Friday, August 31, 2007
சென்னை மத்தியப்பேருந்து நிலையம் இடமாற்றமா?
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய பரிசீலிப்பதாக தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி அறிவித்துள்ளதாக செய்தித்தாள்களில் வந்துள்ளது.
இப்பொழுது அது அவசியமா ,
சென்னை மத்தியப்பேருந்து நிலையம் பற்றி,
*ஆசியாவிலேயே மிக்கபெரிய பேருந்து நிலையம், 37 ஏக்கர் பரப்பு,
*103 கோடி செலவில் கட்டப்பட்டது!
*300 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் வண்ணம் பேக்கள் உள்ளது.
*2000 பேருந்துகள் வந்து செல்கின்றன!
*இலவச கழிப்பிடம் , வாகனம் நிறுத்தும் இடம் , கடைகள் ,உணவுவிடுதிகள் அனைத்தும் உள்ளது!
*தற்போது சிறப்பு நிலை பேருந்து நிலையமாக அங்கீகரிக்கப்பட்டு ISO:9001:2000 சான்றளிக்கப்பட்டுள்ளது.அப்படி சான்று பெற்ற ஒரே இந்திய பேருந்து நிலையம் இது தான்!
இப்படி சகல வசதிகளுடன் புதிதாகக்கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அதற்குள் மாற்ற வேண்டும, புதிதாக புறநகர் பகுதிகளிலில் மூன்றாக பிரித்து திருவான்மியூர், தாம்பரம் , பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நல்ல யோசனைப்போல தோன்றினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை முன்னரே கணக்கிட்டு , அப்பொழுதே மூன்றாகவோ அல்லது இன்னும் கொஞ்சம் புற நகரான பகுதியில் கட்டி இருக்கலாமே.
புதிதாக கட்ட பெரும் செலவு , ஏற்கனவே கட்டியதில் செலவிட்ட 103 கோடியும் தண்டம் , ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஞானோதயங்களுக்கு ஏற்றார் போல திட்டங்களை தீட்டிக்கொண்டு போனால் அதற்கு யார் பணம் செலவு ஆகிறது , எல்லாம் மக்கள் பணம் தானே!
பேருந்து நிலையதிற்கு ISO சான்று அளித்த போது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்...
"After a detailed survey, keeping in mind the traffic density by 2015, the CMDA constructed the "terminus, which was unique in many ways, more particularly the ultra-modern facilities provided for the operation of buses." It was built at an estimated cost of Rs.103 crores, including the cost of 37 acres of land."
2015 இல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள் ஆனால் அதற்குள் , மாற்ற வேண்டும் என ஆலோசிக்கிறார்கள்! புதிய திட்டங்கள், புதிய ஏல ஒப்பந்தம் , புதிய வருமானம் என்ற கணக்கில் செய்கிறார்கள் போல!
சமிபகாலமா 100 அடி சாலையில் கிண்டி கத்திப்பாரா - கோயெம்பேடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது காரணம், மோசமான சாலைகள், சாலை ஆக்ரமிப்புகள் , முறையற்ற பார்க்கிங்கள், ஷேர் ஆட்டோக்கள் நடு சாலையில் நின்று பயணிகளை ஏற்றுவதும் , இறக்குவதும்,கத்திப்பாரவில் மேம்பாலம் கட்டுகிறேன் என்று சாலையை கொத்திப்போட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது என பல காரணங்கள் உள்ளது.இவற்றை முதலில் சரி செய்தாலே பாதி நெரிசல் குறைந்து விடும்.
சிறிது காலத்திற்கு முன்னர், ஆம்னி பஸ்கள் நகரில் வராமல் மதுரவாயல் புறநகர் சாலை வழியாக சென்று வரவேண்டும் என உத்திரவிட்டார்கள் , தனியார் பேருந்துகளுக்கு நட்டம் ஏற்படும் என அவர்கள் யாரையோ கவனித்து மீண்டும் நகருக்குள் வர அனுமதி வாங்கிக்கொண்டார்கள்.முன்னர் போல அவர்களை புறநகர் சாலையில் செல்ல சொல்லலாம் போக்குவரத்து நெரிசல் குறையும்.
அல்லது அனைத்து பேருந்துகளும் நகருக்கு வரும் போது மதுர வாயல் புறநகர் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வரவேண்டும், சென்னையில் இருந்து செல்லும் போது 100 அடி சாலை மார்க்கமாக வழக்கம் போல செல்லலாம் , இதனால் பேருந்துகளுக்கு பயணிகள் வருவதும் தடைபடாது , நெரிசலும் ஓரளவு குறையும்.
மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்தால் பயணிகள் சுமைகளை தூக்கிகொண்டு வேறு வேறு ஊர்களுக்கு செல்லும் இணைப்பு பேருந்துகளை பிடிக்க அலைய வேண்டி இருக்கும்.
Tuesday, August 28, 2007
என்ன வளம் இல்லை இந்நாட்டில்!
இந்த எண்ணிக்கை குறைவென்றாலும் ஒரு நல்ல முன்னுதாரணம் ஆக அமைந்துள்ளது.
பெரும்பாலும் அயல்நாட்டிற்கு வேலைக்கு சென்றாலும் அனைவரின் மனதும் இந்தியாவில் தான் இருக்கும் , வெகு சொற்பமானவர்களே "Dirty country" என்பது போல இந்தியாவை மட்டமாக நினைக்க கூடும். பெரும்பாலோர் ஆத்மார்த்தமாக இந்தியாவின் வளர்ச்சியை விரும்புகிறார்கள்.வருங்காலத்தில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நம் அறிவுத்திறன் குறைந்து அனைவரும் இந்தியாவில் இருந்து செயல்படும் சூழல் வரும் , அந்நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒவ்வொரு மாணவனும் படிக்க என அரசு குறிப்பிட்ட தொகை ஒதுக்குகிறது அப்பணம் பல இந்தியர்களின் உழைப்பில் வந்தது. வரி கட்டுபவர்கள் பணம் மட்டும் அல்ல, சாதாரணமாக ஒரு உப்பு பொதி வாங்கினால் அதில் விற்பனை வரி என எல்லா சராசரி இந்தியனும் அரசுக்கு வருமானம் தருகிறான் , எனவே வரிக்கட்டுவோர் மட்டும் கவலைப்பட வேண்டியது அல்ல, அனைவருக்கும் உண்டு பொறுப்பு!
என்ன தான் வெளிநாட்டில் நிறைய சம்பளம் கொடுத்தாலும் அதனை இந்திய பணத்துடன் ஒப்பிடும் போது தான் அதிகமாத்தெரியும், அன்னாட்டு வாழ்கை முறைக்கு அது சாதாரணமான சம்பாத்தியம் தான். இந்தியாவில் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட வீட்டு வேலைக்கு , கார் டிரைவர் என வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியும் , அயல் நாட்டில் அப்படி வைத்துக்கொள்வது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்.எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களே கார் ஓட்டி , வீடு கழுவி,பெருக்கி , துணி துவைத்து என கஷ்டப்படவேண்டும், வாங்கும் பணத்தை அனுபவிக்க முடியாது. இந்தியாவில் மிதமான சம்பளம் அதற்கு ஏற்ப வாழ்வை அனுபவிக்கலாம்!
இந்த அயல்நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை பற்றி சினிமா நடிகர் விஜய் வேறு தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார், இது குறித்து சிவபாலன் ஒரு பதிவும் போட்டுள்ளார்,
சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.
