Thursday, September 27, 2007

மாவீரன் பகத் சிங்க் நூறாண்டு பிறந்தநாள் தினம்!


இன்று சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் பகத் சிங்கின் நூறாண்டு பிறந்த நாள் நினைவு தினம்.


அவரைப்பற்றிய ஒரு வாழ்கை வரலாற்று சிறு குறிப்பு:

செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.

லெஜண்ட் ஆப் பகத் சிங்க் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி!







அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

பகத் சிங்க் தூக்கில் சில மர்மங்களும் உள்ளது, அவர் தூக்கில் இட்டும் சாகாமல் இருந்ததாகவும் எனவே , சாண்டர்ஸ் என்ற அதிகாரியின் உறவினர்கள் துப்பாக்கியில் சுட்டும் , வெட்டியும் கொன்றார்கள் எனவும் ஒரு நூல் சொல்கிறது(சாண்டர்சை கொன்றதாக தான் லாகூர் கொலை வழக்கு). மேலும் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் ஆங்கில அரசே எரிக்கப்பார்த்தது. இது தொடர்பாக ஒரு காட்சியும் ஹிந்தியில் எடுக்கப்பட்ட லெஜெண்ட் ஆப் பகத் சிங்க் படத்திலும் வரும்.

ஒரு சே கு வேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங். அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

T20 சாம்பியன்களுக்கு வரவேற்பு!- விடியோ

இருபதுக்கு இருபதை அள்ளிவந்த நூற்றுக்கு நூறு சாம்பியன்களுக்கு மும்பையில் மிக ஆராவாரமான , உற்சாக வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து பாராட்டு விழா நடைப்பெறும் வான்கடே மைதானம் வரையில் திறந்த பேருந்து ஒன்றில் வீரர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். வழி நெடுக ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் தான் கூட பேருந்தில் இருந்தாவாறே ஆடி ஒத்துழைப்பு தந்து உற்சாகப்படுத்தியது வேகப்பந்து நடனப்புயல் ஸ்ரீசாந்த் மற்றும் சிக்சர் சிங்கம் யுவராஜ்.


திறந்தவெளிப்பேருந்தில் வீரர்களின் ஊர்வலம்:



அரசியல்வாதிகள் வழக்கம் போல தங்கள் வித்தையை இதிலும் காட்டி விட்டார்கள், வான்கடே மைதானத்தில் நடந்த விழாவில் வீரர்களை பின் வரிசைக்கு தள்ளி விட்டனர், முன் வரிசையில் அரசியல்வாதிகளும் , கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுமே ஆக்ரமித்துக்கொண்டனர்.ரசிகர்கள் வந்தது T20 சாம்பியன் வீரர்களை பார்க்க தானே அன்றி இவர்களின் முகத்தை அல்ல. அரசியல்வாதிகளான சரத் பவார், மகாராஸ்டிர துணை முதல்வர் ஆகியோர் மைக் பிடித்து இதனை தங்கள் அரசியல் சாதனையாக்கி கொண்டதோடு அல்லாமல் காத்திருந்த ரசிகர்களின் பொறுமையையும் ஏகத்துக்கும் சோதித்து விட்டனர்.

தோனியின் சிறப்புரை வீடியோ:



செய்தி மற்றும் வீடியோ உபயம் ரெடீப், நன்றி:

Monday, September 17, 2007

காற்றினிலே வரும் குடிநீர்!

நமக்கு தேவையான நீர் மழை மூலம் கிடைக்கிறது. அந்த மழை எப்படி பெய்கிறது என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள், கடல் நீர் அல்லது மற்ற நீர் ஆதாரங்களில் உள்ள நீர் ஆவியாகி மேகம் ஆகி ,பின் குளிர்ந்த காற்று வீசும் போது மேகம் குளிர்ந்து மழையாகிறது என்று.அந்த மழையை நாம் விரும்பிய போது வர வைக்க முடியுமா ,விமானம் மூலம் மேகங்களின் மீது வெள்ளி அயோடைட் ரசாயனத்தை தூவி செயற்கை மழை பெய்ய வைக்கலாம், ஆனால் நமக்கு தண்ணீர் தேவைப்படும் போது நம் வீட்டுக்குள் அப்படி வர வைக்க முடியுமா?

