Sunday, February 26, 2012

எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!





எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!


சாகித்ய அகதமியின் விருதுக்கு நூல்களை தேர்வு செய்யும் முறை:

# ஐந்து பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை மொழி வாரி ஆலோசனைக்குழு ஒவ்வொரு மொழிக்கும் பரிந்துரைக்கும்.

# அந்த ஐந்தில் இருந்து இருவரை அகதமி தலைவர் தேர்ந்தெடுப்பார்.

#இரு நபர் குழு அம்மொழிக்கான அடிப்படை நூல்ப்பட்டியலை தேர்வு செய்து மாநில மொழி ஆலோசனைக்குழுக்கு அனுப்பும்.

# மாநில மொழி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அவர்கள் சார்பாக தலா இரண்டு நூல்களை பரிந்துரைத்துக்க வேண்டும்  , நிபுணர்க்குழுவின் அடிப்படையில் இருக்கலாம் , அல்லது ஒன்று நிபுணர் குழு நூல் ஒன்று சுய தேர்வு அல்லது இரண்டுமே சுய தேர்வாகவும் இருக்கலாம்.மாநில மொழி ஆலோசனைக்குழு இலக்கிய அமைப்புகளின் பரிந்துரைகளையுன் பரிசீலிக்கும். பின்னர் இந்நூல்களின் பெயர்கள்  தொகுக்கப்பட்ட  பட்டியலாக சேர்த்து அகதமிக்கு அனுப்புவார்கள்.

# மாநில வாரியாக 10 நபர் கொண்ட ஒரு முன் தேர்வுக்குழு அமைக்கப்படும். அவர்களுக்கு இந்த பட்டியல் அனுப்பப்படும்.

#இந்த தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்  மொழி ஆலோசனைக்குழு  மற்றும் நிபுணர்க்குழுவால் தொகுக்கப்பட்ட பட்டியலில் இருந்து தலா இரண்டு நூல்களோ அல்லது அவர்கள் விருப்பப்படி இரண்டு நூல்களையோ குறிப்பிட்டு பரிந்துரைப்பார்கள்.

#இப்போது ஒரு இறுதிப்பட்டியல் உருவாகி இருக்கும், இது 3 பேர்க்கொண்ட தேர்வாளர்கள்(ஜூரி) வசம் ஒப்படைக்கப்படும்.இந்த தேர்வாளர்கள் மாநில ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ,அகதமி தலைவர் முடிவு செய்து தேர்வு செய்வார்.

#இப்போது 3 ஜூரிகளும் ஒருமித்த முடிவாக ஒரே நூலை தேர்வு செய்யலாம் அல்லது மூன்றில் இரண்டுப்பேர் ஓட்டுப்பெறும் நூலையும் தேர்வு செய்யலாம். இதுவே விருதுக்கான நூலாகும்.

ஜூரிகளுக்கும் ,அகதமிக்கும் இடையே  இணைப்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் இருப்பார். விருதுக்கான பரிந்துரை அகதமி செயல் குழு முன் வைக்கப்பட்டு ,ஒப்புதல் பெறப்பட்டு விருது அறிவிக்கப்படும்.

சாகித்ய அகதமி சுட்டிகள்:

விருதுக்கு தேர்வு செய்யும் முறை:


தேர்வு விதி முறைகள்

மாநில ஆலோசனைக்குழுப்பட்டியல்:


மாநில ஆலோசனைக்குழு

ஜூரிகள் மற்றும் விருதுப்பட்டியல்:

விருதுப்பட்டியல்

இப்போது தமிழக சாகித்ய அகதமி அமைப்பில் உள்ளவர்களைப்பார்ப்போம், இவர்கள் தான் தமிழகத்திற்கான விருது வழங்குவதில் முக்கிய பங்காற்றுபவர்கள்.

மாநில அகதமி பொறுப்பாளர்:

முனைவர்.ஆர்.குருநாதன்
சென்னை.

மாநில ஒருங்கிணைப்பாளர்:


முனைவர்.சிற்பி.பொ.பாலசுப்ரமணியன்
பொள்ளாச்சி.
சிற்பி

தமிழ்நாடு மொழி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்:

#முனைவர்.ஆர்.குருநாதன் ,சென்னை.(மாநிலத்தலைவரும் இவரே)
#
மகரந்தன் (ஐ.கணபதி),புதுவை.
#பேரா.இரா.மோகன்,மதுரை.
#பேரா.இரா.மீனாக்‌ஷி,ஆரோவில்,தமிழ்நாடு.
#
சுப்ரபாரதிமணியன்,திருப்பூர்.
#இந்திரன்,சென்னை.
#இரா.நடராஜன்,சென்னை.(முன்னால் சென்னை வானொலி இயக்குநர்)
#என்.ஆவுடையப்பயன், நூலக இயக்குனரகம்,சென்னை.
#தங்கம் மூர்த்தி(காவியா மூர்த்தி),புதுக்கோட்டை.
#முனைவர்.சிற்பி.பொ.பாலசுப்ரமணியன்,பொள்ளாச்சி.(ஒருங்கினைப்பாளரும் இவரே)

மூன்று நபர் விருது (ஜூரி)தேர்வுக்குழுவினர்.


#கவிஞர் தமிழ்நாடன்,


இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர், வானம்பாடி கவிஞர் குழுமத்தில் ஒருவர். தமிழ்நாடு வளர்கலை ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயலாளராக இருந்தவர்.
ஏழு கார்ட்டூன்களும்  ஒரு வண்ண ஓவியமும் - என்ற நூலை ஒரியாவில் இருந்து தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்தமைக்கு 2000 ஆம் ஆண்டு சாகித்ய அகதமி மொழிமாற்ற விருது பெற்றுள்ளார்.


அவரைப்பற்றி அப்போது இந்து நாளேட்டில் வநத செய்தி ,
 THIS YEAR'S Sahitya Akademi Award winner for Tamil translation, Mr. A. Tamilnadan, is a ``non- conformist'' among writers, with Leftist leanings.



#குறிஞ்சி வேலன்



இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர். நிறைய மொழிமாற்ற நூல்கள் எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகதமி விருது -1994 -இல் விஷக்கன்னி(மலையாளம்) நாவலுக்கு பெற்றுள்ளார்.

இரண்டாம் இடம்   என்ற மொழிமாற்ற நூலுக்காக -2001 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கவிருது பெற்றுள்ளார். பின்னர் மீண்டும்
முழுமையைத்தேடும் முழுமையற்றப்புள்ளிகள் என்ற நூலுக்கும் பெற்றார்.
link:

book

இவர் ஆசிரியராக இருந்து திசைகள் எட்டும்  என்ற காலாண்டு மொழிமாற்ற இதழ் நடத்தி வருகிறார்.

திசைகள் எட்டும் குறித்த அறிமுகம் ஆரண்யநிவாஸ் என்பவரின் வலைப்பதிவில் இருக்கிறது பார்க்கலாம்.

திசைகள் எட்டும்

முன்னால் சென்னை வானொலி இயக்குநர், இரா.நடராசன், மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுடன் இணைந்து " நல்லி திசைகள் எட்டும் "என்றப்பெயரில் மொழி மாற்ற நூல்களுக்கான விருதினை ஆண்டு  தோறும் வழங்கி வருகிறார்.

தமிழக சாகித்ய அகதமி ஒருங்கிணைப்பாளர். சிற்பி.பொ.பால சுப்ரமணியனும் நல்லி திசைகள் எட்டும் விருதுப்பெற்றுள்ளார்.
http://www.hindu.com/2010/08/08/stories/2010080859780400.htm">திசைகள் எட்டும் விருது

# முனைவர்.பேரா.கே.செல்லப்பா


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராக திருச்சிப்பாரதிதாசன் பல்கலையில் பணிப்புரிந்து ஓய்வுப்பெற்றவர்.“Ilango and Shakespeare: A Comparative Study,”  என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இயக்குனராக கனடா கல்வி மையம், பாரதிதாசன் பல்கலையிலும் பணிப்புரிகிறார்.

இதெல்லாம் எதற்கு இப்பொழுது என்று ஒரு கேள்வி எழலாம்,  விஷயம் இருக்கு,

மூன்று ஜூரிகளில் இரண்டுப்பேர் இடது சாரி சிந்தனையாளர்கள், மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை கழகத்தில் ஈடுபாடுக்கொண்டவர்கள் என்பதும் தெரிய வருகிறது.

மாநில ஒருங்கிணைப்பாளரும் , மற்ற சில மாநில ஆலோசனைக்குழுவினரும் திசைகள் எட்டும் ஆசிரியர், ஜூரியான குறிஞ்சி வேலனுடன் நட்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

மாநில ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருக்கும் சுப்ரபாரதி மணியன் ( thiruppuur) ,மகரந்தன் (புதுவை)எனப்பலரும் த.மு.எ.க.க ஆர்வலர்களாகவே தெரிகிறது.

காவல் கோட்டம் ஆசிரியர் சு.வெங்கடேசன் , இடதுசாரி சிந்தனையாளர் சிபிஐ(எம்) சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலிலும் நின்றுள்ளார். மேலும் த.மு.எ.க.க மாநில செயலாளர் என்பதால் ஒத்த சிந்தனைக்கொண்டவர்களின் ஆதரவினைப்பெருவதில் வியப்பேதும் இல்லை.மூன்று ஜூரிகளில் இருவர் இடதுசாரி சிந்தனையாளராக இருக்கும் போது சாதகம் தானே.

இன்னும் கொஞ்சம் உள்ளேப்போய் பார்த்தால் போக்குவரத்து , சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின்  தலைவர் சீத்தாராம் யெச்சூரி சிபிஐ(எம்)  கட்சியை சேர்ந்தவர்.  அந்த நிலைக்குழு தான் சாகித்ய அகதமி கொள்கைகளையும் விமர்சித்தது.விருதிற்கான தேர்வு முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும்http://www.pravasitoday.com/parliamentary-panel-recommends-transparency-in-sahitya-akademi-awards"> பாராளுமன்றத்தில் யெச்சூரி பேசியுள்ளார். அக்குழுவின் ஆய்வுக்கு உட்பட்டது தான் சாகித்ய அகதமி. சில ஆண்டுகளுக்கு முன்னர் சீத்தாரம் யெச்சூரி தலைமையில் தான் செம்மலர் ஆண்டு விழாவினை த.மு.எ.க.க வினர் மதுரையில் நடத்தினார்கள்.

இடது சாரி சிந்தனையாளருக்கு சாதகமான சிந்தனையாளர்களே அகதமியில் அதிகம் இருக்கும் நிலையில் காவல் கோட்டம்  நாவலுக்கு பரிசீலனைகளின் போது சாதகமாக இருந்திருக்க வேண்டும்.

ஏன் மற்ற இலக்கியவாதிகள் காவல் கோட்டத்தினை 1000 பக்க அபத்தம் என சொல்கிறார்கள் எனில் அவர்களின் நாவல்கலை அகதமி மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் யாரும் பரிந்துரைக்கவில்லை என்ற ரகசியம் அவர்களுக்கு தெரிந்து இருப்பதே ஆகும்.

மேலும் முதல் கட்ட பரிசீலனைக்கு ஏதேனும் ஒரு இலக்கிய அமைப்பு ,சங்கம் என பரிந்துரை செய்ய வேண்டும் அதுவே பின்னர் மாநில ஆலோசனைக்குழுவினர் மூலம் முன் தேர்வுக்குழுவின் அடிப்படை பட்டியலுக்கு போகிறது.

எஸ்.ரா ஆரம்பக்காலத்தில் இருந்தே த.முஎ.க..க .வில் ஈடுபட்டு வருபவர், ஆனால் அப்படி இருந்தும் எஸ்ரா போன்றவர்களின் நூலினை முந்திக்கொண்டு சு.வெங்கடேசனுக்கு த.மு.எ.எ.க பரிந்துரை கிடைத்து இருக்கலாம், அதுவே சீனியரான எஸ்.ராவிற்கு கடுப்பேற்றி இருக்கலாம் என தோன்றுகிறது.

இடது சாரி சிந்தனையாளர்களின் தாக்கம் கொண்ட குழுவில் ஜெ.மோ கதை எல்லாம் செல்லுபடி ஆகி இருக்காது என நினைக்கிறேன், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் பொங்கித்தள்ளுகிறார் போல தெரிகிறது.

ஓரளவுக்கு அனைவராலும் எழுத்தாளுமை உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெ.மோ, எஸ்.ரா போன்றவர்களுக்கே போதுமான ஆதரவு இல்லாத போது காமநெடி பீசான சாருவுக்கு யார் பரிந்துரை செய்திருக்க போகிறார்கள். அதான் காண்டாகி தனியாக அவர் கூட்டம் போட்டு அடுத்தவங்களை காச்சுகிறார் :-))

த.மு.எ.க.க வின் ஆர்வலராக இருந்தும் ஒரு புதுமுக எழுத்தாளருக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் புறக்கணிக்கப்பட்டதால் எஸ்.ராவிற்கு ஆதங்கம் இருப்பதில் வியப்பில்லை. அதை நேரடியாக வெளிக்காட்டவும் முடியவில்லை அதான் தனக்கு தானே திட்டமாக சூப்பர் ஸ்டாரை வைத்து கொடியை பறக்க விட்டுக்கொண்டார்.

ஆனால் சாரு ஏன் எஸ்.ரா வின் மீது பாய்கிறார்  எனத்தெரியவில்லை. வேண்டுமானால் அவரும் லோகநாயகனையோ இல்லை பொழுது போகாமல் சும்மா குந்தி இருக்கும் ஒரு நடிகரை/நடிகையை இழுத்து வந்து விழா நடத்திக்கொண்டால் யார் கேட்கப்போகிறார்கள். பல்லு இருக்கவன் பட்டாணி  தின்றான் இவருக்கு ஏன் வலிக்குது :-))

காவல்கோட்டம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று அப்போதெல்லாம் இல்லாத சர்ச்சைகள் விருதுக்கு பின்னர் வருகிறது என்றால் என்னக்காரணம் , ஒவ்வொருவரும் நம்ம பேர் லிஸ்ட்ல இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்து இலவு காத்து ஏமாந்து போயிருப்பார்கள் போல .அதான் இப்போது பூதக்கண்ணாடி வைத்து குற்றவியல் ஆய்வு செய்கிறார்கள்.

சாகித்ய அகதமி ஆங்கிலம் உட்பட 24 மொழிகளுக்கு ,மொழி வாரியாக நூல்களை தேர்வு செய்தே விருதளிக்கிறது.தேசிய அமைப்பால் கொடுக்கப்படும் ஒரு பிராந்திய விருதே அது,அகில இந்திய அளவில் சிறந்த நூலுக்கானதும் அல்ல.ஏன் எனில் போட்டியே ஒவ்வொரு மொழிக்குள் மட்டுமே. அப்படி இருக்கும் போது  ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். ஞானபீட விருதே உச்சமான அகில இந்திய இலக்கிய விருதாகும்.

