Sunday, July 15, 2012

பசி!


பச்சரிசி நெல்லுச்சோறு கீரையோடவே

ஆக்கிவெச்ச மீன்கொழம்பு நாங்க கேக்கல

நாங்க கேட்டதெல்லாம் கேப்பக்கூழு-

இங்க ...கிடைச்சதெல்லாம் கம்பஞ்சோறு...

தான்னனா தானனா னானா...

என்ன திடீர்னு கானாப்பாட்டுன்னு பார்க்காதீங்க , கூடிய சீக்கிரம் "khana" வுக்கு ததுங்க்கினத்தோம் போட வேண்டியது வரும், அப்போ அரிசி சோறு சாப்பிட முடியாம எல்லாம் கேப்பை, கம்பு ,சோளம்னு தேடி ஓடணும் அதுவும் கிடைக்காத நிலை தான் இப்போ.

காரணம் முன்னரே பல முறை சொன்ன விவசாயம் நசிந்து வருவதே, ஏற்கனவே , இடு பொருள் விலை உயர்வு, கூலி உயர்வு, வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை , இதனால் விளைவிக்க ஆகும் செலவு , விற்பதால் கிடைக்கும் வருமானத்தினை விட குறைவாக இருப்பது, அப்படியும் பலர் விவசாயம் செய்ய காரணம், அவங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்பதாலேயே, இருப்பினும் தற்போது வேற வேலை செய்து பொழைப்போம் என பலரும் நகரத்துக்கு வந்து கட்டுமானம் இன்ன பிற கிடைத்த வேலையை செய்து பிழைக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள், நான் சொல்வது எஞ்சி இருக்கும் விவசாயிகளை ,ஆனால் தம் கட்டி கஷ்டப்படுவோம் என நினைப்பவர்களையும் இயற்கை கைவிட்டால் என்ன ஆவது?

பருவ மழை பொய்த்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு மழை இல்லை,இப்போ தான் லேசா மழை தூற ஆரம்பிச்சு இருக்கு, மேட்டூரில் தண்ணீர் திறந்து விட வில்லை, பம்செட் வச்சு இரைக்க மின்சாரம் இல்லை, டீசல் வச்சு ஓட்டலாம்னா விலை எங்கோ போய் விட்டது, பின்னர் விவசாயி எப்படி விதைப்பான், கண்ணீரும், வியர்வையுமே போதும் என சொல்லாதீர்கள்.

பல இன்னல்களுக்கு இடையே விதைத்து அறுவடை செய்தாலும் உழைப்பு,முதலீடு மற்றும் விளைச்சலுக்கு ஏற்ற விலையும் இல்லை. கடந்த குறுவையில் சரியான விளைச்சல் இல்லை என்பதை வைத்தே இப்போது அரிசி விலையை ஏற்றி விற்கிறார்கள், ஆனால் ஒரு போகம் சம்பாவில் கிடைக்கும் விளைச்சலே தமிழக உணவுத்தேவைக்கு போதும், போன சம்பாவிலேயே நிறைய விளைந்தது , அப்போதும் அதே விலைக்கு தான் விவசாயிகள் விற்றார்கள், அடுத்து குறுவையில் குறைவாக விளைந்தது அப்போதும் அதே விலை தான் விவசாயிக்கு, ஆனால் குறுவையில் குறைவான விளைச்சல், வரும் சம்பாவிலும் விளைச்சல் குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் தற்போது வியாபாரிகள் அரிசி விலையை ஏற்றி விற்கிறார்கள்.