அழைக்கும் போது உதித்து விட்டால் அதற்கு பெயர் நிலவும் அல்ல , அழைக்கும் போது வீசிவிட்டால் அதற்கு பெயர் தென்றலும் அல்ல, அழைக்கும் போது மழை வந்து விட்டால் அதற்கும் பெயர் மழையும் அல்ல, அப்போ அது என்ன ,எப்படி, அது தான் காற்றில் இருந்து நீர் தயாரிக்கும் எந்திரம்.

அமெரிக்க ராணுவம் ஈராக் போன்ற பாலைவனங்களில் இருக்கும் போது குடி நீர் விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது அதற்கு ஒரு காலனுக்கு 30 டாலர்கள் செலவாகிறதாம் அதனை குறைக்க , நாசா மூலம் ஆய்வு செய்து காற்றில் உள்ள ஈரப்பதத்தை செயற்கையாக குளிர வைத்து , சுருங்க வைத்து நீராக மாற்றும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.ஆனால் நாசாவிற்கு முன்னரே அக்யூவா சயின்ஸ் என்ற இன்னொரு நிறுவனம் அதை விட சிறப்பான எந்திரத்தை உருவாக்கியுள்ளது , இப்பொழுது அதனை தான் அமெரிக்க ராணுவத்தினர் பாலைவனங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றின் ஈரப்பதத்தில் சாதாரணமாக 1,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளதாம்.காற்றில் 14 சதவீத ஈரப்பதம் இருந்தால் கூட போதும் ஒரு நாளைக்கு 600 காலன் நீர் தயாரிக்கலாம். பெரிய அளவு எந்திரங்களைக்கொண்டு 500,000 லிட்டர் கூட தயாரிக்க இயலுமாம்.

இந்த எந்திரம் செயல் படும் முறை, கிட்டதட்ட நம் வீட்டில் உள்ள குளிர் சாதனப்பெட்டி போன்ற முறை தான்.

காற்றினை உறிஞ்சி இழுத்து முதலில் ஒரு வடிக்கட்டி வழியாக செலுத்தப்படுகிறது, இதன் மூலம் தூசுக்கள் அகற்றப்படுகிறது.

பின்னர் காற்று குளிரூட்டும் வாயு கொண்ட குழாய்களுக்கு இடையே செலுத்தும் போது குறைந்த வெப்பத்தில் நீராவி சுருங்கி நீராக மாறும்.

அதனை ஒரு தொட்டியில் சேகரித்து , பின்னர் வழக்கமான , புற ஊதாக்கதிர் , ஒசோன் , சவ்வூடு பரவுதல் முறை மூலம் சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றப்பட்டு பயன் பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த கருவியை வடிவமைக்கும் முறையினைப்பொறுத்து திறனின் அளவு மாறுபடுவதால், எந்த நிறுவனமும் அதன் எந்திரங்களின் செயல் முறையை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளன. மேலே சொல்லப்பட்டுள்ளது அடிப்படை தத்துவம் மட்டுமே.

மேலும் சில நிறுவனங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை கிரகிக்கும் ரசாயனங்களைப்பயன் படுத்தியும் எந்திரங்களை வடிவமைத்துள்ளன.


மற்றொரு நிறுவனம் , காற்றலை வடிவில் மின்சக்தி இல்லாமல் , இயங்கும் வண்ணம் , ஒரு எந்திரம் வடிவமைத்துள்ளது, அதன் உற்பத்தி திறன் சிறிது குறைவாக இருக்கும். இம்முறையில் எவ்வித குளிரூட்டும் பொருளும் பயன் படுத்தாமல் காற்றினை ஒரு சுழல் பாதையில் செல்ல விட்டு குளிர வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 13, 2007

இணையத்தில் இலவசமாக 20க்கு இருபது உலககோப்பை போட்டிகள்

இலவசமாக தெனாப்ரிக்காவில் நடக்கும் 20க்கு இருபது உலக கோப்பை போட்டிகளை இணையம் மூலம் பார்க்க வேண்டுமா , அதற்கென sopcast என்ற p2p வகை தொலைக்காட்சி மென்பொருள் ஒன்று உள்ளது அதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும.பின்னர் நேரடி ஒளிபரப்பாக போட்டிகளை தரும் இணைய தொடுப்புகளை சில இணைய பக்கங்களில் தருகிறார்கள் , அதில் ஏதேனும் ஒரு தொடுப்பினை சொடுக்கினால் உங்கள்து சோப்காஸ்ட் தொலைக்காட்சி செயல் பட்டு ஒளிபரப்பினைக்காணலாம். குறைந்த பட்சம் 256 kbps வேகமாவது இருந்தால் ஓரளவு நன்றாக தெரியும். அதிக வேகம் இருந்தால் இன்னும் நலம்.ஆரம்பத்தில் சிறிது நேரம் "buffer" ஆக எடுத்துக்கொள்ளும் பின்னர் தெளிவாக காட்சிகள் வரும்.