சிறந்த தேசிய படமென விருதுப்பெருவதற்கும், சிறந்த மாநில மொழிப்பட விருதிற்கும் வித்தியாசம் இருப்பது போலவே அகதமி விருதுகளும்.

---------

பின்குறிப்பு-1:

காவல் கோட்டம் சு.வெங்கடேசன் மட்டுமில்லாமல் தமிழகத்தை  சேர்ந்த மேலும் இரண்டுப்பேர் சாகித்ய அகதமி விருதினை மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கு பெற்றுள்ளார்கள்.

#
இந்திரன் - எழுத்தாளர்.

சென்னையில் வசிக்கும் புதுவையை சேர்ந்த இந்திரன் என்கிற பி.ஜி.இராஜேந்திரன் , பறவைகள் ஒரு வேளை தூங்கிப்போயிருக்கும் என்ற பெயரில் ஒடிய மொழி நூலை மொழிப்பெயர்த்தமைக்கு பெற்றுள்ளார்.

#முனைவர்.தமிழ்செல்வி(சென்னைப்பல்கலை) அவர்கள் லிவிங்க் ஸ்மைல் வித்யா (வலைப்பதிவரும் கூட) எழுதிய நான் சரவணன் இல்லை வித்யா என்ற தமிழ் நூலை  கனடத்தில் மொழிப்பெயர்த்தமைக்கு சாகித்ய அகதமி விருதினைப்பெற்றுள்ளார்.

பின்குறிப்பு-2:

இந்த எலக்கிய சண்டை , விருது வாங்கிற அக்கப்போரை எல்லாம் பார்த்த பிறகு நாமும் கொஞ்சம் தம் கட்டி ஒரு ஆயிரம் பக்கத்துக்கு எழுதிட்டு  மானே, தேனே ,பொன்மானே போல அதுக்கூட கொஞ்சம் மக்கள் தொகை புள்ளிவிவரம், டெலிபோன் டைரக்டரி, இராபர்ட் கிளைவ்னு வரலாறு ,கொல்லிமலைப்பாவை னு எல்லாம் தூவிட்டா மாபெரும் வரலாற்று இலக்கிய காவியம் உருவாகிடும்னு தோன்றுகிறது. எவ்வளோவோ செய்துட்டோம் இத செய்ய மாட்டோமா :-))

இந்த லட்சணத்துல இலவசமாக இணையம் இருக்குனு எழுதுறவங்க எல்லாம் எழுத்தாளர்கள் இல்லை மாட்டு மூத்திரத்தை காய்ச்சி குடிச்சுட்டு 35 வருஷமா எழுதறவங்க எழுதுவது தான் எலக்கியம்னு சொல்லிக்கிறார் ஒரு எலக்கியவாதி.
தூங்கிட்டு இருந்த ஒரு வவ்வாலை தட்டி எழுப்பிட்டாங்க எனவே இனிமே நானும் எழுதி விருது வாங்கிக்காட்டுறேன்டா !...டா..டா! எனவே மக்களே யாருக்குலாம் விருது  வாங்க ஆசை இருக்கோ எல்லாம்  வாங்க ஒரு எலக்கிய  புரட்சிய ஒன்று கூடி உருவாக்கலாம், இந்த எலக்கிய டம்மி பீசுகளுக்கு பாடம் கற்பிக்கலாம்.

பின்குறிப்பு-3:

இந்தப்பதிவில் இருப்பவை பத்திரிக்கை செய்திகள் மற்றும் இணையத்தில் கிடைத்த தகவல்களின்  அடிப்படையிலே எழுதப்பட்டுள்ளது, எந்த தனிநபரையோ , அமைப்பையோ களங்கப்படுத்தும் நோக்கத்தில்  உள்நோக்கத்துடனோ எழுதப்படவில்லை.அப்படி யாரேனும் தாங்களாகவே நினைத்துக்கொண்டால் அடியேன் பொறுப்பல்ல :-))


Thursday, February 23, 2012

விமான விபத்துகள் ஏற்படுவது ஏன்?



விமான விபத்துகள் ஏற்படுவது ஏன்?


  சிறுவயதில் வானில் தென்ப்படும் அலுமினியப்பறவையை ஆசையுடன் அண்ணார்ந்த்துப்பார்த்து ஆச்சர்யப்படும் சிறுவர்களாகவே நாம் அனைவரும் வளர்ந்த்து வந்திருப்போம். வளைந்து நெளிந்தோடும் தொடர் வண்டியினை பார்க்கும் போது உண்டாகும் பரவசத்திற்கு ஒப்பானதே இதுவும்.  அனைவருக்கும் ஒரு முறையாவது ஆகாய விமானத்தில் வானில் பறக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும் ஏன் எனில் விமானப்பயணங்கள் புதிய அனுபவத்தினையும்,மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது.

பரவசத்திற்கு இணையான பயத்தினையும் தரவல்லது விமானப்பயணம், ஏன் எனில் வானில் விபத்து ஏற்பட்டால் இரண்டாவது வாய்ப்பென்பதே இல்லை. எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டப்போதிலும் விபத்தினை தவிர்க்க இயலாததாகவே இருப்பது ஏன்?  விமானங்கள் விபத்துக்குள்ளாது எதனால் என அறியும் ஒரு முயற்சியே இப்பதிவு.
அதற்கு முன்னால் விமானம் பறப்பது எப்படி என்ற அடிப்படையினை  அறிய பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் என்ற எனது பதிவையும் ஒரு முறைப்படித்து விடுங்கள்.

இங்கே சுருக்கமாக , காற்றின் செயல்ப்பாடு பறக்க எவ்வாறு உதவும் என சொல்கிறேன், ஒரு குறிப்பிட்ட வேகத்தில் காற்று விமானத்தின் இறக்கையின் மீது மோத வேண்டும், இறக்கையின் மேல்,கீழ் என இரண்டாக காற்றுப்பிரியும், இறக்கை வடிவமைப்பின் காரணமாக மேல் செல்லும் காற்று வேகமாக செல்லும் எனவே அழுத்தம் குறையும்,கீழ் செல்லும் காற்று மெதுவாக செல்லும் எனவே அழுத்தம் அதிகம் இருக்கும் இது
  பெர்னோலி விதியின் அடிப்படையில் நடக்கிறது. இதுவே மேல் நோக்கி விமானத்தை கிளப்புகிறது. மிதப்பு விசை (lift)எனப்படும். மேலும் இரண்டாக பிரியும் காற்று இறக்கையின் பின்ப்புறம் மீண்டும் இணைய வேண்டும் அப்போது தான் மேல் நோக்கி மிதக்கும் விசையின் மையம் இறக்கையில் இருக்கும், விமானம் நிலையாக பறக்கும்.



பெரும்பாலும் விமானவிபத்துகள் கீழ்கண்டக்காரணங்களால் ஏற்படுகின்றன.

#விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறுகளால்

#விமான ஓட்டியின் கவனக்குறைவால்

# வானிலை மற்றும் வானியக்கவியல்(aerodynamics) காரணங்களால்.

மேலே சொன்னவற்றில் முதல் இரண்டுக்காரணிகளையும் கவனமான பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க முடியும், ஆனால் மூன்றாவது காரணியை தவிர்ப்பது கடினம்.

மூன்றாவது காரணியால் உண்டாகும் விபத்தினையும் குறைந்த பட்சமாக குறைக்கலாம்  ஆனால் விமான நிறுவனங்களின்  செலவைக்குறைக்கும் செயல்ப்பாடே விபத்தின் அளவுக்குறையாமல் வைத்திருக்கிறது அது எப்படி என்பதினைக்காணலாம்.

நமது வளிமண்டலம் அடுக்குகளால் ஆனது முதல் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர்,அடுத்து ட்ராபோ ஸ்பியர், மீசோ ஸ்பியர், அயனோ ஸ்பியர் என உச்ச அடுக்காக கொண்டது.


மேகங்கள், மழை , இன்ன பிற வானிலை மாற்றங்கள்  துடிப்பாக நிகழும் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர்.இங்கு தான் காற்றின் அடர்த்தி, வேகம் எல்லாம் அதிகம்.இந்த அடுக்கில் பறப்பது கரடு முரடான சாலையில் பயணிப்பது போன்றது.மேலும் பறப்பதற்கு அதிக எரிப்பொருளும் செலவாகும்.

இதற்கு அடுத்த அடுக்கான டிராபோஸ்பியரில் மேகம், மழை எல்லாம் இருக்காது ஆனால் அவ்வப்போது மின்னல் வெட்டும், பனி பொழிவும் இருக்கும், மேலும் குறைவான அடர்த்தியில் காற்று இருக்கும். இதனால் விமானத்தின் எடைத்தூக்கும் திறன்ப்பாதிக்கப்படும். ஆனால்  அடர்த்தி குறைவானக்காற்றில் பறந்தால் குறைவாக எரிப்பொருள் செலவாகும். காரணம் காற்றினால் உருவாகும் எதிர்ப்பு தடைக்குறைவாக இருக்கும்.உ.ம் எதிர்க்காற்றில் சைக்கிள் ஓட்டுவது கடினமாக இருப்பது.

மேலும் இன்னொரு வானியக்கவியல் சிக்கலும் இருக்கு அதுவே விமான விபத்திற்கு பெரும்பாலும் வழிவகுப்பது. அப்படிப்பறப்பது கரணம் தப்பினால் மரணம் போன்றது ஆனாலும் சிக்கனமாக பறக்க வேண்டும் என்று திட்டமிடும் விமான நிறுவனங்கள் ஆபத்தினை தெரிந்தே டிராபோஸ்பியர் அடுக்கில் விமானங்களை இயக்குகின்றன.

அந்த அபாயம் என்ன என்றுக்காண்போம்,

டிராபோஸ்பியரில் 35000  அடி உயரத்திலேயே வணிக விமானங்கள் (commercial airlines)இயக்கப்ப்டுகின்றன. இங்கு என்ன மாதிரியான சூழல் நிலவும் என்பதினைப்பார்ப்போம்.

சிறியதும் பெரியதுமான ஏர்ப்பாக்கெட்ஸ் எனப்படும் திடீர் அழுத்தம் குறைவான வெற்றிடங்கள்(vacuum) இருக்கும், இதனுடாக பறக்கும் போது ஆட்டோ குலுங்குவது போல விமானங்கள் குலுங்கும். சில பெரிய உயர் வெற்றிட வெளியில் போதுமான காற்று இல்லாமல் எஞ்சின் அணைந்து போகவும் வாய்ப்புண்டு, அப்படி ஆகாமல் இருக்க பைலட் மிக திறமையாக செயல்ப்பட்டு எஞ்சின் வேகத்தினை தக்கவாறுக்கட்டுப்படுத்துவார். அப்படியே அணைந்தாலும் உடனே எஞ்சினை இயக்கிவிடுவார். இதற்காகவே விமான எஞ்சின்கள் பல முறை சோதிக்கப்படும். எவ்வளவு வேகமாக மீண்டும் எஞ்சின் இயக்கத்திற்கு வரும் என்றெல்லாம் தரச்சோதனைகள் செய்து நிருபித்தால் மட்டுமே அந்த மாடல் எஞ்சினுக்கு அனுமதியே கிடைக்கும்.

ஆழ் கடலில் நீரோட்டங்கள் காணப்படுவது போல வானிலும் காற்று  ஒடைகள் (jet streams)காணப்படும் , திசைப்பண்புகள் கொண்டவை, எனவே காற்று ஓடையின் திசையில் பறந்தால் வேகமாகவும், குறைவான எரிப்பொருளிலும் பறக்கலாம். இதற்காகவே டிராபோஸ்பியரில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளப்பகுதியில் ஸ்ட்ராடோஸ்பியர்  காற்று சென்று மோதும் போது அவை அப்படியே மேல் எழுந்து செங்குத்தாக டிராபோஸ் வரைக்கும் சென்று நிற்கும் , அப்படிப்பட்ட காற்று அலையை விமானம் கடக்கும் போது அதன் வானியக்கவியல் பாதிக்கப்படும், எப்படி எனில்,

விமானம் பயணிக்கும் திசைக்கு எதிரில் இருந்து வரும் காற்றானது இறக்கையின் மீது  இரண்டாக பிரியும் அப்படி பிரியும் காற்றானது மீண்டும் இறக்கையின் பின்ப்பகுதியில் இணைய  வேண்டும் ,அப்போது  தான் காற்றில் விமானம் மிதக்கும்.

இப்போதூ விமானத்தின் அடியில் இருந்து வேகமாக வரும் செங்குத்தான காற்றோட்டம் ஒரேயடியாக மேல்ப்புறக்காற்றையும் வழித்துக்கொண்டு மேலே சென்று விடும் இதனால் விமானத்தின் எடையை சம நிலையில் வைத்திருக்கும் இறக்கையின் தூக்கு விசை பாதிப்புக்குள்ளாகி விமானம் கீழே இறங்கும்.

விமானத்தின் எடை அதன் எஞ்சினின் மொத்த திறக்கும் சமமாக இருந்தால் சமாளிப்பது கடினம், எஞ்சின் திறன் அதிகமாக இருந்தால் எஞ்சினை வேகமாக இயக்கி அந்த காற்று அலையினைக்கடக்க வைக்க முடியும்

விமான எடை, எஞ்சின் திறன் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு 300 டன் விமானம் எனில் அதில் 150 டன் வெற்றுவிமான எடை மற்றும் எரிப்பொருளின் எடை ஆகும், மீதி 150 டன் என்பது பே லோட் (pay load)எனப்படும் , விமானத்தில் ஏற்றப்படும் சரக்கு/ பயணிகளின் எடை ஆகும்.

மேலே சொன்னது பே லோட் என்பதினை விளக்கவே ஆனால் நடைமுறையில் 50% பே லோட் எல்லாம் விமானங்கள் தூக்க முடியாது மொத்த எடைத்திறனில் மூன்றில் ஒரு பங்கு எடைத்திறனே இருக்கும்.அதாவது 300 டன் எஞ்சின் திறன் எனில் 100 டன் மட்டுமே பேலோட் திறன் ஆக இருக்கும்.

எனவே முழு எடைத்தூக்கும் திறனுக்கும் எடை சுமந்து விமானம் பறந்தால் மேற்சொன்னது போன அவசரக்காலங்களில் நிலையாக பறக்க வைக்க முடியாமல் விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.இதனாலேயே பயணிகள் கொண்டு செல்லும் எடைக்கு கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஆபத்து இருக்கு என்று சொல்லிவிட்டு இன்னும் எதுவும் வரவில்லையே என நினைக்கலாம் , அது இனிமேல் தான் வருகிறது.

