Sunday, February 12, 2012

மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .



மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .




எப்போ வரும் எப்போ போகும் தெரியாது, வர வேண்டிய நேரத்தில் வராது, ஆனால் வரும் அது யார் ? ஹி..ஹி சூப்பர் ஸ்டார் அல்ல அது மின்வாரிய மின்சார கண்ணா மின்சாரம் தான்.

முன்னர் அறிவிக்கப்படாமல் 4-5 மணிநேரம் எல்லாம் மின் தடை செய்தார்கள், இப்போ தெம்பாக 8 மணிநேரம் மின் தடை சொல்லிட்டாங்க. உலகம் முழுக்க புவி வெப்பமாதல் தடுக்க 5 நிமிடம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வாங்க அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை ஆனால் தமிழக அரசு தினசரி 8 மணிநேரம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க கடுமையாக போராடி வருகிறது என்று சொன்னால் மிகையல்ல!


அனேகமாக இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபெல், யுனெஸ்கோ சுற்றுசூழல் விருது, கிரீன் பீசின் பசுமை நோபெல் பரிசெல்லாம் தமிழக முதல்வருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.

தமிழக மக்களும் புவிவெப்பமாதலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும், அப்படியும் சிலர் பதிவெழுத மின்சாரம் வேண்டுமே என தலையை சொறியக்கூடும் அவர்களைப்போன்ற சுயநல கிருமிகளுக்கு உதவவே இப்பதிவு..ஹி..ஹி ஏன் எனில் நானும் ஒரு சுயநலக்கிருமி ஆச்சே :-))

மின்வெட்டை குறுக்கு வெட்டாக வெட்டி புறவழிக்காண சில ,பல மக்கள் தலைக்கீழ் மின்மாற்றி சேமக்கலன் (இன்வெர்ட்டர் தானுங்க)வாங்கக்கூடும் , அப்படி வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்.

இனி நீட்டி முழக்காமல் த.சே என சுருக்கமாக சொல்வோம் , இது பல மின் திறன்களில் கிடைக்கிறது. ஆரம்பம் 600 வா.ஆ. பின்னர் 800va,1200va, 1500 vaஎன காசுக்கு ஏற்ப பல வண்ணங்களில், செயல்முறைகளில், பல நிறுவனங்களின் பெயர்களில் கிடைக்கிறது.

600 , 800 வா.ஆ எல்லாம் இப்போதைய நமது தேவைக்கு காணாது. குறைந்தது 1200 வா.ஆ திறனில் வாங்குவதே சிறந்தது. சில ஆயிரங்கள் மட்டுமே வித்தியாசம், 800 வா.ஆ ரூ 12000 எனில் 1200 வா.ஆ ரூ 15000 வரும்.

பிரபலம் அல்லாத நிறுவன தயாரிப்புகள் மலிவாக இருக்க கூடும், ஆனால் நம்பக தன்மை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.அமரன், கிராம்ப்டன் கிரீவ்ஸ், மஹிந்திரா, மைக்ரோ டெக் எல்லாம் நான் சொல்லும் விலை வரிசையில் கிடைக்கின்றன.


மின்னணு , தூய முழுஅலை தலைகீழ் மின்மாற்றி சேமக்கலன் (pure sinwave digital inverter)வாங்குவதே நல்லது.அப்போது தான் கணினிப்பயன்பாட்டுக்கு உதவும். இதனை இல்ல தடையில்லா மின்வழங்கி (home ups) என்று சொல்வார்கள்.இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யும் போதே ,த.சே இணைப்புக்கு என தனியே ஒரு மின்கம்பி பொருத்திவிடுகிறார்கள். எனவே இணைப்புக்கொடுக்கவேண்டிய சாதனத்திற்கு மட்டும் இணைப்பு வழங்கிவிடலாம் ,மீண்டும் புதிதாக மின் கம்பி இணைப்பு செய்ய தேவை இல்லை.

பொதுவாக ஒரு த.சே வில் ஒரு மின் ஏற்றி அமைப்பு(charging unit), மின்சாரம் சேமிக்க மின்சேமகலம்(12v battery) என இரண்டு அமைப்பு இருக்கும்.

மின் ஏற்றி அமைப்பு (charging unit) என்பது , மாறு மின்சாரத்தை நேர் மின்சாரம் ஆக முதலில் மாற்றி மின் சேமகலத்தில் சேமிக்கும் ,பின்னர் மின் தடையின் போது நேர் மின்சாரத்தை(டி.சி) மீண்டும் மாறு மின்சாரம் (ஏ.சி)ஆக மாற்றி உபகரணங்களுக்கு வழங்கும்.
எனவே தான் தலைகீழ் மின்மாற்றி சேமகலன்(இன்வெர்ட்டர்) என அழைக்கப்படுகிறது.ஒரு த.சே வின் திறன் 800வா.ஆ எனில் அதே அளவுக்கு மின்னேற்றம் செய்யும், அதே அளவுக்கு மின்சக்தியையும் உபகரணங்களுக்கு வழங்கும்.

ஒரு எளிய த.சே மின்சுற்று திட்ட விளக்க படம்.



அப்படிப்பட்ட எல்லா த.சேக்களும் ஒரே போல கட்டமைக்கப்படுவதில்லை. சிலவற்றில் இயங்கா வெப்ப நீக்கி (passive heat removal), இயங்கும் வெப்ப நீக்கி(active heat removal), என எல்லாம் இருக்கும்.த.சே செயல்ப்படும் போது அதிகம் வெப்பம் உருவாக்கும் எனவே வெப்ப நீக்கி அமைப்பு /குளிர்விக்கும் அமைப்பு முக்கியம், இல்லை எனில் மின்சுருள் புகை விடும்.

இயங்கும், இயங்கா வெப்ப நீக்கி என இரண்டும் உள்ளதில் வெப்பம் நீக்க ஒரு வெப்ப தொட்டி(ஹீட் சின்க்) யுடன் ஒரு குளிர்விக்கும் மின்விசிறியும் இருக்கும்.இரண்டும் உள்ளதே நல்லது அப்போது தான் எப்போதும் குளிர்ச்சியாக உங்கள் த.சே வேலை செய்யும்.

இப்போது மின் சேமகலன்(பேட்டரி) பற்றிப்பார்ப்போம். எல்லாமே 12வோல்ட் தான் ஆனால் அவற்றின் மின்னோட்ட திறன்= ஆம்பியர் வேறுபடும். அதைப்பொறுத்தே ஒரு த.சே எத்தனை மணி நேரம் மின்சாரம் வழங்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.

சில த.சே விலைக்குறைவாக இருக்கும் காரணம்  குறைவான மின்னோட்ட திறன் கொண்ட மின்கலத்தை கொடுப்பார்கள்.

ஒரு 800 வா.ஆ த.சே வுடன்
100 ஆம்பியர் /ஹவர் மின்கலம் இருப்பது ஆரம்ப நிலை.மலிவானதும் கூட.

அடுத்து 120 ஆ/ஹ, 150 ஆ/ஹ என்று போகும். அதிகப்பட்சமாக 180 ஆ/ஹ , 12 வோல்ட் தான் சந்தையில் கிடைக்கிறது.

800 வா.ஆ க்கு 120 ஆ/ஹ மின்கலம் பொறுத்தமானது. அதிக திறனில் சேர்த்தால் மின்சாரம் ஏற அதிக நேரம் பிடிக்கும்.

1200 வா.ஆ த.சேவுடன் 150 ஆ/ஹ மின்கலம் என்ற அளவில் வாங்குவது நல்ல மின்வழங்கும் திறனுடன் இருக்கும்.


*1)வா.ஆ= வால்ட், ஆம்பியர்,

2)ஆ/ஹ= ஆம்பியர்/ஹவர்

நாம் வாங்கும் த.சே வில் விரைவு மின் ஏற்றி (குயிக் சார்ஜ்)மற்றும் வழக்கமான மின் ஏற்றி(நார்மல் சார்ஜ்) என இரண்டும் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு 12 வோல்ட், 150 ஆ/ஹ உள்ள மின்கலத்தின் மிந்திறன் என்ன எனப்பார்ப்போம்.

வாட்ஸ்= ஆம்பியர் Xவோல்ட்
=150 X12
=1800 வாட்ஸ்.

எனவே 1800 வாட்ஸ் திறனுக்குள் நாம் மின்சாதனங்களை த.சே மூலம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். குறைவான மின் திறன் உள்ள சாதனங்களைப்பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் கிடைக்கும்.

ஒரு இல்லத்தின் சராசரி மின் உபகரணப்பயன்பாட்டு தேவை:

குழல் விளக்கு -4= 60வாட்ஸ்* 4= 240 வாட்ஸ்

மின்விசிறி -4= 80 வாட்ஸ்* 4 = 320

கையடக்க குழல் விளக்கு--4 = 30 வாட்ஸ் *4= 120

ஒரு 21 இஞ்ச் குழாய் தொ.கா(inch CRT T.V) =100-120 வாட்ஸ்

ஒரு 14 இஞ்ச் மடிக்கணினி=25 வாட்ஸ்
----------------------
மொத்த மின்நுகர்வு =825 வாட்ஸ்/ஹவர்அப்படி எனில் ஒரு 1200 வா.ஆ, 150 ஆ/ஹ ,12 வோல்ட் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் மூலம் மின்சாரம் கிடைக்கும் கால அளவு=1800/825=2.18மணிநேரம்.

எனவே குறைவான மின்சாதனம் பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும். 8 மணிநேரத்திற்கு பயன்ப்படுத்த வேண்டும் எனில் சுமார் 200 வாட்ஸுக்குள் மின்சாதனங்களைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரி மின்கலத்துக்கு மின்சாரம் ஏற ஆகும் காலம் எவ்வளவு இருக்கும்.?

ஒரு முனை மின் இணைப்புள்ள (சிங்கிள் பேஸ்)வீடு எனில்,

220 வோல்ட், 5 ஆம்பியர் மின்சாரம்,

220* 5 =1100 வாட்ஸ்,

காலம்=1800/1100
             =1.63

எனவே 1800 வாட்ஸ் மின்கலம் மின்சாரம் ஏற =1.63 *60 நிமிடங்கள்
= 98 நிமிடங்கள் ,
அதாவது 1 மணி 38 நிமிடங்கள் ஆகும்.

எல்லா தலைகீழ் மின்மாற்றி சேமகலத்துடனும் கொடுக்கப்படும் மின்சேமகலம் பராமரிப்பு தேவையில்லாத அடைக்கப்பட்ட மின்கலம் என்றே சொல்வார்கள் ஆனால் அப்படியல்ல, அவை யாவும் மிக குறைவான பராமரிப்பு மின்கலங்களே (ultra low maintanance sealed battery)எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை கலத்தில் நீர் அளவு பார்த்து வாலைவடி நீர் (distilled water)ஊற்ற வேண்டும் இல்லை எனில் மின்கல சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு வீண் ஆகிவிடும்.


பின்குறிப்பு:

# பட உதவி கூகிள் படங்கள்,நன்றி!

# மொழிமாற்றம், இன்ன பிற தகவல்களில் பிழை இருக்கலாம் :-))

சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.

Saturday, February 11, 2012

இரண்டு சம்பவங்கள்!





            இரண்டு சம்பவங்கள்!

(பட உதவி :கூகிள் படங்கள்,நன்றி)

சமிபத்தில் செய்தித்தாள்களிலும், பதிவுகளிலும் இரண்டு சம்பவங்களைப்பற்றி பெருங்கவலையுடன் பேசப்பட்டது, படுகின்றது. உண்மையில் கவனிக்கப்படவேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒன்றே அவை , ஆனால் அச்சம்பவங்களின் அடிப்படையை யாரும் நோக்காமல் இப்போ காலம் கெட்டுப்போச்சு, முன்னைப்போல இல்லை, எல்லாம் கலிகாலம் என்பதாகவே ஊடகங்களின் பேச்சும் , மக்களின் பார்வையும் இருப்பதாகவே எனக்கு படுகின்றது.

சம்பவம் ஒன்று:பலிவாங்கிய இந்தி!

சென்னைப் பாரி முனைப்பகுதியில் உள்ள ஒரு தனியார்ப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் அவரது இந்தி ஆசிரியை அவர்களை ஒரு இருபது ரூபா கத்தியினால் 7 முறை குத்திக்கொன்றுவிட்டார்.

காரணம் இந்திப்பாடத்தில் குறைவாக மதிப்பெண் வாங்கியதாக பெற்றோருக்கு தகவல் குறிப்பு/ முன்னேற்ற அட்டை/புத்தகத்தில் குறிப்பு எழுதி அனுப்பிவிட்டார் ஆசிரியை.

இதில் யார் குற்றவாளி , மாணவனா, ஆசிரியையா, பெற்றோரா, பள்ளியா , சமூகமா?

என்னைப்பொருத்தவரை பெற்றோரே முதன்மையான குற்றவாளி என்பேன்!

ஏன் எனில் நமது பள்ளிக்கல்வியில் தமிழ் தவிர அனைத்துப்பாடங்களும் அந்தந்த வகுப்புக்கு கட்டாயப்பாடம் ஆகும். தமிழ் அல்லது வட்டார மொழி என்பது மட்டும் விருப்ப பாடம் ஆகும்.

தமிழ் நாட்டில் மும்மொழிக்கல்வி இல்லை. பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் ,வெளியில் தமிழ்ப்பேசுகிறோம் அதுவே போதும் , அதை வேறு தனியாக படிக்கனுமா, அதுக்கு புதுசா ஒரு மொழி கற்றுக்கொண்டால் எதிர்க்காலத்துக்கு நல்லது என நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெரும்பாலும் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் நிலை இதுவே.

