Sunday, July 01, 2012

மருதநாயகம் பிள்ளை aka khan sahib "yusuf khan"-1

(ஹி..ஹி ராஜா,ராணி படம் ஒன்னும் கிடைக்கலை...)


முன்னோட்டம்:

மருதநாயகம் என்கிற கான்சாகிப் முகம்மது யூசப் கான் , இந்திய வரலாற்றில் ஹைதர் அலிக்கு அடுத்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் சிரமம் கொடுத்த வீரன் , முன்னால் நண்பன் என ஆங்கில அதிகாரிகளாலும், வரலாற்று ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டுள்ள ஒரு வீரன். அப்படிப்பட்டவனது அக்கால ஒரு ஓவியம் கூட கிடையாது என சொல்கிறார்கள், இப்போதுள்ள ஓவியங்கள் எல்லாம் பிற்காலத்தில் வறையப்பட்டவையே.ஆங்கிலேயருக்கு நண்பனாக இருந்து எதிரியாக மாறி பின்னர் அவரது 39 ஆம் வயதிலேயே துரோகப்பட்டம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டி எறியப்பட்ட சோக வரலாறு உடையவன்.

இளமைக்காலம்:

இனிமேல் யூசப் கான் என்றே அழைப்போம், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள பனையூரில் சைவ வேளாள குடும்பத்தில் கி.பி 1725 இல் பிறந்ததாக சொல்லப்படுகிறது. சரியான ஆண்டு தெரியாது, பெற்றோர் பெயரும் தெரியாது, அவரது இளமைக்காலம் பற்றிய விவரம் எதுவுமில்லை என வ்ரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இளம் வயதில் படிக்காமல் சண்டியர் தனம் செய்துக்கொண்டு முரட்டுத்தனமாக ஊர் சுற்றியதால் ஊரார் பொது தண்டனைக்கொடுத்து அதனால் ஊரை விட்டு ஓடியதாகவும், அவரே கோபித்துக்கொண்டு புதுவைக்கு ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கு தான் இஸ்லாம் மதத்தினை தழுவி " முகமது யூசப் கான்" எனப்பெயர் மாற்றிக்கொண்டார்.அப்போது மாஷா (அ) மெர்சியா என்ற போர்த்துக்கீசிய-இந்திய பெண்ணை மணந்துக்கொண்டார்.

புதுவையில் ,படகு ஓட்டுதல், தையல் தொழில், சித்த மருத்துவர் என எண்ணம் போல வேலை செய்து காலம் ஓட்டியிருக்கிறார், பின்னர் புதுவையின் அப்போதைய கவர்னர் மான்சியே ஜாக்கஸ் லா என்பவர் வீட்டில் பணியாளராக சேர்ந்து சில காலம்(3 ஆண்டுகள்) பணிப்புரிந்துள்ளார்.

யூசுப் கான் புதுவையில் வேலை செய்துக்கொண்டிருக்கட்டும், அதற்கிடையே தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் அப்போது நிலவிய அரசியல் ,பகைமைகள், போட்டிகள், இவற்றினை வைத்து வெள்ளையைர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததை எல்லாம் சுருக்கமாக பார்க்கலாம். அப்போது தான் கான் சாகிப் எப்படி அரசியல் மற்றும் ஆட்சியில் முன்னேறி ஒரு வீரனாக பரிணாமம் அடைந்து , வீரனாகவே சதியால் வீழ்ந்தான் என்பது புலப்படும்.

தென்னிந்திய ஆட்சி சூழல்.
(எஞ்சியுள்ள கோட்டையின் பகுதி)

மதுரை நாயக்கர்களில் கடைசியாக ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மறைவுக்கு ,பின் அவரது இளம் விதவை மனைவி "ராணி மீனாக்‌ஷி" வாரிசு இல்லாமையால் தத்து எடுத்த புத்திரன் சார்பாக ஆள்வதற்கு முன் வந்தார்.அவருக்கு போட்டியாக தத்து புத்திரனின் தந்தை "வங்காரு(பங்காரு) திருமலை நாயக்கர் அரசாட்சி உரிமைக்கோரி சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

மதுரை நாயக்கர்களுக்கு கீழ் 32 பாளையங்கள் இருந்தன அவர்களிடையே மறவர் பாளையம், தெலுகு நாயக்கர் பாளையம் என பிரிவினையும் ,சண்டையும் காலம் காலமாக ஓடிக்கொண்டிருந்தது.

மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானம் திருநெல்வேலிக்குட்பட்ட களக்காட்டிற்கு உரிமை கோரி ஒரு சண்டையிட்டு வந்தது.

எனவே தென் தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையும் சண்டையும் வழக்கமான ஒன்றாக இருந்த காலம் அது.

அப்போதைய காலக்கட்டத்தில் மதுரை நாயக்கர்கள் ,ஆர்காட் நாவாப்பிற்கும், நவாப் ஹைதராபாத் நிஜாமுக்கும், நிஜாம் தில்லி சுல்தானுக்கும் வரி செலுத்தக்கட்டுப்பட்டவர்கள்.

அப்போதைய ஆட்சியாளர்கள்,மற்றும் உறவின் முறைகள்:

ஆர்காட் நாவப்: முகம்மது அன்வருதீன் அலிகான், ,அவர் மகன்கள் முகமது அலிகான் வாலாஜா, மாபூஸ் கான்,அப்துல் ரஹீம் ஆகியோர்.


கர்நாடிக் நவாப் ஆக தோஸ்த் அலிகான்,அவரது மகன் சப்தர் அலிகான்,மருமகன் சந்தா சாகிப் ,ஆர்காட் நவாப்பிற்கு கீழ் ஆட்சியில் இருந்தார்.

சந்தா சாஹிப் ,அவரது மகன் ரசா அலிகான்,

(மேற்கண்ட பெயர்கள் பெயர்கள் அடிக்கடி புழங்கும் என்பதால் பட்டியலிட்டுள்ளேன்)

டெல்லி சுல்தான் வலுவிழந்ததால் ஹைதராபாத் நிஜாம் "நிஜாம் உல் முல்க்" தன்னாட்சிப்பெற்றவராக செயல்ப்பட ஆரம்பித்தார் ,அதே போல ஆர்காட் நவாப்பும் தன்னாட்சிப்பெற்றவர்களாக செயல்பட்டார். ஆர்காட் நவாப் போலவே கர்நாடிக் நவாப் என மைசூர் மையமாக கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்கள்.

இந்த உறவினர்களான இரண்டு நவாப்புகளுக்கிடையேயும் பகை உண்டு ஆனால் நேரடியாக மோதாமல் ,காலத்திற்கு காத்திருந்தார்கள், இவர்கள் இருவரையும் அடக்க நிஜாம் காலம் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கிழக்கிந்திய கம்பெனி இறங்கியிருந்த காலம் அது.

இப்படியான குழப்பமான தென்னிந்திய அரசியல் சூழலில் , கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு அஸ்திவாரத்தினை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்தவர் இராபர்ட் கிளைவ், அவரின் அப்போதைய வெற்றியில் பெரும் பங்கு வகித்தது வேறு யாரும் அல்ல கான் சாகிப் யூசப் கானே ஆகும்.ஆனால் வரலாற்றில் இராபட் கிளைவிற்கு கிடைத்த புகழும் பெருமையும் கான்சாகிப்பிற்கு கிடைத்ததா என்றால் இல்லை எனலாம். வெகு சில நூல்களும் ஆவணங்களுமே கான் சாகிப்பினைப்பற்றி அறிய கிடைக்கிறது.

கான் சாகிப்பின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பின்னர் காணலாம்.

தொடரும்.

------
பின் குறிப்பு:

கீழ்கண்ட நூல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்நூல்களை தரவிறக்கம் செய்ய கிடைக்கவில்லை, ஆனால் கூகிள் புக் போன்றவற்றில் படிக்கலாம். History of Tinnevelly by R.Caldwell நூலினை பதிவில் பிடிஎப் ஆக இணைத்துள்ளேன் ,பொறுமை உள்ளவர்கள் படித்துப்பார்க்கலாம் :-))

#History of Tinnevelly by R.Caldwell (Bishop Robert Caldwell)

#Yusuf Khan: the rebel commandant By Samuel Charles Hill

#கான் சாகிப் சண்டை- நா.வானமாமலை, வெளியீடு மதுரைக்காமராஜர் பல்கலை.