அதிக விளைச்சலோ குறைவான விளைச்சலோ, விவசாயிக்கு ஒரே விலை, ஆனால் அதை வாங்கி விற்கும் வியாபாரியோ விளைச்சல் குறைந்தால் விலை ஏற்றி விற்பார்கள், இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள தானிய கையிருப்பு ஒரு ஆண்டு விளைச்சல் இல்லை என்றாலும் உணவு அளிக்கும் வகையில் தான் இருக்கு,ஆனால் குறைவான விளைச்சல் என சொல்லி அரிசி விலை மட்டும் சந்தையில் ஏறுகிறது.ஏன் அதே போல குறைவான விளைச்சல் ஆனால் விவசாயிக்கு நெல்லுக்கு கூடுதல் விலை கொடுக்க கூடாது? காரணம் விவசாயியால் நெல்லை நீண்ட நாட்கள் கையிருப்பு வைத்திருக்க முடியாது, 90% விவசாயிகள் உடனே விற்றாக வேண்டிய சூழலில் உள்ளவர்கள், அவர்களே அறுவடைக்காலத்தில் குறைவான விலையில் விற்று விட்டு பின்னர் சுய தேவைக்கு அரிசியை கூடுதல் விலை கொடுத்து வாங்கி உண்ணும் நிலை,அல்லது ரேஷன் கடை அரிசி தான்.

பல்வேறு இடைஞ்சலுக்கும் இடையிலும் விவசாயம் செய்ய ஒரு கூட்டம் இருக்கு, ஆனால் அவர்களுக்கு சந்தை விலையின் பலாபலன்கள் சென்று சேராமல் எத்தனை நாளைக்கு நட்டத்தில் விளைவிப்பான், இன்று கொஞ்சம் விளைச்சல் சரிந்தததையே காரணம் காட்டி விலை ஏற்றுகிறார்கள், விவசாயம் முழுவதும் சீர் குலைந்து உற்பத்தி வெகுவாக குறைந்தால் ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் என்ற அளவுக்கு கூட போகும், ஆனால் அப்போதும் விவசாயிக்கு நன்மை இருக்காது எல்லாம் வியாபாரிக்கே போகும், ப.சிதம்பரம் போன்ற பொருளாதார சக்திகள் மினரல் வாட்டருக்கு 15 ரூ , ஐஸ்கிரீமிற்கு 20 ரூ கொடுக்கும் போது ,அரிசி விலை ஏறினா வாங்கி சாப்பிட மாட்டீர்களா எனக்கேட்க தயங்க மாட்டார்கள்.

அரிசி விலையின் பலன் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு போய் சேராத நிலையில் விலை உயர்வு சகஜம் தான் ,வாங்கி சாப்பிடுங்கள் என சொல்வது குரூர நகைச்சுவை என்றே சொல்லலாம்.உரிய பலன் கிடைக்காத நிலையில் விவசாயம் அழிந்தால் என்னாவது என்ற கவலை பணம் படைத்தோருக்கு இல்லை, அரிசி இறக்குமதி செய்துக்கொள்ளலாம் என்பார்கள், ஆனால் முழுக்க இறக்குமதி செய்யும் போது விலையை கட்டுப்படுத்தி மிக அதிக விலைக்கே விற்பார்கள், அதனை சாமானியன் வாங்க முடியுமா? அவனுக்கு தான் விலையில்லா அரிசி ரேஷனில் இருக்கே எனலாம், அது எல்லாம் உள்நாட்டில் அரிசி உற்பத்தி இருக்கும் வரையில் தான், உற்பத்தி குறைந்தால் அங்கும் பெரிய வரிசை வரும் ,அனைவருக்கும் அரிசி கிடைக்காமல் அடி தடி உருவாகும்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு விவசாயி நிலத்தில் தொடர்ந்து உழைக்க செய்ய அவனது உழைப்பு,முதலீடு மற்றும் விளைச்சலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும்,அப்படி செய்யவில்லை எனில் வருங்காலத்தில் பருவ மழை பொய்ப்பினால் உணவு தட்டுப்பாடு வராது, விவசாயம் செய்ய ஆள் இல்லாமல் உணவு தட்டுப்பாடு வரும், அப்படி ஒரு நிலை வந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் வியாபாரிகளே, ஏன் எனில் உணவு தட்டுப்பாடு வரும் சூழலில் அனைவருக்கும் இறக்குமதி அனுமதி அரசு கொடுக்கும், அதனை வைத்து வாங்கி இஷ்டப்பட்ட விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள், இப்படி சந்தர்ப்பவாதமாக லாபம் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வரவில்லை ,அவர்களும் இந்தியர்களே :-))