எனவே இப்படி ஆசைப்படும் பெற்றோர்களை கவர பல தனியார்ப்பள்ளிகளும் விருப்ப மொழிப்பாடமாக தேர்வு செய்ய தெலுங்கு, இந்தி , உருது, சமச்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மன், எனப் பல மொழிகளும் வைத்துள்ளார்கள்.எவ்வளவுக்கு எவ்வளவு பிற மொழி பயிற்றுவிக்க வசதி இருக்கோ அவ்வளவு பெரியப்பள்ளி அது :-))

தற்கால கல்விச்சூழலில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனால் தனது விருப்ப மொழிப்பாடம் எது என்பதை தீர்மானிக்கும் உரிமை இல்லாதவனே.
தனது புத்திரனை பன்மொழி வித்தகனாக உருவாக்க ஆசை அல்லது பேராசைப்பட்ட ஒரு பெற்றோர், தமது மகனுக்கு எது எளிதில் வரும் என்பதை மறந்து விட்டு அந்நியமான இந்தியை படிக்க திணிக்க ஆசைப்பட்டதின் விளைவே , அவனை இளங்கொலைக்காரான் ஆக்கிவிட்டது.

இப்போது பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் எல்லாம் வீட்டுக்கு அஞ்சலட்டை மூலம் மாதம் ஒரு முறை மாணவரது கல்வி, வகுப்பு அறை நடவடிக்கை குறித்து அனுப்பிவிடுகிறார்கள், மேலும் ஒரு சிறிய புத்தகம் போட்டு நடவடிக்கை, மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டிய தகவல் என எழுதி மாணவரிடம் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். அதில் கையொப்பம் வேறு பெற்றோர் இட்டு அனுப்ப வேண்டும், சந்திக்க சொல்லி தகவல் இருந்தால் போய்ப்பார்க்க வேண்டும்.

இது ஏன் எனில் பள்ளியில் மாணவரது செயல்ப்பாடு, முன்னேற்றம் குறித்து பெற்றோர் உடனக்குடன் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே.இதுப்போல கிடைக்கும் தகவலின் அடிப்படையில் பெற்றோர்கள் மாணவருடன் பேசி அவரது பிரச்சினை, விருப்பம் என்ன எனக்கேட்க வேண்டும். அது தான் தகவல் அளிக்கும் முறையின் நோக்கமே?

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது, இந்தியில் தேர்வாகவில்லை, குறைவான மதிப்பெண் என குறிப்பு வந்தால், அம்மாவோ/அப்பாவோ பெல்ட், ஸ்கேல் , துடைப்பக்கட்டை இன்ன பிற வஸ்துகளைக்கொண்டு நாலு விளாசு விளாசிவிட்டு, எப்போ பாரு கார்ட்டூன் டீவி, விளையாட்டு, ஒழுங்கா படிக்க துப்பில்லைனு வசவு கூடவே பக்கத்துவிட்டு அருணைப்பாரு , உன் வயசு தான் கிளாஸ் ஃப்ர்ஸ்ட் வரான்னு அவங்க அம்மா என்னா பெருமையா சொல்லிக்கிறாங்க என்று நீட்டி முழக்கி இன்னும் நாலுப்போடும் பெற்றோரே மிக அதிகம்!

இப்படி பெற்றோரிடம் உதையும் , திட்டும் வாங்கிய பிறகு மாணவனுக்கு பெற்றோர் மீது வெறுப்பு வரும் ஆனால் காட்ட முடியாது, அதை விட ஒப்பீட்டுக்கு சொல்லப்படும் பக்கத்து விட்டு பையன் மீது இன்னும் வெறுப்பு வரும் :-))

பள்ளி மேலும் கல்வி மேலும் வெறுப்பு வரும், கடைசியாக இதுக்கெல்லாம் காரணம் இந்த வாத்தியார் தானேனும் வெறுப்பு , கோவம் வரும் .

இது போன்ற மனச்சூழலுக்கு ஆளாகாத மாணவர்களே இல்லை எனலாம், 90 சதவீத மாணவர்களுக்கு இது போன்ற மன அழுத்தம் வருகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு என்ன செய்வது எனத்தெரியாமல் அப்படியே வாழ பழகிக்கொள்கிறார்கள்.

மேலும் இத்தகைய நெருக்கடி முன்னர் எல்லாம் 10 ஆம் வகுப்புக்கு பின்னர் தான் வரும் ஆனால் இப்போது முன்னரே 9 ஆம் வகுப்பிலேயே வருகிறது,ஏன் ?எல்லாம் பெற்றோரின் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பும், அதனை பயன்ப்படுத்தி பணம் செய்ய துடிக்கும் தனியார் கல்வி நிலையங்களின் போக்குமே காரணம் ஆகும்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர்ப்பணி என்பதும் சேவை என்ற நிலை மாறி தொழில் என்றே ஆகிவிட்டது. தனித்தனியே கவனம் செலுத்தி குறைக்கேட்டு பாடம் நடத்துவது எல்லாம் வழக்கொழிந்து விட்டது. பாடம் நடத்துதல், சிலபஸ் முடித்தல், தேர்வு வைத்தல் என ஒரு சடங்கு மட்டுமே பள்ளியில் ஒரு ஆசிரியரின் பணியாகப்பார்க்கப்படுகிறது.அதுவே நிர்வாகத்தின் குறிக்கோளும் கூட. ஒரு மாணவரின் மேம்பாடு , ஒழுக்கம் என்பது பெற்றோர்களின் மீதே மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனை எத்தனைப்பெற்றோர்கள் உணர்ந்த்திருப்பார்கள்? பெரும்பாலானா பெற்றோர்களின் எண்ணம் எப்படி எனில் நல்ல பள்ளியில் சேர்த்து இருக்கேன் , இவன் வயசுப்பசங்க எல்லாம் நல்லாப்படிக்கும் போது இவனுக்கு என்னக்கேடு என்றே நினைப்பார்கள்.

புரியாத ஒரு மொழியை ஏக் காவ் மே ஏக் கிசான் ரக தாதானு படிறா என்று சொன்னால் எப்படிப்படிப்பான்? அவனா எனக்கு இந்தி விருப்ப பாடமாக எடுத்துக்கொடுனு கேட்டான்,இல்லையே! சரி இந்தில தள்ளியாச்சு, குறைவா மதிப்பெண் வாங்குவதாக தெரிந்தால் என்ன செய்து இருக்க வேண்டும் , தமிழை விருப்ப மொழியாக மாற்றிக்கொடுத்து இருக்கவேண்டும் .அல்லது ஒன்றும் பெருசா மார்க் வாங்க வேண்டாம் இந்தில பாஸ் ஆகிற அளவுக்கு படிச்சா போதும்னு சொல்லி இருக்கனும் பெற்றோர். ஆனால் அப்படி செய்ததாக தெரியவில்லை.

இந்த இடத்தில் பள்ளி நிர்வாகம்/ ஆசிரியர் என்ன செய்திருக்க வேண்டும் , உங்கள் மகனுக்கு இந்தி கற்பதில் சிரமம் இருக்கு எனவே தமிழுக்கு மாற்றி விடுங்கள் என சொல்லி இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவங்க கற்பிக்கும் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்து, விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் தொடர்ந்து இருக்கிறார்கள்.

வீட்டிலும் புரிந்துக்கொள்ளவில்லை, கல்வி நிலையத்திலும் புரிந்துக்கொள்ளவில்லை.மனதில் ஆத்திரமும் வெறுப்பும் மண்டியவனுக்கு பலி ஒரு  அப்பாவி ஆசிரியை.

ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் கல்வியால் ஏற்படும் மன அழுத்தம் ,விரக்தியால் பெரும்பாலும் என்ன செய்வான் எனில் , பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடுவான், அல்லது வீட்டில் பள்ளிக்கு செல்லமாட்டேன் என அடம்பிடிப்பான். அதிக பட்சமாக வீட்டை விட்டு ஓடி விடுவான்(ஹி..ஹி..சொந்த அனுபமுண்டு, ஒரு தபா ஓடிப்போய் வந்திருக்கேன்).

தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் கூட அவ்வயதுக்கு மீறிய செயல் எனும் போது கத்தி வாங்கி ஆசிரியையை கொலை செய்கிறான் எனில் இது போன்ற சிந்தனைகள் எப்படி அவனுக்குள் விதைக்கப்பட்டிருக்கும்.(நான் படிக்கிர காலத்தில் இப்படி நினைத்திருந்தால் ஒரு பத்து பேராவது போய் சேர்ந்திருப்பாங்க).

மேலும் சென்னையில்  பெரும்பாலான மாணவர்கள்/இளம் சிறார்கள் அவர்களை விட பெரியவர்களுடன் நட்பு வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் பேசு மொழியில் பெரும்பாலும் ங்கோத்தா, பாடு, போடுறா அவன , தூக்கிடுவேன் என்பதே அதிகம் தென்படும்.இது வட சென்னைப்பகுதிகளில் மிக அதிகம்.புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஆனந்தபவன் அருகில் ஒரு மேநிலைப்பள்ளி இருக்கிறது காலையில் போனால் , தெரியும் ,இவர்கள் எல்லாம் மாணவர்கள் தானா என்று கேட்பீர்கள்?


பல இளஞ்சிறார்கள் சவகாச தோஷம் , சினிமா,இணையம் என பிஞ்சில் பழுத்தும் விடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

மேலும் தற்கால ஊடகங்களின் போக்கு எனவும் சொல்லலாம். தொ.கா, திரைப்படம் என அனைத்திலும் வன்முறை ,ஆபாசம்( சினிமாஸ்கோப்  கண்டுப்பிடித்ததே நாபிக்கமலத்தை பெருசா காட்டத்தானோ? )எல்லாமே அளவுக்கு அதிகமாக காட்டப்படுகிறது. ஆனால் அவை யாவும் சமூகத்தில் தினசரி நிகழ்வுகள் சரியான வாழ்வியல் அறமென  நியாயம் கற்பிக்கப்படுவது போல கதை சொல்லி இருப்பார்கள்.

ரேஷன் கடையில் பொருட்கள் இல்லை என சொல்லிவிட்டு வில்லன் கூட்டம் கள்ள மார்க்கெட்டில் விற்கும் அப்போது ஹீரோ பறந்து வந்து அநியாயத்தை தட்டிக்கேட்கும் காட்சியிலும் முதலில் ஓடிவரும் வில்லனின் அல்லக்கையை ஒரே அடியில் வீழ்த்தி கழுத்தை திருகிப்போட்டு விட்டு தாண்டிப்போவார். ஒரு 40 பேரை எலக்டிரிக் போஸ்டை புடுங்கி விளாசுவார். அடுத்தக்காட்சியில் காக்கும் கடவுளே தானைத் தலைவா என மக்கள் கூட்டம் வாழ்த்திப்பாடும். இது போன்றக்காட்சிகள் புரஜக்டர் கண்டுப்பிடித்த காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் வெகு சகஜமப்பா :-))

ஒரு ரெண்டு லிட்டர் மண்ணெணைக்காகவும், 10 கிலோ அரிசிக்காகவும் அடிக்கும் அடியில் பலர் உயிர்போனது போல அடிவாங்கி விழுவதாக ஏன் காட்ட வேண்டும். ஒருவர் கழுத்தை திருகினால் செத்து விட மாட்டார்களா? ஆனால் ஹீரோ கொலை செய்துவிட்டார்னு காட்டாமல் கொண்டாடுவதாக காட்டப்படுவது.மனமுதிர்ச்சி இல்லாத இளஞ்சிறார் வயதில் பார்க்கும் ஒருவருக்கு என்ன தோன்றும்.நாளுப்பேர ரத்தம் வர , மூச்சுப்பேச்சு இல்லாமல் அடிக்கிரவன் தான் நல்லவன்னு நினைக்க தோன்றாதா?

வன்முறையை , வன்முறையாளனை சமூகம் கொண்டாடுவது போல ஊடகங்களில் தொடர்ந்துக்காட்டப்படுவதால் இளம் வயதினருக்கு ஒரு தவறான புரிதலே உருவாகும். இளம் வயதில் கொலை செய்தால் தூக்கு தண்டனைக்கிடையாது என்பது போலவும் , குற்றப்பின்னணி உள்ள கதாபாத்திரத்தை கதாநாயகனாக காட்டுவதாகவும் திரைப்படங்கள் அதிகம் வருகிறது(அவனைத்தான் ஒருத்தி உருகி உருகி காதலிப்பா). அவை குற்றவியல் கல்விபோதனையாகவும், குற்றம் புரிந்தால் தப்பில்லை என்பது போன்ற எண்ணங்களையும் இளம்வயதினர் மனதில் விதைக்கக்கூடும்.

ஒரு புறம் வன்முறை தவறல்ல என்பது போல ஊடக திணிப்பு, மறுபுறம் புரியுதோ இல்லையோ சொல்லிக்கொடுப்போம் மதிப்பெண் எடுக்கணும் என்று செயல்படும் பள்ளிகள், மேலும் பிள்ளைகள் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பினை சுமத்தும் பெற்றோர் என அனைத்து திசைகளிலும் ஒரு மாணவருக்கு நெருக்கடிகள் மட்டுமே எஞ்சுகிறது.

இங்கு பேசப்படும் சூழல் நடுத்தர மற்றும் கடைநிலை குடும்பம், மாணவர்களுக்கான சூழல். உயர் நடுத்தர, மற்றும் உயர் வசதி குடும்பம், மாணவர்கள் சூழல் வேறு, ஆனால் அங்கு தான் பெற்றோர்கள் சரியாக மாணவப்பருவத்தைக் கையாள்கிறார்களோ என தோன்றுகிறது.நீ +2 பாஸ்  செய்தா போதும் உன்னை டாக்டர் ,எஞ்சினியர் என்ன வேண்டுமோ படிக்க வைக்கிறேன்னு சுதந்திரம் கொடுக்கிறார்கள்.


அப்போ பணம் இருந்தா தான் படிக்கணுமா என்று கேட்கலாம்?  எல்லாருமே படிக்கலாம் ஆனால் ஒரு பந்தயம் போல ஓடிப்போய் ஏன் படிக்க வேண்டும்?


முதலில் அவன் என்னப்படிக்க வேண்டும் என்பதை அவனே தீர்மானிக்கட்டும், எல்லாரும் பொறியியல், மருத்துவம் தான் அவங்க பசங்க படிக்க வேண்டும்னு  நினைப்பதால் தான் கல்வி வியாபாரம் ஆகிடுச்சு. இதில் வெளியில் தெரியாத உண்மை 50 % பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை  இல்லை என்பது.MBBS மட்டும் படித்தவரால் 10000 சம்பாதிக்க மூச்சு முட்டுது.ஆனாலும் பொறியியல் , மருத்துவம் படிக்க போட்டி இருப்பதால் இந்தியாவிலேயே மிக அதிக தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கு. அதே போல மருத்துவக்கல்லூரிகளிலும் இரண்டாம் இடம்.