#தகவல் மற்றும் படங்கள், கூகிள்,மற்றும் கூகிள் புக்,நன்றி!
------------------------
History of Tinnevelly by R.Caldwell :


-------

-----------
பிற்சேர்க்கை:-

எனது சில சரித்திர (தரித்திரம்?)பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பினை ,இணைத்துள்ளேன், ஆர்வமுள்ளவர்கள் படித்து பாருங்கள், ஆனால் அங்கே போய் பின்னூட்டம் போட்டு என்னையை அலையவிடாதிங்க ராசா...எதா இருந்தாலும் இங்கணக்குள்ள பேசித்தீர்த்துப்போம் :-))

# செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!

*****

15 comments:

கோவை நேரம் said...

வணக்கமுங்க...இதை தானே..நம்ம உலகநாயகன் படமா எடுக்க முயற்சி செஞ்சாரு,,?

சார்வாகன் said...
This comment has been removed by the author.
சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல முயற்சி.வரலாற்று நிகழ்வுகள் என்பதால் கொஞ்சம் வருடம்[ நமக்கு மிகவும் பிடித்த] அடைப்புக் குறிக்குள் இடுமாறு ஒரு வேண்டுகோள்.

வரலாற்றில் நல்லவன்,கெட்டவன் என்பதெல்லம் கிடையாது. வெற்றி பெற்ற‌வனால் எழுதப்படும் போது அவன் சார்பு நியாயங்களையே எழுதுவார்கள்.

இந்த மருதநாயகமும் வெள்ளையரின் படைத் தலைவனாக இருந்து,அரசனாகி பிறகு அவர்களுக்கு கட்டுப்பட மறுத்த போது அழிக்கப்பட்டவன். இது போன்ற நிகழ்வுகள் இபோதும் பார்க்க இயலும்.ஆதிக்க சக்திகளின் கட்டுபாட்டில் இருந்து விடுபட்டு தனிக் குடித்தனம் போக முயன்றால் நாயகன் வில்லன் ஆக்கப் பட்டு தீர்த்துக் கட்டப் படுவான்.இதுவே உலக நியதி!!!!!!!!!

ஒரு எ.கா

ஒசாமா கூட சோவியத் இரஷ்யாவை எதிர்த்த போது நாயகன்,பிறகு அவனே வில்லன்.கதை முடிந்தது.

அப்புறம் கால்ட்வெல் திராவிட இயக்கத்தின் கொள்கைக்கே[இதுவே கொள்ளையாக பரிணாம வளர்ச்சி அடைந்தது வேறு கதை!!!!!!] அடி எடுத்துக் கொடுத்தவர்.தொடருங்கள்.

நன்றி

naren said...

தமிழ்நாட்டின் சரித்திரம், பொதுபுத்தி??!! வகையிலும் பிரபலமாகாதலால், இந்த பதிவை போன்ற எளிமையான, சுவராஸ்யமான சரித்திரங்கள் தேவைதான். தொடருங்கள்....

தமிழனின் ஆகச்சிறந்த இலக்கியவாதியான, க்ரைம் டெரர் தலைவர் ராஜேஸ்குமார் பாணியில் எழுதினால், மண்டையில் ஏறுவதற்கு இன்னும் நன்றாக இருக்கும்.

ஆமா, இதில் ஏதும் உள்குத்து கிடையாதுல்லே. நம்ம லோகநாயகர் கமலிடம் தூங்கி கிடக்கும் மருதநாயகம் மிருகத்தை தட்டி எழுப்பி அதனால் ஒரு நல்ல சினிமா தயாரிப்பாளரை அதாள பாதாள் தள்ளும் குரூர எண்ணம் இந்த பதிவுக்கி கிடையாது என நினைக்கிறேன்.

Brave Heart படம் பார்த்தவுடன், அதை போல ஒரு படம் எடுக்க நினைத்து, லோக நாயகருக்கு கிடைத்த சரக்குதான் இந்த மருதநாயகம்....

மருதநாயகம் mel gibson எனற பிம்பத்தை பெறுவதிலிருந்து தப்பித்தோமட சாமியோவ்...

வவ்வால் said...

