் மண் அள்ளிக்கொட்ட செலவு செய்வதை இப்படி செய்து மக்களுக்கு வேலையும் கொடுத்தாற் போல ஆச்சு, எண்ணையும் எடுத்தாற்போல ஆச்சுனு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம், தரிசு நிலம் கையில் வைத்திருக்கும் அரசு தான் முடிவு எடுக்கணும்!

பாராட்டுக்கு நன்றி!

வவ்வால் said...

ராஜ்,

வாங்க ,நன்றி!
மீண்டும் சைக்கிள் கேப்பில முன்னாடி வரிங்க :-))

பாண்டில கிடைக்கிறது எல்லாம் பியூர் மொலாசஸ் சரக்கு.

நீங்க சொன்ன மக்கா சோளத்தினை எல்லாம் இங்கே பயன்ப்படுத்துவதில்லை,அதனால் தான் வெளிநாட்டு சரக்கு இங்கே விலை கூட.

அடுத்து எத்தனால் பதிவில் எல்லாம் புட்டு புட்டு வைக்கலாம் என இருக்கிறேன். இந்தியாவில் எத்தனால் எரிப்பொருளாக கொண்டு வர தடையாக இருப்பவர்கள் பெரும் சாராய ஆலை அதிபர்களே.மொலாசஸ் விற்க ,பயன்ப்படுத்த லைசென்ஸ் உண்டு, அதனை இப்போது மல்லையாக்கள் மட்டும் வைத்திருக்கிறார்கள், எரிபொருளுக்கு மொலாசஸ் லைசென்ஸ் கொடுத்து விற்றால் விலை ஏறிவிடும் என முட்டுக்கட்டை கொடுக்கிறார்கள்.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டம் அடையவும் இது ஒரு காரணம்.மற்றவை பதிவில் விவரமாக.

ஊதியமாக பின்னூட்டம் போட்டா போதாதா :-))

ராஜ நடராஜன் said...

நானெங்கே மானு மயிலையெல்லாம் பார்த்தேன்!கடிகார காரிகைக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லைன்னுதானே சொன்னேன்!மேலும் உங்க கடைக்கு போஸ்டர் பார்க்கவா கூட்டம் கூடுது?

அசினோ பிசினோ... இதுதான் சிவப்பு சிங்காரின்னு ஏற்கனவே காட்டியாச்சி.எவ அவ வயலட்டு?

உங்களுக்கு தகவல் சேகரிக்கவே நூறு தளம் குதிக்க வேண்டியிருக்குது.எனக்கு ஒரு படம் நெட்பிளிக்ஸ்ல பார்க்கவே நூறு தலைப்பு,நடிகர்,நடிகை யாரு,இயக்குநர் யாரு,கதை சுருக்கம் என்னன்னு தேடவேண்டியதாயிருக்குது.

புங்கை மரம் மாதிரி ஆமணக்கு மரம் கூட செலவு வைக்காம வளருமே!குறைந்த பட்சம் பசங்க காத்தாடி விடவாவது பயன்படுமே!ஏன் அதிகம் காணப்படுவதில்லை!

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

ஏதோ ஒன்றிரண்டு போஸ்டர் ஒட்டி நானும் கலைச்சேவை ஆற்றலாம்னு பார்த்தா விடமாட்டேன்கிறிங்க, இப்போ எங்கே பார்த்தேன்னு கேளுங்க,போஸ்டர் பார்க்க என்றே ஒர் கூட்டம் இருக்குன்னு பிரபலப்பதிவர்கள் சொல்றதை கேட்டதில்லையா?

ஆமணக்கு காணோமா ,தேடிப்பாருங்க ? உங்க வீட்டுக்கு எடுத்து வந்து காட்டுவாங்களா?

இந்தியா தான் ஆமணக்கு உற்பத்தில் உலகில் முதலிடம்.ஆமணக்கு எண்ணைக்கு மேலும் நிறைய பாயன்பாடுகள் இருக்கு,அதுக்கே பத்தலை. எனவே தான் ஜெட்ரோபா பயிரிட சொன்னார்கள். இதுவும் ஆமணக்கு குடும்பம் தான்.தமிழில் பேயாமணக்கு என்று பெயர்.

ஒரு மரத்துக்கு என கிடைக்கும் விதை உற்பத்தி குறைவா இருக்கு. மேலும் சுத்திகரிக்கணும். புங்க எண்ணையை அப்படியேவும் கலக்கலாம், மேம்பட்ட திறன் வேண்டும் என்றால் சுத்திகரித்தும் பயன்படுத்தலாம்.

சிலர் பதிவையே ஆறுவரில எழுதி லின்க் போட்டே ஓட்டுறாங்க ,நாம என்னடானா பின்னூட்டதை கூட ஆறு வரில முடிக்க முடியலை :-))

வின்சென்ட். said...

சிறப்பான பதிவு. மிக தெளிவாக உள்ளது. இதைப் பற்றி எழுத வேண்டுமென எண்ணிய போது பதிவாக பார்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆஸ்திரேலிய வளர்ப்பு, மிக சிறந்த தொலைநோக்குப் பார்வை.

வவ்வால் said...

வின்சென்ட்,

வாங்க,வணக்கம்,நன்றி!

உங்களைப்போன்ற இயற்கை ஆர்வளர் ஒருவரே சிறப்பு என சொல்வது மகிழ்வாக உள்ளது.நம் நாட்டிலும் பெரிய அளவில் எடுத்து செய்ய வேண்டும் ,பல நன்மைகள் கிடைக்கும்.

Omar said...

அமெரிக்காகாரன் சொன்னா (சொல்லுவதை மட்டும்) தான் நாங்க கேட்போம். எப்படி பெட்ரோலிய இறக்குமதிய குறைக்கலாமுன்னு அவன் ஆராய்ச்சிக்கு கண்டபடி செலவு செய்யறான். அமெரிக்காவில் மக்காசோளம் விளைச்சல் அதிகம். மக்காசோளத்திலிருந்து பயோ-எரிபொருள் எடுத்து நிறைய இடங்களில் பெட்ரோலுடன் 10% கலந்து தான் விக்கறான். நாம்மாள முடிஞ்சது பெட்ரோல் விலையை ஏத்தறதுதான். என்ன செய்ய, ம்கூம்...

தேட்டம் said...

sago, arumaiyana padhivu.....