பெரும்பாலான மாணவர்கள் இத்தகைய கல்வியியல்  வாழ்விற்கு அடங்கி போக கற்றுக்கொள்கிறார்கள். விதிவிலக்காக யாரேனும் ஒருவர் இப்படி ஆயுதம் தூக்கி விடுகிறார்கள். எனவே நமது சமூகமும், கல்வி அமைப்புகளும், குறிப்பாக பெற்றோர்களும் விழிப்படைய வேண்டிய தருணமிது. கல்வி என்ற சித்தாந்தக்கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.

பின்குறிப்பு:

# மிக இளம் வயதில் கொலை செய்தார் என்பதே சமூகத்தின் அவலத்தைக்காட்டுகிறது. இளஞ்சிறார் குற்றவாளி என்பதால் அவரது புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்பது தார்மீகம். எனக்கு தெரிந்து பெரும்பாலும் பத்திரிக்கைகளிலும் வரவில்லை. ஆனால் பதிவர் ஒருவர் எங்கிருந்தோ தேடிப்பிடித்து பொறுப்பற்ற முறையில் அச்சிறுவனின் புகைப்படத்துடன் பதிவிட்டு , சமுகத்தைப்பற்றி ரொம்பவும் கவலைப்பட்டிருக்கிறார் ,அவலத்திலும் அவலம் இது!


பிற்சேர்க்கை: குறிபிட்டவுடன் தக்க புரிதலுடன் அச்சிறுவனின் புகைப்படத்தை பதிவர் நீக்கிவிட்டார். நன்றி http://www.mathavaraj.com/2012/02/blog-post_10.html">மாதவராஜ்!

# ஹி..ஹி!... சம்பவம் இரண்டு அடுத்தப்பதிவில்.

Friday, January 27, 2012

ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?





ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?


முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் தோன்றிய கிருத்துவமும் அதை அப்படியே சுவிகரித்து தனது பழைய ஏற்ப்பாட்டில் சேர்த்துக்கொண்டது. இதெல்லாம் முதல் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டம்.

பின்னர் ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதமும் ஆதாம் , ஏவாள் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் மோசஸ், ஏசு என்று அனைவரையும் இஸ்லாமியர்களாக ஆக்கி அவர்கள் தான் இஸ்லாத்தின் ஆரம்ப கால இறைத்தூதர்கள் என்று புதிதாக ஒரு கருத்தாக்கத்தை தானே உருவாக்கிக்கொண்டு தனது பழைமைக்கு  தானே ஆதாரம் உருவாக்கிக்கொண்டது.

பாவம் மோசசுக்கு பின்னாளில் தாம் மூசா என்றும், ஏசுவுக்கு பின்னாளில் ஈசா என்றும் பெயர் மாறி இஸ்லாமியர்களாவோம் என்று தெரியாமல் போய்விட்டது :-)) தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் அவதரிக்காமலே இருந்து இருப்பார்கள்.முகமது நபிக்கு முன்னொடி இறைத்தூதர்கள் என சொல்லப்படும் பட்டியல் இறைத்தூதர்கள் பட்டியல. ஆதம் முதல் கொண்டு ஏசு வரை எல்லாருமே இஸ்லாமிய இறைத்தூதர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். இதில் விடுபட்டுப்போனது யாஹு மெசெஞ்சர் மட்டுமே என நினைக்கிறேன் :-))

இப்படி பல முன்னோடி இறைத்தூதர்கள் உண்டு என சொல்வது புதிதல்ல ஏற்கனவே புத்த மதத்தில் 28 புத்தர்கள் உண்டு என்றும் கவுதம புத்தருக்கு பின்னரும் ஒரு புத்தர் வருங்காலத்தில் வருவார் என புத்த மதம் சொல்கிறது. ஆனால் முகம்மது நபி கொஞ்சம் முன்னேற்பாடாக அவரே அல்டிமேட் இறைத்தூதர் என சொல்லிக்கொண்டார்.

புத்தர்களின் பட்டியல

இப்போது எனது கேள்வி மனித இனம் பரிணாமத்தின் படி உருவானதா அல்லது மேற்கண்ட மதங்கள் சொன்னது போல ஆதாம்,ஏவாள் என்ற இரண்டே இரண்டு ஆதி மனிதர்களிடம் இருந்து தான் பல்கி பெருகி இன்றைய 600 கோடி மக்களாக ஆனதா என்பதே.




ஈடன் கார்டனில் ஆதாம்,ஏவாள்(படம் உதவி:விக்கி,நன்றி)



முதலில் ஆதாம் ,ஏவாள் கருத்தாக்கத்தினைப்பார்ப்போம், அது உண்மை எனக்கொண்டால் , அதனுள் இருக்கும் ஆபாசத்தினையும் மத வாதிகள் உண்மை என ஏற்றுக்கொள்வார்களா?


என்ன ஆபாசம் இருக்குனு என்று கேள்விக்கேட்பவர்கள் இந்த சுட்டியில் போய் முழுக்க ஆதியோடந்தமாக படித்து விட்டு வரவும். ஆதாம் ஏவாள் கதை- Chapter LXXIV . இங்கே பதிவில் சுருக்கமாகப்பார்ப்போம்.

கடவுள் என்று கூறப்படுவர் முதலில் ஆதாமை உருவாக்கினார், பின்னர் அவன் விலா எலும்பை வகுந்தெடுத்து அதில் இருந்து ஏவாளை உருவாக்கினார்.அவர்கள் வாழ ஏடன் கார்டனையும் உருவாக்கிக்கொடுத்தார்.

பாம்பு வடிவில் சாத்தான் எனப்படும் தீய சக்தியின் தூண்டுதலால் ஏவாள் ஆப்பிளையோ , தக்காளியையோ கடித்து வைத்து தன்னுணர்வு பெற்றாள் , போதாக்குறைக்கு ஆதமையும் கடிக்க சொல்ல இருவருக்கும் தன்னுணர்வு வரப்பெற்று, நிர்வாணம், ஆண், பெண் என்ற அறிவெல்லாம் எட்டிப்பார்த்தது.

இருவரின் கூட்டுசதியும் கடவுளுக்கு பிடிக்காமல் போனதால் அம்மையாரால் கார்டனை விட்டு விரட்டப்பட்ட சின்னம்மா போல இருவரும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர் . கூடவே கடவுளின் சில பல சாபங்களும் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டது.அச்சாபங்களில் மரணம் , முதுமை, பசி, தாகம் எல்லாம் அடக்கம்

வெளியேறிய இருவரும் ஒரு குகையில் இனிதே தனிக்குடித்தனத்தை துவக்கினர் , இல்லறத்தின் விளைவால் ஓராண்டில் கெயின் என்ற ஆண் மகவும் லுலுவா என்ற பெண் மகவுவையும் ஒரே நேரத்தில் இரட்டையர்களாக ஈன்றெடுத்தாள் ஏவாள்.

இரண்டுப்பேரும் வளர்த்து வந்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் இனிதே கழிய மீண்டும் ஒரு வாரிசு உருவாக்கம் நடைப்பெற்றது இப்போதும் பிரசவத்தில் ஒரு ஆண் , ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள். ஆண்க்குழந்தைக்கு ஏபெல் என்றும் பெண்ணுக்கு அக்லியா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இங்கே ஒரு சின்ன குறிப்பு இரண்டாவது பிறந்த பெண் அக்லியா , லுலுவாவை விட அழகில் கொஞ்சம் குறைவு என்று கதையில் அல்லது புனித நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது எதுக்கு இப்போனு தோன்றலாம் ஆனால் இது ஒரு புரதான நிகழ்வுக்கு தூண்டலாக அமையப்போகிறது.

கெயின், ஏபெல் இருவரும் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தனர் அவர்களுக்கு என்று ஒரு தொழில் கொடுக்க வேண்டும் என ஆதம் முடிவெடுத்து கெயினிடம் விவசாயத்தையும் ஏபெலிடம் கால்நடை வளர்ப்பையும் ஒப்படைத்தார் ஒரு பொறுப்பான தந்தையாக.

இருவரும் தத்தமது வேலையில் கவனம் செலுத்தி உற்பத்தி செய்தார்கள், அதனை ஆண்டவனுக்கு படைக்கும் போது ஏபெல்லின் படையலை ஏற்று கெயினுக்கு வெறுப்பேத்தினார் கடவுள், இதனால் சகோதரர்களிடையே ஒரு பூசல் உருவானது.

இதனிடையே பொறுப்பான , பாசமிகு தாயாக ஏவாள் நம்ம பசங்க வளர்த்துட்டாங்க, தொழிலும் செய்யுறாங்க அவங்களுக்கு ஒரு கல்யாணம் செய்துப்பார்க்கலாம் என்று கணவன் ஆதமிடம் சொல்கிறாள்.

இங்கே அறிவார்ந்த மக்களுக்கு நியாயமாக ஒரு கேள்வி வரனும் , கேள்வி வந்துச்சா? உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள், அவங்களுக்கே இப்போ தான் ஆண் இரண்டு, பெண் இரண்டுனு பிறந்து உலகின் முதல் குடும்பமாக உருவாகி இருக்கு. அப்படி இருக்க அவங்க பசங்களுக்கு எங்கே இருந்து கல்யாணத்துக்கு பெண் கிடைக்கும்? இப்படி ஒரு கேள்வி எல்லாருக்கும் வந்திருக்கனும்.

கேள்விக்கு விடை என்ன , ஏவாளே சொல்கிறாள், வெண்ணைய கையில வச்சுக்கிட்டு நெய்க்கு அலைய வேண்டாம் , கெயின் கூடப்பொறந்த லுலுவாவை ஏபெலுக்கும், ஏபெல் கூடப்பொறந்த அக்லியாவை கெயினுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாம்னு ஆலோசனை சொல்கிறாள்.

அனேகமாக மனைவி ஒரு மந்திரி, மனைவி சொல்லே மந்திரம் எல்லாம் அந்த புராணக்காலத்திலேயே ஆரம்பம் ஆகிடுச்சு என நினைக்கிறேன். ஆதமும் சரி அப்படியே செய்யலாம்னு தலையை ஆட்டுகிறான். பொண்டாட்டிக்கு புருஷன்மார்கள் தலை ஆட்டுவதும் அப்போவே ஆரம்பம் ஆகி இருக்குனு தெரியுது :-))

எல்லாரும் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல்களே என்று சொல்லி பரிணாமத்தை கிண்டல் செய்யும் மார்க்கபந்துகள் எல்லாம் உணர்ச்சி வசப்படாதிங்க இதெல்லாம் நீங்க புனித நூல்னு சொல்வதில் இருப்பது தான். அதில் என்ன சொல்லி இருக்குனே தெரியாமா எல்லாம் புனிதம்னு கண் மூடித்தனமா நம்புவதால் தெரியாமல் போய் இருக்கலாம். முழுசா படிங்க, அதுக்கு அப்புறமா சொல்லுங்க எது சரினு.

மார்க்கப்பந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கும் , என்னடா இது அண்ணன் , தங்கச்சிக்க்குள்ள கல்யாணமானு, இதை தான் இத்தனை நாளா புனித நூல் சொல்லிச்சுனு நம்பி பரிணாமத்தை எதிர்த்தோமா என்றெல்லாம் கேட்டு லேசா தலைக்கூட சுத்தும் :-))

ஆதாம், ஏவாள் சூப்பராக திருமணத் திட்டம் போட்டாங்க, ஆனால் அங்கே தான் ஒரு டிவிஸ்ட் வைக்குறார் நம்ம சாத்தான். சாத்தான் அண்ணாச்சி கெயினிடம் போய் ஏற்கனவே உன் படையலை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் ஏபெல் தான் உங்க அப்பா,அம்மாவுக்கு செல்லம் ஆகிட்டார், மேலும் இப்போ உன்னோட அழகான தங்கையை ஏபெலுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு , ஏபெலின் அசிங்கமான தங்கையை உனக்கு கட்டி வைக்கப்போறாங்க எனவே நீ பேசாம உன் தம்பி ஏபேலை போட்டு தள்ளிடு , அப்புறம் நீ மட்டும் தான் உனக்கே ரெண்டு பொண்ணும் னு ஒரு நாராசமான ஐடியாவை தருகிறார் திருவாளார் சாத்தான்.

கெயினுக்கும் இது சரினு படவே , ஏபேலை நயவஞ்சகமாக பேசி வா வயலை சுத்திப்பார்க்கலாம்னு கூப்பிட்டு சென்று கல்லால் அடித்துக்கொள்கிறான். ஆகாவே புராணம்,இதிகாச வரலாற்றில் முதல் கொலைக்காரன் கெயின் ,அதுவும் சொந்த சகோதரனைக்கொன்றவன் என பிரசித்திப்பெறுகிறான்.

கெயின் ஏபேலை கொல்லும் சம்பவத்தினை விவரிக்கும் ஓவியம். படம் உதவி:விக்கி. நன்றி

பின்னர் கடவுள் கெயினுக்கு சாபம் விட்டது, மீண்டும் சேத் என்ற மகன் ஆதாம் ஏவாளுக்கு பிள்ளையாக பிறந்து அவர்கள் எல்லாரும் தமது தமக்கைகளையே மணம் புரிந்து வம்சம் விருத்தி செய்தது என புராண புனித நூல்களின் கதைப்போகிறது. நாம் இத்தோடு முடித்துக்கொண்டு மானிட குலம் முதல் இரண்டு மனிதர்களிடம் இருந்து தோன்றியது என்பது சரியா அல்லது பரிணாமவியல் தான் சரியா என்று கேள்வியுடன் துவங்குவோம் நமது அறிவார்ந்த சிந்தனையை.

மார்க்க பந்துகளே எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள் வழித்தோன்றல் தான் என்று இனியும் நம்புவிர்களானால், நீங்கள் எல்லாம் சகோதர , சகோதரிகளை மணமுடிக்க ஆர்வம் உள்ளவர்களா? என்பதற்கு பதில் சொல்லுங்கள் ஆம் என்று ஒத்துக்கொண்டால் உங்கள் புனித நூல் சரியாக சொல்லி இருக்கு எனலாம் :-))

ஆதாம் ஏவாள் வழிவந்ததே மனிதகுலம் எனும் சித்தாந்ததிற்கு மாற்றாக வருவது பரிணாமவியல், மைட்டோ காண்டிரியல் ஏவாள் எனப்படும் சித்தாந்தம், இது குறித்து அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.