வால்மார்ட் போன்றோர் கொள்ளை அடிப்பார்கள் என சொல்லும் சிவப்பு சட்டைகள் மறைமுகமாக உள்நாட்டு வியாபாரிகளின் கொள்ளைக்கு ஆதரவு அளிக்கிறார்கள் எனவே தான் உள்நாட்டு வியாபாரிகள் கடந்த சீசனில் ஒரு குவிண்டால் 1180 ரூ க்கு வாங்கிவிட்டு இப்போது , விளைச்சல் குறையும் என்ற கணிப்பில் விலை ஏற்றி விற்பதனை கண்டுக்கொள்வதில்லை,அவர்களை பொறுத்த வரையில் அன்னிய சக்தியை எதிர்க்க வேண்டும் ஆனால் உள்நாட்டு சக்தி என்ன செய்தாலும் கவலை இல்லை,நல்ல கொள்கை விளங்கிடும் நாடு.

வரும் பருவத்தில் விளைச்சல் குறைந்து, செலவு அதிகம் ஆனாலும் விவசாயிக்கு ஒரு குவிண்டாலுக்கு 1180 ரூ தான் கிடைக்க போகிறது, இதனை சிலர் உணர்ந்து கொண்டு ஏன் நஷ்டத்தில் விவசாயம் பார்க்கணும் என நிலத்தை சும்மா போட முன்வந்தாலும் வரலாம், அப்படி ஆகும் பட்சத்தில் சாகுபடி பரப்பு குறைந்து அரிசி உற்பத்தி வெகுவாக சரிந்துவிடும் எனவே அடுத்த ஆண்டு அரிசி விலையை வியாபாரிகள் இரட்டிப்பாக்கவும் தயங்க மாட்டார்கள் ஏன் எனில் அவர்கள் கைவசம் ஏற்கனவே வாங்கிய ஸ்டாக் நிறைய இருக்கிறது, இது தான் சாக்கு என லாபம் பார்க்கவே விழைவார்கள், அப்புறம் முதலில் பார்த்த கானா பாடலை நாம் எல்லாம் கூட்டாக பாடி பசி மறந்து இன்புறலாம் :-))

விவசாயி என்பவன் தன்னம்பிக்கையுடன் உழைக்க தயாராகவே இருக்கின்றான், ஆனால் அவனுக்கு கிடைப்பதெல்லாம் ஏமாற்றமும் , வறுமையும் தான் எனில் எத்தனைக்காலம் அவனும் அதற்கு தயாராக இருப்பான்?

உழவனின் உற்சாகத்தினை காட்டும் , நம்பிக்கையை விளக்கும் ஒரு திரைப்பாடல் இது, மக்களை பெற்ற மகராசி படத்தில் உழுதுக்கொண்டே நடிகர் திலகம் மண்டைய லட்சணமாக ஆட்டி ,ஆட்டி பாட்டில் நடித்திருப்பது ஒரு தனிரகம் :-))


நெல் விளையற பூமியடா
விவசாயாத்த பொறுப்பா கவனிச்சு செய்யறோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னகண்ணு
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னகண்ணு
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு

ஆத்தூறு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வித விதச்சி
ஆத்தூறு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வித விதச்சி
நாத்த பரிச்சி நட்டு போடு சின்னகண்ணு
தண்ணிய ஏத்தம் பிடிச்சு எறச்சு போடு செல்லகண்ணு
நாத்த பரிச்சி நட்டு போடு சின்னகண்ணு
தண்ணிய ஏத்தம் பிடிச்சு எறச்சு போடு செல்லகண்ணு

கருத நல்லா விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
கருத நல்லா விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னகண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லகண்ணு

ஏன்றா பல்ல கட்டுற

கருத நல்லா விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னகண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லகண்ணு

பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும்
வித்து போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு
விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும்
வித்து போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு

சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்ன கண்ணு உங்க
அம்மா கையில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு

சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்ன கண்ணு
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு

------

என்னோட மற்ற விவசாயப்பதிவுகளையும் பாருங்க,விவசாயம் செய்வதன் நிகர லாப ,நட்டங்கள், பல காலமாக விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்பட்டு வருவதும் புரிய வரும்.




இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.







---------
பின்குறிப்பு:

படங்கள் கூகிள், காணொளி யூட்யூப், நன்றி!

*****

10 comments:

முத்தரசு said...

அந்த ப சி யோன்னு நினைத்து வந்தேன் இங்க வந்து பார்த்தல் நம்ம அடி வவுத்துல கை வைக்கிறாங்களே... இந்த பசி வந்தா நிலைமை சீரியஸ்.. நாடு நாறிபோகும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விவசாயமும் அது சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை தந்தால்தான் நீங்கள் சொல்வதுபோல் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும்.விவசாயத்தை விரும்பி ஏற்கக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.
சிந்திக்க வைக்கிற பதிவு

ஜோதிஜி said...

அடிக்கடி இந்தியப் பொருட்களை வாங்க வேண்டும் என்று தேசபக்தி பதிவோ அல்லது மின் அஞ்சலோ வரும் பார்த்து இருக்கீங்களா?

ஆனால் உள்நாட்டு தயாரிப்பு என்ற பெயரில் அதன் கொள்ளை விலையைப் பார்த்தால் அடிப்படை லாபத்தோடு கூட்டி கழித்துப் பார்த்தாலும் 200 மடங்கு லாபம் இருக்கும். பொருள் தரமோ பெப்பரப்பபா....

உள்நாட்டு தயாரிப்பு இந்த அளவுக்கு மோசமாக காரணம் போட்டி. அதற்கு மேல் அரசாங்கத்தின் ஆதரவுமின்மை.

அப்புறம் எப்படி விவசாயி விவசாயம் பார்க்கச் செல்வான்? அவனுக்கு ரியல் எஸ்டேட் தான் லாயக்கு என்று வந்து விடுகின்றான்.

தி.தமிழ் இளங்கோ said...

மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி - எல்லாமே போச்சு! விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் ரியல் எஸ்டேட்காரர்களை எதிர்த்து எந்த அரசியல்வாதியும், சமூக ஆர்வலர்களும் போராட்டமோ மறியலோ செய்ததாகத் தெரியவில்லை.

MANO நாஞ்சில் மனோ said...

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எங்கள் ஊர் விவசாய நிலங்கள் எல்லாம் மாடி வீடுகளாய் மாறிவிட்டது கொடுமை...!

naren said...

வவ்வால் சார்,

இதை பற்றி ஓசை பதிவில் நான் போட்ட பின்னூட்டமும் பதிலும்
http://oosssai.blogspot.com/2012/07/blog-post_14.html
===================================
narenJuly 14, 2012 8:35 PM
அனைத்து துறைகளில் ஊதியங்கள் உயர்ந்துவிட்ட நிலையில், விவசாயி மட்டும் ஏழையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. அவனும் சொகுசாக வாழ வேண்டாமா.

பால், நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதுதான் நல்லது. 8 அல்லது 10 ரூபாயில் கொள்முதல் செய்யும் நெல் எப்படி 40 ரூபாய்க்கு விற்கபடுகின்றது என்பது தெரியவில்லை. நடுவில் யார் கொள்ளையடிக்கிறார்களோ.

ரேசன் பொருட்களை தேவையானவர்களூக்கு மட்டும்தான் விநியோகம் செய்யும், ”தில்” முடிவுகளை எடுக்கும் தலைவன் தான் உண்மையில் அஞ்சா நெஞ்சன், பதிவில் சொன்ன காரியங்கள் நடக்காது.

