தமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு.
இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்களோ தங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம், மேம்படுத்தப்படும். நன்றி!
பரவாயில்லை.
இச்சொல் பர்வா நஹி என்ற வட மொழி சொல்லில் இருந்து உருவானது.
பர்வா = கேர் (care), நஹி (nahi)=இல்லை,
பர்வா நஹி என்றால் ஐ டோண்ட் கேர்(i don't care) அல்லது நோ பிராப்ளம் (no problem, no mention)என சொல்வதாகும்.
அதனை அப்படியே தமிழ்ப்படுத்தி பரவாயில்லை என்றாக்கிவிட்டார்கள்.(தெலுங்கில் பர்வாலேது)
பரவாயில்லைக்கு இணைச்சொல் ,
கவலையில்லை,
பொருட்படுத்தவில்லை .
என சொல்லலாம்.
புத்தி.
புத்தி ( buddhi)என்பதும் வடமொழி இதற்கு ஞானம் என வடமொழியில் பொருள்,
buddhi-> buddha->buddhar ->.buddham
புத்தியுடையவர் புத்தர், அதாவது ஞானம் பெற்றவர், ஞானத்தினை உள்ளடக்கமாககொண்ட ஒன்று புத்தகம்.
புத்தியினை புகட்டும் செயல் போதித்தல் இதன் பெயர்ச்சொல் போதை , அதாவது ஞானம். போதி தருமர் , ஏழாம் அறிவெல்லாம் நினைவுக்கு வருமே.
புத்திக்கு இணையான தமிழ்ச்சொல் அறிவு,
ஞானம் என்பது அறிவு என்றாலும் அதில் உச்ச நிலை ஆகும் எனவே அதனை அறிவொளி எனலாம்.
எனவே
#புத்தி (knowledge)- அறிவு
#ஞானம் (wisdom)- அறிவொளி.
* முன்னர் தமிழக துவக்கப்பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்திற்கு அறிவொளி இயக்கம் என்றே பெயரிடப்பட்டிருந்தது, பின்னர் மத்திய அரசின் நிதியுடன் "சர்வ சிக்ஷா அபியான்" என மாற்றம் பெற்றது.
*அறிவொளி என்ற பெயரில் புகழ்மிக்க பட்டிமன்ற நடுவர் ஒருவரும் உள்ளார்.
#போதித்தல்(educate)- கற்பித்தல்
#புத்தகம்(book)- நூல்
---------------
ஐஸ் கிரீம்(ice cream):
ஐஸ்கிரீம் என்பது பால்,சர்க்கரை , மற்றும் சுவையூட்டி இவற்றினை காற்று ,நீர் கலந்த கூழ்ம (colloidal emulsion)வடிவில் உறைவித்து தயாரிப்பது ஆகும். எனவே இதனை ,
உறைகூழ் அல்லது
பனிக்கூழ் அல்லது
குளிர் கூழ் எனலாம்
முதன் முதலில் பனிக்கூழினை உண்ணக்கூடிய கூம்பு வடிவ ரொட்டியில் (cone icecream) வைத்து கொடுத்தது Charles Menches / Arnold Fomachou ஆவார்கள் ,அமெரிக்காவில் கி.பி 1904 இல் World's Fair in St. Louis. இது நிகழ்வுற்றது.
-------------
#சம்பவம் வடமொழி.
நிகழ்வு தமிழ்.
# மனிதன் வடமொழி ,
மனுஷ் , மனுஷன்,- மனிதன்
எனவே சரியான தமிழ் சொல்
மாந்தர்,மாந்தன்.
எடுத்துக்காட்டு:
தொட்டனைத் தூறு மணற்கேணி "மாந்தர்க்கு "
கற்றனைத் தூறும் அறிவு
# நபர் -அரபி,
தமிழ்ச்சொல் - ஆள், அல்லது ஒரு நபர்=ஒருவர்/ஒருவன், சில நபர்= சிலர்
#personality- ஆளுமை.
# பிரபலம் வடமொழி,
இணையான தமிழ்ச்சொல்.
புகழ்ப்பெற்றவர், புகழாளர்,
பிரபல பதிவர் என சொல்லாமல் புகழ்ப்பெற்ற பதிவர் எனலாம் :-))
#சந்தேகம் வடமொழி,
அய்யம் ,அய்யுறுவு என்பதே தமிழ்.
#சந்தோஷம் வடமொழி ,
இணையான தமிழ்ச்சொற்கள்:
மகிழ்ச்சி , குதூகலம்*,களிப்பு, உவகை, பெரு மகிழ்ச்சி எனில் பேருவுவகை எனலாம்,
*களிப்பு என்பதில் இருந்து குதூகளம் என வந்திருக்கலாம் என நினைக்கிறேன், சார்வாகன் கூறியப்படி குதூகலம் என மாற்றியுள்ளேன், சரியான சொல்லினை மீண்டும் சரிப்பார்க்க வேண்டும்.
# சந்திரன் வடமொழி,
நிலா, திங்கள், மதி என்பன தமிழ்.
# சூரியன் வடமொழி,
கதிரவன், பகலவன், ஆகியன தமிழ்.
# அம்மாவாசை ,வட மொழி , அமாவாஸ்ய என்பதில் இருந்து மருவிய சொல்,
நேரடியாக மொழிப்பெயர்த்தால் முதல் வளர் நிலவு நாள் என வரும், இதனை "இருட்மதி நாள்"(நிலவற்ற நாள்) என சொல்லலாம் என நினைக்கிறேன்.
*மதியிலி நாள், ஆக்கம் சார்வாகன்.(மதியிலி நாள் என்றால் முட்டாள் தினம்-ஏப்ரல்-1 என நினைத்துவிட்டால் என்ன செய்வது?)
மேலும் புதுப்பிறை நாள் எனவும் அழைக்கலாம் என நினைக்கிறேன்.
சரியான சொல்லினை தெரிந்தவர்கள் கூறலாம்.
---------------
வலைப்பதிவர் சொல்லகராதி:
பெரும்பாலோருக்கு வலைப்பதிவில் பயன்ப்படுத்தும் வலைப்பதிவு சார்ந்த இணையான தமிழ் சொற்கள் தெரிந்திருக்கும் ஆனாலும் மீண்டும் நினைவுறுத்த எனக்கு தெரிந்த சில சொற்களை தொகுத்துள்ளேன்.
Blog - வலைப்பூ, வலைப்பதிவு
web address-உரல்
link-சுட்டி, தொடுப்பு
comment- மறுமொழி,பின்னூட்டம்,
comment moderation-மறுமொழி மட்டுறுத்தல்
followers-பின் தொடர்பவர்கள்
follow up- பின் தொடர
up load- தரவேற்றம்.
down load-தரவிறக்கம்.
search engine-தேடு பொறி.
mouse-எலிக்குட்டி ,சுட்டுவான்.
keyboard-தட்டச்சுப்பலகை.
hard disk-வன் தட்டு/வட்டு, இறுவட்டு.
dvd-குறுவட்டு.
computer monitor- காட்சி திரை,கணினி திரை.
central processing unit(cpu)- நடுவண் செயல் அலகு,நடுவண் இயங்கலகு,செயலி.
