Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Tuesday, December 17, 2013

கட்டம் கட்டி கலக்குவோம்-3

(மலபார் "ராணி"...ஹி...ஹி..!)


எட்டு எட்டா மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ...எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ என பாடிய "பாட்ஷா" சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ,நம்ம ஆட்டத்தை ஆரம்பிப்போம்!

சதுரங்கமும் எட்டு எட்டாக கட்டங்கள் கொண்டது தானே , எனவே எல்லாமே எட்டுக்குள் அடக்கம் :-))

சரி மக்கா , நாம கட்டம் கட்டி கலக்க ஆரம்பிப்போம்,

சதுரங்கத்தின் வரலாறு,விளையாடத்தேவைப்படும் தளவாடங்கள், ஆட்டக்காய்கள் மற்றும் அவற்றின் நகர்வு முறைகள், நகர்வுகளை குறிப்பெழுதுவது ஆகியனவற்றை கடந்த இருப்பதிவுகளில் கண்டோம், இனி மேற்கொண்டு சதுரங்க ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொள்வதனைப்படிப்படியாக காணலாம்.

# சதுரங்க ஆட்டம் என்பது "மூளைக்கு வேலை கொடுக்கும் அக உணர்வு விளையாட்டு" ஆகும். சதுரங்கப்பலகையில் ஆடும் ஆட்டத்தினை விட "நம் மூளையில்" மனத்திரையில் அதிக ஆட்ட வகைகளை ஆடி பார்க்க நேரிடும், பின்னர் அதனை ஆட்டப்பலகையில் வெளியீடாக காட்ட வேண்டும்.

"MIND PLAYS THE GAME"

அவ்வாறு விளையாட எவ்வாறு நம்மை தயார்படுத்திக்கொள்வது?

ஒரு நல்ல சதுரங்க விளையாட்டு வீரராக தயார்ப்படுத்திக்கொள்ள ஒரு அடிப்படையான திட்டமிட்ட அனுகு முறை தேவையாகும், அதில் மிக முக்கியமான அம்சங்கள் கீழ்க்கண்டவையாகும்.

# துவக்க ஆட்டம்(Chess Openings)


# திட்டமிடுதல் (Chess strategy )


# ஆட்ட நுட்பங்கள்(Chess tactics )


# இறுதி ஆட்டம் (Chess Endings )


# அனுபவம்( Chess experience )


இவ்வடிப்படையான ஐந்து பயிற்சியலகுகளையும் ஒரு வட்ட வடிவ படமாக காட்டியுள்ளேன்.




பொதுவாக துவக்க ஆட்டத்தினை கற்றுக்கொள்வதில் இருந்து ஆரம்பித்து ஐந்து அலகுகளிலும் பயிற்சியினை பெறலாம், ஆனால் அப்படி செய்வது சில சமயங்களில் குழப்பத்தினையும் அளிக்கலாம் என்பதால்  ஏதேனும் ஒரு நிலையினை எடுத்துக்கொண்டு பயிற்சியினை ஆரம்பித்து வட்டவடிவில் சுற்றினை பூர்த்தி செய்து பயிற்சியினை நிறைவடையவும் செய்யலாம்.


இப்படி வட்டவடிவில் காட்டியிருப்பதே துவக்க நிலை,இறுதி நிலையென வரையறையாக ஒரு நிலைப்பாடே இல்லாமல் வட்டத்தின் எந்நிலையிலும் நமது புரிதலுக்கு ஏற்ப கற்றலை துவக்கலாம் எனச்சொல்லவே.


அதெப்படி ஆரம்பத்துலவே அனுபவ துவக்கம் கிடைக்கும்னு கேட்கலாம், ஏற்கனவே விளையாண்டவர்களின் அனுபவத்தினை கேட்டு , அவர் என்ன செய்தார் , எப்படி விளையாண்டார்னு தெரிந்துக்கொண்டு அதனையே செய்து பார்ப்பது தான்!


ஒருவரோட அனுபவத்தினை கேட்டு ,அதனையே பழகிப்பார்த்தால் அதுவே நமது அனுபவமாகவும் ஆகிவிடும்!


துவக்க நிலை ஆட்டம் என்பது ஆட்டத்தின் துவக்கத்தில் ,சதுரங்கப்பலகையில் அனைத்து ஆட்டக்காய்களும் இருக்கும் நிலையில் , முதலில் ஆடப்படும் 10 -12 நகர்வுகளை குறிக்கும்.


சதுரங்கப்பலகையின் அடிப்படையையே இப்பொழுது தான் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளவர்களுக்கு , ஒவ்வொரு ஆட்டக்காயின் நகர்வு போக்கும் புரியாத நிலையில் பின்ப்பற்ற கடினமாக இருக்கும்.


மேலும் துவக்க ஆட்டங்களில் பல வகை இருக்கு, அவற்றில் பல கிளை வகைகளும் இருக்கு, இவற்றை எல்லாம் ஒவ்வொரு ஆட்டக்காயின் பலம்,பலவீனம், நகர்வின் தன்மை என சரியாக உள்வாங்கிக்கொள்ளாத ஆரம்ப நிலையிலே சொன்னால் மனதில் பதிய கடினமாக இருக்கலாம் ,எனவே ஆட்டக்காய்கள் குறைவாக உள்ள , இறுதி ஆட்ட நிலையில் எப்படி ஆடி வெற்றிப்பெறுவது என இறுதி ஆட்ட வகையினை கற்றுக்கொள்வதில் இருந்து பயிற்சியினை ஆரம்பிப்பது எளிதாக இருக்கும்.

இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காயின் நகர்வு, அதன் பலம், பலவீனம் என எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும். பல கிராண்ட் மாஸ்டர்கள் "இறுதி ஆட்டத்தினை " கற்றுக்கொண்டு ஆடத்துவங்குவதை சரியான அனுகுமுறை என பரிந்துரையும் செய்துள்ளார்கள்.


இறுதி ஆட்டத்தினை கற்றுக்கொள்வதையே துவக்க நிலைப்பயிற்சியாக கொண்டு ,"JOSE’ R. CAPABLANCA" என்ற முன்னாள் உலக சேம்பியன்  "Chess Fundamentals"  என்ற சதுரங்கப்பயிற்சி நூலினை எழுதியுள்ளார்.அதனை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதிய தகவல்களையும் இணைத்து இத்தொடரினை கொண்டு செல்ல உள்ளேன்.


இப்பொழுது , வெள்ளை ஆட்டக்காரர் ஒரு ராஜா, ஒரு யானையை வைத்துக்கொண்டு  எப்படி ஒற்றை கறுப்பு ராஜாவை  செக் மேட் செய்து வெற்றி யடைகிறார் என்பதனை காண்போம். ஆட்டப்பலகையில் வீரர்களோ வேறு எந்த ஆட்டக்காய்களோ இல்லாத சூழல்.


