(ஹி..ஹி...இப்படித்தான் திரும்பி பார்க்கணுமாம்)
குழப்புமே என நினைக்கலாம், ஆனால் தொடர்ச்சியாக கால வரிசையில் சொல்லும் போது சில ஒத்த நிகழ்வுகள் வேறு காலத்தில் நடந்திருந்தாலும் ஒப்பிட முடியாது, மேலும் ஒரே மாதிரியான நிகழ்வுகளே ஒரு பதிவு முழுவதுமாக பேசும் நிலை வரும், எனக்கும் ரேண்டமாக நிகழ்வுகளை பிடித்து போவது சுவையாக இருக்கும்(ஹி...ஹி நான் எப்போதும் அங்கு கொஞ்சம்,இங்கு கொஞ்சம் என மாற்றி மாற்றித்தான் படிப்பேன்)
முன்னுரை போதும் திரும்பிப்பார்ப்பதை ஆரம்பிப்போம்.
மானிடவியல்,வரலாறு ஆகியவற்றை படிக்கும் அனைவரின் கண்ணிலும் அடிக்கடி சிக்கும் ஒரு சொற்றொடர் "ஆசியா மைனர் பகுதி" என்பதாகும், காரணம் மனித குல நாகரீகம் ,இனக்குழு இந்த பகுதியில் இருந்து தான் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது என்றோ அல்லது இவ்வழியே தான் மேலை உலகம் கீழை உலகினை தொடர்பு கொண்டது என்றோ, மனித இனப்பரவலின் மையம் என்றோ ஏசியா மைனர் நிலப்பரப்பினையே பெரும்பான்மை அறிஞர்கள் சுட்டுவார்கள்.
இதற்கு மாற்று கருத்தும் உண்டு, ஏசியா மைனருக்கே இன்னொரு இடத்தில் இருந்து தான் மனிதர்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பது. அதனை பின்னால் காணலாம்.
ஏசியா மைனர் என்ற பெயரிடலே ரோமனிய/கிரேக்க நாகரீகம் வளர்ந்த பின் தான் துவங்கியது. ஏன் எனில் ரோமானிய /கிரேக்க வரலாறு,புவியியல் வல்லுனர்கள் தான் முதன் முதலில் உலக வரைபடம், நாடுகளுக்கு பெயர் வைப்பது என்றெல்லாம் ஆரம்பித்தார்கள்.
இலத்தின் மொழியில் தான் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ,மக்கள்,மொழி எல்லாம் பெயர் சூட்டப்பட்டு முதன் முதலில் ஒரு ஆவணப்படுத்தலாக துவங்கியது.எனவே வட்டார மொழி,நாட்டில் வேறு பெயர் இருந்தாலும் இலத்தின் வழக்கே பயன்ப்பாட்டில் உள்ளது.
ஏசியா மினாரெஸ் என இலத்தினில் பெயரிடப்பட்டது, மினாரெஸ்= பூதம் , ஆனால் வழக்கில் மைனர் என்றால் சிறிய ,இளைய என்பதால் , பிற்காலத்தில் ஏசியா மைனர் என்றால் சின்ன ஏசியா ,ஏசியாவிற்கு முன்னால் உள்ள பகுதி என குறிக்கப்பயன்ப்பட்டது.
இலத்தின் வழக்கில் தந்தையை மேக்சிமஸ் என்றும் மகனை மைனர் என்றும் சேர்த்து ஒரே பெயரிம் அழைப்பது உண்டு.
அகஸ்டஸ் மேஜரின் மகனை அகஸ்டஸ் மைனர் என்பார்கள், பின்னாளில் அரசன் ஆனதும் தனிப்பெயர் சூட்டிக்கொள்வார்கள்.
இவ்விடம் இப்போது உள்ள துருக்கியியின் ஆசிய பகுதியாகும்,இது கருங்கடலுக்கும், மத்திய தரைக்கடலுக்கும் இடையே உள்ள தீபகற்ப நிலமாகும்.