தொடரும்...
----------------
பின்குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி,
கூகிள், தமிழ் விக்ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகர முதலி தளங்கள்,நன்றி!
தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெற்றிகரமாக நடைப்பெற்றதை பெரும்பாலோர் அறிவார்கள்.
எந்த ஒரு நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவது என்பது சிரமமான ஒன்றே என்றளவில் நடத்திய மற்றும் பங்குப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
இந்நிகழ்வை ஒட்டி சிலப்பதிவர்களுக்கு தெரியவில்லை, அல்லது அழைக்கவில்லை என ஒரு பேச்சு ஓடியது,
இதனை ஒட்டி ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை ,அனைவரும் நிகழ்ச்சி அறிவிப்பினை பதிவில் பார்த்துவிட்டு மட்டுமே வந்தார்கள் என விளக்கம் அளித்தார், யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க தேவையில்லை எனவே இவ்விளக்கம் ஏற்கக்கூடியதே, ஆனால் அவர் விளக்கம் சொல்லிய சில நாட்களுக்கு பிறகு வந்த பதிவுகளில் பார்த்தால் இன்னாரை நான் போன் செய்து அழைத்தேன் என ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பதிவு போடுகிறார், இன்னொரு "முக்கிய" பதிவரோ இன்னின்னார் என்னை தொலைப்பேசியில் அழைத்து கலந்து கொள்ள சொன்னார்கள் எனப்பதிவிடுகிறார்.
அழைக்கவில்லை என சொன்னவர்களையும் அனைவரும் அறிவர், அழைப்பு விடுவிக்கப்பட்ட சிலரையும் அறிவார்கள், ஆரம்பத்தில் யாரையும் அழைக்கவில்லை என சொல்லிவிட்டு உடனே அழைப்புவிடுவிக்கப்பட்டதாகவும் முன்னுக்கு பின்னாக பதிவுகள் வருவது சரியாகப்படவில்லை, பாகுபாடற்ற அணுகுமுறையில்லையோ என்றே நினைக்க வைக்கிறது.
மேலும் அனைத்துப்பதிவுகளிலும் சென்னையில் தமிழ்ப்பதிவர்களின் முதல் சந்திப்பு என மறக்காமல் அழுத்தம் கொடுப்பதும் ஏதோ ஒன்றினை குறியீடாக சொல்கிறதா?
என்ன நடந்தால் உனக்கென்ன ..நீ என்ன கலந்துக்கொண்டாயா எனக்கேட்பாங்க எனவே வாயை மூடி சும்மா இருடா வவ்வாலு :-))
என்ன கொடுமை சார் இது!
---------------
வாய மூடி சும்மா இருடா!
சமீபத்தில் தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் என பெருமையாக சொல்லிக்கொண்டு வந்த திரைப்படம் "முகமூடி'ஆனால் ஏனோ அனைவரும் கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள்(முகமூடி என்ற பெயர் பிடிக்கலையோ), படம் நல்லா இருக்கா இல்லையா என்பதை பதிவர்களின் விமர்சனம் வைத்து கணிக்கவே முடியாதப்படியான அளவு கோல்களின் அடிப்படையில் படத்தினை பதிவர்கள் விமர்சிக்கிறார்கள் .நாயகியாக எப்படி இவரைப்போடலாம் எந்த கோணத்தில் பார்த்தாலும் பெண்ணுக்குரிய "அம்சங்களே' இல்லை என சாமுத்திரிகா லட்சண குரு போல சொல்கிறார் ஒரு பதிவர் ,
இன்னொருவரோ ஏன் நாயகி வீட்டில் புத்தர் சிலையைக்காட்டுறாங்க என்கிறார், ஒரு வேளை பிள்ளையார் பொம்மையை காட்டினால் பாராட்டியிருப்பாரோ என்னமோ. படத்தில் மேலும் பலக்குறியீடுகளை இயக்க்குனர் திணித்து தனது உலக திரைப்பட அறிவைக்காட்டியிருப்பதாக ஒரு மாபெரும் வதந்தி பதிவர்களால் கிளப்பிவிடப்பட்டுள்ளதால், அக்குறியீடுகளை கட்டுடைத்து ஒரு விமர்சனமும் எழுதி மக்களை சோதிக்கலாம் என அடிமனதில் ஒரு அல்ப ஆசை ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்கிற்கு படம் பார்க்க போய் 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இம்முறை திரையரங்க நுழைவு நிச்சயம் ,ஆனால் பன்னரங்கு காட்சியகம் செல்லாமல் ஏதேனும் ஒற்றைத்திரையரங்கு செல்வேன், பெரும் அரங்குகள் என்னைப்போல ஏழைகளுக்கு உகந்தது அல்ல!
இப்போதைக்கு முகமூடியின் இப்பாடல் எனக்கு தத்துவார்த்த ரீதியான ஒருப்பாடலாக படுகிறது ...
எனவே படம் எப்படியிருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன் , என்னைப்படம் பார்க்க தூண்டிய ஒரே விடயம் படத்தின் பெயர் "முகமூடி" :-))
என்ன கொடுமை சார் இது!
----------
அரசியல் விளையாட்டு.
சென்னை நேரு கால் பந்தாட்ட மைதானத்தில் பயிற்சிக்கு வந்திருந்த இலங்கைக்கால்பந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டு ,நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்கள். மேலும் அனுமதி அளித்த அரசு உயர் அலுவலரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காரணம் இலங்கை தமிழர் பிரச்சினை நிலவும் நிலையில் இலங்கை வீரர்கள் எப்படி தமிழ் மண்ணில் பயிற்சி செய்யலாம் என்பதாகும்.
அம்மையாரின் அதிரடி கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இதில் உள்ள நகைச்சுவை என்னவெனில் இது போல மட்டைப்பந்தாட்ட அணியினரை திருப்பி அனுப்பியிருக்க முடியுமா என்பதே , ஆண்டு தோறும் இலங்கை அணி இந்தியாவில் போட்டிகளில் கலந்து கொள்ள வருகிறது, சென்னையிலும் போட்டிகளில் ஆடியுள்ளார்கள், மேலும் இலங்கை வீரர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் இருக்கிறார்கள்.
மேலும் பல ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து வீச்சு பயிற்சி மையத்தில் டென்னிஸ் லில்லி தலைமையில் இலங்கை பந்து வீச்சாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர், சமிந்தா வாஸ், லசித் மலிங்கா உட்பட பலர் எம்.ஆர்.எஃப் பயிற்சி மையத்தின் தயாரிப்பே.
மட்டைப்பந்தாட்ட அணியை ஆடவிட்டு வேடிக்கைப்பார்க்கும் அரசியல்வாதிகள் கால்பந்தாட்ட அணியை மட்டும் விரட்டி வீரம் காட்டுவது நகை முரண் ஆகும் , ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி கதையாக இருக்கு.
என்ன கொடுமை சார் இது!
---------------------
பணங்காய்ச்சி மரம்.