இப்போது இரண்டு விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்ளவும்,
வணிக விமானங்கள் எடைக்கு இணையான எஞ்சின் திறனை மட்டுமே கொண்டிருக்கும், மேலும் இறக்கையின் மேல், கீழ் பயணிக்கும் காற்று மீண்டும் பின் பகுதியில் ஒன்றாக இணைய  வேண்டும்.

ஒரு விமானம் 35000 அடி உயரத்தில் பயணிக்கிறது,

விமானம் முன்னோக்கி செல்லும் போது அதன் மையப்பகுதியான உடம்பு அதே பரப்பளவில் காற்றினை முன்னோக்கி தள்ளும் எனவே விமானத்துக்கு சற்று முன்னதாக ஒரு காற்று  முகப்பு (air front)உருவாகும் , அதே வேளையில் பக்க வாட்டில் காற்று தடையின்றி வேகமாக  இறக்கை வரை செல்ல  முடியும் ,அதுவே இறக்கை மீது மோதி மேலும், கீழும் இரண்டாக பிரிந்து சென்று அழுத்த மாறுப்பாட்டினை உருவாக்கி விமானம் பறக்க உதவுகிறது.



வளிமண்டலத்தில் காற்று ஓடைகள் உண்டு என்றுப்பார்த்தோம் ,இதனால் விமானம் இயங்கும் வேகத்தினை விட வேகமாக காற்றில் முன்னோக்கி செல்லும் இதனை உண்மையான  காற்று வேகம் (true air speed)என்பார்கள், விமான எஞ்சினால் கிடைக்கும் வேகத்தினை இயல்பான வேகம் (air speed)என்பார்கள்.

உண்மையான காற்றுவெளி வேகம் விமானியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்ப்பட்டது, காற்றோடையின் தன்மைக்கு ஏற்ப மாறும்.

பயணிகள் விமானம் ஆனது காற்றில் ஒலியின் வேகத்தை விட குறைவான வேகத்தில் பயணிக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது,பயணிகள் விமானத்தின் பாதுகாப்பான மேக் ஸ்பீட் மேக் 0.86 ஆகும். மேலும் எஞ்சின்களும் அப்படியே , இதனால் விமானத்தின் வேகம் எப்பொழுதும் ஒலியின் வேகத்தினை (mach speed)தாண்டாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். போர் விமானங்களால் மட்டுமே ஒலியை தாண்டிய வேகத்தில் பறக்க முடியும், அவற்றின் வடிவமைப்பு மற்றும் எஞ்சின் திறன் அத்தகையது.



குறைவான வேகத்தில் ஓட்டினால் போதுமே அப்புறம் என்னப்பயம் என்றுக்கேட்கலாம், ஆனால் காற்றோடை என்ற ஒன்று இருக்கே அது இழுத்து போய்விடும் வேகமாக. மேலும் அவ்வளவு உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாகவே இருக்கும் , அதனை சமாளிக்க கண்டிப்பாக ஒரு குறைந்த பட்ச வேகம் இருக்க வேண்டும்.அப்போது தான் காற்று இறக்கையின் மீது வேகமாக மோதி அழுத்த வித்தியாசம் உருவாக்கி விமானத்தினை காற்றில் மிதக்க வைக்கும்.

போதுமான மிதப்பு விசை கிடைக்க வேகமாக இயக்க வேண்டும், ஆனால் ஒலியின் வேகத்தை தொடக்கூடாது என்பதே வணிக விமானங்களுக்கான வானியக்கவியல் கட்டுப்பாடு.

ஏன் எனில் ஒலியின் வேகத்தினை வணிக விமானங்கல் தொடும் போது  இறக்கையின் மேல் பிரிந்து செல்லும் காற்று மீண்டும் பின்ப்பகுதியில் இணையாமல் பிரிந்தே சென்றுவிடும் இதனால் தூக்கு விசைக்குறையும்.

இது எதனால் ஏற்படுகிறதது எனில், முன்னர் சொன்னது போல விமானத்தின் மைய உடம்பு காற்றினை அதன் பரப்புக்கு முன் தள்ளி ஒரு காற்று முகப்பினை உருவாக்குவதால் பக்கவாட்டில் காற்று வேகமாக இறக்கையில் மோதும் ,இதுவே தேவையான மிதப்பு விசையினை தருகிறது. காரணம் காற்று முகப்புக்கும் , இறக்கைக்கும் இடையே காற்றின் வேகம் மாற்றம் அடைவதே.

இப்போது விமானம் ஒலியின் வேகத்தில் பறக்கிறது எனில் , காற்று முகப்பிற்கும், விமானத்தின் முகப்பு/மூக்கிற்கும் இடையில் இடைவெளி இருக்காது. விமானம் வேகமாக சென்று முகப்பின் மீதே மோதும் இதனால் ஒரு சீர்குலைவு காற்றில்( sonic boom and turbulance )ஏற்படும். இது இறக்கையின் மீது மோதும் காற்றின் வேகத்தினைக்குறைக்கும்.



இப்படிப்பட்ட நிலையில் விமானி என்ன செய்வார் எனில் இறக்கையில் மோதும் காற்றின் வேகத்தை அதிகரிக்க காற்று மோதும் கோணத்தினை (angle of attack)உயர்த்துவார் இதனால் இறக்கையின் மீதாக கடக்கும் காற்றின் வேகம் கூடும், இது தேவையான அழுத்த வேறுப்பாட்டினைத்தரும் பொதுவாக ஆனால் இதற்கும் ஒரு எல்லை இருக்கு, மோதும் கோணம் அதிகம் உயர்த்தப்பட்டால் பிரியும் காற்று மீண்டும் இணையாது இதனால் விமானம் கீழ் நோக்கி இறங்கும்,சிறிது நேரத்தில் சரி செய்யவில்லை எனில் விமானம் செங்குத்தாக தரை நோக்கி டைவ் அடித்து விடும். இதனை ஸ்டால் (stall)என்பார்கள்.

இப்படி திடீர் என உயரம் குறைந்து கீழ் செல்லும் போது விமானத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்னவெனில்,
தரை மட்டத்தில் விமானத்தின் உள்ளும், புறமும் ஒரே அழுத்தம் இருக்கும், அதுவே 35000 அடி உயரத்தில் வெளீப்புற காற்று அடர்த்திக்குறைவாக  இருப்பதால் உட்புறத்தை விட வெளியிள் அழுத்தம்  குறைவாக இருக்கும்.இந்த அழுத்த மாறுபாட்டால்  விமானம் சற்றே விரிவடையும். டேக் ஆப் ஆக்கும் போது காது அடைப்பதை போன்ற உணர்வு ஏறபடுவதும் இதனால் தான்.

 உயரம் குறைய ,குறைய சுருங்கிக்கொண்டும் வரும். திடீர் என உயரம் குறைந்தால் விரைவாக சுருங்கும் இதனை  அழுத்த அதிர்ச்சி என்பார்கள்.இதனால் விமானக்கட்டுமான இணைப்புகளில் விரிசல், மேலும் கட்டுப்பாட்டுக்கருவிகள் செயலிழப்பு ஏற்படலாம். மிக வேகமாம உயரம் குறையும் போது விமான இறக்கை, அல்லது உடலே உடைந்து விடும்.எனவே விமானம் மேல் எழும்புதல், இறங்குதல் என இரண்டும் சீராக நடைப்பெற வேண்டும்.

எனவே விமானம் ஒலியின் வேகத்தினை தொடும் எல்லையை சவப்பெட்டி முனை (coffin corner or q corner)என்பார்கள், காரணம் விமான வேகவரைப்படத்தில் ஒலி வேக எல்லை ஒரு முனையில் முடிவடையும்.

போதுமான அளவு காற்று வேகமாக மோத தேவையான விமான வேகத்தினை கிரிட்டிக்கல் ஸ்பீட் என்பார்கள். இந்த வேகம் ஒலியின் வேகத்திற்கு மிக அருகில் இருக்க கூடாது. இந்த கிரிட்டிக்கல் ஸ்பீட் ஒவ்வொரு உயர மட்டம், காற்றின் அடர்த்திக்கும் ஏற்ப மாறுபடும். மிதமான உயரத்தில் குறைவான கிரிட்டிக்கல் ஸ்பீட் போதும்.

உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அடர்த்தி குறையும், எனவே மிதப்ப்பு விசையை நிலையாக வைத்திருக்க காற்றின் வேகத்த்இனை அதிகரிக்க கிரிட்டிக்கல் ஸ்பீட் அதிகரிக்கப்படும். இதன் எல்லை ஒலியின் வேகம் ஆகும். எனவே எப்பொழுதும் ஒலியின் வேகத்திற்கும் ,கிரிட்டிக்கல் ஸ்பீடுக்கும் நல்ல வித்தியாசம் இருக்க வேண்டும்.  அப்போது தான் தேவைக்கு ஏற்ப வேகத்தை கூட்டியோ ,குறைத்தோ சீராக பறக்க முடியும். ஆனால் 35000 அடி உயரத்தில் கிரிட்டிக்கல் ஸ்பீடிற்கும், ஒலியின் வேகத்திற்கும் இடையே சுமார் 35 கி.மீ/மணி என்ற அளவே வேக இடைவெளி இருக்கிறது.

எதிர்ப்பாராதக்காரணங்களால் காற்றின் அடர்த்தி குறைந்தால் அதற்கு ஏற்ப விமானத்தின் வேகத்தினைக்கூட்டியோ, காற்று மோதும் கோணத்தை மாற்றவோ விமானியால் முடியாது அப்படி செய்தால் விமானம் மிதப்பு விசையை இழக்கும்.

மேலும் சில சமயங்களில் காற்று ஓடைகளை வேகமாக இழுத்து செல்லும் அப்போது சரியாக வேகத்தினைக்கட்டுப்படுத்த வேண்டும் இல்லை எனில் ஒலியின் வேகத்தினை தொடுவதால் விமானம் மிதப்புவிசையை இழக்க நேரிடும்.

35000 அடி உயரத்தில் விமானம் பறப்பதில் இத்தகைய அபாயம் இருப்பது தெரிந்தே ,விமான நிறுவனங்கள் விமானத்தை அந்த உயரத்தில் பறக்க வைக்கின்றன.ஒரே காரணம்  எரிப்பொருள் குறைவாக செலவாகும் , எனவே விமான இயக்க செலவு குறைவாகும், நல்ல லாபம் கிடைக்கும் என்பதே.

மேலும்  பெரும்பாலும் பனிப்பொழிவு, இடி மின்னல் போன்றவை  டிராபோஸ்பியரில் இருந்தே கீழ் நோக்கிப்பாயும்  அதிலும் சிக்க வாய்ப்புள்ளது.அது போன்ற சமயங்களில் கட்டுப்பாட்டுக்கருவிகள் செயலிழந்து போக நேரிடும். அதுவும் விபத்துக்கு வழி வகுக்கும். விமானங்களில் 50 கி.மீக்கு முன்னால் உள்ள வானிலையை காட்டும் ரேடார் உண்டு. அவை இடி ,மின்னல், பனிப்பொழிவினை சுட்டிக்காட்டும். சிறிது நேரம் அப்படிப்பட்ட சூழலில் ஊடாக பயணிப்பதில் பிரச்சினை இல்லை என்பதால் சமாளித்து விடலாம் என  விமானிகள் நேராக அதனுள் பயணிப்பது உண்டு.சில சமயங்களில் விபத்தாவதற்கு இதுவும் ஒருக்காரணம் ஆகும்.

இது போன்ற முன்னறிவிப்புகள்,காற்றின்,வேகம் , உயரம் எல்லாம் தானாகவே கருப்புப்பெட்டியில் பதிவாகிவிடும், விமானி எச்சரிக்கைகளை புறக்கணித்து செயல்ப்பட்டால் காட்டிக்கொடுத்து விடும், எனவே தான் விபத்துக்கான காரணம் கண்டறிய கருப்புப்பெட்டியை தேடுகிறார்கள்.

பின்குறிப்பு:

# இது கொஞ்சம் பழைய சரக்கு ,பதிவேறாமல் கிடந்துச்சு தூசு தட்டி  போட்டு இருக்கேன், ஏதேனும் பிழைகள் இருக்கலாம், மேலும் நானும் விமானப்பொறியாளன் அல்ல எல்லாம் கூகிளாண்டவரின் உபயம் :-))

#படங்கள் உதவி ,கூகிள் படம், மற்றும் ஃப்ரீ போட்டோ தளம். ஹி..ஹி அதுல கோடுப்போட்டு கிராபிக்ஸ் செய்தது மட்டும்  அடியேன்!

Friday, February 17, 2012

என்ன கொடுமை சார் இது!-2




என்ன கொடுமை சார் இது!-2

ஆரம்பக்காலத்தில் நான் பிளிறிய  சிலக்கொடுமைகளை இங்கே அழுத்திக்காணுங்கள்என்ன கொடுமை சார் இது!

மீண்டும் பிளிறல்  தொடர்கிறது....

ஒத்த சிந்தனை!

நம்ம தமிழ் சினிமா ஆளுங்க செம கில்லாடிங்க , உலக மகா சிந்தனையாளர்கள் ,புதுசு ..புதுசா  கற்பனை ஊற்றெடுக்கும் ஆனால் என்ன கொடுமைனா  இவங்க கஷ்டப்பட்டு கற்பனை செய்து உருவாக்கியதை உலகத்துல மத்தவங்க முன்னாடியே செய்து விடுகிறார்கள்!  தாமதமாக கற்பனை செய்தால் அதை எப்படி காப்பி அடிச்சாங்க என்று சொல்ல முடியும்... சொல்லக்கூடாது!ஒத்தசிந்தனை கொஞ்சம் லேட்டா  வந்திருக்குனு சொல்லுங்க! :-))





-----------------

பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்தல்:


ஒரு அஞ்சுப்பேருக்கு விருது கொடுத்தா அதுக்கு பேரு விருதா?
ஆமாம் விருது தான்!

அந்த அஞ்சுப்பேரு அஞ்சஞ்சு  பேருக்கு விருத கொடுத்தா அது?

அதுக்கூட விருதுனு சொல்லலாம்...

அந்த அஞ்சஞ்சு பேரு ஆளுக்கு அஞ்சு விருதுனு கொடுத்தா?

ம்ம்...ம்ம் விருது மாதிரி தெரியுது....

அஞ்சஞ்சு பேரா அஞ்சஞ்சு பேருக்கு என்று 5 லட்சத்து 55 ஆயிரத்து 5  நூற்று 55 பேருக்கு விருது கொடுத்தா?