பரிணாமவியலுக்கு மாற்றாக சொல்லப்படுவது அறிவார்ந்த படைப்பாக்க சித்தாந்தம் ஆகும். எப்படி ஆகினும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் அனைவருமே ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்து உலக மக்கள் அனைவரும் பிறந்தார்கள் என்பதை மறுக்கவே செய்கிறார்கள்.

 பதிவர் சார்வாகன் பரிணாமவியலை அறிவார்ந்த படைப்பாக்கம் என்பதன் வாயிலாக நோக்குபவர் ஆனாலும் பரிணாமம் , மைட்டோக்காண்ரியல் ஈவ் பற்றி எல்லாம் விரிவாக அலசுபவர். பரிணாமவியலுக்கு மாற்றுக்கருத்து எனினும் ஆதாம் ஏவாள் தியரி அறிவார்ந்த சித்தாந்தம் அல்ல என புரியவைக்கும் அவரதுப்பதிவுகள் விருப்பம் உடையவர்கள் அங்கு சென்று மேலதிக தகவல்கள் பெறலாம்.

1)சார்வாகன் -1

2)சார்வாகன் -2

3)சார்வாகன் -3

மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாம் ஏவாள், மற்றும் அவர்கள் சந்ததி குறித்தான தகவல் பக்கங்களின் சுட்டி:

1)) ஆதாம் ,ஏவாள்

2) கெயின் , ஏபெல்

3))சந்ததியினர்



பிற்சேர்கை:-

சார்வாகனின் கெயினின் மனைவி யார் என்னும் பதிவு,
கெயினின் மனைவி யார்

ரெவெரி அளித்துள்ள கெயினின் மனைவி குறித்தான சுட்டி

கெயினின் மனைவி

Thursday, January 19, 2012

பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?



பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?


முன் குறிப்பு:

இது யாருடைய பதிவுக்கும் எதிர்ப்பதிவல்ல, இந்திய விவசாயம் எப்படி ஒப்பிட இயலா வகையில் பல இன்னல்களுக்கிடையேயும் நிலைத்து நின்று சுமார் 120 கோடி மக்களுக்கும் பசிக்கு உணவளிக்கும் உன்னத வேலையை இந்திய விவசாயிகள் தங்களை வருத்தி செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு பதிவே.



இந்தியா விவசாய நாடு என்று பன்னெடுங்காலமாக கூறப்படுகிறது. பிற தேசங்களில் நாடோடிகளாக ,நாகரீக வளர்ச்சியின்றி ,வேட்டை ஆடி உண்டு வாழ்ந்து வந்த காலத்திலேயே நதிக்கரை நாகரீகம் மேம்பட்டு விவசாயம் செய்து ,அதிலும் பல திருத்தங்கள் செய்தவர்கள் இந்தியர்கள். இதில் குறிப்பாக தமிழர்கள் முன்னோடிகள் எனலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காடு திருத்தி கழனி கண்டார்கள், கரிகால பெருவளத்தான் விவசாயத்திற்கு நீரின் தேவை அறிந்து கல்லணை கட்டியது இன்றும் நிலைத்து நிற்கிறது.

இன்றைய நவீன இந்தியாவில் வேளாண் சார்ந்த இயற்கை வளம் என்ன எனப்பார்ப்போம்.

மழைக்காலத்தில் வயலிலும் நீர் நிற்கும் வாய்க்காலிலும் தண்ணீர் கரைப்புரண்டு ஓடும், வடிய வைக்க வடிகால் காணாது, கோடையில் வாய்க்காலில் தண்ணீர் அடியில் ஓடும் வயலுக்கு ஏற்ப மடைக்கட்டி ஏற்ற வேண்டும், அதுவும் போதவில்லை எனில் டீசல் எஞ்சின் வைத்து இறைப்பார்கள். ஆனால் தண்ணீர் என்பது விவசாயத்துக்கு பெரும்பாலும் கிடைத்து விடும். இது ஆற்றுப்பாசனம், ஏரிப்பாசனம் வகை.இவ்வகை பாசனமே மிக அதிகம், கிணறு,ஆழ்குழாய் கிணறுப்பாசன விவசாயம் சிறிய அளவே.இந்தியாவில் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம், வடிகால் என இரண்டும் செய்ய தக்க அளவு நீர் வளம் உண்டு.

இந்தியா ஒரு புவியியல் பார்வை:

மொத்த நிலபரப்பு = 3,287,260 ச.கி.மீ

விவசாயம் செய்ய தக்க நிலம்=179,900 ச.கி.மீ

விளை நிலம்=1 ,586 ,500 ச.கி.மீ (88.2% & 53.%,)

ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 112 செ.மீ
( மிக குறைவாக ராஜஸ்தானில் பாலைவனப்பகுதியில் 10 செ.மீ மழையும், மிக அதிகமாக(உலகிலேயே) மேகாலாயாவில் உள்ள மவ்சின் ராம் =11,87.3 செ.மீ, சிரபுஞ்சி= 11,77.7 செமீ)


மழைப்பொழிவு மொத்த நீர்   =3,700,000

நிலத்தில் இழுக்கப்படும் நீர் = 800,000

ஆற்றில் பாயும் நீர் =1,700,000

ஆவியாகும் நீர்=1,200,000

( மில்லியன் கன மீட்டரில்)

இதில் நிலத்தில் உறியப்படும் நீரும், ஆற்றில் பாயும் நீரும் விவசாயத்தேவைகளுக்கு பயன்ப்படுகிறது.

மேலும் இந்தியாவில் உள்ள நீர் நிலைகளின் மொத்தப்பரப்பளவு=314,070 ச.கி.மீ
(ஆறு,ஏரி,குளம் ,நீர்த்தேக்கம் ஆகியவைப்பரப்பளவில்)

காண்க:
india

கோதுமை சாகு படி செய்யப்படும் பரப்பளவு= 278.17

உற்பத்தி ஆகும் கோதுமை(2010) = 80 மில்லியன் மெட்ரிக் டன்.

அரிசி உற்பத்தி (2010-11)=  94.11(நெல்=145 மி.மெ.ட)



இன்ன பிற உணவு உற்பத்தியில் உலகளாவிய அளவில் இந்தியாவின் இடம்:

கீழ்கண்ட பட்டியலில் உள்ள உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது:

Lemons and limes
Buffalo milk, whole, fresh
Castor oil seed
Safflower seed
Sorghum
Millet
Spices
Okra
Jute
Beeswax
Bananas
Mangoes, mangosteens, guavas Pulses
Indigenous Buffalo Meat
Fruit, tropical
Ginger
Chick peas
Areca nuts
Other Bastfibres
Pigeon peas
Papayas
Chillies and peppers, dry
Anise, badian, fennel, corian
Goat milk, whole, fresh


கீழ்கண்டவற்றில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

Per final numbers for 2009, India is the world's second largest producer of the following agricultural produce:[41]

Wheat
Rice
Vegetables fresh
Sugar cane
Groundnuts, with shell
Lentils
Garlic
Cauliflowers and broccoli
Peas, green
Sesame seed
Cashew nuts, with shell
Silk-worm cocoons, reelable Cow milk, whole, fresh
Tea
Potatoes
Onions
Cotton lint
Cottonseed
Eggplants (aubergines)
Nutmeg, mace and cardamoms
Indigenous Goat Meat
Cabbages and other brassicas
Pumpkins, squash and gourds


In 2009, India was the world's third largest producer of eggs, oranges, coconuts, tomatoes, peas and beans.[41]

மேற்கண்டவை எல்லாம் "ரொம்ப சாதாரணமான காய்ந்து போன வறண்ட இந்தியாவில் நடக்கும் ரொம்ப சாதாரண விவசாயத்தினை" விவரிக்கும் புள்ளி விவரங்கள்.

இனி வளம் கொழிக்கும் பாலாறும் தேனாறும் கரைப்புரண்டு ஓடும் பச்சைப்பசும் சோலைவனம் சவுதி அரேபியாவின்  விவசாயத்தினைக்காண்போம்.

சவுதி அரேபியா வேளாண் வளம்:

மொத்த நிலப்பரப்பு =2, 149, 690 ச.கி.மீ

மொத்த விவசாய செய்யதக்க நிலம்=1, 736, 250 ச.கி.மீ

விளை நிலம் =34 000(2.0% , &1.6%) ச.கி.மீ

ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 10 செ.மீ(எப்போதாவது 30 செ.மீ)

நீர் நிலைப்பரப்பு = 0.0 ச.கி.மீ

காண்க:
saudi arabia

சவுதி அரேபிய அரசு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய 1970 இல் ஒரு வேளாண் திட்டம் போட்டது ,அதன்படி ஒரு டன் கோதுமைக்கு அரசு கொள்முதல் விளையாக 3500 ரியால்களை நிர்ணயம் செய்தது இதனால் பெரிதும் கவரப்பட்ட விவசாயிகள் கோதுமை விளைச்சலில் குதித்தார்கள்.

இதன் விளைவாக 90 களில் சுமார் 4 மி.மெ.ட கோதுமை விளைந்தது.ஆனால் இதற்கான பாசன நீர் 2000 கி.மீ க்கு அப்பால் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்டது.ஒரு டன் கோதுமை விளைவிக்க சுமார் 1000 கன மீட்டர் நீர் தேவைப்பட்டது.

தொடர்ந்து நீரும், அதிக கொள்முதல் விலையும் கொடுப்பது அரசுக்கு பொருளாதார ரீதியாக இழப்பினை உருவாக்கவே 2008 இல் புதிய விவசாயக்கொள்கையாக , கோதுமை விவசாயத்தை ஆண்டுக்கு 12.5 சதவீதம் எனக்குறைத்து கொண்டு வந்து 2016 இல் முற்றிலும் நிறுத்தப்போவதாக அறிவித்து விட்டது. மேலும் அரசின் கொள்முதல் விலையை 1000 ரியால்கள் என அதிரடியாக குறைத்து விட்டது. இதனால் 40 சதவீத விவசாயீகள் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

இதன் விளைவாக கோதுமை உற்பத்தி ஒரு மில்லியன் டன்னுக்கும் கீழே 946,000 டன் ஆக ஒரே ஆண்டில் உற்பத்தி சரிந்தது.இப்போது ஆண்டுக்கு 2 மி.மெ.ட அளவுக்கு கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. 2016 முதல் முழுக்க இறக்குமதி செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளது சவுதி அரேபிய அரசு. மேலும் காய் கறி உற்பத்தியையும் உள்நாட்டு தேவைக்கு மட்டும் செய்ய சொல்லி, ஏற்றுமதி செய்ய தடை விதித்து விட்டது. இதன் மூலம் நீர் தேவையை குறைத்து ,அதற்கு ஆகும் செலவைக்கட்டுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இது தான் இன்றைய தேதியில் சவுதி அரேபியாவின் விவசாய கொள்கை, மற்றும் நிலை.

ஆனால் சவுதி அரேபியாவில் பாலாறும் ,தேனாறும் ஓடுவதாக பதிவுப்போட்ட விஞ்ஞானி 1990 களின் விவரத்தை மட்டும் கவனமாக சொல்லி இது போல பசுமை புரட்சி தொடர்ந்து சவுதி அரேபியாவில் பரவி வருவதாக சொல்லிக்கொண்டார்.அப்படி பரவி வருவதாக இருந்தால் இன்று ஏன் இப்படி ஆயிற்று சவுதி அரேபியாவில்.

காண்க:
விஞ்ஞானியின் பதிவு

அதுவும் மண் வளம் இல்லைனு களிமண் இறக்குமதி செய்து,,விதை இறக்கு மதி, தண்ணீர் சுத்திகரிப்பு செய்து சிக்கனமாக சொட்டு நீர், பசுமைக்குடில் வைத்து விவசாயத்தைப்பெருக்கிட்டாங்க, அதே போல இந்தியாவில் செய்யக்கற்றுக்கொள்ள வேண்டும்னு வேற சொல்லி இருந்தார்.

கோதுமை போன்றவற்றை நிலப்பயிர் (ஃபீல்ட் கிராப்) என்பார்கள் அதனை எல்லாம் பசுமைக்குடில் ,சொட்டு நீர் பாசனத்தில் சாகுபடி செய்ய கடினம் என்ற அடிப்படை விவசாய புரிதல் கூட இல்லை அவருக்கு.

அவர் சொன்னது எப்படி இருக்கு என்றால் ஏற்கனவே கல்யாணம் செய்து 5 ஆண்டுகளில் 6 குழந்தைப் பெற்றவனிடம், கல்யாணம் ஆகி 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் , பின்னர் விந்து தானம் பெற்று செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பெற்றவன் சொன்னானாம் நீ எல்லாம் என்ன பிள்ளை பெற்றாய் என்னப்போல விஞ்ஞான முறையில் லட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைப்பெற்றுக்கொள் என்று.அந்த அதிசய குழந்தையோ இன்குபேட்டரில் இப்பவோ, அப்பவோனு இழுத்துக்கொண்டிக்கிறதாம்!

இவ்வளவும் சொன்ன அந்த விஞ்ஞானிக்கு தற்கால சூழலில் சவுதி அரேபியாவில் என்ன நடக்கிறது என தெரியாமல் போனது ஏன்? ஒரு வேளை மொழிப்படத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற கடந்த காலத்தில் வாழும் ஆசாமியோ அல்லது பொய் சொல்வது பாவம் இல்லை என மார்க்கத்தில் விதி விலக்கு இருக்குமோ என்னவோ :-))

சவுதி அரேபியாவின் இன்றைய விவசாயக்கொள்கை மற்றும் நிலையை கீழ்கண்ட சுட்டிகளில் போய் அறியலாம்:

1)கோதுமை சரிவு

2) சவுதி புதிய விவசாயக்கொள்கை

3) சவுதி அரேபிய 

4) கோதுமை இறக்குமதி

5) கோதுமை vs தண்ணீர்

இந்திய விவசாயத்தில் என்ன தான் பிரச்சினை,

இந்தியாவில் நதி நீர்ப்பங்கீடில் சில சில தாவாக்கள் இருந்தாலும் தண்ணீர் தக்கி முக்கி வந்துவிடும், இல்லை இயற்கையாக மழை கைக்கொடுத்து விடும், வானம் பொழிகிறது, விவசாயி அலுக்காமல் உழைக்கிறான், பூமி விளைகிறது. பசுமைக்குடில், சொட்டு நீர் போன்ற குட்டிக்கரணம், தந்திரம் எல்லாம் பெரும்பாலும் தேவை இல்லை இயற்கையாகவே நல்ல விளைச்சல் இருக்கு.

