Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Saturday, December 28, 2013

அஃதே இஃதே-8

(நல்ல மேய்ப்பர்...ஹி...ஹி..!)


GOOD SHEPHERD.

மேரியம்மா புள்ள ஏசய்யாவுக்கு பொறந்த நாளுனு ஊருக்குள்ள எல்லாம் பேசிக்கிட்டாங்க, நமக்கு யாருவூட்டு பொறந்த நாளு, கண்ணாலம்னாலும் ஒன்னுதேன் , ஊருல கண்ணாலம் மாருல சந்தனம்னு கெளம்பிடுறது , பொழுது சாயச்சொல்ல போய் கேக்கு சாப்புட்டு வரனும் ,பின்ன ஊருல நல்லது கெட்டதுனா என்னனு போய்க்கண்டுகிட வேணாமா?  அப்புறம் என்னத்துக்கு மனுசப்பயலா பொறந்தோங்கிறன்?

ராவுத்தர் "ரம்சான்" நோம்பு வச்சு பிரியாணி கொடுத்தாலும் திங்கிறது தான் ,நமக்கு அல்லா ச்சாமியும் ஒன்னுந்தேன்,அய்யனார் சாமியும் ஒன்னுந்தேன்! எந்த ச்சாமியாச்சும் நம்மள துள்ள துடிக்க  வெட்டணும்,கொல்லணும், அழிக்கணும்னு சொல்லுதா? அப்படி தூசானமாச்சொல்லுறதுலாம் யாரு? எல்லாம் அவனுங்கந்தேன் அதான் அவனுங்க ... கொடியப்பிடிச்சிக்கிட்டு வோட்டுக்கேட்டு வருவாய்ங்களே அவனுங்களேந்தேன்...முன்னலாம் கட்சி சின்னத்த காட்டி வோட்டுக்கேட்டாய்ங்க ... அப்புறம் ஊருக்குள்ள ஏகப்பட்ட பயப்புள்ளைக "தனி தனியா சின்னம்" போட்டுக்கிட்டு வோட்டுக்கேட்கவும் சாமிப்பேர சொல்லி ஓட்டுக்கேட்க "சண்டைய கெளப்பிவிட்டு" நம்ம ச்சாமிய கும்புடுற பயக எல்லாம் நமக்குதேன் வோட்டு போடனும் ,இல்லாங்காட்டி ஊருல எல்லாம் "அவனுங்க ச்சாமியாப்பூடும்னு" சொல்லி பயங்காட்டி வோட்டுக்கேட்க ஆரம்பிச்சுட்டானுங்க, இதெல்லாம் செய்யச்சொல்லி எந்த சாமிய்யா சொல்லிச்சு? சாமிக்கு அரசியல் தந்திரமும் தெரியாது ஆரியருங்க மந்திரமும் தெரியாது!

வெள்ளைக்கார தொரைங்க மொத மொதல்ல கப்பல்ல வந்து மேரியம்மாவுக்கு செலை வச்சு கோயில் கட்டணும்னு சொன்னப்போ ,மேரியம்மனும் நம்ம மாரியம்மனும் ஒன்னுதேன்னு நெனச்சவங்கலாம் யாரு? எல்லாம் நம்ம பயகதேன்... அதோட மட்டுமா விட்டாங்க மொத ஆளா முன்ன நின்னு செங்கல்,மணல் எல்லாம் கொடுத்து ,ஆளா பேரா நின்னு கோவில் கட்டவும் உதவுனாங்க கூடவே ஈசானிய மூலையில மொதக்கல்லு வச்சு ..கல்ப்பூரம் கொளுத்தி,தேங்காப்பழம் வச்சு படைச்சு ஒரு கோழிய அறுத்து காவுக்கொடுத்தா "தொட்டக்காரியம்" தொலங்கும்னு நல்ல வழியும் ச்சொன்னவய்ங்க தான் நம்ம மக்கள்,அம்ப்புட்டு வெள்ள மனசப்பூ!

மேரியாத்தான்னா, வெள்ள சீலைக்கட்டி ,பொத்தவம் படிச்சு ,படையலுக்கு கேக்கு வச்சு கும்புடுறச்சாமி, மாரியத்தான்னா, மஞ்ச சீலைக்கட்டி , கரகம் எடுத்து கூழ் ஊத்திக்கும்புடுறச்சாமினு தான் நம்ம மக்க பார்த்தாங்க அதத்தாண்டி வேற எந்த வேத்துமையும் பார்க்க  நம்ம பாட்டன் பூட்டன்களுக்கு தெரியாதப்பூ!

படிக்காத சனங்களா இருந்தாலும் கும்புடுறதுல என்னப்பு சண்டைனு சமரசமா வாழ்ந்தவய்ங்க, ஆனா இப்ப எல்லாம் கொழாப்போட்டு படிச்சுப்புட்டு என்னமோ இன்டெரெட்டாம் அதுல போயி உஞ்சாமி பெருசா ,எஞ்சாமி பெருசா ,கறி சோறு துண்ணலாமா கூடாதான்னுலாம் சண்டைப்போட்டுக்கிறாய்ங்க!என்னத்த படிச்சாங்களோ தெரியலப்பு...படிப்பு இருக்கு ஆனா பண்பு இல்லையே... நான் என்ன செய்வேன்ன்ன்!!!

காலங்காலமா ஊருக்கு ஒரு சாமி,ஆளுக்கு ஒரு சாமினு கும்புட்ட மக்கந்தேன் ஆனா காஷ்மீர்  எல்லையில வெளிநாட்டான் சண்டைக்கு வரான்னா "வெற்றி வேல் வீரவேல்னு" சொல்லிக்கிட்டு துண்ட உதறி தலையில உருமாக்கட்டிக்கிட்டு வேட்டிய தார்ப்பாச்சா இழுத்து முடிஞ்சுக்கட்டிக்கிட்டு ,கன்னியாக்கொமரியில இருந்து ரயிலேறி மொத ஆளா ஓடிப்போய் யுத்தத்துல கலந்துக்கிட்டாய்ங்கப்பூ ,அதமாரியா இன்னிக்கு பெருசா படிச்ச பயப்புள்ளைக இருக்காங்க ...படிச்சதும் மொதல்ல எந்த வெளிநாட்டுக்கு ஓடிப்போலாம்னு ஊருல இருக்க எல்லா வெளிநாட்டுக்கம்பெனி வாசலுலவும் கெடையா கெடக்காய்ங்க.