கோவை நேரம் ஜீவா,

வணக்கமுங்க, நன்றிங்க,

ஆமாம் ,அதே மருதநாயகர் தான். ஏன் படம் நின்றது என்பதற்கு பதிவின் தலைப்பில் பதில் ஒளிந்து இருக்கு :-))

பொதுவா பின்னர் சொல்கிறேன்.
-------

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

தேவையான இடங்களில் நான் ஆண்டுகளை குறிப்பிடவே செய்வேன்,கவலை வேண்டாம். ஆனால் யூசப் கான் வரலாற்றில் பல தெளிவில்லாமல் இருக்கு, கம்பெனியாருடன் சேர்ந்த பிறகே ஆண்டுகளுடன் தெளிவான குறிப்புகள் இருக்கு. மற்றதெல்லாம் தோராயமான காலக்கணக்குகளே, அதுவும் கால்டு வெல்,ஹில் போன்றவர்களின் நூலே உலக அளவில் நம்பதகுந்த யூசுப் கான் வரலாற்று நூல்கள், அதன் அடிப்படையில் சுமார் 7-8 ஆண்டுகளுக்கே தேதி வாரியாக வரலாறு இருக்கிறது. கால்டு வெல் டைரி போல மதராசில் இருந்து கிளம்பிய 22 ஆம் நாள் தின்ன வேலியில் மாபூஸ் கானை கான் சாகிப் சந்திந்தான் என துல்லியமாக விவரிக்கிறார். மற்ற நூல்கள் எல்லாம் செவி வழி செய்திகளின் அடிப்படையில் இருக்கிறது.

இந்திய ஆசிரியர்கள் ,வரலாற்றை திரித்து , ஒரு சமூக மக்களை உயர்த்த வேண்டும் என எழுதியுள்ளது தெளிவாக தெரிகிறது.விக்கிப்பீடியாவிலும் பொதுவாக சொல்லப்படும் வரலாற்றையே சொல்கிறார்கள்.

முடிந்த வரை கால்டுவெல் ,ஹில் சொன்ன ,தற்காலத்தில் மறைக்கப்பட்டதை தர விரும்புகிறேன். நரேனுக்கு சொல்லும் பதிலையும் பார்க்கவும்.

---------
நரேன் ,

வாரும்,வணக்கம்,நன்றி!

உண்மையில் தமிழ் நாட்டில் புழங்கும் வரலாற்று நூல்கள் தற்கால அரசியலுக்கு ஏற்ப திரித்தே எழுதப்பட்ட பொதுப்புத்தி வரலாறாகவே இருக்கு.

கால்டு வெல், ஹில் ,நூல்கள் உலக அளவில் இன்னும் புழங்கி வரும் நிலையில் , மாற்றி எழுதி மறைத்துவிட்டதாக ,இங்கேயுள்ளவர்கள் சந்தோஷம் அடைவது நெருப்பு கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக்கொண்டால் யாருக்கும் தெரியாது என நினைப்பது போன்றது.எனவே நான் கொஞ்சம் தோண்டி துருவி போடலாம்னு பார்க்கிறேன். இதற்கு முன்னர் யாரேனும் செய்திருக்கலாம், என் பங்கிற்கு கொஞ்சம் :-))

//தமிழனின் ஆகச்சிறந்த இலக்கியவாதியான, க்ரைம் டெரர் தலைவர் ராஜேஸ்குமார் பாணியில் எழுதினால், மண்டையில் ஏறுவதற்கு இன்னும் நன்றாக இருக்கும்//

ஹி...ஹி ஏன் கிளர்ச்சி எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை போல எழுதினா இன்னும் ஜிவ்வுனு ஏறுமே :-))

அதெல்லாம் பிராபல்ய பதிவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை :-))

//ஆமா, இதில் ஏதும் உள்குத்து கிடையாதுல்லே. நம்ம லோகநாயகர் கமலிடம் தூங்கி கிடக்கும் மருதநாயகம் மிருகத்தை தட்டி எழுப்பி அதனால் ஒரு நல்ல சினிமா தயாரிப்பாளரை அதாள பாதாள் தள்ளும் குரூர எண்ணம் இந்த பதிவுக்கி கிடையாது என நினைக்கிறேன்.//

அப்படிலாம் மிருகம் எழாது கவலையே வேண்டாம், படம் நின்றது பைனான்ஸ் இல்லாமல் என்ன்று சொல்வது சப்பைக்கட்டுக்காரணமே, தற்போதைய சூழலில் தென் மாவட்ட மக்களுக்கு அதிருப்தி உண்டாக்கினால் படம் ஓடாது என்பதை விட விநியோகஸ்தர்களே வாங்க மாட்டார்கள், அதனை சொன்னதால் தான் படம் எடுக்காமல் கிடப்பில் போட்டார்.