இதனை அனடோலியா என்றும் சொல்வார்கள், அப்படி ஒரு தேசமிருந்தது,அதோடு
Bithynia ,Cappadocia,Galatia,Phrygia,Pontus,Aeolia, Aeolis ,Lycia,Lydia,Ionia, ஆகிய நாடுகளும் மற்றும்,Ephesus,Ilion, Ilium, Troy ஆக்கிய நகரங்களும் இருந்தன.
பிற்காலத்தில் ஒட்டமான் ஆட்சியாளர்கள் வீழ்ந்த பின் இளம்துருக்கியர்கள் கேமல் அட்டாதுர்க் தலைமையில் புரட்சி செய்து , சுதந்திர மற்றும் குடியரசு துருக்கியை ஒருங்கினைந்து இப்போது உள்ள வடிவில் உருவாக்கினார்கள்
-------------
கஜினி முகமதின் படை எடுப்பு:
காலிபா அல்-வாலித் பின் அப்துல் மாலிக்கால் கசன்நாவி (இதுவே கஜினி ,கசன்வாடி எனப்பட்டது)பிரதேசத்திற்கு முகமது பின் காசிம் ஆளுநராக நியமிக்கப்பட்டு ,இஸ்லாமிய தேசத்தினை விரிவு படுத்த ஆணையிடப்பட்டார். இன்றைய பாக்கிஸ்தானில் உள்ள Daibul, Raor, Uch and Multan ஆகிய பகுதிகளை வென்று காலிபாவிடம் நல்ல பெயரை வாங்கினார். அல்-வாலித் இறப்புக்கு பின் அல்-சுலைமான் பின் அப்துல் மாலிக் காலீபாவாக வந்தார். அந்த நேரத்தில் முகமது பின் காசிம் சிந்த் மாகணத்தில் உள்ள தாகிர் என்னும் பிரதேசத்தின் மீது படை எடுத்து வென்றார்,அம்மன்னனின் இரண்டு பெண்களையும் கைப்பற்றி வந்தார்.
(முகமது பின் காசிம்)
காலிபா என்பவர்கள் இறைத்தூதாரின் வழி வந்தவர்கள் செய்யுற புனித வேலை இதானா?
முகமது பின் காசிம் 17 வயதிலேயே ஆளுநராக நியமிக்கப்பட்டு , பாரசீகத்தின் சில பகுதிகள், மேலும்,.சிந்த், பஞ்சாப் என சில பகுதிகளை வென்று இஸ்லாமியா விரிவாக்கத்தினை சிறப்பாக செய்த ஒரு படைத்தளபதி ,இத்தனைக்கும் வயது 17 தான், அவரை கைது செய்து தலையை துண்டிக்கும் போது 21 வயது தான்.ஆனால் அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனக்கு கன்னிப்பெண்களை அனுப்பவில்லை என்று கலிபா சுலைமான் , காசிமை கொன்றார். இது தான் புனித மார்க்கத்தின் அடிப்படை :-))
பின்னர் அப்போது அடிமையாக இருந்த துருக்கியை பூர்வீகமாக கொண்ட அல்பத்கின் இனக்குழுவினை சேர்ந்த சுப்குத்கின் என்பவரை கசநாவி பகுதி ஆட்சியாளராக நியமித்து ,இஸ்லாமை பரப்பவேண்டும், அவருக்கு நேர்மையுடன் நடந்து கொள்ளவும் ஆணையிட்டார் காலிபா. அல்பத்கின் வம்சத்தில் சுப்குத்கிந்-3 என்பவர் (977-97) கசனாவி பிரதேசத்தின் மூன்றாவது அரசராக ஆட்சிக்கு வந்தார், அவரது முதல் மகன் தான் கஜினி முகமது.
தனது தேசத்தினை விரிவுப்படுத்த சுப்குத்கின் பெஷாவரை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த ஜாட் மன்னர் ஜயபாலன் மீது படை எடுத்தார் ஆனால் அப்போரில் ஜயபாலன் வெற்றி பெற்றார். மீண்டும் படை எடுக்க நினைத்தாலும் அதற்குள் சுப்குத்கின் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் , சாகும் தருவாயில் கஜினி மீது நம்பிக்கையில்லாததால் அவரது தம்பி இஸ்மாயிலை அரசனாக்கிவிட்டு இறந்ததார்.