யார் சொன்னது எனப்பார்க்காமல் சொன்னதை பார்த்தால் சரி எனத்தான் தோன்றுகிறது , ஆனால் அவரே தெலுங்கில் வெற்றிப்பெற்ற படங்களின் கதையை தான் விரும்பி வாங்கி நடிக்கிறார் , தமிழில் நல்ல கதைகளே இல்லையா, முதலில் அதை யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்கண்ணா!மக்களே உங்களுக்கும் இது குறித்து மாற்றுக்கருத்துகள் இருக்கும் இருந்தால் சொல்லலாமே!
Monday, August 27, 2007
உள்ளது உள்ளபடி - 2:விவசாய தொழிலாளர்களின் நகர்ப்புர இடம் பெயர்வும் விளைவுகளும்
அப்பதிவு ஓகை அவர்களின் பதிவிற்கு பதிலாக எழுதப்பட்ட ஒன்று எனவே ஓகை அவர்களின் பதிவிற்கான சுட்டி: ஓகை
கிராமங்களில் வாழ்ந்த விவசாயி , விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு , வருமானம் இவற்றின் காரணமாக நகர்ப்புரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வரும் சூழலில் , அவர்களுக்கு கிடைப்பது சிறிய வருமானம் ஆனால் அவர்கள் அதற்காக இழப்பது அதிகம். கிராம , நகர்ப்புர வசிப்பிட சூழல், மற்றும் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை ஒப்பீட்டளவில் காண்போம்!
வசிப்பிடம்:
கிராமத்தில் ,
ஏழையாக இருந்தாலும் சொந்தமாக குடிசை என்று ஒன்று இருக்கும் , அது எவ்வளவு மோசமான குடிசையாக இருந்தாலும் அவனுக்கே உரியது , அதற்கு வாடகை எதுவும் இல்லை.
நகரத்தில்,
வேலை தேடிவரும் இடத்தில் தங்க வசதிகள் பெரும்பாலும் செய்து தருவதில்லை. அவன் வாங்கும் சொற்ப சம்பளத்தில் வாடகை வீடு பிடிப்பது சாத்தியம் இல்லை. எனவே சாலை ஓரங்களில் , அல்லது பாலங்கள் அடியில் , கட்டுமான பணி நடைபெறும் இடத்திலே தகர கூறை வேய்ந்த இடங்களில் பலருடன் இடத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் , வயது வந்த பெண் குழந்தைகள் வைத்து இருப்பவர் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும், அவர்களுகு பாலியல் ரிதியான பல தொந்தரவுகள் ஏற்படலாம், பாதுகாப்பு இருக்காது.
குடிநீர்:
கிராமத்தில் ,
குடிநீர் வேண்டும் என்றால் கிணரு , குளம் , அடி பைப்புகள் என ஏதோ ஒன்று இருக்கும் , தேவைப்பட்ட நேரத்தில் போய் நீர் கொண்டு வரலாம். குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் ஒரு பிரச்சினை அல்ல.
நகரத்தில் ,
குடிநீர் லாரி எப்போது வருகிறதோ அப்போது தான் பிடிக்க முடியும் . குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் பெரும் பிரச்சினை. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு முறை குளிக்க இயலும்.கிராமத்தில் சுத்தமாக வாழ்ந்தவர்கள் நகரத்தில் அசுத்தமாக வாழ வேண்டும்.
உணவு:
கிராமத்தில்,
சமையல் கூழோ ,கஞ்சியோ வீட்டில் பொறுமையாக சமைத்து உண்ணலாம், அரிசி , போன்ற சமையல் பொருட்கள் வாங்க வேண்டி இருக்காது. அல்லது அரிசியை நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டை மூலம் வாங்கலாம். காய்கரிகள் , கீரை எதுவும் வாங்கும் நிலை இல்லை , பெரும்பாலும் இலவசமாக வீட்டு பின்புறம் தானே பயிரிட்டு பயன்படுத்திக்கொள்வார்கள். விறகு ,வரட்டி எல்லாம் செலவில்லாமல் கிடைக்கும் .
நகரத்தில்,
குறைந்த சம்பளத்தில் உணவு விடுதிக்கு எல்லாம் போய் சாப்பிட முடியாது. எனவே சமைக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்தும் கடையில் வாங்கி தான் செய்ய வேண்டும். வேலைத்தேடி வந்த இடத்தில் குடும்ப அட்டையும் பயன்படுத்த முடியாது.விறகு கிடைக்கவில்லை என சாலை ஓரம் கிடக்கும் குப்பைகளை எல்லாம் எரித்து சமைக்கும் சூழலும் ஏற்படும்.
குழந்தை வளர்ப்பு:
கிராமத்தில்,
குழந்தைகள் அனைத்தும் பள்ளிக்கு போகும் என்று சொல்ல இயலாவிட்டாலும் , குறைந்த பட்சம் மதிய உணவிற்காக துவக்கப் பள்ளிக்கு போகும் குழந்தைகள் அதிகம் இருக்கும். அப்படி படிக்க போகாத போதும் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கும். ஏதோ ஒரு வகையில் வீட்டிற்கு உதவியாக இருப்பார்கள் , உ.ம் ஆடு ,மாடு மேய்ப்பது , அல்லது விறகு பொறுக்கி தருவது என. அவர்கள் கெட்டுப்போவதற்கு வாய்ப்புகள் குறைவு.
நகரத்தில்,
புதிதாக வந்த இடத்தில் பள்ளியில் சேர்ப்பதில் பிரச்சினை இருக்கும். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு என இடம் மாறும் சூழலில் பலரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. எனவே பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் சாலை ஓரம் இருக்கும் சிறுவர்கள் என்ன செய்வார்கள், பிச்சை எடுக்க போவார்கள் சிலர்,குப்பை பொறுக்கலாம் , அதில் கிடைக்கும் காசை பெற்றோர்க்கு தெரியாமல் செலவு செய்வார்கள் , புகை பிடித்தல் , பான் பராக் என பல தீய பழக்கங்களும் கற்றுக்கொள்வார்கள். வருங்காலத்தில் தீய நட்பினால் குற்றவாளியாகவும் நேரிடலாம்.
சமூக பாதுகாப்பு:
கிராமத்தில் ,
ஒரு சமூக பாதுகாப்பு இருக்கும், எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருப்பார்கள் அசம்பாவிதம் ஏற்பட்டால் உதவிக்கு ஆட்களும் வருவார்கள்.
நகரத்தில் ,
புது இடம் , அங்கேவே இருக்கும் அடாவடி ஆட்கள் தகராறு ,செய்தால் அடித்தால் வாங்கிக்கொண்டு தான் இருக்க வேண்டும். பெண்களை கிண்டல் செய்தால் , பாலியல் தொல்லை கொடுத்தால் கூட எதுவும் செய்ய இயலாது. காவல் நிலையத்தில் சொன்னால் கூட சாலை ஓரம் இருப்பவர்கள் தானே என அலட்சியம் காட்டுவார்கள்.
உடல் ஆரோக்கியம்:
கிராமத்தில்,
இருக்கும் வரை அவர்கள் உடல் ஆரோக்கியம் தானாகவெ நன்றாக இருக்கும் , காரணம் சுத்தமான சூழல். அவ்வபோது சாதாரண காய்ச்சல் தலை வலி தவிர வேறு எதுவும் வருவதில்லை
நகரத்தில்,
அனைத்து விதமான வியாதிகளும் வரும். ஒரு ஆய்வறிக்கையில் இப்படி இடம் பெயர்ந்து வேலை செய்வோரால தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. நகரத்தில் வேலை செய்து விட்டு திரும்புபவர்களால் கிராமங்களிலும் எய்ட்ஸ் தற்போது பரவி வருகிறது என தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பணிச்சூழல்:
மேலும் கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு மிக குறைந்த கூலியே தருகிறார்கள், ஒரு ஒப்பந்த தாரர் வசம் இவர்கள் மாட்டிக்கொள்ளும் சூழலும் உண்டு. அதிக நேரம் வேலைக் குறைந்த கூலி என இவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.பல இடங்களில் கொத்தடிமை போன்று ஆகும் நிலையும் ஏற்படும்.