சமீபத்தில் சென்னையில் பள்ளிப்பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையின் வழியே விழுந்து ஒரு சிறுமி பலியானாள், அச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் ஓயும் முன்னரே க.க நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி ரஞ்சித் என்ற மாணவன் இறந்துப்போனான்.
மாணவன் ரஞ்சித் , மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர் என்பவரின் ஒரே மகன் ஆவார்.
இச்சம்பவத்தில் கேள்விக்குறியை ஏற்படுத்துவன,
# 26 மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டும் ,ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார், இன்னொரு பயிற்சியாளரோ, உதவியாளரோ இல்லை.
# காலையில் பள்ளிக்கு வந்ததும் ஏன் நீச்சல் பயிற்சிக்கு மாணவர்களை பள்ளி நிர்வாகம் அனுப்ப வேண்டும்? பெரும்பாலும் உடல் திறன் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மாலையில் தானே வைப்பார்கள்?
எனது கணிப்பு என்னவெனில் பல மாணவர்களை நீச்சல் பயிற்சியில் சேர்த்து பணம் வசூலித்துவிடும் பள்ளி நிர்வாகம் ,அனைவருக்கும் ஒரே நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்க காலையில் இருந்து மணிக்கு ஒரு அணியாக பயிற்சிக்கு அனுப்பி சமாளித்து இருக்க வேண்டும். இதனால் பயிற்சியாளருக்கு மாணவர்கள் மீது பெரிதாக கவனம் இருக்க வாய்ப்பில்லை.
# மாணவன் இறந்தவுடன் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு எதுவுமே நடவாதது போல தொடர்ந்து பள்ளியை நடத்தியுள்ளனர், பல மாணவர்களின் பெற்றோரும் கூடி போராடிய பின்னரே ,பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளனர்.
# சென்னை சேலையூர் சியோன் பள்ளி நிர்வாகி இதே போன்ற வழக்கில் கைதாகி ,பிணையில் கூட வர இயலாமல் சிறையில் இருந்தார் ஆனால் அதே போன்ற சம்பவத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகி பெயருக்கு கைதாகி சில மணி நேரங்களில் பிணையில் வெளிவந்து விட்டார்.
சட்டம் அனைவருக்கும் சமம் என அரசியல் நிர்ணய சட்டம் சொல்கிறது.
(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ)
நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பயன் படுத்தி வந்தாலும் ,பலரும் அதனை கருத்தில் கொள்ளாமல் மேலோட்டமாக படித்து செல்கிறார்கள் ,அப்படி சென்றாலும் பரவாயில்லை ஒரே மட்டையடியாக பொதுவாக தமிழில் அறிவியல் சொற்கள் இல்லை, மேலும் பல வடமொழிச்சொற்கள் தான் இருக்கு ,எனவே தமிழின் மொழி வளம் குறைவு என மட்டையடிக்கிறார்கள் , தமிழில் சுமார் ஏழு லட்சத்திற்கும் மேல் தனித்தமிழ் சொற்கள் உண்டு(வைரமுத்தே சொல்லிக்கீறார்), மேலும் இன்றைய உலகவழக்கிற்கு தேவையான அறிவியல் சொற்களையும் உருவாக்கிக்கொள்ளலாம், அதற்குத்தமிழில் இடம் உண்டு, தமிழ் ஒரு நெகிழ்வான மொழியாகும்.எனவே அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை பட்டியலிட்டு வரலாம் என நினைக்கிறேன்.
அல்லக்கை:
இது ஒரு தெள்ளுத்தமிழ் சொல்லாகும்.
அல்ல= இல்லை ,+கை ,அதாவது இல்லாத கை, ஒரு பெரும்புள்ளிக்கு அவரது வழக்கமான கரம் போக இல்லாத மூன்றாவது கரமாக செயல்ப்படும் ஒருவரை குறிப்பது.
வழக்கமாக ஒரு முக்கியமானவரின் நெருங்கியவரை இவரு அவரோட ரைட் ஹேண்ட் (right hand)என ஆங்கிலத்தில் சொல்வதுண்டல்லவா.
மேலும் அல்ல என்பதற்கு தீயவை என்றும் பொருள் உண்டு.
"அல்லவை நீக்கி நல்லவை நாட வேண்டும்"
பெரும்பாலும் அல்லக்கையாக இருக்கும் மனிதர் ,தலைவரு சொன்னாருன்னு ஏகப்பட்ட ஆட்டம் ஆடுவார்,பலருக்கும் கெடுதல் செய்வது வழக்கம்.
அல்லக்கை என்றால் தீயவர், இன்னொருக்கு அடிப்பொடி எனலாம்.
அதிகாரி:
இது வடமொழியாகும்,
அதி= கூடுதலாக , உயர்வாக,
காரி = செய்பவர் , காரியம் செயல்.
அதிகாரி என்றால் ஒரு செயலை செய்பவர், வேலை செய்பவர்.
இணையான தமிழ்ச்சொல் அலுவலர்.
ஆணி:
இதுவும் வடமொழியே, இரும்பு முளை என்று பொருள்.
ஆட்டோ ரிக்ஷா (auto riksha):
ஆங்கில,ஜப்பானிய கலவை சொல்.
ஆட்டோ= தானியங்கி
ரிக்ஷா =கையால் இழுப்பது.
எனவே தமிழில் அப்படியே மொழிப்பெயர்க்காமல்,
ஆட்டோ ரிக்ஷா =தானியங்கி மூவுருளி.
மூன்று சக்கரங்களை கொண்ட மோட்டார் வாகனம் எனப்பொருள்.
Bicycle:
இதற்கு தமிழில் மிதிவண்டி என்பார்கள், இன்னொருப்பெயரும் இருக்கிறது "ஈர் உருளி" இரண்டு சக்கரங்களை கொண்ட வண்டி.
கிரேன்(crane):
ஓந்தி= உயரத்தூக்குதல், உந்துதல் என்றால் முன்னால் தள்ளுதல் ,ஓந்துதல் என்றால் உயரத்தில் தள்ளுவது,தூக்குவது.
ஆகாயவிமானம்(aeroplane):
வடமொழி, இதற்கு தமிழில் வானூர்தி ,இல்லை எனில் பறக்கும் எந்திரம் என சொல்லலாம். ஏன் எனில் ரைட் சகோதரர்கள் முதலில் கண்டுப்பிடித்த போது "ஃப்ளையிங் மெஷின்" (Flying machine)என்று தான் பெயர் வைத்தார்கள்.
அத்தகைய வானுர்தியில் இரண்டு அடுக்கில் சமதளமான இறக்கைகள் இருக்கும் இதனால் அதனை "பை பிளேன்" (bi-plane)என்று அழைத்தார்கள், ஏர்-ஏரோ என்றால் காற்று எனவே ஏரோ பிளேன் ஆயிற்று.
ஹெலிகாப்டர்(helicopter);
இணையான தமிழ் சொல்:
உலங்கு வானூர்தி:
உலங்கு = சுழலுதல் , ஹெலிஹாப்டரில் மேல் உள்ள விசிறிகள் சுழன்று அதன் மூலம் பறப்பதால் உலங்கூர்தி.