ஹி..ஹி நான் இல்லை ரொம்ப பாவம் காலைல டிபன் கூட சாப்பிடல்லை ...எருமைக்கூட்டம் எங்கே இருக்கு சார்?  நானே போய் விழுந்துடுறேன்:-))

உங்கள் தளத்தை பைசா செலவில்லாமல் பிரபலம் ஆக்கணுமா , உடனே ஒரு விருது அறிவிச்சு பதிவர்களுக்கு பந்திப்போடுங்கள் போதும் :-))

விருதுக்கொடுத்தற்கு நன்றி என்று பதிவுப்போட்டே பிரபலம் ஆக்கிடுவாங்க உங்க தளத்தை!

-----------

மின்வெட்டைக்கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!

திமுக முன்னால் அமைச்சர்.வீராபாண்டி ஆறுமுகம் தலைமையில் , மொபைல் போன் விற்பனையாளர்கள்??!! ஒன்றுக்கூடி சேலத்தில் மின்வெட்டைக்கண்டித்து போராட்டம் நடத்தி இருக்காங்க. என்னா கோராமையிது, கடந்த ஐந்து ஆண்டுகளாக வாமணன் போல அளக்காமலே நிலம் அபகரிப்பில் பிசியாக இருந்தவர்கள், ஒரே ஒரு மின் திட்டத்தை கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதற்கே தி.மு.க தேர்தலில் தோற்றால் அதற்கு மின்வெட்டுக்காரணமாக இருக்கும்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது சாட்சாத் மின்வெட்டு துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டாரே. 

கதை அப்படி இருக்க ,இவங்க இப்படி போராட்டம் நடத்துவாங்களாம் :-))

அதுவும் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம், தொழிலார்கள், விசைத்தறியாளர்கள் என்று கூப்பிடாமல்(கூப்பிட்டாலும் வர மாட்டாங்க) மொபைல் போன் விற்பனையாளர்களை வைத்து நடத்துறாங்க, ஏன் மின்சாரம் இல்லாம மொபைல் போன் சார்ஜ் செய்து பேச முடியலையாமா? நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க :-))

அனேகமாக அடுத்த சட்ட சபைத்தேர்தலிலும் தற்போதைய மின்வெட்டே வெற்றியாளரை தீர்மானிக்கும் என நம்பலாம்.அட...டா திராவிட கட்சிகளுக்கு ஒத்த கொள்கை இருக்குனு சொல்றது இந்த மின்வெட்டுக்கொள்கைய தானா? :-))

என்ன கொடுமை ...சார் இது!
--------------

நேற்று உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார்ப்பள்ளியின் மாணவர் விடுதியில் +1 படிக்கும் /படித்த மாணவர் ஒருவர் ஆசிரியரின் அடக்கு முறை,தண்டனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.வருத்தத்திற்கும் ,கண்டனத்திற்கும் உரிய சம்பவம்.

கடந்த வாரம் கண்டித்த ஆசிரியையை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றார். இப்போது மாணவர் ஒருவர் தற்கொலை. இரண்டுமே இந்தியக்கல்விக்கொள்கை, மற்றும் சூழலின் சீரழிவையேக்காட்டுகிறது.

கல்வி என்பது அறிவுக்கு என்பதை தாண்டி பிழைப்புக்கு என்று மாறி மதிப்பென் வேட்டையில் மாணவர்கள் இறங்க வேண்டியதாகிவிட்டது. சிலர் வேட்டையில் வெற்றியும் பலர் வேட்டையின் தீவிரத்துக்கும் பலியாகிறார்களோ என தோன்றுகிறது.

கல்வி வியாபாரமாக ஆனதோடு மாணவர்களை கிளாடியேட்டர்களாக  மாற்றி போராட வைக்கிறது. எனவே மாணவர்களும் மூர்க்கத்தனமாக கல்வியுடன் போரிடுகிறார்கள். அப்படியே வென்றாலும் வெற்றியின் இனிமையை சுவைக்கும் மனநிலை போய்விடுகிறது. தோல்வியை விட தோற்றுவிடுவோமோ என்ற பயம் உயிரெடுக்கிறது.


கல்வியாளர்களோ, அரசோ விழித்துக்கொள்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் விழிப்படைந்து இது போன்ற அழுத்தங்களை பிள்ளைகளுக்கு தராமல் இருக்கலாம். ஆனால் அவர்களோ வாழ்வில் உயர வசதியாக வாழ கல்வி ,வேலை என்ற இரண்டே அக்‌ஷய பாத்திரம் என்ற முடிவில்  தனக்கு கிடைக்காத ஒன்று பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களையும் வருத்திக்கொண்டு பிள்ளைகளையும் வருத்திக்கொண்டு ,அவ்வப்போது இது போன்ற துர்பாக்கியமான செய்தியாகிவிடுகிறார்கள்.

----------------

Sunday, February 12, 2012

மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .



மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .




எப்போ வரும் எப்போ போகும் தெரியாது, வர வேண்டிய நேரத்தில் வராது, ஆனால் வரும் அது யார் ? ஹி..ஹி சூப்பர் ஸ்டார் அல்ல அது மின்வாரிய மின்சார கண்ணா மின்சாரம் தான்.

முன்னர் அறிவிக்கப்படாமல் 4-5 மணிநேரம் எல்லாம் மின் தடை செய்தார்கள், இப்போ தெம்பாக 8 மணிநேரம் மின் தடை சொல்லிட்டாங்க. உலகம் முழுக்க புவி வெப்பமாதல் தடுக்க 5 நிமிடம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வாங்க அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை ஆனால் தமிழக அரசு தினசரி 8 மணிநேரம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க கடுமையாக போராடி வருகிறது என்று சொன்னால் மிகையல்ல!


அனேகமாக இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபெல், யுனெஸ்கோ சுற்றுசூழல் விருது, கிரீன் பீசின் பசுமை நோபெல் பரிசெல்லாம் தமிழக முதல்வருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.

தமிழக மக்களும் புவிவெப்பமாதலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும், அப்படியும் சிலர் பதிவெழுத மின்சாரம் வேண்டுமே என தலையை சொறியக்கூடும் அவர்களைப்போன்ற சுயநல கிருமிகளுக்கு உதவவே இப்பதிவு..ஹி..ஹி ஏன் எனில் நானும் ஒரு சுயநலக்கிருமி ஆச்சே :-))

மின்வெட்டை குறுக்கு வெட்டாக வெட்டி புறவழிக்காண சில ,பல மக்கள் தலைக்கீழ் மின்மாற்றி சேமக்கலன் (இன்வெர்ட்டர் தானுங்க)வாங்கக்கூடும் , அப்படி வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்.

இனி நீட்டி முழக்காமல் த.சே என சுருக்கமாக சொல்வோம் , இது பல மின் திறன்களில் கிடைக்கிறது. ஆரம்பம் 600 வா.ஆ. பின்னர் 800va,1200va, 1500 vaஎன காசுக்கு ஏற்ப பல வண்ணங்களில், செயல்முறைகளில், பல நிறுவனங்களின் பெயர்களில் கிடைக்கிறது.

600 , 800 வா.ஆ எல்லாம் இப்போதைய நமது தேவைக்கு காணாது. குறைந்தது 1200 வா.ஆ திறனில் வாங்குவதே சிறந்தது. சில ஆயிரங்கள் மட்டுமே வித்தியாசம், 800 வா.ஆ ரூ 12000 எனில் 1200 வா.ஆ ரூ 15000 வரும்.

பிரபலம் அல்லாத நிறுவன தயாரிப்புகள் மலிவாக இருக்க கூடும், ஆனால் நம்பக தன்மை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.அமரன், கிராம்ப்டன் கிரீவ்ஸ், மஹிந்திரா, மைக்ரோ டெக் எல்லாம் நான் சொல்லும் விலை வரிசையில் கிடைக்கின்றன.


மின்னணு , தூய முழுஅலை தலைகீழ் மின்மாற்றி சேமக்கலன் (pure sinwave digital inverter)வாங்குவதே நல்லது.அப்போது தான் கணினிப்பயன்பாட்டுக்கு உதவும். இதனை இல்ல தடையில்லா மின்வழங்கி (home ups) என்று சொல்வார்கள்.இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யும் போதே ,த.சே இணைப்புக்கு என தனியே ஒரு மின்கம்பி பொருத்திவிடுகிறார்கள். எனவே இணைப்புக்கொடுக்கவேண்டிய சாதனத்திற்கு மட்டும் இணைப்பு வழங்கிவிடலாம் ,மீண்டும் புதிதாக மின் கம்பி இணைப்பு செய்ய தேவை இல்லை.

பொதுவாக ஒரு த.சே வில் ஒரு மின் ஏற்றி அமைப்பு(charging unit), மின்சாரம் சேமிக்க மின்சேமகலம்(12v battery) என இரண்டு அமைப்பு இருக்கும்.

மின் ஏற்றி அமைப்பு (charging unit) என்பது , மாறு மின்சாரத்தை நேர் மின்சாரம் ஆக முதலில் மாற்றி மின் சேமகலத்தில் சேமிக்கும் ,பின்னர் மின் தடையின் போது நேர் மின்சாரத்தை(டி.சி) மீண்டும் மாறு மின்சாரம் (ஏ.சி)ஆக மாற்றி உபகரணங்களுக்கு வழங்கும்.
எனவே தான் தலைகீழ் மின்மாற்றி சேமகலன்(இன்வெர்ட்டர்) என அழைக்கப்படுகிறது.ஒரு த.சே வின் திறன் 800வா.ஆ எனில் அதே அளவுக்கு மின்னேற்றம் செய்யும், அதே அளவுக்கு மின்சக்தியையும் உபகரணங்களுக்கு வழங்கும்.

ஒரு எளிய த.சே மின்சுற்று திட்ட விளக்க படம்.



அப்படிப்பட்ட எல்லா த.சேக்களும் ஒரே போல கட்டமைக்கப்படுவதில்லை. சிலவற்றில் இயங்கா வெப்ப நீக்கி (passive heat removal), இயங்கும் வெப்ப நீக்கி(active heat removal), என எல்லாம் இருக்கும்.த.சே செயல்ப்படும் போது அதிகம் வெப்பம் உருவாக்கும் எனவே வெப்ப நீக்கி அமைப்பு /குளிர்விக்கும் அமைப்பு முக்கியம், இல்லை எனில் மின்சுருள் புகை விடும்.

இயங்கும், இயங்கா வெப்ப நீக்கி என இரண்டும் உள்ளதில் வெப்பம் நீக்க ஒரு வெப்ப தொட்டி(ஹீட் சின்க்) யுடன் ஒரு குளிர்விக்கும் மின்விசிறியும் இருக்கும்.இரண்டும் உள்ளதே நல்லது அப்போது தான் எப்போதும் குளிர்ச்சியாக உங்கள் த.சே வேலை செய்யும்.

இப்போது மின் சேமகலன்(பேட்டரி) பற்றிப்பார்ப்போம். எல்லாமே 12வோல்ட் தான் ஆனால் அவற்றின் மின்னோட்ட திறன்= ஆம்பியர் வேறுபடும். அதைப்பொறுத்தே ஒரு த.சே எத்தனை மணி நேரம் மின்சாரம் வழங்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.

சில த.சே விலைக்குறைவாக இருக்கும் காரணம்  குறைவான மின்னோட்ட திறன் கொண்ட மின்கலத்தை கொடுப்பார்கள்.

ஒரு 800 வா.ஆ த.சே வுடன்
100 ஆம்பியர் /ஹவர் மின்கலம் இருப்பது ஆரம்ப நிலை.மலிவானதும் கூட.

அடுத்து 120 ஆ/ஹ, 150 ஆ/ஹ என்று போகும். அதிகப்பட்சமாக 180 ஆ/ஹ , 12 வோல்ட் தான் சந்தையில் கிடைக்கிறது.

800 வா.ஆ க்கு 120 ஆ/ஹ மின்கலம் பொறுத்தமானது. அதிக திறனில் சேர்த்தால் மின்சாரம் ஏற அதிக நேரம் பிடிக்கும்.

1200 வா.ஆ த.சேவுடன் 150 ஆ/ஹ மின்கலம் என்ற அளவில் வாங்குவது நல்ல மின்வழங்கும் திறனுடன் இருக்கும்.


*1)வா.ஆ= வால்ட், ஆம்பியர்,

2)ஆ/ஹ= ஆம்பியர்/ஹவர்

நாம் வாங்கும் த.சே வில் விரைவு மின் ஏற்றி (குயிக் சார்ஜ்)மற்றும் வழக்கமான மின் ஏற்றி(நார்மல் சார்ஜ்) என இரண்டும் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு 12 வோல்ட், 150 ஆ/ஹ உள்ள மின்கலத்தின் மிந்திறன் என்ன எனப்பார்ப்போம்.

வாட்ஸ்= ஆம்பியர் Xவோல்ட்
=150 X12
=1800 வாட்ஸ்.

எனவே 1800 வாட்ஸ் திறனுக்குள் நாம் மின்சாதனங்களை த.சே மூலம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். குறைவான மின் திறன் உள்ள சாதனங்களைப்பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் கிடைக்கும்.

ஒரு இல்லத்தின் சராசரி மின் உபகரணப்பயன்பாட்டு தேவை:

குழல் விளக்கு -4= 60வாட்ஸ்* 4= 240 வாட்ஸ்

மின்விசிறி -4= 80 வாட்ஸ்* 4 = 320

கையடக்க குழல் விளக்கு--4 = 30 வாட்ஸ் *4= 120

ஒரு 21 இஞ்ச் குழாய் தொ.கா(inch CRT T.V) =100-120 வாட்ஸ்

ஒரு 14 இஞ்ச் மடிக்கணினி=25 வாட்ஸ்
----------------------
மொத்த மின்நுகர்வு =825 வாட்ஸ்/ஹவர்அப்படி எனில் ஒரு 1200 வா.ஆ, 150 ஆ/ஹ ,12 வோல்ட் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் மூலம் மின்சாரம் கிடைக்கும் கால அளவு=1800/825=2.18மணிநேரம்.

எனவே குறைவான மின்சாதனம் பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும். 8 மணிநேரத்திற்கு பயன்ப்படுத்த வேண்டும் எனில் சுமார் 200 வாட்ஸுக்குள் மின்சாதனங்களைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரி மின்கலத்துக்கு மின்சாரம் ஏற ஆகும் காலம் எவ்வளவு இருக்கும்.?

ஒரு முனை மின் இணைப்புள்ள (சிங்கிள் பேஸ்)வீடு எனில்,

220 வோல்ட், 5 ஆம்பியர் மின்சாரம்,

220* 5 =1100 வாட்ஸ்,

காலம்=1800/1100
             =1.63

எனவே 1800 வாட்ஸ் மின்கலம் மின்சாரம் ஏற =1.63 *60 நிமிடங்கள்
= 98 நிமிடங்கள் ,
அதாவது 1 மணி 38 நிமிடங்கள் ஆகும்.