பணி நிரந்தரம் இல்லை. எல்லா நாட்களுக்கும் வேலை கிடைக்கும் எனவும் சொல்ல இயலாது.
இப்படி பலவற்றையும் ஒப்பிட்டு பார்க்கையில் மிக குறைந்த ஒரு தொகைக்காக தங்களது வாழ்க்கையை சீர் அழித்துக்கொள்ளும் நிலை தான் இப்படி இடம் பெயரும் விவசாய தொழிலாளர்களுக்கு நேரிடுகிறது.
நகரத்தில் ஏற்படும் செலவீனங்கள் போக அவர்கள் கையில் எஞ்சுவது ஒரு சொற்ப தொகை தான் அதனைக்கொண்டு வருங்காலத்தை வளப்படுத்துவதும் இயலாது, எனவே மீண்டும் மீண்டும் கூலி வேலை தேடி நகரம் , நகரமாக அலையும் ஒரு நாடோடி வாழ்க்கை தான் அவனுக்கு கிடைக்கிறது!
அப்படி எனில் இவர்கள் வாழ்கை என்னாவது ,இதற்கு என்ன தீர்வு,
கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்குவது, அவர்களுக்கு கிராமத்திலே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதும் ஆகும். இது பற்றி முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே பார்த்தோம்.
சுருக்கமாக சொன்னால் கிராமத்தை சிறு நகரம் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசு திட்டங்கள் போடவேண்டும்.
இல்லை எனில் இடம் பெயர்பவர்களின் வருகையால் ஏற்படும் திடீர் மக்கள் தொகைப்பெருக்கத்தால் நகரங்கள் திணறி விடும்! நகரத்தில் அனைவருக்கும் அனைத்து வசதியும் செய்து தருவது சாத்தியம் இல்லாது போய்விடும்!
காணாமல் போகும் நாட்டுக்காளைகள் - தொடர்ச்சி புகைப்படங்கள்
Saturday, August 25, 2007
காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!
மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு ... என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி வருகிறது. பல பூர்வீக மாட்டினங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழலில் இருக்கிறது.
இப்போது இருக்கும் பெரும்பாலானா மாடுகள் மேலை நாட்டு ஆங்கில மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.
இந்திய மாடுகள் , அளவில் சிறியதாகவும் , திமில்களுடன் , இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள் , குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி ,வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. உழவு, மற்றும் கறவை மாடுகள் என இருவகைப்படும்.சில இன வகைகளில் கறவைக்கும் , பாரம் சுமத்தல் , இழுவை என இரண்டுக்கும் பயன்படும்.
அதிக பால் ,மற்றும் மாட்டிறைச்சிக்காக இந்திய மாடுகள் மேற்கத்திய மாடுகளுடன் செயற்கை கருவூட்டல் மூலம் இனக்கலப்பினம்(artificial insemenation) செய்யப்பட்டது. அதன் விளைவாக பால் உற்பத்தியும் பெருகியது, எதன் ஒன்றுக்கும் பக்க விளைவு என ஒன்று இருக்கும் அதன்படி , இதனால் பல இந்திய வகை மாடுகள் வளர்ப்பது குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய சூழல் வந்து விட்டது , சில பூர்வீக மாட்டு வகைகள் ஒரு சில நூறுகள் தான் எஞ்சி இருக்கின்றது என்றால் நாம் எந்த அளவு தீவிரமாக வணிக நோக்கில் கலப்பின மாடுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்பது புரியும்.
எனவே தற்போது அப்படி பட்ட அழியும் நிலையில் உள்ள மாட்டினங்களை(endangerd species) பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவித்து பண்ணைகளில் பராமரித்து எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் நாட்டை சேர்ந்த பூர்வீக மாடுகளில் அழியும் நிலையில் உள்ள மாடு வகைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உம்பளச்சேரி இன மாடுகளும் ,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புங்கணூர் இன மாடுகளும் முதலிடத்தில் இருக்கிறது, இவை மிக குறைந்த எண்ணிக்கையிலே இருக்கிறது.உலக அளவில் இவை அழியும் நிலையில் உள்ள அரிய இன மாடுகள் என "UNO" போன்ற அமைப்புகள் அறிவித்துள்ளது.
அதிக பால் ,இறைச்சி தரும் கலப்பினம் இருக்கும் போது நாட்டு மாடுகள் அவசிய்மா என கேள்வி எழக்கூடும். இந்நாட்டு மாடுகளின் மரபணுக்களே புதிய வகை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படும் மூலம். இவை அழிந்து விட்டால் பின்னர் மீண்டும் பெறவே முடியாது. அமெரிக்கா , பிரேசில் , இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் காங்கேயம் காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்தணு மூலம் வறட்சி தாங்கும் புதிய கலப்பினங்கள் உருவாக்கியுள்ளார்கள்.
நம் நாட்டில் தற்போது தான் விழிப்ப்புணர்வு ஏற்பட்டு சில அழியும் நிலையில் உள்ள மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசை விட சில தனியார்களின் பண்ணைகளின் தயவில் தான் இன்னும் சில இனங்கள் அழியாமல் இருக்கிறது.
இந்திய பூர்வீக மாடுகளின் வகை மற்றும் அவை காணப்படும் மாநிலம்:
1) அமிர்த மகால் -கர்நாடகா
2) பச்சூர் - பிகார்
3) பர்கூர் - தமிழ்நாடு
4) தாங்கி - மகாராஷ்டிரா
5) தியோனி - மகாராஷ்டிரா
6) கவொலாவோ - மகா
7) கீர் - குஜராத்
8) ஹல்லிகர் - கர்நாடகா
9) ஹரியானா - ஹரியானா
10) காங்கேயேம் - தமிழ்நாடு
11) காங்ரெஜ் - ராஜஸ்தான்
12) கேன்கதா - உத்திரப்பிரதேசம்
13) கேரிகார்க் - உத்திரப்பிரதேசம்
14) ஹில்லார் - மகாரஷ்டிரா
15) கிருஷ்ணா வாலி - கர்நாடகா (250க்கும் குறைவாக)
16) மால்வி - ராஜஸ்தான்
17) மேவாதி - உத்திரபிரதெசம்
18)நகோரி - ராஜஸ்தான்
19)நிமாரி - மகா
20)ஓங்கோல் - ஆந்திரா
21) பொன்வார் - உத்திரபிரதேசம்
22) புங்கனூர் - ஆந்திரா , தமிழ்நாடு ( 100 க்கும் குறைவாக)
23) ரதி -ராஜஸ்தான்
24) சிவப்பு காந்தாரி - மகா, குஜராத்
25) சிவப்பு சிந்தி - பஞ்சாப்,
26) சாஹிவால் - பஞ்சாப்
27) சிறி - மேற்குவங்கம் , சிக்கிம்
28) தார்பார்க்கர் - ராஜஸ்தான்
29) உம்பளச்சேரி - தமிழ்நாடு
30) வச்சூர் - கேரளா (100 க்கும் குறைவாக)
31) கங்காத்திரி - உ.பி, பீகார்,
32) மல்நாட் ஹிடா - கர்நாடகா
33) தோ தோ - நாகாலாந்த்
*இவற்றில் மிகவும் அருகி , அழியும் நிலையில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் மாடு வகைகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
*இது வரை அந்த வகை மாடுகளில் எந்தனை இருக்கிறது என கணக்கெடுக்பட கூட இயலாத எண்ணிக்கையில் உள்ள மாடு வகைகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இவையும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இன மாடுகளே!