முதலில் ஹெலிஹாப்டருக்கு "ஏர்ஸ்க்ரு" (airscrew)என்று பெயர் வைத்தார்கள், திருகாணிப்போல விசிறிகள் சுழல்வதால் ,பின்னர் ஹெலிகாப்டர் ஆயிற்று. ஹெலி (heli)என்றாலும் சுழலுவது தான்.
திசைகளும் காற்றும்:
கிழக்கு- கொண்டல் காற்று
மேற்கு: மாருதம்*
தெற்கு :தென்றல்
வடக்கு: வாடைக்காற்று.
*மாருதம் , இதில் இருந்து மாருதி வருகிறது அப்படியானால் வட மொழி என தோன்றலாம், ஆனால் தமிழிலிருந்தும் பல சொற்கள் வடமொழிக்கு சென்றுள்ளது, உதாரணமாக கூலி என்ற சொல், திருக்குறளிலும் உண்டு.
காளிதாசர் மேகதூத் என்ற காவியம் எழுதியுள்ளார், இதனை தமிழில் மேகதூது எனலாம், மேகம் வட மொழி என்றாலும், தூது வட மொழி என சொல்ல முடியாது ,தூது என்றே திருக்குறளில் ஒரு அதிகாரம் உள்ளது, மேலும் சங்க இலக்கியங்களில் தலைவி தலைவனுக்கு தூது விடுவதாக நிறையப்பாடல்கள் இருக்கிறது. எனவே தூது தமிழில் இருந்து வடமொழிக்கு சென்று இருக்கலாம்.
மேகம்;
தமிழ் சொற்கள்: கொண்டல் ,முகில்,மாரி, மஞ்சு ஆகியவை.
காக்கா:
இதுவும் வடமொழியே, கா என்றால் சமஸ்கிருதத்தில் யார், காக்கா கரையும் போது கா ..க்கா என ஒலிப்பது யார்..யார் என சமஸ்கிருதத்தில் கேட்பது போல இருப்பதால் காக்கா என பெயர் வைத்துவிட்டார்கள்.
தமிழ் இணைச்சொல்: முட்டம்
நாகர்கோவிலில் முட்டம் என்ற ஊர் உள்ளது.
ஶ்ரீமுஷ்ணம் என்ற ஊரினை தமிழில் திருமுட்டம் என்பார்கள், அவ்வூரில் ஒரு காக்கா மோட்சம் அடைந்தது என்பது தலபுராணம்.
மேலும் வேலூர் அருகே குரங்கணிமுட்டம் என ஊர் உள்ளது , குரங்கு ,அணில்,முட்டம்(காக்கா) ஆகியவை மோட்சம் அடைந்ததாக தலபுராணம், எனவே மூன்றின் பெயரை சேர்த்து ஊருக்கு குரங்கணிமுட்டம் என பெயர் வந்துள்ளது.
தொடரும்...
---------
பின் குறிப்பு:
#இங்கு சில சொற்களை நானே உருவாக்கியும் ,மேலும் முன்னர் படித்தவற்றின் நினைவில் இருந்தும், தமிழ் விக்ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகரமுதலி ஆகியவற்றின் உதவியுடனும் தொகுத்துள்ளேன், பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி!
#இப்பதிவிற்கு கோவியாரின் "பந்தயம்" குறித்தான பதிவும் ஒரு தூண்டுகோல், வழக்கமான பந்தயம் என்ற சொல்லுக்கே ஆராயும் நிலையில் தமிழ் சொற்களை பொருளுணர்ந்து பயன்படுத்தும் நிலை அருகி வருவதாக தோன்றியதால் ,அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை தனியே பட்டியலிட்டால் என்ன என தோன்றியது.
வலைப்பதிவர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 26,2012 அன்று நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே ,முதலில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்தினை சொல்லிவிடுகிறேன்...
வலைப்பதிவு சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!
அதிக இடித்தல் (hits)வாங்கும் நோக்கில் இச்சந்திப்பினை ஒட்டி பலரும் பலவிதமாக புனைவுகளை முன்வைத்து பதிவுகளை போட்டு இருக்கிறார்கள், பெரும்பாலான புனைவுப்பதிவுகள் "மது" என்ற ஒன்றினை முன்னிறுத்துகின்றன, ஆனால் அவர்கள் சொல்வது உண்மையில்லை என அவர்களுக்கே தெரியும்,இருந்தாலும் ஏதோ ஒரு மனமயக்கத்தில் அப்படியெல்லாம் பேசுகிறார்கள் என நினைக்கிறேன்.
தமிழ்ப்பதிவர் சந்திப்பில் இது ஒன்றும் முதல் பெரும் சந்திப்பும் இல்லை ,கடைசியான ஒன்றாகவும் இருக்கப்போவதில்லை, தொடரும் நிகழ்வாகவே இருக்கும்.இதற்கு முன்னர் இப்போது விட தொழிற்நுட்பம் ,பொருளாதாரம் என பல வகையிலும் பிந்தங்கிய காலமான 2007 இல் மிகப்பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை ஒன்றினை ,இணையம்,கணினி என சகல தொழிட்பத்துடன் , நேரடி கற்றல் முகாமாக சென்னை பல்கலை வளாகத்தில் நடத்திக்காட்டி இருக்கிறார்கள் தமிழ்ப்பதிவர்கள் என்பதை தற்போது புதிதாக வந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்,சில பழைய திமிங்கில பதிவர்களும் மறந்திருக்க கூடும் என்பதால் ஒரு டோட்டல் ரீகால் டு 2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறையினை இப்போது காணலாம்.
தமிழ்ப்பதிவர்களின் முதல் பெரும் பதிவு பட்டறைக்கு பெரிதும் உழைத்து முன்னெடுத்து சென்றப்பதிவர்களின் பட்டியல், நினைவில் இருந்து எழுதுவதால் சிலர் விடுப்பட்டிருக்கலாம், மன்னிக்கவும் ,மேலும் சில பதிவுகளை தேடி அவர்கள் பட்டறைக்குறித்து வெளியிட்ட அனுபவப்பதிவுகளையும் இணைத்துள்ளேன்.அனைத்தும் தேடி எடுக்க அவகாசம் இல்லை எனவே சில மட்டுமே இருக்கும், விடுபட்டவர்கள் மன்னிக்கவும்.
மற்றும் பலர், pre production, execution,post production, என பலவகையிலும் பலரும் பங்காற்றினார்கள், tamilbloggers.org என்ற இணையத்தளம் முதற்கொண்டு உருவாக்கி தொழிற்நேர்த்தியுடன் செயல்பட்டார்கள்.எனவே எத்தனையோ பேரின் பங்களிப்புண்டு, அனைவரும் என் நினைவில் இல்லை,மேலும் அப்பொழுதும் நான் வாசகனாக/பார்வையாளனாக/முகமூடியாகவே இருந்தப்படியால் படித்தவற்றையே இங்கு சொல்கிறேன்."I din't have any first hand experince on that event" so errors and omissions except!
அன்றைய பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறையும், இன்றையப்பதிவர் சந்திப்பும் தற்செயலாக ஆகஸ்ட் மாதத்தில் அமைந்துள்ளது எனலாம்.