சோப்காஸ்ட்டில் உலகக்கோப்பை போட்டிகள் மட்டும் அல்லாது மேலும் பல இலவச தொலைக்காட்சிகளையும் காணலாம்.

சோப்காஸ்ட் இணையத்தளம்: sopcast

நேரடி ஒளிபரப்பு இணைப்பு தளம்; live links

மற்றும் ஒரு இணைப்பு தரும் தளம் , இதில் இங்கிலாந்து, இந்தியா ஒரு நாள் போட்டித்தொடர் என்று போட்டிருந்தாலும் 20க்கு இருபதும் தெரியும், முதல் லின்க் நன்கு வேலை செய்கிறது.

another link


தற்போதைய நிலவரம் ,
வங்க தேசம் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது. முதல் சுற்றிலேயே பரிதாபகரமாக வெளியேறியது மே.தீவுகள்

சுருக்கமான ஆட்ட விவரம்:
மே.தீவு:
தேவோன் சுமித்-51,
சந்திரபால்-37
சாமுவெல்ஸ்-27,
டிவைன் சுமித்-29
மொத்தம்- 164/8

வங்கதேசம் பந்துவீச்சு:
ஹசன் 4/34
ரசாக் 2/25

வங்கதேசம்:
அஷ்ரபுல்-61(27)விரைவான அரைசதம் 20 பந்துகளில்)
அஹ்மத்- 62(49)
மொத்தம் -165/4
மே.தீவுகள் பந்து வீச்சு:
ராம்பால் -2/35
சர்வான் -2/10

Wednesday, September 12, 2007

சிமெண்ட் செங்கல்லை இணைப்பது எப்படி?


பசைக்கொண்டு காகிதம் ஒட்டுகிறோம் , அதே போல சிமெண்ட் கொண்டு இரண்டு செங்கல்லை ஒட்ட முடிகிறது , எவ்வாறு அது ஒட்டுகிறது. சிமெண்ட் , பசை இதற்கெல்லாம் ஒட்டும் , இணைக்கும் தன்மை எப்படி வருகிறது.

சிமெண்ட் கால்சியம் சிலிகேட்,கால்சியம் கார்பனேட், கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் பொடி செய்யப்பட்ட கலவையாகும். தண்ணீருடன் கலந்து கிடைக்கும் பசை போன்ற சிமெண்ட் காயும் போது ஏற்படும் நீரேற்ற வினையினால்(hydration) கெட்டிப்படுகிறது, அப்பொழுது அது கால்சியம் சிலிகேட் ஹைட்ரேட் ஆக மாறிவிடும்.அது ஒரு திரும்ப பெற இயலாத வேதி வினை ஆகும். சிமெண் குழம்பு செங்கல்லில் உள்ள நுண்ணிய துளைகளில் புகுந்து காயும் போது இறுகுவதால் பிடித்துக்கொள்ளும். இதன் மூலம் இணைக்கும் தன்மை கிடைக்கிறது. இது மட்டும் இல்லாமல், சிமெண்டில் உள்ள மூலக்கூறுகளின் மின்னியல் பண்புகளும் இணைப்பு சக்தியை சிமெண்டிற்கு தருகிறது.

மேலும் சிமெண்டுடன் தண்ணீர் சேர்ப்பதால் கால்சியம்சிலிகேட், கால்சியம் அலுமினேட் போன்ற மூலக்கூறுகள் பிளவுற்று கால்சியம் அயனிகள்(ca2+) உருவாகும், எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை , அவற்றில் எலெக்ட்ரான்கள் என்ற எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் இருக்கும். செங்கல்லில் உள்ள அணுக்களில் இருந்து சில எலெக்ட்ரான்கள் பிணைப்பில் இருந்துவிடுபட்டு கால்சியம் அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும். கட்டுமானப்பணியின் போது செங்கல் மீது தண்ணீர் தெளிப்பார்கள் ,இது எலெக்ட்ரான்கள் விடுபட்டு எளிதாக இடம் மாற உதவும். இவ்வாறு எலெக்ட்ரான் பரிமாற்றத்தால் ஏற்படும் பிணைப்பிற்கு கோவேலண்ட் பாண்ட்(covalent bond) என்று பெயர்.இதன் மூலம் மூலக்கூறுகளிடையே ஒரு இணைப்பு விசை உருவாகும் அதற்கு வாண்டர் வால்ஸ் விசை(wanderwalls force) என்றுப்பெயர்.