மாடுகள் மட்டும் அல்ல , ஆடு , கோழி , ஒட்டகம் என பல இந்திய கால்நடைகளும் ,விலங்குகளும் வணிக நோக்க இனப்பெருக்கத்தினால் அழியும் நிலையில் உள்ளது , அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்!
Friday, August 24, 2007
சொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்...
பாருங்கள் அவர் வீட்டில் அவர் சுவர் ஏறிக்குதித்து கள்ளத்தனமாக புகுவதை...
அவர் வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரம்:
//
By <நாகு (Nagu)>, at Thursday, August 23, 2007
-
இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-)
By <ஜெஸிலா>, at Thursday, August 23, 2007
-
இதெல்லாம் ஓவரோ ஓவர், ஏன் கலைஞர் கோபால புரம் கூப்பிடலையா?
mmmmhum...
உங்க உடம்பில ஒரு சுகர் மில் இருக்குனு இப்போ தான் பதிவில பார்த்தேன்(உண்மையா அது, உங்களை எல்லாம் நம்பவே முடியலை :-(() ,அதான் பஞ்சாமிர்தம் கூட பாய்சன் போல இருந்து இருக்கு !
Its True Vavvaal....By <Anonymous>, at Friday, August 24, 2007
-
///அப்பு !
அற்புதமா இருக்குது. ஆச்சிரமம் போட்டால்; அனுபவிச்சு அள்ளலாம். ///
can you take care france branch ???
RaviBy <Anonymous>, at Friday, August 24, 2007
-
///என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல) ///
vanga nagu...i am going this week end to take gul.testBy <Anonymous>, at Friday, August 24, 2007
-
////இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-) ////
vanga Jesi....First time comment podereenga pola...good...
ok i will send you that panjamirtham...give me the address hahahaBy <Anonymous>, at Friday, August 24, 2007
- //
தத்துவம்: அதிகமா மொக்கை போட்டா ஆண்டவன் ஆரம்பத்தில நிறைய பின்னூட்டம் கொடுப்பான் ... ஆனா கடைசில கை விட்ருவான் , நல்லப்பதிவ போட்டா ஆரம்பத்தில பின்னூட்டம் தர மாட்டான் , கடைசில கை கொடுப்பான்!
பின்குறிப்பு: இது சும்மா தமாசு கண்ணா தமாசு!
அரசியல் சதுரங்கம்!
சேலம் ரயில்வே கோட்டம் அமையும் வரை ,நாளை முதல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களை இரவுபகலாக மறியல் செய்யப்போவதாக வீரப்பாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார். இது தன்னிச்சையான ஒன்றாக இருக்க முடியாது கட்சி தலைமை உத்தரவிட்ட பின்னரே சொல்லி இருப்பார்.
இத்தனை நாளாக இல்லாமல் இப்போது ஏன் இந்த திடீர் வேகம்? கூட்டணிக்குள் இருந்து கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இராமதாசின் கட்சியை சேர்ந்த வேலு தான் ரெயில்வே இணையமைச்சர். இப்படி போராட்டம் நடத்துவதன் மூலம் ராமாதாசிற்கு எரிச்சல் ஊட்டும் சாதுர்யமாக கூட இருக்கலாம்.
இராம தாசு அளித்த மருந்தினையே கலைஞர் அவருக்கு திருப்பி தருகிறார் போலும்.இதன் மூலம் இணையமச்சர் வைத்து கொண்டே ஒரு ரயில்வே கோட்டம் கூட வாங்கி தரமுடியவில்லை என வெளிச்சம் போட்டு காட்டுகிறார் சாணக்கியர் கலைஞர்! தமிழக அரசினை விமர்சித்தது போல் , ஏன் மத்தியில் கேட்கவில்லை என்று கேட்காமல் கேட்கிறார்!
இரண்டு கட்சிகளும் மத்தியில் கூட்டணியில் உள்ளன , ரயில் கோட்ட விவகாரத்தில் ராமதாசர் சத்தம் காட்டாமல் இருக்கும் போது , தி.மு.க சார்பில் போராடுவதால் , இது நாள் வரை மக்கள் நலனுக்காக ஆளுங்கட்சியை விமர்சித்தேன் என்று அவர் சொல்லியது தவறு என்றும் காட்ட வசதியாகப்போய்விட்டது கலைஞருக்கு.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறார் கலைஞர்!இது நாள் வரை தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என்ன விளைவுகள் வரும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
ஆனால் இதில் மகா கடுப்பு "பனம் கொட்டை தலையன்" லாலுவின் போக்கு தான், நிர்வாக ரீதியாக செய்யப்படும் ரயில்வேயின் உள்விவகாரம் இது , எற்கனவே அறிவிப்பும் செய்த ஒன்று, அதற்கும் பிறகும் கேரளாவும் , தமிழ் நாடும் பேசித்தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இப்படி ஏற்கனவே எத்தனையோ கோட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏதோ புதிதாக செய்வது போல ஏன் இந்த தயக்கம்.இவரை எல்லாம் நிர்வாக இயல் தந்தை என அதற்குள் மீடியாக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.
Thursday, August 23, 2007
கடல் நீர் மட்டுமா , கண்ணீரும் , வியர்வையும் உப்பு கரிக்கும்!
கடல் உருவானது எப்படி:
ஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல் .
கடல் உப்பானது ஏன்:
1)ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப்பார்த்தோம், மழை பெய்து குளிரும் போது ,வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது.
2)கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன , அவை வெளியிடும் லாவக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்பு தன்மையை அதிகரிக்கும்.
3)கடல் வாழ் ஜீவாராசிகள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும்.
4)கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கிறது. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும்.
மேலும் கடலில் தான் நதிகள் கலக்கின்ற , கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை இதனால் நீர் வெளியேற்றம், சேர்ந்த உப்பு என எதுவும் வெளியேறது.
சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி.அவ்வாறு ஆவியாகும் போது , உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும். இது போன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்து கடல் நீரில் உப்பு தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில்ஆவியாதல் தவிர வேறு வழியில் நீர் வெளியேறி கொண்டு இருந்து இருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது.
தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும் , சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலைப்பு விகிதத்தில் இருக்கிறது.
கடல் மட்டும் அல்லாது சில ஏரிகளும் நீர் வெளியேற்றம் இல்லாது , ஆவியாதல் மட்டுமே நீர் இழப்பு என இருப்பதால் உப்பு மிகுந்து இருக்கிறது.great salt lake , dead sea ஆகியவை கடல் நீரை விட அதிகம் உப்பு அளவினைக்கொண்டுள்ளது.
கடல் நீர் உப்புக்கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும் , வியர்வையும் உப்பு கரிப்பது ஏன்?
கண்ணீர்:
கண்ணீர் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வருகிறது. அதில் உப்பு வரக்காரணம். நம் உடலில் இருக்கும் உப்பு தான்.நம் உடலில் உள்ள செல்கள் , மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வரும் திரவம் ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது!
வியர்வை:
வியர்வை உடலை குளிரவைக்க உதவும் ஒரு தகவமைவு. வியர்வையும் உடல் சுரப்பிகளில் இருந்து தான் வெளியேறுகிறது அதிலும் நம் உடலில் இருக்கும் உப்பு இருக்கும், மேலும் உடல் செயல் படுவதால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் யூரியாவும் கலந்து வரும் அதனால் வியர்வையும் உப்பு கரிக்கும்! அதிக வியர்வையினால் உடல் உப்பு சத்தை இழந்து உடல் தளர்ச்சி , தசை பிடிப்பு ஏற்படும் அப்பொழுது அதனை ஈடு செய்ய உப்பு சத்துள்ள திரவங்களை உட்கொள்ள வேண்டும்.