சாமிலாம் யாரு? யாருங்கிறேன்... எல்லாம் ஒருக்காலத்தில நம்ம பாட்டன் பூட்டன் தாத்தனா இருந்தவய்ங்கதேன் ,அவிங்க காலத்துக்கு பொறவு சாமியா நெனச்சு கும்புடுறோம், வடக்க, மலைக்கு அந்த பக்கம் ஆடு மேச்சுட்டு சனங்களுக்கு  நல்லகதி கிடைக்கனும்னு புத்திமதி சொன்னவருதேன் மேரியம்மா புள்ள ஏசய்யா, அதமாரி மலைக்கு இந்த பக்கமா மாடு மேய்ச்சுட்டு சனங்களுக்கு நல்ல புத்தி சொன்னவரு தான் கிச்சிணய்யா ... அவரு ஆட்டுக்கார வேலன்னா இவரு மாட்டுக்கார வேலன்... இதுல என்ன பெருசா ஒசத்தி தாழ்த்தினு மல்லுக்கட்டிக்கிட்டு நிக்க இருக்கு?

நமக்கு தெரிஞ்சதெல்லாம் சாமினா கும்பிட்டுக்கணும் சட்டம்னா மதிச்சு நடந்துக்கனும் அம்புட்டுதேன். அத்துவானக்காட்டுல புழுதி ஒழவு ஓட்டி சோளம் வெதைச்சுட்டு வாரோம் ,யாரு தண்ணி ஊத்துனா?அதுக்கெல்லாம் காவ ஆரு ? எல்லாம் முனிசுபரனும் அய்யனாருந்தேன் காவல், உடையவன் இல்லாம வேற ஆராச்சும் போய் கைய வச்சிட உடுவாய்ங்களா? மீறி கைய வச்சா "ரெத்தங்கக்கி சாவனும்" அம்புட்டு உக்கிரமான காவதெய்வங்க, அதமாரியே ஆடு ,மாடு மேச்சலுக்கு வுடுறோம் நாய்,நரினு ஒன்னும் சீண்டாம ,களவு போகமா அத்தனையும் வூடு வந்துறும் எல்லாம் சுடலை மாடன் காவல்,இம்புட்டு காவந்து செய்யுற ச்சாமிய நாமளும் சும்மா உடுவமா ... அறுப்பு முடிஞ்சதும் மொத நெல்லு,சோளம்,கம்பு ,கேவுருனு எதா இருந்தாலும் காவக்காத்த சாமிக்குந்தேன், பொங்க வச்சு ,கெடா வெட்டி படையல் போடாம வெள்ளாமையில இருந்து ஒரு குறுணிக்கூட விக்க மாட்டோம்ல.

அய்யனாரு, முனிஸ்பரன், சுடலமாடன்,கிச்சிணய்யானு எல்லா சாமியும் கும்பிட்ட மக்கய்தேன் ,அல்லாச்சாமி நம்ம நாட்டுக்கு வந்தப்போ அவரையும் கும்புட்டுக்கிட்டாய்ங்க, ஏசய்யா வந்தப்பவும் கும்புட்டுக்கிட்டாய்ங்க ,சாமிங்க பேருதேன் வேற ,ஆனா கும்புடுற மக்க யாரு எல்லாம் நம்ம மக்கந்தேன், பொறவு என்னத்துக்கு சண்டைங்கிறேன்?

சனத்தொகை போல சாமிங்களும் அதிகமாகி அடிதடியா ஆனப்போ, எலே காட்டுப்பயலுகளா எதுக்கு சண்டைனு திட்டி, பெரியார் "ராமசாமிய்யா" கூட்டம் போட்டு சொன்னப்போ அதுக்கும் மொத ஆளா ஓடிப்போயி "அய்யா வாழ்க"னு தொண்ட நரம்பு பொடைக்க கோசம் போட்டதும் நம்ம மக்கதேன்.

வடக்கத்திக்காரய்ங்க "இந்தி" தான் படிக்கணும்னு சொன்னப்போ ,காட்டுமிராண்டி பாஷைனு சொன்னாலும் அதான் எங்க பாஷை, தமிழ விட முடியாது ...தமிழை காப்பாத்த ரயிலை மறிடானு பெரியாரய்யா சொன்னதும் முன்ன ஓடிப்போயி தண்டவாளத்துல தலைய கொடுத்ததும் நம்ம மக்கதேன்.

சாமி இருக்குனு சொன்னாலும் இல்லைனு சொன்னாலும் தமிழன், தமிழ் நாடுனு சொன்னால் எல்லாருமே ஒன்னுக்கூடி தான் இந்த மண்ணுல நின்னாங்க,இனிமேலும் நிப்பாய்ங்க அதுல ஒரு மாத்தமும் வாராது.

மேரியம்மா புள்ள ஏசய்யாவுக்கு பொறந்த நாளுனு சொல்லி மாதாக்கோயில்ல மணியடிச்சு கூப்பிட்டுருக்காய்ங்க , மதிச்சு கூப்புடுறது மனுசத்தன்மை , அதை மதிச்சு போறது பெரிய மனுசத்தன்மை ... எனக்கு பெரிய மனுசத்தன்மை இருக்கு நா போய் கேக் சாப்புட்டு வாரேன்...வாரிகளா போவோம் ?

அந்த மாதாக்கோயில் மணி அடிக்குதய்யா ...

மார்கழி மாசக்குளிர் அடிக்குதய்யா ...!!!

ஓ ஏசய்யா தோ வாரோமய்யா ,வாரோம்!

 நீரும் பெரிய மனுசனா இருந்தா வாருமய்யா போலாம்..வரச்சொல்லோ "இரானி பாய்" டீக்கடையில தேத்தண்ணி குடிச்சிப்புட்டு வரலாம் ..இந்த குளிருக்கு சூடாத்தேத்தண்ணீ குடிச்சா தேவாமிருதமா இருக்குமய்யா... அடச்சும்மா வாரும் தேத்தண்ணிக்கு பைசா கூடா நானே கொடுக்கேன்...ஹி...ஹி இன்னிக்கு நாந்தேத்தண்ணி வாங்கி கொடுத்தா நாளப்பின்ன காப்பித்தண்ணி வாங்கி கொடுக்காமலா போயிரப்போறீர்? நீரும் பெரிய மனுசந்தேன்!!!

பின்குறிப்பு:

கடவுள் இருக்குனு நம்புறவன விட கடவுள் இல்லைனு நம்புறவன் "மனிதனாக "வாழ்கிறான்!

---------------------------

அவார்டுக்கு ஆப்பு!

ஆந்திராவின் புகழ் மிகு நடிகர்களான  "பெத்தராயுடு" மோகன்பாபு, மற்றும் நகைச்சுவை புயல் "பிரம்மானந்தம் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பத்மாசிரி விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க சொல்லி "ஆந்திர உயர் நீதி மன்றம்" உத்தரவிட்டுள்ளது.