விவசாயின் பெரும் பிரச்சினையே, விவசாயம் செய்ய ஆகும் செலவை விட குறைந்த விலைக்கு உற்பத்தியை விற்க வைக்கும் சூழல் இந்தியாவில் நிலவுவது தான்.

உரம் , விதை, மின்சாரம், டீசல், ஆட்கூலி எல்லாம் வேகமாக விலை ஏறுகிறது விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருள் கிடைக்க வேண்டும் என அரசு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை மிக குறைவாக வைத்துள்ளதே காரணம்.

குறைந்த பட்ச விலை தான் அது. அதற்கு மேல் விலை வைத்து வியாபாரிகள் வாங்கக்கூடாது என்று சட்டம் இல்லை ஆனால் அவர்களோ அடி மாட்டு விலைக்கு தான் கேட்பார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு பின் அரசு கொள்முதல் நிலையங்களை மூடி விடும், அல்லது சில சமயம் அளவைக் குறைத்து விடும் அது போன்ற சந்தர்ப்பங்களில் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் மிக குறைந்த விலைக்கே கேட்பார்கள். விவசாயிக்கு உள்ள பணத்தேவைக்கு குறைந்த விலைக்கு விற்பதை தவிர வேறு வழி இல்லை.

சவுதி அரேபிய அரசு சர்வதேச சந்தை விலையை விட 10 மடங்கதிகமாக அரசு விலையாக வைத்து விவசாயம் செய்ய தூண்டியது. காரணம் ஏராளாமாக இருந்த எண்ணைப்பணம்,ஆனால் அது போல நீண்ட காலம் செய்ய அவர்களுக்கு முடியவில்லை.

இந்திய விவசாயிகளுக்கு அது போல 10 மடங்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டாம், உற்பத்தி செலவை ஈடுகட்டும் வகையிலும் கொஞ்சம் லாபம் தரும் வகையில்  நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1500 ரூ என்று நிர்ணயித்தாலே போதும் பிச்சு உதறிடுவாங்க நம்ம விவசாயிகள்.

குறைவான கொள்முதல் விலை, ஆட்ப்பற்றாக்குறை, விளை நிலங்கள் வீட்டு மனை என மாறுவது போன்ற இக்கட்டான சூழலிலும் அரிசி, கோதுமை உற்பத்தியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திலே இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.விரயம் இல்லாமல் சந்தைப்படுத்துதல் மற்றும் நியாயமான விலை மட்டுமே இன்றைய நிலையில் விவசாயிக்கு தேவை.

விவசாயம் குறித்த இப்பதிவுகளையும் பார்க்கவும்

1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2







Saturday, January 14, 2012

புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!







தை-1 இல் புத்தாண்டு கொண்டாடப்படும் என அரசு அறிவித்தவுடன் வலைப்பதிவுலகில் பல்வேறு ஆதரவு , எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பிவிட்டது.ஆதரவு தெரிவித்தவர்கள் கூற்று நியாயமாக இருந்தது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதோ வறட்டு விவாதமாக ஒலித்தது.

மாற்றியது தவறு என சொன்னப் பலப்பதிவுகளிலும் , இது சரியான மாற்றம் தான் எனப்பல பின்னூட்டங்கள் இட்டு சொன்னப்போதிலும், அவை சரியானப்படி நிறையப்பேரை சென்றடையவில்லை , எனவே ஒருப்பதிவாக இட்டு எனது கருத்தைப் பதிவு செய்து வைக்கிறேன்.

தைப்புத்தாண்டு தேவையில்லை என்பவர்களின் வாதம்,

1) ஏப்ரலில் வருவது தான் சரி,
2) காலம் காலமாக வருவது
3)விஞ்ஞான முறைப்படி அது சரியானது.
4) தைப்புத்தாண்டு என்பது யாருக்கும் தெரியாத வழக்கில் இல்லாத ஒன்று, திடீர் என அரசு எதேச்சதிகாரமாக அறிவித்துள்ளது

இவை தான் முக்கியமான குற்றச்சாட்டாக எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது. அவர்கள் சொல்வது சரியல்ல என்பதை விளக்கவே இப்பதிவு.

ஏப்ரலில் புத்தாண்டு வருவது சரியா?

அப்போது தான் கோடைக்காலம் துவங்குகிறது அதனால் அப்போது வரவேண்டும் என்கிறார்கள், அது அப்படி இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம். எத்தனையோ பருவங்கள் இருக்க ஏன் கோடையில் வர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கலில் இருந்தே கோடையின் துவக்கம் நமக்கு ஆரம்பிக்கிறது, அறுவடை எல்லாம் முடிந்திருக்கும் அப்போது.எனவே அப்பருவத்தின் துவக்கத்தினை புத்தாண்டாக வைத்தால் என்ன?

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதனால் "summer solstice " மார்ச் 21 இல் வருவதை ஒட்டி புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாலாம் என்கிறார்கள்.(ஆனால் உண்மையில் இந்தியக்காலண்டர்கள் லுனி சோலார் காலண்டர்கள், தமிழ் காலண்டர் முழுக்க சூரியக்காலண்டர் )

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் வருடாந்திர பயணத்தின் அடிப்படையில் ஒன்று அதன் துவக்கத்தில் அல்லது இறுதியில் இருந்து ஆண்டை ஆரம்பிக்கலாமே, ஏன் இடையில். இதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சூரியன் என்பது நிலையானது , அது நகர்வதில்லை ஆனால் பூமியின் சுழற்சி, அதன் 23.5 கோண சாய்வு ஆகியவற்றால் நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, அதன் அடிப்படையிலே இரவு பகல், பருவக்கால மாற்றங்கள் ஏற்படுகிறது.

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது பூமியின் சுழற்சியால், இது தினசரி சூரியனின் நகர்வு நிகழ்வு எனக்கொள்ளலாம்,

இதே போல சூரியனின் வருடாந்திர நகர்வு நிகழுவும் இருக்கிறது, இதற்கு காரணம் பூமி அதன் அச்சில் 23.5 கோணாம் சாய்வாக சூரியனை சுற்றிவருவது.

பூமியை வடக்கு தெற்காக இரண்டு பாதியாக பூமத்திய ரேகை பிரிக்கிறது, பூமி மீது இது போன்ற வளையங்களாக செல்லும் கற்பனைக்கோடுகளே அட்ச ரேகைகள் எனப்படுகிறது.

இதில் முக்கியமான வளையங்கள் பூமத்திய ரேகை, மகர ரேகை, கடக ரேகை.

மகர ரேகை தென் கோளத்திலும், கடக ரேகை வடக்கோளத்திலும் வரும் இடையில் பூமத்திய ரேகை.

சூரிய ஓளி செங்குத்தாக பூமி மீது மகர ,கடக ரேகைப்பகுதிக்குள் மட்டுமே விழும்.

ஒரு ஆண்டில் சூரியன் இரண்டு வளையங்களுக்கும் இடையே சென்று வருகிறான்.பூமி சாய்வாக சுழல்வதால் அப்படி தோன்றுகிறது.

ஜூன் மாதத்தில் (ஜூன் 24) சூரியன் வடக்கோள கடக ரேகையில் இருந்து தென்கோள மகர ரேகைக்கு தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கி , இந்திய முறைப்படி ஜனவரி 14 இல் (சரியான தேதி என்றுப்பார்த்தால் டிசம்பர் 21)மகர ரேகைக்கு வந்து பின்னர் அங்கிருந்து கடக ரேகைக்கு வடக்கு கோளத்தை நோக்கி பயணிப்பான். அதாவது ஆறு மாதம் இந்தப்பக்கம் ஆறு மாதம் அந்த பக்கம் .

இந்த மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள் இதைப்புனிதமானது என்பார்கள்,அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது.

எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அது ஏன் சூரியனின் பயணத்தில் இடைப்பட்டக்காலத்தில் ஏப்ரலில் வர வேண்டும்!

மகர ரேகை என்பது இந்தியாவிற்கு தெற்கே கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ளது அங்கிருந்து இந்தியா நோக்கி சூரியன் வரும் நாளை வருடத்தின் துவக்க நாளாக கொள்வது தவறில்லையே. அதாவது சூரியக்காலண்டர் அடிப்படையில் சூரியனின் பயணம் துவங்குவது முதல் நாள்!

இதனாலேயே ஒருக்காலத்தில் ஆங்கில முறையில் ஏப்ரலில் வந்த புத்தாண்டு கூட ஜனவரிக்கு இடம் பெயர்ந்தது.

wikki இல் இருந்து எடுக்கப்பட்ட உதாரணம்,

//France was one of the first nations to make January 1 officially New Year's Day (which was already celebrated by many), by decree of Charles IX. This was in 1564, even before the 1582 adoption of the Gregorian calendar (See Julian start of the year). Thus the New Year's gifts and visits of felicitation which had been the feature of the 1st of April became associated with the first day of January, and those who disliked or did not hear about the change were fair game for those wits who amused themselves by sending mock presents and paying calls of pretended ceremony on the 1st of April.//

தமிழர்கள் எந்த அளவுக்கு தீர்க்க தரிசனத்தோடு இருந்தால் அக்காலத்திலேயே வரப்போகும் சூரியனை வரவேற்று , சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக்கொண்டாடி இருப்பார்கள்!

மேற்கண்ட விளக்கத்தின் மூலம் ஏப்ரலில் வருவது, விஞ்ஞான ரீதியாக சரி என்று சொல்வதெல்லாம் தவறு என்று காட்டி இருக்குமே!

சித்திரை புத்தாண்டு காலம் காலமாக வருவது என்கிறார்கள், அக்காலத்தில் கூட காலம் காலமாக உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் எல்லாம் இருந்தது அதை எல்லாம் சட்டம் போட்டு ஒழிக்கவில்லையா? அதையும் புனிதமாக நினைப்பவர்கள் இருந்தார்கள் என்று அரசு ஆதரிக்க முடியுமா?

இப்போது அரசு திடீர் என்று மாற்றம் செய்து விட்டது என்று சிலர் சொல்கிறார்களே அது எப்படி ?

1921 இல் திருவள்ளுவர் கி.மு 31 இல் பிறந்தாரரென்ற கூற்றின் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்று உருவாக்கப்பட்டுள்ளது,அதில் தை இரண்டு அன்று புத்தாண்டு வருவதாக மறைமலை அடிகள், திரு.விக, கி.ஆ.பெ எல்லாம் இதுக்குறித்து பல தமிழ் ஆய்வுகள் செய்து தெரிவித்துள்ளார்கள், இதனை அரசும் ஏற்கும் விதமாக வெகு காலம் முன்னரே அரசு நாட்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டை ஏற்று வெளியிட ஆரம்பித்தது. சில தரமான தனியார் காலண்டர்களிலும் இந்த ஆண்டு முறை இடம் பிடிக்க ஆரம்பித்தது.

தற்போது ஏற்கனவே பலகாலமாக இருந்த ஒன்றுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வண்ணம் அரசாணை வெளியிட்டுள்ளது. தை இரண்டு என்பதற்கு பதில் முழுதாக தை 1 என்ற சிறிய திருத்தம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.


எனவே இந்த அறிவிப்பு ஒன்றும் திடீர் புரட்சி அல்ல, பலகாலமாக இருந்து வந்த தமிழறிஞர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது அரசு.


பின்குறிப்பு:

இது ஒரு மீள்ப்பதிவுங்கோ!!!

Thursday, January 12, 2012

குமுதம் யாருக்கு சொந்தம்?



                                                    

          குமுதம் யாருக்கு சொந்தம்?




திரு எஸ்.ஏ.பி அவர்களால் நிறுவப்பட்டு, வளர்க்கப்பட்ட குமுதம் வார இதழ், அவரது மறைவுக்கு பின்னர் பல சர்ச்சைகளின் மையமாக திகழ்கிறது என்பதை வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிவார்கள்.இப்போது மேலும் முற்றிய நிலைக்கு போய்விட்டது மிகவும் வருந்த தக்கது.

ஏனோ இந்த பிரச்சினைக்குறித்து ஊடகங்களும் ஒரு திருட்டு மவுனம் பூண்டு(வெங்காயம் மிஸ்ஸிங்கோ?) இருக்கின்றன. என்றே தோன்றுகிறது. வழக்கமாக சிறிய விஷயத்தையும் ஊதிப்பெரிதாக்கும் துப்பி எறியும் பத்திரிக்கைகளும் மவுனகுருவாக இருக்கின்றன. நடிகர்,நடிகையரின் அந்தரங்கம் என்றால் காணாததையும் கண்டதாக எழுதுவார்களாயிருக்கும். :-))

இதை விட ஆச்சர்யம் எல்லாத்துக்கும் கருத்து கண்ணாயிரமாக பதிவுப்போட்டுத்தள்ளும் பதிவர்களும் கோந்து அல்வா சாப்பீட்ட கோவிந்தனாக கம்மென்று இருக்கிறார்கள். ஒரு வேளை எல்லாம் எனக்கு தெரியாம  பதிவுப்போட்டு இருக்காங்களோ?

சரி இந்த வார குமுதம் பத்திரிக்கையில் வந்துள்ள பகிரங்க அறிக்கையில் இருந்து மேட்டர்(இது சமாச்சாரத்த சொன்னதுப்பா) என்னனு பார்ப்போம்...

திரு .ஜவகர் பழனியப்பன் த/பெ. எஸ்.ஏ.பி, அவர்கள் அமெரிக்க பிரஜ்ஜை என்பதால் குமுதம் நிறுவனப்பங்குகளுக்கு உரிமைக்கோர இயலாது, அது இதழியல்/ அச்சக சட்டங்களுக்கு முரணானது.