ReplyDelete
Replies

ஒசைJuly 14, 2012 8:46 PM
அனைத்து துறைகளில் ஊதியங்கள் உயர்ந்துவிட்ட நிலையில், விவசாயி மட்டும் ஏழையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. .////

அதை வலியுறுத்தி எழுதினால் - நாம் கெட்டவர்கள் ஆகி விடுவோம்
===================================

அந்த பதிவை படித்தவுடன், அரிசி விலையை பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என நினைத்தேன், ஆனால் உங்கள் பதிவு நான் சொல்ல நினைத்ததை விட அழகாக, அழுத்ததிருத்தமாக சரியாக சொல்லிவிட்டீர்கள் நன்றி.

என்னை கேட்டால் விவசாயிக்கு ஒரு கிலோ அரிசிக்கு 50 ரூபாய் கிடைத்து, வெளியில் நூறு ரூபாய் வித்தாலும் சரிதான்.

இதைப்போல தேயிலை தூள், ஏளத்தில் ஒரு கிலோவுக்கு 30 அல்லது 40 ரூபாய்தான் போகும், ஆனால் வெளியில் 200 முதல் 300 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

பேசாமே அரிசி வியாபாரியாகவும் இடைத்தரகராகவும் ஆகிவிடலாம போலிருக்கின்றது.

vimalanperali said...

நாட்டின் கேந்திரமான விவசாயத்தொழிலும்,
அதை நம்பியுள்ள மக்களும்
படுகிற பாடு சொல்லி மாளவில்லை.

வவ்வால் said...

மனசாட்சி,

வாங்க,நன்றி!

நம் நாட்டில் உணவு உற்பத்தியும், மக்கள் தொகை பெருக்கமும் கிட்ட தட்ட சமமா ஓடிக்கிட்டு இருக்கு, உணவு உற்பத்தீல் தொய்வு ஏற்பட்டாலும் ,மக்கள் பெருக்கம் இருக்கவே செய்யும் எனவே கொஞ்சம் அசந்தாலும் அக்கால பஞ்சம்,பசி என சூழல் மாறிவிடும், இப்போதே நிலங்கள் சுருங்க , உயர் விளைச்சல், பல சாகுபடி மூலமே உற்பத்தியை பெருக்குகிறோம், ஆனால் அது தொடர்ந்த்உ கொண்டு இருக்க வேண்டும், விவசாயத்திற்கு ஊக்கம் இல்லாத சூழலில் உற்பத்தி சரிவு எனில் பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு இறக்குமதி பெரும் சுமை ஆகிவிடும்.

--------
முரளிதரன்,

வாங்க,நன்றி!

அதே தான் , தொடர் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்,ஆனால் நிலையோ எதிர்மாறக இருக்கு, அதனையே பதிவிட்டுள்ளேன்.

------
ஜோதிஜி,

வாங்க,நன்றி!

ஆமாம் நிறைய மெயில் பதிவு வருகிறது, உள்நாட்டு உற்பத்தியை வாங்கலாம்ம், ஆனால் அவர்கள் அநியாய லாபம் சம்பாதிக்க நினைக்கையில் அதனை செய்ய தயங்க தானே செய்வார்கள்.

அக்குவா ஃபினா, கின்லே போன்ற மினரல் வாட்டர் விலைக்கே உள்ளூர் மினரல் வாட்டர் விற்கிறார்கள்,ஆனால் தரமோ படும் மட்டமாக இருக்கும் பார்த்துள்ளீர்களா? ஒன்று விலைக்கு ஏற்ற தரம் இருக்கணும் இல்லை எனில் மலிவாக இருக்கணும், அதுவும் இல்லை. லாபம் சம்பாதிப்பதில் உள்நாடு வெளி நாடு எல்லாம் ஒன்று தான், ஆனால் நுகர்வோர் நலனுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

போட்டி இருந்தால் விலையை குறைக்க வேண்டுமே ,குறைக்காமல் போட்டி என்றால் எப்படி?