காரணமென்னவெனில் ,சமீபத்தில் மோகன் பாபு குடும்பத்தார் தயாரித்த "Denikaina Ready" என்ற தெலுங்கு படத்தின் விளம்பரம் மற்றும் டைட்டிலில் இருவரும் தாங்கள் பெற்ற பத்மசிரி விருதுகளை அடைமொழியாக பயன்ப்படுத்தி இருக்கிறார்களாம், அதற்கென்ன எல்லாரும் தமிழ் நாட்டில அதைத்தானே செய்கிறார்கள் என நினைக்கலாம், ஆனால் மத்திய அரசின் விருதுக்கான விதிமுறைகள் படி விருதுப்பெற்றவர் அவற்றினை பெயருக்கு முன்னால்,பின்னால் அல்லது விளம்பரம் , லெட்டர் பேட் ,விசிட்டிங் கார்ட் என எதிலும் பயன்ப்படுத்தக்கூடாதாம். மீறிப்பயன்ப்படுத்தினால் விருது ரத்து செய்யப்படுமாம்.

இது வரையில் மத்திய அரசாக அப்படி ரத்து செய்ததேயில்லை, ஆனால் இச்சட்டத்தினை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட பா.ஜக கட்சியினை சேர்ந்த ஒருவர் ,ஆந்திர உயர் நீதி மன்றத்தில் "பொது நல வழக்கு" தொடர்ந்துவிட்டார் ,அதனடிப்படியிலேயே ஆந்திர உயர் நீதி மன்றம் "விருதுகளை " இரு நடிகர்களும் தாங்களாகவே திரும்ப ஒப்படைத்து விடுமாறு உத்திரவிட்டுள்ளது.

செய்தி:

The AP High Court on Monday faulted the actors for prefixing the name of the award to their names in the credits of the Telugu movie Denikaina Ready that was released in 2012.

Chief Justice Kalyan Jyoti Sengupta pointed out that it would be better for the actors to surrender their awards to the Centre in view of the allegation as gentlemen, and to uphold morals.

The Chief Justice, along with Justice P.V. Sanjay Kumar, was dealing with a PIL filed by senior BJP leader N. Indrasena Reddy, who had challenged the alleged inaction of the Centre in not recommending to the President to annul the awards.

http://www.deccanchronicle.com/131224/news-current-affairs/article/mohan-babu-brahmanandam-get-hc-stick

செய்தி- டெக்கான் கிரானிக்கல், நன்றி!

இவ்வழக்கின் அடிப்படையில் தமிழ் நாட்டில் பலரும் விருதினை திரும்ப ஒப்படைக்கும் சூழல் உருவாகலாம் , லோகநாயகர் முதற்கொண்டு பலரும் சிக்கும் வாய்ப்புள்ளது.


லோகநாயகரின் பட விளம்பரங்களில் தவறாமல் "பத்மசிரி" எனப்போடப்பட்டிருக்கும், இணையத்தில் அப்படிப்பட்ட படத்தினை தேடிய போது அவரது ரசிகமணி "சந்தியர்கரண்" என்பவரின் தளத்தில் கிடைத்த படம் இது.படத்திற்கு நன்றி!




இசைப்புயல் ஏ.ஆர்.ரெஹ்மானும் பெயருக்கு முன்னால் "பத்மசிரி" எனப்போட்டுக்கொள்வதை அனுமதித்துள்ளார்.

தெனாலி பட டைட்டிலில் "பத்மசிரி" ஏ.ஆர்.ரெஹ்மான் என வந்துள்ளது.

இன்னும் வைரமுத்து,விவேக் போன்றோரும் விருதினை பெருமையாக திரைப்பட டைட்டிலில் பயன்ப்படுத்தியுள்ளதை பார்த்திருக்கிறேன். படங்கள் கிடைத்தால் அவற்றையும் இணைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் அவர்களும் "பத்மவிபூஷன்" விருது பெற்றுள்ளார் ,ஆனால் அவரது விளம்பரங்கள் விருதுடன் காணக்கிடைக்கவில்லை, தலைவரு வழி எப்பவும் தனி வழி தான் , சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விட வேற பட்டம் தேவையில்லைனு நினைச்சு ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டார் போல!

# மன்னாதி மன்னர்!


புரட்சித்தலைவர் என அன்புடன் அழைக்கப்படும் "எம்சிஆர்" அவர்களின் திரை கலையுலக பயணம் அமெரிக்க இயக்குனர் எல்லீஸ். ஆர்.டங்கனின் "சதிலீலாவதி"(1936) படத்தில் ஒரு சிறிய வேடத்தில் காவலராக நடித்ததில் இருந்து தான் துவங்கியது. இதே படத்தில் தான் எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா ,என்.எஸ்.கிருட்டிணன் ஆகியோரின் திரையுலக பயணமும் துவங்கியது. ஹி...ஹி ...இப்படத்தில் தான் தமிழ் சினிமாவின் "ஐடெம் சாங்க்" கலாச்சாரத்தின் முதல் புள்ளியாக ஒரு "காபரே" டான்ஸ் பாட்டும் இடம்பிடித்தது. அதன் பின் வெளியான படங்களில் "கிளப் டான்ஸ்" இல்லைனா படம் ஓடாதுனு கலையுலக சிற்பிகளே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் அவ்வ்!


சில பல சிறிய வேடங்களை தாண்டி பின்னர் "ராஜகுமாரி"(1947) படத்தில் இருந்து கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார், இப்படி வெற்றிகரமாக திரையுலகில் பவனி வந்த காலத்தில் கி.பி 1953 இல்  "ஜெனோவா" என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் மலையாள திரையுலகிலும்  கதாநாயகனாக அறிமுகமானர். இப்படமே எம்சிஆரின் ஒரே மலையாளப்படம் ஆகும்.


ஜெனோவா திரைப்படம் கிருத்துவ புராணத்தின் அடிப்படையில் உருவான திரைப்படமாகும், இப்படத்தில் ராணி ஜெனோவாக "பி.எஸ்.சரோஜாவும்" யூதமன்னர் சிப்ரஸாக "எம்சிஆரும்" நடித்தனர். இயக்கம் எஃப்.நாகூர், இசை.எம்.எஸ்.விசுவநாதன்(முதல் மலையாள இசையமைப்பு).