ராஜா+ யானை VS ராஜா: இறுதி ஆட்ட நிலை:


இவ்விறுதியாட்ட நிலை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் , இதில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் , எவ்வளவு குறைவான நகர்த்தல்களில் செக் - மேட் செய்து ஆட்டத்தினை முடிக்கிறோம் என்பதில் தான் உள்ளது.

ஏன் எனில் சதுரங்கத்தில் " 50 நகர்வுகள் விதி"(50 moves Rule) என ஒன்றுள்ளது. அவ்விதிப்படி,

# 50 நகர்த்தல்களுக்குள் ஏதேனும் ஒரு  "வீரன்" நகர்த்தப்படவில்லை எனில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்படும்.

இந்த இறுதி ஆட்ட சூழலில் பலகையில் "வீரனே" இல்லாததால் , வீரனை நகர்த்தி ஆடவே இயலாது எனவே 50 நகர்த்தல்களுக்குள்  செக் - மேட் செய்யவில்லை எனில் ஆட்டம் டிரா என தானாக அறிவிக்கப்பட்டுவிடும்.

# 50 நகர்த்தல் விதியின் இன்னொருப்பிரிவின் படி , 50 நகர்த்தல்களுக்கு எவ்வித ஆட்டக்காய்களும் வெட்டப்படவில்லை எனில் ஆட்டம் டிரா ஆகும்.

This rule applicable at all stages of the game.

# கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் , நேரம் ஆகும். ராஜா + யானை வைத்து ஆடுபவருக்கு நேரம் குறைவாக இருந்து , வெறும் ராஜாவுடன் ஆடுபவருக்கு நேரம் அதிகமிருக்குமெனில் , தேவையற்ற நகர்வுகள் செய்வதில் கால விரயம் ஆகி ,நேரம் தீர்ந்து போனால் , நேரத்தின் அடிப்படையில் தோற்க நேரிடும்.

மேலும் ஒற்றையானையை வைத்துக்கொண்டு வெற்றியடைய முடியாது என நினைத்து டிரா என நினைத்து ஏற்றுக்கொண்டால் ,நமக்கு தான் இழப்பு ஆகும்.

எனவே ஒற்றையானைவை வைத்து குறைவான நகர்த்தல்களில் செக் மேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.


# தனி ராஜா ஏதேனும் ஒரு மூலையிலும், யானை மற்றும் ராஜா எதிர் பக்கத்தின்  மூலைகளிலும் இருக்குமானால் குறைந்த பட்சம் 10 நகர்த்தல்களில் செக் மேட் செய்து விட முடியும்.

# தனி ராஜா ஆட்டப்பலகையின் மையத்தில் இருக்குமானால் 11-12 நகர்த்தல்களில் செக் -மேட் செய்து விட முடியும்.


நிலை-1: தனி ராஜா ஒரு மூலையில் உள்ளது.

பத்து நகர்த்தல்களில்  செக்- மேட் செய்வதனை காணலாம்.


படம்-1


 white to move.


1) Ra7 -Kg8

வெள்ளை தனது முதல் நகர்வாக , ராஜாவை நகர்த்தாமல் யானையினை a7 கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது, இதன் மூலம் கறுப்பு ராஜா கடைசி ரேங்கினை விட்டு வெளியில் நகரமுடியாமல் கட்டுப்படுத்திவிட்டது ,இதனால் அதிக அலைச்சல் இன்றி குறைவான நகர்வில் செக் மேட் செய்ய இயலும்.

கறுப்பு ராஜாவிற்கு வேறு நகர்விற்கு வழியில்லை எனவே g8 கட்டத்திற்கு செல்கிறது.

2)Kg2 - Kf8




வெள்ளை ராஜா . மூளைவிட்டமாக g2 கட்டத்திற்கு செல்கிறது.

ஏன் இவ்வாறு நகர்த்த வேண்டும்?

h1 கட்டத்தில் இருக்கும் ராஜா அடுத்து  நேர் வரிசையில்  h2, h3... h6 என முன்னேறி சென்றால் என்ன ?

# பொதுவாக சதுரங்கப்பலகையில் நிறைய கட்டங்களை கடக்க வேண்டும் எனில் மூளைவிட்டமாக பயணித்தால் ,அதிக கட்டங்களை குறைவான நகர்த்தல்களில் கடக்கலாம்.

# அடுத்து , இறுதி ஆட்ட நிலையில் எதிர் ராஜாவினை துரத்தி செல்வதெனில் ,அல்லது அதனை எளிதில் பின் தொடர வேண்டும் எனில் அதற்கு நேருக்கு நேரான கட்டத்தில் நமது ராஜா இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது தான் நமது "ரீச்சில்" இருக்கும்.

# இப்படி தனித்த ராஜாவினை செக் மேட் செய்ய வேண்டும் எனில் அதனை ஒரு குறுகிய எல்லைக்குள் அடைத்துவிட வேண்டும் அதாவது கடைசி ரேங்க் அல்லது வரிசையின் ஓரமாக தள்ளிக்கொண்டு சென்று விட வேண்டும், பின்னர்  நமது ராஜாவினை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக எதிர் ராஜாவுக்கு ஒரு வரிசை அல்லது ரேங்க் விட்டு நேரதிராக கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.

அதன் பின்னரே இன்னொரு சக்தி வாய்ந்த ஆட்டக்காய் கொண்டு . பலகையின் ஏதேனும் ஒரு மூலைக்கோ அல்லது நமது ராஜாவுக்கு நேர் வரிசையில் ஒரு கட்டம் தள்ளியுள்ள எதிர் கட்டத்தில் ,கடைசி வரிசையில் எதிர் ராஜா இருக்குமாறு செய்து கொண்டு செக் மேட் செய்ய வேண்டும்.

ஒரு ராஜா ,யானை மட்டும் உள்ள சூழலில் ,யானைக்கொண்டு ,எதிர் ராஜாவை முன்னரே கட்டுப்படுத்தியாகிவிட்டது, ராஜாவுக்கு நேருக்கு நேராக முன்னேற வேண்டும் , அதே சமயம் விரைவாக 6 வது ரேங்கினை அடைய வேண்டும் என்பதால் ராஜாவை மூலைவிட்டமாக g2 கட்டத்தில் வைத்துள்ளோம்.