Tuesday, August 21, 2007
சென்னைக்கு பிறந்த நாள்! - Madras day
நாளை 22- 8- 2007 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். 1639 இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ் டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்ப நாயக்கர் என்ற அக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.
சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:
1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.
1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.
1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது
1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.
அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.
1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.
1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.
1892 - உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலன்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.
1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.
1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்
1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.
1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.
1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் சி.முதல்வர்.சுப்பராயலு.சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி
1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.
1996 -மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.
Monday, August 20, 2007
உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!
ஓகை அவர்கள் ஒரு பதிவிட்டு அதில் தற்காலத்தில் கிராமத்தில் லாபமற்ற விவசாயம் செய்வதை விட நகரத்தில் சாலைப்போடுதல் , கட்டுமானம், கல் உடைத்தல், மூட்டை தூக்குதல் இன்ன பிற கூலி வேலை செய்வது நிறைவான வாழ்வை தரும் எனக்கூறியுள்ளார். அதனை செல்வன், தெ.கா மற்றும் வவ்வாலுக்கு சமர்ப்பணம் என வேறு அறிவித்து , கருத்துகளும் கேட்டுள்ளார்.
ஓகை அவர்களின் பதிவு
கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!
ஓகை அவர்களுக்கு மிக பெரிய மனது, மாற்று கருத்துகளை வரவேற்று இருக்கிறார். அவர் எதிர்பார்ப்பை வீண் ஆக்காமல் சில பல கருத்துகளை அள்ளி விட்டேன் ஆனாலும் நீளமாக போய்விட்டது எனவே தனியே ஒரு பதிவிடுகிறேன்.
உள்ளது உள்ளபடி:
இந்திய பொருளாதரத்தை விவசாய பொருளாதாரம் என்பார்கள் , 65 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பது விவசாயம். ஆனால் தற்போது விவசாயம் செய்வதர்கான இடு பொருள் , இன்ன பிற முதலீட்டு காரணிகளின் விலை ஏறிய விகிதாசாரத்தில் விளைப்பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. மேலும் இயற்கையின் திருவிளையாடல் வேறு மழை பெய்து கெடுக்கும் இல்லை காய்ந்து கெடுக்கும். எனவே விவசாயிகள் பலரும் நொடித்து போய் விட்டார்கள்.
சிரமப்படுபவனுக்கு உதவாமல் அவனை அதை விட்டு வெளியேற சொல்கிறார்கள். வேறு எந்த உற்பத்தி கூடத்திலும் உற்பத்தியை நினைத்தால் கூட்டலாம் , குறைக்கலாம் , அல்லது சிறிது காலம் மூடிவிட்டு தொடரலாம். தேவைக்கு ஏற்றார்ப்போல அதிகப்படியாக உழைத்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயத்தில் அப்படி எல்லாம் செய்ய முடியாது, 140 நாள் சாகுபடி நெல் என்றால் அத்தனை நாட்களுக்கு பிறகு தான் நெல் கிடைக்கும், நிலத்தில் ஓவர் டைம் வேலைப்பார்த்தாலும் அதன் உற்பத்தி காலம் குறையாது.
ஷூ போடுபவர் அது கிடைக்கவில்லை என்றால் செருப்பு போடலாம், தோலில் கிடைக்கவில்லை என்றால் ரப்பரில் போட்டு சமாளிக்கலாம் ஆனால் உணவுக்கு வேறு மாற்றே இல்லை. பசித்தால் சாப்பீட்டு தான் ஆக வேண்டும் ,அதுவும் எந்த உணவாக இருந்தாலும் நிலத்தில் இருந்து தான் வர வேண்டும். தொழிற்சாலையில் செயற்கையாக ஒரே ஒரு அரிசியை கூட உற்பத்தி செய்ய முடியாது.
எப்படி தமிழைப்படிக்காமல் ஒரு தலைமுறையே தமிழ் தெரியாமல் நாட்டில் உருவாகி வருகிறதோ அதே போல நகரத்திற்கு கூலி வேலை தேடி போய்விட்டால் ஒரு தலைமுறையே விவசாயம் தெரியாமல் உருவாகிவிட்டால் என்ன ஆவது. நாடு முழுக்க நிலம் தரிசாக கிடக்கும். உணவு தட்டுப்பாடு வரும்.
நம் சுய நலம் முன்னிட்டாவது விவசாயம் வாழ வேண்டாமா?
சரி விவசாயம் வாழ வேண்டும் அப்படி என்றால் விவசாயி கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டுமா? இல்லை அதற்கும் சில தீர்வுகள் இருக்கிறது.
தீர்வு:
ஒரு தொழிலில் இரண்டு வகையான வளர்ச்சி சாத்தியம் ,செங்குத்து வளர்ச்சி, கிடைமட்ட வளர்ச்சி என்ற இரண்டு வகை சாத்தியம். விவசாயம் வெறும் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது அதில் இந்த இரண்டு வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.
செங்குத்து வளர்ச்சி:(vertical integration)
மாடு வளர்க்கிறார், பால் கறக்கிறார் ,விற்கிறார் இது சராசரி. அதுவே பால் கறந்து விறபதோடு , அதில் இருந்து தயிர், மோர் வெண்ணை , நெய், ச்சீஸ், பால்கோவா, பால் பவுடர் என அனைத்து பால் பொருட்களும் செய்து விற்றால் அது செங்குத்து வளர்ச்சி.
இதெல்லாம் கடினம் செய்வது முடியாது தொழில் நுட்பம் வேண்டும் என்று சொல்ல கூடியவை அல்ல. வெளி நாட்டில் எல்லாம் விவசாயிகள் செய்து விற்கும் ச்சீஸ், யோகர்ட் க்கு ஃபார்ம் யோகர்ட், ச்சீஸ் என்றே பெயர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இந்தியாவிலும் இவை எல்லாம் குடிசை தொழிலாகத்தான் செய்தார்கள்.
சிறுவனாக இருக்கும் போது பார்த்து இருக்கிறேன் தலையில் கூடை வைத்து மோர், தயிர், நெய் எல்லாம் விற்றுக்கொண்டு ஒரு பெண் வருவார்கள். இப்போது அப்படி வருவது இல்லை ஏன். விளம்பரங்களில் வாழும் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க நாம் பழகிக்கொண்டோம்!
கிடைமட்ட வளர்ச்சி!(horizontal integration)
மாட்டிற்கு என்ன வேண்டும், உணவு அதற்கு என்று தீவன புல்லும் வளர்க்கலாம். மேலும் செறிவூட்டிய தீவனம் தயாரிக்க மக்க சோளம், கம்பு போன்றவையும் வளர்க்கலாம் , தானியமும் கிடைக்கும் , தீவனமும் தயாரிக்கலாம். எண்ணை வித்துகள் பயிரிட்டு அதில் இருந்து எண்ணை எடுத்து விட்டு புண்ணாக்கை கால் நடை தீவனம் ஆக பயன்படுத்தலாம், அதிகப்படியை விற்கலாம்.
தனி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கர் இருக்கும் அவருக்கு இதெல்லாம் சாத்தியமா எனக்கேட்கலாம். சிறு விவசாயிகள் பத்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டாக இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு கடன் உதவியும் அரசு செய்யலாம்.மகளீர் சுய உதவிக்குழுக்கள் போல இது விவசாயிகள் சுய உதவி குழு!
இவை எல்லாம் சில உதாரணங்களே , இடத்திற்கு ஏற்றார்ப்போல இன்னும் என்ன என்னவோ எல்லாம் செய்யலாம்!