வரலாற்றின் படி பூலித்தேவனை விட யூசுப் கான் சிறந்த வீரன், பூலித்தேவனை பல இடங்களில் தோற்கடித்து,இறுதியில் சிறைப்பிடித்ததே யூசுப் கான் என கால்டு வெல் சொல்கிறார், அதனை படத்தில் வைத்தால் என்னாகும் என நீங்களே யோசித்துப்பாருங்கள்.

பிரேவ் ஹார்ட்டில் மெல்ல் கிப்சன் நடித்த கிங் வாலஸ் என்பதும் உண்மையான ஸ்காட்டிஷ் அரசன் கதையே, இன்றும் கிங் வாலஸுக்கு சிலை ,எல்லாம் இருக்கு. அப்படத்தில் வீரன் என தற்காலத்தில் சொல்லப்பட்டு வரும் "ராபர்ட் புரூஸ்" ஐ துரோகி,கோழை என்பது போல் காட்டியிருப்பார்கள்.ஏன் எனில் ராபர்ட் புரூஸ் அப்போது இங்கிலாந்து மன்னர் ஆதரவு அணியில் இருப்பார் ,பின்னரே எதிர்த்து சண்டையிடுவார்.ஆங்கிலத்தில் அப்படியெல்லாம் காட்டலாம், தமிழில் காட்டினால் தகராறு தான் :-))

"மருதநாயகம் பிள்ளை"னு தலைப்பில் வரலாற்றில் உள்ளபடி சொன்னதற்கும் காரணம் இருக்கு, வேளாள இனத்தினரை பெரிய வீரனாக காட்ட மறவர் இனம் ஒப்புக்கொள்ளாது,அக்காலத்தில் யூசுப் கான் என மதம் மாறினாலும், மற்ற பாளையத்தார் எல்லாம் யூசுப் கானுக்கு எதிராக இருக்க இதுவும் ஒரு காரணம்.

எனவே லோகநாயகர் இனிமேல் மருதநாயகத்தினை நினைத்துக்கூட பார்க்க மாட்டார், ,தசாவதாரம், விஷ்வரூபம் என 100 கோடி புராஜெக்ட் எல்லாம் செய்யும் போது, பணம் ஒரு தடையல்ல என்பது புரியும்.கதையை உள்ளபடி எடுத்தாலும் , மாற்றி எடுத்தாலும் பிரச்சினை வரும் என்பதே உண்மை.

”தளிர் சுரேஷ்” said...

தமிழகத்தின் அரிய அறியாத வரலாற்று சுவடுகளை கண்டெடுத்து தரும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

ராசின் said...

நன்று! ஒரு தகவல்.... .சைவ வேளாளர் வகுப்பில் பிறந்தவர் என்று சொல்லப்பட்டாலும் அவரை இல்லத்து பிள்லைமார்(தென் மாவட்டங்களில் நேசவு பணிக்கர் )என்று கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் கூறுகிறார்.

ராசின் said...

நன்று! ஒரு தகவல்.... .சைவ வேளாளர் வகுப்பில் பிறந்தவர் என்று சொல்லப்பட்டாலும் அவரை இல்லத்து பிள்லைமார்(தென் மாவட்டங்களில் நேசவு பணிக்கர் )என்று கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் கூறுகிறார்.

ராஜ நடராஜன் said...

ஹி!ஹி!

ராஜ நடராஜன் said...

நான் எப்ப பி.டி.எஃப் மற்றும் ஏனைய சுட்டிகளை படித்து முடிப்பது பின் கமெண்டறது?அதுவும எழுத்தில் கஞ்சத்தனம் என்பது பி.டி.எப் என்றாலும் முந்தைய வரலாற்றை இப்பொழுது அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெருகிறது.பதிவுக்கும் சுட்டிகளே அழகு சேர்க்கிறது என்பதால் சுட்டிகளை படிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

ஆன்மீகம் சார்ந்து கோயில்களும்,கல்வெட்டுக்களும்,பனை ஓலை சுவடிகள் ஆதாரங்கள் இருந்தாலும் கூட தனி மனிதனின் வீரதீர செயல்களை நாட்டுப்பாடல்களும்,கூத்துக்களுமே பறைசாற்றின.