3)Kf3 - Ke8

4)Ke4 -Kd8

5)Kd5 -Kc8

கறுப்பு ராஜா c8 கட்டத்திற்கு சென்றுள்ளது எனவே அதற்கு நேராக c6 கட்டத்திற்கு வெள்ளை சென்றால் ,ஆட்டத்தினை இழுக்க ,கறுப்பு அடுத்த நகர்வில் மீண்டும் d-8 என  பின்னால் நகரக்கூடும் ,வெள்ளை ஆட்டக்காரரின் முதல் நோக்கம் ,கறுப்பு ராஜாவினை ஒரு மூலைக்கு தள்ளி செல்ல வேண்டும் என்பதே ,எனவே இப்பொழுது  வெள்ளை ராஜா c-6  கட்டம் செல்லாமல் ,

6)Kd6 -Kb8



# கறுப்பு ராஜா தொடர்ந்து கடைசி ரேங்கின் எட்டாவது கட்டங்களின் வழியாக யானையை நோக்கி நகர்கிறது, அதற்கு வேறு வழியில்லை.

# வெள்ளை ராஜா ,தொடர்ந்து மூலை விட்டமாக பயணித்து ,கறுப்பு ராஜாவுக்கு நேராக ,அதே வரிசையில் இருக்குமாறு  பார்த்துக்கொண்டு முன்னேறி ஆறாவது ரேங்கினை அடைந்துவிட்டது.

இந்நிலையில் ஒன்றினை கவனிக்க வேண்டும் , கறுப்பு ராஜா தானாக b8 கட்டத்திற்கு சென்று ஒரு மூலையை நோக்கி சென்றுவிட்டது.  அவ்வாறு மூலை நோக்கி  b 8 செல்லாமல் , கறுப்பு ராஜா c8 இல் இருந்து   d-8க்கு கறுப்பு ராஜா மீண்டும் வந்தால், d6 இல் இருக்கும் வெள்ளை ராஜாவுக்கு நேரான வரிசையில் d-8 இல் கறுப்பு ராஜா வந்துவிடும் ,எனவே  யானையை  a8 கட்டத்திற்கு நகர்த்தி  செக் மேட் செய்து விடலாம். இதற்காக தான் வெள்ளை ராஜா c-6  கட்டம் செல்லாமல் ,d6 க்கு வருகிறார்.இதன் மூலம் மறைமுகமாக கறுப்பு ராஜா மூலைக்கு செல்ல அழுத்தம் அளிக்கப்படுகிறது.


எப்பொழுதுமே இன்னொரு மாற்று நகர்வினையும் கணக்கில் வைத்து இரண்டுக்கும் ஏற்ற ஒரு நகர்வினை செய்ய வேண்டும்.


இப்பொழுது தொடர்ந்து மூலை கட்டங்களான a8 or b8 இல் வைத்து செக் மேட் செய்ய முடியும்.

7)Rc7 -Ka8




b8 இல் இருக்கும் கறுப்பு ராஜா மீண்டும் Kc8 என முன் ,பின்னாக இழுக்காமல் இருக்க யானையை c7 கட்டத்தில் வைத்து அடைக்கிறோம்.


இப்பொழுது கறுப்பு ராஜாவிற்கு வேறு கட்டங்களுக்கு செல்ல வழியில்லை என்பதால் K-a8 என மூலைக்கு சென்றுவிடுகிறது.


8)Kc6 -Kb8

இப்பொழுது , வெள்ளை ராஜா , கறுப்பு ராஜாவின் வரிசைக்கு நேராக கொண்டு செல்ல வேண்டும், எனவே c6 கட்டத்திற்கு நகர்த்தப்படுகிறது. இனிமேல் கறுப்பு ராஜாவிற்கு a8,b8 ஆகிய இருக்கட்டங்களில் மட்டுமே நகர்வு சாத்தியமாகும் எனவே வேறு வழியில்லாமல் Kb8
 கட்டத்திற்கு வருகிறது.


9)Kb6-Ka8

ராஜாவிற்கு நேர் வரிசையில் ராஜா என்ற கொள்கையின் படி வெள்ளை ராஜா Kb6 கட்டத்திற்கு நகர்கிறது. இதன் மூலம் ஏ-8 இல் அல்லது பி-8 இல் வைத்து கறுப்பு ராஜாவினை செக் மேட் செய்வது சாத்தியமாகிறது.

கறுப்பு ராஜாவிற்கு வேறு வழியே இல்லை என்பதால் மீண்டும் a8 கட்டத்திற்கு இறுதியாத்திரையாக செல்கிறது ,அவ்வ்!

இனி வெள்ளை ஆட்டக்காரரின் ஒரே நகர்த்தலில் "பாபா மர்க்கயா" தான்!




10) R c8 +#

வெள்ளை யானை "c8 " கட்டத்திற்கு சென்று செக் வைக்கிறது, கறுப்பு ராஜாவினால் வேறு எந்த கட்டத்திற்கும் செல்ல இயலாது ,அதன் முன்னால் உள்ள a7,b7 ,c7 ஆகிய கட்டங்கள் வெள்ளை ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ளது, ஒரு ராஜாவின் அடுத்தக்கட்டத்திற்கு இன்னொரு ராஜா செல்ல இயலாது, என்னவே யானையின் செக்கினை தவிர்க்க இயலாத "கறுப்பு ராஜா" செக் & மேட் ஆகிவிட்டது.

இந்த இறுதி ஆட்டத்தின் மொத்த நகர்வுகளின் எண்ணிக்கை "10" மட்டுமே.

மிகச்சரியாக ஆடினால் யார் வேண்டுமானாலும் இப்படி "10" நகர்வுகளில் செக் மேட் செய்யலாம். அதிகப்பட்சம் 15 நகர்வுகளுக்குள் ஆட்டத்தினை முடிக்குமாறு பழகி கொள்ள வேண்டும்.

இந்தாட்டத்தில் "கறுப்பு ராஜா" தொடர்ந்து ஒரே பக்கமாக நகர்ந்தது ,அப்படி செய்யாமல் முன் , பின்னாக நகர்த்தினால் என்ன செய்வது என்றால் , நமது ராஜாவின் எதிர் வரிசையில் கடைசி ரேங்கில் இருக்குமாறு செய்ய வேண்டும் அல்லது , யானைக்கொண்டு ஒரு சில செக் வைத்து ஒரு மூலைக்கு விரட்ட வேண்டும்.

இந்த இறுதி ஆட்டத்தின் மொத்த நகர்வுகளையும் "GIF" அனிமேஷன் ஆக மாற்றி இணைத்துள்ளேன் ,பார்த்து பழகிக்கொள்ளவும்.

அனிமேஷன்:


# ஒற்றை ராஜா +யானை எதிர்த்து ஒற்றை ராஜா என்ற இறுதி ஆட்டத்தில் ஏதேனும் ஒரு மூலை என நான்கு மூலைகளில் வைத்து செக் மேட் செய்யலாம்.

அல்லது நான்கு பக்கங்களில் கடைசி ரேங்க் அல்லது வரிசையில் நமது ராஜாவுக்கு நேருக்கு நேராக ஒரு கட்டம் தள்ளி முன்னால் உள்ள நிலையில் யானை மூலம் செக் மேட் செய்யலாம்.