திருமதி.கோதை பழனியப்பன் ,தன்னிச்சையாக குமுதம் நிர்வாகத்திற்கு சேர்மன், மற்றும் நிர்வாக இயக்குநராக அறிவித்துக்கொண்டாராம்..மேலும் ஓரு இடைக்கால தடையும் வாங்கினாராம்.(எதுக்கான இடைக்கால தடை?) அந்த தடை நிர்வாகத்தினைப்பாதிக்கும் என வரதராஜன் நிறுத்தி வைக்க உத்தரவு வாங்கினாராம்.

பின்னர் கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம் முறையாக அறிவிக்கப்பட்டு மூன்று முறைக்கூடியுள்ளதாம். இப்போது யார் நிர்வாக இயக்குநர்,, சேர்மன் என்ற சர்ச்சை நீடிக்கும் போது யாருக்கு கூட்டம் கூட்ட அறிவிப்பு கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது ஒரு நல்ல கேள்வி இப்போ நீங்க கேட்கணுமே? கேட்டாச்சா...சரி அடுத்துப்போவோம்.

முறையே 20-9-2011,10-10-2011, மற்றும் 2--01-2012 ஆகிய நாட்களில் கம்பெனி இயக்குநர்களின் நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதில் திரு.ஜவகர் பழனியப்பன், திருமதி.கோதை பழனியப்பன் ஆகியோர் கலந்துக்கொள்ள தவறியதால் ,அவர்கள் இயக்குநர்கள் என்ற பொறுப்பையும் இழந்துவிட்டார்களாம். எனவே இனிமேல் மேற்கொண்டவர்களுடன் யாரும் குமுதம் தொடர்பாக தொடர்புக்கொள்ளக்கூடாதாம்.

இப்போது என்னுள் சிலக்கேள்விகள்,

# கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கு இப்போது ஒரு நிர்வாகம் அதே பிரச்சினையின் மீதே இயக்குநர்கள் கூட்டத்தினை வைத்தே தீர்ப்பு சொல்ல முடியுமா? பின்னர் கோர்ட் எதுக்கு?

#மேலும் மிக குறுகிய காலத்தில் ஏன் மூன்று இயக்குநர்கள் கூட்டம் நடத்தப்பட்டது? அவர்கள் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதற்காகவா? இங்கு கவனிக்க வேண்டியது குமுதம் அலுவலகம் செல்ல காவல் துறைப்பாதுகாப்பினை இருவரும் கேட்டு மறுக்கப்பட்டுள்ள ஒரு சூழல்.

# சர்ச்சைக்குறிய நிலையில் இக்கூட்டத்தை கூட்டும் அதிகாரம், தலைமை தாங்கும் பொறுப்பு யாருக்கு?

# கணவரின் சொத்துக்கு மனைவி பாத்தியதை இல்லையா?

#தந்தையின் சொத்துக்கு மகன் பாத்தியதை இல்லையா, அவர் வெளிநாட்டில் வாழ்ந்து ,அங்கேயே குடியுரிமைப்பெற்றிருந்தாலும்.

#நியமிக்கப்பட்ட ,அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாக இயக்குநர்,ஆனால் அது அவரது சொத்து அல்ல என்றாலும் உரிமைக்கொண்டாட முடியுமா?

# இந்து பிரிக்கப்படாத குடும்ப சொத்துரிமை சட்டம் இதில் செல்லாதா?

இப்போ குமுதம் யாருக்கு தான் சொந்தம்? தெரிஞ்சா சொல்லுங்க யாராவது.


பின் குறிப்பு:

மேல் நிலைப்பள்ளி, கல்லூரிக்காலங்களில் பலப்பத்திரிக்கைகளுக்கும் அதிகம் எழுதி அனுப்புவேன்(5 ஆம் வகுப்பிலேயே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டேன், எப்போவாது கல்கண்டு, சூப்பர் நியூஸ் (சூப்பர் நாவல்,-சுபா வகை) அதில் வரும்) பெரும்பாலும் கிணறு-கல் தான். ஆனால் குமுதத்தில் மட்டும் அவ்வப்போது வரும், ஒரு நம்பிக்கையை தரும். பல பத்திரிக்கைகளிலும் பெரும்பாலும் வாசகர் கடிதம் வரும். பிலாக் ஆரம்பித்த காலத்திலிருந்து அனுப்புவதில்லை, நாம எழுதி, இவனுங்க என்ன பரிசீலனை செய்றது என்ற ஒரு எண்ணம் தான்(கொஞ்சம் ஓவர் குசும்பு உனக்குனு சொல்வது கேட்கிறது).அக்காலத்தில் அச்சில் அடிக்கடி நம்ம பேரைப்போட்ட குமுதத்தில் புகைச்சல் என்பது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக நெருடவே செய்கிறது.

Saturday, December 24, 2011

விவசாயி படும் பாடு-2


விவசாயி படும் பாடு-1 இன் தொடர்ச்சி....



ஒரு நாட்டில் அனைவரும் வாங்கும் திறனுடன், மானிட வாழ்வியல் குறியீடு அதிகமாக இருக்க வேண்டும் எனில் அங்கே உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இணக்கமான சந்தை பொருளாதாரம் இருக்க வேண்டும். அப்படி அனைவரும் சுபிட்சமாக இருக்கும் பொருளாதார நிலை உபரி பொருளாதார நிலை எனப்படும்.(surplus economy)

பொருளாதார உபரி என்பது உற்பத்தியாளர் உபரி, நுகர்வோர் உபரியை சார்ந்தது.

உற்பத்தியாளர் உபரி(producer's surplus):

விவசாயி தான் விற்க விரும்பும் விலையை விட சந்தையில் ஒரு கூடுதல் விலைக்கு விற்க இயல்வதால் கிடைக்கும் அதிக தொகையின் மூலம் விளையும் நன்மையே ஆகும்.

உ.ம்: 10 ரூபாய்க்கு விற்றால் போதும் என்ற மன நிலையில் சந்தைக்கு வரும் விவசாயிக்கு 11 ரூபாய்க்கு விலைப்போனாலே ஒரு திருப்தி, லாபம் வரும் அல்லவா.

நுகர்வோர் உபரி(consumer's surplus):

நுகர்வோர் தான் வாங்க விரும்பும் விலையை விட சந்தையில் குறைவான விலைக்கு பொருட்கள் கிடைத்தால் அதே பொருளை இன்னும் அதிகம் வாங்கி நுகர்வது.

உ.ம்: ஒரு குவார்ட்டர் 100 ருபாய் என நினைத்து சரக்கு வாங்க கடைக்கு போய் குவார்ட்டர் 50 ரூபாய் எனக்கிடைத்தால் 100 ரூபாய்க்கும் ஒரு அரைப்புட்டி மது வாங்கி அருந்துவதால் கிடைக்கும் நுகர்வு இன்பமே இது. வழக்கமாக புதுவை செல்லும் குடிமக்கள் இப்படித்தான் மலிவாக கிடைப்பதால் கால்ப்புட்டி குடிப்பவரும் அரைப்புட்டி அடித்து அதிக நுகர்வு உபரி அனுபவிக்கிறார்கள்.

ஹி..ஹி மனசில நச்சுனு நங்கூரம் பாய்ச்சினா போல பதியனும் என்று தான் இந்த உதாரணம் :-))

உற்பத்தி அதிகம் ஆகும் போது பொருளின் நுகர்வு தேவை அதே அளவு இருந்தாலும் ஒரு நிலைக்கு மேல்  நுகர்வு அதிகம் ஆகாத காரணத்தால் தேவை குறைந்து விலை விழும். "உற்பத்தியாளர் உபரி "குறையும். அதாவது அவருக்கு கிடைக்கும் லாபம் குறையும்.

அதே போல உற்பத்தி குறையும் போது நுகர்வு தேவை ஒரு குறைந்த பட்சம் என்ற அளவிலேயே இருக்கும், அதனை விட கீழே போகாது, ஆனால் அதனை பூர்த்தி செய்ய கூட தேவையான உற்பத்தி இல்லாத போது தேவை அதிகரிக்கும், விலை அதிகரிக்கும் , இதனால் நுகர்வோர் கூடுதலாக வாங்கி அனுபவிக்கும் " நுகர்வோர் உபரி"  குறையும்.

அதாவது கை நிறைய பணம் எடுத்து சென்று பை நிறைய பொருள் வாங்க இயலாது, பை நிறைய பணம் எடுத்து சென்றால் மட்டுமே கை நிறைய பொருள் வாங்க இயலும்.

surplus economy:


இந்நிலையில் தான் உணவுப்பொருள் பணவீக்கம்(food price inflation) என்பது அதிகரிக்கும்.

ஒரு நல்ல பொருளாதார சூழல் உள்ள நாட்டில் , உற்பத்தியாளர் உபரிக்கும், நுகர்வோர் உபரிக்கும் ஒரு சம நிலை நிலவும் விலைக்கு சந்தையில் விலை இருக்கும். அதாவது உற்பத்தியாளனுக்கும் விலைக்கட்டுப்படியாகும், நுகர்வோருக்கும் வாங்கும் விலையில் பொருட்கள் கிடைக்கும்.இந்நிலையை "உபரி பொருளாதார சமநிலை" நிலை என்பார்கள்.

நம் நாட்டில் கூடுதல் விலைக்கு ஒரு பொருள் விற்பனை ஆனாலும் அந்த கூடுதல் விலையான பணம் உற்பத்தியாளர் ஆன விவசாயிக்கு இந்தியாவில் போய் சேர்வதில்லை, அது வியாபாரிகள் , இடைத்தரகர்களுக்கே போய் சேர்கிறது.

இந்தியாவில் உற்பத்தியாளர் உபரி என்பது வியாபாரிகள்/ இடைத்தரகர்கள் உபரியாக அவர்களுக்கு போய் சேர்கிறது. விவசாயி வழக்கம் போல வானத்த பார்த்தேன் ,பூமிய பார்த்தேன் லாபத்த இன்னும் பார்க்கலையேனு சோக கீதம் பாடிக்கொண்டு இருக்கிறான்.

இப்போ எப்படி விவசாய விலைப்பொருளை உற்பத்தி செய்பவன் பலன் அடையாமல் அதனை வாங்கி விற்கும் வியாபாரியும், இடைத்தரகர்களும் லாபம் அடைகிறார்கள், நுர்கவோரும் அதிகம் பணம் இழக்கிறார்கள் என்பதனை பார்க்கலாம்.

அரிசி இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் உணவாக உண்ணப்படும் நிலையான உணவு. அனைவர் பசியும் தீரும் வண்ணம் அரிசி உற்பத்தி இருக்க வேண்டும் இல்லை எனில் பட்டினி சாவுகள் தான் ஏற்படும்.

இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தி 132 மி.மெ .டன்கள், ஆண்டு சராசாரி நுகர்வுத்தேவை 128 மி.மெ.டன்கள் மட்டுமே அதாவது தேவையை விட உற்பத்தி அதிகம் எனவே பெரும்பாலும் அனைவருக்கும் அரிசி கிடைத்து விடும். இப்படி உபரி இருந்தாலும்  3 வேளை முழுதாக உணவு அருந்தும் நிலை அனைவருக்கும் இல்லை. கிட்ட தட்ட 40% மக்கள் வறுமையின் நிறம் சிவப்பு என்கிறார்கள்.காரணம் அனைவராலும் வாங்க முடிவதில்லை.

இந்திய உணவுக்கழக கிடங்குகளில் கிடந்து பல லட்சம் டன் உணவுத்தானியங்கள் புழுத்துப்போகின்றன. பின்னர் அவை கால் நடைத்தீவன தானியமாக குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது.

உபரி உணவு தானியம் பசியால் வாடும் மக்களுக்கு செல்லாமல் வீணாகவோ அல்லது மலிவான விலைக்கோ அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்பதனை CNN-IBN  தளத்தில் உள்ள செய்தி காட்டுகிறது.

சுட்டி:

CNN_IBN

இந்தியாவில் தான் அறுவடைக்கு பின் ஏற்படும் உணவுத்தானிய இழப்பு விகிதம் அதிகம்(சுமார் 40%) என சர்வதேச நெல் ஆய்வு மையம் , பிலிப்பைன்ஸ், சொல்கிறது.

இலவச அரிசி, பொது விநியோக திட்டம் என பல மாநிலங்களில் இருப்பதால் மட்டுமே பெரும்பாலோருக்கு அரிசி கிட்டுகிறது, அதுவும் இல்லை எனில் வறுமைக்கோடு இன்னும் பெரிதாக வளர்ந்து இருக்கும்.

தமிழக அரசின் இலவச அரிசி திட்டம்:




தொழில் நுட்பத்தில் வளர்ச்சி, சந்திரனில் நீர் இருக்கா என எட்டிப்பார்க்கிறாங்க, உள் நாட்டில ஒரு கால்வாய்ல கூட தண்ணி தரமாட்டாங்க, பசுமை புரட்சி, உற்பத்தியில் தன்னிறைவு என ஒருபுறம் ஆனால் மறுபுறம் அதனை அனுபவிக்க இயலாத மக்கள் கூட்டம் என இந்தியா காலம் காலமாக கஷ்ட ஜீவியாகவே இருக்கிறது ஏன்?


பட்டினி சாவுகள் பற்றி தெரிந்துக்கொள்ள் இந்த சுட்டிகளை அழுத்தவும்:

1)ஒரிசா பட்டினிச்சாவு


2)ஒரிசா பட்டினிச்சாவு

பட்டினிச்சாவுகள் ஒரிசாவில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் உள்ளது. மேலும் விவசாயத்தில் நட்டம் ஏற்ப்பட்டதால் பலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்கள்.

BBC news ,


//Some 200,000 farmers have committed suicide in India since 1997.

Drought, a fall in crop prices and an increase in the cost of cultivation are cited as reasons for the farmers' plight.

Media reports say that 680 farmers have taken their lives in western Maharashtra state this year, while another 98 have committed suicide in southern Andhra Pradesh and Kerala states since October.//

சுட்டி:
BBC news

BBC செய்தி வெளியீட்டில் இந்தியாவில் 1997 முதல் இன்றுவரை சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 680 பேர் மஹாரஷ்ராவிலும், 98 பேர் தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திராவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தற்கொலை செய்துள்ளார்கள்.