நிலத்தினை பன்னோக்கு வழியில் உபயோகிக்க வேண்டும்(integrated Farming)
விவசாயம் பண்ண தேவை நீர், ஆனால் அதற்க்கு தட்டுபாடு , தீர்வு, நமக்கு என சொந்தமாக ஒரு சிறு பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ள வேண்டும் அதில் மழை நீரை சேகரிக்கலாம். இருக்கிற ஒரு ஏக்கரில் இதெல்லாம் சாத்தியாமா எனக்கேட்கலாம், ஒரு ஏகர் என்பது 100 சென்ட், அதில் ஒரு 5 சென்ட் ஒதுக்கினால் கூட போதும்.
5 சென்ட்டில் குட்டை போட்டால் உற்பத்தி பாதிக்குமே என்பீர்கள், குட்டையை சும்மா விட்டால் தானே , அதில் மீன் வளர்க்கலாம். அந்த குட்டைக்கு மேலெ கம்பி வலை அமைத்து கூண்டில் கோழி வளர்க்கலாம்.கோழியின் கழிவு மீனுக்கு உணவு.
குட்டையின் கரை ஓரமாக மலர் செடிகள், தென்னை , வாழை என குறைந்த அளவில் போட்டாலும் உபரி வருமானம் தானே!
நெல் வயலாக இருந்தாலும் ஆங்காங்கே சில தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கலாம். நெல்லின் மலரிலும் தேன் உண்டு. மேலும் மகரந்த சேர்க்கையும் நன்கு நடக்கும்.
இதற்கு பெயர் தான் ஒருங்கிணைந்த விவசாயம்.
இதெல்லாம் ஏதோ நானே சொந்தமாக சொல்லவில்லை பல நூல்களிலும் இவை எல்லாம் இருக்கிறது. இவற்றை நடை முறைப்படுத்த ஆரம்பக்கட்ட பண உதவி தேவை , ஆலோசனை வழங்க வேண்டும் , ஒரு முறை செய்து பார்த்து விட்டால் , பின்னர் அவர்க்களே பிடித்துக்கொள்வார்கள்.
விவசாயி, விவசாய தொழிலாளி நகரத்திற்கு பிழைப்பு தேடி செல்வதால் ஏற்படும் பின்னடைவினை அடுத்துப்பார்ப்போம்
தொடரும்...
Friday, August 17, 2007
இயற்கை கொசு விரட்டிகள்!
செயற்கை கொசுவர்த்தியின் தீமைகளை பார்க்கும் போது அதை விட கொசுக்கடியே மேல் எனத்தோன்றுகிறது.ஆனாலும் கொசு கொடுக்கும் இம்சைக்கு அளவே இல்லை.இயற்கையாக அதை கட்டுப்படுத்த ஏதாவது இருக்கிறதா எனத்தேடியதில் அகப்பட்டது சில இயற்கை வழிகள்.
பல மிக எளிமையான தீங்கற்றவை.
ஒட்டும் கொசுப்பொறி!(sticky mosquito trap):
பெரும்பாலான மளிகை கடைகளில் குழல் விளக்கை தேடி பூச்சிகள் வருகிறது என எண்ணை தடவிய காகிதம் ஒன்றை கட்டி விட்டு இருப்பார்கள், பூச்சிகள் அவற்றில் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வகை ஒட்டும் பொறி ஒன்றை கொசுக்களுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் வண்ண காகிதம் ஒன்றில் எண்ணைக்கு பதில் எளிதில் காயாத பசை ஏதேனும் ஒன்றை தடவி வீட்டில் கட்டிவிட்டால் போதும். பாதிக்கொசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.காரணம் மஞ்சள் வண்ணம் கொசுக்களை கவர்கிறதாம்.
கொசு விளக்கு பொறி!
இதனை பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்த்து இருப்பீர்கள் , ஒரு மின் விளக்கும் மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வலையும் கொண்டது , வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் கொசுக்கள் , பூச்சிகளை கொல்லும்!
பெரோமொன் கொசு பொறி!
கொசுக்கள் முட்டை இடும் இடத்தை அடையாளப்படுத ஒரு வகையான பெரோமோன் சுரக்கும் அதே போன்ற பெரோமொன் கொண்டு கொசுக்களை கவர்ந்து அழிக்க வல்ல ஒட்டும் தன்மை கொண்ட பொறிகள் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தலாம்.
கொசுவின் இயற்கை எதிரிகள்:
உங்கள் பகுதிகளில் நிறைய தும்பிகள்(dragon fly) இருந்தாலும் கொசுக்கள் வராது , தும்பிகள் கொசுக்கை பிடித்து உண்ணுமாம்.
அதே போல தோட்டத்தில் வவ்வால்கள் brown bats) இருந்தாலும் கொசுக்களை பிடித்து உண்ணுமாம்
நீர் நிலைகளில் கொசு புழுக்களை பிடித்து உண்ணும் மீன்களான டிலாபிய(tilapia), கேம்பூசியா (gambusia affinis), தங்க மீன் வளர்க்க வேண்டும்.
உயிரி்யல் கொல்லி!
பேசில்லஸ் துரிஞ்செனிஸ் இஸ்ரேலியன் (bacillus thuringinsis israeliensis)என்ற நுண்ணுயிர் கொசுவின் லார்வாவை கொல்லும் தண்மை கொண்டது , இதனை குளம் குட்டைகளில் தெளித்தால் போதும் கொசு வளர்ச்சிக்கட்டுப்படுத்தலாம்.
தாவரவியல் கொசு விரட்டி!
சிட்ரொனெல்லா புல்(லெமன் கிராஸ்), கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்
கொசு விழுங்கும் தாவரம்:
அகஸ்டாச்சா கானா (agastache cana ) பூக்களில் ஒட்டும் தன்மை கொண்ட பிசின் இருக்கும் .இது கொசுக்கள் , பூச்சிகளை கவர்ந்து அப்படியே சுருட்டி விழுங்கிவிடும்.இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுவைக்கட்டுப்படுத்தலாம்.
கடைசியாக ஒரு சின்ன குறிப்பு,
கொசுக்கள் மனிதனை இருட்டிலும் அடையாளம் பார்த்து கடிப்பது மனிதனின் உடல் வெப்பம் ,மற்றும் நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கரியமில வாயு. நம் உடலில் வேறு வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொண்டாலும் கொசுகடியில் இருந்து தப்பலாம். பூண்டு வாசனை கொசுவிற்கு ஆகாது , நிறைய பூண்டு சாப்பிட்டால் நாற்றம் தாங்காமல் கொசு ஓடிவிடும்!
Wednesday, August 15, 2007
கொசு வி(மி)ரட்டும் வர்த்தி!
இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரணம் கிடைத்தாலும் . அதன் பின் விளைவுகளை யாரும் அறியவில்லை. கொசுவர்த்தியில் மறைந்து இருக்கும் பயங்கரம். என்ன?
கொசுவர்த்திகளில் கொசு விரட்டும் காரணிகளாக செயல்படும் வேதிப்பொருட்கள் என்ன ,
*சிந்தெடிக் D அல்லித்ரின்
*ஆக்டோ குளோரோ - டை- ப்ரோபைல் ஈதர் அல்லது s-2
இவை எரியும் போது ஏற்படும் வேதி வினையால் உருவாகி வெளியிடும் வேதிப்பொருள் பை - குளோரோ மெதைல் ஈதர்
இந்த வேதிப்பொருட்களை தொடர்ந்து மூடிய அறையில் இரவு முழுவதும் சுவாசித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து ,மேற்கொண்ட வேதிப்பொருட்களை கொசுவர்த்தியில் பயன்படுத்த தடை விதிக்க செய்துள்ளார்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில்.