செங்கல்லை சிமெண்ட் இணைப்பதன் காரணம் மேல் சொன்ன இரண்டும் தான்.மேலும் சிமெண்டில் நீரேற்ற வினை ஏற்பட்டு இறுகும் போது சுருங்கும் , அதன் காரணமாக வெடிப்பு ஏற்படலாம் சில சமயங்களில். மேலும் முழுவதும் நீரேற்றம் ஆகாத மூலக்கூறுகளையும் நீரேற்ற அதிகப்படியாக தண்ணீர் கட்டுமானத்தின் மீது ஊற்றப்படும். இதற்கு செட்டிங் என்பார்கள் சாதரணமாக 28 நாட்கள் தேவைப்படும்!

இதே போன்று பசை காகிதத்தை ஒட்டவும் , எலெக்ட்ரான்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் கோவேலண்ட் பாண்ட் தான் காரணம்.

Sunday, September 09, 2007

வயது வந்தவர்களுக்கு மட்டும்!-week end posting

அறிவு ஜீவிகள் எல்லாம் இதைக்கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுங்கள், வாரக்கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் பாண்டி வரைக்கும் ஒரு மின்னல் வேக பயணம் போய்விட்டு வந்தேன். எதுக்கா எல்லாம் அதுக்கு தான்யா.. பச்ச புள்ளையாட்டாம் கேட்கப்படாது , அங்கு போனதும் ராயல் சேலஞ்ச ஆர்டர் செய்து குமுறிவிட்டேன்! சரி திரும்ப வரும் போது வெரும் கையுட்ன் வரக்கூடாது என்று ஒரு முழு புட்டி இம்பீரியல் புளு என்ற சரக்கு வாங்கினேன்(கைல அது வாங்குற அளவு தான் காசு இருந்துச்சு full - 210 rs/- only very cheap) Rc வாங்கணும்னு தான் திட்டம் , ஒரு குளிர் ஊட்டப்பட்ட பாரில் பெக் கணக்கில் ஊத்தி அரை RC க்கு முழு அளவுக்கு காசப்பிடுங்கிட்டான்!

நேற்று இரவில் இருந்து இன்று இரவு 12க்குல் அந்த முழு புட்டியும் காலி ஆகிடுச்சு உபயம் நம்ம இந்திய கிரிக்கெட் அணி, வந்தவுடன் கொஞ்சம் போட்டேன் , மேட்ச் பார்த்தேன்.. தூத்தேரி எழவு எடுத்த பசங்கனு இன்னும் கொஞ்சம் போச்சு இப்படியே கேப்ல எல்லாம் போட்டு கடைசில இன்னிக்கே எல்லாம் தீர்ந்து போச்சு ... அடுத்த வீக் எண்ட் வரைக்கும் வைத்து இருக்கனும்னு திட்டம் போட்டேன் அது நாசாம போச்சு! வேற என்ன செய்ய வழக்கம் போல பச்சை கலர் போர்ட் போட்ட கடைக்கு நாளைக்கும் போகனும்! :((

Friday, September 07, 2007

அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில் ,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள் ,,

சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony),
மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

LetterMorse
Adi-dah
Bdah-di-di-dit
Cdah-di-dah-dit
Ddah-di-dit
Edit
Fdi-di-dah-dit
Gdah-dah-dit
Hdi-di-di-dit
Idi-dit
Jdi-dah-dah-dah
Kdah-di-dah
Ldi-dah-di-dit
Mdah-dah


N dah-dit
Odah-dah-dah
Pdi-dah-dah-dit
Qdah-dah-di-dah
Rdi-dah-dit
Sdi-di-dit
Tdah
Udi-di-dah
Vdi-di-di-dah
Wdi-dah-dah
Xdah-di-di-dah
Ydah-di-dah-dah
Zdah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ், லாண்ட் மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

லிப்டில் போனால் உடல் எடை குறைக்கலாம்?

சாதாரணமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் , சில சிறிய வேலைகளையும் உடல் உழைப்பின் மூலம் செய்வதால் அதிக கலோரிகள் எரித்து உடல் எடைக்குறைக்கலாம் என சொல்வார்கள். அந்த வகையில் மாடிப்பகுதிகளுக்கு செல்ல லிப்டிற்கு பதில் படிகளில் ஏறி சென்றால் எடை குறையும் என்பார்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சாட்சியாக சொல்கிறேன், லிப்டில் இறங்கி வந்தால் உடனடியாக உடல் எடை குறையும் , 100 சதவீதம் உத்திரவாதம் !

அது எப்படி என்று சொல்கிறேன்,

முதலில் உங்கள் எடை என்னவென்று குறித்துக்கொள்ளுங்கள்

முதல் தளத்தில் இருக்கும் ஒரு லிப்டில் ஏறி நின்று கொள்ளுங்கள் , எடை குறைவதைக் காண கையோடு ஒரு எடை பார்க்கும் கருவியும் எடுத்து செல்லுங்கள். இப்பொழுது எடை பார்க்கும் எந்திரத்தின் மீது நின்று கொண்டு முதல் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு வாருங்கள். அப்படி வரும் போது உங்கள் எடை என்னவென்று எடை பார்க்கும் எந்திரத்தில் பாருங்கள், கண்டிப்பாக எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்! கடினமாக உழைக்காமல் எப்படி எடை குறைந்தது, ஆச்சரியமாக இருக்கிறதா , அது தான் இயற்பியலின் விந்தை!

நம் உடல் எடை என்பது புவி ஈர்ப்பு விசை ஆனது உடலின் பருமன் மீது செயல்படுவதால் ஏற்படும் விசை ஆகும், அவ்விசையை எடைப்பார்க்கும் கருவி உணர்வதால் அதில் எடை காட்டுகிறது.

லிப்டில் மேல் இருந்து கீழ் நோக்கி இறங்கும் போது எடை குறைவாக காட்டக்காரணம் , லிப்ட் அது ஒரு வேகத்தில் இறங்குகிறது எனவே அதன் மூலம் ஒரு விசை நம் உடலில் செயல்படும், எனவே இப்பொழுது நம் உடலின் மீது இரண்டு விசை செயல்படுகிறது , புவி ஈர்ப்பு விசை மேல் திசையிலிருந்து கீழ் நோக்கிய விசை , கூட லிப்டின் மேலிருந்து கீழ் நோக்கிய விசை இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் , இப்போது புவீஈர்ப்பு விசையில் ஒரு மாற்றம் ஏற்படும் அதன் காரணமாக உடலின் மீது மொத்த விளைவு ஈர்ப்பு விசை குறையும்! எனவே தான் எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்!

இரண்டு விசையும் எதிர் எதிராக இருந்தால் எடை கூடுதலாக காட்டும் .

*லிப்டில் கீழ் இருந்து மேல் மாடிக்கு செல்லும் போது எடை அதிகம் காட்டும் எடைப்பார்க்கும் கருவி.

*லிப்ட் நிற்கும் போது உடலின் உண்மையான எடைக்காட்டும் !

எடைப்பார்க்கும் எந்திரத்தின் மீதான விசை = எடை
f =m*a

இங்கு a = g , லிப்டின் மேல் , கீழ் செயல்பாட்டினால் நம் உடலில் ஏற்படும் விசை ,மேலும் லிப்ட் இயங்கும் வேகத்தினால் வரும் முடுக்கத்தினால் (a= acceleration)வருவது என இரண்டு விசை , எனவே மொத்த கூட்டு விசை

f= m*(g - or +(a)

இதன் மூலம் நிகர எடை அறியாலாம்.

இந்த சூத்திரம் கொண்டு லிப்ட் வேகத்தீற்கு ஏற்ப மேல் அல்லது கீழ் செல்லும் போது ஏற்படும் எடை மாற்றத்தினை கணக்கிடலாம்.கீழ் இறங்கும் போது "-" மேல் ஏறும் போது "+".

உடல் எடையை குறைக்கணும்னா இனிமே வேகமா லிப்டில் இறங்கினா போதும்! உண்மையா உடல் நலம் ,எடைக்குறைத்தல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஓடி வந்து படித்த மக்கள் அடியேனை பொருத்தருள்க!