வறட்சி,உற்பத்தி செலவு அதிகம், குறைவான சந்தை விலை, கடன் தொல்லை ஆகியவையே காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

சுமார் 60% சத வீத மக்கள் விவசாயம், மற்றும்  விவசாய தொழிலாளிகளாக இருக்கிறார்கள் அவர்கள் தான் வறுமைக்கோட்டினை வரையும் ஓவியர்கள். காரணம் அவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை.

விவசாயி என்ன தான் பாடுப்பட்டு அதிகம் விளைவித்தாலும் உரிய விலை இல்லாமல் விற்றுக்கஷ்டப்படுவதால் ,நிலம் வைத்திருக்கும் விவசாயி , அவர் நிலத்தில் உழைக்கும் விவசாய தொழிலாளிக்கும் உரிய ஊதியம் அளீக்க முடியாத நிலை தான் இதற்கு காரணம்.இதன் விளைவாக விவசாயத்தொழிலாளி அதிக வருமானம் தேடி மாற்று வேலைக்கு போகிறான், இந்நிலை தொடர்ந்து அதிகரித்து வருவது அபாயமானது, பின்னர் நிலம் வைத்து விவசாயம் செய்பவரும் அதனை விட்டு வெளியேற நேரிடும். தற்போது உபரி உற்பத்தி இருக்கும் போதே 40% சதம் வறுமைக்கோடு என்றால் உற்பத்தி குறைந்தால் என்னாகும்?

சரி இப்போது அரிசி உற்பத்தியின் பொருளாதாரம் பார்ப்போம்.

சந்தையில்,

ஒரு மூட்டை சன்ன ரக நெல்= 1180 ரூபாய்,

ஆனால் ஒரு மூட்டை சன்ன ரக அரிசி = 3000-3500 ரூபாய்

இந்த பரிமாண மாற்றம் எப்படி எனப்பார்ப்போம்.இப்படி உற்பத்தி இடத்தில் இருந்து நுகர்வோரை அடையும் போது மதிப்பு கூடுவதை விநியோக மதிப்பு சங்கிலி (supply value chain) என்பார்கள்.

நெல் அறவை திறன்* ஒரு நவீன அரிசி ஆலையில் 85% முதல் 90% *வரை இருக்கும் என தகவல் உள்ளது.

அரிசி அறவை எந்திரம்:



அதாவது 100 கிலோ நெல் அறைத்தால் குறைந்தது 85 கிலோ அரிசி கிடைக்கும்.

நாம் இன்னும் கொஞ்சம் சேதாரம் சேர்த்துக்கொள்வோம் 100 கிலோ நெல் அறைத்தால் 75 கிலோ கிடைக்கும் என வைத்துக்கொள்வோம்.

இரண்டு மூட்டை சன்ன ரக நெல் அரிசியாக மாறி அளிக்கும் வருமானம்,

நெல் 2 மூட்டை 200 கி= 1180X2=2360 ரூபாய்கள்.

அரிசி கிடைப்பது 75% திறன் எனில்= 200*75/100=150 கிலோ.

எஞ்சிய 50 கிலோ தவிடு, நொய் ஆகும் மொத்தமாக அனைத்தும் தவிடு என்றே வைத்துக்கொள்வோம்.தவிட்டில் இருந்து அரிசி எண்ணை, கால்நடை தீவனம் தயாரிப்பதால் அதற்கும் தேவை, விலை உண்டு.

அரிசி 100 கிலோ = 3000 எனில் ,

150 கிலோ அரிசி =4500 ரூபாய்,

50 கிலோ தவிடின் விலை= சுமார் 400 ரூபாய்*

மொத்த சந்தை மதிப்பு= 4900 ரூபாய்.

அரவைக்கூலி =200 ரூபாய் எனில் ,

தள்ளுபடி செய்தால் நிகர வருமானம் =4900-200=4700 ரூபாய்.

2 மூட்டை நெல் =2360 ரூ

அதிலிருந்து பெறப்படும் அரிசியின் மதிப்பு=4700 ரூ,

லாபம் = 4700
                 -2360
------------------
                   2340 ரூபாய்
----------------------


*தவிடு விலை:

//Punjab Rice Millers Association president Tarsem Saini, when questioned on this issue, said rice bran, which was earlier selling at around Rs 850 per quintal, was presently going for only Rs 500 to Rs 550 per quintal. He said similarly rice husk, which was till recently selling for Rs 300 to Rs 350 per quintal, was now being sold at Rs 225 to Rs 250 per quintal.//

http://www.tribuneindia.com/2008/20081126/punjab1.htm

*அறவைத்திறனுக்கு:

The most effective and economical means of rice hulling operation giving a hulling efficiency from 85% to 90% depending on Paddy type

http://www.rimac-ricemachinery.com/page3.html


இதன் மூலம் தெரிவது என்னவெனில் , வியாபாரிக்கு அவன் முதலீட்டின் மீது சுமார் 100 சதம் அளவுக்கு லாபம் ஈட்டப்படுகிறது.

இந்த 2340 ரூபாய் என்பது மொத்த வியாபாரி, இடைத்தரகர் ,குறு வியாபாரி, சிறு வியாபாரி, என அனைவராலும் பகிறப்படுகிறது.

ஆனால் மூலப்பொருளான நெல்லை விளைவித்த விவசாயிக்கோ 10 சதம் கூட லாபம் வருவதில்லை என்பதனை முந்தையப்பதிவில் பார்த்தோம்,

நான்கு மாதம் வயலில் பொருள் முதலீடு, உழைப்பு முதலீடு செய்து முதுகொடிய பாடுப்பட்டால் மொத்த குடும்பத்திற்கும் 4400 ரூ தான் வருவா ஆக கிடைக்கிறது(அதுவே சந்தேகம் தான் பல மாநிலங்களில் உற்பத்தி செலவு , வருவாய் விட அதிகம் ஆக இருக்கிறது நிகர நட்டம் என முந்தையப்பதிவில் பார்த்தோம்),.

நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தலைக்கு தலா மாதம் 275 ரூ தான் வருமானம், இது திட்டக்கமிஷனால் நிர்ணயம் செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு மேல் வசிப்பவரின் மாத சம்பளம் ஆன 960 ரூ என்பதனை விடவும் வெகு வெகு குறைவு!

மக்களுக்கு மலிவாக உணவு கிடைக்க வேண்டும் என அரசாங்கம் நினைப்பதில் தவறில்லை ஆனால் அதனை நெல்லின் அடிப்படை குறைந்த பட்ச ஆதரவு விலையை குறைவாக வைப்பதன் மூலம் செய்ய நினைப்பதால் தான் விவசாயிக்கு இந்நிலை.

தமிழக அரசின் நெல்கொள்முதல் கணக்கு:



அவ்வளவு குறைந்த விலைக்கு நெல்லை வாங்கினாலும் அரிசி என்னமோ கிலோ 30 ரூபாய்க்கு மேல் தானே விற்பனை ஆகிறது, அப்படி எனில் அரசு மலிவாக உணவு கிடைக்க போட்ட திட்டம் மக்களை சென்றடையவில்லை, விவசாயிக்கும் பலன் தறவில்லை தானே.

குவிண்டால் நெல் 1500 என அரசு நிர்ணயித்தாலும் இப்போது விற்கப்படும் அரிசி விலைக்கே விற்கலாம், அதிலும் லாபம் வரும் ஆனால் அதனை வியாபாரிகள் விரும்புவதில்லை, எனவே உடனே விலையை ஏற்றி விடுவார்கள். நெல் விலை ஏறிப்போச்சு அதான் நாங்க விலை ஏத்தினோம் என காரணம் சொல்வார்கள்.

மேலும் செயற்கையாக தட்டுப்பாட்டினையும் உருவாக்கி இயல்பினை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.

மேலும் எப்பொழுதும் மொத்த கொள்முதல் விலையில் அரிசி விலை என்பது குறைவாகவே இருக்கு ஆனால் சில்லறை விற்பனைக்கு வரும் போது தான் ஏறி விடுகிறது.

அரிசி மண்டி:










மொத்த விலையில் அரிசி ஒரு குவிண்டால் சுமார் 1500 முதல் 1800 வரை மட்டுமே, ஆனால் சில்லறை வர்த்தகர்கள் மக்களுக்கு விற்பது 3000 ரூபாய்.

சில்லறை வர்த்தகர்கள் எப்படி விலையை தீர்மானிக்கிறார்கள் எனில் அவர்கள் வாங்கும் பொருளின் அளவு, விற்கும் அளவு, அவர்கள் போட்ட முதல், கட்ட வேண்டிய கடன், தினசரி தண்டலில் கடன் வாங்கி இருப்பார்கள். இதுக்கு ஏற்றார்ப்போல விலையை கூட்டி அல்லது குறைப்பார்கள், உண்மையான அரிசி என்ற பொருளின் உற்பத்தி அளவு,சந்தை வரவு மற்றும் நுகர்வு தேவையின் அடிப்படையில் அல்ல விலை நிர்ணயம்.

இதற்கு உதாரணம் இந்து பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியே,

"According to M. Jayapalan, vice-resident, Red Hills Paddy and Rice Wholesale Merchants Association, there has been no increase in wholesale prices of rice recently.

“The wholesale rate of raw rice is Rs.28. Seasoned raw rice is only a few rupees more. It may be the best variety of rice that a retailer is selling, but Rs.42 is certainly overpricing it,” he says.

Speaking of wholesale rates of boiled rice, he said it ranged from Rs.27 to Rs.34 a kg. "

“More than a three rupee-margin is unfair. Even we are into retail sales, but we do not price it so high,” Mr.Jayapalan adds. "

சுட்டி:

the hindu news paper

இந்த செய்தி மொத்தக்கொள்முதலில் கிலோ 27 முதல் 34 என இருந்த போது சில்லறை விலையில் 42 க்கு விற்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
தற்ப்போது மொத்தக்கொள்முதலில் கிலோ அரிசி 15 ரூ முதல் 18 ரூ என்ற அளவில் உள்ளது சில்லறை விலையில் கிலோ அரிசி 30 ரூ முதல் 35 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விவசாய சந்தை நிலவரம் இங்கே:
சுட்டி:

agri market

அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை எதிர்ப்பார்த்தது போல நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியினை கொடுக்கவில்லை, விவசாயிக்கு லாபத்தையும் கொடுக்க வில்லை, இடையில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் மட்டுமே தங்கள் இஷ்டம் போல லாபம் வைத்து அனுபவிக்கிறார்கள். இது தான் இந்தியா!

உற்பத்தியாளர் ஆன விவசாயி என்ன விலைக்கு விற்கிறான், கடையில் நாம் என்ன விலைக்கு வாங்குகிறோம், இரண்டுக்கும் என்ன தொடர்பு, விலை உயர்வு ஏன் என்பது போன்றவற்றில் போதுமான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.

செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை ஏற்றம் என செய்தி வந்தால் அச்சச்சோ விலை வாசி போறப்போக்கப்பார்த்தா நாட்டுல மனுஷன் வாழ முடியாது போல இருக்கே என உச்க்கொட்டிவிட்டு, தொலைக்காட்சில அடுத்து என்ன நிகழ்ச்சினு போய்விடுவோம்.

சரவண பவன் போன்ற உணவங்களில் காத்தாடிப்போட்டா பறக்கிறாப்போல வைக்கிற நாலு இட்லிக்கு 25 ரூ சொன்னாலும் சப்புக்கொட்டி சாப்பிடுவோம்! கூடவே வித விதமா டீ ஸ்பூன் அளவு சட்டினி பல வண்ணத்தில் கொடுப்பதையும் சூப்பர்ல என சிலாகிப்போம்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் விவசாயம் அழியும்னு யாராவது சொன்னாலும் சுதேச உணர்வுப்பீறிட ஆமாம் போடுவோம்! ஏற்கனவே நம்ம அண்ணாச்சிகளே அழித்துக்கொண்டிருப்பதை சுலபமாக மறந்துவிடுவோம்.

நம் நாடு  பாரதம் என்ற ஒரு  நோஞ்சானாகவும் இந்தியா என்ற ஒரு வளமான நாடாகவும் வழக்கம் போல இரு மாறுப்பட்ட கூறுகளாக வளர்ந்துக்கொண்டிருக்கும் .வேற்றுமையில் ஒற்றுமையாம் ,2020 இல் நாம தான் வல்லரசு! வாங்க கனவு காணலாம்!


பின்குறிப்பு:


புகைப்படங்கள் , பிபிசி,இந்து நாளிதழ்,ரைஸ்மெக்,விக்கிபீடியா ,IRRI,outlookஆகிய  தளங்களில்  இருந்து பயன்ப்படுத்தப்பட்டுள்ளது, நன்றி!

Friday, December 16, 2011

விவசாயி படும் பாடு!-1


      விவசாயி படும் பாடு!-1








உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சொலவடை வால்மார்ட், யூக வணிகம் , அந்நிய முதலீடுகள் என்ற சொற்பதங்களை எல்லாம் நாம் கேள்விப்படும் காலத்திற்கு முன்னர் இருந்தே தமிழ்நாட்டில் நிலவி வருவது.

எனவே இக்காலத்தில் விவசாயம் எந்த அளவு லாபகரமானது , அதை தொடர்ந்த்து விவசாயிகள் செய்ய ஏதுவாக இருக்கிறதா என இப்பதிவில் பார்க்கலாம்.

தற்சமயம் நாங்கள் விவசாயம் செய்வதில்லை என்பதால் தமிழ் நாட்டில் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய எவ்வளவு செலவு ஆகும், என்ன வருமானம் கிடைக்கும் என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

கோவை வேளாண் பல்கலைகழக தளத்தில் கீழ்கண்ட விவரங்கள் கிடைத்தது. அத்தளத்தில் உள்ள தகவல்கள் எந்தக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.நடைமுறையில் இதே அளவு செலவு செய்து விவசாயம் செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!



COST OF CULTIVATION (ACRE) in Rs.