(கஜினி முகமது)
கஜினி பின் படை திரட்டி தம்பியை கொன்றுவிட்டே ஆட்சியில் அமர்ந்தார். முன்னர் அவரது தந்தை ஜயபாலனுடன் போரிட்டப்போது அவருக்கு உதவியாக போரில் கலந்து கொண்ட கஜினிக்கு ஜெயபாலனுடன் ஏற்பட்ட தோல்வி உறுத்திக்கொண்டே இருந்ததால் பழி வாங்க மீண்டும் போரிட முடிவு செய்தார்.
பெஷாவர் படை எடுப்பு:
1001 இல் ஜெயபாலன் மீது படை எடுத்து பெஷாவருக்கு சென்றார், கடுமையாக நடைப்பெற்றப்போரில் 15,000 வீரர்களை கொன்று ஜயபாலனையும்,அரச குடும்பத்தினர் 15 பேரையும் கைது செய்து கூடவே 5,00,000 பெஷாவர் மக்களையும் அடிமைகளாக பிடித்துக்கொண்டு கஜினிக்கு சென்றார்.
பின்னர் மன்னர் ஜயபாலனின் உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி 2,50,000 தினார்கள் மீட்பு தொகையாக கொடுத்து மன்னரை மீட்டு சென்றார்கள். நாடு இழந்து ,தோல்வியுடன் வாழ விரும்பாத ஜயபாலன் , தீக்குளித்து தன்னை மாய்த்து கொண்டார், இது அக்கால ஜாட்,ராஜ்புத்திர அரச வழக்கம், தங்களுக்கு இழிவு ஏற்பட்டதாக கருதினால் உயிர் துறந்துவிடுவார்கள்.
தமிழ் மன்னர்களும் போரில் வீரமரணம் அடையாமல் , இழிவு ஏற்பட்டால் வடக்கிருந்து உயிர் துறப்பார்கள்.
வடக்கிருத்தல் என்றால் என்ன?
வடக்கு திசை நோக்கி அமர்ந்து , அவர்கள் முன்னால் அவர்கள் உடை வாளினை கூர் முனை கழுத்தினை நோக்கி இருக்குமாறு நட்டுவிட்டு, அன்னம், தண்ணீர் தவிர்த்து உண்ணா நோன்பு இருப்பார்கள் , பசி,தாகத்தால் உடல் தளர்வுற்று சாயும் போது ,வாள் கழுத்தில் பாய்ந்து இறப்பார்கள்.
சங்க கால தமிழ் மன்னன் ,சோழன் கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறர்.
வெண்ணிகுயத்தி எனும் சங்ககால பெண்பாற் புலவர் பாடிய அப்பாடல்,
"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே."
இதன் மூலம் சங்கால தமிழ் மன்னர்கள் உயிரினும் மேலாய் மானத்தினை கருதியது புலப்படும்.
ஆனந்த பாலன் மீது படை எடுப்பு;
(கஜினி முகமதின் தர்பார்)
கி,மு 1008 இல் ஜயபாலனின் மகன் ஆனந்த பாலன் படைகளை உருவாக்கி , பெஷாவரை மீண்டும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார், இதனைக்கேள்விப்பட்டு கஜினி பெஷாவர் மீது படை எடுத்தார்.
இம்முறை ஆனந்த பாலனுக்கு உதவியாக குவாலியர், கன்னூஜ், கோக்ராஸ்,உஜ்ஜயின்,ஆஜ்மீர்,டெல்லி மன்னர்களும் வந்தார்கள், வந்தார்களே ஒழிய யாரிடையேயும் ஒற்றுமையே இல்லை, போருக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இருந்து, யாருக்கு முக்கியத்துவம் என்பது வரையில் கவுரப்பிரச்சினை எழுந்து ஒற்றுமையின்றி இருந்தார்கள்.