விவசாயிக்கு நட்டத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று தலை எழுத்து, எந்த உற்பத்தியாளரும் அடக்க விலைக்கு கீழ் விற்கவோ,உற்பத்தி செய்யவோ முன் வர மாட்டார்கள், விவசாயத்தில் மட்டும் , லாபம்ம் இல்லை என்றாலும் செய்வார்கள், ஆனால் எத்தனை காலம் செய்வார்கள்,அதான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் செய்பவர்கள் வேறு வேலை தேடபோய்விடுகிறார்கள். போட்ட பணம் திரும்ப கிடைக்கும் என உத்தரவாதமில்லாத தொழிலாகிப்போச்சு விவசாயம்.இதில் அவனது உழைப்பிற்கு என்ன கிடைக்கும்?

--------
தி.த.இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என யானைக்கட்டி போரடித்தது எல்லாம் பழம் பெருமையாகி ,இப்போ டிராக்டர் வச்சு விவசாயம் செய்ய கூட முடியாத சூழல் ஆகிடும் போல இருக்கு.

ரொம்ப காமெடி செய்யுறிங்க, அரசியல்வாதிங்க தான் ரியல் எஸ்டேட் செய்றதே,அவங்க எப்படி போராடுவாங்க, குளம் ,குட்டை ,வாய்க்கால்னு எங்கே இடம் கிடைக்கும்னு அதையும் ஆட்டைய போட அலையுறாங்க. மதுரை அஞ்சா நெஞ்சர் கல்லூரியே பாசன வாய்க்காலை ஆக்ரமித்து தான் கட்டி இருக்காங்க :-))
--------
மனோ,

வாங்க,நன்றி!

ஆமாம் , போற போக்கில் பார்த்தால் கடலில் தான் போய் விவசாயம் செய்யனும், இருக்கிற இடம்ம் எல்லாம் வீடா ,தொழிற்சாலையா ஆகிடுது, மிச்சம் தரிசா போடுறாங்க.

மாடி தோட்டம் அமைக்க பதிவு போட்டது போல, மாடியில் நெல் பயிரிட ஒரு பதிவு போட வேண்டி வரும் போல :-))

ஜப்பான்ல மாடியில நெல் முதல் எல்லாம் பயிரிடுறாங்க, அதை நம்ம மக்களுக்கு அறிமுகத்திடுவோம் :-))

----------
நரேன்,

வாரும்,நன்றி!

அதே தான், நான் முன்னர் போட்ட பதிவுகளின் சுட்டியை பார்த்தீங்களா? அதில் காஸ்ட் ஆப் கல்டிவேஷன், ரிடர்ன் எல்லாம் விளக்கி ,வியாபாரிகளுக்கு தான் எல்லாம்ம் போகுதுன்னு விளக்கியிருப்பேன். அரிசி வியாபாரி 100% மார்ஜின் வைத்து விக்குறாங்க.

எனவே கொள்முதல் விலையை உயர்த்திட்டு, ரீடெயில் விலைக்கு உச்ச வரம்பை அரசு நிர்ணயிக்கணும்,ஆனால் அரசு ரிவர்சில், விவசாயிக்கு விலை உச்ச வரம்பு நிர்ணயிக்குது.
------
விமலன்,

வாங்க,நன்றி!
ஆமாம் , உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற நிலையே, அப்படியும் பலர் விவசாயம் செய்துக்கொண்டு இருக்க காரணம், அவர்களுக்கு வேறு வேலை தெரியாது என்பதால், இன்னும் சில ஆண்டுகளில் அடுத்த தலைமுறைக்கு விவசாயம் செய்ய தெரியாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது.
------

ராஜ நடராஜன் said...

இந்தப் பதிவை நேற்றே படித்தேன்.புலம்பல் தவிர எதுவும் சொல்ல தோணல.இப்பவும் அப்படியே.

Thenammai Lakshmanan said...

எதேச்சையா நான் என்னோட கருத்துக்களைப் பகிர்ந்தேன். வவ்வால் மிக விரிவா நீங்க எழுதி இருக்கீங்க.. ஹ்ம்ம் மறுக்க முடியாத உண்மைகள். விவசாயிகள் படும் துயரம் அதைவிடக் கொடுமை.. தாங்கள் விளைவித்த அரிசிக்கே அதிக விலை கொடுத்து வாங்குவது..