 Land Preparation ->1500 ரூ

Seeds & sowing  ->  2000 ரூ


Manures & Manuring ->2500 ரூ

Weeding after cultivation & Irrigation ->1620 ரூ

Plant protection -> 803 ரூ

Harvest and other Expenses (Rs.) -> 2300 ரூ

                                          ______________
       செலவு=                         Total 10723

வருமானம்:

Yield (Kg)  -> 2100

 Gross Income (Rs.):  ->15123-10723=4400 ரூ.


Net income (Rs.) : ->    4400


சுட்டி:

கோவை வேளாண்ப்பல்கலை

கோவை வேளாண்ப்பல்கலைக்கழக தகவல்கள்ப்படியே விவசாயம் செய்யப்பட்டிருந்தாலும் கிடைக்கும் நிகர லாபம் என்பது ரூபாய் 4,400 மட்டுமே என்பதைப்பார்க்கவும்.

 கால அளவின் படி நெல் வகைகள்:

#குறுகிய காலப்பயிர்: 110-125 நாட்கள்

#இடைக்காலம் முதல் நீண்டக்காலப்பயிர்: 120-170 நாட்கள்.

#நீண்டக்காலப்பயிர் : 170 நாட்கள்.

ஒரு குறுகிய கால நெல் சாகுபடி என்பது சுமார் 115- 125 நாட்கள் கொண்டது. அதாவது சுமார் நான்கு மாதங்கள் என வைத்துக்கொள்ளலாம்.

நான்கு மாதங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய் சுமார் 4,400 ரூபாய் மட்டுமே வருகிறது, ஒரு சிறு விவசாயிக்குடும்பத்தில் தாய்,தந்தை,மகன்,மகள் என நான்கு நபர்கள் இருக்கிறார்கள்,அவர்கள் நான்குப்பேரும் அந்த ஒரு ஏக்கரில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள், அதன் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள்.

அப்படியானால் ஒருவருக்கு என்ன வருமானம் கிடைக்கும் =4,400/4= 1100 ரூபாய்.

இந்த 1100 என்பதும் ஒரு மாத வருமானம் அல்ல ஒருவருக்கு நான்கு மாத உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி!

அப்படி எனில் ஒருவருக்கு ஒரு மாதத்தில் என்ன வருமானம் கிடைக்கும்,

1100/4= 275 ரூபாய் மட்டுமே!

ஒரு தனி நபர் மாதம் 275 ரூ வருமானத்தில் என்ன வாழ்க்கை வாழ முடியும் இந்தியாவில்?

இது ஏதோ நானே கணக்கிட்டு மிகைப்படுத்தி சொல்லவில்லை, கோவை வேளாண்ப்பல்கலையில் காஸ்ட் ஆப் கல்டிவேஷன் என பட்டியல் இட்டு வைத்திருப்பதன் அடிப்படையில் சொல்கிறேன்.சந்தேகம் இருப்பவர்கள் அச்சுட்டியில்ப்போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால் உண்மையில் விவசாயிக்கு மாதம் அந்த 275 ரூபாய் கூட கிடைப்பதில்லை, வரவை விட செலவு அதிகம் ,என ஒரு ஆய்வு சொல்கிறது. ஒவ்வொரு போகத்திலும் சுமார் இரண்டாயிரம் நட்டம் அடைகிறானாம்.


மாநில வாரியா நெல் சாகுபடியில் ஏற்படும் நட்டம்:






சுட்டி:



நெல்சாகுபடிவருவாய்

  
அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது விவசாய செலவினை ஈடுகட்டுவதாக இல்லன என்பதை தெளிவாக காட்டியுள்ளார்கள்.இந்த சுட்டியில் போய்ப்பார்த்தால் நிகர நட்டம் வருவதாகவே சொல்லி இருக்கிறார்கள்.அதில் உள்ள அட்டவணையையும் பார்க்கவும்.

திடீர் வெள்ளம், மழை இல்லா வறட்சி, பூச்சி தாக்குதல், குறைவான விளைச்சல் என இதில் ஏகப்பட்ட சோதனைகள் வேறு. அதை எல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே அந்த குறைந்த தொகையான 275 ரூபாயை ஒரு விவசாயிக்கண்ணால் பார்க்க முடியும் நம் நாட்டில்!

ஒரு மனிதன் 3 வேளையும் பசியாற நாளுக்கு 32 ரூபாய் போதும் என சொன்ன திட்டக்கமிஷன் அறிக்கையை விட இத்தொகை மிக குறைவு.

பலருக்கும் நன்றாகவே தெரியும் 32 ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் வாழ முடியாது என, அதனால் திட்டக்கமிஷனின் அறிக்கையை பலரும் கிண்டல் செய்தோம், ஆனால் யதார்த்த வாழ்வில் ஒரு விவசாயிக்கு மாதம் 275 ரூபாய் தான் வருமானம் வருகிறது.

திட்டக்கமிஷன் பரிந்த்துரைப்படி ஒருவருக்கு மாத வருமானம் = 32 ரூX30 =960 rs  வரவேண்டும்.

ஆனால் அந்த தொகையை விட பல மடங்கு குறைவானதாக இருக்கே.

இப்படி எல்லாம் இருந்தும் விவசாயி எப்படி ஜீவித்திருக்கிறான், அவன் வயலில் வேலை செய்த நாட்களைப்போக பிற நாட்களில் கூலி வேலைக்கு போயே வாழ்கிறான்.மேலும் நமக்கெல்லாம் நயமான பொன்னியை விளைவித்துக்கொடுத்துவிட்டு புழுத்துப்போன அரசின் இலவச அரிசியே அவன்  பசியைப்போக்குகிறது.

இத்தனை சோதனைகளுக்கும் நடுவிலும் விவசாயத்தை விடாமல் யாருக்காக அவன் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறான்?


எல்லாம் நமக்காக தானே! உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்,
2010 ஆம் ஆண்டில் 132 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நமக்கு தேவை 128 மி.மெ.டன் தான். அதாவது விவசாயி எத்தனை கட்டம் வந்தாலும் அதை விட மனம் இல்லாமல் தொடர்ந்து விவசாயத்தில் இருப்பதாலேயே   நமக்கு தேவைக்கு உணவு உற்பத்தி ஆகிறது. இது எத்தனைக்காலம் தொடரும்.

இப்பொழுதே கிராமப்புரத்தில் வறுமை, வேலை வாய்ப்பின்மையால் பலரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அங்கே விவசாய வேலை ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு.






ஆட்கள் தட்டுப்பாடால் நடவு முதல் , அறுவடைவரை எந்திரம் ஆகி விட்டது.

கட்டுமானத்தொழிலுக்கு வேலைக்கு போனால் குறைந்த பட்சம் 200 ரூ ஆனால் விவசாய வேலைக்கு அதிக பட்சமே 150 ரூ தான்! சம்பளம் அப்போ ஆட்கள் எங்கே வேலைக்கு போவார்கள்.


எவன் எப்படி போனா என்ன , எனக்கு வெளிநாட்டுக்காரன் நல்லா  சம்பளம் தறான் , வாங்கி தின்ன பொருட்கள் இருக்குனு இருக்கவங்க எல்லாம் , விவசாயம்னா என்னனு எனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லைனு இருக்காங்க, ஒரு காலம் வரும் விவசாயம் செய்ய ஆளே இருக்காது, விளை நிலங்கள் எல்லாம் தரிசாக விடப்படும்,உணவுப்பொருட்கள் எல்லாம் பணக்காரர்களுக்கே ஆடம்பரம் ஆகும், அப்போ 120 கோடி மக்களுக்கும் எங்கே உணவுக்கு கை ஏந்துவார்கள்!


இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவாங்களாம், அவன் கிட்டே வேலைக்கு சேர்வாங்களாம், இந்தியாவிலவும் அவன் கம்பெனி வச்சா வேலைக்கு போவாங்க,ஆனா  அவன் கடை வச்சா விவசாயம் அழியும் சொல்வாங்க.

எனவே வெளிநாட்டில /இந்தியாவில் மென்பொருளில் போய் வேலை செய்து தனது  குடும்பத்தை மட்டும் வளமாக்குபவர்கள் சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய்!

ஆனால் ஆதி காலம் தொட்டே விவசாயிக்கு ஒரு ரூபாய் கூட லாபம் வராம செய்தவங்க வெளிநாட்டுக்காரங்களா?  இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா அந்நிய மூல தன எதிர்ப்பை சொல்லுங்க மக்களே!




சிறு நகரங்களை சுற்றியுள்ள இடங்களோ வீட்டு மனைகளாக மாறி வருவதால் விளைநில பரப்பு சுருங்கி வருகிறது.

மேலும் அதிக பணம் வைத்திருப்பவர்கள் எதிர்கால முதலீடாக நிலங்களை வாங்கிப்போட்டு விவசாயம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இந்த வேலையை பெரும்பாலும் செய்வது அயல்நாடு வாழ் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நில மூலதனம் செய்யவில்லை.

ஏன் எனில் சமிபத்தில் சென்னை நகரில் தான் வீடு வாங்க முடியவில்லை கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என புறநகர்ப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாம் என விசாரித்தேன் எல்லாம் 50-70 லட்சம் சொல்கிறார்கள் 1000-1200 சதுர அடி அடுக்ககத்தை.ஒரு கோடிக்கு கூட மகிந்திரா சிட்டியில் வைத்திருக்கிறார்கள். அருண் எக்செல்லோவில் 70 லட்சம்என பீதிக்கிளப்புகிறார்கள்.

ஏன் இப்படி புறநகரிலேயே இந்த விலை எனக்கேட்டதுக்கு கிரவுண்ட் விலையே ஏறிப்போச்சு, எல்லாம் எதிர்காலத்திற்காக சும்மா வாங்கிப்போட்டு இடத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அடுக்கு மாடியில்  எல்லாம் மென்பொருள், அயல்நாடு வாழ் இந்தியர்கள் தான் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என குண்டைப்போட்டார் விற்பனை மேலாளர்.

நிலத்தின் மீது மதிப்பு ஏறுது ஆனால் அதில் விளையும் விளைச்சல் மீது எதுவும் ஏறவில்லை! இவங்க எல்லாம் வருங்காலத்தில என்ன விலைக்கு விற்றாலும் சாப்பிடுவாங்களோ?

இப்படி பல வகையிலும் விவசாயத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் விவசாயிகள் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் இருப்பார்கள்.

மூலப்பொருட்கள் ஆன உரம், பூச்சி மருந்து, விதை நெல் , மின்சாரம் , டீசல் ,மேலும் விவசாய தொழிலாளர் சம்பளம் என அனைத்தும் வேகமாக விலை ஏறி வருகிறது ஆனால் அதே வேகத்தில் அவன் விளைச்சளுக்கு ஆன விலை ஏறுவதில்லை.

இடைத்தரகர்களும், கமிஷன் மண்டிக்காரர்களும் அரசு என்ன குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கிறதோ அதன் மீது ஒரு 10 ரூபாய் குவிண்டாலுக்கு வைப்பார்கள்.

சமயத்தில் அரசின் தமிழ்நாடு வாணிபக்கழகம் போதுமான நெல்லை கொள்முதல் செய்யவில்லை, அல்லது அப்பருவத்திற்கான கொள்முதலை நிறுத்தி விட்டால் , தரகர்கள், கமிஷண் மண்டிக்காரர்கள் வைப்பதே விலை.

இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை:


4. Accordingly, the Government hereby permit the Tamil Nadu Civil
Supplies Corporation to procure paddy under the Decentralized Procurement
System, during the Khariff Marketing Season 2011-2012, i.e. from 01.10.2011 to
30.9.2012, at the price of Rs.1180/- per quintal for Grade ‘A’ paddy and Rs.1130/-

for Common variety of paddy by opening adequate number of procurement
centers in the Cauvery delta region and other paddy growing areas in the State, in
consultation with the District Collectors on need basis.


சுட்டி:

tngov.msp for paddy

எம்.எஸ் சுவாமிநாதன் பரிந்துரை என்னவெனில் குறைந்த பட்ச ஆதரவு விலை என்னவோ அதனுடன் 50% விலை அதிகம் வைத்து நெல்லை விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என உள்ளது.

தமிழ்நாட்டில் இடுப்பொருட்களின் விலை விவரம்:

யூரியா ஒரு மூட்டை= 310 ரூ

டிஏபி ஒரு மூ= 900 ரூ

பொட்டாஷ் ஒரு மூ =620

சூப்பர் காம்ப்ளக்ஸ் ஒரு மூ= 870 ரூ.

மேற்சொன்ன விலை ஒரு விவசாய இடுப்பொருட்கள் கடையில் நேரடியாக விசாரித்துபோட்டுள்ளேன்.

#அரசு நிர்ணயம் செய்துள்ள உரங்களின் விலை, இந்து செய்தித்தாளில் இருந்து,

//The government has fixed Rs. 278.88 as the price per 50 kg bag of urea, Rs. 312 for IPL Potash, Rs. 315 Zuari potash, Rs. 624 for Iffco DAP, Rs. 630 for Zuari DAP, Rs. 656 for Spic DAP, Rs. 488.50 for Factamfos 20:20:20:0, Rs. 520 for Iffco 20:20:20:13 and Rs. 567.60 for Zuari 10:26:26, a press release says.//


சுட்டி:

the hindu


நடைமுறை விலை மற்றும் அரசு நிர்ணயத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும்.

விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,
ஆண்= 100ரூ (6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு 150 ரூ

பெண்=80(5 மணிநேர வேலை, 100 ரூ)

விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,

சுட்டி:

அரசு சம்பளநிர்ணயம்


பின்னர் பூச்சி மருந்து தேவைக்கு ஏற்ப எப்படியும் ஒரு ஏக்கருக்கு 1000 ரூ, விதை நெல் ஒரு 1000 ரூபாய் வரும்.

இப்படி அனைத்து இடுப்பொருட்களின் விலையும் வருடா வருடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏறி வருகிறது ஆனால் ,விளைச்சலுக்கான விலை மட்டும் மெதுவாக நகர்கிறது.

இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180 விலைக்கு விற்பனையாகும் நெல் நம்மிடம் அரிசியாக வரும் போது மட்டும் அதிக விலைக்கு வருவதேன் இடையில் லாபம் அடைவது யார் என்பதை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

தொடரும்...


.
50-70