படை எடுத்து வந்த கஜினிக்கு இம்முறை ஆச்சர்யம் நிறைய படைபலத்துடன் ஆனந்த பாலன் இருப்பதை பார்த்து சண்டையை துவக்க தயங்கி ,படையுடன் எல்லையில் முகாமிட்டு நிற்கவேண்டியதாயிற்று. இரு தரப்பும் போரிட தயங்கி, யாராவது முதலில் ஆரம்பிக்கட்டும் என நினைக்க ,அப்படியே 40 நாட்கள் போயிற்று, அதற்குள் ஆனந்த பாலன் முகாமில் கோஷ்டி சண்டை ஏற்பட்டு ஆளுக்கு ஒரு பக்கம் பிரிய நினைத்தார்கள், இடையில் மற்றவர்களின் பேச்சினைக்கேட்காமல் கோக்ராஸ் படைகள் கஜினி மீது தாக்குதலை துவக்கி போரிட ஆரம்பித்துவிட்டார்கள், கோக்ராஸ் ஆரம்பத்தில் கடுமையாக போரிட்டு 5000 கஜினி வீரர்களை கொல்லவும் செய்தார்கள், பின்னர் மற்ற மன்னர்களும் களத்தில் குதிக்க கஜினி படை பலமாக அடிவாங்க துவங்கியது, அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த பாலன் அமர்ந்திருந்த யானையின் மீது அம்பு தாக்கி காயமுற ,யானை திமிறிக்கொண்டு கட்டுப்பாடில்லாமல் போர்க்களத்தினை விட்டு ஓடிவிட்டது, இதனை பார்த்த மற்ற மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் குழப்பம் வரவே பல வீரர்களும் போர்க்களத்தினை விட்டு பின் வாங்கலாயினர். இதனை பயன்ப்படுத்திக்கொண்டு ,கஜினி மீண்டும் உற்சாகத்துடன் போரிட்டு எஞ்சியவர்களை தோற்கடித்து போரினை வென்றான்.
இப்போரில் சரணடைந்த சுமார் 20,000 இந்து போர் வீரர்கள் வெட்டிக்கொள்ளப்பட்டார்கள். பெஷாவர் மீண்டும் கஜினி முகமதின் ஆட்சிக்கு கீழ் வந்தது.
இப்போருக்கு பின்னர் தான் இந்து மன்னர்களிடம் ஒற்றுமை இல்லை, எளிதாக தோற்கடிக்கலாம் என புரிந்து கொண்ட கஜினி மற்ற சிறிய தேசங்களையும் தனித்தனியாக படை எடுக்கவும் , மேலும் தனது படை எடுப்பு முறையும் மாற்றிக்கொண்டு படை எடுக்கலான்.
இந்தியாவில் குளிர்காலத்தில் மன்னர்களும், மக்களும் அவ்வளவாக விழிப்புடன் இருப்பதில்லை, என்பதையும் , அவர்களுக்கு விழித்துக்கொண்டு படை திரட்ட வாய்ப்பில்லாமல் திடீர் என தாக்க வேண்டும் என்றும் புரிந்துக்கொண்டான். இந்தியாவில் படை எடுத்து போரிட்டாலும் சூரியன் மறைந்த பின் போரிட மாட்டார்கள் இது ஒரு போர் மரபு. ஆனால் கஜினி மாலை வேலைகளிலும்,இரவிலும் திடீர் என தாக்குதல் நடத்துவதுண்டு. போர் குறித்த எம்முன்னறிவிப்பும் இல்லாமல் இரவில் திடீர் என படையுடன் நகருக்குள் நுழைந்து தாக்கும் உத்தியாலேயே 17 முறை இந்திய பகுதிகள் தாக்குதல் நடத்த முடிந்தது.