ராஜாதேசிங்குக்கான கான்டெக்ஸ்ட் லென்ஸ்:)

ராஜ நடராஜன் said...

நரேன்!பிரேவ் ஹார்ட்டுக்கு முன்னாடியே கர்ணன்,வீர அபிமன்யு போன்ற சிறந்த படங்கள் தமிழில் வந்து விட்டன.சண்டைதான் பிரதானமென்றால் எம்.ஜி.ஆர் படங்களையும் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,வணக்கம்,நன்றி!

ஏதோ நம்மால் ஆன ஆவணப்படுத்துதல், தமிழில் சரியாக வரலாற்றினை சொல்வதில்லை, ஒரு சார்பு தன்மையோடே அனைவரும் எழுதுகிறார்கள்.முடிந்தவரை உள்ளதை உள்ளபடி தேடிப்பார்த்து எழுதலாம் என்றே இம்முயற்சி.
-----

ராசின்,

வாங்க, வணக்கம்,நன்றி!

சைவ வேளாளர் என்பது பொதுவான ஒன்று அதில் நிறைய உட்ப்பிரிவுகள் உள்ளது. இல்லத்து பிள்ளைமார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதையும் பார்த்தேன், ஆனால் அதனை உறுதியாக சொல்வதற்கில்லை.ஏன் எனில் மருதநாயகத்தின் சரியான இளமைக்கால வரலாறே இல்லை, கம்பெனி படையில் சேர்ந்த பின்னறே ஆவணம் ஆகியுள்ளது. எனவே இல்லத்து பிள்ளைமார் என குறிப்பிடவில்லை.அப்படியும் இருக்கலாம்.

---------
ராஜ்,

வாங்க,வணக்கம்,நன்றி!

ஹா...ஹா...ஹி...ஹி!

வழக்கம் போலவே பேசு பொருளை குழப்பிக்கொண்டுள்ளீர்கள் :-))

//ஆன்மீகம் சார்ந்து கோயில்களும்,கல்வெட்டுக்களும்,பனை ஓலை சுவடிகள் ஆதாரங்கள் இருந்தாலும் கூட தனி மனிதனின் வீரதீர செயல்களை நாட்டுப்பாடல்களும்,கூத்துக்களுமே பறைசாற்றின.//

இவை எல்லாம் ஆதாரங்கள் அல்ல என்பதால் தான் வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவுக்கு என முழுமையான வரலாறு இல்லை என்கிறார்கள்.

கல்வெட்டில் எல்லாம் மெய்கீர்த்திகளும், தானங்களும் மட்டுமே இருக்கின்றன, காலம்,பெயர் மட்டுமே அறியப்பெறலாம், மற்ற தகவல்களுக்கு என்ன செய்ய?

ஓலைச்சுவடி, நாட்டுப்புற பாடல்கள் பக்க சார்பு கொண்டவையாக இருப்பதால் வரலாறு என கருதுவதில்லை,அவை புனைவுகளே.
-----
உங்களுக்கு புராணப்படத்துக்கும், வரலாற்றுப்படத்துக்குமே வித்தியாசம் தெரியவில்லை , சொன்னால் பிளிற வேண்டியது :-))

ராஜ நடராஜன் said...

விட்டதிலிருந்து தொடுறேன்!பேசு பொருள் மட்டும் பேசனுமின்னா கமல் மருதநாயகம் படம் எடுத்தாத்தான் முடியும்:)

வவ்வால் said...

ராஜ்,

அப்படியே ஆகட்டும், உங்களுக்கு இந்த ஜென்மாந்திரத்துல வரலாறு என்றால் என்னனு புரிய போவதில்லை :-))

வரலாறுனா ஸ்கூல் புக்குல இருக்கணும் இல்லைனா சினிமாவில இருக்கணும் , அப்படி இல்லைனா வரலாறு இல்லைனு வண்டிய ஓட்டுவீங்க, ரைட்டு ...வண்டி உருண்டோட அச்சாணி வேண்டும்!