எல்லாவற்றின் அடிப்படையும் ஒன்று தான் ஆனால் எட்டு இடங்களில் செக் மேட் செய்ய இயலும் , மற்றபடி வேறு எந்த நிலையிலும், அல்லது சதுரங்கப்பலகையின் மையத்தில் வைத்தோ செக் மேட் செய்ய இயலாது.

புரிந்து கொள்ள வசதியாக எட்டு நிலைகளில் செக் மேட் செய்யப்படும் படங்கள்.

நான்கு மூலைகளில் செக்-மேட்:


நான்குப்பக்கங்களிலும் கடைசி வரிசையில் செக்-மேட்:



# இறுதி ஆட்டத்தில் எவ்வகையான ஆட்டக்காய்கள் உள்ள நிலையில் என்ன முடிவு கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்,

# ஒரு ராஜா +யானை VS தனி ராஜா

# ஒரு ராஜா + ராணி VS தனி  ராஜா,

# ஒரு ராஜா + இரண்டு பிஷப் VS தனி ராஜா

# ஒரு ராஜா + ஒரு பிஷப்& குதிரை VS  தனி ராஜா

மேற்கண்ட இவ்வகையான நிலைகளில் கூடுதல் ஆட்டக்காய்கள் உள்ளவருக்கு வெற்றி கிடைக்கும்.
***********
கட்டாயம் டிரா ஆகும் நிலைகள்,

# ஒரு ராஜா + ஒரு பிஷப் VS தனி ராஜா

# ஒரு ராஜா + ஒரு குதிரை அல்லது இரண்டு குதிரைகள் VS தனி ராஜா

என நிலை இருந்தால் செக்  மேட் செய்யவே முடியாது, எனவே விதிப்படி டிரா ஆகும்.

இரண்டு குதிரைகள் இருந்தாலும் செக் மேட் செய்யவே முடியாது. பலகையில் வேறு ஏதேனும் ஆட்டக்காய்கள் இருக்க வேண்டும்,அது எதிரணியின் சிப்பாயாகவாது இருக்க வேண்டும். ஏன் எனில் குதிரையை பொறுத்த வரையில் அதன் அருகில் உள்ள கட்டத்திற்கு சென்றால் எதுவும் செய்ய இயலாது, மற்ற ஆட்டக்காய்களிற்கு அவ்வாறு செல்ல இயலாத கட்டம் என ஏதேனும் ஒன்றாவது இருக்கும்.


தனி ராஜா என்ற நிலையில்லாமல் ,

ஒரு யானை எதிர் ஒரு பிஷப் அல்லது குதிரை

இரண்டு பிஷப் எதிர்த்து ஒரு பிஷப் அல்லது குதிரை


ஒரு பிஷப் + குதிரை எதிர்த்து எதிர் நிற பிஷப் என இறுதி ஆட்ட நிலை இருந்தாலும் டிரா ஆகிவிடும்.


கவனக்குறைவாக ஆடினால் மட்டுமே தோற்கடிக்க முடியும் எனும் இறுதி ஆட்ட நிலைகள் இவை.


"50" நகர்வு விதி(50 moves rule) என இருப்பது போல Draw  ஆக என இன்னும் சில டிரா செய்ய வைக்கும் விதிகளும் உள்ளன.

# தொடர்ந்து மூன்று முறை ஒரே நிலையை(repeated position) ஆடினால் ஆட்டம் டிரா ஆகும்.

இதனை மிர்ரர் இமேஜ் பொசிஷன் டிரா என்பார்கள்.


# செக் மேட் செய்யாமல் வெறுமனே செக் மட்டுமே தொடர்ந்து கொடுத்தாலும் விதிப்படி டிரா ஆகிவிடும். இதனை  Perpectual check"(PP)டிரா என்பார்கள். அதிகப்பட்சம் தொடர்ந்து 15 செக் கொடுக்கலாம் ,ஆனால் மூன்றாவது செக் வைத்து தப்பிவிட்டாலே விதியை சொல்லி "டிரா" கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிறுவிதிகள் உள்ளன,

# நமது நகர்வு செய்ய வேண்டிய சூழலில் தேவையில்லாமல் நமது ஆட்டக்காயினையோ எதிராளியின் ஆட்டக்காயினையோ " தொடக்கூடாது".

அப்படித்தொட்டுவிட்டால் , விதிக்குட்பட்ட நகர்வு செய்ய முடியும் எனில் அதனை நகர்த்தியாக வேண்டும். எதிராளியின் ஆட்டக்காய் எனில் அதனை வெட்ட முடியும் எனில் வெட்ட வேண்டும்.

இதனை "Touch piece"  விதி என்பார்கள்.

#  கோட்டைக்கட்டுதல்(castling) செய்யும் போது கூட முதலில் ராஜாவினை தான் தொட வேண்டும், அதன் பின்னரே யானையை தொட வேண்டும், மாறி யானையை தொட்டுவிட்டால் அதனை " டச் பீசாக" கருதி நகர்த்த வேண்டும்.

# நாம் அவசரப்பட்டு ஒரு ஆட்டக்காயினை தொட்டுவிட்டோம் ஆனால் அதனை  விதிப்படியான நகர்த்தல் செய்ய வாய்ப்பே இல்லை எனில் , அடுத்து எப்பொழுது விதிப்படி நகர்த்தும் சூழல் வருகிறதோ அப்பொழுது "கட்டாயம் நகர்த்த "வேண்டும் ,ஹி...ஹி தொட்டால் தொடரும் , இதனை "enforced move" என்பார்கள்.

இவ்வாறு தவறுதலாக தொட்டு ஆட வேண்டிய கட்டாயத்தால் ஆடி ,ஆட்ட நிலை பாதகமாக மாறிவிடும் சூழல் உருவாகலாம், எனவே கவனமாக ஆட வேண்டும். சர்வதேச போட்டிகளில் கூட இப்படி ஆகியுள்ளது.

# ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஆட்டக்காய்களை தொட வேண்டும்,லேசாக கட்டத்தில் இருந்து விலகியுள்ள ஆட்டக்காயினை சரி செய்ய வேண்டுமெனில் , தொடும் முன்"  "I ADJUST'" என அறிவிக்க வேண்டும், சிம்பிளாக "ADJUST" என்று சொல்வது வழக்கம்..


இன்னும் பல விதிகள் உள்ளன ,அவற்றை எல்லாம் தேவையான இடங்களில் ஆங்காங்கே சொல்கிறேன், ஒரே நேரத்தில் வரிசையாக சொன்னால் மனதில் பதியாது.