ஆனால் இந்தியாவில் இப்ப்டி எந்த தடையும் இது வரை கொண்டு வரவில்லை. நாம் தினசரி கொசுவர்த்தி புகையினை இன்பமாக நுகர்ந்து வருகிறோம்!
இந்த வேதிப்பொருட்கள் ஒரு பக்கம் தீங்கு விளைவிக்கிறது என்றால் , கொசுவர்த்தி சுருளின் அளவுக்கு ஏற்ப ஒரே ஒரு கொசுவர்த்தீ எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் என்பது கீழே கொட்டும் சாம்பல் அல்ல நுண்ணிய காற்றில் மிதக்கும் சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய் and cancer போல நோய்கள் வரலாம்.
மேலும் கொசு வர்த்தி எரிவதனால் ஃபார்மல் டி ஹைட் என்ற வேதிப்பொருளும் பக்க விளைபொருளாக வரும்.
கொசுவை விரட்ட என்று காசு கொடுத்து கொசு வர்த்தி வாங்க போய் என்னவேல்லாம் இலவசமாக கிடைக்கிறது பாருங்கள்.
அப்படி என்றால் கொசுவிடம் இருந்து தப்பிக்க என்ன தான் வழி.
1)கொசு உற்பத்தி ஆகும் இடங்களிலே அழிப்பது,
2)கொசு உருவாகாமல் சுத்தமாக சுற்று புறத்தினை வைத்துக்கொள்வது.
3)கொசு வலை பயன்படுத்துவது.
Tuesday, August 14, 2007
நாற்று நடும் எந்திரம் !
தற்போது நாற்று நட எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது, நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம் , ஜப்பான், சீனா , கொரியா போன்ற நாடுகளில் 1970 களில் இருந்தே எந்திர நடவு நடை முறையில் உள்ளது!
நாற்று நடுவது உடல் வலிக்கொடுக்கும் ஒரு வேலை, குனிந்தவாறே தொடர்ந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களின் உடல் நெகிழ்வு தன்மை கொண்டது என்பதால் இதனை எளிதில் செய்வார்கள் எனவே நடவிற்கு பெண்களே அதிகம் நடவு வேலைக்கு பயன்படுத்தப்படுவார்கள்.
நடவு எந்திரத்தில் இரண்டு வகை உள்ளது,
- மனித சக்தியால் இயங்குவது ,
- எந்திர சக்தியால் இயங்குவ்து.
எந்திர நடவிற்கு சாதாரணமாக வளர்க்கப்படும் நாற்றை பயன்படுத்த முடியாது , இதற்கென தனியாக நாற்று வளர்க்க வேண்டும். அதனை பாய் நாற்று என்பார்கள்.
அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் விரிப்பின் மீது நன்கு உழுத மிருதுவான வயல் மண்,மணல் , தொழு உரம் இவற்றை கலந்து பரப்பி ஒரு மண் படுக்கையை 3 cm உயரத்திற்கு உருவாக்க வேண்டும். அதன் மீது முளைக்கட்டிய விதைகளை தூவி ,விதைகளை மூடுவது போல சிறிது மண் தூவ வேண்டும். பின் வழக்கம் போல நாற்றுகளை வளர்க்க வேண்டும். இதற்கு குறைவான நீரே போதும் , பூவாளி எனப்படும் நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளித்தாலே போதும்.
நாற்றுகள் வளர்ந்தவுடன் இரண்டு அடி நீளம் , 1 அடி அகலம் வருவது போல பத்தைகளாக நாற்றுடன் வெட்டி எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.
நாற்று நடும் எந்திரம்:
ஒரே நேரத்தில் எட்டு வரிசைகளில் நடும். சாய்வான நாற்று வழங்கும் வார்ப்புகள் இருக்கும். நாற்றை மனித விரல்கள் போல் எடுக்க 3 முனைகள் கொண்ட பிக்கர் (picker)எனப்படும் கொக்கிகள் இருக்கும். நாற்றுபத்திகளை அடுக்கிகொண்டு எந்திரத்தை ஓட்டி சென்றால் மட்டும் போதும். 3 மணி நேரத்தில் ஒரு ஏக்கரில் நடும். நாற்று வரிசைக்கிடையே உள்ள இடை வெளி(24 cm), ஒரு நாற்று முடிச்சில் எத்தனை நாற்று(3 or 5) இருக்க வேண்டும் என்பது போன்றவற்றை நாம் அமைத்து கொள்ள முடியும்.
ஒரு நாற்று நடும் எந்திரத்தின் விளை 80,000 - 1,50,000 Rs/- வரை எஞ்சின் திறனுக்கு ஏற்ப கிடைக்கிறது.
வழக்கமாக நடவு வேளைக்கு கூலியாக சுமார் 1500 ரூபாய் ஆகும். இதன் மூலம் 600 ரூபாயில் முடித்து விடலாம். இந்தியாவில் நிறைய மனித ஆற்றல் இருந்த போதிலும் தற்போது பெரும்பாலோர் நகரங்களுக்கு இடம் பெயர்வதால் விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது , இத்தகைய சூழலில் நடவு எந்திரம் உதவும்!
டா பே, எஸ்கார்ட்ஸ், போன்ற டிராக்டர் தயாரிப்பாளர்கள் இந்த எந்திரங்களை தயாரிக்கிறார்கள்.
Monday, August 13, 2007
ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி
அதிலும் கடலோரமாக உள்ள கழிமுகம் பகுதிகளில் கடல் நீர் புகுந்து தேங்கி உள்ள உப்பு நீரில் பொக்காலி விவசாயம் நடக்கும். இந்த நெல் வகை அதிக உப்பு சகிப்பு தன்மை கொண்டது. வேறு எந்த வகையும் இப்படி தாங்கு திறன் கொண்டது அல்ல.
இம்முறை ஒரு இயற்கை விவசாயம் ஆகும். பூச்சி மருந்து, உரம் பயன்படுத்தபடுவதில்லை.இம்முறையில் நெல்வயலில் மீன், இறால் போன்றவையும் சேர்த்து வளர்க்கப்படும் அவ்வளவு நீர் வயலில் தேங்கி இருக்கும். குறைந்த பட்சம் 30 cm நீர் நிற்கும்.பல இடங்களில் நெல் வரப்புகளுக்கு இடையே படகில் போய் அறுவடை செய்வார்கள்
எப்படி இறால், நெல் சாகுபடி நடக்கிறது எனப்பார்ப்போம்.
நீர் தேங்கி உள்ள வயலில் வரிசையாக வரப்புகள் போல உருவாக்கி அதில் நெல் நடப்படும். இடை உள்ள நீர் தேங்கியுள்ள வாய்க்கால் போன்ற பகுதியில் இறால்,/ மீன் வளர்க்கப்படும். நெல் அறுவடைக்கு பின் வைக்கோல் அப்படியே நீரில் விடப்படும் அது மக்கி புழு உருவாக உதவும் அது இறாலுக்கு உணவு. இறால் வெளியிடும் கழிவுகள் நீரில் கலந்து நெல்லுக்கு உரம் ஆகும். இறால் கழிவுகளில் அதிகம் நைட்ரஜன் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்து அது!இவ்வாறு உப்பு நீர் தேங்கி உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதால் அப்பகுதியின் உப்பு தன்மை மேலும் அதிகரிக்கபடாமல் தடுக்கப்படுகிறது.