கி.பி 1953 ஆம் ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று திரையிட திட்டமிடப்பட்டு , தயாரிப்பு சிக்கல்களால் 13 நாட்கள் தாமதமாக வெளியானாலும் ,அவ்வாண்டின் மிகப்பெரிய மலையாள வெற்றிப்படமாக "ஜெனோவா" அமைந்தது.பின்னர் இரு மாதங்களுக்கு பிறகு தமிழிலும் அதே பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாயிற்று.

கதைப்படி மன்னர் சிப்ரசின் மனைவி ஜெனோவா, திருமணம் ஆகி சில நாட்களில் போருக்காக மன்னர் பரதேசம் சென்றுவிடுகிறார்,ஆனால் அப்பொழுதே ராணி "ஜெனோவா" கருவுற்றுவிடுகிறார். அது மன்னருக்கு தெரியாது.

சிப்ரஸ் போர்க்களத்தில் இருக்கையில் மந்திரி "கோலோ"(மலையாளத்தில் ஆலப்பி வின்சென்ட்,தமிழில் பி.எஸ்வீரப்பா)வுக்கு ராணி ஜெனோவா மீது மையல் உருவாகி அடைய முயற்சிக்கிறார்,அவ்வேளையில் நம்பிக்கையான வேலையாள் "கார்த்தோஸ்" குறுக்கிட்டு ராணியை காப்பாற்றுகிறார், வெளிப்படையாக தனது சதியை காட்டிக்கொள்ள இயலாத நயவஞ்சக "மந்திரி" ராணிக்கும் வேலைக்காரன் "கார்த்தோசுக்கும்" கள்ளத்தொடர்பு எனக்கதைக்கட்டி ,இருவரையும் சிறையில் அடைக்கிறார்.


யுத்தம் முடிந்து வரும் மன்னர் "சிப்ரசோவும்" மந்திரியின் பேச்சினை நம்பி ,ராணி ஜெனோவாவினை நாடுக்கடத்திவிட்டு, வேலையாள் "கார்த்தோசுக்கு" மரணதண்டனை விதிக்கிறார். கர்ப்பிணியாக காட்டில் திரியும் ராணி ஜெனோவாவினை காக்கும் பொருட்டு "மேரியம்மா" பிரசன்னம் ஆகி சுகப்பிரசவம் ஆக செய்து , தாயையும் சேயையும் காக்கிறார். அவர்கள் காட்டிலேயே வாழ்கிறார்கள்.

இதற்கிடையில் நயவஞ்சக மந்திரி "மன்னர் சிப்ரசோவை" சிறையில் அடைத்து ஆட்சியைப்பிடிக்கிறார்,ஆனால் படைத்தளபதிக்கும்(எம்.ஜி.சக்கரபாணி) மன்னராக ஆசை எனவே அவரும் கிளர்ச்சி செய்கிறார், இடையில் மன்னரின் விசுவாசிகள் ,மன்னரை மீட்கிறார்கள் , மூன்று தரப்பாக சண்டை நடக்கிறது, படைத்தளபதி மட்டும் இறக்கிறார், மந்திரி கோலோ தப்பிவிடுகிறார்.

பின்னர் ராணி ஜெனோவா நிரபராதி என அறிந்து தேடிச்செல்லும் மன்னர் சிப்ரசை ,மந்திரி கோலோ காட்டில் வழிமறித்து தாக்குகிறார்,சண்டையின் முடிவில் மந்திரி கொல்லப்படுகிறார்,ஆனால் காயமுற்ற மன்னர் சிப்ரசோ மயக்கமாகிவிடவே ,அப்பொழுது அங்கு வரும் அவரின் கானக புதல்வன் கண்டெடுத்து மீட்டு அன்னையுடன் சேர்க்கிறார், பின்னர் மனமாச்சரியங்கள் ஒழிந்து ,நாடு திரும்பி அனைவரும் மகிழ்வாக வாழ்வதாக "பாசிட்டிவ்" ஆக படத்தினை முடித்து மங்கலம் பாடுகிறார்கள்.

இப்படத்திற்கு மலையாளத்தில் எம்சிஆருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது செபாஸ்தியன் குஞ்சு மற்றும் குஞ்சு பாகவதர் ஆகும். ஒரு மலையாளப்படத்தில் நாயகருக்கு முதன் முதலில் டப்பிங் கொடுக்கப்பட்டது இப்படத்தில் தானாம். பாடல்களை ஏ.எம்.ராஜா மற்றும் பி.லீலா பாடியுள்ளனர்.



பின்னாளில் தமிழ் திரையுலகின் மாபெரும் வசூல் சக்ரவர்த்தியாக மாறியப்பின்னரும் "ஜெனோவா" படத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தினால் கிருத்துவ புராணப்படமொன்றில் ஏசுநாதராக நடிக்க வேண்டும் என்ற ஆசை எம்சிஆருக்கு ஏற்பட்டது. ஆனால் சரியான நேரமே வாய்க்கவில்லை போலும், பின்னர் 1971 இல் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜோசப் என்பவர் "ஏசுநாதர்" என்றப்பெயரிலேயே அவரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்க இருப்பதாக கூறி எம்சிஆரை அனுகவும் ,மகிழ்வுடன் சம்மதித்துள்ளார், மேக் அப் எல்லாம் போட்டு "ஏசுநாதர்" கெட் அப்பில் எம்சிஆரின் புகைப்படத்துடன் பத்திரிக்கை விளம்பரங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் ஏனோ  வெளியில் சொல்லப்படாத சில பல காரணங்களால் பின்னர் அப்படம் கைவிடப்பட்டது.



இத்திரைமுயற்சி எம்சிஆரின் திரைப்பட வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றென சொல்கிறார்கள். படம் உருவாகாமல் போனதற்கு காரணம் "வழக்கம்" போல எம்சிஆரின் இழுத்தடிப்பு எனவும் ,இல்லை படத்தயாரிப்பாளரின் வேறு படங்கள் தோல்வி அடையவே பண முடையால் தடைப்பட்டது என்கிறார்கள் ஒரு சிலர். இன்னும் சிலரோ , படத்தயாரிப்புக்காக வெளியிட்ட விளம்பரத்தில் வந்த "ஏசுநாதர்" உருவ  எம்சிஆரின் படத்தினையே ஏசுநாதராக கருதி மக்கள் வழிப்பட ஆரம்பித்துவிட்டார்களாம்  ,எனவே படம் வெளியானால் மக்களை தவறாக வழிநடத்தியதாக ஆகிவிடும் எனக்கருதி எம்சிஆரே படத்தினை நிறுத்திவிட்டு தயாரிப்பாளருக்கு செலவிட்ட தொகையினை அளித்துவிட்டார் என்கிறார்கள். உண்மை என்னவென எம்சிஆருக்கும் ,தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரியும்!!!

எம்சிஆரின்  நினைவு நாள் december-24.
----------------------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://www.hindu.com/mp/2010/04/05/stories/2010040550910400.htm

# http://www.hindu.com/mp/2011/04/25/stories/2011042550900500.htm

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
---------------------------------------

Wednesday, October 24, 2012

இசையும்-வசையும்:துவித்தர்கள் கைது.




நிகழ்காலத்தின் பரபரப்பு பிரபல்ய திரையிசை பாடகி மற்றும் சாஸ்த்திரிய சங்கீத பாடகி சின்மயி ஶ்ரீபதா அவர்களை துவித்தரில் ஆபாசமாக பேசி ,கொலை மிரட்டல்,பாலியல் வன்முறை என மிரட்டல் விடுத்த ஆறு பேர் மீது வழக்கு ,இருவர் கைது என்ற நிகழ்வாகும்.

மெய்நிகர் உலகான ,பதிவுலகு,துவித்தர் உலகு, முகநூல் உலகு , மற்றும் மின்வெட்டில் குதுகலிக்கும் மெய்யுலகு என அனைவரும் இந்நிகழ்வினை ,இந்நாளுக்கான பொழுது போக்கி என கூர்ந்து அவதானித்து சுவைபட எழுதியும் ,பேசியும் வருகையில் ,நிகழ்காலத்தின் நாட்டு நடப்புகள் பெரிதும் தெரியாமல் பெர்ஷியாவின் அக்கேமேனிய மன்னன் டாரியஸ்-1 கட்டிய பெர்சியாபொலிஸ் நகரம் எங்கே ,அரண்மனை எவ்வளவு பெரியது என கூகிளில் துழாவி சோம்பி திரியும் எனக்கும் லேசாக கிர்ரடிக்கவே என்ன தான் நடந்தது ,நடக்குதுன்னு மெல்ல சோம்பல் முறித்து இணையத்தில் துழாவினால் தொல்பொருள் ஆராய்ச்சியை விட சில சுவையான தகவல்கள் கிடைக்கவே ,பளீச்..பளீச் என என் மண்டைக்குள் பல்ப் எரிந்தது(பவர் கட்டிலும் பல்பு எரியுதாமா) ,அதனை இங்கே பகிர்கிறேன்.

துவித்தர் விவகாரம், விகாரமாக உருவாகி சைபர் கிரைம் வழக்காகி,கைதானதும் , தமிழக மீனவர்கள், இடஒதுக்கீடு என பலவற்றிலும் முதிர்ச்சியற்ற கருத்துகளை சொன்னது தான் விவாதமாகி, சண்டையாகி நின்றது என அனைவரும் சொல்வதால், அப்படி எல்லாம் இல்லை நான் தமிழ் பெண், தமிழ் வளர்த்த அய்யங்கார் பரம்பரை, தென் தமிழக மறவர் சீமை என்றெல்லாம் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார் பாடகி அவர்கள்.இது மேலும் ஆர்வத்தினை தூண்டவே,துவித்தர் மட்டுமல்லாமல் ,வலைப்பதிவும் வைத்திருக்கிறாரே , அதுவும் ஆங்கில வலைப்பதிவு அதில் எதாவது தேறுமா என படித்துப்பார்த்தேன்.

அவரது  வலைப்பதிவுக்கு "என்ன பெயர் வைப்பது" என தெரியவில்லை ,அதாவது அதாங்க பெயரே "what to name it"(இதே போல பெயரில் இளையராஜா ஒரு இசை ஆல்பம்(how to name it) வெளியிட்டிருந்தார் என நினைவு , வீடு படத்தில் பின்னணி இசையாக இதனை தான் பயன்ப்படுத்தியிருந்தார்கள் எனவும் நினைவு)

இனி பதிவில் இருந்து....

# The Ramnad Connection

சுட்டி:http://www.chinmayisripada.com/2011/02/untitled-7-ramnad-connection.html

அவரது வலைப்பதிவில் 2011 வாக்கில் எழுதப்பட்ட  "ராம்நாட் கனெக்‌ஷன்" என ஒரு இடுகை படித்தேன், அதில் வருவதாவது.

ராமநாதபுரம் சமஸ்தான ராஜாவாகிய 'ஷண்முக ரகுநாத சேதுபதியும்" , இவரது தாத்தாவும் பால்யகால சினேகிதர்கள், கல்லூரி தோழர்கள், மேலும் கிரிக்கெட் ஒன்றாக விளையாடுவார்கள். இவரது தாத்தாவை ராஜா "கொரளி அய்யங்கார்' என அழைப்பார் எனவும் ,ராஜா அக்கால மத்திய அரசில் அமைச்சர் ஆக சில காலம் இருந்தார் எனவும் முதல் பத்தியில் வருகிறது.

படம்-1


இதில் சில சிறு  பிழைகள் இருக்கிறது,

ராஜாவின் சரியான பெயர் -ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி.

மத்திய அமைச்சராக இல்லை, சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி , முறையே ராஜாஜி,காமராஜர் காலங்களில் வீட்டுவாடகை நிர்ணய அமைச்சராக தமிழக அரசின் அமைச்சரவையில் இருந்துள்ளார்.

சுட்டி:

http://en.wikipedia.org/wiki/Shanmugha_Rajeswara_Sethupathi

காலம் கி.பி.1909-1967.

1967 இல் சுமார் 58 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, இருக்கு பொறுமை காக்கவும்.

தாத்தாவின் நண்பரான ராம்நாட் ராஜாவின் சகோதரி "கணேஷ குஞ்சர நாச்சியாரும்", சகோதரர் "காஷிநாத் தொரை" அவர்களும் ,பாடகியின் தாயாருக்கு நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்கள் என்றும், அப்போதெல்லாம் சென்னை செனடாப் சாலையில் உள்ள அவர்களது பெரியவீட்டில் பல புகழ்மிகு சாஸ்த்திரிய சங்கீத வித்வான்கள் பாடுவார்கள் என்றும் அங்கேயே பல மணிநேரங்கள் செலவிட்டு அவரது தாயார் இசை அறிவை பெருக்கிக்கொண்டதாகவும், மேலும் காஷிநாத் தொரை அவர்கள் பல சங்கீதவித்வான்கள் பாடிய சக்ர தனம், மண்டுக தனம், மர்கத தனம் ஆகியவற்றை அவரது தாயாருக்கும் எப்படி பாடுவது என பாடிக்காட்டுவாராம், மேலும் பல மணி நேரங்கள் இசைப்பற்றி பேசியும் பாடியும் அறிவை பெருக்குவதற்கு அடித்தளம் வகுத்தது எனவும் சொல்லியுள்ளார்.

படம்-2



இசை தெரிந்தவர்கள் இதெல்லாம் செய்வது சகஜம் தானே என நினைக்கலாம்,அட இருங்கப்பா அதுக்குள்ள நீங்களா ஒரு முடிவை எடுத்துக்கிட்டு ,இன்னும் வருது கதை...

படம்-3.





சிறுவயதில் தந்தைவிட்டு சென்றதால் இன்றளவும் தந்தைப்பெயரை வெளியில் சொல்வதில்லை, மேலும் அவரது தாயார் மிகக்கஷ்டப்பட்டு பாடகியை வளர்த்துள்ளார் என்பதும் தெரிகிறது.பாடகியும் இளம்வயதிலேயே நன்கு திறமைமிக்கவராக விளங்கியுள்ளார்.

தாயாருக்கு 15 வயது ஆகும் போது ஆண்டு 1985-86 ஆக இருக்க வேண்டும் என தெரிகிறது. அப்படியானால் அவர் பிறந்த ஆண்டு 86-15=1971  என வருகிறது.

திருமணம் சுமார் 1983 வாக்கில் ,அதாவது 12 ஆவது வயதில் நடந்துள்ளது. 1983 காலகட்டத்தில் பால்ய விவாகம் செய்யும் அளவிலேயே தமிழகம் இருந்துள்ளாதா? என்ன ஒரு கொடுமை இதனை இச்சமூகமும்,சட்டமும் அங்கீகரித்துள்ளதே.

பாடகியின் தாத்தா ராமநாட் ராஜாவின் கல்லூரி தோழர் எனில் அவரது வயதை ஒத்தவர்ராக இருக்கவேண்டும். அதாவது 1909-10 காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பாடகியின் தாயார் பிறக்கும் போது தந்தைக்கு வயது 61 ஆகிறது என வருகிறது.அந்த காலத்தில் வயதான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது சகஜமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சரி அது போகட்டும் ராம் நாட் ராஜா "ஷண்முக ராஜேஷ்வர சேதுபதி 1967 இல் இறந்துவிடுகிறார் ,ஆனால் 1971 இல் பிறந்த பாடகியின் தாயார் எப்படி அவர் வீட்டில் நடந்த "அரசவை தர்பார் கச்சேரிகளை "கேட்டு அறிவை வளர்த்துக்கொண்டிருக்க முடியும்.அப்போது பிறக்கக்கூடயில்லையே.

மேலும் ராஜாவின் சகோதர,சகோதரிகளுக்கும் அப்போது சுமார் 50-55 வயது இருந்திருக்க வேண்டும், ஆனால் 1971 இல் பிறந்தவருக்கு நண்பர்களாக இருந்தார்கள் ,வீட்டில் நடந்த கச்சேரிகளில் பாடிய நுணுக்கங்களை பாடிக்காண்பித்து தாயாருக்கு அறிவு புகட்டினார்கள், மணிக்கணக்கில் இசைக்குறித்து பேசிக்கொண்டார்கள் என சொல்கிறார்.

1971 இல் பிறந்த குழந்தையாக இருந்திருப்பார், பேச ,பாட ஒரு 6 வயது ஆவது ஆகும் அப்படி எனில் 1977 இல் என வைத்துக்கொண்டாலும் அப்போது ராஜாவின் சகோதர ,சகோதரிகளுக்கு இன்னும் வயதாகி 60-65 வயதில் இருக்கலாம், அவர்களுக்கு பாடகியின் தாயார் நண்பர்கள், நெருக்கமானவர்கள் எனவும் சொல்ல முடியாது, சரி சின்னக்குழந்தையுடன் பழகினார்கள் என சொல்லலாம், ஆனால் ராஜாவின் வீட்டில் இசை தர்பார் நடக்கும் ,மணிக்கணக்கில் அங்கு இருந்து கற்றுக்கொண்டது,பட்டை தீட்டியது எல்லாம் இராஜா இறந்த பிறகு நடந்ததா? அதனை சொல்லவும் இல்லை.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் என்னவெனில் அவரது தாயார் ஒரு வலைப்பதிவு வைத்துள்ளார் ,அதில் அவர் தனது 15 வயதில் சின்மயி பிறந்து, கணவன் விட்டு சென்ற பின் தான் முறைப்படி இசை பயில தொடங்கினேன், அது வரைக்கும் ஒன்றும் முறைப்படி தெரியாது என்கிறார்.இதெல்லாம் நடந்தது மும்பையில் என்றும் சொல்கிறார்.

ஆனால் பாடகியின் வலைப்பதிவில் ,சென்னையில் பல மணிநேரம் சங்கீத செஷன்ஸ் நடக்கும்,காஷிநாத் தொரை அவர்களும் , அவரது சகோதரியும் ,தாயாரும் பாடி,பேசிக்கொண்டு இருப்பார்கள் என்கிறார்கள்.60-65 வயதில் இருப்பவர்கள் 12 வயதுக்குள் உள்ள சங்கீதம் கற்காத சிறுமியுடன் ,சக்ர தானம்,மக்ர தானம் எல்லாம் எப்படி பாடுவது என சங்கீத விவாதம் செய்துள்ளார்கள்.

----------------

The Tanpura of Ustad Abdul Karim Khan saheb:

சுட்டி:http://www.chinmayisripada.com/2011/02/untitled-10-tanpura-of-ustad-abdul.html

அவரது இன்னொரு இடுகையில் அவரது தாயாருக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள பிரபல புல்லாங்குழல் வித்துவான் மாலி என்கிற டி.ஆர் மகாலிங்கம் 100 ஆண்டு பழமையான ustad-abdul Karim Khan saheb பயன்ப்படுத்திய தம்புராவை கொடுத்தார் என ஒரு சம்பவத்தினை சொல்லியுள்ளார்.

படம்-4



அதில் வருவதாவது, சங்கீதம் கற்றுக்கொள்ள சுருதிப்பெட்டி சரி வராது என குருவான த்வாரம் மங்காதாயாரு (தாத்தாவின் வளர்ப்பு மகளாம்)சொல்லிவிட்டு ,சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற போது மாலி அவர்களை சந்தித்த போது ஒரு தம்புரா பெட்டி கேட்டதாகவும் ,அவர் வைத்திருந்த 100 ஆண்டுகள் பழமையான தம்புராவை கொடுத்ததாகவும் சொல்லியுள்ளார். அதுவும் விரிவாக சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல ஆன கட்டணம், பார்சல் கட்டணம் மற்றும் தம்புராவை ஒரு இசைக்கடையில் காட்டி 40 ரூ என விலை நிர்ணயம் செய்து அனைத்து கட்டணமும் வாங்கிக்கொண்டே  கொடுத்தார்கள் என எழுதியுள்ளார்.

படம்-5



சுட்டி:http://padmhasinit.blogspot.in/2006/02/womens-rights-on-spirituality-contd.html

15 வயதில் தான் த்வாரம் மங்காதாயாரிடம் முதன் முதலில் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் என அவரது தாயார் பதிவில் எழுதியுள்ளார், அப்போது ஆண்டு 1985-86 ,இடம் பம்பாய்! மேலும் அதன் பிறகு பம்பாயில் வேலை தேடிக்கொண்டு அங்கேயே புதிதாக வாழ தொடங்கினேன் என்றே எழுதியுள்ளார், அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு பின்னரே சென்னை வந்தது போல இருக்கிறது.ஏன் எனில் சென்னையை விட்டு போய் 15 ஆண்டுகள் ஆனது போல ஒரு இடத்தில் வருகிறது.


சரி மும்பையாக இருந்தால் என்ன , பெங்களூரில் இருந்த மாலியிடம் தம்புரா வாங்கி இருக்கலாமே எனலாம். அங்கும் ஒரு அதிசயம் இருக்கிறது ,மாலி 1980-85 வரையில் அமெரிக்காவில் இருந்தார். 1986 இல் இந்தியா வுக்கு திரும்பி பெங்களூரில் சில மாதங்கள் மட்டுமே தங்கியிருந்து மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக இறந்துவிட்டார்.

சுட்டி: http://en.wikipedia.org/wiki/T._R._Mahalingam_(flautist)

1986 இல் இந்தியாவில் தங்கியிருந்த சில மாத இடைவெளியில் தம்புரா வாங்கியிருக்கலாம், ஆனால் மும்பை ,சென்னை என இடம் மாறுகிறது.ரொம்ப எல்லாமே ஒரு அசாதாரணமாக நடப்பது போன்றே எல்லா நிகழ்வும் உள்ளது.

இதோடு முடியவில்லை சில ஆண்டுகள் கழித்து மாலி சென்னைக்கு வந்து தான் கொடுத்த தம்புரா பத்திரமாக இருக்கிறதா எனப்பார்க்க ஆழ்வார் பேட்டையில் உள்ள இவர்கள் வீட்டிற்கும் வந்தார் என்கிறார் , தம்புரா நன்றாக பராமரிப்பது குறித்து மகிழ்வும் அடைந்தாரம்.ஏன் மாலி அப்படி செய்தார் எனில் தம்புராவை இசைக்கவில்லை எனில் அவரிடமே திரும்ப கொடுத்துவிட வேண்டும் ,அது பழமையான தம்புரா என நிபந்தனை விதித்தே கொடுத்தாராம் :-))

சென்னை, பம்பாய், பெங்களூர், அமெரிக்கா, 1986 என எல்லாம் ரொம்ப டிராமடிக்கா நடந்திருக்கு, பாவம் மாலி வேறு 1986 இல் இறந்துவிட்டார்.

ஒரு வேலை 1980க்கு முன்னரே தம்புரா வாங்கி கொடுத்தால் உண்டு ,ஆனால் மும்பையில் இசைக்கற்று கொடுத்தவர் பெயரும் த்வாரம் மங்காதாயார் எனவும், சொல்கிறார்கள்.

---------------

ஶ்ரீபதா என தனது குடும்ப பெயராக போட்டுள்ளார் பாடகி, ஶ்ரீபதா என்பது தெலுங்கு ஸ்மார்த்தா (வைதீகி)பிராமணர்கள் பயன்ப்படுத்தும் சர் நேம் , தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை என அறிகிறேன். ஒரு வேளை ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம், ஆனாலும் தமிழ்ப்பெண் , தாய்மொழி தமிழ், தமிழ் வளர்த்த பரம்பரை என சொல்வதெல்லாம் எப்படியோ?

இதெல்லாம் தமிழ்நாட்டில் தான் சாத்தியம்!
-------------------


இப்படிலாம் நடக்காதா எனலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், எனக்கு படித்த போது தோன்றிய சந்தேகங்களை பொழுது போகாம எழுதி இருக்கிறேன், இதுக்கெல்லாம் கேசு போடுவாய்ங்களோ ?

ஒரு சினிமா பார்த்தால் லாஜிக் மிஸ்டேக்குன்னு ஒரு பட்டியல் போடுறாங்க, அதே போல சில பதிவுகளை படித்தேன் லாஜிக் மிஸ்டேக் போல இருப்பதை பட்டியலிட்டு இருக்கேன் , வேறொன்றுமில்லை .... ச்சே ..ச்சே ..வர வர நாட்டுல கருத்து சுதந்திரமே இல்லாம போச்சுப்பா ... பிட்டு படம் எல்லாம் இணைய தளம் வச்சு பப்ளிக்கா ஓட்டுறாங்க ,ஆனால் ஒரு அட்டு மேட்டரை கருத்தா சொல்ல என்னமா யோசிக்க வேண்டியதா இருக்கு ...அவ்வ்வ் :-))
----------------------------------------------------

பிற் சேர்க்கை;

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்ற எழுத்தாளர்,பதிவர் பெயரையும் இவ்வழக்கில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்வேன் என அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

http://rightnews.in/4650/defamation-case-on-chinmayi/
-------------------------------

பின் குறிப்பு:

# பொது வெளியில் ஆபாசமாக, தனிநபர் தாக்குதல் செய்வது தவறு, அதே சமயம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை அனைவரும் நினைவு கொள்ளவேண்டும்.

#யாரையும் களங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ இப்பதிவு எழுதப்படவில்லை.இப்பதிவில் குறிப்பிட்ட  நிகழ்வுகள், ஸ்கிரீன் ஷாட்கள்,சம்பந்தப்பட்ட நபர்களின் தளங்களில் இருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது , தரவுகள் விக்கியாப்பீடியா . நன்றி!

#பதிவில் தரவுகளாக கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகள் எந்நேரத்திலும் அழிக்கப்படலாம்,எனவே அங்கு பதிவுகள் காணக்கிடைக்கவில்லை எனில் அடியேன் பொறுப்பல்ல.
-------------------------

Friday, February 17, 2012

என்ன கொடுமை சார் இது!-2




என்ன கொடுமை சார் இது!-2

ஆரம்பக்காலத்தில் நான் பிளிறிய  சிலக்கொடுமைகளை இங்கே அழுத்திக்காணுங்கள்என்ன கொடுமை சார் இது!

மீண்டும் பிளிறல்  தொடர்கிறது....

ஒத்த சிந்தனை!

நம்ம தமிழ் சினிமா ஆளுங்க செம கில்லாடிங்க , உலக மகா சிந்தனையாளர்கள் ,புதுசு ..புதுசா  கற்பனை ஊற்றெடுக்கும் ஆனால் என்ன கொடுமைனா  இவங்க கஷ்டப்பட்டு கற்பனை செய்து உருவாக்கியதை உலகத்துல மத்தவங்க முன்னாடியே செய்து விடுகிறார்கள்!  தாமதமாக கற்பனை செய்தால் அதை எப்படி காப்பி அடிச்சாங்க என்று சொல்ல முடியும்... சொல்லக்கூடாது!ஒத்தசிந்தனை கொஞ்சம் லேட்டா  வந்திருக்குனு சொல்லுங்க! :-))





-----------------

பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்தல்:


ஒரு அஞ்சுப்பேருக்கு விருது கொடுத்தா அதுக்கு பேரு விருதா?
ஆமாம் விருது தான்!

அந்த அஞ்சுப்பேரு அஞ்சஞ்சு  பேருக்கு விருத கொடுத்தா அது?

அதுக்கூட விருதுனு சொல்லலாம்...

அந்த அஞ்சஞ்சு பேரு ஆளுக்கு அஞ்சு விருதுனு கொடுத்தா?

ம்ம்...ம்ம் விருது மாதிரி தெரியுது....

அஞ்சஞ்சு பேரா அஞ்சஞ்சு பேருக்கு என்று 5 லட்சத்து 55 ஆயிரத்து 5  நூற்று 55 பேருக்கு விருது கொடுத்தா?

ஹி..ஹி நான் இல்லை ரொம்ப பாவம் காலைல டிபன் கூட சாப்பிடல்லை ...எருமைக்கூட்டம் எங்கே இருக்கு சார்?  நானே போய் விழுந்துடுறேன்:-))

உங்கள் தளத்தை பைசா செலவில்லாமல் பிரபலம் ஆக்கணுமா , உடனே ஒரு விருது அறிவிச்சு பதிவர்களுக்கு பந்திப்போடுங்கள் போதும் :-))

விருதுக்கொடுத்தற்கு நன்றி என்று பதிவுப்போட்டே பிரபலம் ஆக்கிடுவாங்க உங்க தளத்தை!

-----------

மின்வெட்டைக்கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!

திமுக முன்னால் அமைச்சர்.வீராபாண்டி ஆறுமுகம் தலைமையில் , மொபைல் போன் விற்பனையாளர்கள்??!! ஒன்றுக்கூடி சேலத்தில் மின்வெட்டைக்கண்டித்து போராட்டம் நடத்தி இருக்காங்க. என்னா கோராமையிது, கடந்த ஐந்து ஆண்டுகளாக வாமணன் போல அளக்காமலே நிலம் அபகரிப்பில் பிசியாக இருந்தவர்கள், ஒரே ஒரு மின் திட்டத்தை கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதற்கே தி.மு.க தேர்தலில் தோற்றால் அதற்கு மின்வெட்டுக்காரணமாக இருக்கும்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது சாட்சாத் மின்வெட்டு துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டாரே. 

கதை அப்படி இருக்க ,இவங்க இப்படி போராட்டம் நடத்துவாங்களாம் :-))

அதுவும் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம், தொழிலார்கள், விசைத்தறியாளர்கள் என்று கூப்பிடாமல்(கூப்பிட்டாலும் வர மாட்டாங்க) மொபைல் போன் விற்பனையாளர்களை வைத்து நடத்துறாங்க, ஏன் மின்சாரம் இல்லாம மொபைல் போன் சார்ஜ் செய்து பேச முடியலையாமா? நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க :-))

அனேகமாக அடுத்த சட்ட சபைத்தேர்தலிலும் தற்போதைய மின்வெட்டே வெற்றியாளரை தீர்மானிக்கும் என நம்பலாம்.அட...டா திராவிட கட்சிகளுக்கு ஒத்த கொள்கை இருக்குனு சொல்றது இந்த மின்வெட்டுக்கொள்கைய தானா? :-))

என்ன கொடுமை ...சார் இது!
--------------

நேற்று உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார்ப்பள்ளியின் மாணவர் விடுதியில் +1 படிக்கும் /படித்த மாணவர் ஒருவர் ஆசிரியரின் அடக்கு முறை,தண்டனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.வருத்தத்திற்கும் ,கண்டனத்திற்கும் உரிய சம்பவம்.

கடந்த வாரம் கண்டித்த ஆசிரியையை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றார். இப்போது மாணவர் ஒருவர் தற்கொலை. இரண்டுமே இந்தியக்கல்விக்கொள்கை, மற்றும் சூழலின் சீரழிவையேக்காட்டுகிறது.

கல்வி என்பது அறிவுக்கு என்பதை தாண்டி பிழைப்புக்கு என்று மாறி மதிப்பென் வேட்டையில் மாணவர்கள் இறங்க வேண்டியதாகிவிட்டது. சிலர் வேட்டையில் வெற்றியும் பலர் வேட்டையின் தீவிரத்துக்கும் பலியாகிறார்களோ என தோன்றுகிறது.

கல்வி வியாபாரமாக ஆனதோடு மாணவர்களை கிளாடியேட்டர்களாக  மாற்றி போராட வைக்கிறது. எனவே மாணவர்களும் மூர்க்கத்தனமாக கல்வியுடன் போரிடுகிறார்கள். அப்படியே வென்றாலும் வெற்றியின் இனிமையை சுவைக்கும் மனநிலை போய்விடுகிறது. தோல்வியை விட தோற்றுவிடுவோமோ என்ற பயம் உயிரெடுக்கிறது.


கல்வியாளர்களோ, அரசோ விழித்துக்கொள்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் விழிப்படைந்து இது போன்ற அழுத்தங்களை பிள்ளைகளுக்கு தராமல் இருக்கலாம். ஆனால் அவர்களோ வாழ்வில் உயர வசதியாக வாழ கல்வி ,வேலை என்ற இரண்டே அக்‌ஷய பாத்திரம் என்ற முடிவில்  தனக்கு கிடைக்காத ஒன்று பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களையும் வருத்திக்கொண்டு பிள்ளைகளையும் வருத்திக்கொண்டு ,அவ்வப்போது இது போன்ற துர்பாக்கியமான செய்தியாகிவிடுகிறார்கள்.

----------------