பெண்கள் பலர் பட்டறையில் ஆர்வமுடன் கலந்துக்கொண்டக்காட்சி!
-------------------
கீற்று இணையதளத்தில் பதிவர் பட்டறையின் சுற்றறிக்கை,நிகழ்ச்சி நிரல், என முதன்மை விவரங்கள் வெளிவந்தது .
கீற்று இணைய தளத்தில்...
பதிவர் பட்டறை-2007 ஆகஸ்ட்-5
எப்போ?
ஆகஸ்டு 5, 2007 - ஞாயிற்றுக் கிழமை
எங்கே?
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் (Marina Campus)
எவ்வளவு நேரம்?
காலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.
எதற்கு?
•பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு தொடர்பு-பின்னல்(network) உருவாக்குவது.
•பயன் தரக் கூடிய தகவல்களை அளிப்பது.
•புதியவர்களுக்கு வலைப்பதிவு, தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
•வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்
•பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
•பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
•இணையத்தில் தமிழ் தழைக்க பணி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல்
இன்னும் ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் திரு.பாமரன் (கோவை)அவர்கள் பதிவர் பட்டறைக்கு காணொளி மூலம் வாழ்த்து சொல்லியிருந்தார், இதற்கான முயற்சிகளை எடுத்தது பல்லூடக நிபுணராக அப்பொழுது விளங்கிய "ஓசை" செல்லா என்றப்பதிவர் ஆவார். போட்டோகிராபி இன் தமிழின் அங்கத்தினர்.
அவர் அப்போது உடனுக்குடன் புகைப்படங்கள் எடுத்து கைப்பேசி மூலம் பதிவேற்றி அசத்தினார், அப்போதைய இணைய வேகத்திற்கு அது அபாரசாதனை என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆரம்பத்தில் இருந்தே முதல் முறையாக பட்டறை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் துளி கூட வராத அளவிற்கு பட்டறை நடத்தியவர்களின் செயல்பாடுகள் இருந்தன. நிறைய இடங்களில் "ச்ச எப்படி யோசிச்சு செஞ்சிருக்காங்க" என்று புருவம் தூக்கிக் கொள்ளும் கேள்விகள் வரும் அளவிற்கு நிறைய விஷயங்களைச் சின்ன சின்ன விஷயங்களானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள், பட்டறைக்கு கீறிக் கூட ஒன்றும் செய்யவில்லை என்றாலும், சிறு சிறு நாடகங்கள் நடத்தி கல்லூரிகளில் விழாக்கள் நடத்தி - பங்குபெற்றவன் ஆதலால் நிச்சயமாய் அவர்கள் செய்திருந்த முன்னேற்ப்பாடுகள் பற்றி ரொம்பவும் பெருமையாகவே சொல்லமுடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும்...
மோகன் தாசின் பதிவு மட்டும் இல்லை கண்ணும் பேசும் ,அதாவது கேமிரா கண்ணன் அவர் ,அவரது கேமராவில் சுட்ட பதிவர்ப்பட்டறையின் அழகானப்படங்கள் காண சுட்டியை அழுத்தவும்.
அக்காலத்தில் பெண்ப்பதிவர்களில் கலக்கியப்பதிவர்,போக்கிரி என்ற வலைப்பதிவின் ஓனர், வலைச்சரத்தின் ஆதாரம், என பல முகம் உண்டு.சென்னையில் நடந்த முதல் பதிவர் பட்டறைக்கு மிகவும் பாடுப்பட்டுள்ளார், அவரது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.படித்துப்பாருங்கள்.
பொன்ஸ் அவர்களின் பதிவில்...
முதல் அமர்வு தகடூர் கோபி தமிழ் குறியேற்றங்கள், விசைப்பலகை, போன்றவற்றை விளக்கினார். அப்போதே திருவள்ளுவர் அறை, இடம் கொள்ளாத கூட்டமாக திரளத் தொடங்கிவிட்டது. நின்றபடி எல்லாம் கேட்டார்கள் மாணவர்கள்.
அடுத்த அமர்வாக வந்த தமிழியின் ப்ளாக்கர், வோர்டுபிரஸ் விளக்கத்திற்கும் கூட்டம் அலைமோதியது. ஆர்வமாக கேட்டவர்கள், மிகவும் உதவியாக இருந்தது என்றும் சொன்னார்கள். ‘ஏங்க, அவரு, தமிழி பேராசிரியருங்களா? இத்தனை நல்லா எடுக்கிறாரே!’ என்று ஒருவர் என்னிடம் வந்து கேட்டுவிட்டுப் போனார்!
HTML அறிமுகம் கொடுக்க வந்த செந்தழல் ரவி, HTML மட்டுமின்றி ஒரு அடிப்படைக் கணிமை தொடங்கி வலைபதிதல் வரை மிகவும் விரிவாகவே சொல்லிக் கொடுத்துவிட்டார். செல்லாவின் ஒலி ஒளிப்பதிவுகள், கோபியின் எழுத்துரு மாற்றப் பயிற்சி என்று கேன்சலான பிற அமர்வுகளின் நேரமும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ரவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்து கேட்டனர் மாணவர்கள். இடையில் உணவு இடைவேளை எல்லாம் இருந்தும், தலைவர் தொடர்ச்சி விட்டுப் போகாமல் வகுப்பெடுத்ததாக கேள்வி!
(நன்றி சொல்லும் பட்டறை நிர்வாகிகள், மைக் வைத்திருப்பவர் பாலபாரதி,நீலச்சட்டை கண்ணாடிக்காரர் மா.சி)
-------------------------------
அண்ணாச்சி உண்மைத்தமிழனை அறியாதோர் இருக்கமுடியாது, அவர் பதிவர் பட்டறைக்கு பெரிதும் உழைத்தவர், பஞ்சர் ஆன வண்டியை எல்லாம் வேர்வை வழிய மூச்சு வாங்கி தள்ளித்தான் பட்டறையை நடத்த உதவியுள்ளார்.மேற்கொண்டு நீங்களே படிச்சுப்பாருங்கள் அதிகமில்லை ஒரு 5 அல்லது 6 பதிவு கொஞ்சமா 500 பக்கத்தில் தான் எழுதி இருப்பார் :-))
உண்மைதமிழன் அவர்கள் பதிவில்...
இந்த முனையில் இருந்து அந்த முனைவரை வியர்வையில் குளித்தபடியே தள்ளிக் கொண்டு வந்தவன் நேரத்தைப் பார்த்தேன். மணி 10. இனி அவ்வளவுதான்.. ஆட்டோ புடிச்சு 500 ரூபாவுக்கு செலவுதான் என்று நினைத்து காளியப்பா மருத்துவமனை அருகே வந்து சோர்வாக நின்றேன்.
(பட்டறை நடக்கும் போதே என்னா தில்லா குடிக்கிறாங்கப்பா ...ஹி...ஹி அது காப்பி தான்னு சொன்னா நம்பவா போகுதுங்க அப்ரண்டீசுகள்)
---------------------------------------------
பதிவர் ஜே.கேயின் பதிவில் அவரது பட்டறை அனுபவங்களை படித்துப்பாருங்கள்...