பெஷாவர் என்பது கஜினியின் அண்டை நாடு என்பதாலும் இந்திய பகுதிக்கு நுழைய தேவையான வழி என்பதாலும் அதனை பிடிக்க ஆர்வம் காட்டினான். ஆனால் மற்ற படை எடுப்புகளின் போது ஒரு குறிப்பிட்ட நகரை குறிவைத்து தாக்கி கொள்ளை அடித்துவிட்டு , அடிமைகளாக மக்களையும் பிடித்து கொண்டு உடனே நாடு திரும்பிவிடுவது வழக்கம். இந்திய மண்ணில் அதிக பட்சமாக இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் அவன் படை இருக்காது.காரணம் மற்ற நாட்டில் இருந்து உதவிக்கு படை வந்து பெரிய சண்டையானால் சமாளிப்பது கடினம் என்பதாலே.
கஜினி படை எடுத்த முறை இந்திய போர் முறைகளுக்கு மாறானது ,
#இந்திய மன்னர்கள் போர் புரிய போகிறார்கள் என்றால் முன்னரே யுத்த அறிவிப்பு செய்து தகவல் கொடுப்பார்கள்,
#மேலும் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையிலே போர் நடக்கும். போர் களத்தில் சரணடைந்தவர்களை கொல்ல மாட்டார்கள்.
#போருக்கு சம்பந்தமில்லாத அப்பாவி பொது மக்களை துன்புறுத்த மாட்டார்கள்.
#பெண்களை தொடக்கூட மாட்டார்கள்.முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிக்க மாட்டார்கள்.
-------------------------------------------------------------
சங்ககால போர் மரபு:
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்
முதலில் ஓலை அனுப்பி எச்சரித்தல்,
பின் வெட்சிப்பூச்சூடி பகைவரின் ஆநிறை,ஆடுகள் என கவர்வர்.
எதிரி மன்னன் பதில் அளிப்பதாயின் ,
கரந்தை பூச்சூடி ஆநிரைகளை மீட்க போரிடுவர்.
வஞ்சி பூச்சூடி படை எடுத்து செல்வர்.
காஞ்சி பூச்சூடி எதிரிகள் நாட்டுக்கு வராமல் தடுப்பர்.
நொச்சி பூச்சூடி கோட்டையை காப்பார்கள்.
உழிஞை பூச்சூடி கோட்டையை முற்றுகை இடுவார்கள்.
தும்பைப்பூச்சூடி இரு தரப்பும் போர்க்களத்தில் ஒருவருக்கு ஒருவர் மோதுவார்கள்.
வாகைப்பூச்சூடி வென்றவர்கள் களிப்பார்கள்.
இதுவே அக்கால தமிழ் மன்னர்கள் போர் மரபு ஆகும்.
------------------------------------------------------
ஆனால் கஜினி படை எடுப்பின் போது கொள்ளை அடிப்பதுடன் முடிந்தவரையில் எத்தனை பேரை கொல்ல முடியுமோ அத்தனைப்பேரை கொண்டு விடுவது வழக்கம்.
ஊரில் இருக்கும் பெரும்பாலான ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை அடிமைகளாக கைப்பற்றுவது வழக்கம்.
பின்னர் எஞ்சியவர்களை அடிமைகளாக ,அவனது நாட்டுக்கு கைப்பற்றி சென்றுவிடுவார்.
ஒரு அடிமையின் விலை அப்போது 10 தினார்களாம், ஒவ்வொரு முறை படை எடுப்பின் போதும் அடிமைகளை விற்ற வகையிலே சில லட்சம் தினார்கள் வருமானம் கிடைப்பதுண்டாம்.இப்படி ஏகப்பட்ட இந்துக்களை அடிமைகளாக ஆப்கானிஸ்தான், கசநாவி பகுதிகளில் விற்றதால் அப்பகுதிகளே இந்தியாவின் ஒரு நகரம் போல விளங்கியது என வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
மற்ற படை எடுப்புகளை அடுத்து காணலாம்.
திரும்பிப்பார்த்தல் தொடரும்...
-----------
பின்குறிப்பு;
தகவல், படங்கள் உதவி,
கூகிள் ,கூகிள் புக்ஸ், விக்கி, ஆர்க்கியாலஜி ஆன் லைன், ஹிஸ்டரி ஆப் இந்துஸ்தான் -அலெக்ஸாண்டர் டோவ். மேலும் பல இணைய தளங்கள்.நன்றி!
-------------