எல்லா தலைகீழ் மின்மாற்றி சேமகலத்துடனும் கொடுக்கப்படும் மின்சேமகலம் பராமரிப்பு தேவையில்லாத அடைக்கப்பட்ட மின்கலம் என்றே சொல்வார்கள் ஆனால் அப்படியல்ல, அவை யாவும் மிக குறைவான பராமரிப்பு மின்கலங்களே (ultra low maintanance sealed battery)எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை கலத்தில் நீர் அளவு பார்த்து வாலைவடி நீர் (distilled water)ஊற்ற வேண்டும் இல்லை எனில் மின்கல சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு வீண் ஆகிவிடும்.


பின்குறிப்பு:

# பட உதவி கூகிள் படங்கள்,நன்றி!

# மொழிமாற்றம், இன்ன பிற தகவல்களில் பிழை இருக்கலாம் :-))

சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.

Saturday, February 11, 2012

இரண்டு சம்பவங்கள்!





            இரண்டு சம்பவங்கள்!

(பட உதவி :கூகிள் படங்கள்,நன்றி)

சமிபத்தில் செய்தித்தாள்களிலும், பதிவுகளிலும் இரண்டு சம்பவங்களைப்பற்றி பெருங்கவலையுடன் பேசப்பட்டது, படுகின்றது. உண்மையில் கவனிக்கப்படவேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒன்றே அவை , ஆனால் அச்சம்பவங்களின் அடிப்படையை யாரும் நோக்காமல் இப்போ காலம் கெட்டுப்போச்சு, முன்னைப்போல இல்லை, எல்லாம் கலிகாலம் என்பதாகவே ஊடகங்களின் பேச்சும் , மக்களின் பார்வையும் இருப்பதாகவே எனக்கு படுகின்றது.

சம்பவம் ஒன்று:பலிவாங்கிய இந்தி!

சென்னைப் பாரி முனைப்பகுதியில் உள்ள ஒரு தனியார்ப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் அவரது இந்தி ஆசிரியை அவர்களை ஒரு இருபது ரூபா கத்தியினால் 7 முறை குத்திக்கொன்றுவிட்டார்.

காரணம் இந்திப்பாடத்தில் குறைவாக மதிப்பெண் வாங்கியதாக பெற்றோருக்கு தகவல் குறிப்பு/ முன்னேற்ற அட்டை/புத்தகத்தில் குறிப்பு எழுதி அனுப்பிவிட்டார் ஆசிரியை.

இதில் யார் குற்றவாளி , மாணவனா, ஆசிரியையா, பெற்றோரா, பள்ளியா , சமூகமா?

என்னைப்பொருத்தவரை பெற்றோரே முதன்மையான குற்றவாளி என்பேன்!

ஏன் எனில் நமது பள்ளிக்கல்வியில் தமிழ் தவிர அனைத்துப்பாடங்களும் அந்தந்த வகுப்புக்கு கட்டாயப்பாடம் ஆகும். தமிழ் அல்லது வட்டார மொழி என்பது மட்டும் விருப்ப பாடம் ஆகும்.

தமிழ் நாட்டில் மும்மொழிக்கல்வி இல்லை. பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் ,வெளியில் தமிழ்ப்பேசுகிறோம் அதுவே போதும் , அதை வேறு தனியாக படிக்கனுமா, அதுக்கு புதுசா ஒரு மொழி கற்றுக்கொண்டால் எதிர்க்காலத்துக்கு நல்லது என நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெரும்பாலும் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் நிலை இதுவே.

எனவே இப்படி ஆசைப்படும் பெற்றோர்களை கவர பல தனியார்ப்பள்ளிகளும் விருப்ப மொழிப்பாடமாக தேர்வு செய்ய தெலுங்கு, இந்தி , உருது, சமச்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மன், எனப் பல மொழிகளும் வைத்துள்ளார்கள்.எவ்வளவுக்கு எவ்வளவு பிற மொழி பயிற்றுவிக்க வசதி இருக்கோ அவ்வளவு பெரியப்பள்ளி அது :-))

தற்கால கல்விச்சூழலில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனால் தனது விருப்ப மொழிப்பாடம் எது என்பதை தீர்மானிக்கும் உரிமை இல்லாதவனே.
தனது புத்திரனை பன்மொழி வித்தகனாக உருவாக்க ஆசை அல்லது பேராசைப்பட்ட ஒரு பெற்றோர், தமது மகனுக்கு எது எளிதில் வரும் என்பதை மறந்து விட்டு அந்நியமான இந்தியை படிக்க திணிக்க ஆசைப்பட்டதின் விளைவே , அவனை இளங்கொலைக்காரான் ஆக்கிவிட்டது.

இப்போது பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் எல்லாம் வீட்டுக்கு அஞ்சலட்டை மூலம் மாதம் ஒரு முறை மாணவரது கல்வி, வகுப்பு அறை நடவடிக்கை குறித்து அனுப்பிவிடுகிறார்கள், மேலும் ஒரு சிறிய புத்தகம் போட்டு நடவடிக்கை, மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டிய தகவல் என எழுதி மாணவரிடம் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். அதில் கையொப்பம் வேறு பெற்றோர் இட்டு அனுப்ப வேண்டும், சந்திக்க சொல்லி தகவல் இருந்தால் போய்ப்பார்க்க வேண்டும்.

இது ஏன் எனில் பள்ளியில் மாணவரது செயல்ப்பாடு, முன்னேற்றம் குறித்து பெற்றோர் உடனக்குடன் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே.இதுப்போல கிடைக்கும் தகவலின் அடிப்படையில் பெற்றோர்கள் மாணவருடன் பேசி அவரது பிரச்சினை, விருப்பம் என்ன எனக்கேட்க வேண்டும். அது தான் தகவல் அளிக்கும் முறையின் நோக்கமே?

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது, இந்தியில் தேர்வாகவில்லை, குறைவான மதிப்பெண் என குறிப்பு வந்தால், அம்மாவோ/அப்பாவோ பெல்ட், ஸ்கேல் , துடைப்பக்கட்டை இன்ன பிற வஸ்துகளைக்கொண்டு நாலு விளாசு விளாசிவிட்டு, எப்போ பாரு கார்ட்டூன் டீவி, விளையாட்டு, ஒழுங்கா படிக்க துப்பில்லைனு வசவு கூடவே பக்கத்துவிட்டு அருணைப்பாரு , உன் வயசு தான் கிளாஸ் ஃப்ர்ஸ்ட் வரான்னு அவங்க அம்மா என்னா பெருமையா சொல்லிக்கிறாங்க என்று நீட்டி முழக்கி இன்னும் நாலுப்போடும் பெற்றோரே மிக அதிகம்!

இப்படி பெற்றோரிடம் உதையும் , திட்டும் வாங்கிய பிறகு மாணவனுக்கு பெற்றோர் மீது வெறுப்பு வரும் ஆனால் காட்ட முடியாது, அதை விட ஒப்பீட்டுக்கு சொல்லப்படும் பக்கத்து விட்டு பையன் மீது இன்னும் வெறுப்பு வரும் :-))

பள்ளி மேலும் கல்வி மேலும் வெறுப்பு வரும், கடைசியாக இதுக்கெல்லாம் காரணம் இந்த வாத்தியார் தானேனும் வெறுப்பு , கோவம் வரும் .

இது போன்ற மனச்சூழலுக்கு ஆளாகாத மாணவர்களே இல்லை எனலாம், 90 சதவீத மாணவர்களுக்கு இது போன்ற மன அழுத்தம் வருகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு என்ன செய்வது எனத்தெரியாமல் அப்படியே வாழ பழகிக்கொள்கிறார்கள்.

மேலும் இத்தகைய நெருக்கடி முன்னர் எல்லாம் 10 ஆம் வகுப்புக்கு பின்னர் தான் வரும் ஆனால் இப்போது முன்னரே 9 ஆம் வகுப்பிலேயே வருகிறது,ஏன் ?எல்லாம் பெற்றோரின் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பும், அதனை பயன்ப்படுத்தி பணம் செய்ய துடிக்கும் தனியார் கல்வி நிலையங்களின் போக்குமே காரணம் ஆகும்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர்ப்பணி என்பதும் சேவை என்ற நிலை மாறி தொழில் என்றே ஆகிவிட்டது. தனித்தனியே கவனம் செலுத்தி குறைக்கேட்டு பாடம் நடத்துவது எல்லாம் வழக்கொழிந்து விட்டது. பாடம் நடத்துதல், சிலபஸ் முடித்தல், தேர்வு வைத்தல் என ஒரு சடங்கு மட்டுமே பள்ளியில் ஒரு ஆசிரியரின் பணியாகப்பார்க்கப்படுகிறது.அதுவே நிர்வாகத்தின் குறிக்கோளும் கூட. ஒரு மாணவரின் மேம்பாடு , ஒழுக்கம் என்பது பெற்றோர்களின் மீதே மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனை எத்தனைப்பெற்றோர்கள் உணர்ந்த்திருப்பார்கள்? பெரும்பாலானா பெற்றோர்களின் எண்ணம் எப்படி எனில் நல்ல பள்ளியில் சேர்த்து இருக்கேன் , இவன் வயசுப்பசங்க எல்லாம் நல்லாப்படிக்கும் போது இவனுக்கு என்னக்கேடு என்றே நினைப்பார்கள்.

புரியாத ஒரு மொழியை ஏக் காவ் மே ஏக் கிசான் ரக தாதானு படிறா என்று சொன்னால் எப்படிப்படிப்பான்? அவனா எனக்கு இந்தி விருப்ப பாடமாக எடுத்துக்கொடுனு கேட்டான்,இல்லையே! சரி இந்தில தள்ளியாச்சு, குறைவா மதிப்பெண் வாங்குவதாக தெரிந்தால் என்ன செய்து இருக்க வேண்டும் , தமிழை விருப்ப மொழியாக மாற்றிக்கொடுத்து இருக்கவேண்டும் .அல்லது ஒன்றும் பெருசா மார்க் வாங்க வேண்டாம் இந்தில பாஸ் ஆகிற அளவுக்கு படிச்சா போதும்னு சொல்லி இருக்கனும் பெற்றோர். ஆனால் அப்படி செய்ததாக தெரியவில்லை.

இந்த இடத்தில் பள்ளி நிர்வாகம்/ ஆசிரியர் என்ன செய்திருக்க வேண்டும் , உங்கள் மகனுக்கு இந்தி கற்பதில் சிரமம் இருக்கு எனவே தமிழுக்கு மாற்றி விடுங்கள் என சொல்லி இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவங்க கற்பிக்கும் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்து, விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் தொடர்ந்து இருக்கிறார்கள்.

வீட்டிலும் புரிந்துக்கொள்ளவில்லை, கல்வி நிலையத்திலும் புரிந்துக்கொள்ளவில்லை.மனதில் ஆத்திரமும் வெறுப்பும் மண்டியவனுக்கு பலி ஒரு  அப்பாவி ஆசிரியை.

ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் கல்வியால் ஏற்படும் மன அழுத்தம் ,விரக்தியால் பெரும்பாலும் என்ன செய்வான் எனில் , பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடுவான், அல்லது வீட்டில் பள்ளிக்கு செல்லமாட்டேன் என அடம்பிடிப்பான். அதிக பட்சமாக வீட்டை விட்டு ஓடி விடுவான்(ஹி..ஹி..சொந்த அனுபமுண்டு, ஒரு தபா ஓடிப்போய் வந்திருக்கேன்).

தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் கூட அவ்வயதுக்கு மீறிய செயல் எனும் போது கத்தி வாங்கி ஆசிரியையை கொலை செய்கிறான் எனில் இது போன்ற சிந்தனைகள் எப்படி அவனுக்குள் விதைக்கப்பட்டிருக்கும்.(நான் படிக்கிர காலத்தில் இப்படி நினைத்திருந்தால் ஒரு பத்து பேராவது போய் சேர்ந்திருப்பாங்க).

மேலும் சென்னையில்  பெரும்பாலான மாணவர்கள்/இளம் சிறார்கள் அவர்களை விட பெரியவர்களுடன் நட்பு வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் பேசு மொழியில் பெரும்பாலும் ங்கோத்தா, பாடு, போடுறா அவன , தூக்கிடுவேன் என்பதே அதிகம் தென்படும்.இது வட சென்னைப்பகுதிகளில் மிக அதிகம்.புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஆனந்தபவன் அருகில் ஒரு மேநிலைப்பள்ளி இருக்கிறது காலையில் போனால் , தெரியும் ,இவர்கள் எல்லாம் மாணவர்கள் தானா என்று கேட்பீர்கள்?


பல இளஞ்சிறார்கள் சவகாச தோஷம் , சினிமா,இணையம் என பிஞ்சில் பழுத்தும் விடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

மேலும் தற்கால ஊடகங்களின் போக்கு எனவும் சொல்லலாம். தொ.கா, திரைப்படம் என அனைத்திலும் வன்முறை ,ஆபாசம்( சினிமாஸ்கோப்  கண்டுப்பிடித்ததே நாபிக்கமலத்தை பெருசா காட்டத்தானோ? )எல்லாமே அளவுக்கு அதிகமாக காட்டப்படுகிறது. ஆனால் அவை யாவும் சமூகத்தில் தினசரி நிகழ்வுகள் சரியான வாழ்வியல் அறமென  நியாயம் கற்பிக்கப்படுவது போல கதை சொல்லி இருப்பார்கள்.

ரேஷன் கடையில் பொருட்கள் இல்லை என சொல்லிவிட்டு வில்லன் கூட்டம் கள்ள மார்க்கெட்டில் விற்கும் அப்போது ஹீரோ பறந்து வந்து அநியாயத்தை தட்டிக்கேட்கும் காட்சியிலும் முதலில் ஓடிவரும் வில்லனின் அல்லக்கையை ஒரே அடியில் வீழ்த்தி கழுத்தை திருகிப்போட்டு விட்டு தாண்டிப்போவார். ஒரு 40 பேரை எலக்டிரிக் போஸ்டை புடுங்கி விளாசுவார். அடுத்தக்காட்சியில் காக்கும் கடவுளே தானைத் தலைவா என மக்கள் கூட்டம் வாழ்த்திப்பாடும். இது போன்றக்காட்சிகள் புரஜக்டர் கண்டுப்பிடித்த காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் வெகு சகஜமப்பா :-))

ஒரு ரெண்டு லிட்டர் மண்ணெணைக்காகவும், 10 கிலோ அரிசிக்காகவும் அடிக்கும் அடியில் பலர் உயிர்போனது போல அடிவாங்கி விழுவதாக ஏன் காட்ட வேண்டும். ஒருவர் கழுத்தை திருகினால் செத்து விட மாட்டார்களா? ஆனால் ஹீரோ கொலை செய்துவிட்டார்னு காட்டாமல் கொண்டாடுவதாக காட்டப்படுவது.மனமுதிர்ச்சி இல்லாத இளஞ்சிறார் வயதில் பார்க்கும் ஒருவருக்கு என்ன தோன்றும்.நாளுப்பேர ரத்தம் வர , மூச்சுப்பேச்சு இல்லாமல் அடிக்கிரவன் தான் நல்லவன்னு நினைக்க தோன்றாதா?