ஞாயிறு காலை, சிவக்குமார், பொன்ஸ் ஆகியோர் சில Extension Boxes கொண்டுவந்தார்கள். உண்மைத்தமிழன், தகடூர் கோபி, மற்றும் அதியமான் டெஸ்க்கை சரி செய்து கணினிகளை வரிசைப்படுத்த மிகவும் உதவினார்கள். பின் தான் எல்லா கணினிகளிலும் எ-கலப்பை நிறுவ வேண்டியதாயிற்று. 9 - 9.30 க்குள் 5 முறைக்கு மேல் மின்சாரம் நின்று வந்ததால், கொஞ்சம் கலக்கம் ஆகிவிட்டது.
(இந்த சேப்பு சட்டைக்காரர் யாருன்னு சரியா சொல்றவங்களுக்கு புதிய தலைமுறையின் ஒரு பழைய காப்பி சன்மானமா கிடைக்கலாம் :-))}
------------------------------------------
பதிவர் நந்தா அவர்கள் தனது அனுபவங்களைப்பகிர்ந்துக்கொண்டுள்ளார்.பட்டறை உழைப்பாளிகளில் ஒருவர்.
நந்தா அவர்களின்பதிவில்...
Physically challenged என்று சொல்லப்படுபவர்களில் ஒரு சிலர் வந்திருந்தனர். அவர்களில் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் என்னிடம் சொன்னது, “சார் இங்க பேசுனதை எல்லாம் கேக்க ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா நாங்க பண்றது இது சாத்தியமா?”. நான் அவர்களிடம் சொன்னது, நீங்கள் எழுதிதான் வலைப் பதிய வேண்டும் என்று அவசியமில்லை சார். ஒலிப்பதிவுகளாகவும் பதிவுகளிடலாம். நீங்கள் அதற்கு தயாராயிருந்தால் சொல்லுங்கள், உங்களது பதிவை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இங்கே பலர் இருக்கிறோம் என்று. அந்த அன்பர்கள் எங்களில் ஒரு சிலரின் தொலைபேசி எண்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
ஓசை செல்லா அப்போதைய பல்லூடக விற்பன்னர், நிறைய புகைப்படங்களுடன் ,உடனுக்குடன் பட்டறையை இணையத்தில் ஏற்றினார், பட்டறைப்புகைப்படங்கள் நிறைய காணக்கிடைக்கின்றன.
ஓசை செல்லாவின் பதிவில்...
சந்திப்புக்கு முன் தினம் "தாகசாந்தியில்"தோழர்கள்
அடுத்தநாள் பட்டறையில் சுமார் இரண்டு மணி நேரம் ஓரமாக நின்று வகுப்பெடுக்காமல் பார்வையாளர் கூட்டத்தோடு கலந்து இணைய தொழில்நுட்ப வகுப்பெடுத்து அசத்திய "செந்தழல் ரவி" , (போதையில் இதெல்லாம் சாத்தியமா?) வேலைன்னு வந்த்துட்டா தீயாய் வேலை செய்வாங்க ,ஜாலின்னா பட்டாசா வெடிப்பாங்க அதான் தமிழ்ப்பதிவர்கள்.
மதுவுக்காக யாரும் பதிவர் சந்திப்போ, பட்டறையோ நடத்துவதில்லை, நிகழ்சிக்கு முன்னர், பின்னர், அவரவர் வசதிக்கு நண்பர்களுடன் அளவலாவ ஏதோ ஒரு இடத்தில் சந்தித்து தங்கள் கேளிக்கைகளை வைத்துக்கொள்வார்கள் என்பது கூட புரியாதவர்களுக்காகவே இப்படங்களை இணைத்துள்ளேன் மேலும் படங்கள் ஓசை செல்லாப்பதிவில் உள்ளது.
பி.கு: இப்படங்கள் செந்தழலுக்கோ மற்றவர்களுக்கோ மனவருத்தம் ஏற்ப்படுத்துமாயின் நீக்கப்படும், ஆனால் அனைத்துப்படங்களும் ஓசை செல்லாவின் தளத்தில் உள்ளது,நன்றி!
பதிவர் சத்தியா ,அப்போதே கரைசல் செய்த ஒரு பதிவருக்கு விளக்கமாக பதில் கொடுத்துள்ளார்.
சத்தியா அவர்களின் பதிவில்...
பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார். உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும்
வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால்
கப்பி கய் என்றப்பதிவர் ,பட்டறையின் பின்விளைவாய் ஒரு காமெடி பதிவுப்போட்டுள்ளார் ,படித்து மகிழுங்கள்.
கப்பிகய் பதிவில்...
பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்தி திரைப்பட நடிகர்களும் பதிவெழுத ஆரம்பித்திருப்பதை அறிந்த நம் கோலிவுட் நட்சத்திரங்கள் தாமும் பதிவுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க ஆயத்தமாக வேண்டி வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் டிஸ்கஷனில் இருக்கிறார்கள். ஹீரோவாக நடிக்க ஒரு புது இயக்குனரிடம் கதை கேட்க வரும் சந்தானம் அங்கிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஜோதியில் ஐக்கியமாகிறார்.
#மா.சிவகுமார், தமிழ்மணம் காசி அண்ணாச்சி இன்னும் சிலரின் பதிவுகளையும் தேடிப்பார்த்து அவர்கள் அனுபவங்களையும் இடலாம் என நினைத்தேன் , சிக்க மாட்டேன்கிறது ,சீக்கிரம் அப்டேட் ஆக இணைக்கிறேன்.மேலும் பலர் விடுபட்டிருக்கலாம் அனைத்தும் நேரமின்மைக்காரணமே எனவே மன்னிக்கவும்.
#பதிவர் சந்திப்பு என்பது சும்மா சந்தித்து கதைத்துப்போக என வரலாறு தெரியாமல் பலர் பேசிக்கொண்டு இருப்பதால் "வரலாறு முக்கியம்" பதிவரே என தொகுத்து வெளியிட்டுள்ளேன், இதிலும் அரசியல் செய்ய யாரேனும் நினைத்தால் அடியேன் பொறுப்பல்ல!
நாளை 22- 8- 2007 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். 1639 இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ் டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்ப நாயக்கர் என்ற அக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அந்நாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.
ஹி..ஹி சென்னை தினத்திற்கு தனியே பதிவு போட கொஞ்சம் சோம்பல் எனவே முன்னர் போட்ட பதிவுக்கு ஒரு விளம்பரம் :-))
********
பிடித்தால் படியுங்கள்:பாலகுமாரன் வலைப்பதிவு.
எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு காலத்தில் இதயம்பேசுகிறது, குங்குமச்சிமிழ், பாக்கெட் நாவல்,மாலைமதி போன்ற பத்திரிக்கைகள் மற்றும் மாத நாவல் புத்தகங்களின் அமுத சுரபியாக ,காதலும் வாழ்வும் கலந்த நாவல்களையும், அவ்வப்போது உடையார் என சரித்திரமும் எழுதி , சுஜாதா போன்ற அறிவியல் கலந்து எழுதும் ஜனரஞ்சகமான எழுத்தாளார்களுக்கு ஈடுக்கொடுத்து ஓடிய இரும்பு எழுத்துக்குதிரை.