# COPYCAT TRAP.

பதிவுலகில் ஒருவர் எழுதின பதிவ அப்படியே காபி & பேஸ்ட் அடிக்கும் சிலர் இருக்கிறார்கள், சிலர் பிரபல பத்திரிக்கைகளில் வருவதை எல்லாம் காபி & பேஸ்ட் அடிச்சு தினம் ரெண்டு பதிவுனு போட்டு கொலையா கொல்லுறதும் உண்டு.

அதே போல சதுரங்கத்திலும் நாம என்ன நகர்த்துறமோ அதையே காபி அடிச்சு திரும்ப ஆடுறவங்களும் உண்டு, நம்ம நகர்வுக்கு நேருக்கு நேர் அப்படியே பிரதி எடுத்து ஆடுவாங்க , இதனை "காப்பியடிக்கும்(திருட்டு) பூனை" என்பார்கள்.

காப்பி  அடிச்சாலே சரக்கு இல்லைனு தானே அர்த்தம் எனவே காப்பி அடிச்சவங்க எளிதாக மாட்டிக்கிட்டு தோற்றுவிடுவாங்க :-))

அப்படியே காப்பி அடிச்சும் ஆடும் ஆட்டம்,



1)e4- e5

2) Nf3 -Nf6

3)N X e5 - N X e4

வெள்ளை ஆடியதை அப்படியே திருப்பி செய்தது கறுப்பு.

4) Qe2 - Nf6??

5) Nc6 + 

இப்படி செய்வதனை discoverd chcek என்பார்கள், ராஜாவுக்கு செக் அதே நேரம் ராணியும் தாக்கப்படுகிறது,எனவே வெள்ளைக்கு கறுப்பு ராணி "பலியாவது" நிச்சயம்.


இப்படி விளையாடி  மாட்டிக்கிறதை COPYCAT TRAP என்பார்கள், இப்படி துவக்க ஆட்டத்தில் ,நாம ஏன் யோசிச்சு ஆடனும் , வெள்ளையாட்டக்காரர் செய்வதை அப்படியே செய்வோம்னு ஆடி ஒருத்தர் மாட்டிக்கிறதை "GIF" அனிமேஷனில் பாருங்கள்!

COPYCAT TRAP அனிமேஷன்.



இந்த COPYCAT TRAPக்கு ஆன்டி கிளைமாக்ஸ் ஒன்னு இருக்கு அதை அடுத்தப்பதிவில் காணலாம்.  முடிந்தால் நீங்களும் கண்டுப்பிடிச்சு சொல்லுங்கள்.


கட்டங்கள் தொடரும்...

----------------------------------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# chess fundamentals - jos Capablanca

# The final theory of chess - Gary M. Danelishen

# FIDE ,wiki and google

இணைய தளங்கள் ,நன்றி!
--------------------------------------------

Monday, November 11, 2013

தமிழின் நவீனத்துவம்.

(அழகின் நவீனத்துவம் ...ஹி...ஹி)

"பாஷை , வெறும் சொற்களில் மட்டும் தங்கி நிற்கிற ஒன்றல்ல,சொற்கள் தம்முடைய ஸ்தூல நிலையில் வெறும் சப்தம் தான். அவற்றுக்குக் கிடைக்கும் அர்த்தம், அவற்றை உபயோகிக்கிற ஒப்புதல்களை இயல்புப்படுத்துதல் ஆகும்.

ஒரே சப்தம் ,ஒரு மொழியில் பெறும் பொருள் வழக்கை இன்னொரு மொழியில் கொள்வதில்லை, இதனால் தான் இயல்பான ஒப்புதல் என்பது "வழங்கப்படுதல்" என்ற நிலைமைக்கு சார்பாகி,"வழக்கொழிந்த சொற்கள்" என்று ஒரு பகுதியை பிரித்து விடுகிறது. இதன் தவிர்க்க முடியாமையை ஏற்காத உள்ளங்கள், உயிர்த்தன்மையற்றதாகவே இருக்கும்.

உபயோகம்தான் மொழியின் இயக்கம்,- உயிர்  - என்று கொள்ளும் போது ,"வலிந்து ஏற்கும் உபயோகத்தை அல்ல", இயக்கத்தின் இயற்கை ஏந்தி வரும் உபயோகத்தையே நாம் ஏற்கவேண்டும். வழக்கொழிந்த சொற்கள் இந்த இயக்கத்தின் இயற்கையினின்றும் பின் தங்கிவிட்டவை. இதனாலாயே ,பழந்தமிழ் சொற்களை மீண்டும் உபயோகிப்பதென்ற தனித்தமிழ் இயக்கம் ,இயற்கை தன்மையோ உயிரோ அற்று ,நவீன அனுபவங்களையும் சந்திக்க இயலாமல் நின்றுவிடுகிறது.

இயக்கத்தின் இயற்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பிறமொழிச்சொற்கள் இன்றைய தமிழில் நவீனமான விஷயங்களையும் அனுபவங்களையும் சொல்ல உதவுகின்றன. தமிழின் நவீன - அதாவது இன்றைய காலத்தில்  - படைப்பியக்கம், வழக்கொழிந்த சொற்கள் மூலம் அல்ல ,இயங்கும் சொற்களின் மூலமாக மட்டுமே சாத்தியமாகிறது.

மொழியின் ஸ்தூலமான சொற்களின் விஷயத்தில் 'தூய்மை பாராட்டியவர்கள், சிந்தனை அனுபவம் என்பவற்றால் உந்தப்படவில்லை ,இவர்களது எழுத்துக்களில் ,பழம்பெருமை, பொதுப்புத்தியை மீறாத ஒழுக்கவியல், இவற்றை "அழகாக" கூறுவதாக எண்ணிக்கையாளப்பட்ட சொல்ஜோடனை ஆகியவைதாம் இருந்தன., இருக்கின்றன.

இவர்களது சமகாலத்திய சிருஷ்டி,கர்த்தாக்களிடமோ ,வாழ்வின் உண்மைத்தன்மைகளும் சமூகவரம்புகள், ஒழுக்கங்கள்,நீதி அநீதிகள் ஆகியவற்றை அனுபவசாத்தியத்தின் தளத்தில் நிறுத்திச்செய்கின்ற விசாரணைகளும் ,இவற்றை எவ்விதமான உள்ளம் சந்திக்கிறதோ, அதன் பாத்திர இயல்புக்கு ஏற்ற மொழிப்பிரயயோகத்தில் எழுதப்பட்டன.

கருத்தைப் பிரதானமாக வைத்துப் புதுமைப்பித்தன் எழுதியவை இந்தவகை இயக்கத்தின் சிகரமாகும். புதுமைப்பித்தனின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களது தமிழ் , இதனாலாயே ஜீவத்துடிப்புள்ள தமிழ் என்றாகிறது.