வன்முறையை , வன்முறையாளனை சமூகம் கொண்டாடுவது போல ஊடகங்களில் தொடர்ந்துக்காட்டப்படுவதால் இளம் வயதினருக்கு ஒரு தவறான புரிதலே உருவாகும். இளம் வயதில் கொலை செய்தால் தூக்கு தண்டனைக்கிடையாது என்பது போலவும் , குற்றப்பின்னணி உள்ள கதாபாத்திரத்தை கதாநாயகனாக காட்டுவதாகவும் திரைப்படங்கள் அதிகம் வருகிறது(அவனைத்தான் ஒருத்தி உருகி உருகி காதலிப்பா). அவை குற்றவியல் கல்விபோதனையாகவும், குற்றம் புரிந்தால் தப்பில்லை என்பது போன்ற எண்ணங்களையும் இளம்வயதினர் மனதில் விதைக்கக்கூடும்.

ஒரு புறம் வன்முறை தவறல்ல என்பது போல ஊடக திணிப்பு, மறுபுறம் புரியுதோ இல்லையோ சொல்லிக்கொடுப்போம் மதிப்பெண் எடுக்கணும் என்று செயல்படும் பள்ளிகள், மேலும் பிள்ளைகள் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பினை சுமத்தும் பெற்றோர் என அனைத்து திசைகளிலும் ஒரு மாணவருக்கு நெருக்கடிகள் மட்டுமே எஞ்சுகிறது.

இங்கு பேசப்படும் சூழல் நடுத்தர மற்றும் கடைநிலை குடும்பம், மாணவர்களுக்கான சூழல். உயர் நடுத்தர, மற்றும் உயர் வசதி குடும்பம், மாணவர்கள் சூழல் வேறு, ஆனால் அங்கு தான் பெற்றோர்கள் சரியாக மாணவப்பருவத்தைக் கையாள்கிறார்களோ என தோன்றுகிறது.நீ +2 பாஸ்  செய்தா போதும் உன்னை டாக்டர் ,எஞ்சினியர் என்ன வேண்டுமோ படிக்க வைக்கிறேன்னு சுதந்திரம் கொடுக்கிறார்கள்.


அப்போ பணம் இருந்தா தான் படிக்கணுமா என்று கேட்கலாம்?  எல்லாருமே படிக்கலாம் ஆனால் ஒரு பந்தயம் போல ஓடிப்போய் ஏன் படிக்க வேண்டும்?


முதலில் அவன் என்னப்படிக்க வேண்டும் என்பதை அவனே தீர்மானிக்கட்டும், எல்லாரும் பொறியியல், மருத்துவம் தான் அவங்க பசங்க படிக்க வேண்டும்னு  நினைப்பதால் தான் கல்வி வியாபாரம் ஆகிடுச்சு. இதில் வெளியில் தெரியாத உண்மை 50 % பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை  இல்லை என்பது.MBBS மட்டும் படித்தவரால் 10000 சம்பாதிக்க மூச்சு முட்டுது.ஆனாலும் பொறியியல் , மருத்துவம் படிக்க போட்டி இருப்பதால் இந்தியாவிலேயே மிக அதிக தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கு. அதே போல மருத்துவக்கல்லூரிகளிலும் இரண்டாம் இடம்.

பெரும்பாலான மாணவர்கள் இத்தகைய கல்வியியல்  வாழ்விற்கு அடங்கி போக கற்றுக்கொள்கிறார்கள். விதிவிலக்காக யாரேனும் ஒருவர் இப்படி ஆயுதம் தூக்கி விடுகிறார்கள். எனவே நமது சமூகமும், கல்வி அமைப்புகளும், குறிப்பாக பெற்றோர்களும் விழிப்படைய வேண்டிய தருணமிது. கல்வி என்ற சித்தாந்தக்கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.

பின்குறிப்பு:

# மிக இளம் வயதில் கொலை செய்தார் என்பதே சமூகத்தின் அவலத்தைக்காட்டுகிறது. இளஞ்சிறார் குற்றவாளி என்பதால் அவரது புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்பது தார்மீகம். எனக்கு தெரிந்து பெரும்பாலும் பத்திரிக்கைகளிலும் வரவில்லை. ஆனால் பதிவர் ஒருவர் எங்கிருந்தோ தேடிப்பிடித்து பொறுப்பற்ற முறையில் அச்சிறுவனின் புகைப்படத்துடன் பதிவிட்டு , சமுகத்தைப்பற்றி ரொம்பவும் கவலைப்பட்டிருக்கிறார் ,அவலத்திலும் அவலம் இது!


பிற்சேர்க்கை: குறிபிட்டவுடன் தக்க புரிதலுடன் அச்சிறுவனின் புகைப்படத்தை பதிவர் நீக்கிவிட்டார். நன்றி http://www.mathavaraj.com/2012/02/blog-post_10.html">மாதவராஜ்!

# ஹி..ஹி!... சம்பவம் இரண்டு அடுத்தப்பதிவில்.

Friday, January 27, 2012

ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?





ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?


முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் தோன்றிய கிருத்துவமும் அதை அப்படியே சுவிகரித்து தனது பழைய ஏற்ப்பாட்டில் சேர்த்துக்கொண்டது. இதெல்லாம் முதல் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டம்.

பின்னர் ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதமும் ஆதாம் , ஏவாள் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் மோசஸ், ஏசு என்று அனைவரையும் இஸ்லாமியர்களாக ஆக்கி அவர்கள் தான் இஸ்லாத்தின் ஆரம்ப கால இறைத்தூதர்கள் என்று புதிதாக ஒரு கருத்தாக்கத்தை தானே உருவாக்கிக்கொண்டு தனது பழைமைக்கு  தானே ஆதாரம் உருவாக்கிக்கொண்டது.

பாவம் மோசசுக்கு பின்னாளில் தாம் மூசா என்றும், ஏசுவுக்கு பின்னாளில் ஈசா என்றும் பெயர் மாறி இஸ்லாமியர்களாவோம் என்று தெரியாமல் போய்விட்டது :-)) தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் அவதரிக்காமலே இருந்து இருப்பார்கள்.முகமது நபிக்கு முன்னொடி இறைத்தூதர்கள் என சொல்லப்படும் பட்டியல் இறைத்தூதர்கள் பட்டியல. ஆதம் முதல் கொண்டு ஏசு வரை எல்லாருமே இஸ்லாமிய இறைத்தூதர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். இதில் விடுபட்டுப்போனது யாஹு மெசெஞ்சர் மட்டுமே என நினைக்கிறேன் :-))

இப்படி பல முன்னோடி இறைத்தூதர்கள் உண்டு என சொல்வது புதிதல்ல ஏற்கனவே புத்த மதத்தில் 28 புத்தர்கள் உண்டு என்றும் கவுதம புத்தருக்கு பின்னரும் ஒரு புத்தர் வருங்காலத்தில் வருவார் என புத்த மதம் சொல்கிறது. ஆனால் முகம்மது நபி கொஞ்சம் முன்னேற்பாடாக அவரே அல்டிமேட் இறைத்தூதர் என சொல்லிக்கொண்டார்.

புத்தர்களின் பட்டியல

இப்போது எனது கேள்வி மனித இனம் பரிணாமத்தின் படி உருவானதா அல்லது மேற்கண்ட மதங்கள் சொன்னது போல ஆதாம்,ஏவாள் என்ற இரண்டே இரண்டு ஆதி மனிதர்களிடம் இருந்து தான் பல்கி பெருகி இன்றைய 600 கோடி மக்களாக ஆனதா என்பதே.




ஈடன் கார்டனில் ஆதாம்,ஏவாள்(படம் உதவி:விக்கி,நன்றி)



முதலில் ஆதாம் ,ஏவாள் கருத்தாக்கத்தினைப்பார்ப்போம், அது உண்மை எனக்கொண்டால் , அதனுள் இருக்கும் ஆபாசத்தினையும் மத வாதிகள் உண்மை என ஏற்றுக்கொள்வார்களா?


என்ன ஆபாசம் இருக்குனு என்று கேள்விக்கேட்பவர்கள் இந்த சுட்டியில் போய் முழுக்க ஆதியோடந்தமாக படித்து விட்டு வரவும். ஆதாம் ஏவாள் கதை- Chapter LXXIV . இங்கே பதிவில் சுருக்கமாகப்பார்ப்போம்.

கடவுள் என்று கூறப்படுவர் முதலில் ஆதாமை உருவாக்கினார், பின்னர் அவன் விலா எலும்பை வகுந்தெடுத்து அதில் இருந்து ஏவாளை உருவாக்கினார்.அவர்கள் வாழ ஏடன் கார்டனையும் உருவாக்கிக்கொடுத்தார்.

பாம்பு வடிவில் சாத்தான் எனப்படும் தீய சக்தியின் தூண்டுதலால் ஏவாள் ஆப்பிளையோ , தக்காளியையோ கடித்து வைத்து தன்னுணர்வு பெற்றாள் , போதாக்குறைக்கு ஆதமையும் கடிக்க சொல்ல இருவருக்கும் தன்னுணர்வு வரப்பெற்று, நிர்வாணம், ஆண், பெண் என்ற அறிவெல்லாம் எட்டிப்பார்த்தது.

இருவரின் கூட்டுசதியும் கடவுளுக்கு பிடிக்காமல் போனதால் அம்மையாரால் கார்டனை விட்டு விரட்டப்பட்ட சின்னம்மா போல இருவரும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர் . கூடவே கடவுளின் சில பல சாபங்களும் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டது.அச்சாபங்களில் மரணம் , முதுமை, பசி, தாகம் எல்லாம் அடக்கம்

வெளியேறிய இருவரும் ஒரு குகையில் இனிதே தனிக்குடித்தனத்தை துவக்கினர் , இல்லறத்தின் விளைவால் ஓராண்டில் கெயின் என்ற ஆண் மகவும் லுலுவா என்ற பெண் மகவுவையும் ஒரே நேரத்தில் இரட்டையர்களாக ஈன்றெடுத்தாள் ஏவாள்.

இரண்டுப்பேரும் வளர்த்து வந்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் இனிதே கழிய மீண்டும் ஒரு வாரிசு உருவாக்கம் நடைப்பெற்றது இப்போதும் பிரசவத்தில் ஒரு ஆண் , ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள். ஆண்க்குழந்தைக்கு ஏபெல் என்றும் பெண்ணுக்கு அக்லியா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இங்கே ஒரு சின்ன குறிப்பு இரண்டாவது பிறந்த பெண் அக்லியா , லுலுவாவை விட அழகில் கொஞ்சம் குறைவு என்று கதையில் அல்லது புனித நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது எதுக்கு இப்போனு தோன்றலாம் ஆனால் இது ஒரு புரதான நிகழ்வுக்கு தூண்டலாக அமையப்போகிறது.

கெயின், ஏபெல் இருவரும் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தனர் அவர்களுக்கு என்று ஒரு தொழில் கொடுக்க வேண்டும் என ஆதம் முடிவெடுத்து கெயினிடம் விவசாயத்தையும் ஏபெலிடம் கால்நடை வளர்ப்பையும் ஒப்படைத்தார் ஒரு பொறுப்பான தந்தையாக.

இருவரும் தத்தமது வேலையில் கவனம் செலுத்தி உற்பத்தி செய்தார்கள், அதனை ஆண்டவனுக்கு படைக்கும் போது ஏபெல்லின் படையலை ஏற்று கெயினுக்கு வெறுப்பேத்தினார் கடவுள், இதனால் சகோதரர்களிடையே ஒரு பூசல் உருவானது.

இதனிடையே பொறுப்பான , பாசமிகு தாயாக ஏவாள் நம்ம பசங்க வளர்த்துட்டாங்க, தொழிலும் செய்யுறாங்க அவங்களுக்கு ஒரு கல்யாணம் செய்துப்பார்க்கலாம் என்று கணவன் ஆதமிடம் சொல்கிறாள்.

இங்கே அறிவார்ந்த மக்களுக்கு நியாயமாக ஒரு கேள்வி வரனும் , கேள்வி வந்துச்சா? உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள், அவங்களுக்கே இப்போ தான் ஆண் இரண்டு, பெண் இரண்டுனு பிறந்து உலகின் முதல் குடும்பமாக உருவாகி இருக்கு. அப்படி இருக்க அவங்க பசங்களுக்கு எங்கே இருந்து கல்யாணத்துக்கு பெண் கிடைக்கும்? இப்படி ஒரு கேள்வி எல்லாருக்கும் வந்திருக்கனும்.

கேள்விக்கு விடை என்ன , ஏவாளே சொல்கிறாள், வெண்ணைய கையில வச்சுக்கிட்டு நெய்க்கு அலைய வேண்டாம் , கெயின் கூடப்பொறந்த லுலுவாவை ஏபெலுக்கும், ஏபெல் கூடப்பொறந்த அக்லியாவை கெயினுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாம்னு ஆலோசனை சொல்கிறாள்.

அனேகமாக மனைவி ஒரு மந்திரி, மனைவி சொல்லே மந்திரம் எல்லாம் அந்த புராணக்காலத்திலேயே ஆரம்பம் ஆகிடுச்சு என நினைக்கிறேன். ஆதமும் சரி அப்படியே செய்யலாம்னு தலையை ஆட்டுகிறான். பொண்டாட்டிக்கு புருஷன்மார்கள் தலை ஆட்டுவதும் அப்போவே ஆரம்பம் ஆகி இருக்குனு தெரியுது :-))

எல்லாரும் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல்களே என்று சொல்லி பரிணாமத்தை கிண்டல் செய்யும் மார்க்கபந்துகள் எல்லாம் உணர்ச்சி வசப்படாதிங்க இதெல்லாம் நீங்க புனித நூல்னு சொல்வதில் இருப்பது தான். அதில் என்ன சொல்லி இருக்குனே தெரியாமா எல்லாம் புனிதம்னு கண் மூடித்தனமா நம்புவதால் தெரியாமல் போய் இருக்கலாம். முழுசா படிங்க, அதுக்கு அப்புறமா சொல்லுங்க எது சரினு.