Thursday, September 06, 2007

நீங்களும் கண்டுபிடிக்கலாம் பூமியின் சுற்றளவை

இன்று பல தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்ட நிலையில் எதுவும் சாத்தியம் ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழில் நுட்பம் , கருவிகள் என எதுவும் இல்லாமலே பலவற்றையும் வெறும் கணக்கீட்டின் மூலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

அப்படி பூமியின் விட்டம் , சுற்றளவை மிகச்சரியாக கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயெ எரட்டோதீனியஸ்(Eratothenes, 230 B.C) என்ற கிரேக்க அறிஞர் முக்கோணவியல் மூலம் கண்டு பிடித்துள்ளார். அது மிக எளிய ஒன்று , நாம் கூட அம்முறையை செய்துப்பார்க்கலாம்.
















எரட்டோதீனியஸ் கண்டுபிடித்த முறை:

ஒரு அடி நீளம் உள்ள குச்சி ஒன்றினை பூமியில் செங்குத்தாக நட்டுவைக்கவும். அதன் நிழலை தொடர்ந்து கவனித்து வந்தால் , இருப்பதிலேயே மிக நீளம் குறைவான நிழல் சூரியன் தலைக்கு நேராக உச்சியில் வரும் போது தான் விழும் என்பது தெரியவரும். எனவே சூரியன் உச்சியில் வரும் போது குச்சியின் நிழல் நீளத்தை அளந்து கொள்ளவேண்டும்.

பின்னர் ஏறக்குறைய அதே தீர்க்க ரேகைப்பகுதியில் உள்ள வேறு ஒரு இடத்தில் குச்சியை நட்டுவைத்து , மீண்டும் சூரியன் உச்சியில் இருக்கும் போது நிழலின் நீளத்தை அளந்து கொள்ளவேண்டும்.

இதில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது ஏற்படும் கோணத்தூரம் என்பது , சூரியக்கதிர் பூமியுடன் ஏற்படுத்தும் கோணத்திற்கு சமம் , அதனைக்கண்டு பிடிக்க தான் நிழல் , குச்சி இரண்டும் பயன்படுகிறது. இங்கே நிழல், குச்சி இரண்டின் நீளங்கள் தெரியும் அதைக்கொண்டு Tan கோணம் கண்டறியலாம்.

இரண்டு இடங்களில் நிழல் விழவைத்து இரண்டு கோணங்கள் ஏன் கணக்கிட வேண்டும் , இந்த இரண்டு புள்ளிகளும் , பூமியின் மையம் மூன்றாவது புள்ளியாக கொண்டு ஒரு முக்கோணம் வரைந்தால் , அதில் பூமியின் மையத்தில் வரும் வரும் கோணம் இந்த இரண்டு கோணத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். படத்தினை பார்த்தால் கொஞ்சம் விளங்கும்!

1) h1/b1= tan deeta1
2)h2/b2= tan deeta2

tan1-tan2= புவிமையத்தில் வரும் கோணம்.

நிழல் விழும் இரண்டு புள்ளிகள் , மையம் மூன்றும் இணைந்து ஒரு முக்கோணம் உருவாக்கினால் , அதில் ஒரு பக்கம் இரண்டு நிழல் புள்ளிகளுக்கும் இடைப்பட்ட தொலைவு தெரியும், மற்றொரு பக்கம் என்பது பூமியின் ஆரம் அது தெரியாது , ஆனால் மையத்தில் வரும் கோணம் இப்போது தெரியும் ,

எனவே , அதனைக்கொண்டு ,

இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்/ ஆரம் = மையக்கோணம்
எனவே ,

பூமியின் ஆரம் = இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்/ மையக்கோணம்

என எளிதாக கண்டுபிடித்து விடலாம்,

அப்படி எரட்டோதீனியஸ் கண்டுபிடித்த ஆரம் , 6371.02 கி.மீ

இதனைக்கொண்டு பூமியின் சுற்றளவும் சொல்ல முடியும், 2xpi xR= 40,008 km .இப்போது நீங்களும் பூமியின் சுற்றளவை கண்டுப்பிடிக்கலாம்!

இதுமட்டும் அல்லாமல் முக்கோணவியலைக்கொண்டு தான் அக்காலத்திலேயே நிலவின் அளவு, அதன் தொலைவு, மேலும் சூரியன் இருக்கும் தூரம் கூட சரியாக கண்டுப்பிடித்தார்கள்!மேலும் மலைகளின் உயரம் கூட இப்படி அளக்கலாம்.