அவரது இரும்புக்குதிரை, மெர்க்குரிப்பூக்கள்,பயணிகள் கவனிக்கவும் போன்ற நாவல்களை படித்து அடடா என வியந்த விவரம் அறியாக்காலம் எல்லாம் கடந்து விட்டாலும் இன்றும் படிக்க தகுதியான நாவல்களே.
அவரது அனுபவங்களை தொகுத்து "பாலகுமாரன் பேசுகிறார்" என்ற பெயரில் வலைப்பதிவாக அவரது அனுமதியுடன் ஒரு வாசகர் வெளியிட்டுக்கொண்டிருந்தார் தற்சமயம் புதிதாக எதுவும் அதில் காணக்கிடைக்கவில்லை என்றாலும், பழையப்பதிவுகளே படிக்க சுவாரசியமாக இருக்கின்றன, ஆன்மீக கேள்விப்பதில்,சினிமா, அவரது எழுத்தனுபவம் என நிறையக்காணக்கிடைக்கிறது. தற்சமயம் அமரர்.யோகி.ராம்சுரத்குமார் (விசிறி சாமியார்) அவர்களின் சீடராக முழுக்க ஆன்மீகத்தில் பாலகுமாரன் அவர்கள் மூழ்கிவிட்டார் ,புதிதாக படைப்புகள் எதுவும் எழுதுவதில்லை.
தனக்கு கதை எழுத சொல்லித்தந்ததே சுஜாதா தான் என தன்னை அவரின் சீடர் என வெளிப்படையாக ஒருப்பதிவில் பகிர்ந்திருக்கிறார்
தற்சமயம் தமிழ்மணம் போன்ற பிரபலதிரட்டிகளில் குப்பையான பதிவுகளே இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால், இது போன்ற சுவாரசியமான பதிவுகள் பழைய சரக்காக இருந்தாலும் ஆயிரம் மடங்கு மேல் எனவே வாசித்து தான் பாருங்களேன்!
********
ஒளிமயமான எதிர்காலம்.
மகாராஷ்டிராவில் Phaltan என்ற இடத்தில் உள்ள Nimbkar Agricultural Research Institute (NARI) என்ற தன்னார்வ அமைப்பு கிராமப்புற இந்தியாவிற்கு தேவையான விவசாயம், சுகாதாரம்,மாற்று எரிப்பொருள் என பல வகையிலும் ஆய்வுகள் செய்து புதிய கண்டுப்பிடிப்புகளையும், முறைகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு செலவில்லா/குறைவான செலவில் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்ய உதவி வருகிறது.
அவ்வமைப்பினை சேர்ந்த பொறியாளார் -கண்டுப்பிடிப்பாளர் அனில் ராஜ்வன்ஷி புதிதாக ஒளிக்கொடுக்கும் அதே சமயத்தில் சமைக்கவும் பயன்ப்படும் அடுப்பு என ஒரு மண்ணெண்ணை விளக்கினை கண்டுப்பிடித்துள்ளார்.
கவுண்டமணிப்புகழ் பெட்ரோமாக்ஸ் விளக்கே தான் ஆனால் அதன் மேல் புறம் வெளியேறும் வெப்பத்தினை பயன்ப்படுத்தும் "வெப்பக்கடத்தியை" அமைத்து அதன் மூலம் அடுப்பாக சமைக்கவும் பயன்ப்படுத்துமாறு "விளக்கடுப்பு"(lanstove' (lantern combined with cook stove)வடிவமைத்துள்ளார்கள்.எனவே மின்சாரம் ,கேஸ் என இல்லாதவர்கள் வீட்டில் விளக்கெறியும் போதே சமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் எரிபொருள் நிறைய மீதம் ஆகும், கிராமப்புற மக்களுக்கு செலவும் குறையும்.
இப்போது தமிழ்நாட்டில் உள்ள மின் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மேலும் விலை எப்போது வேண்டுமானாலும் ஏற்றப்படலாம் எனும் நிலையைக்காணும் பொழுது நாமும் ஒரு "விளக்கடுப்பு" வாங்கி வைத்துக்கொள்வது லாபகரமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
*******
பாட்டொன்று கேட்டேன்.
மீண்டும் ரியல் தல "சூப்பர் ஸ்டாரின்'" எளிமையான நடனத்துடன் ,எப்பொழுதும் அசத்தும் ஒரு பாடலின் காணொளி.இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் இப்பாடல் இடம்ப்பெற்றுள்ளது.
-----------------------
பின்குறிப்பு;
தகவல் மற்றும் படங்கள் உதவி,
கூகிள்,யூடியூப், cnn-ibn news. இணைய தளங்கள் நன்றி!
சமீபகாலமாக உலக அளவில் மீண்டும் 3டி படங்கள் அதிகம் வர ஆரம்பித்து இருக்கின்றன, இதெல்லாம் திரையரங்கிற்கு வர தயங்கும் மக்களை வரவழைக்க செய்யப்படும் "கவர்ச்சி தந்திரங்களே" ஆகும். மேலும் பல பழைய 2டி படங்களும் 3டிக்கு மாற்றும் வேலைகளும் நடக்கின்றன,அத்தகைய முயற்சிகள் தமிழிலும் சூப்பர் ஸ்டாரின் "மெஹா ஹிட் படமான "சிவாஜி" மூலம் நடப்பெறுகின்றது. இப்பதிவில் 2டி யில் இருந்து 3டிக்கு மாற்றம் செய்வது எப்படி நடக்கிறது எனக்காண்போம்.
இவ்வாறு எடுக்கப்படும் பல 3டி படங்கள் உண்மையில் சொல்லப்போனால் உண்மையான 3டி படங்கள் கிடையாது, பலப்படங்கள் வழக்கம் போல 2டியில் எடுத்துவிட்டு பின்னர் போஸ்ட் புரொடெக்ஷனில் கணினி உதவியுடன் 3டி ஆக ரெண்டர் செய்யப்பட்ட படங்களே.
நேரடியாக 3 டி இல் எடுக்கும் போது இரண்டுக்கேமரா உதவியுடன் சற்றே மாறுப்பட்ட தூரத்தில் ஒரே காட்சியை எடுத்து ஒரு டெப்த் உருவாக்கி பின்னர் இணைத்து முப்பரிமாணக்காட்சியாக்குவார்கள். இப்படி அனைத்துகாட்சியும் படமாக்குவது கடினம், செலவும், நேரமும் ஆகும் என்பதால் முக்கியமான காட்சிகளை "உண்மையான ஸ்ட்டீரியோ ஸ்கோப்பில்" படமாக்கி கொண்டு மற்றக்காட்சிகளை போஸ்ட் புரோடக்ஷனில் 3டி ஆக மாற்றுவார்கள், இதனை டிஜிட்டல் 3டி என்பார்கள்.
அவதார், டின் டின் போன்ற 3 டியில் எடுக்கப்பட்ட படங்களிலேயே முழுக்க ஸ்டீரியோ ஸ்கோபிக் படப்பிடிப்பு கிடையாது.பெருமளவு டிஜிட்டல் 3டி யில் கன்வெர்ஷன்ன் செய்யப்பட்டதாகும்.