இன்னொரு புறம், பரவலான வாசகத்தேவைகளையும் வியாபாரத்தையும் இலக்காக்கி, "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுதியவை. ஆழமற்ற சில்லறைத்தளம் ஒன்றில் தமிழ் எழுத்தைச் செயல்பட  வைத்துள்ளன. இதை பத்திரிக்கைத்தமிழ் என்று அதன் உடனடிப்பரிவர்த்தனைக்காக ஏற்றுக்கொள்ளும் போதே, இதன் இயல்பான வெகுஜனத்தன்மையை இலக்கிய இயக்கத்தின் தன்மைகளிலிருந்து பிரித்துக் கண்டுக்கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வெளியீட்டைப் பொறுத்தவரையில் கூட தனித்தமிழ் ,சிருஷ்டி, வியாபாரம் என்ற மூன்று தளங்களும் சுத்தமாகப் பிரிந்து நிற்கின்றன. தனித்தமிழ் இயக்கத்தில் அரசியலின் பாமரத்தன்மையும், சிருஷ்டி இயக்கத்தில் முதிர்ந்து புடமிடப்பட்ட செம்மையும், வியாபார எழுத்தில் கவர்ச்சித்தன்மையும் , உணர்ச்சி வெளியீட்டை நிர்ணயித்துள்ளன.ஒரு வகையில் உணர்ச்சி வெளியீட்டுத் தளத்திலேயே முதன்மையாக இந்த மூன்று தமிழ்களின் குணங்களும் பிணங்க ஆரம்பித்து ,அனுபவம்,சிந்தனை, ஆகிய துறைகளில் இந்தப்பிணக்கு இவற்றிடையே நீடிக்கிறது என்றும் கூறலாம்.
-------------------

தமிழ்ப் பழமை வழிபாடு எவ்வளவுக்குப் பாமரத்தனமானதோ , அவ்வளவு பாமரத்தனம் தான் மேலுள்ள வகையான சமஸ்கிருத மனோபாவமும் இரண்டுமே இந்தியத்தின் சாபக்கேடான ஜாதியத்தில் வேருன்றிப்பிறந்தவை. எனது உனர்வின் நவீனத்துவம் இத்தகைய விஷநிலத்தில் இருந்து  விளைந்த ஒன்றல்ல. இந்த விஷநில விளைச்சல்களுக்கு நான் தனித்தமிழ் இயக்கத்தை விமர்சித்த பார்வை உபயோகமாகிவிட இதனால் இடமற்றுவிடுகிறது. எனது முன்னோடியான புதுமைப்பித்தனைப் பொறுத்தும் இதையே கண்டுக்கொள்ள வேண்டும். சமஸ்கிருத சநாதனத்துக்கு "உபயோகமாக" ஒரு வெளிப்படையான தீவிர நிலையாக என் நேர்ப்பேச்சுக்கள் தென்ப்பட்டுள்ளன.

--------------------------

ஒரு மொழியின் சிறப்பு ,அதன் உபயோகத்தைச் சார்ந்தது, கிரீசின் பரிபாலான காலத்தைத் தொடர்ந்து ரோம சாம்ராஜ்யத்தில், கிரீசின் மொழியான கிரேக்கம் தான் உயர்ந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த கணிப்பை புறந்தள்ளியவர்கள் ரோமின் லத்தீன் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், தொடர்ந்து ஐரோப்பாவில் பேக்கனின் காலம் வரை, லத்தீன் உயர்ந்த உபயோகங்களைப்பெற்றுள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் , லத்தீனையன்றிச் சுயமொழியையே ,சிருஷ்டிகளுக்கும் ,இதர படைப்புகளுக்கும் உபயோகிக்கிற விழிப்பு ஏற்படலாயிற்று .

இதன் அடிப்படை, சுய அனுபவத்தினை - தர்சனத்தை - தனது மன இயக்கத்துடன் நெருங்கித்துடிக்கிற ஒரு சுய மொழியில் தரும் இயற்கையாகும். ஆங்கிலத்தை ,பிரெஞ்சை, ஜெர்மனை ,ரஷ்யனை விட லத்தீன் உயர்வானது என்றோ லத்தீனை விட கிரீக் உயர்ந்தது என்றோ ஐரோப்பிய நகரங்களின் வாடகை ரூம்களில் லத்தீனியப்பூணூல் ,கிரேக்கப்பூணூல் அணிந்த சநாதனிகள் பேசிக்கொண்டு காலங்கழிப்பதை நாம் காண முடியாது. ஆனால் தமிழை விடச் சமஸ்கிருதம் உயர்ந்தது, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என என்று அவங்க பெரியாரே சொல்கிறாரே என்று கதை அளக்கும் நவீன சநாதனிகளை நான் கண்டிருக்கிறேன், - நமது பாரதத்துச் சென்னை நகர் வாடகை ரூம்களில் இவர்களது குழுக்கள் 'நவீன இலக்கிய இயக்கங்களாக"க்கூட முனைப்புப் பெற்றுள்ளன

ஒரு மொழியை விட இன்னொரு மொழி உயர்வானது என்று கூறுவதை விட மொழிகளின் உபயோக சாத்தியத்தைப்பற்றிப்பேசுவதே பொறுந்தும். தமிழ் இன்றைய மொழி , அதாவது நான் தமிழ் பழமைவாதத்தை நிராகரித்துக் கூறுவது இது.இன்றைய மொழி எனும் பொழுது, அது பழந்தமிழாக அன்றி ,"சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியின் சொற்களைக்கூட ஜீரணித்துத் தமிழாக இயங்குகிறது" என்பதையே அர்த்தம் கொள்கிறேன். இந்த ஜீரணிப்புக்கு ஏற்றவகையாக, தனது பிரயோகக் கட்டுமானங்களைப்புதுப்பித்து நிற்கிற உரம் தமிழுக்கு இருக்கிறது; சமஸ்கிருதத்துக்கு இல்லை, உதாரணமாக அது இன்றைய அனுபவங்களைச் சரளமாக பரிவர்த்தனை செய்யக்கூடிய இயற்கை வளர்ச்சியை சமஸ்கிருதம் அடையவில்லை.

---------------------

அக உலக கலைஞர்கள்:

'அகநானூறு போன்ற துணுக்குக் கவிதைகளில் செய்யப்பட்ட மன உலகப் பரிசோதனைகள், தமிழிலக்கியத்தின் இடைக்கால இருளின் முன் மறுப்பட்டுவிட்டன. இன்று ஒரு புது விழிப்பு ஏற்பட்ட பிறகும், அது முழுதாக உணரப்படவில்லை ,காரணம், அந்த இடைக்காலத்தின் பின்பு வந்துள்ள தமிழ்ப்பண்டிதப்படிப்பு எதுவும் அந்த அக உலக ஓட்டத்தை எட்டவில்லை,எனினும் இயல்பிலேயே சுரணையுள்ள படைப்பாளிகள் அதை உணர்ந்துக்கொண்டார்கள்.

அதனால் தான் புதுமைப்பித்தன் அன்று மவுனியிடம் சொன்னார், 'அகநானூற்றின் மன உலகம் இந்தப்பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால் இன்று உன் கதைகளையும், என் கதைகளையும் புரியவில்லை, தெளிவில்லை என்று இவர்கள் சொல்ல மாட்டார்கள்.

.....

தமிழ் பண்டிதர்கள் போனாலும் போனார்கள் ,இன்று இங்கிலீஷ் பண்டிதர்கள் அவர்கள் இடத்தைப்பிடித்துக் கொண்டார்கள். பாஷை என்னவானாலும் பண்டிதர் பண்டிதர் தான் என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள். இங்கிலீஷ் இலக்கிய பரிச்சயம் என்ற போர்வை ,இவர்களது குறுகிய பார்வைகளுக்குப் போர்வையிடுகிறது. இங்கிலீஷ் மணமே தெரியாத வெற்றிலை கடைக்காரர்களும், ஜவுளிக்கடைக்காரர்களும் உணர்ந்து ரஸிக்கிற எழுத்தை ,இவர்கள் தங்கள் பாண்டித்யத்தின் மேடையில் நின்று விசிறிவிடுகிறார்கள்.

--------------------

மேற்சொன்ன எழுத்து விவரணங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் அடியேனது அல்ல ...ஹி...ஹி அதான் எங்களுக்கு தெரியுமே ... உனக்கு விக்கிப்பீடியாவை காப்பி அடிச்சு மொழிப்பெயர்த்து எழுதத்தானே வரும், இது போல முதல் தரமான இலக்கிய சம்பாஷணைகள் எல்லாம் செய்ய வராதேனு ,மனசுக்குள்ள நீங்க சொல்லுற அந்த "மைண்ட் வாய்ஸ்' எனக்கும் கேட்குது அவ்வ்!

(கவிஞர்.தருமு சிவராம் என்கிற பிரமீள்)

சுமார் கி.பி 1960 களில் எழுத்தாளர் மற்றும் படைப்பாளியுமான மறைந்த, சி.சு.செல்லப்பா அவர்கள் நடத்திவந்த "எழுத்து "என்ற இலக்கிய தரமான தமிழ் பத்திரிக்கையில் நவீன புனைவாளர்,கவிஞர், கட்டுரையாசிரியர் ,இலக்கிய விமர்சகருமான  மறைந்த"தருமு அரூப் சிவராம்" என்கிற பிரமீள் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "தமிழின் நவீனத்துவம்" என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது, வெளியீடு நற்றிணை பதிப்பகம், (விலை 140 ரூ).



தருமு அரூப்  சிவராம்(கி.பி 1939-1997) , இலங்கை திருகோணமலையில் பிறந்து , தமது 20 ஆம் வயதுகளின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு வந்து , நவீன தமிழ்ப்படைப்புலகில் சல சலப்பை உண்டு பண்ணும் பல படைப்புகளை தந்தவர்.  இக்காலத்திலும் பின்நவீனத்துவ படைப்பாளிகளின் ஆதர்சமாக விளங்கக்கூடியவர். நவீன தமிழிலக்கியத்தின் நடமாடும் துன்பியல் சின்னமாக அக்காலத்தில் அலைந்து திரிந்து கி.பி 1997 இல் வேலூர் அருகே கரடிக்குடி எனும்  இடத்தில் அநாதரவாக  இயற்கை எய்தினார்.

சு.ரா அவர்களின் சமகாலத்தவர், நட்பாக இருந்து ,பின் பூசலாக மாறி போட்டுக்கொண்ட இலக்கிய சண்டைகள் பற்றி எழுத்துலகில் மர்மக்கதை போல ஒரு அத்தியாயம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பது சிறப்பு! இந்த கட்டுரையில் கூட "ஜவுளிக்கடை முதலாளிகள்' என ஊமக்குத்தாக குத்தியிருப்பது சு.ராவையே :-))

எதுக்கு இந்த பழங்கதைய இப்போ பேசிட்டு ,இதெல்லாம் இலக்கியவியாதிகள் சமாச்சாரமாயிற்றே ... வடை சுடுற எடத்தில வவ்வாலுக்கு என்ன வேலைனு கேட்கலாம் , மேட்டர் இருக்கே,  தற்காலத்தில் தமிழை நவீனப்படுத்தவும் ,சாஸ்வதமாக நிலைத்திருக்க செய்யவும் லத்தின் லிபியில் தமிழ் எழுதப்பட வேண்டும் போன்ற செயமோகத்தனமான ஆலோசனைகளுக்கு , இக்கட்டுரையில் ஒரு பதில் உள்ளது, எனவே தான் அடியேன் சிரமம் பாராது அந்நூலில் இருந்து எடுத்தாண்டுள்ளேன்( டேய் ...காப்பி அடிச்சுட்டு என்னா பேச்சு பேசுற அவ்வ்)

# தருமு சிவராம் அவர்கள் , ஆரம்பத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வமுடன்  பங்கேற்றுவிட்டு , தனித்தமிழ் என்பது சிருஷ்டி எழுத்துக்களுக்கு தடையாக இருக்கும் என பின்னர் முடிவெடுத்து , தனித்தமிழ் இயக்கத்தினை விமர்சித்து அதற்கு எதிராக செயலாற்றியவர், அப்போ தமிழின துரோகியானு அவசரப்பட்டு 'ரப்பர் ஸ்ஸ்டாம்ப்" எடுக்காதிங்க அவ்வ்!

 தமிழ் புதிய சொற்களை சுவீகரித்துக்கொள்ள வேண்டும், அப்படி இருந்தும் தமிழ் - தமிழாகவே நிலைத்திருக்கும் , தமிழே சிறப்பான நவீனப்படைப்பிலக்கிய மொழி என்பதே அவரின் பார்வையாகும்.

அவரின் பலக்கருத்துக்கள் சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் இருக்கும், இக்கட்டுரைத்தொகுப்பிலும் அத்தகைய முரண்கள் உள்ளன.

# நவீன படைப்பாளிகள் அக உலகத்தர்சனத்தின் அடிப்படையில் எழுதுபவர்கள், மொழி அடிப்படையில் வெற்று வார்த்தை கோர்வைகளாக பார்க்காமல் ' அவற்றில் உள்ள "மீ மொழி" (meta language)யை வாசகன் கண்டுக்கொண்டால்  அக உலக தர்சனம் கிட்டும் என்கிறார். அக உலக தர்சனத்தினை காண கைய புடிச்சு அழைத்து செல்வது மட்டுமே எழுத்தாளனின் வேலை ,வாசகனுக்கு அங்கே என்ன அனுபவம் கிடைக்கும், தர்சனத்தின் முடிவென்ன என்பதெல்லாம் அல்லவாம்!

ஆனால் அக உணர்வுகளின் வெளிப்பாட்டை "பழந்தமிழ் அதாவது தனித்தமிழ்' வெளிப்படுத்தாது என்பதே அவரின் குறைப்பாடு,ஆனால் புதுமைப்பித்தன் ,மவுனியிடம் ,அகநானூற்றின் அக உணர்வு நிலையை தான் உதாரணம் காட்டி நவீன எழுத்தாளர்களின் அக உணர்ச்சி படைப்புக்களை ஒப்பீட்டு பேசியுள்ளார் எனக்குறிப்பிடுகிறார், எனவே பழந்தமிழிலும் அக உலக தர்சனம் காட்டக்கூடிய எழுத்துக்கள் இருந்துள்ளது,ஆனால் நம்ம நவீன எழுத்தாள மக்களுக்கு தான் "பழந்தமிழ் சொல்லறிவு" மட்டுப்பட்டு விட்டமையால் , அக உலக பார்வையில் பழந்தமிழில் எழுத இயலாமல் போச்சு, ஆகவே குறைபாடு என்பது மொழியில் இல்லை அதனை பிரயோகிப்பவரிடம் தான் உள்ளது என்பதை எளிதாக உணரலாம்.

# 1960 களில் அக உலகப்பார்வையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துக்களே மேன்மையானது , மற்றவை எல்லாம் சில்லறை வியாபார எழுத்துக்கள் என குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியின் எழுத்துக்களை எல்லாம் அப்படித்தான் ஒதுக்கி தள்ளுகிறார்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் இருவருமே தனித்தமிழ் என்ற "கான்செப்ட்"டை விரும்பாதவர்கள். ஆனால் தருமு சிவராமுக்கு கல்கியின் எழுத்துக்கள் ' வர்த்தக பரிவர்த்தனை ,சில்லறை எழுத்துக்களாகவே" பட்டிருக்கு.

ஆனால் தருமு சிவராம் ,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தினை விட தமிழ் மேலான மொழி எனவும் கருத்தாக்கம் கொண்டவர், இதனை அவரது விமர்சனக்கட்டுரைகளில் பல இடங்களில் காணலாம்.

நிகழ்காலத்தில் செயமோகர் போன்றவர்களும் தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது , எனவே இலத்தின் எழுத்துருவில் பதிப்பிக்கணும் என்கிறார், உண்மையில் வாசிக்கும் பழக்கம் , புத்தக விற்பனை குறைவாக இருக்கானா ,அப்படிலாம் இல்லை, பல நூல்கள் நல்லாத்தான் விற்பனை ஆகிட்டிருக்கு. அப்புறம் ஏன் இப்படியான புலம்பல்கள் என்றால் ,எல்லாம் அவரவர் படைப்புக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே "கணிப்பு" சொல்கிறார்கள், போதாக்குறைக்கு அதை வச்சே ஒட்டு மொத்தமாக தமிழுக்கே ஒரு புதிய மாற்றம் வேண்டும் என்கிறார்கள்.

தருமு சிவராமால் சில்லறை எழுத்து என புறம் தள்ளப்பட்ட கல்கியின் படைப்புகள் இன்றும் புத்தக சந்தையில் அதிகம் விற்பனையாகி ,தமிழ் வாசகர்களின் இடையே வாசிக்கும் பழக்கத்தை தூண்டுகிறது என்பது மிக ஆச்சர்யமான ஒரு முரண் நகை.



சில்லறை எழுத்தோ அல்லது அக உலக உணர்ச்சிகளை காட்டும் உன்னத சிருஷ்டி எழுத்தோ , ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் தமிழ் படைப்புலகில் இருந்துக்கொண்டுதானுள்ளது, அதனதன் சந்தைக்கு எவ்வித பங்கமும் இல்லை, ஆனால் இந்த அறிவு சீவி எழுத்தாளர்கள் தான் எல்லாக்காலத்திலும் ஏதேனும் ஒரு முறைப்பாட்டுடன் புலம்பி வந்துள்ளார்கள், அது இன்றும் செயமோகனத்தனமாக தொடர்வது காலத்தின் கட்டாயம் அவ்வ்!

நாம் கூட ,பொன்னியின் செல்வன் முழுத்தொகுதி - 240 ரூ (மலிவுப்பதிப்பு), சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - 240 ரூ(மலிவுப் பதிப்பு) ஆகியவற்றை புத்தக சந்தையில் வாங்கினேன், ஒவ்வொரு புத்தகமும் சுமார் 500 பக்கங்கள், அதுவும் ஏ-4 அளவில், கெட்டி அட்டையுடன் உள்ளது. கொடுத்த காசுக்கு மதிப்பு ,மீண்டும் படிக்கவும் தூண்டுகிறது.  எனவே தமிழன்(ஹி..ஹி அடியேனே) இப்பவும் தமிழில்  படிக்க ஆர்வமாத்தான் உள்ளான் , அவனுக்கு புரியும் படியும், நியாயமான விலையிலும் புத்தகங்கள் வந்தால் , ஆர்வத்துடன் வாங்கிப்படிக்கவே செய்வான்,ஆனால் அதை எல்லாம் விட்டுப்புட்டு தலகாணி சைசில் புரியாத வார்த்தை ஜோடனைகளில் எழுதிவிட்டு , 500 ரூபானு விலை வச்சால் எப்படி வாசிக்க முன்வருவான்?



எனவே உத்தம படைப்பாளிகள் தங்களுக்கான சந்தை என்ன , வாசகர்கள் யார் என உணர்ந்து அதற்கேற்ப படைப்புகளை செம்மையாக வழங்க முனைப்புக்காட்டினால் படைப்புலகில் அழியாப்புகழ் கிடைக்கும் என்பதே யதார்த்தம்!
-----------------------------------------

பின்குறிப்பு;

# எலக்கியம் பத்திலாம் அதிகம் பேசாமல் வாசிக்க மட்டுமே விரும்புவேன் ,ஆனால் இந்த எலக்கியவியாதிகள் கடைசீல என்னையும் எலக்கியம் பேச வச்சிடுறாங்களே அவ்வ்!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கிப்பீடியா, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!

# கவிஞர் பிரமீள் குறித்து இணையத்தில் காணக்கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகள்,

# http://maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=158&Itemid=34

# http://solvanam.com/?p=24488

# http://www.blog.beingmohandoss.com/2007/10/blog-post_30.html

# http://ravisrinivas.blogspot.in/2008/07/blog-post_03.html

நன்றி!