மார்க்கப்பந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கும் , என்னடா இது அண்ணன் , தங்கச்சிக்க்குள்ள கல்யாணமானு, இதை தான் இத்தனை நாளா புனித நூல் சொல்லிச்சுனு நம்பி பரிணாமத்தை எதிர்த்தோமா என்றெல்லாம் கேட்டு லேசா தலைக்கூட சுத்தும் :-))

ஆதாம், ஏவாள் சூப்பராக திருமணத் திட்டம் போட்டாங்க, ஆனால் அங்கே தான் ஒரு டிவிஸ்ட் வைக்குறார் நம்ம சாத்தான். சாத்தான் அண்ணாச்சி கெயினிடம் போய் ஏற்கனவே உன் படையலை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் ஏபெல் தான் உங்க அப்பா,அம்மாவுக்கு செல்லம் ஆகிட்டார், மேலும் இப்போ உன்னோட அழகான தங்கையை ஏபெலுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு , ஏபெலின் அசிங்கமான தங்கையை உனக்கு கட்டி வைக்கப்போறாங்க எனவே நீ பேசாம உன் தம்பி ஏபேலை போட்டு தள்ளிடு , அப்புறம் நீ மட்டும் தான் உனக்கே ரெண்டு பொண்ணும் னு ஒரு நாராசமான ஐடியாவை தருகிறார் திருவாளார் சாத்தான்.

கெயினுக்கும் இது சரினு படவே , ஏபேலை நயவஞ்சகமாக பேசி வா வயலை சுத்திப்பார்க்கலாம்னு கூப்பிட்டு சென்று கல்லால் அடித்துக்கொள்கிறான். ஆகாவே புராணம்,இதிகாச வரலாற்றில் முதல் கொலைக்காரன் கெயின் ,அதுவும் சொந்த சகோதரனைக்கொன்றவன் என பிரசித்திப்பெறுகிறான்.

கெயின் ஏபேலை கொல்லும் சம்பவத்தினை விவரிக்கும் ஓவியம். படம் உதவி:விக்கி. நன்றி

பின்னர் கடவுள் கெயினுக்கு சாபம் விட்டது, மீண்டும் சேத் என்ற மகன் ஆதாம் ஏவாளுக்கு பிள்ளையாக பிறந்து அவர்கள் எல்லாரும் தமது தமக்கைகளையே மணம் புரிந்து வம்சம் விருத்தி செய்தது என புராண புனித நூல்களின் கதைப்போகிறது. நாம் இத்தோடு முடித்துக்கொண்டு மானிட குலம் முதல் இரண்டு மனிதர்களிடம் இருந்து தோன்றியது என்பது சரியா அல்லது பரிணாமவியல் தான் சரியா என்று கேள்வியுடன் துவங்குவோம் நமது அறிவார்ந்த சிந்தனையை.

மார்க்க பந்துகளே எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள் வழித்தோன்றல் தான் என்று இனியும் நம்புவிர்களானால், நீங்கள் எல்லாம் சகோதர , சகோதரிகளை மணமுடிக்க ஆர்வம் உள்ளவர்களா? என்பதற்கு பதில் சொல்லுங்கள் ஆம் என்று ஒத்துக்கொண்டால் உங்கள் புனித நூல் சரியாக சொல்லி இருக்கு எனலாம் :-))

ஆதாம் ஏவாள் வழிவந்ததே மனிதகுலம் எனும் சித்தாந்ததிற்கு மாற்றாக வருவது பரிணாமவியல், மைட்டோ காண்டிரியல் ஏவாள் எனப்படும் சித்தாந்தம், இது குறித்து அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.

பரிணாமவியலுக்கு மாற்றாக சொல்லப்படுவது அறிவார்ந்த படைப்பாக்க சித்தாந்தம் ஆகும். எப்படி ஆகினும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் அனைவருமே ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்து உலக மக்கள் அனைவரும் பிறந்தார்கள் என்பதை மறுக்கவே செய்கிறார்கள்.

 பதிவர் சார்வாகன் பரிணாமவியலை அறிவார்ந்த படைப்பாக்கம் என்பதன் வாயிலாக நோக்குபவர் ஆனாலும் பரிணாமம் , மைட்டோக்காண்ரியல் ஈவ் பற்றி எல்லாம் விரிவாக அலசுபவர். பரிணாமவியலுக்கு மாற்றுக்கருத்து எனினும் ஆதாம் ஏவாள் தியரி அறிவார்ந்த சித்தாந்தம் அல்ல என புரியவைக்கும் அவரதுப்பதிவுகள் விருப்பம் உடையவர்கள் அங்கு சென்று மேலதிக தகவல்கள் பெறலாம்.

1)சார்வாகன் -1

2)சார்வாகன் -2

3)சார்வாகன் -3

மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாம் ஏவாள், மற்றும் அவர்கள் சந்ததி குறித்தான தகவல் பக்கங்களின் சுட்டி:

1)) ஆதாம் ,ஏவாள்

2) கெயின் , ஏபெல்

3))சந்ததியினர்



பிற்சேர்கை:-

சார்வாகனின் கெயினின் மனைவி யார் என்னும் பதிவு,
கெயினின் மனைவி யார்

ரெவெரி அளித்துள்ள கெயினின் மனைவி குறித்தான சுட்டி

கெயினின் மனைவி

Thursday, January 19, 2012

பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?



பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?


முன் குறிப்பு:

இது யாருடைய பதிவுக்கும் எதிர்ப்பதிவல்ல, இந்திய விவசாயம் எப்படி ஒப்பிட இயலா வகையில் பல இன்னல்களுக்கிடையேயும் நிலைத்து நின்று சுமார் 120 கோடி மக்களுக்கும் பசிக்கு உணவளிக்கும் உன்னத வேலையை இந்திய விவசாயிகள் தங்களை வருத்தி செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு பதிவே.



இந்தியா விவசாய நாடு என்று பன்னெடுங்காலமாக கூறப்படுகிறது. பிற தேசங்களில் நாடோடிகளாக ,நாகரீக வளர்ச்சியின்றி ,வேட்டை ஆடி உண்டு வாழ்ந்து வந்த காலத்திலேயே நதிக்கரை நாகரீகம் மேம்பட்டு விவசாயம் செய்து ,அதிலும் பல திருத்தங்கள் செய்தவர்கள் இந்தியர்கள். இதில் குறிப்பாக தமிழர்கள் முன்னோடிகள் எனலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காடு திருத்தி கழனி கண்டார்கள், கரிகால பெருவளத்தான் விவசாயத்திற்கு நீரின் தேவை அறிந்து கல்லணை கட்டியது இன்றும் நிலைத்து நிற்கிறது.

இன்றைய நவீன இந்தியாவில் வேளாண் சார்ந்த இயற்கை வளம் என்ன எனப்பார்ப்போம்.

மழைக்காலத்தில் வயலிலும் நீர் நிற்கும் வாய்க்காலிலும் தண்ணீர் கரைப்புரண்டு ஓடும், வடிய வைக்க வடிகால் காணாது, கோடையில் வாய்க்காலில் தண்ணீர் அடியில் ஓடும் வயலுக்கு ஏற்ப மடைக்கட்டி ஏற்ற வேண்டும், அதுவும் போதவில்லை எனில் டீசல் எஞ்சின் வைத்து இறைப்பார்கள். ஆனால் தண்ணீர் என்பது விவசாயத்துக்கு பெரும்பாலும் கிடைத்து விடும். இது ஆற்றுப்பாசனம், ஏரிப்பாசனம் வகை.இவ்வகை பாசனமே மிக அதிகம், கிணறு,ஆழ்குழாய் கிணறுப்பாசன விவசாயம் சிறிய அளவே.இந்தியாவில் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம், வடிகால் என இரண்டும் செய்ய தக்க அளவு நீர் வளம் உண்டு.

இந்தியா ஒரு புவியியல் பார்வை:

மொத்த நிலபரப்பு = 3,287,260 ச.கி.மீ

விவசாயம் செய்ய தக்க நிலம்=179,900 ச.கி.மீ

விளை நிலம்=1 ,586 ,500 ச.கி.மீ (88.2% & 53.%,)

ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 112 செ.மீ
( மிக குறைவாக ராஜஸ்தானில் பாலைவனப்பகுதியில் 10 செ.மீ மழையும், மிக அதிகமாக(உலகிலேயே) மேகாலாயாவில் உள்ள மவ்சின் ராம் =11,87.3 செ.மீ, சிரபுஞ்சி= 11,77.7 செமீ)


மழைப்பொழிவு மொத்த நீர்   =3,700,000

நிலத்தில் இழுக்கப்படும் நீர் = 800,000

ஆற்றில் பாயும் நீர் =1,700,000

ஆவியாகும் நீர்=1,200,000

( மில்லியன் கன மீட்டரில்)

இதில் நிலத்தில் உறியப்படும் நீரும், ஆற்றில் பாயும் நீரும் விவசாயத்தேவைகளுக்கு பயன்ப்படுகிறது.

மேலும் இந்தியாவில் உள்ள நீர் நிலைகளின் மொத்தப்பரப்பளவு=314,070 ச.கி.மீ
(ஆறு,ஏரி,குளம் ,நீர்த்தேக்கம் ஆகியவைப்பரப்பளவில்)

காண்க:
india

கோதுமை சாகு படி செய்யப்படும் பரப்பளவு= 278.17

உற்பத்தி ஆகும் கோதுமை(2010) = 80 மில்லியன் மெட்ரிக் டன்.

அரிசி உற்பத்தி (2010-11)=  94.11(நெல்=145 மி.மெ.ட)



இன்ன பிற உணவு உற்பத்தியில் உலகளாவிய அளவில் இந்தியாவின் இடம்:

கீழ்கண்ட பட்டியலில் உள்ள உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது:

Lemons and limes
Buffalo milk, whole, fresh
Castor oil seed
Safflower seed
Sorghum
Millet
Spices
Okra
Jute
Beeswax
Bananas
Mangoes, mangosteens, guavas Pulses
Indigenous Buffalo Meat
Fruit, tropical
Ginger
Chick peas
Areca nuts
Other Bastfibres
Pigeon peas
Papayas
Chillies and peppers, dry
Anise, badian, fennel, corian
Goat milk, whole, fresh


கீழ்கண்டவற்றில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

Per final numbers for 2009, India is the world's second largest producer of the following agricultural produce:[41]

Wheat
Rice
Vegetables fresh
Sugar cane
Groundnuts, with shell
Lentils
Garlic
Cauliflowers and broccoli
Peas, green
Sesame seed
Cashew nuts, with shell
Silk-worm cocoons, reelable Cow milk, whole, fresh
Tea
Potatoes
Onions
Cotton lint
Cottonseed
Eggplants (aubergines)
Nutmeg, mace and cardamoms
Indigenous Goat Meat
Cabbages and other brassicas
Pumpkins, squash and gourds


In 2009, India was the world's third largest producer of eggs, oranges, coconuts, tomatoes, peas and beans.[41]

மேற்கண்டவை எல்லாம் "ரொம்ப சாதாரணமான காய்ந்து போன வறண்ட இந்தியாவில் நடக்கும் ரொம்ப சாதாரண விவசாயத்தினை" விவரிக்கும் புள்ளி விவரங்கள்.

இனி வளம் கொழிக்கும் பாலாறும் தேனாறும் கரைப்புரண்டு ஓடும் பச்சைப்பசும் சோலைவனம் சவுதி அரேபியாவின்  விவசாயத்தினைக்காண்போம்.

சவுதி அரேபியா வேளாண் வளம்:

மொத்த நிலப்பரப்பு =2, 149, 690 ச.கி.மீ

மொத்த விவசாய செய்யதக்க நிலம்=1, 736, 250 ச.கி.மீ

விளை நிலம் =34 000(2.0% , &1.6%) ச.கி.மீ

ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 10 செ.மீ(எப்போதாவது 30 செ.மீ)

நீர் நிலைப்பரப்பு = 0.0 ச.கி.மீ

காண்க:
saudi arabia

சவுதி அரேபிய அரசு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய 1970 இல் ஒரு வேளாண் திட்டம் போட்டது ,அதன்படி ஒரு டன் கோதுமைக்கு அரசு கொள்முதல் விளையாக 3500 ரியால்களை நிர்ணயம் செய்தது இதனால் பெரிதும் கவரப்பட்ட விவசாயிகள் கோதுமை விளைச்சலில் குதித்தார்கள்.

இதன் விளைவாக 90 களில் சுமார் 4 மி.மெ.ட கோதுமை விளைந்தது.ஆனால் இதற்கான பாசன நீர் 2000 கி.மீ க்கு அப்பால் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்டது.ஒரு டன் கோதுமை விளைவிக்க சுமார் 1000 கன மீட்டர் நீர் தேவைப்பட்டது.

தொடர்ந்து நீரும், அதிக கொள்முதல் விலையும் கொடுப்பது அரசுக்கு பொருளாதார ரீதியாக இழப்பினை உருவாக்கவே 2008 இல் புதிய விவசாயக்கொள்கையாக , கோதுமை விவசாயத்தை ஆண்டுக்கு 12.5 சதவீதம் எனக்குறைத்து கொண்டு வந்து 2016 இல் முற்றிலும் நிறுத்தப்போவதாக அறிவித்து விட்டது. மேலும் அரசின் கொள்முதல் விலையை 1000 ரியால்கள் என அதிரடியாக குறைத்து விட்டது. இதனால் 40 சதவீத விவசாயீகள் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

இதன் விளைவாக கோதுமை உற்பத்தி ஒரு மில்லியன் டன்னுக்கும் கீழே 946,000 டன் ஆக ஒரே ஆண்டில் உற்பத்தி சரிந்தது.இப்போது ஆண்டுக்கு 2 மி.மெ.ட அளவுக்கு கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. 2016 முதல் முழுக்க இறக்குமதி செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளது சவுதி அரேபிய அரசு. மேலும் காய் கறி உற்பத்தியையும் உள்நாட்டு தேவைக்கு மட்டும் செய்ய சொல்லி, ஏற்றுமதி செய்ய தடை விதித்து விட்டது. இதன் மூலம் நீர் தேவையை குறைத்து ,அதற்கு ஆகும் செலவைக்கட்டுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இது தான் இன்றைய தேதியில் சவுதி அரேபியாவின் விவசாய கொள்கை, மற்றும் நிலை.

ஆனால் சவுதி அரேபியாவில் பாலாறும் ,தேனாறும் ஓடுவதாக பதிவுப்போட்ட விஞ்ஞானி 1990 களின் விவரத்தை மட்டும் கவனமாக சொல்லி இது போல பசுமை புரட்சி தொடர்ந்து சவுதி அரேபியாவில் பரவி வருவதாக சொல்லிக்கொண்டார்.அப்படி பரவி வருவதாக இருந்தால் இன்று ஏன் இப்படி ஆயிற்று சவுதி அரேபியாவில்.

காண்க:
விஞ்ஞானியின் பதிவு

அதுவும் மண் வளம் இல்லைனு களிமண் இறக்குமதி செய்து,,விதை இறக்கு மதி, தண்ணீர் சுத்திகரிப்பு செய்து சிக்கனமாக சொட்டு நீர், பசுமைக்குடில் வைத்து விவசாயத்தைப்பெருக்கிட்டாங்க, அதே போல இந்தியாவில் செய்யக்கற்றுக்கொள்ள வேண்டும்னு வேற சொல்லி இருந்தார்.

கோதுமை போன்றவற்றை நிலப்பயிர் (ஃபீல்ட் கிராப்) என்பார்கள் அதனை எல்லாம் பசுமைக்குடில் ,சொட்டு நீர் பாசனத்தில் சாகுபடி செய்ய கடினம் என்ற அடிப்படை விவசாய புரிதல் கூட இல்லை அவருக்கு.

அவர் சொன்னது எப்படி இருக்கு என்றால் ஏற்கனவே கல்யாணம் செய்து 5 ஆண்டுகளில் 6 குழந்தைப் பெற்றவனிடம், கல்யாணம் ஆகி 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் , பின்னர் விந்து தானம் பெற்று செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பெற்றவன் சொன்னானாம் நீ எல்லாம் என்ன பிள்ளை பெற்றாய் என்னப்போல விஞ்ஞான முறையில் லட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைப்பெற்றுக்கொள் என்று.அந்த அதிசய குழந்தையோ இன்குபேட்டரில் இப்பவோ, அப்பவோனு இழுத்துக்கொண்டிக்கிறதாம்!

இவ்வளவும் சொன்ன அந்த விஞ்ஞானிக்கு தற்கால சூழலில் சவுதி அரேபியாவில் என்ன நடக்கிறது என தெரியாமல் போனது ஏன்? ஒரு வேளை மொழிப்படத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற கடந்த காலத்தில் வாழும் ஆசாமியோ அல்லது பொய் சொல்வது பாவம் இல்லை என மார்க்கத்தில் விதி விலக்கு இருக்குமோ என்னவோ :-))

சவுதி அரேபியாவின் இன்றைய விவசாயக்கொள்கை மற்றும் நிலையை கீழ்கண்ட சுட்டிகளில் போய் அறியலாம்:

1)கோதுமை சரிவு

2) சவுதி புதிய விவசாயக்கொள்கை

3) சவுதி அரேபிய 

4) கோதுமை இறக்குமதி

5) கோதுமை vs தண்ணீர்

இந்திய விவசாயத்தில் என்ன தான் பிரச்சினை,

இந்தியாவில் நதி நீர்ப்பங்கீடில் சில சில தாவாக்கள் இருந்தாலும் தண்ணீர் தக்கி முக்கி வந்துவிடும், இல்லை இயற்கையாக மழை கைக்கொடுத்து விடும், வானம் பொழிகிறது, விவசாயி அலுக்காமல் உழைக்கிறான், பூமி விளைகிறது. பசுமைக்குடில், சொட்டு நீர் போன்ற குட்டிக்கரணம், தந்திரம் எல்லாம் பெரும்பாலும் தேவை இல்லை இயற்கையாகவே நல்ல விளைச்சல் இருக்கு.

விவசாயின் பெரும் பிரச்சினையே, விவசாயம் செய்ய ஆகும் செலவை விட குறைந்த விலைக்கு உற்பத்தியை விற்க வைக்கும் சூழல் இந்தியாவில் நிலவுவது தான்.

உரம் , விதை, மின்சாரம், டீசல், ஆட்கூலி எல்லாம் வேகமாக விலை ஏறுகிறது விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருள் கிடைக்க வேண்டும் என அரசு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை மிக குறைவாக வைத்துள்ளதே காரணம்.

குறைந்த பட்ச விலை தான் அது. அதற்கு மேல் விலை வைத்து வியாபாரிகள் வாங்கக்கூடாது என்று சட்டம் இல்லை ஆனால் அவர்களோ அடி மாட்டு விலைக்கு தான் கேட்பார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு பின் அரசு கொள்முதல் நிலையங்களை மூடி விடும், அல்லது சில சமயம் அளவைக் குறைத்து விடும் அது போன்ற சந்தர்ப்பங்களில் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் மிக குறைந்த விலைக்கே கேட்பார்கள். விவசாயிக்கு உள்ள பணத்தேவைக்கு குறைந்த விலைக்கு விற்பதை தவிர வேறு வழி இல்லை.

சவுதி அரேபிய அரசு சர்வதேச சந்தை விலையை விட 10 மடங்கதிகமாக அரசு விலையாக வைத்து விவசாயம் செய்ய தூண்டியது. காரணம் ஏராளாமாக இருந்த எண்ணைப்பணம்,ஆனால் அது போல நீண்ட காலம் செய்ய அவர்களுக்கு முடியவில்லை.

இந்திய விவசாயிகளுக்கு அது போல 10 மடங்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டாம், உற்பத்தி செலவை ஈடுகட்டும் வகையிலும் கொஞ்சம் லாபம் தரும் வகையில்  நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1500 ரூ என்று நிர்ணயித்தாலே போதும் பிச்சு உதறிடுவாங்க நம்ம விவசாயிகள்.

குறைவான கொள்முதல் விலை, ஆட்ப்பற்றாக்குறை, விளை நிலங்கள் வீட்டு மனை என மாறுவது போன்ற இக்கட்டான சூழலிலும் அரிசி, கோதுமை உற்பத்தியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திலே இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.விரயம் இல்லாமல் சந்தைப்படுத்துதல் மற்றும் நியாயமான விலை மட்டுமே இன்றைய நிலையில் விவசாயிக்கு தேவை.

விவசாயம் குறித்த இப்பதிவுகளையும் பார்க்கவும்

1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2







Saturday, January 14, 2012

புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!







தை-1 இல் புத்தாண்டு கொண்டாடப்படும் என அரசு அறிவித்தவுடன் வலைப்பதிவுலகில் பல்வேறு ஆதரவு , எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பிவிட்டது.ஆதரவு தெரிவித்தவர்கள் கூற்று நியாயமாக இருந்தது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதோ வறட்டு விவாதமாக ஒலித்தது.

மாற்றியது தவறு என சொன்னப் பலப்பதிவுகளிலும் , இது சரியான மாற்றம் தான் எனப்பல பின்னூட்டங்கள் இட்டு சொன்னப்போதிலும், அவை சரியானப்படி நிறையப்பேரை சென்றடையவில்லை , எனவே ஒருப்பதிவாக இட்டு எனது கருத்தைப் பதிவு செய்து வைக்கிறேன்.

தைப்புத்தாண்டு தேவையில்லை என்பவர்களின் வாதம்,

1) ஏப்ரலில் வருவது தான் சரி,
2) காலம் காலமாக வருவது
3)விஞ்ஞான முறைப்படி அது சரியானது.
4) தைப்புத்தாண்டு என்பது யாருக்கும் தெரியாத வழக்கில் இல்லாத ஒன்று, திடீர் என அரசு எதேச்சதிகாரமாக அறிவித்துள்ளது

இவை தான் முக்கியமான குற்றச்சாட்டாக எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது. அவர்கள் சொல்வது சரியல்ல என்பதை விளக்கவே இப்பதிவு.

ஏப்ரலில் புத்தாண்டு வருவது சரியா?

அப்போது தான் கோடைக்காலம் துவங்குகிறது அதனால் அப்போது வரவேண்டும் என்கிறார்கள், அது அப்படி இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம். எத்தனையோ பருவங்கள் இருக்க ஏன் கோடையில் வர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கலில் இருந்தே கோடையின் துவக்கம் நமக்கு ஆரம்பிக்கிறது, அறுவடை எல்லாம் முடிந்திருக்கும் அப்போது.எனவே அப்பருவத்தின் துவக்கத்தினை புத்தாண்டாக வைத்தால் என்ன?

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதனால் "summer solstice " மார்ச் 21 இல் வருவதை ஒட்டி புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாலாம் என்கிறார்கள்.(ஆனால் உண்மையில் இந்தியக்காலண்டர்கள் லுனி சோலார் காலண்டர்கள், தமிழ் காலண்டர் முழுக்க சூரியக்காலண்டர் )

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் வருடாந்திர பயணத்தின் அடிப்படையில் ஒன்று அதன் துவக்கத்தில் அல்லது இறுதியில் இருந்து ஆண்டை ஆரம்பிக்கலாமே, ஏன் இடையில். இதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சூரியன் என்பது நிலையானது , அது நகர்வதில்லை ஆனால் பூமியின் சுழற்சி, அதன் 23.5 கோண சாய்வு ஆகியவற்றால் நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, அதன் அடிப்படையிலே இரவு பகல், பருவக்கால மாற்றங்கள் ஏற்படுகிறது.

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது பூமியின் சுழற்சியால், இது தினசரி சூரியனின் நகர்வு நிகழ்வு எனக்கொள்ளலாம்,

இதே போல சூரியனின் வருடாந்திர நகர்வு நிகழுவும் இருக்கிறது, இதற்கு காரணம் பூமி அதன் அச்சில் 23.5 கோணாம் சாய்வாக சூரியனை சுற்றிவருவது.

பூமியை வடக்கு தெற்காக இரண்டு பாதியாக பூமத்திய ரேகை பிரிக்கிறது, பூமி மீது இது போன்ற வளையங்களாக செல்லும் கற்பனைக்கோடுகளே அட்ச ரேகைகள் எனப்படுகிறது.

இதில் முக்கியமான வளையங்கள் பூமத்திய ரேகை, மகர ரேகை, கடக ரேகை.

மகர ரேகை தென் கோளத்திலும், கடக ரேகை வடக்கோளத்திலும் வரும் இடையில் பூமத்திய ரேகை.

சூரிய ஓளி செங்குத்தாக பூமி மீது மகர ,கடக ரேகைப்பகுதிக்குள் மட்டுமே விழும்.

ஒரு ஆண்டில் சூரியன் இரண்டு வளையங்களுக்கும் இடையே சென்று வருகிறான்.பூமி சாய்வாக சுழல்வதால் அப்படி தோன்றுகிறது.

ஜூன் மாதத்தில் (ஜூன் 24) சூரியன் வடக்கோள கடக ரேகையில் இருந்து தென்கோள மகர ரேகைக்கு தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கி , இந்திய முறைப்படி ஜனவரி 14 இல் (சரியான தேதி என்றுப்பார்த்தால் டிசம்பர் 21)மகர ரேகைக்கு வந்து பின்னர் அங்கிருந்து கடக ரேகைக்கு வடக்கு கோளத்தை நோக்கி பயணிப்பான். அதாவது ஆறு மாதம் இந்தப்பக்கம் ஆறு மாதம் அந்த பக்கம் .

இந்த மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள் இதைப்புனிதமானது என்பார்கள்,அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது.

எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அது ஏன் சூரியனின் பயணத்தில் இடைப்பட்டக்காலத்தில் ஏப்ரலில் வர வேண்டும்!

மகர ரேகை என்பது இந்தியாவிற்கு தெற்கே கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ளது அங்கிருந்து இந்தியா நோக்கி சூரியன் வரும் நாளை வருடத்தின் துவக்க நாளாக கொள்வது தவறில்லையே. அதாவது சூரியக்காலண்டர் அடிப்படையில் சூரியனின் பயணம் துவங்குவது முதல் நாள்!

இதனாலேயே ஒருக்காலத்தில் ஆங்கில முறையில் ஏப்ரலில் வந்த புத்தாண்டு கூட ஜனவரிக்கு இடம் பெயர்ந்தது.

wikki இல் இருந்து எடுக்கப்பட்ட உதாரணம்,

//France was one of the first nations to make January 1 officially New Year's Day (which was already celebrated by many), by decree of Charles IX. This was in 1564, even before the 1582 adoption of the Gregorian calendar (See Julian start of the year). Thus the New Year's gifts and visits of felicitation which had been the feature of the 1st of April became associated with the first day of January, and those who disliked or did not hear about the change were fair game for those wits who amused themselves by sending mock presents and paying calls of pretended ceremony on the 1st of April.//

தமிழர்கள் எந்த அளவுக்கு தீர்க்க தரிசனத்தோடு இருந்தால் அக்காலத்திலேயே வரப்போகும் சூரியனை வரவேற்று , சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக்கொண்டாடி இருப்பார்கள்!

மேற்கண்ட விளக்கத்தின் மூலம் ஏப்ரலில் வருவது, விஞ்ஞான ரீதியாக சரி என்று சொல்வதெல்லாம் தவறு என்று காட்டி இருக்குமே!

சித்திரை புத்தாண்டு காலம் காலமாக வருவது என்கிறார்கள், அக்காலத்தில் கூட காலம் காலமாக உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் எல்லாம் இருந்தது அதை எல்லாம் சட்டம் போட்டு ஒழிக்கவில்லையா? அதையும் புனிதமாக நினைப்பவர்கள் இருந்தார்கள் என்று அரசு ஆதரிக்க முடியுமா?

இப்போது அரசு திடீர் என்று மாற்றம் செய்து விட்டது என்று சிலர் சொல்கிறார்களே அது எப்படி ?

1921 இல் திருவள்ளுவர் கி.மு 31 இல் பிறந்தாரரென்ற கூற்றின் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்று உருவாக்கப்பட்டுள்ளது,அதில் தை இரண்டு அன்று புத்தாண்டு வருவதாக மறைமலை அடிகள், திரு.விக, கி.ஆ.பெ எல்லாம் இதுக்குறித்து பல தமிழ் ஆய்வுகள் செய்து தெரிவித்துள்ளார்கள், இதனை அரசும் ஏற்கும் விதமாக வெகு காலம் முன்னரே அரசு நாட்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டை ஏற்று வெளியிட ஆரம்பித்தது. சில தரமான தனியார் காலண்டர்களிலும் இந்த ஆண்டு முறை இடம் பிடிக்க ஆரம்பித்தது.

தற்போது ஏற்கனவே பலகாலமாக இருந்த ஒன்றுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வண்ணம் அரசாணை வெளியிட்டுள்ளது. தை இரண்டு என்பதற்கு பதில் முழுதாக தை 1 என்ற சிறிய திருத்தம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.


எனவே இந்த அறிவிப்பு ஒன்றும் திடீர் புரட்சி அல்ல, பலகாலமாக இருந்து வந்த தமிழறிஞர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது அரசு.


பின்குறிப்பு:

இது ஒரு மீள்ப்பதிவுங்கோ!!!