இப்படி செய்ய பல மென்பொருள்கள் இருக்கிறது, மாயா- ஃப்ளேர், அடோப் ஆஃப்டெர் எபெக்ட்ஸ், போன்றவற்றிலும் செய்ய முடியும்.
வழக்கமான படத்தினை 3டி ஆக இரு வகையில் செய்வார்கள், முழுக்க தானியங்கியாக, அதாவது முழுப்படத்தினையும் கணினியில் உள்ளீடு செய்து விட்டால் அதுவே 3டி ஆக மாற்றிவிடும், இதில் முழுத்தரமும் இருக்காது என்பதால், பகுதி மனிதர்கள் எடிட் செய்து தேவையான தரம் கொண்டுவருவார்கள்.
மாயா-ஃப்ளேரில் தேவையான எடிட்டிங் செய்து 2டி இல் இருந்து 3டி ஆக மாற்றும் காணொளி;
ஒரே படத்தின் பல அடுக்குகளை கொண்டு அல்லது டெப்த் ஆப் ஃபீல்ட் உருவாக்கி என 3டியாக மாற்றலாம்.
2டி + டெப்த் பிளஸ் என இதனை சொல்வார்கள், இன்னும் சில முறைகளைக்கொண்டும் வழக்கமான 2டி காட்சியை 3டிக்காட்சியாக மாற்ற முடியும். இப்படித்தான் டைட்டானிக் படம் 3டி ஆக மாற்றப்பட்டது.
இப்பொழது கணினிகளின் வேகமும், மென்ப்பொருளின் திறனும் வெகுவாக முன்னேறிவிட்டதால் வெகு எளிதாக 2டி யில் இருந்து 3டி ஆக மாற்ற முடியும்.
எல்.ஜி லைவ் 3டி சினிமா மேஜிக் எனப்படும் 3டி தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் வழக்கமான அனைத்து தொ.கா நிகழ்ச்சிகளையுமே 3டி யில் உடனே மாற்றிக்காட்டும்., மிக எளிய முறையில் செயல்ப்படும் அமைப்பு என்பதால் கொஞ்சம் பிசிறடிக்கலாம், ஆனால் இத்தொலைக்காட்சியில் 3டி படங்கள் நன்கு தெரியும். விலை 40,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.
இந்துஸ்தான் டைம்சில் வந்த எல்ஜி. 3டி தொ.காவின் விமர்சனக்கட்டுரை;
2D to 3D conversion feature:
Let's say you are a Big B fan and your favourite movie is Deewar. Let's also add your favorite dialogue to this "Tumhara pass kaya hai.... mere pass ma hai". Now you can transform this into a 3D experience. LG 3D Cinema Smart TV allows conversion of existing pictures into 3D mode quite easily. The conversion feature is easy. Big B has bashed the baddies it's now time to feel the power of his punch. You can increase the "depth" feature to 20 (maximum) for maximum 3D effect. For the dialogues you could do 3D sound zooming. It's a lot of power in your hands in terms of conversion to 3D.
நல்ல கிராபிக்ஸ் கார்ட், நினைவகம், வேகமான சிபியு இருந்தால் யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தே 2டி இல் எடுக்கப்பட்ட படத்த்இனை 3டிக்கு மாற்றலாம், அவ்வாறு 2D to 3D Conversion Test Using Xilisoft 3D Video Converter கொண்டு மாற்றியதை ஒருவர் யூடூயூபில் வெளியிட்டுள்ளார், நீங்களும் காணுங்கள்.
வீடியோ டைம் லைனில் 3டி என இருப்பதை அழுத்திவிட்டு , 3டி கண்ணாடி அணிந்து பார்த்தால் 3டியில் தெரியும்.
மேலும் 3டி என இருப்பதில் ஆப்ஷன் பகுதியில் பார்க்கும் முறையை கண்ணாடி இல்லாமல் என மாற்றியும் பாருங்கள், இரண்டு தனித்தனி காட்சிகள் பக்கம்,பக்கமாக காட்டும்.
இதை எல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லை மென்ப்பொருளே கொடுக்கப்பட்ட காட்சியினை இரண்டுக்காட்சிகளாக மாற்றி தேவையான டெப்த்தினை உருவாக்கி 3டி ஆக காட்டும்.
தற்பொழுது தமிழில் மிகப்பெரும் வெற்றிப்பெற்ற சூப்பர் ஸ்டாரின் "சிவாஜி" படத்தினை 3டியில் மாற்றுவதாக செய்திகள் வருகின்றது, ஆனால் வழக்கம் போல "ரொம்பக்கஷ்டப்பட்டு" மாற்றுவதாக பில்ட் அப் கொடுக்கிறார்கள், மேலும் அவர்கள் சொல்வது போல பிரேம் ,பிரேம் ஆக கட் செய்தெல்லாம் 3டி ஆக்க மாட்டார்கள், அப்படி செய்ய முதலில் புளு மேட்/கிரீன் மேட்டில் எடுத்தக்காட்சியாக இருக்க வேண்டும். மேலும் அப்படி எல்லாம் செய்யத்தேவையே இல்லாதவாறு கணினி மென்ப்பொருள்களின் அல்காரிதம் அனைத்தினையும் பார்த்துக்கொள்ளும்.
மொத்தப்படத்தினையும் கணினியில் உள்ளீடு செய்துவிட்டு தேவையான இடங்களில் பேராமீட்டர்களை நன்கு கணித்து எந்தக்காட்சி, பொருள் முன்னால் நீள வேண்டும், பேக்ரவுண்ட் எப்படி இருக்க வேண்டும் என சரிப்பார்த்தால் போதும், அல்லது சில அளவீடுகள் கொடுத்து முழுதாக கணினியே மாற்றம் செய்யவும் வைக்கலாம்.
ஒரு தொலைக்காட்சியில் லைவ்வாக மாற்றம் செய்யும் போது கணினியில் செய்ய ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் என்பது புரிந்திருக்கும், நல்ல தரமாக காட்சி வரவே கொஞ்சம் மெனக்கெட வேண்டும் மற்றப்படி மண்டை உடைக்கும் சமாச்சாரமில்லை 2டி யில் இருந்து 3டிக்கு மாற்றுவது.
இப்பொழுது பல லேப்டாப்புகளும் 3டி வசதியுடன் சந்தையில் கிடைக்கிறது, ஏசர், சோனி வயோ, டெல் என பல பிராண்டுகளும் கொண்டு வந்துவிட்டன.நாம் 2டி அல்லது 3டி எனமாற்றி வைத்துக்கொண்டு பார்க்க வேண்டியது தான். 3டியில் எடுக்கப்பட்டவை நல்ல தரமான காட்சியுடனும் 3டி யில் மாற்றியது கொஞ்சம் சுமாராகவும் இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
-----------
பின்குறிப்பு;
தகவல் மற்றும் படங்கள் உதவி,
கூகிள்,யூடுயூப்,இந்துஸ்தான் டைம்ச் இணைய தளங்கள். நன்றி!