சராசரியாக 200 கிலோ இறால் கிடைக்கும் ஒரு கிலோ 400 - 500 ரூபாய்க்கு விற்கப்படும். நெல் ஒரு கிலோ 5 - 7 ரூபாய் , இரண்டு டன் வரை நெல் அறுவடை ஆகும்.இதன் மூலம் விவசாயிக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
பொக்காலி நெல்வகை - IR 64,
இறால் வகை - வெள்ளை இறால், டைகர் இறால்
கேரள அரசு பொக்காலி நெல் சாகுபடிக்கு தற்போது பல உதவிகளும் , ஆர்கானிக் ஃபார்மிங் என்பதால் பொக்காலி நெல் விற்பனைக்கு சிறப்பு சந்தைகளும் உருவாக்கி தருகிறது.மேலும் அறிவுசார் காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளது.
Sunday, August 12, 2007
இயற்கை விவசாயம் செய்யலாமா?
பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.
மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.
மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:
மூலப்பொருள்:
*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்
இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!
தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!
ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.
மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!
பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!
பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.
Friday, August 10, 2007
தீ(வட்டி) நகர்! திரை விமர்சனம்!
அதனால் இன்றைய சிறப்பு பதிவு திரை விமர்சனம்!
தீநகர்னு ஒரு படம், ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் அல்ல பாடம் , எப்படி எல்லாம் ஒரு படத்தை எடுக்க கூடாது என்பதற்கு அருமையான சாம்பிள்.
கல்லுரியில் ஒரு கலாட்டா ,மாணவர் தலைவனே செய்கிறான் திமிரு நியாபகத்தில் அவனுக்கும் பவானினு பேரு வேற, அப்போ என்ன நடக்கும் சரியா ஹீரோ சார் வந்து சண்டை தான் போடுவார். அப்புறம் அட்வைஸ் வேற தறார். என்ன கொடுமை சார் இது!
இன்னும் எத்தனைக்காலத்திற்கு டைட்டானிக் ஹேங் ஓவர்லவே அலைவாங்க , நிச்சயம் ஆன பொண்ணா பார்த்து இவருக்கும் காதல் கசியுது!
படத்தில் கரனைப் பார்ப்பதே இம்சைனா பாடல் காட்சிகளில் இரட்டிப்பு இம்சை தருகிறார்!
வேலைவாய்ப்பகம் போகிறார் அங்கே வழக்கம் போல வேலை செய்யாம அரட்டை அடிக்கும் அலுவலர்,அது பார்த்து கோபப்படும் ஹீரோ, திருந்துங்கடா , எத்தன தடவை தான் இதையே காட்டுவிங்க!
வித்தியாசமா?!! அங்கேவே ஒரு டீக்கடை போடுறார். சரி அப்புறமாவது புதுசா எதாவது காட்டுவாங்களானு பார்த்தா , தூள் பாதிப்பில் ஒரு இன்ஸ்பெக்டர் கூட மோதிக்கிட்டு அதே போலா செல் போன்ல பேசி சவால் விட்டுனு , கடைசில எப்படி படத்தை முடிக்கிறதுனு தெரியாம மாணவர் சக்தி அது இதுனு சொல்லி வணக்கம் போடுறாங்க!
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு தீநகர் நல்லாப்பயன்படும். இடை இடையே தூங்கிவிட்டேன்.நான் பார்த்த வரைக்கும் தான் விமர்சனம் செய்து இருக்கேன்.மீதிய யாராவது தூங்காம பார்த்தா வந்து பின்னூட்டத்தில் கதை சொல்லிட்டு போங்க!
சென்சார் போர்ட் கவனத்திற்கு!...பதிவுகளை மொக்கை பதிவு என்று லேபில் செய்வது போல படங்களையும் அப்படி லேபில் செய்யும் வசதி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.
Saturday, August 04, 2007
மெதுவாக போகும் நத்தையின் அதிவேக விஷம்!
மோலஸ்க் பைலம் என்ற தொகுதியில் ஒரு வகையான கேஸ்ட்ரோபோட்ஸ் (gastropods.) என்ற வகையை சார்ந்தது தான் நத்தை.இதற்கு தூரத்து சொந்தம் ஆக்டோபஸ். கிரீக்கில் காஸ்ட்ரோ என்றால் வயிறு, போடோஸ் என்றால் கால்கள் , வயிற்றில் கால்களைக்கொண்டது என பொருள். நத்தை வயிற்றின் மீது தான் ஊர்ந்து செல்கிறது, அதன் வாயும் அங்கே தான் இருக்கிறது, தட்டு , ஸ்பூன் எல்லாம் வைத்து சாப்பிடாது, அதன் சாப்பாடே தட்டு தான் , எதன் மீது ஊர்ந்து செல்கிறதோ அதனை உண்ணும்.
நில நத்தைகள், கடல் நத்தைகள் என்று இரண்டு வகை உண்டு , வயல்களிலும் தோட்டத்திலும் காண்பது நிலவகை. முன்னால் இரண்டு நுகர் உணர்வு கொம்புகள் உண்டு அதன் முனையில் சக்திவாய்ந்த கண்கள் உண்டு!அவை ஊர்ந்து செல்லும் போது ஒரு கோழை படிவத்தை விட்டு செல்லும் அது எளிதாக நகர உதவுகிறது.மேலும் அதன் உடல் உலராமல் இருக்கவும் பயன்படுகிறது.கோடைகாலத்தில் நீண்டகால உறக்கத்தில்(hybernation) சென்று விடும் நத்தை அப்போது இந்த கோழைபடிவத்தை வைத்து தான் உடலை போர்த்திக்கொள்ளும். மீண்டும் மழை பெய்தவுடன் வெளிவரும்.
* ஒரு நத்தையால் கூர்மையான பிளேடு் ஒன்றின் விளிம்பில் கூட நகர்ந்து செல்ல முடியும் அத்தனை வலிமையானது அதன் பாதங்கள் மற்றும் அடிவயிறு!
*மூல வியாதிக்கு நத்தை கறி சாப்பிடுவது இன்றும் இருக்கும் நாட்டு வைத்தியம்!
* சில நத்தைகள் விஷத்தன்மை கொண்டது , பெப்டைட்(peptides) வகை விஷம்.அதிலும் கடலில் வாழும் கூம்பு வடிவ நத்தையின்
(Conus magus,Conus geographus) விஷம் வீரியமானது அதன் இரைகளை விஷம் கொண்ட நாக்கால் அம்புவிடுவது போன்று விட்டு தீண்டி செயலிழக்க செய்து சாப்பிடும். அதன் விஷம் ஒரு வினாடியில் 10 இல் ஒரு பகுதி நேரத்தில் தாக்கி செயலிழக்க செய்யும், இயற்கை விஷத்தில் வேகமானது இது தான். ஆனால் மனிதர்களை தாக்குவதில்லை. தெரியாதனமாக நாமே கையால் தொட்டு கொட்டு வாங்கினால் உடல் உறுப்புகள் செயல் இழக்கப்படலாம்,மரணம் வெகு அரிதே!
* இந்த விஷத்தையும் விஞ்ஞானிகள் சும்மா விடவில்லை ஆராய்ந்து பார்த்து உடல் வலி நீக்கும் வலி நிவாரணி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.ரியால்ட் (Prialt ) என்று பெயர்.முதுகெலும்பு வலிக்கு நல்ல மருந்தாம்.
*நத்தைகளில் ஆண் பெண் என்று தனியே கிடையாது , ஒரு நத்தையிடமே ஆண்,பெண் பால் உறுப்புகள் (hermaphroditic.) இருக்கும். இரண்டு நத்தைகள் சேர்ந்தும் இனப்பெருக்கம் செய்யும், ஒரே நத்தையே அதன் ஆண்,பெண் உறுப்புகளைக்கொண்டு தனக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியும்!
என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல)